Thursday, April 26, 2007

தாஜ் கவிதைகள் - 15



தரிசனம்.
------------

உற்றுப் பார்க்கையில்
தட்டையாய்மொழுக்காய்
பள்ளம் மேடாய்
நீராய் உலகம்
கோலமே நிஜம்
தரிசித்த பாடில்லை.

*****

நிஜம்.
--------

நிலலெல்லாம்
நிஜத்தை
ஊர்ஜிதம் செய்ய
பொய்களெல்லாம்
உண்மையை உணர்த்த
இந்த சூனியத்திற்கும் கீழே
நீயும் நானும்
முன் வைப்பதென்ன.

******

விடாது கருப்பு.
---------------------

பக்கங்களாகப்
புரண்டு கொண்டிருக்கிறேன்
விரிந்த சமுத்திரம்
நித்தம் அலைக்கழிக்கிறது
தழுவ மேவித் தாவ
முழுகாத தினமில்லை
மனப்புணர்ச்சி நொடியும்
மங்காததோர் கிளர்ச்சி
வாசிக்கவே கரையேகி
கவிழ்ந்ததுவே காட்சி.

*******

பசி.
------

பசியாற்ற பறவை
இரைதேடும் உயரத்தில்
உயர உயர வட்டமிட்டு
விரைந்தே பறக்கும்
பார்வையை விஞ்ச
வியக்குமொரு நாழிகையில்
தேய்ந்து துகளாய் கலக்கும்.

*******

சக ஜீவிகள்.
-----------------

மிருக காட்சி சாலையில்
வினோத மிருகங்களையும்
மகிழ்வாய் கண்டுகழிக்க
திரும்பியத் தருணம்
சக மனிதர்களும்
உற்ற உறவுகளும்
வலம் வரவே
அங்கே ஒவ்வொன்றும்
கம்பிக் கூண்டுக்குள் இருக்க
பயமில்லாமல் போனது
நினைவுக்கு வந்தது.

*******
satajdeen@gmail.com

Wednesday, April 25, 2007

தாஜ் கவிதைகள் - 14




நிலைப்பாடு
----------------
குடும்பத்திற்குள்
நடந்து பழக
வயசு போதாது
எந்நேரம் அசந்தாலும்
தலைவாசலின்
மேல் நிலை
உச்சத்தைக் கிறங்கடிக்கும்
கீழ் நிலை எப்பவும்
காலைப் பதம் பார்க்கும்
குனிந்தே நிமிர வேண்டும்
படுக்கை அறைக்கு
நுழையும் அவசரத்தில்
பக்க வலமாய் இடிபட
விண்ணென விலா நோகும்
சமையலறைக் கதவை
இழுத்துத் திறக்கிறபோது
திரும்பவும் மூடிக்கொள்ள
நிலை தடுமாற வைக்கும்.

பார்த்துப் பார்த்து

நடந்தாலும்
உள்கட்டு
வெளிக்கட்டு
கழிப்பறைப்
படிக்கட்டும்
தடுக்கி வழுக்க
குப்புறத் தள்ளும்
காற்றுக்காகத் திறக்கு
ம்ஜன்னல் நிலைக்கதவும்
கையைக் கடித்துவிடும்.

******

மெளனத்தின் குரல்
-------------------------
மரங்களிடம் பேசுவது அபத்தம்
மந்தைகளிடம்
ஒதுங்குவதே புத்தி
வானுக்கு குரல் எட்டாது
நதிகளுக்கோ சங்கம வேகம்
மலைகளும் மடுவுகளும்
எதிரொலிக்கும் தொல்லை
கடலருகில் நகர்ந்தால்
துகளாகிப் போகும் அபாயம்
மலர்களுக்கு
எப்பவும் எதற்கும் சிரிப்பு
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
தேன்தான் சுவைக்கிறது
பட்சிகள் பறந்துவிடுகின்றன
விலங்குகள் அன்னியம்
வளர்ப்புப் பிராணிகள்
ஏற்கனவே வாலாட்டுகின்றன
காற்றின் சலனங்களை
கண்டு கொள்ளாதவரை
இப்பவும் குரலெடுத்துப் பேச
குளம் குட்டை
படிக்கட்டுகளே
தடைகளற்ற வசதி.

*******
satajdeen@gmail.com

Sunday, April 22, 2007

நம் பெண்கவிஞர்கள் கேலிக்குறியவர்களா? / தாஜ்


இலக்கிய விமர்சகர்கள், புதுக்கவிதையின் இன்றைய காலக்கட்டத்தை சுணக்கம் கொண்டதாக பார்க்கிறார் கள். அவர்களின் பார்வையெல்லாம் நேற்றைய கவி தைகளின் சாகித்தியத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதாக வே இருக்கிறது. இன்றைய கவிதைகளின் பரிமாணப் பெருக்கத்தை அவர்கள் கூர்ந்துக் காணுவதில்லை. பெண் கவிஞர்களின் எழுச்சி என்பது இன்றைக்கு மகத்தான ஒன்று. அவர்களின் முயற்சிகளினால்தான் புதுக்கவிதை இன்றைக்கு புதியபல தடங்களில், செழி க்க காட்சித் தருகிறது. அவர்களின் ஜெயம், முரணா ளர்களின் மூளைமடிப்புகளில் உறுத்தலாக படிந்து விட்டது. தங்களது எதிர்ப்பை, கலாச்சாரத்தை முன் வைத்து குரல் எழுப்பினார்கள். பயனில்லாமல்போனது. என்றாலும் அதையே தொடந்தார்கள். அப்பவும் அவர்களுக்கு சாதமாக எதுவும் நடந் தப்பாடில்லை. இப்பொழுது கேலி என்கிற ஆயுதத்தை தூக்கியிருக்கிறார்கள்.
*
என்பதுகளில், நம் புதுக்கவிதை நன்கு வளர்ந்த நிலையில், அது ஆண்கவிஞர் களின் வித்தைப் பொருளாகவே இருந்தது. அந்த காலக்கட்டத்தில் பொண்க ளை குறித்து நம்கவிதைகள் பேசிய செய்திகளெல்லாம் மேலோட்டமானவை! அவர்களை குறி த்த அகவாய்வோ, பொண்ணியத்தின் விசாலப் பார்வையோ நம் கவிதைக்குள் இல்லை. பெண்களை, நட்சத்திரங்கள், நிலவு, தாமரை, வாச னைத் தரும் மலர்களாகவுமே பார்த்தார்கள். ஆனால், இன்றைக்கு அப்படி அல்ல. பெண்கள் தங்களது அத்தனை மனத்தாக்கங்களையும் கவிதைக்குள் விதைத்து, வாசிப்போரின் மூளையில் நியாயத்தை முளைக்க வைத்திருக்கி றார்கள்.பெண்ணியத்தை மதிக்க முரண்டு செய்யும் சமூகத்தை கேள்விக ளால் விலாசும் அந்தஸ்த்து கொண்டு விளங்குகிறார்கள். இன்றைக்கு கவி தைக்குள் அவர்கள் நிலவோ, மலரோவல்ல. சகஉயிர்! ஆண் ஆளுமைகளுக்கு நிகரான இடம்!
*
எழுதப்படாத ஆவணமாய், ஆண்படைப்பாளிகளுக்கு உரை நடை என்கிற அள வில் விட்டுவிட்டு, புதுக்கவிதைப் பரப்பு மொத்தத்தையுமே இன்றைக்கு பெண் கவிஞர்கள், தங்களின் ஆளுமைக்கும் கீழ் சுவிகரித்து விட்டதை இங்கே குறிப்பிடுவது தகும். இது ஏதோ அடாவடியில் அவர்கள் அபகரித்ததல்ல. அவர்கள் தங்களது தீவிரமானகவிதை ஆளுமைக்குப்பிறகே இந்த வெற்றி யினை எய்திருக்கிறார்கள்!
*
இன்றைய பெண் கவிஞர்கள், கவிதைப் படைப்பில் காட்டும் ஆத்மார்த்தமான, தீர்க்கமான, ஈடுப்பாட்டால் புதுக் கவிதைகளின் வளர்ச்சி நேற்றையக் காட்டி லும், அதன் இன்றைய பரிணமிப்பு வியக்கத் தகுந்ததாக இருக்கிறது. இத்த னைக் காலமும் கவிதைக் கட்டுக்குள் ஏற்றப்படாத பெண்சார்ந்த நிஜங்கள், காலதிக்காலமான அவர்களின் ரணங்கள் அதன் வலிகள் என்று அத்தனையும் இன்றைக்கு வரிசைக்கட்டி கவிதையாகிக் கொண்டிருக்கிறது. தடைகள் பல வற்றை தகர்த்து, 'விடுதலையானப் போக்கில்' கவிதை க்குள் அவர்கள் பேசத் தொடங்கியிருப்பது ஓர் சரித்திர நிகழ்வு! அவர்களின் உள்ளும் புறமும் இன் றைய கவிதைகளில் 'உயி ரோடு' பதிவு கொள்கிறது. இவர்களின் இந்த எழுச் சியால், நவீன கவிதைக்களம் உயிரோட்டமான செறிவு கொள்வதாக இருக் கிறது.
*
மாலதி, மாலதி மைத்ரி, கனிமொழி, சல்மா, குட்டி ரேவதி, உமா மகேஸ்வரி என்று தொடங்குகிற பெண் கவிஞர்களின் வரிசை இன்றைக்கு நீளமானது. இவர்கள் அத்தனைபேர்களும் கவிதை நுட்பத்தில் அலாதியான திறமை கொண்டவர்களாகவும், அதில் அவர்கள் சாதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். கவிதைப் படைப்பில், முன்பு ஆண் படைப்பாளிகளுக்கே கூடிவந்த 'படைப்பு சார்ந்த ஜாலங்கள்' இன்றைக்கு இவர்களிடம் சாதாரணமாகியிருக்கிறது! இவர்களின் அறிவார்ந்த தளம், கவிதைக்குள் மெச்சும் படி வெளிப்படுவதை இன்னொரு அவதானிப்பில் உணரமுடிகிறது.
*
மறைந்த கவிஞர் மாலதி, தனது கவிதை ஆளுமையில் காட்டிய மேதமை விசாலமானதும் வியக்கத் தகுந்ததும் என்றால், மாலதி மைத்ரியின் கவிதைப் பின்னல் நுட்பத்திலும் நுட்பம் கொண்டது. அவரது கவிதை மொழிகள் காட் டும் சித்திரம் அகல கண் கொண்டுப் பார்க்க தகுந்தது. காலத்தால் நின்று போசும் கவிதைகளின் சொந்தக்காரர். இன்னும்கூட கூடுதலாக அவரது கவி தைகளின் உயரத்தைக் கணிக்கலாம்! தகும். அந்த அளவுக்கு, தனது கவிதைக் குள் அவர் உழைக்கசெய்திருக்கிறார். சென்ற ஆண்டு காலச்சுவடு வெளியீ டாக வந்த இவரது கவிதைத்தொகுப்பான 'நீலி'யைப் படித்தபோது அவரது கவிதைக் குறித்த என் அபிப் ராயம் முன்னிலும் வலுப்பட்டது.
*
கயிறுகளின் முனை /எங்கிருந்து இறங்குகின்றன /எனத் தெரியவில்லை / நீல ஆழத்துக்குள் பார்வை /அடைய முடியாத் தூரம் /பலகையில் அமர்ந்து ஆடுகிறேன் /முன்னும் பின்னும் மேலும் கீழும் /ஊஞ்சலின் வேகம் ஓய்ந்த போது /என் தலைமேல் கொஞ்சம் மேகம் /தொத்திக் கொண்டிருப்பது தெரிந் தது /மீண்டும் உந்திய வேகத்தில் /மேற்கில் இறங்கிக் கொண்டிருக்கும் / பரி தியைக் கால்விரல் முனைகள் /தொட்டு மீண்டன /கொஞ்சம்போல இருட்டத் தொடங்க /கயிறுகளின் வழியே இறங்கிய நிலா /என் உடம்பெல்லாம் வழிந் தது /குளிரில் வெடவெடக்கும் உடம்பில் /முத்து முத்தாக நட்சத்திரங்கள் பூத்துக்குலுங்க / ஊஞ்சலின் வேகம் /முன்னும் பின்னும் மேலும் கீழும் / வெளியெல்லாம் எனது விசை. ( கவிதை: ஊஞ்சல் - மாலதி மைத்ரி )
*
கனிமொழியின் கவிதைகள், ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளடக்கத்தில் மெச் சும் படியானப் புதிய பரிமாணத்தை உறுதி செய்வதா கவே இருக்கும். பெண் ணினத்தின் சிக்குண்ட சுயத்தை, அதன் உண்மையை நம் பார்வையில் தைப் பதில் இவரது கவிதைகள் கா ட்டும் முனைப்பு அலாதியானது. இவரது பின்பு லம் யாரையும் நிமிர்ந்து பார்க்கவைக்கக் கூடியது என்றாலும், இவர் இறங்கி வந்து சமூகப் பார்வையோடு, வீழ்ந்து கிடக்கும் பெண்ணியத்தின் தாழாமைக் காக கவிதை வழியேயும், நேரடி களம் கண்டும் போராடுகிறார் என்பது பெரிய விசயம்! தொடர்ந்து, பெண்களின் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு வழிவகுப்பவ ராக இருக்கிறார் என்ப தும் வரவேற்கத் தகுந்தது. இதையொட்டிய செயல்பா டுகளை முன்னொடுத்துச்செல்ல அரசு பதவி கூட அவரது சம்மதம் வேண்டி காத்திருப்பதாக அறிவதில் மகிழ்ச்சியுண்டு!
*
வழக்கமான அழ் உறக்கம் / வெடித்து அதிர்ந்தது மௌனம் / மெல்ல அசைந்தது பூமி / கடல்கோளா நிலக்கோளா / ஜன்னலின்வெளியே / தீப்பூக்களாய் தகதகத்தது வானம் / சில்லிட்ட தரையில் / கூசிய பாதம் பதித்து / நடந்தேன்.
*
திருவிழா அணிந்திருந்தது நகரம் / வீதியில் கசகசத்தது / பாலும் தேனும் / புத்தாடை உடுத்திய மனிதர்கள் / பட்சணங்கள் /வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
*
எமது தளபதிகள் பவ்யமாய் / பூத்துப் பஞ்சடைந்த பாட்டியின் / காரைபெயர்ந்த வீட்டுக் கதவைத் / தட்டினார்கள்.
*
கருகித் தேய்ந்த / அவளது காலடியில் / பட்டயங்களை அர்ப்பணித்தார்கள் / சில்லிட்ட தகட்டின் குறுகுறுப்பு / கூச நகர்ந்துகொண்டாள். / மருண்டு சிறுத்த விழிகள் / மிரண்டு விழித்தன / நீண்டு கனத்த தாரைகள் முழங்கின. / முரசுகள் ஆர்ப்பரித்தன/பற்றப்படாத அப்பேரிளம் பெண்ணின் / மெலிந்து கருத்த விரல்கள் நடுங்கின.
*
தனையர்கள் திரும்பினர் / கொடிகளும் உதிர்ந்த / இதழ்களும் எச்சமிருந்தன / கிழவியின் மந்த செவிகளில் / தூரத்து கோஷங்கள் கரைந்தன.
*
அவளது குறுகிய தாழ்வாரத்தில் / இருந்த பெரும் இருளை / விடியலின் மஞ்சள் கதிர்கள் / தாண்டவில்லை.
*
( 'மடந்தை' - கனிமொழி - காலச் சுவடு - ஜனவரி 2006 )
*
சல்மாவின் கவிதைகள் காட்டும் துணிவு பெண்கவிஞர்களிடம் முன் எப்பவும் காணக்கிடைக்காத ஒன்று. பெண்ணினத்தின் மீது நிகழும் பாலியல் வஞ்சிப்புகளை பிற பெண்கவிஞர்கள் தங்களது கவிதைகளில் ஏகத்திற்கும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்றாலும், சல்மாவின் கவிதைகளில் அது குறித்த வெளிப்பாடு அபாரமான நேர்த்திக் கொண்டது. அவரது கவிதைகளில் சம்மந்தப்பட்ட பிரச்சனை வெளிப்படும்போதுதான் அந்த செய்தி முழுமை யாக முரணாளர்களின் பார்வைக்குபோய் சேர்கிறது. அவர்களது தூக்கத்தை யும் கலைத்து, இத்தனை காலமும் அனுபவித்த அவர்களின் நிம்மதியையும் பிடுங்கிக்கொள்கிறது. அத்தனை க்கு சிறப்புக் கொண்டதோர் மொழி அவருக்கு சகஜமாகியும் இருக்கிறது. தமிழ்ப் பிரதேச எல்லைத்தாண்டி அவர் கவிதைகள் பேசப்படுவது அதன் முழுமைக்கான அங்கீகாரமாகவே கருதுகிறேன். இவரது நாவல், ஐரோப்பிய மொழிகளில் மாற்றம் கொள்வது சந்தோஷம் தருகிறது.
*
இவ்விடம் /அதிகம் பரிச்சயமில்லையெனினும் /இங்கிருந்து கிளம்புவதென் பது /வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது.
*
நீ என்னைத் /தீவினையின் எல்லையில்விட்டு /முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து /தடைசெய்ய மனமின்றி விலகிச்செல்கிறேன்.
*
இடங்களும் மனிதர்களும் உருவாக்கும் /இந்த உறவும்பிரிவும் /படர்வதற்குள் கிளம்புகிறேன் /என் ஆதிகாலக் குகைவாழ்விற்கு.
*
எல்லோருக்கும் போலவே /இங்கிருந்து எடுத்துச் செல்ல /ஞாபகங்கள் உண்டு /விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை /விட்டுச் செல்கிறேன் / புறக் கணிப்பின் வெறுமையை / நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்த தில்லை /என்கிற சிறு குறிப்பை.
*
('இவ்விடம்' - சல்மா - 'ஒரு மாலையும் இன்னொரு மாலையும்' கவிதை தொகுப்பு)
*
குட்டி ரேவதியின் கவிதைகள், ஆணின் மூர்க்கம் கொண்டவை. ஆண்வர்கத் தோடு சமர் புரிபவை. சிறந்த தமிழ்க் கவிஞர்களின்கவிதைச் சாயலைகளை தனதாக்கிக் கொண்டவை. போராட்டங்கள் நிறைந்த வாழ்வின் கூறுகளை அதே உக்ரத்தோடு சொல்லக் கூடியவை. பெண் கவிஞர்கள் பாலியல் சார்ந்து கவிதைகள் எழுதி, தங்களது சுதந்திர எழுச்சியை பிரகடனம் செய்த பாங்கினை நாம் அறிவோம்.அந்த படியான கவிதைகளுக்கு ஆரம்பச்சுழி போட்டவர் இவர். அவரது 'முலைகள்'தான் முதல்வித்து.
*
முலைகள் / சதுப்பு நிலக்குமிழிகள் / பருவத்தின் வரப்புகளில் / மெல்ல அவை பொங்கி மலர்வதை / அதிசயத்துக் காத்தேன் /எவரேடும் ஏதும் பேசாமல் / என்னோடே எப்போதும் / பாடுகின்றன / விம்மலை / காதலை / போதையை... / மாறிடும் பருவங்களில் / நாற்றங்கால்களில் / கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை / தவத்தில் / திமிறிய பாவனையையும் / காமச்சுண்டு தலில் / இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன / ஆலிங்கனப் பிழித லில் அன்பையும் / சிசு கண்ட அதிர்வில் / குருதியின் பாலையும் / சாறெ டுக்கின்றன / ஒரு நிறைவேறாத காதலில் / துடைத்தகற்ற முடியாத / இரு கண்ணீர்த் துளிகளாய்த் தேங்கித் /தளும்புகின்றன.
*
( 'முலைகள்' - குட்டி ரேவதி - வயம் - கவிதைக்கான காலாண்டிதழ் - ஜனவரி 2001 )
*
உமா மகேஸ்வரியின் கவிதை ஆளுமைக் குறித்து தனி அத்தியாயமே எழுத லாம். பெண் கவிஞர்களில் உமா மகேஸ்வரிக்கு ஓர் தனி இடம் உண்டு. பிற பெண்கவிஞர்களிடம் கவிதை நுட்பம் என்பது, ஆண்கவிஞர்களின் கவிதை நுட்பத்தை ஒட்டியும், அதை விஞ்சியும், ஓர்வித கம்பீரத்தன்மையுடன் இருப் பதை காண்பதுமாதிரி, இவர் கவிதைகளில் காண முடியாது. கவிதையில் அவர் உமா மகேஸ்வரியின் கவிதைமொழி என்பது அவருக்கே செந்தமானது. கவிதையில் அவர் ஆளும் வார்த்தைகள் மட்டுமல்ல அதன் கடைசி முற்றுப் புள்ளியும்கூட கவியாற்றில் நனைத்து உலர்த்தியப் பாங்காய் இருக்கும். அது எளிமையும், இலேசுமான சாதுமுகம் கொண்டது. நிழலுக்கு ஒதுங்கிய மரம் மாதிரி நமக்கு ஓர்வித நிம்மதியையும், அகக்குளிர்ச்சியையும் தருபவை.
*
அவரது உரைநடை கூட அப்படிதான். கவிதையாகவே எழுதி உரை நடையாய் நீட்டியது மாதிரி இருக்கும். சாதாரண கட்டுரை என்றால்கூட நாலுவரி எழுதி னார் என்றால் அதில் மூனே முக்கால் வரி கவிதையாகவே இருக்கும்! கவி தை புனையும்போது மட்டும் அவர்கவிதை மனம் கொள்வதில்லை வாழ்வின் எல்லா பரிமாணங்களையும் கவிதையாகவே காணக்கூடியவர். 'யாரும் யாரு டனும் இல்லை' என்கிற அவரது நாவல் அதற்கோர் நல்ல உதாரணம். தனது படைப்புகளுக்காக தொடர்ந்து இவர் இலக்கிய அங்கீகாரம்கூடிய பல பராட்டு தல்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். வரும் ஆண்டுகளில், சாகீத்திய அக் கடமியின் பரிசு இவரை தேடி வருமென்றாலும்.... ஆச்சரியப்படுவதற்கில்லை.
*
குழந்தைக்கால் நுனிகள் என / ஆரம்ப மழைத்தடங்கள் என் / கார்த்திகைக் கோலத்தில் / நேர்த்திதான் பார்ப்பதற்கு / தீபங்க ளுக்குப் பதிலாக நீர்ச்சுடர் கள் / வலுத்துப் பெருத்ததில் / வர்ணப்பொடிக் கரைசல் / திரவ வானவில் லாக / நின்றதும் மறுபடி வரைதல் / முடித்து திரும்பும் முன் / வெடித்துச் சாடும் மழையின் ஆக்ரோஷம் / கனவின் சிதைவை / கண்ணுற்றேன் இம்மு றை.
*
(கவிதை - உமா மகேஸ்வரி - 'வெறும் பொழுது' கவிதை தொகுப்பு)
*
பெண்கவிஞர்கள், கவிதைப் படைப்புகளின்வழியே பெண்ணியத்தை நிலை நிறுத்த முனைவதில் எனக்கு மாறுப்பட்ட கருத்து ண்டு. புதுக்கவிதை என்கிற உபயோகமற்ற தடங்கள் வழியே பெண்ணியத்தை எத்தனைப்பேர்களிடம் இவர்கள் கொண்டுபோய் சேர்த்திட முடியும்? அதிகப்பட்சம் போனால் ஊருக்கு ஒருவரிடம் கொண்டு சேர்க்கலாம்! அதுகூட உறுதியாகசொல்ல முடியாது. அறிவு நிலைப் பெண்களின் இந்தவகை தேர்வும் / முயற்சியும் எத்தனைக்கு சரியானது?
*
இவர்கள், ஊர் ஊராகபோய் கூடி நின்று ஆண்ணாதிக சமூகத்தின் முதுகுத் தண்டில் குண்டாம்தடிக் கொண்டு தாக்கும் பட்சம் கூட அது நெளிந்துக் கொடுக்குமே தவிர சுரணைக்கொள்ளாது. இது ஏன் நம் பெண்கவிஞர்களுக்குப் புரிவதே இல்லை? கவி தைப் படைபுகளுக்குள் பற்றவைக்கும் அக்னிக்குஞ்சு நாளை ஜுவாலையாக கொழுந்து விட்டு மேல் எழலாம் என்று அவர்கள் நினைப்பதற்கு வலுவான முன் உதாரணம் கிடையாது. அறிவு நிலையிலான போர் இது என்றாலும், அதற்கும் இந்த புதுக் கவிதைதடம் உதவாது. புதுக்கவி தையின் பிடிப்படாத / புரியாத அந்த விசேச இருக்கம் எதிராளிகளுக்கு இரட் டைச் சந்தோஷத்தையே தரும்.
*
மேலே நான் கண்டிருக்கிற பெண்கவிஞர்களைப் பற்றிய மதிப்பீடுகளுடன், அவர்களது கவிதைவரிகளை நீங்கள் அசைப்போட பிணைத்திருந்தேன். அசைப் போட்டவர்கள், அந்த சுவையை மீண்டும் நினைவில் கொண்டு வர முடியுமென்றால், அவர்கள் ஏதோ நேரப்போக்கிற்காக எழுதவில்லை என்கிற யதார்த்தம் உங்களுக்குப்பிடிப்படும். அந்த கவிதைகள் கொண்டிருந்த ரசனை களின் படிமம், மொழியின் சூட்சமம் என நீங்கள் கண்டடைந்து மலைத்திருக் கும் பட்சம் உங்களுக்கோர் நிஜம் சட்டென பிடிப்ப டும். அது, பெண்கவிஞர் களை குறித்த உயர்ந்த மதிப்பீடாகவே இருக்கும். அதையொட்டிய உங்களது துணைக்கணிப்பில், அவர்கள் கேலிக் குறியவர்கள் அல்ல என்பதை திரும்பத் திரும்ப ஒப்புக் கொள்வீர்கள்.
*
நம்முடைய நவீன இலக்கிய உலகம், கலை இலக்கியவாதிகளாலும், அவர்க ளது நுட்பம்சார்ந்த படைப்புமனதினாலும்,தனிப்பட்ட மேதன்மையாலும் சிற ந்து விளங்குகிறது என்றாலும் இன்னும் இங்கே, மோசமான ஆண்ணாக்கத் தின் எச்சங்கள் இல்லாமலில்லை. முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு மட் டுமல்ல பூஸ்வாக்களுக்கும் இந்த இலக்கிய வட்டம் சொந்தமானதாகத்தான் இருக்கி றது. அவர்களில் சிலர் இங்கே மைனர் வேஷமும் கட்டக்கூடியவர் கள். கேலியும் கிண்டலும் அவர்களது தற்காப்பு ஆயுதம். அடுத்தவர்களின் உயரம் அவர்களுக்கு ஆகாது. அடிமைகளின் சுதந்திரத்தாகம் ரணமாக ஒலிக் கும் அவர்களுக்கு. இவர்களால் பெண்கவிஞர்கள், திரும்பத் திரும்ப பிறாண் டல்களுக்கு உள்ளாகியப்படியே இருக்கிறார்கள்.
*
நம் பெண்கவிஞர்கள் கலாச்சார கட்டுக்களை மீறுபவர்களாக இருக்கிறார்கள் என்றும், பாலியல் கவிதைகளை தாராளாக எழுதுகிறார்கள் என்றும் சென்ற ஆண்டுகளில் அந்த மேதாவிகள் 'குய்யோ... முய்யோ' வென கத்தினார்கள். கத்தியவர்கள் இலக்கிய த்தின் பக்கம் பாதியென்றால், மீதி தமிழ்ச்சினிமாவின் எடுப்பிடிகள். சினிமா ஒரு வெளிப்படையான பாலியல் பூமி. அங்கிருந்து பாலி யலையும், கலாச்சாரத்தையும் காக்க சிலர் குரல் கொடுத்தார்கள் என்பதுதான் காலகொடுமை. இதன் தொடர்ச்சியாக, அவர் களது சினிமாவுக்குள் ஒரு பெண் கவிஞரை நாகரீகமற்ற முறையில் தூஷனையும் செய்தார்கள். இதற்கான எதிர்வினை, இன்னும் கணக்கு தீராமல்தான் இருக்கிறது.
*
இன்றைக்கு, நம் பெண்கவிஞர்கள் எல்லோரும் மீண்டும் ஒருமுறை கேலிக்கு இலக்காகியிருக்கிறார்கள். இந்த முறை கேலி,நம் இலக்கிய வட்டத்தை சேர் ந்த, மைனர் வேஷம் கட்டுகிற ஒரு கனவானின் உபயம். குதற்கமான தமிழ்ச் சினிமா படப் பெயர்களை பெண் கவிஞர்களுக்குச் சூட்டி, பட்டம் வழங்கியிருப் பதாக மகிழ்கிறார்கள். கவிதைகளின் வழியே பெண்ணியம் பேச முற்படுகிற பெண்கவிஞர்கள் இப்படி தொடர்ந்து இம்ஸிக்கப்படுவது எந்த வகையில் நியா யம்? அவர்களது கவிதைகளை விமர்சிக்க மட்டும்தான் சக இலக்கியவாதிகளு க்கு உரிமை இருக்கிறதே தவிர, இப்படி இம்ஸிக்க அல்ல. நம் முதுகை நாம் பார்க்க முடியாததிலான செளகரியம் இங்கே எல்லோருக்கும் வசதியாகிப் போகிறது.
*
*********

Friday, April 20, 2007

தாஜ் கவிதைகள் - 13




காலமும் காலமும்.
-------------------------


தாரைத் தப்பட்டைகளின்
எதிரொலி வெள்ளத்தில்
கரங்கள் குவிய சிரங்கள்
தாழும் ஆராதனைக் கொண்டு
வலம் வருமாம் நேற்று
கோல வெளியில்
வித்தகர்களின் தேரழகு.


வியக்கும் விரல்களது
கண்களின் நசிவில்
பூத்த மா திரட்சி
திரு பார்வைகள் தீண்டா
காலத்தில் விண்டு
தடுப்பிற்குள் பொழிவழிய
சுற்று அடி
சந்தைக் கடைகளில்
பரபரப்பு அடையும்
கலைகள் வளர்த்த
வம்சாவளிகள்.

மண்ணின் நிறம் தேடி
பகலில் சூரியனையும்
இரவில் சந்திரனையும்
கண் சிமிட்டும்
நட்சத்திரங்களையுமே
காணவியந்து
இடைமலை வண்ணங்களில்
பாதம் பரவாப் பாச்சலாய்
நம் நடப்பு
காலத்தை கடக்கிறது.

( அமரர் ந. பிச்சமூர்த்தி நினைவுக்கு.)

*****

பாரதியார் சாலை.
-----------------------

மறையத் தெரிகிறது
மாமலைகளின் தொடர்
குன்றுகளைச் சார்ந்து
குண்டும் குழியுமாய்
விண்டு கிடக்கிறது சாலை
புறங்களில் விட்டு விட்டு
தழைத்திருக்கும்
மரங்களுக்கு குறைவில்லை
சிட்டுகளின் வட்டமும்
குயில்களின் ரிதமும்
சிங்காரக் காட்சி.

நவமணித் தடங்களில்
சங்கமிக்கும் இச் சாலையின்
ஆரம்பம் பாழடைந்த சங்கதி
நிழல் மேவ ராகம்கூடி
காட்சிகளைக் கண்டபடி
இந்த பாதையில்
ஆதி தரிசனத்திற்கே
சுற்றுலாப் பயணிகள்
கூடுதல் விஜயம்
சிலர் இவ்வழியில்
போதைப் பொருட்களைக்
கடத்துகின்றனர்
காவல் துறையினருக்கு
எப்பவும் கனவுகளில்
அதீத அலைச்சல்.

**********

Friday, April 13, 2007

தாஜ் கவிதைகள் - 12



நேற்று இன்றல்ல.
-------------------------

கண்ணாமூச்சி ஆடியக் காலம்
தாவிமேவிய நட்புகள்
தூங்க விடாதக் காதல்
மூச்சாய் தெரிந்த அரசியல்
வாயை கட்டிய மதம்
கண்களை பொத்திய கலாச்சாரம்
மண்டைக்குள் குடைந்த கடவுள்
இன்னும் ஒரு துள்ளலாய்
விசேசப் பூச்சோடு
நாளொரு தத்துவங்கள்.

எல்லா தினங்களின் வீறும்
அமைதியில் தோய்ந்து
இருளில் மறைய
உதயத்தின் சிரிப்பில்
முந்தைய நாளில் காணா
புதிய துளிர்களின்
குதூகலத்தை
எங்கும் பார்க்கலாம்.

******

சித்து.
--------

மானத்தை மூடும் உடுப்பு
வெள்ளை அழுக்காய்
அழுக்கு வெள்ளையாய் மாறும்
மூடின உடலுக்குள்ளே
என் செல்லப் பிசாசு
துரு பிண்டம்
கட்டி வெளுக்க துறை பல
உண்டென்கிறார்கள்
மயக்கமும் தயக்கமும் கவிழ
இப்பவும்உடுப்பே பிரதானம்
எளிதாய் வெளுக்கலாம்
வெள்ளையாய் மின்னலாம்.

******

ஞான விலாசம்.
---------------------

வாசஸ்தலமான
மயிலாடுதுறையை விட்டு
பேருந்தில்
கும்பகோணம் செல்ல
இறங்கியப் பிறகே தெரிந்தது
சிதம்பரம் மார்க்கமாக
சென்றடையும் ஸ்தலம்
எளிதென்று
திரும்பி சிதம்பரம் தொட்டு
ஸ்தலமாம் நெய்வேலி
புறப்பட்டு போனபோது
கும்பகோணம் - நெய்வேலி
அகண்ட மாற்றுப் பாதை
உண்டென உறைத்தது.


பேருந்து நிறுத்தத்தில்
அசுவாசமாகி
முகவரி அட்டையில்
ஞான விலாசம் -
பேரொளி சபா -
முத்தி முதல் சந்து -
திருநெல்வேலி என்று காண
விதியேயென அடுத்த
பேருந்தில் பயணப்பட
விடியலில்
பேரொளி தரிசனமாக
'ஞான பிரவாக விளக்கம்'
ஒத்தி வைப்பு
தகவல் பலகை எதிர்பட்டது.

தீர விசாரித்தபோது
இமயம் அடியிலிருந்து
திரு. மஹா ஞான சுடர்
பழக்கமான
திருநெல்வேலியின்
வசீகர நினைவுகளோடு
கடல் தாண்டினாரென்று.

***

'ஞான விலாசம்' பின் குறிப்பு:
1. கும்பகோணத்திற்கும், சிதம்பரத்திற்கும் மையத்தில் 'மயிலாடுதுறை'உள்ளது.
2. தமிழக ஊர்களது பெயர்கள் அர்த்தம் பொருந்தியவை.
3. ஸ்ரீலங்காவில் திருநெல்வேலி என்கிற பெயரில் ஓர் ஊர் உள்ளது.

**********

Wednesday, April 11, 2007

காந்தி vs பெரியார். - தாஜ்..



பெரியார் தனது சமூகப்பணியில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தக் காலத்தில் தலைவர்கள் பலரை சமூகப்பணி நிமிர்த்தமாக வும், அரசியல் நிமிர்த்தமாகவும் சந்தித்திருக்கிறார். இந்திய தலைவர்கள் மட்டுமல்லாது உலகத் தலைவர்களும் அதில் அடக்கம். அந்த சந்திப்புகள் குறித்த தகவல் களும், செய்திகளும் நமக்கு பதிவுகளாக கிடைக்கவும் கிடைக்கிறது. ஆனால், அந்த சந்திப் பின் உரையாடல்கள், உரையாடல்கள் வடிவத்திலேயே நமக்கு கிடைக்கவில்லை. சில குறிப்பிடத் தகுந்த தலைவர்களுடான சந்திப்பாவது அப்படி கிடைத்திருக்கும் பட்சம் அது வழுவான ஆவனமாகியிருக்கும். செய்தியும், தகவலும் தருகிற நிறைவை விட இப்படியானப் பதிவுகள் தருகிற நிறைவு முழுமையை கொண்டதாக விளங்கும்.
*
பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்காரும் பலதரம் சந்தித்து உரையாடி இருக்கி றார்கள். பல நேரம் ஒத்தகருத்துகளோடும், சில நேரம் மாறுபட்ட கருத்துக ளோடும் நட்பு நிலையிலேயே உரையாடியிருக்கிறார்கள். குறைந்த பட்சம், இந்த சந்திப்புகளையாவது அப்படி பதிவு செய்திருக்கலாம். ரவிகுமார் போன்ற 'நவீன அரசியல்வாதி'கள் பெரியாரின் கட்டுரைகளை கவிதைகளாக நினை த்து, கணித்துச் சொல்லும் புது புது அர்த்த வியாக்கியானங்கள் பாதிக்குப் பாதி யாவது குறைய வாய்ப்பாகியிருக்கும்! அரசியல் வாதிகளை அரசியல்வாதி களாகவும், பெரியாரை பெரியாரகவும்தான் நாம் பார்க்கிறோம் என்பது வேறு செய்தி. உலக சரித்திரத் தின் பக்கங்களில் புருடஸ்களும், எட்டைப்பன்களும் எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் சகஜமாக தென்படக்கூடிய வர்கள்தான்!
*
பெரியார் பதிவுகளில் உரையாடல் வடிவம் இல்லாமைப்பற்றி பெரியாரிஸ சகா ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கிற போது, அப் படியொருப் பதிவு இருக் கிறது, அதுவும் முக்கியமான ஒன்றென்றார். யாருடனான சந்திப்பின் பதிவு? யென வினவியபோது, மகாத்மா காந்தியும் பெரியாரும் ஆயிரத்தி தொழா யிரத்தி இருபத்திஏழாம் ஆண்டு பெங்களூரில் சந்தித்த சந்திப்பென்றார். ஆர் வம் தொற்றிக்கொண்ட நிலையில் மேலும் சில தகவல்களையும் அவர் மூலம் அறிந்தேன்.
*
மகாத்மா காந்தியும் பெரியாரும் சந்தித்த சந்திப்பில் அதிகம் பேசப்பட்டப் பொருள் 'இந்துமதம்' என்றும், அந்தப் பேச்சினூடே பிராமணர்களின் நம்பகத் தன்மைக் குறித்து பெரியார் விரிவாகப்பேசியதாகவும், இதுவரை ஒரு பெரியாராலும் ( இந்து மத சீர்தி ருத்த முனைப்பில் பாடுபட்ட பெரியார்கள்) மதம் சம்பந்தமானத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்றும், அப்படி முயல்பவர்கள் பிராமணர்கள் விட்டு வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் பெரியார் குறிப்பிட, மகாத்மா காந்தி அதை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டதாகவுமே அந்த சந்திப்பு முடிந்து போனது என்று கூறியவர் மேலும் ஒரு தகவலையும் அழுந்தக் குறிப்பிட்டார்.
*
1948 - ஜனவரி 30 - வெள்ளி கிழமை - மாலை ஐந்து மணிக்கு, நாதுராம் விநாயகக் கோட்சே என்கிற ஒரு மராட்டிய பிராம ணன், மகாத்மா காந்தி அவர்கள் பிராத்தனை செய்துக் கொண்டிருந்த நிலையில் அவரை சுட்டுக் கொன்றான். அதையொட்டி நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா என்று மேலும் சில மராட்டியபிராமணர்கள் கைது செய்யப்பட்டு தண்டனையும் அடைந்தார்கள். ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கர்,இன்னும் சில பிராமணர்கள் போதிய சாட்சிகள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்கள் என்பதை நாம் அறிய வருகிறபோது, அன்றைய பிராமணர்களை பற்றி மாகாத்மாவிடம் பெரியார் பேசிக்கொண்டிருந்த பேச்சு எத்தனை உண்மையாகிவிட்டது என்பதைதான் அழுத்தக் குறிப்பாக நண்பர் சொன்னார்.
*
நான் அந்த சந்திப்பின் பதிவுகொண்ட புத்தகத்தை வாசிக்க விரும்பினேன். வள்ளுவர் பதிப்பகத்தார், 1948ல் பிரசுரித்திருந்த 'இந்து மதமும் காந்தியாரும் பெரியாரும்' என்கிற தொகுப்பில் அந்த நேர்காணலின் பதிவு இருக்கிறது என்றும்அது தொகுப்பு தற்போது கிடைக்க வாய்ப்பு குறைவு என்றும் சிலர் கூறினார்கள். 'பெரியார்' திரைப்படச் செய்திகள் நம் பத்திரிகைகளில் வெளி வர தொடங்கியபோது,பெரியார் / காந்தியைச் சந்தித்த நிகழ்வை படத்திற்காக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரியவர, திராவிடக் கழகங்கள் வெளி யிட்டிருக்கிற பெரியாரின் பேச்சுகளும், எழுத்துகளும் அடங்கிய சில தொகுப் புகளை வாங்கித் தேட லானேன். கிடைத்தது. நண்பர் சொன்னதில் உண்மை யில்லாமல் இல்லை. அந்த சந்திப்பின் பதிவும் தேர்ந்ததாகவும் இருந்தது. சரி த்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதிவை கீழே வாசகர்களின் பார்வைக் கும் வைக்கிறேன்.
**************
மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு.
-------------------------------------------
பெரியார்: இந்து மதம் ஒழிந்தாக வேண்டும்.
*
காந்தியார்: ஏன்?
*
பெரியார்: இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை.
*
காந்தியார்: இருக்கிறதே!
*
பெரியார்: இருக்கிறதாகப் பார்ப்பனர்கள் பித்து. அதை மக்கள் மனதில் அப்படி
நினைக்கும்படிச் செய்திருக்கிறார்கள்.
*
காந்தியார்: எல்லா மதங்களும் அப்படித்தாமே?
*
பெரியார்: அப்படி அல்ல; மற்ற மதங்களுக்குச் சரித்திர சம்பந்தமான ஆதாரங்களும், மதக்காரகள் எல்லோராலும் ஒப்புக்கொள்ளக் கூடிய கொள்கைகளும் உண்டு.
*
காந்தியார்: இந்து மதத்துக்கு அப்படி ஒன்றும் இல்லையா?
*
பெரியார்: என்ன இருக்கிறது? ஒருவன் பிராமணன், ஒருவன் சூத்திரன், ஒருவன் பஞ்சமன், என்கிற இந்தப் பேதப்பிரிவுத் தன்மை அல்லாமல் வேறு என்ன பொதுக் கொள்கைகள், பொது ஆதாரங்கள், இருக்கின்றன? அதுவும், பிராமணன் உயர்ந்தவன்; சூத்திரன், பஞ்சமன் தாழ்ந்தவன் என்கிற தன்மை நடப்புத் தவிர வேறு என்ன இருக்கிறது?
*
காந்தியார்: சரி அந்தக் கொள்கையாவது இருக்கிறதே!
*
பெரியார்: இருந்தால் நமக்கு இலாபமென்ன? அதனால், பார்ப்பனர் பெரிய சாதி; நீங்களும் நாங்களும் சின்ன சாதி என்பதாக அல்லவா இருந்துவருகிறது?
*
காந்தியார்: நீங்கள் சொல்வது தவறு. வருண தர்மத்தில் சின்ன சாதி, பெரிய சாதி என்பது இல்லை.
*
பெரியார்: இது தாங்கள் வாயால் சொல்லலாம்; காரியத்தில் நடவாது.
*
காந்தியார்: காரியத்தில் நடத்தலாம்.
*
பெரியார்: இந்து மதம் உள்ளவரை ஒருவராலும் நடத்த முடியாது.
*
காந்தியார்: இந்து மதத்தின் மூலம்தான் செய்யலாம்.
*
பெரியார்: அப்படியானால் பிராமணன், சூத்திரன் என்பதாக உள்ள மத ஆதாரங்கள் என்ன ஆவது?
*
காந்தியார்: நீங்கள்தான், இந்து மதத்திற்கு ஆதாரங்கள் இல்லை என்கிறீர்களே!
*
பெரியார்: நான் மதமும் இல்லை; குறிப்பிட்ட ஆதாரமும் இல்லை என்கின்றேன். மதத்தை ஒப்புக்கொண்டால், ஆதாரத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டாமா?
*
காந்தியார்: மதத்தை ஒப்புக்கொண்டு, ஆதாரங்களை நாம் ஏற்படுத்தலாமே!
*
பெரியார்: அதுதான் முடியாது. மதத்தை ஒப்புக்கொண்டால் அப்புறம் நாம் ஒன்றும் மாற்ற முடியாது.
*
காந்தியார்: நீங்கள் சொல்வது மற்ற மதங்களுக்குச் சரி; இந்து மதத்துக்கு அது பொருந்தாது. மதத்தை ஒப்புக்கொண்டு, மதத் தின் பேரால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; உங்களை ஆட்சேபிக்க எவனாலும் முடியாது.
*
பெரியார்: அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? அப்படி என்றால் யார் சம்மதிப்பார்கள்? அதற்கு என்ன ஆதாரம் என்று சொல்ல வேண்டாமா?
*
காந்தியார்: நீங்கள் சொல்வது எல்லாம் சரி, அதாவது, இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. உண்மைதான். நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்குக் குறிப்பிட்ட கொள்கை இல்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆத லால்தான், நாம் ஒரு இந்து மதம்தான் என்பதை ஒப்புக்கொண்டு, நம் இஷ்டம் போல் அதற்குக் கொள்கை ஏற்படுத்திக் கொள்ளலாம். இன்று இந்த நாட்டில், ஏன் உலகத்திலேயே சொல்கிறேன்... மக்களை நாம் கருதுகிறபடி நல்வழிக் குக் கொண்டு வர வேண்டுமானால், இந்து மதம் ஒன்றினால்தான் முடியும்; மற்ற மதங்களால் முடியாது; ஏனென்றால், மற்ற மதங்களுக்குச் சரித்திர ஆதாரம், கொள்கை ஆதாரம் உண்டு. அவற்றில் கைவைத்தால் கையை வெட்டி விடுவார்கள். கிறிஸ்துநாதர் என்ன சொன்னாரோ, அவர் சொன்னதா கச் சொல்லும் பைபிள் என்ன சொல்கிறதோ, அந்தப்படிதான் கிறிஸ்தவர்கள் என்பவர்கள் நடந்தாக வேண்டும்.
-
முகம்மது நபி அவர்கள் என்ன சொன்னாரோ, குரான் என்ன சொல்லுகிறதோ, அதன்படிதான் முஸ்லீம்கள் என்பவர்கள் நடந்தாக வேண்டும், மாறுபட்டு ஏதாவது ஒரு திருத்தம் சொன்னால், அதுமதவிரோதமாக ஆகிவிடும். சொல் லுகிறவர் மதத்திற்கு வெளியில் வந்துதான் சொல்ல வேண்டும். உள்ளே இருந்து சொன்னால், ஒழித்து விடுவார்கள் இதுதான் உண்மையான மதம் என்பவைகளின் தன்மை.
-
ஆனால், இந்து மதம் என்பது இல்லாத மதம் ஆனதால், அந்த மதத்தின் பேரால் யாரும் மகான்களாக ஆகி எதையும் சொல்லலாம். அப்படியே இந்துமதத்தில் ஏற்பட்ட பல பெரியோர்கள், மகான்கள் பலவற்றைச் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், நாமும் அந்த மதத்தை வைத்துக் கொண்டே அநேக சீர்திருத்தங்களை இந்தக் கால மனிதவர்க்கத் தேவைக்கு ஏற்றபடிச் செய்யலாம்.
*
பெரியார்: மன்னிக்க வேண்டும். அதுதான் முடியாது.
*
காந்தியார்: ஏன்?
*
பெரியார்: இந்து மதத்தில் உள்ள சுயநலக்கும்பல் அதற்குச் சற்றும் இடம் கொடுக்காது.
*
காந்தியார்: ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? 'இந்து மதத்தில் தீண்டாமை இல்லை' என்று சொல்லுவதை இந்து மதத்தினர் ஒப்புக்கொள்ள வில்லையா?
*
பெரியார்: ஒப்புக்கொள்வது என்பது ஒன்று, ஒப்புக்கொண்டப்படி நடப்பது என்பது வேறு. ஆகையால், இது காரியத்தில் நடக்காது.
*
காந்தியார்: நான் காரியத்தில் செய்கிறேன். இந்த 4,5 வருஷங்களில் எவ்வளவு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லையா?
*
பெரியார்: உணருகிறேன். அடிப்படையில் மாறவில்லை, தங்களுக்கு உள்ள செல்வாக்கைக் கண்டும், தாங்கள் அவர்களுக்கு வேண்டியிருக்கிறது என்ற சுயநலத்துக்கு ஆகவும் ஒப்புக்கொண்டதாக நடிக்கிறார்கள். அதைத் தாங்கள் நம்புகிறீகள்.
*
காந்தியார்: (சிரித்துக் கொண்டே) யார் அப்படி நடக்கிறார்கள்?
*
பெரியார்: பார்ப்பனர்கள் யாவரும்தான்.
*
காந்தியார்: எல்லாப் பார்ப்பனருமா?
*
பெரியார்: ஆம், ஏன்? தங்கள்கூட இருக்கும் பார்ப்பனர்கள் எல்லோரும்தான்.
*
காந்தியார்: அப்படியானால் உங்களுக்கு ஒரு பார்ப்பனிடம்கூட நம்பிக்கை இல்லையா?
*
பெரியார்: நம்பிக்கை ஏற்படமாட்டேன் என்கிறது.
*
காந்தியார்: இராஜகோபாலாச்சாரியாரிடம்கூட உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
*
பெரியார்: அவர் நல்லவர்; உண்மையானவர்; தியாகி; சுயநலமில்லாதவர். ஆனால், இவையெல்லாம் அவர்களது வகுப்பு நலனுக்கு அவர் உண்மையான தொண்டர், நல்ல தியாகி, அத்தொண்டில் சுயநலமில்லாதவர். ஆனால், என் வகுப்பு நலத்தை அவரிடம் ஒப்படைத்துவிடச் சுலபத்தில் எனக்கு மனம் வராது.
*
காந்தியார்: இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால், உலகத்தில் ஒரு பிராமணன்கூட யோக்கியன் இல்லை என்பது உங்கள் கருத்தா?
*
பெரியார்: இருக்கலாமோ என்னமோ? எனக்குத் தென்படவில்லை.
*
காந்தியார்: அப்படிச் சொல்லாதீர், நான் ஒரு பிராமணனைப் பார்த்திருக்கி றேன். சந்தேகமற நான் இன்னும் அவரை நல்ல பிராமணன் என்றே கருதுகி றேன். அவர் யார் தெரியுமா? அவர்தான் கோபால கிருஷ்ணகோகலே.
*
பெரியார்: அப்பாடா! தங்கள் போன்ற மகாத்மாவினுடைய கண்ணுக்கே இப்பெரிய உலகில் ஒரே ஒரு பிராமணன் தென்பட்டு இருந்தால், எங்களைப் போன்ற சாதாரண பாவிகள் கண்களுக்கு எப்படி உண்மைப் பிராமணன் தென்பட்டிருக்க முடியும்?
*
காந்தியார்: (சிரித்துக்கொண்டே) உலகம் எப்போதும் 'இண்டெலீஜன்சியா' (படித்த கூட்டத்தார்) ஆதிக்கத்தில் இருக்கும். பிராம ணர்கள் படித்தவர்கள். அவர்களது எந்தக் காலத்திலும் ஆதிக்கமுள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அதனால், அவர்களைக் குற்றம் சொல்வதில் பயனில்லை, மற்றவர்களும் அந்த நிலைக்கு வரவேண்டும்.
*
பெரியார்: மற்ற மதங்களில் அப்படி இல்லை. இந்து மதத்தில் மாத்திரம்தான் பார்ப்பனரே யாவரும் இண்டெலிஜன்சியாவாக (படித்தவர்களாக) இருக்கி றார்கள். மற்றவர்கள் அநேகமாக 100க்கு 90க்கும் மேற்பட்ட மக்கள் படிக்கா தவர்களாக, ஏமாளிகளாக இருக்கிறார்கள். ஆகவே, ஒரு சமுதாயத்தில் ஒரு சாதி மாத்திரமே 'இண்டெலிஜன்சியா'வாக ஆதிக்கக்காரர்களாக இருக்க முடி யும் என்றால், அந்த மதம், அந்த ஜாதி தவிர்த்த மற்ற சாதியருக்குக் கேடான தல்லவா? ஆதலால்தான், நான் அந்த மதம் பொய்மதம் என்பதோடு, அந்த மதம் மற்றவர்களுக்குக் கேடானது; ஆதலால் ஒழிய வேண்டும் என்கிறேன்.
*
காந்தியார்: உங்கள் கருத்து என்ன? இந்துமதம் ஒழிய வேண்டும்; பிராமணர் கள் ஒழிய வேண்டும் என்பதாக நான் கருதலாமா?
*
பெரியார்: இந்துமதம், அதாவது இல்லாத பொய்யான இந்துமதம் ஒழிந்தால், பிராமணன் இருக்கமாட்டான்.இந்துமதம் இருந்தால், பிராமணன் இருக்கிறான். நானும் தங்களும் சூத்திரர்களாக இருக்கிறோம். எல்லாவித ஆதிக்கமும் பிராமணர்கள் கையில் இருக்கிறது.
*
காந்தியார்: அப்படி அல்ல நான் இப்பொழுது சொல்லுவதைப் பிராமணர்கள் கேட்கவில்லையா? இந்தச் சமயத்திலேயே நாம் யாவர்களும் சேர்ந்து நீங்கள் கருதுகிற குறைபாடுகளை இந்து மதத்தின் பேராலேயே நீக்கி விடலா மல்லவா?
*
பெரியார்: தாங்களால் அது முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. முடிந்தாலுங்கூடத் தங்களுக்குப் பிறகு மற்றொரு மகான் தோன்றி, முன்பு இருந்து வருவதை இப்போது தாங்கள் மாற்றுவதுபோல், இன்று தாங்கள் செய்ததை அந்த இன்னொரு மகான் மாற்றிவிடுவார்.
*
காந்தியார்: எப்படி மாற்றக்கூடும்?
*
பெரியார்: தாங்கள்தான் இந்துமதத்தின் பேரால் எதையும் சொல்லி மக்களைநடக்கச் செய்யலாம் என்று சொன்னீர்களே! அதே போல் நாளைக்கு வரப்போகும் மகானும் இந்துமதத்தின் பேரால் எதையும் செய்யலாமல்லவா?
*
காந்தியார்: இனிவரும் காலத்தில் அந்தப்படி மாற்ற எவராலும் சுலபத்தில் முடியாது.
*
பெரியார்: நான் சொல்லுகிறேன், தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்து மத த்தை வைத்துக்கொண்டு இன்று தங்களாலேயே நிரந தரமாக ஒன்றும் செய்துவிட முடியாது. பிராமணர்கள் அவ்வளவு தூரம் விட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் கருத்து அவர்களுக்கு விரோதமாகச் சற்றுப் பலிதமா கிறது என்று கண்டால், உடனே எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள்
இதுவரை ஒரு பெரியாராலும் இந்தத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்பதோடு, அப்படிப் பட்ட ஒருவரையும் பிராமணர்கள் விட்டு வைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
*
காந்தியார்: உங்கள் மனதில் பிராமணர் மீது ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதுவே உங்களுக்கு முன்னணியில் நிற்கிறது. இது விஷயமாய் இவ்வளவு நேரம் நாமிருவரும் பேசியதில் இதுவரை நாம் எவ்வித ஒற்றுமை முடிவுக்கும் வரவில்லை என்பதாக நான் நினைக்கிறேன். ஆனாலும், இனியும் 2,3 தடவை சந்திப்போம். பிறகு நான் என்ன செய்யலாம் என்பதைப்பற்றிச் சிந்திக்கலாம் - என்று சொல்லிக்கொண்டு படுக்கையில் இருந்தபடியே ஒரு கையால் தன் தலையை உருட்டித் தடவினார்.
*
******
*
நன்றி:
பெரியார் களஞ்சியம்-4
தட்டச்சு/வடிவம்: தாஜ்

Sunday, April 08, 2007

கலைப்படம் - தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம்.


- தாஜ்


கனவுகளைச் சுட்டு காசு பார்க்கும் வியாபாரத்தில் அதிஷ்டம் வாய்ந்தது சினிமா! இதில் அமெரிக்காவின் தாயாரிப்புகள் அமர்க்களப் படுத்தும் ரகமென்றால், அடுத்த கலக்கல் இந்திய தயாரிப்புகள்தான். படங்களின் எண்ணிக்கைகளில், தொழில் நுட்பத் திறமைகளில், இன்னும் மிதமிஞ்சிய அதன் கற்பனை வளத்திலும்கூட நம்ம பாலிவுட்டும் கோலிவுட்டும் ஹாலி வுட்டை விட்டேனாபார் என்ற ரீதியில் துரத்திக்கொண்டே இருக்கிறது.


'கோலிவுட்' என்று செல்லமாக அழைக்கப்படும் நம்ம கோடம்பாக்கத்தை, பார்க்க கிடைக்கிற போதெல்லாம் கட்டத்தெரியாமல் கட்டிய கட்டி வரிசைகளுக்கிடையேயான சாலைகளில், அதன் சந்துப்போந்துகளில் சதாநேரமும் திமிரி வழியும் மக்கள் கூட்டம் எப்பவும் மாறா காட்சி! முகம் சுழிக்கும் அளவுக்கு! ஆனால், அங்கேதான் உலக அளவில் ரசிகர்களைத் தேடிவைத்திருக் கும் தமிழ்த் திரைப்படங்கள் உருவாகி / வடிவுகொண்டு / வெளியாகிறது! வியப்புதான்!!

தமிழ்த் திரைப் படம் பேசத்துவங்கி சுமார் எழுபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் ஆரம்பப் படம்தொட்டு இன்றைய சினிமாவின் பிரமாண்ட வடிவம்வரை அது உருமாறிய எண்ணிக்கைகள் அதிகம். தனது பரிணாம வளர்ச்சியின் கூறாய் என்னென்னவோ வேஷமெல்லாம் காட்டியிருக்கிறது. ஆனால் யதார்த்தம் / கலைநுட்பம் என்பதைத் தவிர. என்றாலும், அதன் நீண்ட வரலாற்றில் அப்படியான சுவடுகள் இல்லையென்று சொல்லிவிட முடியாது.

ஆரம்ப காலத்தில் எல்லா மொழிகளின் சினிமா மாதிரியே, நம் தமிழ்ப் படமும் புராணக் கதைகளையே சதமென நம்பித்தான் முகிழ்ந்து தவழ்ந்திருக்கிறது. அடுத்து, ராஜா ராணி கதை வட்டத்திற்குள் வெகுகாலம் சுற்றியப்படி, மூச்சுக்கு மூச்சு பாடிக்கொ ண்டு, தப்பிக்க வழி புரியாத ஓர் சஞ்சாரத்தில் 'நாட்டு சுதந்திரத்தாகப் பேர்வழியாக' தலையெடுத்தது. பின்னர் சமூகக் கதைக ளுக்குள் கால் வைத்தது 'கிளிசரின்' இல்லாமலே படம் அத்தனையிலும் அழுது தீர்த்தது அல்லது பாடித் தீர்த்தது. அதன் நீட்சி யாய் சமூதாய சீர்திருத்த வேகம்காட்டி நீண்ட வசனங்களைப் பேசவும் கைத்தட்டல் வாங்கி பெருமிதம் கொள்ள,அடுத்த யுக்தி யாக ஒருபக்கமும் தீவிர கதை சொல்லும் உந்தலோடும், இன்னொருப் பக்கம் பொழுதுபோக்கு அம்சங்களோடும் முகம் காட்டி அமோகமாக வாகைச் சூடியது.

தீவிர கதை சொல்லுதல் என்பது, தமிழ்ச் சினிமாவில் ஆதிதொட்டு தொடர்ந்த பழைய அழுகையின் புதிய பதிப்பு. பொழுது போக்கு அம்சமென்பது நாயகிகளின் அரைகுறை ஆடை மேனி / அவர்களின் திமிரிய வனப்புகள் / விகரதாப நெளிதல்கள் / ஆடல் பாடல்கள் / நியாயத்தை நிலைநாட்ட எதிரிகளை நாயகன் பந்தாடுவது என்பனவற்றை முதன்மைப் படுத்துவது. முன்னது சிவாஜியின் படங்கள் என்றால் பின்னது எம்.ஜி.ஆர். அவர்கள் இருவரும் இறந்து போய்விட்டார்கள் என்றாலும், அவர்களது ஃபார்முலா இன்னும் உயிரோடுதான்!! சரியாக சொல்வதானால் அது இன்னும்கூடுதலான மெருகுடனும், தொழில்நுட்பப் பின்னலுடனும் வெற்றிகரமாக ஜீவிக்கிறது!

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தங்களை தமிழ்ச் சினிமாவில் ஸ்திரபடுத்திக் கொள்ள முயன்றுக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தான் வங்கத்தில் திரு.சத்தியஜித்ரே தனது திரைப்பட மேன்மையை உலகிற்கு காட்டினார். கலையின் பரிமாணங்களுடன் நுட்ப மான யதார்த்தங்களை அவர் காட்சிகளாக்கிக் காட்ட, சினிமாவின் அடுத்தக் கட்டத்தை விரும்பிய அனைவரும் அதில் லயித்து போனார்கள். தமிழைத்தவிற பிற மொழி தயாரிப்புகள் இந்த காலக்கட்டத்தில் விழித்துக் கொண்டார்கள். அடுத்தக்கட்ட சினிமா குறித்து குறைந்த பட்சமேனும் சிந்திக்கவாவது செய்தார்கள். இந்த சிந்திப்பையொட்டிய எழுச்சியின் கூறாகத்தான் 'பூனாஃபிலீம் இன்ஸிட்டியூட்'.

சத்தியஜித்ரேயின் எழுச்சியை தமிழ்த் திரையின் விசயஞான பெரிசுகள் கீச்குரலில் பாராட்டிக்கொண்டிருக்க, "உலகப்பார்வைக்கு இந்தியாவின் ஏழ்மையைப் படம்பிடித்துக் காட்டி பரிசுகள் பெறுவதா?" என்கிற விமர்சன கூக்குரலும் இங்கே எழுந்தது. இங்கேமட்டுமல்ல எங்கேயும் எதிலும் அதிமேதாவிகள் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ள தயங்குவதே இல்லை. இவர்களின் விமர்சனக் குரல் வங்கத்திலிருந்த சத்தியஜித்ரேவுக்கு எட்டியதா என்று தெரியாது. எட்டியிருக்குமென்றால் அதை அவர் எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்? யோசிக்க கஷ்டமாகத்தான் இருக்கிறது.

சத்தியஜித்ரேவின் எழுச்சிக்குப்பிறகு விழித்துக் கொண்ட பிறமெழி தயாரிப்புகளில் மலையாளப் படங்கள் தங்களது புதிய ரூபங் களை காட்டத்துவங்கியது. 'சென்மீன்'/ 'துலாபாரம்'யென நகர்ந்து, 'காடு' எடுத்து எழுந்து தங்களது மேல்நோக்கியப் பயணத்தை உறுதிப்படுத்தியது. அந்தப் படங்கள் 'ஆர்ட்மூவி' இல்லையென்றாலும் நிச்சயம் அதை நோக்கி நகர்ந்த ப்படங்கள். அந்த மூன்று படங்களுக்குமே இங்கே தமிழ் ரசிகர்களி டையும் மிகுந்த வரவேற்பு இருந்தது. இருந்தும், அதையொத்த தயாரிப்பை நிகழ்த்த இங்கே யாரும் தயாராக இல்லை. அதற்காக இங்கே உள்ளவர்களின் கபால மடிப்புகள் குறைந்த தென்றும் சொல்லிவிட முடியாது.

எது ஒன்றையும் எளிமைப்படுத்தி, இரட்டிப்பு லாபநோக்குடன் அனுகுவதே நம் சினிமாகாரர்களின் தீர்மானமான குறி. செம்மீன் இங்கே படகோட்டியானது, துலாபாரம் அதே பெயரில் ஆனால் வியாபார மாற்றங்களுடன் மறுபதிவு கண்டது.காடுவை இங்கே எப்படி சிதைத்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் சொய்திருப்பார்கள். ஆனாலும், சத்தியஜித்ரேயின் எதிரொலி அதிர்வு இங்கே இல்லாமல் இல்லை. ஜெயகாந்தன் 'பாதை தெரியுது பார்' என்று முயன்றதெல்லாம் அந்த எதிரொலியின் அதிர்வுதான்.

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தங்களது ஃபார்முலாவின் முழுவெற்றியால், தமிழ்த் திரையரங்குகளை ரொம்பி வழியவிட்டுக் காட்டிய போது, அவர்களின் நகலாக இங்கே இன்னும்பல சூப்பர்ஸ்டார்களும், நவரச நாயகர்களும் கிளைத்துக் கிளம்பி தனி கடைகள் திறந்தார்கள். பெருசுகளின் வெற்றி ஃபார்முலாவுக்கு இன்னும் கூடுதலான பூச்சுவேலைகளை செய்துகொண்டார்கள். இப்படி அவர்களும் பணத்தை அள்ளத் துவங்கிய நேரத்தில் பெங்கால், மலையாளம், இந்தி, கன்னடம், மராட்டி, துளு போன்ற மெழிக ளில் சத்தியஜித்ரேயின் கலைவடி வத்திற்கு நிகரானப் படைப்புகளை திரையேறத் தொடங்கியது.. ஒவ்வொரு மொழியிலும், இன்றும் வருடத்திற்கு ஐந்து கலைப் படங்களேனும் நிச்சயம் என்கிற நிலை.

சத்தியஜித்ரே, அபர்ணாசென், ஸியாம் பெனகல், கோவிந்த் நிஹலானி, மீரா நாயர், சேகர் கபூர், தீபாமேத்தா, ரிக்விக்கடக், கிரி ஷ்கர்னாட், காசரவல்லி, ஆடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், கே.ஜி. ஜார்ஜ், வாசுதேவன் நாயர், ஜான் ஆபரஹாம், ராஜீவ் அஞ்சல், டி.வி.சந்திரன், சித்திக் போன்ற கலை ஆர்வம் கொண்ட இயக்குனர்களின் சீரிய முயர்ச்சிகளால் நமக்கு உன்னதமான படங்கள் பார்க்க கிடைத்தது அல்லது கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதில் மகிழ்ச்சியுண்டு என்றால் இவர்களால் இந்தியத் திரைப்படங்கள் உலக அளவில் பேசப்படுவதிலும் பெருமை சேர்ப்பதிலும் அந்த மகிழ்ச்சி கிளைத்து விண்னைத் தொடுகிறது.

பணம்கொட்டும் சினிமாமாதிரியான மீடியாக்களில் ஈடுபடுகிறவர்கள் தங்களது உழைப்புக்கு மீறிய வகையில் பன்மடங்கு பணம் ஈட்டுவதை குறியாகவே கொண்டிருக்கிறார்கள். சம்பாத்திய இலக்கணமெல்லாம் இவர்களுக்கு எப்பவும் ஆகாது. மக்களின் நாடித்துடிபை துள்ளியமாக கணித்து, திரையை வண்ணமயமாக்கி மக்களை கவர்ந்திழுத்து சுரண்டுவதில் வல்லவர்கள். இதனா லேயே இவர்களுக்கு சினிமாவை, 'வாழ்வின் யதார்த்தத்தை பதிவாக்கிப் பார்க்கும்' பார்வையே இல்லாமல் போய்விட்டது. இவர் களுக்குள் தவறி யாரேனும் ஒருவர் கலைப்படம் என்பதாக முயன்றல், அவர் இங்கே பைத்தியகாரன்! பணம் பண்ணவேண்டிய இடத்தில் கலை என்பது இவர்களுக்கு ஆவதேயில்லை. கோடிகளில் புரளும் தகிப்பில் உலகில் மிகச்சிறந்த பூஷ்வாக்களையெ ல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுபவர்கள் இவர்கள்.

ஆடூர் கோபாலகிருஷ்ணனை ஒரு பத்திரிகை நிருபர் பேட்டிக் காணுகையில், "உங்கள் படங்கள் பெரிய அளவில் ஓடுவதில்லை யே? பின் எப்படி சமாளிக் கிறீர்கள்?" என்று கேட்டப்போது, "என் படங்கள் லாபம் தராமலா நான் தொடர் ந்து படம் எடுக்கி றேன். நான் திட்டமிட்டு குறைந்த முதலீட்டில் படம் தயாரி க்கிறேன். அதை என் ரசிகர்களும் பார்க்கிறார்கள். எனக்கொன்று நான் நிர்ண யித்துக் கொள்ளும் மாதாந்திர சம்பளம் அதன் வழியே கிடைக்கத்தான் செய் கிறது. பிறகு இதில் என்ன பிரச்சனையி ருக்கிறது!" என்றார்.

திட்டமிட்டு தயாரிக்கும் முயர்ச்சியும், குறைந்த லாபத்தின் அளவில் திருப்தியும் இருக்கும் பட்சம் கலைப்படம் எடுப்பதில் பிரச் சனை எழாது என்பதாக அவரது பதிலை நாம் புரிந்து கொள்ளலாம். திரைப்பட தயாரிப்பின் வழியே, கோடிகளிலான வரவு செலவு தரும் ஆனந்தம், போதை தரும் சுகம், தேடிவந்து மடியும் பெண்களின் வாசனை, எளிதில் வாய்க்கும் பேர்/ புகழ்/ பந்தா, வருங்கால முதலமைச்சருக்கான கனவு போன்ற நட்சத்திர சங்கதிக ளோடு சஞ்சரிக்கும் நம் சினிமாகாரர்களுக்கு ஆடூர் கோபாலக்கிருஷ்ணனின் இந்த பதில் இஸ்டப்படாது.

தமிழ்ச் சினிமா போச ஆரம்பித்து, வெற்றிகரமான வியாபார ஸ்தலமாக
உருவெடுத்தத் தருணத்தில், ஊர் ஊராய் தெருகூத்தும் நாடகம் போட்டுக் கொண்டிருந்த அத்தனை கலைஞர்களும் தங்களது ஜாகையை சினிமாவின் பக்கம் மாற்றிக்கொள்ளத் துவங்கி னார்கள். அந்த நடிகர்கள் அங்கே நடிக்கும்போது என்னென்ன குணச்சேட்டைகள் செய்தும், விடிய விடியப் பாடியும் கைத்தட் டல்கள் வாங்கினார்களோ, அது அத்தனையையும் சினிமாவிலும் செய்தார்கள். இங்கேயும் அதற்கு அதே கைத்தட்டல் கிடைத் தது. நாடகத்தையும் சினிமாவையும் பிரித்துப்பார்க்க யாரும் முயலவே யில்லை. தமிழ்ச்சினிமா வெகுகாலம் தன்வளர்ச்சிப் பாதை யில் இப்படிதான் சறுக்கத் தொடங்கியது.

இந்த சறுக்கலின் தொடர்ச்சி கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்வரைகூட இருந்தது. கத்திப் போசுவது, கர்ஜிப்பது, கதறி அழுவது, தனக்குத்தான் பேசிக்கொள்வது, விழிகளை உருட்டி மிரட்டுவது, புருவங்களை வளைத்து நெளிப்பது, பேச்சில் ஏத்த இறக்க மேனரிஸங்கள் செய்வது, நடையில் அபிநயம் காட்டுவது போன்றவற்றத்தை நடிப்பின்பேரால் தாராளமாக நிகழ்த்தினார் கள். இதில் நம் நடிகர்திலகம் ரொம்பவும் கெட்டி. கடைசிவரை அதில் அவர் பிசகவே இல்லை. வட்டத்தைத் தாண்டாத நடிகர். இன்றைக்கு அவரது கீர்த்திகள் வாழ்வது மாதிரி, அவரது நடிப்புக் குறித்த வியப்புகளும் வாழ்கிறது.

நடிகர்கள் மட்டுமல்ல, அரங்க அமைப்பாளர்களில் இருந்து இயக்குனர்கள் வரை தமிழ்ச் சினிமாவில் ஆதிக்கம் புரிந்த பலரும் மேடைவழி வந்தவர்கள். இவர்கள் எல்லோராலுமே நம் சினிமா விஸ்தீரணமாகப் பாதிக்கப்பட்டது. நம் 'இயக்குனர் சிகரம்' மும் நாடகவழி வந்தவர்தான். அவர் தனது கட்டுரை ஒன்றில், "இயக்குனராக இயங்க ஆரம்பித்து நாலைந்து படங்கள்வரை எனக்கு நாடக இயக்கத்திற்கும், சினிமா இயக்கத்திற்கும் வித்தியாசமே தெரியாமல் தான் இருந்தது" என்றிருந்தார். எப்படி இருக்கிறது கதை! தமிழ்ச் சினிமா இன்றைக்கு தன்பாதையில் கொஞ்சமேனும் முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்றால், அதெல்லாம் இந்த மாதிரியான சிகரங்களின் மீதேறித் தாண்டிய தால்தான்.

சினிமா என்கிற வீசுவல்மீடியாவை பற்றி வழிமுறையாகப் பாடம் போதிக்க பூனாவில் ஃபிலீம் இன்ஸிட்டியூட் ஏற்பட்டது மாதிரி, பிற்காலத்தில் சென்னையிலும் அப்படியொன்று ஏற்பட்டது. அதன் வழியாவது தமிழ்ச் சினிமாத்துறைக்கு விமோச்சனம் கிட்டும் என்றும், வருடத்திற்கு ஐந்தாறு கலைப் படங்களாவது வர வாய்ப்பிருக்கிறது என்றும், நம்பிய சிலரில் நானும் ஒருவன். அதன் ஆரம்ப அறிகுறியும் அப்படித்தான் இருந்தது. அதில் படித்து வெளிவந்த ருத்ரய்யா 'அவள் அப்படித்தான்' தந்தபோது துளிர் த்த நம்பிக்கை அது. ஆனால் அதன் பிறகு வந்த அந்த இன்ஸிட்டியூட் மாணவர்களில் எவர் ஒருவரும் அப்படி நம்பிக்கை தரும் படம் தந்தார்கள் இல்லை. இன்றுவரையி லும்கூட அதுதான் நிலை. மாறாய், சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாணவர் கள் நடிகர் விஜயகாந்திற்கு பின்புலமாக நின்று தயாரித்துக் காட்டிய 'வன்முறையும், இரைச்சலும், பிரமாண்டப் பவிசும்' கூடியப் படங்கள் நம் ரசிப்பின் விதியை நிர்ணயப்பதாக ஆகிப்போனது. அதுதான் இன்றுவரை நம்மை மாறிமாறி துரத்திக் கொண்டு இருக்கிறது. விடாது கருப்பு!

இன்றைக்கு, உலகச் சினிமாவின் பிரமாண்டத்தோடு நேர் நிற்கும் வல்லமை கொண்டதாக தமிழ்ச் சினிமா உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. இத்தொழிலில் வளர்ந்துள்ள தொழில் நுட்பம் அத்தனையையும் நமது சினிமா உள்வாங்கி பெருத்துவிட்டது. இசையின் பதிவில், காட்சிகளின் லாவகத்தில், அதன் தெளிவில், கிராஃபிக் யுக்தியில் என்று கிடுகிடு வளர்ச்சி. இன்றைய ரசிகர் களும் தாங்கள் கொடுக்கும் காசுக்கு அத்தகைய வித்தைகளை எல்லாம் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்ச்சினிமாவின் நிலை இப்படி கிளைத்து விட்ட இந்த காலத்தில், இங்கே கலைப்படம் எடுக்க நினைப்பவர்கள் நியாயமாக யோசிப்பார்கள். அவர்கள் அருகிப் போக வாய்ப்புகள் அதிகம். எங்கும் எப்பொழுதும் யதார்த்தத்திற்கு பிரமாண்டம் சத்ரு.

வியாபாரப்படம், கலைப்படம் என்றிருந்த நிலைபோய், வியாபாரப்படம் மட்டுமே என்கிற நிலை இங்கே மெல்ல மெல்ல ஸ்திரப் பட்டுவிட்டது. இப்பொழுது வியாபாரப் படங்களிலேயே நல்லப்படம் / நல்லா இல்லாதப்படம் என்கிற ரீதியில் இருகூராகப் பார் க்கச் சொல்கிறார்கள். அதாவது மசாலத்தனம் நிறைந்த, சொதப்பல் கூடியப் படத்தை நல்லா இல்லாதப் படமென்றும், மசாலத் தனம் கொஞ்சம், சொதப்பல் கொஞ்சம், கலைநேர்த்தி செய்நேர்த்தி என்பதும் கொஞ்சம் யென்று கலந்துப்பட்ட படத்தை நல்லப் படம் என்றும் குறிப்பிடுகிறார்கள். எல்லாத்தரப்பிலும் அதை ஒப்புக்கொள்ள வும் செய்கிறார்கள். ஆக, பிறமொழிகளின் சினிமா ரசிகர்களுக்கு கிட்டிய கலைப் படங்களிலான பேரானந்தம், தமிழ்ப்படங்கள் மட்டுமே பார்க்கவாய்த்த தமிழ் ரசிகர்களுக்கு இனி இல்லையென்று ஆகிவிட்டது. இங்கே நேற்றைக்கது இல்லை. நாளைக்கும் அது இல்லவே இல்லை. இதில் பெருவாரியான தமிழ் ரசிகர்களுக்கு எந்தவொரு வருத்தமுமில்லை என்பது இங்கே முக்கியச் செய்தி.

எழுபத்தி ஐந்து வருட தமிழ்ச் சினிமா வரலாற்றில் ஜெயகாந்தனின் 'யாருக் காக அழுதான்' தொடங்கி, ஜெயபாரதியின் 'குடிசை' பாலு மகேந்திராவின் 'அழியாத கோலங்கள், வீடு' ருத்திரய்யாவின் 'அவள் அப்படிதான்' துரையின் 'பசி' சேதுமாதவனின் 'மறுப க்கம்' ஜானகி விஸ்வநாதனின் 'குட்டி' பலசந்தரின் 'ஒரு வீடு இருவாசல்' பிரதாப்போத்தனின் 'மீண்டும் ஒரு காதல் கதை'மணிர த்தினத்தின் 'இருவர்' பார்த்திபனின் 'ஹவுஸ் ஃபுல்' ஞானசேகரனின் 'மோகமுள், முகம், பாரதி' ஜெகன்ஜியின் 'கோடம்பாக் கம்' கமலின் 'ஹேராம், அன்பே சிவம்' முடிய தமிழில் வந்த கலைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சிலருக்கு இந்த பட்டியல் சலுகை கூடியதாக தெரியும் வாய்ப்புண்டு. ஒருவகையில் அதுவும் நிஜம்தான். நீண்ட சரித்திரமும், பெரிய ஆகி ருதியும் கொண்ட தமிழ்ச் சினிமாவை முன் நிறுத்திப் பார்க்கிறபோது மேற்கண்டப் பட்டியலின் எண்ணிக்கை என்பது ஒன்றுமி ல்லை.

இன்றைக்கு குறிப்பிடப்படுகிற நல்லப்படம் அல்லது இடைநிலைப்படம் என்பது இன்றைக்குத்தான் என்றில்லை அது இயக்குனர் ஸ்ரீதர் காலத்திலேயே உருகொள்ளத் தொடங்கிவிட்டது. அவரது 'நெஞ்சி ஓர் ஆலயம்' 'வெண்ணிற ஆடை' என்பதெல்லாம் அப்படிப்பட்ட படங்கள்தான். இந்த வரிசையில் தமிழில் சொல்லி கொள்ளத் தகுந்தப் படங்கள் உண்டு. பாலுமகேந்திரா / மகே ந்திரன் / மணிரத்தினம் / ஃபாசில் போன்றோர் பெரும்பாலும் இந்த வரிசைப் படங்களையே எடுப்பவர்களாக இருந்தார்கள். தவிர, அதன் கூறுகளை புதிப்பிக்கவும் செய்தார்கள். கமலும் தன்னுடையப் படங்களை இந்த வரிசையில் நிறுத்த பலத்த முயற்சி கள் எடுத்துக் கொள்வார். 'ராஜப்பார்வை' யில் தொடங்கிய அவரது அந்த முயற்சி இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதில், அவர் தேரினதும் உண்டு தேராததும் உண்டு.

மேலே குறிப்பிட்டிருக்கிற தமிழ் இயக்குனர்களின் இடைநிலைப் படங்கள் அல்லது நல்லப்படங்கள் நமது ரசனையை உரசி கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பது வாஸ்த்தவம்தான். என்றாலும், கேரளச் சினிமாவில் இப்படியான இடைநிலைப் படங்களை இயக்கிய அல்லது இயக்கிக்கொண்டி ருக்கும் பரதன், சத்தியன் அந்திகாடு, சீனிவாசன், சிபிமலயில், ஃபாசில்,கமால், பாலச்சந்திர மேனோன், லெனின் ராஜேந்திரன், மேகந்தாஸ் போன்றவர்களிடம் காணும் கதைச்சொல்லும் முறை, காட்சிகளின் எளிமை, உள் ளார்ந்த அழகை வெளிப்படுத்தும் பாங்கு, காட்சிக்கு காட்சி பின்னிக் கொண்டு நெளியும் நகைச் சுவை, கதாபாத்திரங்களின் சக ஜம், நடிகர்களின் செயர்கைத்தனமில்லா ஒத்து ழைப்பு போன்ற அம்சங்கள் அலாதியான ரசனைக்கொண்டது. மலையாள மொழி யில் வெளிவரும் படங்களில் பாதிக்குப்பாதி இப்படியானதே என்பது இன்னொரு உபசெய்தி.

சமீபகாலத்து தமிழ் இயக்குனர்களான தங்கர்பச்சன், பாலா, செல்வராகவன், எஸ்.ஜெனநாதன், அமீர் ஆகியோரது இடைநிலைப் படங்கள் மெச்சத் தகுந்ததாக இருக்கிறது. தங்கர் பச்சனின் 'அழகியும், சொல்ல மறந்தக் கதையும் கலைப்படத்தின் நெருக்கம் கொண்டது. பாலாவின் 'பிதாமகன்' ஓர் சாத்திய முயற்ச்சி என்றால் அமீரின் 'பருத்தி வீரன்' விசாலமான கற்பனை வளம் முகிழ்ந்த நிஜத்தின் அழகியப் பதிவு. அதன் பரிமாணத்தின் எந்தப் பக்கம் நின்று பார்த்தாலும் உச்சம் தெளிவாகத் தெரிகிற இடைநிலைப்படமிது. அர்த்தமற்ற வாழ்வேடு காலத்தின் போக்கில் கரைகிற மக்கள் நம்மில் ஏராளம். உள்ளார்ந்த கிராமப் புறங் களில் அந்த தொகை அதிகம். அவர்களில் சிலரை மையப்புள்ளியாக்கியிருக்கிறது இந்தப் படம். தமிழில் நாம் வாசிக்கும் நவ இலக்கியங்களில் கூட இப்படியானப் பாத்திரப் படைப்பு என்பது அரிது.

இடைநிலைப் படங்களினால் கிட்டும் திருப்தி என்பது வியாபாரப்படத்தை சரியான கோணத்தில், பிசிரில்லாமல் கொண்டு செலு த்தி இருப்பதிலான நிறைவும் மகிழ்ச்சியும்தான். ஆனால், கலைப்படம் தரும் அனுபவம் முற்றிலும் வித்தியாசமானது. தீர்க்க மான கவிதையை தீர வாசித்து, உள்வாங்கி, ரசிப்பதுமாதிரி. ஆங்கூர், நிஷாந், சக்கரா, அபிலாஷ், கிர்த், மண்டி, சலாம் பம்பே, குரு (மலையாள கலைப் படம்) மகரிப், கொடியேற்றம், மேளா, லேகாவோட மரணம் ஓர் ஃபிளஸ்பேக், சிதம்பரம், போன்ற கலைப்படங்கள் பார்க்கக் கிடைத்த தருணத்தில் அவைகள் எனக்குத் தந்த அனுபவம் அப்படிப்பட்டதுதான். தமிழ்த் திரைப் படதையே சதமென நம்பிய ரசிகர்களுக்கு அப்படி ஒரு தீவிர அனுபவத்தை அது வழங்கத் தவறிவிட்டது. திரைப்பட வடிவத் தின் ஓர் உன்னதமான அத்தியாயத்தை தரிசிக்காமலே நம் ரசிகர்கள் தாண்டி வந்து விட்டார்கள்.

*******

Wednesday, April 04, 2007

தாஜ் கவிதைகள் - 11



தேடிய அழகு.
--------------------

கற்றுத் தந்த காலம்
வானவீதியை காட்ட
பறப்பதில் இருப்பு
உச்சமென்றானது
மனப்புத்தன்
சிரிப்பை கிழித்து
பறந்த க்ஷணம்
அந்தரத்தில்
தொலைந்தது
நிழலும்.

*****


தந்தையின் காலம்.
------------------------

என் பிள்ளைகள்
படிக்கிறார்கள்
சுமக்க இயலா
சுமக்கவே
படிக்கிறார்கள்.

வீட்டில் யென்
அசைவுகளிலும்
பார்வை அகலா
சிரத்தையோடே
படிக்கிறார்கள்.

மண்ணில் யென்
பாதம் பதியும்
இதம் வேண்டி
காலணிகளை
விட்டுச் செல்ல
படிப்பால்
தெளிகிறார்கள்.

குறுக்கீடுத் தவிர்க்க
சப்தமற
காலடிகளை அளந்து
பாதை ஒற்றியே
நடக்க வேண்டியிருக்கிறது.

என் உடுப்புகளில்
கறைபட்ட எச்சங்கள்
இன்னும் அவர்களுக்கு
புலப்படாதது ஆச்சரியம்.

அவர்களது புத்தகக்
குவியலுக்குப் பக்கத்தில்
நான் நகலெடுத்த
என் கவிதைத்
தொகுப்பொன்று
விரிந்து கிடக்கிறது
இன்னொரு புத்தகமாக.

காலம் காலமாக
எல்லோரும்
கவிதைகளை
விரும்புவதில்லை
சந்தோஷமாக இருக்கிறது.

******


நிர்வாண முகம்.
---------------------

கண்ணாடிக்கு முன்னால்
கண்கள் என்
முகம் தேடும் நேரம்
நிஜமான நண்பன்
உத்தம கணவன்
அன்பு பிரவாக தந்தை
அரசியல் பேச்சில்
சிவப்பவன்
பெண்ணுரிமை தாங்க
பேச்சிலும் தீரன்
கவிதையில் செய்திகள்
சொல்லும் ஆவலன்
இன்னும் அறிவு ஜீவியென
நேரத்திற்கு நேரம்
கட்டின காட்சிகள்
கிளர்ச்சி யூட்ட
புலி வேஷம்
பூனை வேஷம்
நரி வேஷம் நாய் வேஷம்
இட்டுக் கலைத்ததும்
கூடவே விரிந்தது.

******