Wednesday, April 04, 2007

தாஜ் கவிதைகள் - 11



தேடிய அழகு.
--------------------

கற்றுத் தந்த காலம்
வானவீதியை காட்ட
பறப்பதில் இருப்பு
உச்சமென்றானது
மனப்புத்தன்
சிரிப்பை கிழித்து
பறந்த க்ஷணம்
அந்தரத்தில்
தொலைந்தது
நிழலும்.

*****


தந்தையின் காலம்.
------------------------

என் பிள்ளைகள்
படிக்கிறார்கள்
சுமக்க இயலா
சுமக்கவே
படிக்கிறார்கள்.

வீட்டில் யென்
அசைவுகளிலும்
பார்வை அகலா
சிரத்தையோடே
படிக்கிறார்கள்.

மண்ணில் யென்
பாதம் பதியும்
இதம் வேண்டி
காலணிகளை
விட்டுச் செல்ல
படிப்பால்
தெளிகிறார்கள்.

குறுக்கீடுத் தவிர்க்க
சப்தமற
காலடிகளை அளந்து
பாதை ஒற்றியே
நடக்க வேண்டியிருக்கிறது.

என் உடுப்புகளில்
கறைபட்ட எச்சங்கள்
இன்னும் அவர்களுக்கு
புலப்படாதது ஆச்சரியம்.

அவர்களது புத்தகக்
குவியலுக்குப் பக்கத்தில்
நான் நகலெடுத்த
என் கவிதைத்
தொகுப்பொன்று
விரிந்து கிடக்கிறது
இன்னொரு புத்தகமாக.

காலம் காலமாக
எல்லோரும்
கவிதைகளை
விரும்புவதில்லை
சந்தோஷமாக இருக்கிறது.

******


நிர்வாண முகம்.
---------------------

கண்ணாடிக்கு முன்னால்
கண்கள் என்
முகம் தேடும் நேரம்
நிஜமான நண்பன்
உத்தம கணவன்
அன்பு பிரவாக தந்தை
அரசியல் பேச்சில்
சிவப்பவன்
பெண்ணுரிமை தாங்க
பேச்சிலும் தீரன்
கவிதையில் செய்திகள்
சொல்லும் ஆவலன்
இன்னும் அறிவு ஜீவியென
நேரத்திற்கு நேரம்
கட்டின காட்சிகள்
கிளர்ச்சி யூட்ட
புலி வேஷம்
பூனை வேஷம்
நரி வேஷம் நாய் வேஷம்
இட்டுக் கலைத்ததும்
கூடவே விரிந்தது.

******

2 comments:

மேமன்கவி பக்கம் said...

தாஜ் அவர்களுக்கு

உங்கள் கவிதைகளுடன் பரிச்சயம் கொண்டவன் நான்.
நீங்களும் வலைப்பதிவு உலகில் இருப்பது மகிழ்ச்சி!
பிறகென்ன?தொடர்வோம் உறவை.!
மேமன்கவி

T.A.Abdul Hameed Educational Trust said...

அன்புடன் மேமன்கவி அவர்கள்ளுக்கு...

மிக்க நன்றி!
தொடர்வோம் உறவை....
- தாஜ்