Wednesday, April 25, 2007
தாஜ் கவிதைகள் - 14
நிலைப்பாடு
----------------
குடும்பத்திற்குள்
நடந்து பழக
வயசு போதாது
எந்நேரம் அசந்தாலும்
தலைவாசலின்
மேல் நிலை
உச்சத்தைக் கிறங்கடிக்கும்
கீழ் நிலை எப்பவும்
காலைப் பதம் பார்க்கும்
குனிந்தே நிமிர வேண்டும்
படுக்கை அறைக்கு
நுழையும் அவசரத்தில்
பக்க வலமாய் இடிபட
விண்ணென விலா நோகும்
சமையலறைக் கதவை
இழுத்துத் திறக்கிறபோது
திரும்பவும் மூடிக்கொள்ள
நிலை தடுமாற வைக்கும்.
பார்த்துப் பார்த்து
நடந்தாலும்
உள்கட்டு
வெளிக்கட்டு
கழிப்பறைப்
படிக்கட்டும்
தடுக்கி வழுக்க
குப்புறத் தள்ளும்
காற்றுக்காகத் திறக்கு
ம்ஜன்னல் நிலைக்கதவும்
கையைக் கடித்துவிடும்.
******
மெளனத்தின் குரல்
-------------------------
மரங்களிடம் பேசுவது அபத்தம்
மந்தைகளிடம்
ஒதுங்குவதே புத்தி
வானுக்கு குரல் எட்டாது
நதிகளுக்கோ சங்கம வேகம்
மலைகளும் மடுவுகளும்
எதிரொலிக்கும் தொல்லை
கடலருகில் நகர்ந்தால்
துகளாகிப் போகும் அபாயம்
மலர்களுக்கு
எப்பவும் எதற்கும் சிரிப்பு
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
தேன்தான் சுவைக்கிறது
பட்சிகள் பறந்துவிடுகின்றன
விலங்குகள் அன்னியம்
வளர்ப்புப் பிராணிகள்
ஏற்கனவே வாலாட்டுகின்றன
காற்றின் சலனங்களை
கண்டு கொள்ளாதவரை
இப்பவும் குரலெடுத்துப் பேச
குளம் குட்டை
படிக்கட்டுகளே
தடைகளற்ற வசதி.
*******
satajdeen@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment