Friday, April 13, 2007

தாஜ் கவிதைகள் - 12



நேற்று இன்றல்ல.
-------------------------

கண்ணாமூச்சி ஆடியக் காலம்
தாவிமேவிய நட்புகள்
தூங்க விடாதக் காதல்
மூச்சாய் தெரிந்த அரசியல்
வாயை கட்டிய மதம்
கண்களை பொத்திய கலாச்சாரம்
மண்டைக்குள் குடைந்த கடவுள்
இன்னும் ஒரு துள்ளலாய்
விசேசப் பூச்சோடு
நாளொரு தத்துவங்கள்.

எல்லா தினங்களின் வீறும்
அமைதியில் தோய்ந்து
இருளில் மறைய
உதயத்தின் சிரிப்பில்
முந்தைய நாளில் காணா
புதிய துளிர்களின்
குதூகலத்தை
எங்கும் பார்க்கலாம்.

******

சித்து.
--------

மானத்தை மூடும் உடுப்பு
வெள்ளை அழுக்காய்
அழுக்கு வெள்ளையாய் மாறும்
மூடின உடலுக்குள்ளே
என் செல்லப் பிசாசு
துரு பிண்டம்
கட்டி வெளுக்க துறை பல
உண்டென்கிறார்கள்
மயக்கமும் தயக்கமும் கவிழ
இப்பவும்உடுப்பே பிரதானம்
எளிதாய் வெளுக்கலாம்
வெள்ளையாய் மின்னலாம்.

******

ஞான விலாசம்.
---------------------

வாசஸ்தலமான
மயிலாடுதுறையை விட்டு
பேருந்தில்
கும்பகோணம் செல்ல
இறங்கியப் பிறகே தெரிந்தது
சிதம்பரம் மார்க்கமாக
சென்றடையும் ஸ்தலம்
எளிதென்று
திரும்பி சிதம்பரம் தொட்டு
ஸ்தலமாம் நெய்வேலி
புறப்பட்டு போனபோது
கும்பகோணம் - நெய்வேலி
அகண்ட மாற்றுப் பாதை
உண்டென உறைத்தது.


பேருந்து நிறுத்தத்தில்
அசுவாசமாகி
முகவரி அட்டையில்
ஞான விலாசம் -
பேரொளி சபா -
முத்தி முதல் சந்து -
திருநெல்வேலி என்று காண
விதியேயென அடுத்த
பேருந்தில் பயணப்பட
விடியலில்
பேரொளி தரிசனமாக
'ஞான பிரவாக விளக்கம்'
ஒத்தி வைப்பு
தகவல் பலகை எதிர்பட்டது.

தீர விசாரித்தபோது
இமயம் அடியிலிருந்து
திரு. மஹா ஞான சுடர்
பழக்கமான
திருநெல்வேலியின்
வசீகர நினைவுகளோடு
கடல் தாண்டினாரென்று.

***

'ஞான விலாசம்' பின் குறிப்பு:
1. கும்பகோணத்திற்கும், சிதம்பரத்திற்கும் மையத்தில் 'மயிலாடுதுறை'உள்ளது.
2. தமிழக ஊர்களது பெயர்கள் அர்த்தம் பொருந்தியவை.
3. ஸ்ரீலங்காவில் திருநெல்வேலி என்கிற பெயரில் ஓர் ஊர் உள்ளது.

**********

No comments: