Tuesday, June 09, 2009

தேர்தல்-2009: சோவின் துக்ளக் அரசியல்!



தேர்தல்-2009:
சோவின் துக்ளக் அரசியல்!
------------------------------------
*
(நண்பரோடு பகிர்தல்)
*
- தாஜ்

*
அன்புடன்
ஆபிதீன்....
*
எனது கம்பியூட்டர்
திடுமென முடங்கி விட
இண்டர்நெட்....
இருகச் சாத்திக் கொண்டது!
தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்...
கிளிக் செய்ய நினைத்த
இந்த மெயில் தாமதம்.... தாமதமென
மஹா தாமதத்துடன்
இப்போது!
*
கடைசிக் கட்ட
வாக்கு பதிவு ஆகிவிட்டது.
அறுபத்தியேழு சதவீதத்திற்கும் மேல்!
புள்ளி விபரம் அசர அடிக்கிறது!
தமிழகம்...
ரொம்பவுதான் சுதாரிப்பு!!
சரி...
கெலிக்கப் போவது யார்?
அம்மாவா? அய்யாவா?
நிதர்சனம் நாளை!
*
என்னை மாதிரி ஜென்மங்களுக்கு
அம்மாவும் அய்யாவும் ஒன்றுதான்!
பொதுவாய்...
அரசியல் = எட்டிக்காய்!
சரியாகச் சொன்னால்...
'எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரே முகம்!'
இந்த நிஜத்தை
தெள்ளத் தெளிந்து
காலங்கள் ஆகிறது... ஒருபாடு!
துக்ளக் ஆசிரியர் சோ
என்றோ....
போதித்த நிரூபணம் அது!
*
துக்ளக் இதழின்
நீண்ட கால வாசகனாக
இருந்த/ இருப்பதில்
பெற்ற சில பேறுகளில்
இதுவும் ஒன்று!
இந்த... நிதர்சணத்தை/
மறுக்க முடியாத நிஜத்தை
அதன் ஆசிரியர் மறந்து போனார்!
அதுதான் சோகம்!
*
இந்த பாரளுமன்ற தேர்தல்-2009ல்
துக்ளக் சோ
தனது பத்திரிகையின் வழியே...
அண்ணா தி.மு.க.வின்
மறைமுக
தேர்தல் பணிக்குழு தலைவராக/
துல்லியமாகவெனில்...
அக்கட்சியின் ராஜகுருவாக
அவர் இயங்குகிற
செயல்பாடுகள்
கவனத்திற்குறியது!
*
இந்தத் தேர்தலுக்கான...
அ.தி.மு.க.வின்
தேர்தல் கள முனைப்பைக் கூட
சோதான் தொடக்கி வைத்தார்!
15.01.2009ல் நடந்தேறிய
துக்ளக் ஆண்டு விழாவில்
இதழின் மஹாத்மிய கூப்பாடுகளோடு.....
அந்தத் தொடக்கத்தையும்
சிறப்பாகவே முடுக்கிவிட்டார்!
*
திருமயம் தொகுதி சட்டசபை
இடைத்தேர்தலில்
அனைத்து கட்சிகள் புடைசூழ
மெகா கூட்டணியோடு
களம் இறங்கி தோல்வியுற்ற
அண்ணா தி.மு.க.விற்கு
ஆருதல் வழங்கும் பொருட்டும்/
பொதுத் தேர்தலுக்கு
அந்தக் கட்சியை
தயார்படுத்தும் நோக்கிலும்
துக்ளக் சோ 'ஊக்கு'வித்த
'பேருரையை!'
சட்லைட் வழியே...
உலகமே பார்க்க
ஜெயா டி.வி.
திரும்பத் திரும்ப
நாட்கணக்கில் ஒளிப்பரப்பி
மகிழ்ந்தது!
*
இங்கே....
துக்ளக் சோ குறித்த
வாழும் என் ஆதங்கங்களோடு
அறிமுகப் புள்ளிகளை இட்டுக்
கோலம் கிறுக்கியிருக்கிறேன்!
தள்ளி நின்றுப் பார்த்தால்...
இதன் சாயல்கள்
சில ரூபங்களை காட்டும்!
*
ஆபிதீன்...
இந்தச் சாயல்களும் ரூபங்களும்
உங்களுக்கு புதிதாக
எதனையும் சொல்லிவிடப் போவதில்லை!
துக்ளக் சோ
எனக்கு எத்தனை பழமையானவரோ...
அத்தனைக்கத்தனை உங்களுக்கும்!
என் கல்லூரிக் காலத்தில்
நான் அவருக்கு கொடிப் பிடித்த மாதிரி
நீங்கள் கூட உணர்ச்சி வசப்பட்டிருக்கலாம்!
*
தமிழக அரசியல் வானில்
சோவின் ராஜ்ஜியம் விசேசமானது!
கற்றறிந்த தமிழர்களின் பார்வையில்...
அந்த ராஜ்ஜியம்
எப்பவும் ஈர்ப்புடையது!
அரசியலை முன் வைத்து
நேரிடையாக/ எதிர் மறையாக
ஈர்ப்பு செய்யும் ராஜ்ஜியமாக
அது இருப்பதில்
எல்லோருக்கும் அதன்மீது
மாறா கவர்ச்சி!
அரசியலும்/ சினிமாவும்
தமிழனின்
இரண்டு கண்கள் என்பதுதான்
எத்தனை நிஜம்!
*
துக்ளக் சோவிடம்
கேள்வி எழுப்பும்/
இதழை ஆய்வுக்கு உட்படுத்தும்
விமர்சகர்கள் இங்கே குறைவு.
இல்லையென்றே சொல்லிவிடலாம்!
தமிழக அரசியல்வாதிகளும்
சக பத்திரிகையாளர்களும் கூட
அந்த ராஜ்ஜியத்தை
கடக்கும் தருணம்....
பவ்விய மௌனத்தோடு
நடந்து கொள்வதைப் பார்க்க
வியப்பாகத்தான் இருக்கும்!
ஏன் அந்த மௌனம்?
ஏன் ஏன் அந்த பவ்வியம்?
புரியவில்லை!
விளங்காத எத்தனையோ
வாழும் புதிர்களில்
இதையும் சேர்த்துவிடலாம்!
*
இத்தனைக்கும்...
அந்த ராஜ்ஜிய அதிபதி
வெளிப்படையான
அரசியல்வாதி அல்ல!
வெறும் பத்திரிகையாளர்!
இதழ் ஆசிரியர்!
அவ்வளவுதான்!
மற்றபடிக்கு..
நடிகர்/ நாடகக்காரர்
என்பதெல்லாம்
இங்கே அன்னியம்!
*
பத்திரிகையாளர்!
இதழ் ஆசிரியர் !
என்பதாக மட்டும்
சொல்லிக் கொள்ளவே...
சோவும் விரும்புபவார்!
ஆனால்...
அரசியல் சதுரங்கம் ஆட
அநியாயத்திற்கு ஆர்வமும் கொள்வார்!
*
"நீங்கள் அரசியல்வாதியா?"
துக்ளக் சோவிடம்
இந்தக் கேள்வியை
யாரும் கேட்டுவிட முடியாது!
அவரிடம் எப்பவும்
விசேச பதில் அதற்கென்றே
கனிந்துக் கொண்டேயிருக்கும்!
அப்படிக் கேட்டு
புகைந்து கறுத்தவர்களை அறிய
பரிதாபமாக இருக்கும்!
இத்தனைக்கும்...
அவர்...
பி.ஜே.பி.யின் பாராளுமன்ற
மேல்சபைக்கான எம்.பி.!
என்பது இங்கே துணைச் செய்தி!
*
அவரது பத்திரிகையின்
அத்தனைப் பக்கங்களின்
அனைத்து வரிகளும்
பி.ஜே.பி.யைத் தூக்கிப் பிடிப்பது!
வாரம் தவறாமல்
வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும்
வரிகளவை யென்பது...
இன்னொரு துணைச் செய்தி!
இதையெல்லாம் சுட்டி
கறுத்தவர்கள் திரும்பவும்
கேட்பார்களெனில்....
"உண்மையின் பக்கம்
தான் நிற்பதிலும்...
வரிந்துகட்டிக் கொண்டு
அப்படித் திரிவதிலும்...
தவறில்லை" என்பார்!
*
"உண்மைக்கும் அரசியல் கட்சிகளும்
என்ன சம்பந்தம் இருக்க முடியும்?"
எனகேட்பவர்கள்
விடாகண்டனானால்....
பெரிய தவறு கொண்ட கட்சிகள்/
சிறிய தவறு கொண்ட கட்சிகள் யென
வியாக்கியானத்திற்குத் தாவிவிடுவார்!
*
துக்ளக் சோவை
அவர் போக்கில்
விட்டுவிடுவதென்பது நல்லது!
குறைந்தப் பட்சம்
இப்படி கேள்வி கேட்பவர்களின்
மண்டைக் காய்வது மிஞ்சும்!
இதனால் எல்லாம்
அவரது அந்தஸ்த்து
ஒரு நாளும் மங்கியதே இல்லை!
*
துக்ளக் இதழில்
சோ எழுதி வந்த/ வருகிற
அரசியல் விமர்சனங்களே...
அவருக்கு...
அப்படியோர்
அளவிட முடியாத அந்தஸ்த்தைத்
தேடி கொடுத்திருக்கிறது!
மங்காதும் காக்கிறது!
தவிர...
மறைமுக/ நேரடி யென
அவர் ஈடுப்பாடு கொள்ளும்
அரசியல் தரவுகள்/
அதையொட்டிய நடவடிக்கைகள்
அவரது ராஜ்ஜியத்தை
மேலுமாக விரிவாக்கம் செய்கிறது!
*
துக்ளக் சோ...
விசேசமானவர் மட்டுமல்ல...
வினோதமான மனிதரும் கூட!
சாராசரிகளுக்கு மேல்!
அறிவு ஜீவிகளையும் தாண்டிய உயரம்!
அவ்வப்போது....
அவரிடம் தெறிக்கும்
மேதவித் தனங்களே சான்று!
அதுதான் லேண்ட் மார்க்!
அந்த ராஜ்ஜியத்தின்
நிரந்தர அடையாளம்!
*
பெண்கள் சுதந்திரம்...
பிறந்த நாள் கொண்டாட்டம்..
நியூ இயர்/ மதர்ஸ் டே/ பேரண்(ட்)ஸ் டே
வாலண்ட்ரி டே... நோ! நோ! நோ!
எதுவும் ஆகாது சோவுக்கு!
பொறுக்க முடியாத அவசர அவசித்தில்....
அவரிடம்....
"ஏன் அப்படி?"
கேட்டீர்கள் என்றால்...
சீறுவார்!
அப்படி சீறுவதற்கும்
அவரிடம் விதவிதமான
தர்க்கங்கள்
சுளை சுளையாய் இருக்கும்!
*
அவரின்...
அந்தச் சுளைகளானத்
தர்க்கங்களை
அதிமேதவி தனத்தின்
வெளிப்பாடென்பார்கள் சகாக்கள்!
சுருக்கென தைக்கும் எனக்கு.
அவர்களை மறுக்க நினைப்பேன்.
எப்படி? விளங்காது!
*
துக்ளக் சோ...
தனது இதழ் முகவரியில்...
மௌண்ட் ரோட்டிற்கு பதிலாக
'அண்ணா சாலை' யென
எழுத வேண்டி வந்த
மாற்றம் நேர்ந்த போது....
ரொம்ப ஆண்டுகள்
மாற்றங்களோடு சகஜம் பாராட்டாமல்
மௌண்ட் ரோடு என்றே
எழுதி வந்தார்!
காலம் கடந்து...
யதார்த்த போக்கிற்கு தலையாட்டினார்!
*
கலைஞரை...
கருணாநிதியென்று எழுதிவந்து
பின்னொரு சமயம்
கலைஞருக்கு மாறினார்!
*
எம்.ஜி.ஆர். ஆட்சியில் கொண்டுவந்த
தந்தை பெரியாரின்
தமிழ்ச் சீர்திருத்த எழுத்தை
எல்லா பத்திரிக்கைகளும்
சபையேற்றிக் கொண்டபோதும்
அவர் அசைந்துக் கொடுக்கவில்லை!
ஒரு நாள் ஒரு பொழுது
துக்ளக் இதழிழும்
பெரியாரின் சீர்த்தம் சபையேறியது!
*
பத்திரிகைகள் எல்லாம்
கம்பியூட்டர் யுகத்தில்
காலடி வைத்த போது...
தர்க்கங்களினால் அதை மறுத்தார்!
பின்னர்...
இதுவும் வழக்க மாதிரியே!
*
புதுக் கவிதையை
காம்பாசிட்டர் கவிதையென
ஒரு கால கட்டத்தில்
தீர வாதம் செய்த அவர்
பின்னொரு காலத்தில்
முடக்கிப் போனார்!
பின்னர்...
அந்தப் பக்கம்மூச்சும் காட்டுவதில்லை!
*
இத்தனை நழுவல்கள்/
சறுக்கல்கள் கொண்ட அவரை
'அதிமேதாவி' என்கிறார்கள் சகாக்கள்!
சோவின் மீதான ப்ரியத்தில்
அவர்களை நான்
மறுக்க நினைப்பதெல்லாம் சரி...
எதை சொல்லி? எப்படி நான்?
*
துக்ளக் இதழின்...
வாரம் தவறாத
அரசியல் விமர்சனங்கள்/
நையாண்டி கட்டுரைகள்/
கேள்வி பதில்கள்/
அரசியல் நடப்பு பற்றிய
கேலியான சித்திரங்கள்/
என்பன வழியே...
எல்லா முனைகளிலும்
திராவிட-தமிழின எதிர்ப்பை
தாராளமாய் வாரியிறைத்து
தன்னை நிலைநிறுத்திக் கொள்கிற
அவரது அடிப்படை சித்தாந்தம்
அடுத்தவர்களுக்கு எளிதில் விளங்காது!
*
எல்லோரையும் ஓர் பொன்னுலகுக்கு
இட்டுச் செல்லும் முயற்சிகளாக
அதனை அவர்
நமக்கு நியாயப்படுத்துபவர்!
*
'துக்ளக்' சோ....
தன்னை வருத்திக் கொண்டு
நம்மையும் படுத்தி
இட்டுச் சென்று காமிக்க முயற்சிக்கும்
அந்தப் பொன்னுலகு என்பது....
திராவிட கட்சிகளின் அழிவில்
காணக் கிடைக்கும்
நிசப்த பூமியைத்தான்!
*
அந்த அழிவின்
நிசப்தத்திற்கு இடையே...
அஸ்திவாரம் பறித்து
இஸ்டமான
தேசிய கட்சி ஒன்றின் ஆட்சியை
தமிழ் மண்ணில்...
கட்டி எழுப்ப துடியாய் துடிப்பவர் அவர்!
அவரது...
இந்த 'உடோபியன்' ஆசை கொண்ட செயல்...
அவர் காமிக்க நினைக்கும்
அந்தப் பொன்னுலகின்
இன்னொருப் பக்கம்!
*
அவரின் அவாவை
இந்த மக்கள்தான்
புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்!
அடம்பிடித்து
திரும்பத் திரும்ப
திராவிடக் கட்சிகளிடமே
சரணடைந்து விடுகிறார்கள்!
அவர்தான் என்ன செய்வார்?
என்னென்னவோ செய்கிறார்
பிடிக்காததுகளையும் சேர்த்து.
*
துக்ளக் தொடங்கப்பட்ட நாளிலேயே....
சங்கிலித் தொடராய்
டெல்லி வரை அவருக்கு
நீண்டு கிடக்கிற
தொப்புள்கொடி உறவுகளின்
வலுவான பளுக் கொண்டும்
தனது வாதத் திறமை கொண்டும்
திராவிட முன்னேற்றக் கழகத்தை
துடைத்தெடுத்து
கண்ணுக்கெட்டாத தூரத்தில்
கடாசிவிட நினைத்தார்!
*
என்றைக்குமே...
நினைப்பும் நடப்பும்
மண்ணில் வேறு வேறாக இருப்பதுதான்
வாழும் யதார்த்தமாக இருக்கிறது!
அல்லது சாபமாக!
*
துக்ளக் சோ....
முனைப்பாய் எழுத/ செயல்பட
துவங்கியப் பிறகுதான்...
திராவிட முன்னேற்றக் கழகம்
குட்டிப் போட்டது!
திராவிட முன்னேற்றக் கழத்தின் நம்பர்-2
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
நாளொரு மேனி...
பொழுதொரு வண்ணம்
அவரது கண் பார்க்கவே
வளர்ந்து ஜமாத்தது/
ஜமாய்த்தப்படிக்கும் இருக்கிறது!
*
மேதமை/ யுக்தி/ அரசியல் சாணக்கியம்
என்பது....
அனைவருக்கும் பொதுவென
திராவிட இயக்கம்
அழுத்தமாக நிரூபித்த
இன்னொரு சான்றாக
அண்ணா தி.மு.க. வின் உதயத்தை
ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்!
*
துக்ளக் சோ
விட்டாரில்லை!
இரண்டையும் வலுவாகவே எதிர்த்தார்!
அந்த இரண்டு கட்சிகளும்
இவரை பஃபூன் என
கண்டு கொள்ளாது
புறம் தள்ளியபடிக்கு....
தமிழக ஆட்சி அதிகாரத்தை
மாறி மாறி....காலத்திற்கும்
கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது!
*
இரண்டு திராவிட கட்சிகளும்!
இன்றுவரை...
தேசிய கட்சிகள் எதனையும்
ஆட்சிக் காமத்தோடு
தமிழ் எல்லைக்குள்
நுழைய விட்டதில்லை.
வேண்டுமானால்...
கொஞ்சத்திற்கு சீட்டுகள்!
அந்த மடத்தில் தாராளமாய்...
வேண்டுமானால்....
கனவுகளோடு அர்கள்
தூங்கியெழுந்து போகலாம்...
சம்மதம்!
*
தேசிய கட்சிகளை
தமிழக பீடத்தில் அமர்த்தவும்
கீர்த்திகளை காட்டவும்
ஆயத்தப்பட்ட துக்ளக் சோவின்
கூக்குரலுக்கும் ஆர்பாட்டத்திற்கும்
அன்றைக்கே...
விழுந்துவிட்டது
இரட்டைத் தாழ்ப்பாள்!
*
துக்ளக் சோ...
தனது அடுத்தக் கட்டசெயல்பாடாய்
தென் இந்திய/
வட இந்திய தலைவர்கள் பலருடன்
நெருக்கம் காண்பித்தார்!
மொராஜி/ சந்திர சேகர்/ வி.பி.சிங்/ ஹெக்டே/வாஜ்பாய்/ அத்வானி/
மேலும்....
அவரது சமீபத்திய
வசீகரப்பான 'குஜராத் மோடி'யையும் சேர்த்து
அந்தப் பட்டியல் நீளமானது!
*
அந்தத் தலவர்கள்
டெல்லியில் ஆட்சி அமைக்க
தென்னிந்திய பவர் ஏஜண்டாக
பொறுப்பாய் செயல்பட்டார்
அதை பெருமையாகவும் கருதினார்!
தேசிய கட்சிகளுக்கும்
திராவிட கட்சிகளுக்கும்
ஐந்து வருடத்திற்கு ஒரு முறையோ
அல்லது...
தேவைப் படும் தருணங்களிலோ
பாலம் போடும் பணியை
சிரத்தையாகவே செய்வார்!
அதனை...
தேசிய சேவையாகவே
அவர் கருதுகிறார் என்பதும் மிகையல்ல!
*
ஒரு காலகட்டத்தில்
வாஜிபாய் அரசுக்கு ஆதவாக
அண்ணா தி.மு.க. எம்.பி.களை திரட்டி
சோ ஆற்றிய தேசிய பணி...
அந்தப் பாலம் போடும் வேலை...
இந்தியாவே பார்க்க
ஓர் சுபமுகுர்த்த தினத்தன்று
தடதடத்து விரிசல் கண்டது!
அப்படி... தடதடத்த விரிசலில்...
சோ ஆடித்தான் போனார்!
*
அன்றைக்கு...
ஏதோ ஞாபகத்தில்...
திடுமென ஜெயலலிதாவுக்கு
பிரதமர் பதவியின் மீது ஆசை!
அது வெடித்து துளிர்த்த கணம்
தடதடப்பும் விரிசலும்
தவிர்க்க முடியாமல் போனது!
*
'எல்லாம் எனக்குத் தெரியும்'
சுப்ரமணிய சுவாமியின்
அறிவுரைப் படிக்கு...
அண்ணா தி.மு.க.வின்
தலைவி ஜெயலலிதா
டெல்லியில்...
'டீ பார்ட்டி' களத்தில்
கால் வைத்து இறங்கினார்!
*
தனது 22 எம்.பி.களை
பணயம் வைத்து
நாட்கணக்கில் தாம்தூம் நிகழ்த்தி
தேசிய நஷ்டத்தையும்
கணக்கில் கொள்ளாது
வாஜிபாயின் அரசை கவிழ்த்தார்!
தனது எம்.பி.களை
தாரைவார்த்து
மற்றொரு பொதுத் தேர்தலுக்கு
வழி வகுத்தவராக...
சிங்காரச் சென்னைக்கு
திரும்பினார்... ஜெயலலிதா!
(அந்த தேசிய நஷ்டம்...
அன்றைய கணக்குப்படிக்கு
சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய்!
தவிர...
அதைத் தொடர்ந்து நடந்த
பாராளுமன்ற பொதுத் தேர்தலில்
ஜெயலலிதாவின் கட்சிக்கு...
'சைபர்' எம்.பி.கள்!)
*
இன்றைக்கு...
துக்ளக் சோ
அதே அந்த 'டீ பார்ட்டி' புகழ்
ஜெயலலிதாவை
மெச்சுகிற மெச்சல்களும்/
உறுதியான நடவடிக்கைகளுக்கு
சொந்தக்காரரென
ஜெயலலிதாவை
தூக்கி நிறுத்தும் முயற்சிகளும்
சராசரி முளையுள்ள எவனையும்
குழப்பும்!
*
அரசியல்வாதிகள்தான்
நேற்றை மறந்தவர்களாக/
மக்களின் மறதியை
பயன்படுத்திக் கொள்பவர்களாக
இருக்கிறார்கள் என்றால்...
துக்ளக் சோவுமா?
*
ஜெயலலிதாவுக்கே
எல்லோரும் ஓட்டுப் போடனும்
தவறி ஒரு ஓட்டுக்கூட
புறண்டுவிடக் கூடாதென்றெல்லாம்....
எண்ணோ எண்ணென்று
என்னென்னவோ எண்ணுகிறார்!
நம்மிடம் புலம்பியும் தீர்க்கிறார்!
*
துக்ளக் சோ
காலம் காலமாக
பொத்திப் பொத்திக் காத்துவரும்
விடுதலைப் புலிகளுக்கெதிரான
கருத்துகளை
மேடைகளில் இன்றைக்கு...
ஜெயலலிதா
மறுத்து பேசுகிறபோதும் கூட...
அவருக்கே
ஓட்டுப் போடுகள் என்கிறார் சோ!
புரியவில்லை!
நெருடல்கள்....
புரியவிட மாட்டேன் என்கிறது.
*
"புலிகளை ஆதரித்துப் பேசும்
அந்தப் பேச்சுக்கு சொந்தக்காரராக
கருணாநிதி இருந்திருக்கும் பட்சம்...
சோவின் கத்தலில்
வானமே விண்டிருக்கும்!" என
நக்கல் அடிக்கிறார்கள் சகாக்கள்!
நான் என்ன செய்ய?
*
விஜயகாந்த்/
தமிழக பாரதிய ஜனதா
என்று யாரும்
ஜெயலலிதாவின் வெற்றிக்கு
குறுக்கே நிற்க கூடாதென பதறுகிறார்!
அவர்கள் நின்றாலும்
வாக்காளர்கள் அவர்களுக்கு
வாக்களிக்கக் கூடாதெனவும்
அப்படி போடுகிற வாக்கு
ஜெயலலிதாவின் வெற்றியைப்
பாதித்துவிடுமெனவும் பதறுகிறார்!
அதையே... திரும்பத் திரும்ப
நிர்பந்திக்கவும் நிர்பந்திக்கிறார்!
*
"துக்ளக் இதழின்
வாசகர்கள் அத்தனை பேர்களும்
ஜெயலலிதாவுக்கே ஓட்டு போடுவதாக
இவரிடம் சொன்னார்களா என்ன?
பின்னர் ஏன்...
நமக்கிந்தப் பயிற்றுவிப்பு?
இனாமாக அல்லவா கிடைக்கிறது புத்திமதி!
தவிர...
வாசகன் என்ன புத்தியை கழட்டி
ஹன்கேரில் மாட்டிவிட்டா
துக்ளக் வாசிக்கிறான்?"
சகாக்கள்....
கேட்காமல் இருப்பார்களா?
*
"தேர்தலில்....
தடங்களே இல்லாத
வெட்டவெளி வேண்டுமென
துக்ளக் சோ நினைப்பதும்தான்....
என்ன மாதிரியான தேர்தல் ஜனநாயகம்?"
தொடர்ந்து கேட்பார்கள் சகாக்கள்!
கேட்கத்தானே...
செய்வார்கள்!
*
துக்ளக் சோ...
ஒரு பிறவி மேதை..!
மஹா பெரிசு!
எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும்.
சகாக்களின் கிண்டலும் கிடக்கட்டும்.
இங்கே....
என் கேள்வி எளிதானது.
அதற்கு பதில் கிடைத்தால் போதும்!
*
காசு கொடுத்து
இதழ் வாங்கி
வாசிக்கும் வாசகனுக்கும்/
அதன் ஆசிரியனுக்குமான
தொடர்பு எந்த அளவிலானது?
*
வாசகனுக்கும்
அறிவு இருக்கும் என எண்ணும்
எந்த பத்திரிகை ஆசிரியனும்
தன் கருத்தை வாசகனின்
மேலேற்ற ஒப்ப மாட்டான்.
நாகரீகம் என்பது
எல்லா மட்டத்திலும் உண்டுதானே!
*
எந்த இதழ் ஆசிரியனும்
தனது கருத்தை
வேண்டுமானால்...
தலையங்கமாக சொல்வான்.
அந்த அளவில் வாசகனை விட்டும் விடுவான்.
இங்கே...
துக்ளக் சோ
ஒரு காலமும் அப்படி நடந்தவரில்லை!
வாசகனின் மேல்
இரக்கமே இருந்ததில்லை!
*
வாசகனுக்கும் அறிவிருக்குமென
துக்ளக் சோ
ஒரு காலமும் யோசித்ததே இல்லை!
இவரது கருத்திற்காக வாசகன்
கையேந்தி நிற்பதாக நினைப்பு அவருக்கு!
நாம் காசு கொடுத்து
அவரது புத்தகத்தை வாங்குகிறோம்
என்கிற நிதர்சணம்
அவருக்குப் பிடிபடுவதேயில்லை!
யோசிக்கவும் அருவருப்பாக இருக்கிறது.
*
கணிப்பில் துக்ளக்கைவிட
பல படிகள் கீழே வைத்துப் பார்க்கப்படும்
நக்கீரன் இதழ்கூட.....
செய்திகளின் உண்மைகள் என்று
அப்படி இப்படியாக
அதற்கே உரிய விசேச நடைகளில்
ஏதேதோ எழுதி...
கருணாநிதியின் பக்கம்
தனது ஆள்காட்டி விரலைக்
காட்டுவதேடு சரி!
வாசகனை அந்தப் பக்கத்திற்கு
உந்தி தள்ளுகிற 'துக்ளக்' வேலையெல்லாம்
அதற்கு கிடையாது.
*
நாளை அவருக்கு
கம்யூனிஸ்டுகளையும்
பிடித்துப் போகுமெனில்
எந்த லாஜிக்கும் உறுத்தாமல்
நம்மை அந்தப் பக்கம்
நெட்டியைப் பிடித்து தள்ளிக் கொண்டு போவார்
அதைச் சரியென்பார்!
இன்னும் மேலே போய்
உங்களுக்கு ஒன்றும் புரியாது....
நான் சொல்லுவதை கேட்டு
கம்யூனிஸ்டுகளுக்கு
ஓட்டுப் போடுங்கள் என்பார்!
*
இப்போது....
அவர் மேலும் ஒன்றை
தெளிவுப்படுத்துவது
பெரிய புண்ணியமாகப் போகும்.
*
அவர் எந்தவகை பத்திரிகையாளர்?
அரசியல் கட்சி
சாரா.... பத்திரிகையாளரா?
சார்ந்த..... பத்திரிகையாளரா?
நூல் அளவே கனமுள்ள
இந்த கேள்வியையும்
அவர் தெளிவு படுத்த வேண்டும்!
*
நிஜம் விளங்காமல்...
உறுத்தும் கேள்விகளோடு
நேர்மை... நேர்மையென
காலா காலமும்
துக்ளக் சோவை
வாசித்தும்தான் என்ன செய்ய?
*
"அது என்ன சிதம்பர ரகசியமா?"
சகாக்கள்....
சிரித்துக் கேலி செய்யக் கூடும்!
தெரியும்!
அது....
ஒன்றுமில்லை என்றும் தெரியும்!
*** *** **
satajdeen@gmail.com

Thursday, May 21, 2009

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2009


பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2009
------------------------------------------------------
*
ஐக்கிய முற்போக்கு கூட்டணி:
*
போட்டியிட்ட தொகுதிகள் / வெற்றி
------- ---- --------------- ----------
*
இந்திய தேசிய காங்கிரஸ் 441 / 206
திராவிட முன்னேற்ற கழகம் 21 / 18
தேசியவாத காங்கிரஸ் 67 / 9
திரிணமூல் காங்கிரஸ் 34 /19
விடுதலை சிறுத்தைகள் 2 / 1
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 4 / 2
ஜார்கண்ட் முக்தி மோட்ச்சா 37 / 2
*** **** ****
தேசிய ஜனநாயக கூட்டணி:
*
பாரதிய ஜனதா கட்சி 427 / 116
அகாலி தளம் 5 /4
அசாம் கண பரிஷத் 6 / 1
சிவ‌சேனா 37 / 11
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 9 / 1
**** **** ****
மூன்றாவது அணி:
** ** **
அண்ணா தி.மு.க. 23 / 9
இந்திய கம்யூனிஸ்ட் 57 / 4
மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி 82 / 16
பிஜு ஜனதா தளம் 18 / 13
பாட்டாளி மக்கள் கட்சி 7 / 0
பார்வார்டு பிளாக் 20 / 0
புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி 13 / 0
ம.தி.மு.க. 4 / 1
கேரளா காங்கிரஸ் 1 / 0
தெலுங்கு தேசம் 27 / 6
**** **** ****
தனித்து நிற்கும் கட்சிகள்:
*
தேசிய முற்போக்கு
திராவிட கழகம் 40 / 0
பிரஜா ராஜ்யம் 40 / 0
பகுஜன் 438 / 21
**** **** ***
மற்றவர்கள்:
** ***
சமாஜ்வாடி 49 / 23
லோக் ஜனசக்தி 80 / 0
சிக்கிம் ஜனநாயக முன்னணி 1 / 0
மக்கள் ஜனநாயக கட்சி 4 / 0
ராஷ்டிரிய ஜனதா தளம் 44 / 4
****** ***** ******
தமிழ் நாடு - பாராளுமன்ற
தேர்தல் முடிவுகள்:
*** ***
தமிழ் நாடு - 39 தெகுதிகள்
**
அண்ணா திராவிட
முன்னேற்ற கழகம் 23 / 9
தேசிய முற்போக்கு
திராவிட கழகம் 39 / 0
திராவிட முன்னேற்ற கழகம் 21 / 18
இந்திய தேசிய காங்கிரஸ் 16 / 8
விடுதலை சிறுத்தைகள் 2 /1
மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்ற கழகம் 4 / 1
பாட்டாளி மக்கள் கட்சி 7 / 0
இந்திய கம்யூனிஸ்ட் 3 / 1
மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி 3 / 1
பாரதிய ஜனதா கட்சி 10 / 0
சமத்துவ மக்கள் கட்சி 5 / 0
அகில இந்திய நாடாளும்
மக்கள் கட்சி 2 / 0
மனித நேய மக்கள் கட்சி 4 / 0
புதிய தமிழகம் கட்சி 1 / 0
கொங்குநாடு முன்னேற்ற
பேரவை கட்சி 12 / 0
***** **** ***
புதுச்சேரி தேர்தல்
முடிவுகள் 2009
**** **** **
புதுச்சேரி-1
***
பாட்டாளி மக்கள் கட்சி 1 / 0
இந்திய தேசிய காங்கிரஸ் 1 / 1
தேசிய முற்போக்கு
திராவிட கழகம் 1 / 0
**** ****
நன்றி:
தினமலர் 20.05.2009

Monday, May 18, 2009

தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல் - 8



தேர்தல்-2009:
ஜா க் பா ட் யா ரு க் கு ?
-----------------------------------
*
[ தேர்தல் சம்பந்தமான இந்த மொழி நடைச் சித்திரம்...
பத்து நாட்களுக்கு முன்னமேயே ஆபிதீன் பக்கங்களில்
பதிவாகிவிட்டது! நிஜத்திலும்... இது அவருக்கு எழுதிய
கடிதமே. இன்றைக்கு இங்கே இது மறுபிரசுர அளவில்தான்!
ஆனாலும்... ஒரு சில வரிகளின் திருத்த அழகுகளுடன்!
நன்றி! - தாஜ் ]
*
[ ஆபிதீனின் பக்கத்தைப் பார்க்க விரும்பும் சகாக்களுக்கு....
*
அன்புடன்....
ஆபிதீன்....
*
தேர்தல் பொருட்டு
உங்களை ரொம்பவும்
வருத்திவிட்டேன்.
அநியாயத்திற்கு எழுதிபடி
படியென்கிற தொல்லைத்தான் நான்!
இனி பயப்பட வேண்டாம்..
தேர்தல்தான் முடியப்போகிறதே!
சரியா....
*
ஆகிவிட்டது...
அவ்வளவுதான்!
விடியப் போகிறது!
தேர்தல் கூத்து....
முடியப் போகிறது!
*
அரைத் தூக்கத்திலும்
மக்களது கேள்வியெல்லாம்...
யார் ஜெய்பார்கள்?
யாருக்கு அந்த ஜாக்பாட்?
*
கூத்தில் பங்கெடுத்த
அத்தனை பேர்கள் கட்டிய வேஷமும்
உத்தமர் வேஷம்!
அந்தஸ்த்து கொண்டது!
பாத்திரக் கீர்த்திகளின்
அபார வெளிப்பாடு!
இதன் பொருட்டு
அவர்கள் கொண்ட
அவஸ்த்தைகள்
ஒன்றும் சாதாரணமானதல்ல!
*
அரிதாரம் பூசியவர்களாக
மாநிலம் மாநிலமாக போய்
அவர்கள் ஆட்டமாய் ஆடி...
திறமையை நிரூபிக்க
சளைக்காமல் நடித்தார்கள்!
மேடைகளில்
கத்தோகத்தெனக் கத்தி
மனப்பாடமாய்
அவர்கள் பேசிய வசனம்
அந்தக் கால...
சக்தி நாடக சபா
'ஹீரோ பார்ட்' தோற்றான்!
*
தேர்ந்தெடுக்கப்படும்
நாடக சபா நடிகர்களுக்கு
இப்பொது கிட்டப் போகும்
இந்த ஜாக்பாட்....'
ஏக இந்தியாவின்...
அதிகாரா பீடம்!
ஐந்து வருட
பட்டா பாத்தியத்தோடு
முழுசாய்!
*
இனி.....
நாடும் / மக்களும்
அவர்களின் சொல்லுக்கு
ஆடவேண்டும்!
சுதந்திர அமைப்புகளும்
மறைமுகமாய்
பணிந்தெழ வேண்டும்!
*
யாரை வேண்டுமானாலும்
அவர்கள்....
சிறைப் பிடிக்கலாம்!
கேள்விகளற்று!
*
அவர்கள் விரும்பினால்...
சின்ன வீட்டுக்
காரன்/ காரிகளை
ஒரே ராத்திரியில்
குபேர அந்தஸ்த்தும்
காண வைக்கலாம்!
*
கூத்திற்கான சம்மானம்...
இத்தனைக்காக...!?
நாம் மலைத்தாலும்
வென்ற சபாகாரர்களின்
அபிலாசைகளுக்கு முன்
இவைகள் அத்தனையும்
ஒன்றுமே இல்லை!
*
ஐந்து வருட காலமும்
கும்பிட்டு முடங்கிக்கிடந்த
சொந்த அடிமைகளிடம்
கூத்தை நடத்தி....
பரிசைப் பெறுவதில்
அவர்களுக்கு
முகச்சுழிப்பு உண்டு!
சொல்ல முடியாத அளவில்!
மீண்டும்
ஐந்து வருடம் கழித்து....
கூத்து கட்டியேயாகனும்!
கஷ்டம்!
*
தேர்தல் சீர்திருத்தங்களென
கொடி நாட்டியிருக்கிற
தேர்தல் கமிஷன்....
இந்தக் கூத்தை
கொஞ்சம்
சீர்தூக்கிப் பார்க்கலாம்!
*
கூத்துக்கட்டுவதால்
சம்மந்தப்பட்டவர்களுக்கு
சிரமம் ஒரு புறமென்றால்...
தவிர்க்க முடியாது
அதைக் கண்டும் / கேட்டும்
மண்டைக்காய்வதில்
மக்களுக்குதான்...
எத்தனையெத்தனை சிரமம்!
*
தேர்தல் கமிஷன்
தாராளமாக யோசிக்கலாம்!
தேர்தல் தோறும்....
ஜெய்ப்பது
அரசியல்வாதிகளாகவும்
தோற்பது
மக்களாகவுமே இருப்பதால்
இந்தக் கூத்துக்கு
மாற்றுக் காண்பதில்
பெரிய தவறாகாது.
*
எப்படி என்றாலும்...
இந்த ஜாக்பாட்
அவர்களில்...
எவரோ ஒருவரிடம் போய்
சேரவேண்டிய ஒன்றே!
நிஜத்தில்...
இது அவர்களின் நாடு!
*
அவர்கள் எல்லோரையும்
இரண்டு அணிகளாகப் பிரித்து
அந்த அணிகளின் பெயரை
சீட்டெழுதிப் போட்டு குழுக்கி
அதில் ஒன்றை எடுத்து
நிர்ணயிகப்பட்ட ஜாக்பாட்டை
அவர்களில் ஒருவருக்கு
வழங்கிவிடலாம்!
'டாஸே'கூடப் போதும்.
*
கூத்துக் கட்டும் சபாக்களுக்கு
இந்த சீர்திருத்தம்...
சந்தோசம் தருவேதாக இருக்கும்.
நகைத்தாலும் வரவேற்பார்கள்!
இன்னொருப் பக்கம்
காலம்/ சிரமம்/ மக்கள் பணம்/
வீண் சொலவழிப்புகள் என்று
எத்தனை எத்தனையோ மிச்சம்!
கண்களை மூடி
ஒருதரம் யோசிக்க
முடியுமென்றால்...
நான் குறிப்பிடும்
'மிச்சம்' தரும் மகிழ்ச்சியும்
தொல்லைகளின் தொல்லையும்
அற்றதோர்
அர்த்தம் கொண்டதாகவே இருக்கும்!
*
சீட்டெழுதி/ டாஸ் போட்டு
ஜாக்பாட் வழங்குவதென்பது
அநியாயத்திற்கு
மலிவான யுக்திகள்தான்!
தேர்தல் கமிஷன்
இன்னும் கொஞ்சம் மேலே போய்...
மாற்றியமைக்கும்
வேறுபல வழிமுறைகள் குறித்தும்
யோசிக்கலாம்...!
*
உயரம் தாண்டுதல்/
நீளம் தாண்டுதல்/
சாக்குப் பைக்குள் ஓடுதல்/
கபடி... /
உறியடித்தல்/
மாடு பிடி... என்பதான
தினுசுதினுசானப் போட்டிகளை
மாற்றாய் ஏற்பாடு செய்யலாம்.
பொண்களாக இருக்கும் பட்சம்
மியூசிகல் சேர்/
ஊசியில் நூல் கோர்த்தல்/
கோலம் வரைதல்/
ஃபேஷன்ஸோ...
என்று ஜமாய்க்கலாம்.
*
இதெல்லாம்
சரிபட்டு வராதென்றால்...
எம்.பி.தொகுதிகளை
டெண்டருக்கு விடலாம்!
ஒவ்வொரு தொகுதியும்
நூறு/ இரனூறு கோடிக்கு
குறையாமல் போகும்!
இதை நான்....
சன் குரூப் சௌகரியத்துக்காகவென்று
சொல்லவில்லை!
எல்லோரின்
சௌகரியத்திற்காகவும்தான்!
*
தேர்தலால் நாட்டுக்கு
செலவென்பதுப் போய்...
எத்தனையெத்தனை
நூராயிரம் கோடிகள் லாபம்!
சுவீஸ் வங்கியில் இருந்து
இந்தியர்களின் கறுப்புப் பணத்தை
மீட்டுக் கொண்டு வருவதைவிட
அதிக தொகையாக இது இருக்கும்!
*
தேர்தல் சீர்திருத்தம் என்றால்
இதுதான்....
சரியான சீர்திருத்தம்!!
ஏன் யோசிக்கக் கூடாது?
யோசிக்கலாம்...
காலம் கடத்தாமல்
பேஷாய் யோசிக்கலாம்!
*
போதும்....
நிஜத்திற்கு வருவோம்.
*
கூத்துக் கூத்து...
என்றெழுதிக் கொண்டிருக்கும்
என் கூத்து...
வாசகர்களுக்கு
பெரும் கூத்தாகப் போயிருக்கும்.
இனி கூத்து வேண்டாம்!
யதர்த்தப் பார்வையோடு
நேராய் எழுதலாம்!
*
மே13 - 2009 தோடு
இந்திய பாராளுமன்றத்திற்கான
தேர்தல்கள் முடிவடைகிறது.
அடுத்த மூன்றாம் நாள்
விடியலில்.....
யாருக்கு வெற்றி?
தெரிந்துப் போகும்!
*
தேர்தல் - 2009
பாரளுமன்ற ஜனநாயகத்திற்கு
உதவும் என்று தோன்றவில்லை.
*
காங்கிரஸ் / பாரதிய ஜனதா
கூட்டணிகள் சிறுத்து விட்டன!
மூணாவது / நாலாவது யென
புதிய புதியக் கூட்டணிகள்!
விட்டேனா பார்?
என்ற
அவர்களது செயல்பாடடுகள்!
*
மூணாவது / நாலாவது
கூட்டணிகளுக்கு
கணிசமான எம்.பி.கள்
நிச்சயம்!
அவர்களுக்குள்
ஒற்றுமை என்பதுதான்...
நிச்சயமின்மை!
*
புதிய பாராளுமன்றத்தில்
பிரதமர் ஆகவேண்டும்...
அந்த சிம்மாசனத்தில்
உட்கார்ந்துப்
பார்த்துவிட வேண்டுமென
விருப்பம் கொண்டவர்களின்
கியூ.......
டெல்லியில் இருந்து
உத்திர பிரதேசம் வரை
நீண்டுக் கொண்டிருக்கிறது.
*
தேர்தல் முடிவுக்குப் பிறகு
இவர்கள்
அநியாயத்துக்கு ஜரூராவார்கள்!
அத்தனை பேர்களும்
ஆளாளுக்கு
பத்து அல்லது பதினைந்து
எம்.பி.களை வீட்டுக் காவலில்
வைத்துப் பூட்டிவிட்டுத்தான்
இந்த கியூவை தொடர்வார்கள்!
*
அவர்களின் ஆசையும்
வெட்கம் அறியாது!
தாங்கள் எண்ணியதை அடைய
எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
நம்ம ஜெயலலிதாவுக்கு
40க்கு 40 என்றாகிப் போனால்.....
வேறு எந்த தகவலும்
கிட்டாமலேயே
'டெல்லியில் பூகம்பம்' யென
உலகுக்கு...
B.B.C. தாராளமாக
செய்தி வாசிக்கலாம்!
*
தவிர...
இந்திய சுகந்திரத்திற்குப் பிறகு...
இத்தனை ஆண்டுகள் கழித்து
வயசு போன காலத்தில்
கம்யூனிஸ்ட்டுகளுக்கும்
சிம்மாசன ஆசை!
வரவேற்கத்தக்க
ஆசையே என்றாலும்...
கம்யூனிஸ்டுகள்...
எதை எதை எப்பொழுது?
எப்படி?
காவு வாங்குவார்கள் என
இப்பொது சொல்ல முடியாது.
சொல்லப் போனால்...அது
இப்பொழுது
அவர்களுக்கே தெரியாது!!
*
16.05.2009-க்குப் பிறகு
கிட்டத்தட்ட...
சிம்மாசனத்திற்கான
ஓர் யுத்தத்தை
நாம் பார்க்கப் போகிறோம்!
ஜனநாயகத்தின் பெயரால்...
அந்த யுத்தம்
என்பதுதான் சோகம்!
*
காங்கிரஸ்/ பி.ஜே.பி.
பாராளுமன்ற உறுப்பினர்கள்
பழைய எண்ணிக்கை கிட்டாது!
*
என் யூகத்தை
காங்கிரஸ் வேண்டுமானால்
பொய்யாக்கலாம்...
நிச்சயம் பி.ஜே.பி.
பொய்பிக்காது!
*
பி.ஜே.பி.யின் கூட்டாளிகள்
அவர்களை விட்டு
போய் விட்டார்கள் என்பதாலோ...
அவர்களது
ஓட்டு வங்கி மாநிலங்களில்
பழைய 'கெத்து' இல்லை என்பதினாலோ
என் யூகிப்பை நான்
சிலாகித்து கூறவில்லை!
அதற்கு வாழும் காரணங்கள்....
வேறு சில உண்டு!
*
1. பி.ஜே.பி.
மக்களிடத்தே ஊட்டிய
மததுவேச போதை
அடங்கி தெளிந்திருக்கிறது.
*
2. பி.ஜே.பி.யை
சரியான கோணத்தில்
தலித்மக்கள்
நிறம் கண்டு கொண்டிருக்கிறார்கள்!
*
3. பி.ஜே.பி.பெற்ற
பழைய வாக்கின் கெலிப்புகளில்....
அதன் முந்தைய பிரதமர்
வாஜ்பேயிக்கும் பங்குண்டு.
அந்தக் கட்சியின்
இன்றைய 'பிரதம' வேட்பாளராக
அறியப்படும் அத்வானி...
ஒருகாலும் வாஜ்பேயி அல்ல!
*
4. இன்றைய நிலையில்
பிரதமருக்கு தகுதியானவர்....
மன்மோகன் சிங்காக?
அத்வானியா? என்றால்...
இந்தியாவில்
ஆனா... ஆவன்னா...
படிக்கத் தெரிந்த
அத்தனைப் பேர்களும்
ஒட்டு மொத்தமாக
மன்மோகன் சிங்கையே சுட்டுவார்கள்!
யதார்த்தம் இது!
செயற்கையால் எல்லாம்
யதார்த்தத்தை...
மிஞ்சிவிட முடியாது!
*
16.05.2009
'சனி'க் கிழமை
காலை 8.30க்கு
தெரிய தொடங்கும்
இந்தியாவின் 'தலையெழுத்து!'
*
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்
விழுந்துக் கும்பிட்டு
வேண்டிக் கொள்வது நலம்!
*
ஜாக்பாட்....!
யாருக்கு வேண்டுமானாலும்
கிடைத்து விட்டுப் போகட்டும்.
ஆபிதீன்....
இந்தியா என்று கொஞ்சம் மண்
நமக்காக....
மீதம் இருந்தால் சரி!
என்ன சரிதானே?
**** **** ****

Thursday, May 07, 2009

தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல் - 7


தேர்தல் - 2009: நண்பரோடு பகிர்தல் - 7
------------------- -------------- -- -------------
*
தேர்தல்-2009:
பி.ஜே.பி.யும்
பிரதான மூன்று குற்றச்சாட்டுகளும்!!
-----------------------------------------------
- தாஜ்
*
அன்புடன்
ஆபிதீன்....
*
இந்திய அரசியல்வாதிகள்
எல்லோருக்குமே
ஒரே முகம்தான்!
வெள்ளையில் அவர்கள்
பவனி வருவதில் மிரண்டு
ஆய்வின் வழியே...
நெருங்கினால்
எல்லோரும் வழித்துக் கொண்டு
திரிய தெரிகிறார்கள்.
*
இதை எழுதி முடித்து வாசித்தபோது
மன்மோகன் சிங்கிற்கும்
காங்கிரஸ் - சோனியாவுக்கும்
பக்கத்தில்
நெருக்கமாக என்னைக் கொண்டு
நிறுத்துவதாகத் தெரிகிறது.
எழுத்தில் நேரும் விபத்து!
தவிர்க்க முடியாத விபத்து!
விபத்தாகவே நீங்கள் பார்க்கலாம்!
பிளீஸ்...
மற்றப்படிக்கு
கட்டுரையில்
நான்....
உங்களோடு.
*
சென்ற பாராளுமன்ற தேர்தலில்
சிம்மாசனத்தை தவறவிட்ட
பாரதிய ஜனதா....
போட்டக் கூப்பாடு
ஐய்யோ....!
ஏழு லோகத்திற்கும் கேட்டிருக்கும்.
அந்த 'ராம் ராம்.....!'
கண் திறந்துப் பார்த்திருக்கலாம்.
இரக்கமில்லாமல் போய்விட்டார்!
*
ஜனநாயக அமைப்பில்....
'ஓட்டை' முன்வைத்து நடக்கும்
'மங்காத்தா' விளையாட்டில்
கெலித்தவர்களே
ஆட்சிக் கட்டில் ஏறுவார்கள்!
இந்தச் சின்ன யதார்த்தையும் மறந்து
தனது சொந்த சொத்தை
யாரோ....
தட்டிப் பறித்துவிட்ட மாதிரி
அதன் கூப்பாடும் ஆதங்கமும் புரிய
எனக்கு சில நாட்கள் பிடித்தது!
*
"சிம்மாசத்தையும்,
பரிபாலணம் நடத்திய
பாராளுமன்றத்தையும்
நாங்கள் ஐந்து வருடக் காலம்
ஆண்டு அனுபவித்தவர்கள்...
இன்றைக்கு மற்றவர்களால் அது
தீட்டாகிவிடக் கூடாது!"
நிஜத்தை கூறி
பி.ஜே.பி.வழக்குத் தொடுத்திருக்கலாம்!
பதவி சுகம் மையலாட
திரும்ப வேண்டி
அனுபவபாத்தியம் கேட்டிருக்கலாம்!
*
கோரிக்கைகளை
இப்படி முன் வைத்து
சுப்ரீம்கோர்ட் படிகளில் அது
ஏறாததுதான் பாக்கி.
அதன் கூப்பாடு
அன்றைக்கு அப்படியிருந்தது!
*
என்றாலும்....
கோணம் மாற்றி
சுப்ரீம் கோர்ட் படிகளில்
அது ஏறியது!
ஜனாதிபதியிடமும்
மனு கொடுத்தது.
*
"இத்தாலிய சோனியா....
இந்தியாவுக்கு பிரதமரா?"
கோபமான வழக்காக
ஆதங்கமான மனுவாக!
சீறி தீர்த்தது!
*
"நீங்க போங்கோ...
நான் பார்த்துக்க மாட்டேனா....
நீங்க பயப்படறது மாதிரி
ஒன்னும் ஆவாது...
நான் உங்க வீட்டு சமத்தேனோ"
ஜனாதிபதி கலாம்...
படு தைரியம் சொன்னார்!
*
"இத்தாலிய சோனியா
இங்கே பிரதமரா?
ஆகட்டும் முதலில்....
பிறகு பார்த்துக் கொள்ளலாம்!
நாங்கள் எதற்கு இருக்கிறோம்?"
இது சுப்ரீம்!
*
பி.ஜே.பி.
இந்த விதமாய்
வழக்குத் தொடர்ந்தற்குப் பதிலாக
மேலே நான் கூறிய மாதிரி'
அனுபவப் பாத்தியம்' கேட்டே
வழக்குத் தொடர்ந்திருக்கலாம்.
அடம் பிடித்திருக்கலாம்.
*
"இந்தியா ஒளிர்கிறது' யென
ஒரு 'ரைமுக்கு' சொன்னோம்.
அதற்காக.....
இந்த மக்கள்
இத்தனைக்கு ஆத்திரப்பட்டு
தள்ளி கதவைச் சாத்துவார்களென
கனவிலும் நினைக்கவில்லை!"
கூடுதலாக செண்டிமெண்டோடு
கசிந்துருவியிருக்கும் பட்சம்
சாதகம் நடந்திருக்கும்.
*
பி.ஜே.பி.யின் பக்கத்தில்....
நானில்லாமல் போய்விட்டேன்
ஜஸ்ட் மிஸ்ஸ்டு.
*
எல்லாம் ஆனது!
பதவியேற்கும் நாளில்
சோனியா காந்தி....
பிரதமர் நாற்காலியை
'வேண்டாம்' என்று விட்டார்!
போற்றுதலுக்குறிய
அந்த மனித மேன்மையை
எள்ளி நகையாடிய பி.ஜே.பி.
பாதாளம் பார்க்க...
இன்னும்கூட கீழே போய் சேர்ந்தது.
*
அடுத்து நடந்தேறிய நிகழ்ச்சி
இந்திய வரலாற்றின்
புதிய பக்கம்!
திராவிடக் கழக தலைவர்
கி.வீரமணி கூறியப்படி
அதை வாசிக்கலாம்.
"கிருஸ்துவப் பெண்ணான
சோனியா வழிமொழிய
இஸ்லாமியரான கலாம்
பதவி கையளிப்பு தர
பஞ்சாபியரான மன்மோகன் சிங்
பிரதமராகியிருக்கிறார்!
இந்தியா மத சார்பற்ற நாடு என்பதற்கு
இதுதான் சரியான சான்று!"
*
இந்த கணிப்பின்
தாத்பரியத்தை
பி.ஜே.பி. உணரவே செய்தது.
அதன் அகவுலக கூப்பாடு
இரட்டிப்பாகியது!
அவர்களின் பௌத்திரம் நசிந்துப் போக
சுயத்திலும் அது
இடியாக இறங்கியது!
*
இன்றைக்கு....
பி.ஜே.பி. காட்டும்
தேர்தல் முனைப்புக்கும்
திசைத் தெரியாத முழிப்புக்கும்
முதல் முதல் காரணம்...
வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட
புதிய பக்கச் சங்கதிதான்!
*
இனியொருதரமும்...
அப்படி அது நடந்துவிடக் கூடாது
அந்த பீடத்தை...
தங்களன்றி எவரும்
தொட்டும் கறைப்படுத்திவிடக் கூடாது!
*
இதன் பொருட்டான
கவனத்தால்தான்
இந்த தேர்தலில் அது
அநியாயத்திற்கு
அலையோ அலை...
கத்தோ கத்து!
எதிர் கட்சிகளின் மீது...
மத்திய அரசின் மீது...
தினம் ஒரு புதுசாய்
விதவிதமான குற்றச் சாட்டுகள்!
*
கிரிகெட்டில் துவங்கி
வருண் வழியாக
வட மாநிலங்கள் தேய்கிறது... பாடி
ராமர் கோவில் கட்டுமானம்
ராமர் பாலம் இடிப்பு
ஸ்விஸ் பேங்கில் இந்திய பணம்
பொய் மதசார்பின்மை
நாட்டைப் பாதுகாக்க சட்டமில்லை
என்பதாக தொடரும்
அதன் குற்றச்சாட்டுகளின் பட்டியல்
நீண்டுக் கொண்டே இருக்கிறது.
அந்த வரிசையில்
பிரதான இடம் வகிப்பது...
மூன்று!
*
1. மன்மோகன் சிங்:
சோனியாவின் சொல்லுக்கு
ஆட்சி செய்யும் பிரதமர்!
சுயமற்றவர்!
பலமற்றவர்!
பொம்மை!
*
2. தீவிரவாதத்திற்கு எதிராக
காங்கிரஸ் ஆட்சி
எந்தவொரு கடுமையான
நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை!
*
3. காங்கிரஸ் ஆட்சியில்
இந்திய பொருளாதாரம்
வீழ்ந்து விட்டது!
விலைவாசி உயர்ந்து விட்டது.
*
இவ் மூன்று குற்றச் சாட்டையும்
பி.ஜே.பி.
முன்பே பலதரம்
மேடைகளிலும், மீடியாகளிடத்திலும்
பிரஸ்தாபித்ததுதான்!
போதாதென்று...
இப்பொழுது மீண்டும்!
தூசுத்தட்டி துடைத்து
மக்கள் முன் வைத்திருக்கிறது!
*
இந்தியா தழுவி நடைபெறும்
இந்த பாராளுமன்ற தேர்தலில்....
ஆளும் கட்சிக்கு எதிராக
வலுவான குற்றச்சாட்டுகளை
வீசி கிடுகிடுக்க வைக்க
அதனிடம்...
இவைகளை தவிர
கனம் கொண்ட பண்டமென்று
ஒன்றுமில்லை! பாவம்!
*
ஒரு காலக்கட்டத்தில்
அதனுடைய வீரியமும்...
மஹாத்மியமும்
வாவ்......
ஒரு பாட்டில் வயகராவை
ஒரே நேரத்தில்
கொட்டி விழுங்கிய எழும்பலாய்
குதியாட்டம் போட்டது!
போதுமென
அவர்களே நினைத்தாலும்
அடங்க மாட்டாத ஆட்டம் அது!
*
பாரதமாத...
சகல சௌபாக்கியங்களோடு
ஜொலிப்பில் மின்னவும்
புஷ்டியாய்.... உய்க்கவும்
அன்றைக்கு பாரதிய ஜனதா
எந்தவொரு பொருளாதார
சித்தாந்தத்திற்குள்ளும் போகவில்லை
நேரத்தை செலவழித்து
மண்டையை உடைத்துக் கொள்ளவில்லை!
ஒற்றைய கேள்வி மட்டுமே
அதன் நேற்றைய மூலதனம்!
*
"பாபர் மசூதியை இடித்து
ராமருக்கு கோவில்.....!
வேண்டுமா? வேண்டாமா?"
எளிமையான
அந்த ஒற்றைக் கேள்வியோடு மட்டும்
நாடெங்கும்...
ஜன திரளுக்குள்
ரத யாத்திரை போய்
ரத்தக் காவெடுத்து
தீப கர்ப்பதையே
கிடுகிடுக்க வைத்தது!
*
இன்றைய
அதன் தேர்தல் பிரச்சாரமும்
எழுப்பும் குற்றச் சாட்டுகளும்
அதற்கு உறைப்போட கூடக் காணாது!
சுரத்தேயில்லை.
நமுத்துப் போன...
ஊசிவெடி!
*
பி.ஜே.பி.யின்
பிரதான குற்றச்சாட்டுகளை
ஆய்வு செய்யும் நேரமிது!
காலம் போய்கொண்டு இருக்கிறது.
தமிழகத்து மக்கள்
ஓட்டுப் போட
சில நாட்களே பாக்கி.
*
ஆய்வு செய்யவென்ன
காசா... பணமா?
அதுவொரு விளையாட்டு!
எஸ்....
பேப்பர் / பேனாவும்
பாக்கெட் சிகிரேட் போதும்!
விளையாடித் தீர்த்துவிடலாம்.
*
பி.ஜே.பி.யின் கூற்றுப்படி
பாராளுமன்றத்தின்
ஆளுங்கட்சியான
காங்கிரஸ் குறித்து
ஆய்வதற்கு முன்
அங்கே...
எதிர் கட்சியாய் இயங்கிய
பி.ஜே.பியின் செயல்பாடுகளை
இங்கே ஆய்வுக்கு
எடுத்துக் கொள்வதும் தகும்!
ஓரிரண்டு
சாம்பில் மட்டும் பார்க்கலாம்....
*
கடந்த ஐந்தாண்டு கால
பாரளுமன்றத் தொடரில்
பி.ஜே.பி. ஆற்றிய
பொறுப்பான எதிர்கட்சிப் பணிகளில்
சிலாகித்து....
ஒன்றைக்கூட சொல்ல இயலாது!
அது அங்கே போட்டக் கூச்சலும்
நிகழ்த்திய வெளிநடப்பும்தான் அதிகம்!
பாரளுமன்ற நிகழ்வின் போதெல்லாம்...
அமைதி அமைதியென
அமைதிபடுத்த முயன்றே....
சபாநாயகர் சேம்நாத் சட்டர்ஜி
தன்னமைதி இழந்தார்!
எதிர் கட்சிக்குறிய
கடமைகளும்...
அதன் இலக்கணமும்
அதற்கு தெரியுமா?
தெரியவில்லை!
*
இப்பொழுது...
பிரதமர் பதவி கொடுங்கள் என
மக்கள் மன்றத்தில் நிற்கிறது!
பிரதமர் பதவிக்கான
உரிமையைக் கேட்பதெல்லாம் சரி!
எதிர் கட்சிக்கான கடமைகளை
ஆற்றவேண்டிய நேரத்தில் ஆற்றாமல்
பிரதமர் பதவிக்கான
உரிமையினை கேட்பதென்பது
தார்மீகப்படிக்கு எப்படி சரி...?
*
கடந்த ஐந்தாண்டுகால
பாராளுமன்றத் தொடரில்
அமெரிக்காவுடனான
அனு ஆயுத ஒப்பந்தச்
சரத்தையொட்டி நடந்த நிகழ்வில்
பி.ஜே.பி. நிகழ்த்திய
கூச்சல் குழப்பத்தை உட்சப்பட்ச
கூச்சல் குழப்பமாகப் பார்க்கலாம்!
அந்த அளவுக்கு
அந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது.
அந்த ஒப்பந்தத்தால்
இந்தியாவுக்கே அவமானம் என்றது!
*
இன்றைய தேர்தல் பிரச்சார மேடைகளில்
அதே ஒப்பந்தத்தை
வரவேற்போமென
தானே முன்வந்து சொல்கிறது!
என்ன அரசியல் இது!?
பிறகு எதற்கு....
அன்றைக்கு அந்த அளவில்
அப்படியோர் ஆர்ப்பாட்டம்....?
கோடிகளை வீசியெறிந்து
ஏன் அந்த நாடகமெல்லாம்...?
இந்த அழகில்...
பிரதமர் பதவி கொடுங்கள் என
அந்தக் கட்சிமக்கள் மன்றத்தில் நிற்பது
வியப்பாக இருக்கிறது!
எனக்கு மட்டுமல்ல...
அரசியல் அவதானிப்பாளர்களுக்கும்
பொது நாகரீகம் பாராட்டுபவர்களுக்கும்
இந்த வியப்பு மேலோங்கத்தான் செய்யும்!
*
பிரதமர் மன்மோகன் சிங்கை
பி.ஜே.பி. யினர்
பொம்மை என்கிற போதெல்லாம்
சிரிப்பு வருகிறது!
பார்க்கவும் அப்படித்தான் இருக்கிறார்.
டர்பன் முண்டாசோடு
தாடி வளர்த்த பொம்மை!
பஞ்சாபி பொம்மை!
வெடுக் வெடுக்கென நடக்கும்
இத்தினூண்டு சைஸ்ஸிலான
பேசும் பொம்மை!
*
ஆனால்.....
நிஜத்தில்...?
மன்மோகன் சிங்
இந்தியாவின் உயர்ந்த மனிதர்!
அரசியலின் அரசியலில்
தேர்ந்த செஸ் பிளையர்!
நாட்டின் பொருளாதார கேமில்
உலகம் கவனிக்கும்
ஆல்ரவுண்ட் மாஸ்டர்!
*
அமெரிக்காவுடன்
இந்தியா செய்துக் கொண்ட
அனு சக்தி ஒப்பம் பொருட்டு
பாராளுமன்றத்தில் நடந்த
அரசியல் 'WWW'வில்
அந்த பொம்மை....
வாமன அவதாரம் எடுத்தது!
பாரதிய ஜனதாவும்
கம்யுனிஸ்டுகளும்
ஒரே நேரத்தில் அவுட்!
*
"மன்மோகன் சிங்
சோனியாவின்
கட்டளை படிக்கு நடக்கிறார்"
பாரதிய ஜனதாவின்
ஆதங்கமான குற்றச்சாட்டுகளில்
முதன்மையானது.
வெகுகாலமாக
சொல்லிக் கொண்டிருக்கிறது.
இப்பவும்...
இந்த தேர்தல் நேரத்திலும்
அதை மீண்டும்
வலுவான குற்றச் சாட்டாய்
வைத்திருக்கிறது.
*
ஆமாம்!
அப்படிதான் நடக்கிறார்.
அப்படிதான் நடக்கவும் வேண்டும்
அதுதான் சரி!
அதில் என்ன தப்பு?
*
"நானே பிரதமர்
நானே அரசாங்கம்
என் வார்த்தைகளே சட்டம்!" மென
மன்மோகன் சிங்
நடந்துக் கொள்ளும்
பட்சமே...
தவறு!
மன்னிக்க முடியாத
தவறாகவும் இருக்கும்.
டிக்டேட்டர் தனமது!
ஜனநாயக தத்துவத்தின்
நேர் எதிர்!!
*
ஜனநாயக அமைப்பில்
இண்டிகேட்/ சிண்டிகேட்
கட்டாயம்.
பிரதான அம்சம் / அங்கம்.
*
மன்மோகன் சிங்...
காங்கிரஸின் இண்டிகேட்!
சோனியா...
காங்கிரஸின் சிண்டிகேட்!
கட்சித் தலைவர் சொல்வதற்கு
பிரதமர் காது கொடுக்கனும்...
கேட்கவும் கேட்கனும்....
அதன்படி காரியமும் ஆற்றனும்.
அதாவது...
சிண்டிகேட் சொல்வதை
இண்டிகேட் கேட்டாகனும்
அதுதானே...
ஜனநாயகத்தின் கேட்பாடு!
அதுதானே....
ஜனநாயக நாடுகளில்
அமுலில் இருக்கும் முறை!
*
ஒருசமயம்....
காங்கிரஸ் பிரதமர்
சோனியாவின்
சொல்லுக்குப் பதிலாக
அத்வானியின் சொல்கேட்டு
நடந்தால்...
ஆட்சி புரிந்தால்...
அதுதான் தவறு!
தேசிய அவமானமும்!
*
அன்றைக்கு....
இந்திரா காந்தி
சர்வவல்லமையான
பிரதமராக உருகொள்ள
நாடே மிரளவில்லையா?
கூடுதலாக...
அவர் எமர்ஜென்சியையும்
அமுலாக்கி வலிமை கொள்ள...
நாடு அதிரவில்லையா?
ஜனநாயகம் பாராட்டும்
இந்திய கட்சிகள் அத்தனையும்
ஒன்றுக்கூடி
இந்திரா காந்தியை
எதிர்த்ததையும் மறக்க முடியுமா?
மாறாய்....
பிரதமர் வல்லமைக் கொள்கிறாரென
பாராட்டவா செய்தது?
*
இன்றைய பாரதிய ஜனதாவின்
நேற்றைய கோரமுகமான
ஜனசங்க கட்சியும்
(மஹாத்மாவை...
கொன்ன கட்சிங்கோ...)
இந்திரா எதிர்பில் பங்கெடுத்தது.
அந்தப் பங்கெடுப்பு நிஜமென்றால்....
இன்றைக்கு பாரதிய ஜனதா
மன்மோகன் சிங்கை ஏன்...
இந்திராவாக சொல்கிறது?
*
அர்த்தம் இருக்கிறது!
யோசித்தால்தான்
அது சொல்வதின்
அண்டர்கிரவுண்ட்
அர்த்தம் புரியும்!
அதன் வார்த்தைகளில்
அத்தனைக்கு சூட்சமம் உண்டு!!
*
"சோனியாவின் பேச்சைக் கேட்டு
மன்மோகன் நடக்கிறார்!"
பி.ஜே.பி.யின்
இந்தக் குற்றச் சாட்டு
சூட்சமமான கவிதைத்தனம் கொண்டது!!
நேரடியாக யோசிப்பவனுக்கு
மன்மோகன் சிங்,
பாவமாக நடத்தப்படுகிறார் என்றும்
சற்று கூடுதலாக
மண்டையை சொறிபவனுக்கு
ஒரு மண்ணும் விளங்காத
குழப்பமே பதிலாகவும் புரியும்.
*
பி.ஜே.பி.க்கு
கோஷம் வடித்துக் கொடுப்பவர்கள்
சாதாரண நபர்கள் அல்ல!
இதற்காகவே பி.ஹெ.டி செய்தவர்கள்!
அதனால்தான்....
காலத்தையும் மறந்தக் கோலமாக
கோஷத்தை வடிக்கிறார்கள்!
*
'சோனியாவின் பேச்சைக் கேட்டு
மன்மோகன் சிங் நடக்கிறார்!'
இந்த குற்றச்சாட்டை
சரியாக
புரிந்துக் கொள்ளும் முறை என்பது.....
'சோனியா' என்றால்
அவர் இத்தாலிகாரர்!
கிருஸ்துவர்!
'இந்திய'ரான மன்மோகன் சிங்கிற்கு
உத்தரவு போடுகிறார்!
மன்மோகன் சிங்கும்
வெட்கமற்று
இத்தாலிக்கு பணிகிறார்!
பாரதத்தின் தொன்மையும்
மான மரியாதைகளும்
என்னாவது?
*
இதுதான்...
அவர்கள் மொழியின் விளக்கம்!
தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.
புரிந்து கொண்டதின் அடையாளமாய்
இந்து மக்கள் எல்லோரும்
குறிப்பாய்....
காங்கிரஸில் உள்ள
இந்து மக்கள் எல்லோரும்
கோபம் கொள்ள வேண்டும்.
*
வெறுமனே
கோபப்பட்டால் மட்டும் போதாது
செயலில் காமிக்க வேண்டும்!
பி.ஜே.பி.க்கு
அதை வாக்காக மாற்றித்தர வேண்டும்.
உப காரியமாய்...
காங்கிரஸ் இந்துக்கள்
காங்கிரஸிற்குள்
குழப்பம் விளைவிக்க வேண்டும்!
'இத்தாலி' - 'கிருஸ்துவ' சோனியாவை
அவர்கள் ஓரம் கட்ட வேண்டும்!
குறைந்த பட்சம்
அவர்கள் காங்கிரஸ்யை
உடைத்தால் போதும்!
*
சரி...
சோனியாவின் பேச்சைக் கேட்பதாக
மன் மோகனை சிங்கை
பாரதிய ஜனதா
விமர்சிப்பதெல்லாம் மெத்த சரி.....
அங்கே என்ன கதை?
*
ஆர்.எஸ்.எஸ்.ஸின்
கக்கூஸ் கதவு கிறீச்சிட்டாலும்
பாரதிய ஜனதாவினர்
அரக்கப்பரக்க
எழுந்து நிற்கிறார்களே ஏன்?
அங்கே அவர்கள் தும்மினால்
இங்கே இவர்களுக்கு வேர்கிறதே ஏன்?
ஆர்.எஸ்.எஸ். உத்தரவு இல்லாமல்
பி.ஜே.பி.யினர் ஒன்றுக்குகூட
போக முடியாத
சூழ் நிலை நிழவுகிறதே
இது எந்த ரகம்?
*
மன்மோகன் சிங்காவது
தனது சொந்தக் கட்சியின்
தலைக்குத்தான் பணிகிறார்.
பி.ஜே.பி.யினர் ஏன்...
இன்னொரு அமைப்பின்
சொல்லுக்கு ஆடவேண்டும்?
*
இன்றைக்கு...
பி.ஜே.பி.யின்
பிரதமர் வேட்பாளராக அறியப்படும்
அத்வானி
சில ஆண்டுகளுக்கு முன்
பாகிஸ்தானுக்கு...
சுற்றுலா சென்றிருந்தார்!
அங்கே போனவர்
சிவனேயென(ராமனேயென!)
திரும்பாமல்
முகம்மதலி ஜின்னாவை குறித்து
இரண்டு நல்ல வார்த்தைகளை
பல்லிடுக்கால் கசியவிட்டுவிட்டார்.
அந்தக் கசிவிற்காக....
ஆர்.எஸ்.எஸ்.ஸின்
பெருசு - மத்திமம் - சின்னதுவரை
விமர்சன வார்த்தைகளால்
அவரை குதறி எடுத்ததை
மறக்க முடியுமா?
அந்த மானமரியாதையோடுதானே
இன்றைக்கு அவர்
பிரதமருக்கான வேட்பாளர்!
*
பி.ஜே.பி.யின்
முதல் குற்றச்சாட்டின்
அழகைப் பார்த்தோம்.
இப்பொழுது...
இரண்டாவது!
*
தீவிரவாதத்திற்கு எதிராக
காலம்தோறும்....
குரல்தந்தப்படியே இருக்கும் பி.ஜே.பி.
அதை தடுப்பதற்கு
மன்மோகன் அரசில்....
போதுமான சட்டமில்லை என்கிறது.
தீவிரவாதிகளுக்கு
காங்கிரஸ்
துணைப்போவதாகவும் சொல்கிறது.
*
தீவிரவாதத்தைப் பற்றி
பேசுவது யார்?
பி.ஜே.பி.யா?
இதை சபையில் எழுப்ப அதற்கு
தார்மீக உரிமை உண்டா என்ன?
*
இந்த நாடாளுமன்ற தேர்தலில்
'கிரிமினல்கள் பலர்
வேட்பாளராக நிற்கிறார்கள்!'என்கிறது
தேர்தல் கமிஷன்!
அந்த கிரிமினல்களில்
எழுபது சதவீதம் பேர்
பாரதிய ஜனதா என்கின்றன மீடியாக்கள்!
*
சமீபத்தில் கூட
பி.ஜே.பி. ஆளும்
மத்திய பிரதேச அரசு
ஒரே நாளில்
ஒரே கையொழுத்தில்
ஐயாயிரம் கிரிமினல் சம்மந்தப்பட்ட
அரசியல் கைதிகளை
விடுதலை செய்ததாமே!?
ஊடங்கள் அத்தனையும்
அதை வியப்பு கொஞ்ச
செய்தியாக தந்தனவே
இது என்ன...
தீவிரவாத எதிர்ப்பின்
இன்னொரு முனைப்பா?
*
உங்களுக்குத் தெரியுமா....
அந்தக் கட்சியின்
பிரதம வேட்பாளரே
பாபர் மசூதி இடித்த
'தீராத' தீவிரவாத வழக்கில்
இன்னும்...
சாட்சியம் அளிக்காத...
நெருங்கவும்
முடியாதவராகத்தானே இருக்கிறார்!
மன்மோகன் சிங் மாதிரி...
'மிஸ்டர் கிளீன்' இல்லையே!
*
மாலேகான்
குண்டு வெடிப்பில்
சம்பந்தப்பட்ட
பி.ஜே.பி. சாமியார்களையும்
அவர்களின் சினேகம் கொண்ட
ராணுவ அதிகாரியையும்
போலீஸ் கைது செய்த போது..
அதற்கு எதிராக
முழக்கங்கள் செய்த கட்சி பி.ஜே.பி.!
*
அப்பொழுது நடந்த
நான்கு மாநில தோர்தல்களிலும்
அந்தக் கைது எதிர்ப்பு முழக்கத்தை
மேடைகளில்...
எதிரொலிக்க விட்டு
பரப்பிய கட்சி பி.ஜே.பி.!
*
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில்
மேலாளர் சங்கரராமன்
கோவில் வளாகத்திலேயே
வெட்டிக் கொல்லப்பட்ட போது...
தமிழக அரசு
சங்கரமட சங்கராச்சாரி ஜெயந்திரரை
முதல் குற்றவாளியாக
கைது செய்து சிறையில் அடைத்தது.
அந்தக் கொலை குற்றவாளியின்
கைதுக்காக / சிறையடைப்புக்காக
இந்தியா முழுவதும்
பந்த் நடத்திய கட்சி பி.ஜே.பி.!
*
குஜராத்தில்
முஸ்லீம்கள் வீதி வீதியாய்
பற்றி எரிய காரணமான
நரேந்திர மோடிக்கு
இன்னமும் வெண்சாமரம்
வீசுகிற கட்சி பி.ஜே.பி.!
*
மாதம் தவறாமல்
ஒரிசாவில்
கிருஸ்துவர்களை கொளுத்தி
குளிர்காய்கிற கட்சியும்
இந்த பி.ஜே.பி.தான்!
*
நாள் தவறாமல்
மஹாராஷ்ட்ராவில்
சிவசேனா அரங்கேற்றும்
தீவிரவாத லொள்ளுகளுக்கு
துணைப் போகிற கட்சியும் கூட
சாட்சாத் இந்த பி.ஜே.பி.யேதான்.
*
மத்தியில்...
அது அரசாண்டபோது
நக்ஸலைட் மற்றும்
வடகிழக்கு தீவிரவாத...
இருபதுக்கு மேற்பட்ட குழுக்களின்
சுண்டுவிரல் நகத்தைக்கூட
அசைத்துப் பார்க்க
முயலாத கட்சி பி.ஜே.பி.
*
பி.ஜே.பி.யின்
வெளிப்படையான தீவிரவாதத்தால்
பாபரி மசூதி இடிக்கப்பட்ட போது
நாடு முழுவதும்
அதையொட்டி நிகழ்ந்த கலவரத்தில்
கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை
ஐய்யாயிரத்திற்கு மேல்லானது!
அத்தனை உயிர் சாவுக்கும்
இன்றுவரை...
பொறுப்பேற்காத கட்சியும்
இந்த பி.ஜே.பி. தான்!
*
பம்பாய் கலவரத்திற்குப் பிறகு
ராணுவ அமைச்சராக
பொறுப்பேற்ற பா.சிதம்பரம்
தனது முதல் செயல்பாடென்று
ரொம்பவும் பொறுப்பாக
லால் பிரசாத் அத்வானியை
அழைத்து பக்கத்தில்
அமரவைத்துக் கொண்டு
தீவிரவாதத்திற்கு எதிராக என்று....
ஆள்பிடி/ கேள்வியற்றுப் சிறைபிடி
சட்டங்கள் செய்ய...
அத்வானியும்
திருப்தியாக அதை
ஒப்புதல் செய்தாரே!
பி.ஜே.பி. அதை அறியாதா?
பின் ஏன்...
தீவிரவாதத்திற்கு எதிராக
வலுவான சட்டமில்லை என்கிற
பாசாங்குப் புலம்பல்........?
*
தீவிரவாதத்தைப் பற்றி பேசவோ
வலுவான சட்டமில்லையெனப் புலம்பவோ
நிஜமாலுமே பி.ஜே.பி.க்கு
தார்மீக உரிமை இருக்கிறதாயென்ன?
இல்லை!
*
அத்வானி உள்துறைக்கு
கேபினெட் மந்திரியாக
இருந்தபோதுதான்
தீவிரவாதிகள்
இந்திய விமானத்தைக் கடத்தி
கந்தஹாரில் வைத்துக் கொண்டு
இந்திய சிறையில் இருந்த
அவர்களின் சகாக்களை
பணயமாக....
விடுவிக்க கேட்டார்கள்.
தீவிரவாதிகளின்
அந்த சகாக்களை
கந்தஹாரில் கொண்டு விட்டுவிட்டு
'அப்படி ஒரு சம்பவம் நடந்தது
எனது நாலேஜுக்கு வரவில்லை!'என்றும்
சொன்னவர்தான் இந்த அத்வானி!
அதாவது...
அன்றைய உள்துறை அமைச்சர்
ஸ்ரீ லால் பிரசாத் அத்வானி!
*
இவர்கள்தான்
தீவிரவாத எதிர்ப்பு பற்றி
அக்கரைக் கொண்டு பேசுகிறார்கள்!
*
கந்தஹார் விமானக் கடத்தலை யொட்டிய
பிரச்சனையை
சமீபகாலமாக
காங்கிரஸ் பெரும் குரலில்
வெளிப்படுத்துவதுப் பற்றி
பி.ஜே.பி.யின் 'மஹா குரு'
துக்ளக் சோவிடம்
ஒரு வாசகர் கேள்வியாக
முன் வைக்கிறார்!
அதற்கு சோ...
விமானத்தில் உள்ளவர்களை மீட்க
அவர்கள் கேட்ட தீவிரவாதிகள் நால்வரை
கந்தஹார் போய் தந்ததில்
தப்பில்லை என்றிருக்கிறார்!
*
சரி....
தீவிரவாதிகளுடான
உராய்வில்
அல்லது....
'எக்குப்புக்கான' தருணத்தில்
காங்கிரஸ் தரப்பும்
இந்த அளவில் பரிவுகாட்டி
இப்படியான காரணங்களை சொன்னால்
இந்த 'சோ' ஒப்புக் கொள்வாரா?
அல்லது....
அவரைச் சீராட்டும்
பாரதிய ஜனதாதான்
ஒப்புக்கொள்ளுமா?
வானத்திற்கும்
பூமிக்குமல்லவா குதிக்கும்!
அந்தத் தீவிரவாதி...
இஸ்லாமியனாக
இருந்துவிட்டால்... போச்சு!
கண்டம்விட்டு கண்டம் தாவும்!
*
பி.ஜே.பி.
மத்திய அரசை ஆண்டபோதுதான்
கார்க்கில்வார் நடந்தது.
இந்திய ராணுவம் முன்னேறி
வெற்றிகளை...
குவித்துக் கொண்டிருக்கும் போது
அமெரிக்கா சொல்கிறது என்பதற்காக
அந்த போரை நிறுத்திக் கொண்டடோடு
நம்மிடம் சிக்கியிருந்த
பாக்கிஸ்தான் ராணுவத்தினர்களை
விரைந்து....
எல்லைக் கடந்து போக பணித்து...
பஸ்களைக் கொடுத்துதவி
போக்குவரத்தையும்
ஒழுங்குசெய்து தந்தவர்கள்...
இந்த இவர்கள்!!
*
இந்த இவர்கள்தான்...
இன்றைக்கு
நாட்டின் அக்கரைப் பற்றியும்
தீவிரவா எதிர்ப்பு பற்றியும்
பேசுகிறார்கள்!
விந்தை!!
*
நேற்று நடந்ததெல்லாம்....
இன்றைக்கு மறந்துப் போகும்
நாட்டில் மட்டுமேபி.
ஜே.பி.யின் வாதங்கள்
ஜெயிக்கும்!
(எல்லா கட்சிகளுமே
மக்களின் மறப்பை நம்பிதான்
அரசியல் செய்கிறது என்பது
இங்கே துணை செய்தி.)
*
பி.ஜே.பி.யின் மூன்றாவது
பிரதான குற்றச்சாட்டாய் வருவது...
இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சியும்
பொருட்களின் விலையேற்றமும்!
*
இது மிகச் சரியான குற்றச்சாட்டு
எந்த கொம்பனாலும்
மறைக்க முடியாது!
மறுக்கவும் முடியாது!
அந்த அளவுக்கு
இதையெட்டிய யதார்த்தம்
தினைக்கும் மார்கெட்டுகளின்
மையம் பார்த்து
தாண்டவமே ஆடும் போது
யார்தான் இல்லையென்றுவிட முடியும்!?
*
'இந்த வறுமையான காலக்கட்டத்திலும்
அட்சயத்திருதியையின் போது
சென்னை.. T.நகர் போன்ற
நகர ஏரியாக்களில்
தங்கம் வாங்க
கூடும் கூட்டத்தை காணுகையில்
நிஜமாலுமே நம் பொருளாதாரம்
வீழ்ந்துதான் கிடக்கிறதா....?'
சந்தேகமே எழுகிறது.
*
எனக்குத் தெரிந்து
மொராஜி தேசாய்
பிரதமராக ஆட்சி புரிந்தக்
காலகட்டத்தில்தான்
இந்திய பணத்தின் மதிப்பு
(அதுவும் இந்தியாவுக்குள்)
நிலையாக இருந்தது!
விலைகளின் ஏற்றத்தையும்
தடுத்து நிறுத்தி
கஷ்டப்பட்டு
கட்டுக்குள்ளும் வைத்திருந்தார்.
அது...
அவர் மட்டுமே அறிந்த
மொராஜிஜியின் 'மேஜிக்'!
*
உலக திறந்தவெளிச்
சந்தை ஸ்டைலை
இந்தியா இழுத்து கழுத்தில்
மாட்டிக் கொள்ளாத நேரமது!
இந்திய பொருளாதாரம்
சின்ன வட்டத்திற்குள்
மெதுநடை நடந்தபடி
இருந்த நேரம்!
மொராஜி அவர்களின்
கவனத்தாலும்...
தீரமான சட்ட வரைவுகளாலும்
அவரது மேஜிக் அன்றைக்கு
செல்லுபடியானது.
*
இன்றைக்கு...
அது நடக்காது என்பதும்
வாஸ்தவம்.
*
நாம் வானத்தைத் தொடுபவர்களாக
உயந்துவிட்டோம்!
உலகளாவிய கஷ்ட நஷ்டங்களில்
பங்கெடுப்பவர்களாக
உயர்ந்திருக்கிறோம்!
காங்கிரஸ் போட்டப் பாதையில்
பாரதிய ஜனதா காட்டிய திசையில்
உலகச் சந்தையில் பங்கெடுத்தவர்களாய்
பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
*
அமெரிக்காவில்
பனிபொழிவென்றால்
இங்கே...
ஜலதோஷம் காணும் காலம் இது!
*
அமெரிக்காவில்...
இன்றைக்கு
கஞ்சித்தொட்டிகள் திறப்பதாகச் செய்தி!
இன்னும் இங்கு...
அது இல்லை!
அதுவரை மன்மோகன் சிங்
சமத்தானவர்தான் படுகிறது!
*
என்னவோ....
பி.ஜே.பி. ஆண்டபோது
முக்கா ரூபாயுக்கு
ஒரு கலம் நெல்லும்....
எட்டு ரூபாயிக்கு
ஒரு பவுனும் விற்றக் கணக்கில்
அவர்கள் மன்மோகன் சிங்கை
குற்றம் காண்பது வேடிக்கை!
*
ஆட்சியைப் பிடிக்க பரபரக்கும்
பாரதிய ஜனதாவுக்கு
கைகொடுக்க...
இந்தக் குற்றச்சாட்டுகள் போதது.
எல்லாம் சக்கை!
நிஜத்தில்...
குஜராத்தை தாண்டவும்கூடப் போதாது.
*
மாறாய்....
இந்த குற்றச்சாட்டுகளை
அடுக்கிக் கொண்டிருப்பதற்குப் பதிலாய்
பழைய அஜண்டாவை
கையில் எடுத்திருக்க வேண்டும்.
பாரதிய ஜனதாவின்
பழைய அஜண்டாபடிக்கு...
நாட்டில் அத்தியாவசியமாக
இடிக்க வேண்டிய
மசூதிகளின் எண்ணிக்கை
மொத்தம் பதிமூன்று!
ஒன்று ஆகிவிட்டது.
மீதம் பன்னிரெண்டு இருக்கிறது!!
*
கண்டமே கிடுகிடுக்க
கரசேவகர்கள்/
சாதுகள்/
சன்னியாசிகள்/
புடைசூழ....
பி.ஜே.பி....
ரதயாத்திரைக்கு
கிளம்பியிருக்க வேண்டும்.
'அகண்ட பாரதமும்'
'ஆரியவர்த்தனமும்'
மெய்பட...
அரசியல் வெற்றிகளும்
பின் தொடர்ந்திருக்கும்!
**** *** ****

Tuesday, May 05, 2009

இது அரசியல்வாதிகளின் நாடு!


*
அரசியல்வாதிகளின் முகத்தில் எழுத்தால் அறைகிற ஓர் அழுத்தமான கட்டுரைஅடுத்தப் பக்கத்திலிருக்கிறது. இனி இது படித்து அரசியல்வாதிகள் தங்களது முகங்களை கவட்டியில்... நுழைத்துக் கொள்ளட்டும்.
*
அல்லதுபோனால்..... அந்த எழுத்தாளர் இன்னொரு கட்டுரை எழுதி அவர்களை எரிக்க ஆரம்பித்துவிடலாம்.கட்டுரையின் மூலம் அந்த எழுத்தாளரை இனி கவிதாசன் என்று அழைப்பது விடுத்துகட்டுரைதாசன் என்று அழைக்க ஆரம் பிக்கலாம்.
*
- ஹாஜா அலி
(தமிழ்ப் பூக்கள்/பிப்ரவரி -1982)
***
தேர்தல் ஸ்பெஷல்:
இது அரசியல்வாதிகளின் நாடு!
-----------------------------------------
- கவிதாசன்
*
ஏக இந்திய
அரசியல்வாதிகளின் சார்பில்
சொல்கிறேன்....
"வெள்ளை என்பது வடிகிற இரத்தத்தின் நிறம்...
கருப்பு என்பது துளிர்கிற இலையின் நிறம்...
மஞ்சள் என்பது அடுப்புக்கரியின் நிறம்...
சிகப்பு என்பது கடல் ஜலத்தின் நிறம்...
பச்சை என்பது பசும் பாலின் நிறம்...
என்ன சரிதானே?"
*
"ஆமாம்... ஆமாம்...
சரிதான்... சரிதான்...
இங்கே இருக்கிற அத்தனை
மக்களும் சொல்கிறோம்...
அத்தனையும் சரிதான்!
நீங்களே எங்கள் தலைவர்...
நீங்களே எங்களின் வழிகாட்டி...
நீங்களே...
இந்த தேசத்தை உயிர்ப்பிக்க வந்தவர்கள்...!!"
**
"இல்லை....."
*
"ஏன்....?"
*
"நீங்கள் சொன்னது அத்தனையும் தப்பு!"
*
"யார்... நீ....?"
*
"அரசியல் அற்றவன்...அரசியல் கட்சிகளில் சேராதவன்!"
*
"ஓ.... அந்த மைனாரிட்டிக் கூட்டத்தைச் சேர்ந்தவனா....?
வழித்தவறி வந்துவிட்டாயா...?
இங்கே உன்னை மாதிரி
அதிகப் பிரசங்கிகளுக்கெல்லாம்
இடமில்லை...!!
இது அரசியல்வாதிகளின் நாடு!
நீ போகலாம்."
*
"எங்கே போவது...?"
*
"எங்கேயாவது!
உங்களுக்கு தஞ்சம் தரத்தான்....
பிழைகத்தெரியாதக் கூட்டம் இருக்கிறதே!
சில பத்திரிகைகள் இருக்கிறதே!
இல்லை என்றால்....
நாங்கள் கட்டிவைத்திருக்கிற
பைத்தியக்கார விடுதிகள்
ஏராளமாக இருக்கிறதே...!"
*
"நான் மக்களைக் கேட்கிறேன்...."
*
"தாராளமாக....
மக்களே....
என் உடன் பிறப்புகளே...
இரத்தத்தின் ரத்தங்கமே..
பிள்ளைகளே...
நீங்களே இவனுக்கு...
பதில் சொல்லுங்கள்!"
*
"கிருக்கனே....
எங்களின் விசுவாசத்தை
மாசுப்படுத்தி விடாதே...
எங்களை எங்களாகவே
இருக்கவிடு...
திரும்பிப்போ.....!"
*
"மக்களே....
அந்தப் பைத்தியக்காரனை
மன்னியுங்கள்.
நான்...
அரசியல்வாதி சொல்கிறேன்...
அதிகாரத்தின் பிரதிநிதி சொல்கிறேன்...
ஆளும் - ஆளப்போகிற
வர்க்கத்தின் சார்பில் சொல்கிறேன்...
எங்கே... சொல்லுங்கள்....
வெள்ளை என்பது வடிகிற இரத்தத்தின் நிறம்...!"
*
"வெள்ளை என்பது
வடிகிற இரத்தத்தின் நிறம்...!"
-----------------------------------------
பின் குறிப்பு:
*
என்பதுகளின் தொடக்கத்தில் செளதிக்கு சாம்பாத்தியம் என்று போன போது.... 1981-82களில் அங்கே நான் ஈடுபாடோடு நடத்திய மாதாந்திர சிற்றிதழ்தான் 'தமிழ்ப் பூக்கள்'!
*
சம்பாதிக்கப் போன இடத்தில், அதை வழிமுறையாய் பாழடித்துக்கொள்ள ஏதே னும் வேண்டாமா என்ன? அதனாலும்தான் தமிழ்ப் பூக்கள்!
*
இப்பொழுது கூட அதே பெயரில் பிளாக் வைத்திருக்கிறேன்! தவறி உருப்பட்டு விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பதும் பெரிய விசயம் தான்.
*
வானம்பாடி/ கரிகாலன்/ மணிமுடி/ கவிதாசன்/ என்பதான பல புனைப் பெயரி லும்,எனது சொந்தப் பெயரிலும் அதில் என்னென்னமோ எழுதினேன். இத்த னைப் பெயர்களில் அதில் எழுதுவதற்கு அவசியமும் இருந்தது. தலையங்கம்/ கதை/ கட்டுரை/ கவிதை/ கேள்வி பதில்/எல்லாவற்றையும் நானே எழுத நேர்ந்ததால் அத்தனைப் புனைப் பெயர்கள்அவசியமாகிப் போனது. இன்னும் சில புனைப் பெயர்கள் கூட விடுப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன்! ஞாபகம் இல்லை. ஆக, இந்த கவிதாசன் நான்தான்!
*
இந்தப் பின் குறிப்பு எழுத நினைத்ததே 'ஹாஜா அலி'க்காகத்தான்! நான் சகஜம் பாராட்டியமனிதர்களில் அவரும் ஒருவர். சௌதியில் நான் தமிழ்ப் பூக்கள் நடத்தியபோது எனக்கு சில நண்பர்கள் மிகுந்த பக்கத்துணையாக இருந்து உதவினார்கள். அவர்களில் ஹாஜா அலியும் ஒருவர். இலக்கிய ப்ரியத்தில்/ அதனோடான அணுகலில் எனக்கும் முந்தியக் காலகட்டத்தைச் சேர்ந்தவர். வித்தியாசமானவர்! இங்கே நான் வித்தியாசமென குறிப்பிட்டிருப் பது சாதாரண தெனித்தரும் அர்த்தத்தில் அல்ல! வித்தியாசம் என்றால் மஹா வித்தியாசம்!
*
இப்பொழுது அவர் இல்லை! அவரே கூப்பிட்டு சாவை அணைத்துக் கொண் டார்! மிகுந்த கவிதை நயத்தோடு!அவரோடு பழகிய பல நண்பர்கள் அவரை பைத்தியம் என்பார்கள்! எனக்கு அந்த அளவுக்கு பார்வை இல்லாமல் போய் விட்டது. அப்படி நான் சட்டென சொல்லிவிட முடியாது.ஹாஜா அலி மாதிரி எனக்கு பல இலக்கிய நண்பர்கள் உண்டு. வெவ்வேறு கோணத்தில் அவர்க ளும் எனக்கு வித்தியாசமானவர்களாகத்தான் தெரிகிறார்கள். எல்லோரையும் நான் அப்படி கணித்துவிட முடியாது.என்னை யாராவது பைத்தியம் என்றால்... அவரை நமஸ்கரித்து எழுதி வாங்கி ஃபிரேம் போட்டும் வைத்துக் கொள்வேன்.
*
எழுதனும். ஹாஜா அலியைப் பற்றி நிறையவே எழுதனும்! அத்தனைக்கு செய்திகளும் உண்டு! இலக்கியம் சார்ந்தும்/ இலக்கியம் சாராமலும் என்று ஒருபாடு செய்திகள் உண்டு!!
*
நான் மேலே குறிப்பிட்டுள்ள சிற்றிதழான தமிழ்ப் பூக்களின் ஆறாவது இதழை(பிப்ரவரி-1982)அவர் பொறுப்பேற்று செய்து தந்தார். அதில் பிரசுரமான/ நான் எழுதிய/ 'இது அரசியல்வாதிகளின் நாடு...!' கட்டுரைக்கு அவர் முன் குறிப்பும் செய்திருந்தார்.அந்தப் பழையக் கட்டுரையை இந்த தேர்தல் கால கூத்தை யொட்டி பிரசுரத்திற்குதூசு தட்டி கொண்டுவந்திருக்கிறேன். ஹாஜா அலியின் முன் குறிப்பையும் விடாது இணைத்ததில் மகிழ்வுண்டு! நெகிழ்ச்சியான மகிழ்வு!
- தாஜ்
****
கீழே புகைப்படம்: ஹாஜா அலி.
****

ஜெயலலிதாவின் ஈழத்து இடி முழக்கம்!!



ஜெயலலிதாவின் ஈழத்து இடி முழக்கம்!!
--------------------- -------------- --------------
- செல்லமுத்து குப்புசாமி
*

சூரியன் மேற்கில் உதிக்காது என்றுதான் இத்தனைநாளும் நினைத்துக் கொண் டிருந்தேன். ஏப்ரல் 25, 2009 அன்று அது பொய்யாகிவிட்டது.
*
போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சந்திரிகாவின் சகோ தரி மாதிரியெல்லாம் பேசிய ஜெயலலிதா, "தனி ஈழம் மட்டுமே தீர்வு. நான் அதைப் பெற்றுத் தருவேன்" என்று அழுத்தம் திருத்தமாக ஈரோட்டிலே பேசி சூரியனை மேற்கில் உதிக்கச் செய்திருக்கிறார்.
*
இலங்கை இனப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக கலைஞர் பேசியது கிடையாது. போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம், வேலை நிறுத் தம், ஊர்வலம் என எதை நடத்தினாலும் அதில் தங்கபாலுவை (அது என் னமோ தெரியலீங்க எங்க பக்கத்து வீட்டு 4 வயசுப் பாப்பா டிவியில வடிவே லுவையும், தங்கபாலுவையும் தவிர யாரைப் பாத்தாலும் சிரிக்க மாட்டேங் குது) துணைக்குச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறார் அவர்.
*
இத்தனை நாள் ஈழப் பிரச்சினையில் ஆளுக்கு ஒரு கொள்கை இருந்தது. மதிமுகவுக்கு தமிழீழ ஆதரவு, ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு – ஆனால் கருணா நிதிக்கு என்ன கொள்கை என்பதே விளங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. மத்திய அரசின் கொள்கையே எனது கொள்கை என்று பேசி வந்திருக்கிறார். மத்திய அரசின் கொள்கையானது, மத்திய அரசின் கொள் கைகளுக்கு கருணாநிதி (நியாயப்படுத்தும் காரியத்தை ஆற்றும்) கொள்கை விளக்கச் செயலாளராகச் செயல்பட வேண்டும் என்பதாகவே இருக்கிறது.
*
போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருப்போரைக் கைது செய்துவிட்டு அவர் மட்டும் பொது வேலை நிறுத்தம் நடத்துகிறார் தமிழக முதல்வர். அன்றைய தினம் தமிழ்த் திருநாட்டு மக்களுக்கு அலுப்புத் தட்டக் கூடாது என்பதற்காக ‘பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு’ கலைஞர் தொலைக் காட்சியில் சிறப்புப் படங்கள் போடுகிறார்.
*
தெளிவான நிலைப்பாடு அல்லது முடிவு ஒன்றை எடுப்பது முக்கியமில்லை. ஒத்திப்போட்டால் எல்லாப் பிரச்சினைகளும் காலப் போக்கில் மறந்து போகும் என்ற அரசியல் சாணக்கியத்தனம் கலைஞரைப் போல வேறு யாருக்கும் கை வராது.
*
சரியா தவறா என்பது முக்கியமில்லை. தனது conviction -இல் உறுதியாக இருப் பது ஒரு சிறந்த பண்பு. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு சாவு மணி அடித் தாலும் பரவாயில்லை என்று இந்தியைக் கட்டாயமாக்குவதில் உறுதியாக நின்ற பக்தவச்சலத்துக்கு அது இருந்தது. தமிழினத்தின் எதிரி என்ற முத்திரை தன் மீது விழுவதையும் பொருட்படுத்தாமல் ஈழ எதிர் நிலை எடுத்த ஜெயல லிதாவுக்கும் அது இருந்தது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் போராட்டத்தில் நடந்து கொண்ட விதம், மழை நீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய திறம், எல் லாமே அதற்குச் சான்று.
*
இன்னொரு பக்கம் மருத்துவர் ஐயா. என்னமோ இப்போதுதான் ‘இலங்கையில் போரை நடத்துவதே இந்தியாதான்’ என்பதைக் கண்டு பிடித்த மாதிரிப் பேசுகி றார். ஓரினச் சேர்க்கை பற்றி, புகை மற்றும் மதுப் பழக்கம் பற்றியெல்லாம் பேசி இந்தியாவையே அதிர வைத்த அவரது மகன் மத்திய அமைச்சரவையில் இருக்கும் வரை அது தெரியவில்லை போலும். மறுபடியும் ஜெயலலிதாவுக்கே வருவோம். பெரியார் பிறந்த ஈரோட்டு நகரிலே, பெரியாருக்கும் தனக்கும் கொள்கை அளவில் என்ன தொடர்பு என்பதை அறியாத அவரது பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்து நிற்கும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்துப் பேசும்போது இனித் தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு என்று சொல்லியிருக்கிறார்.
*
"வீடியோ காட்சிகளைப் பார்த்த பிறகு தான், இலங்கைத் தமிழர்கள் அங்கே கைதிகளைப் போல், அடிமைகளைப்போல் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிகிறது. இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது.’
*
தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேற்றி விட்டு அங்கே சிங்களர்களைக் குடியமர்த்தும் (இது இலங்கையின் ‘தேசத்தந்தை’ சேனநாயகா காலம் தொட்டே நடந்து வரும் செய்கை) வேலையைச் சுட்டிக் காட்டிய ஜெயலலிதா, ‘நிவாரண முகாம்’ என்ற பெயரில் இலங்கை அரசு நடத்தும் சித்திரவதை முகாம்களை ஹிட்லரின் concentration camps உடன் ஒப்பிடுகிறார்.
*
‘இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால், தீட்டப்பட்டு இருக்கும், மிகக் கொடுமையான திட்டம் இது’.
"முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்கள்,
பிச்சைக்காரர்களைப்போல், நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே, அனுப்பி வையுங்கள்,'' என்று இலங்கை அதிபரிடம், (வாழும் கலை ரவிசங்கர்) குருஜி அவர்கள் கேட்டதற்கு,
"இப்போதைக்கு அது முடியாது'' என்று அவர் தெரிவித்து இருக்கிறார். "இரண்டு மாதங்கள் கழித்தாவது, அனுப்பி வையுங்கள்'' என்று கேட்டதற்கு,
"அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கன்னி வெடிகள், வைக்கப்பட்டிருக்கின்றன’ என்றும், "அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்'' என்றும், "எனவே, அதற்குப் பிறகுதான், அங்கு அவர்களை அனுப்ப முடி யும்'' என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார்.
*
ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாகக் குடி அமர்த்தப்பட்ட சிங்களர் கள், வசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல், கன்னி வெடிகள் அங்கே இருந்தால், சிங்களர்கள் பாதிக்கப்பட மாட் டார்களா? அந்தக் கன்னி வெடிகள், இலங்கைத் தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால்தான் வெடிக்குமா? சிங்களர்கள் நடந்தால் வெடிக்காதா?
*
மேலும் தொடர்கிறார் அவர்...
‘இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட் டும் போதாது. இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமை களையும் அவர்கள் பெற வேண்டும்.
இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பதுதான். அனைத்திந்திய அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந் தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமை க்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடி க்கை எடுப்பேன். இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
*
ஒரு வழியாக ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை அறிவித்துவிட்டார். நான் 74 இலேயே தமிழீழம் கேட்டேன், 83 இலே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் (ஏன்னா அது முதலமைச்சர் பதவியை விட சிறுசு பாருங்க) என்று பதில் அறிக்கை விட்டு தனது தமிழினத் தலைவர் பிம்பத்தைத் தக்க வைப்பார் கருணாநிதி.
*
ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை தேர்தலை முன்னிட்டு மாற்றினாரா அல்லது உண்மையிலேயே மாறிவிட்டாரா என்பது தெரியாத கேள்வி. ஆனால் இத்தனை நாளும் இலங்கையில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார் கள் என்றோ அல்லது அவர்களுக்கு சம உரிமை என்றுமே கிடைக்காது என்றோ அவருக்குத் தெரியாமல் போனது எப்படி? சமூக அக்கறையும், அரசியல் பொறுப்புணர்வும் அற்றவராக அவர் இருந்தாரா?
*
எனினும் ஜெயலலிதாவின் இந்த பகிரங்க ஆதரவு வரவேற்க வேண்டிய ஒன்று. தன் மீதான ‘தமிழினத் துரோகி’ என்ற பட்டத்தை, ஜெயலலிதா மீதான ‘தமிழின எதிரி’ என்ற பட்டத்தை நினைத்து மகிழ்ந்து சகித்து சமாளித்த கலை ஞர் இனித் தனது உத்திகளை மாற்றியமைக்க வேண்டும்.
*
கலைஞர் இலங்கை விவகாரத்தின் தனது கொள்கையைத் தெளிவாக வெளிப் படுத்தாமல் இருந்ததற்கு முக்கியமான காரணம் அதை ஜெயலலிதா தனக்கு எதிராகப் பயன்படுத்தி விடுவாரோ என்ற பயம்தான். தமிழீழம் அமைய வேண் டும் என்று சொன்னால் தன்னை இந்தியாவின் எதிரி என்றும், பயங்கரவாதத் தின் பங்காளி என்று ஜெயலலிதா சொல்லி விடுவார் என்ற அச்சம் காரண மாக கலைஞர் இத்தனை நாளும் அரசியல் நாகரிகம் காத்திருக்க வேண்டும்.
*
இப்போதைக்கு கலைஞரின் உத்தி என்பது ஜெயலலிதாவின் உத்தியை முறிய டிக்கும் உத்தியாக இருக்கும். அது எப்படியென்றால்....
*
1986 இல் ஆபரேஷன் டைகர் என்ற ஒரு நாடகம் நடந்தது. பெங்களூர் சார்க் மாநாட்டுக்கு அதிபர் ஜெயவர்த்தனா வரும் போது அவர் சொல்லும் முறை யற்ற அரசியல் தீர்வை ஏற்க வேண்டும் என்ற இந்தியாவின் மிரட்டலை ஏற்காமல் போன பிரபாகரனை மிரட்டுவதற்காக நடத்திய ஆபரேஷன் அது. புலிகளின் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ஆயுதங்களை இந்தியா பறிமுதல் செய்தது. அதைத் திரும்பத் தர வேண்டுமென்று அவர் சென்னை யில் உண்ணாவிரதம் இருந்தார். சாதனங்கள் திரும்ப வழங்கப்பட்டன.
*
உங்கள் ஊரில் ஆயுதப் போராட்டம் மேற்கொள்ளும் நீங்கள் இங்கே அகிம் சைப் போராட்ட முறையைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற செய்தியாளர் கேள்விக்கு, ‘நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்பதை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்‘ என்று பதில் சொன்னார் பிரபாகரன்.
*
அப்படித்தான். கருணாநிதி என்ன உத்தியை மேற்கொள்ளப் போகிறார் என் பதை ‘எதிரி’ ஜெயலலிதாதான் தீர்மானிக்கிறார். இப்போதைக்கு எதிரி கருணா நிதிக்கு மட்டுந்தான் – தமிழினத்திற்கு அல்ல - தமிழீழம் என்பது நடைமுறை யில் சாத்தியமில்லை என்பதை புலிகளும், ஈழத் தமிழர்களுமே நம்பாத இன் றைய சூழலில் தமிழீழம் அமைத்துத் தருவேன் என்று சொல்லி உணர்வுகளை உசுப்பி விட்டிருப்பதால்.
*** **** ***** ****
நன்றி: உயிரோசை

Wednesday, April 29, 2009

தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல் - 6


தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல் - 6
------------------------------------------------
இஸ்லாமிய கட்சிகள்: நடப்பு - நான் - மற்றும் ஏதேதோ!
---------------------------------------------------------------------------
- தாஜ்
*
அன்புடன்
ஆபிதீன்........
*
சிறுபான்மையின
இஸ்லாமியர்களை குறிவைக்கும்
அகில இந்திய ஆளும் கட்சி /
எதிர் கட்சிகளின்
அரசியல் சதிகள்!
அதை எதிர் கொள்ளும்
இஸ்லாமிய கட்சிகளின்
வேடிக்கைகள்
வேதனைகள் என்று....
*
இந்த முரண்களின்
குறுக்கு வெட்டுத் தோற்றத்தை
உங்களோடு பகிர்வதில்
கொஞ்சம் ஆருதல் உண்டு.
*
"வேறு வேலையே....
இல்லையாய்யா உனக்கு?
"ஹையா....
வேறு யார் என்னை
இந்த அழகில் திட்ட முடியும்!
அந்தவகை அழகுகளை
நினைவில் எத்தனையெத்தனை
கோர்த்து வைத்திருக்கிறேன்!
அது தரும் கிளர்ச்சியும்தான்
எவ்வளவு ஆருதல் எனக்கு!!
*
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு....
தமிழக இஸ்லாமியர்களில்,
கல்வி / கேள்வி
வாய்த்தவர்களிடையே
துளிர்திருக்கிற
அரசியல் ஆர்வம்
பச்சைப் பசேல்!
சிலிர்க்கவைத்த பிரமிப்பு!
*
இஸ்லாமியனாகப் பிறந்தோமா...
மதராஸாவுக்குப் போனோமா
'அலிப்...பே...' ஓதினோமா
'அல்ஹம்து' தொடங்கினோமா
'கலிமா' சொல்லக் கற்று கொண்டோமா
'சுன்னத்' செய்து விட்டதைப்
பார்த்தப்படிக்கு திரிந்தோமா
எலிமெண்ட்ரியில் தொடங்கி
ஹைஸ்கூலில் தடுமாறி
படிப்பை தவறவிட்டோமா
பாஸ்போர் எடுத்தோமா
விசிட்டில் மலேசியா போய்
'ஓவர் ஸ்டே'யெனப் பதுங்கி
'சாப்பாட்டுக் கடை'யில்
புரோட்டாவுக்கு
மாவு பிசைந்தோமா
அல்லது....
*
சென்னை / மும்பாய்
ஏஜண்ட்டுகளிடம்
வழிமுறையாய் ஏமாந்தோமா
வெம்பி நொந்து
தொடர் முயற்சியென
அரபு நாடுகளில்
போய் விழுந்தோமா
A/C அலுவலகங்கள்,
A/C பங்களாக்களென
சொல்லிக் கொண்டு
கக்கூஸ் கழுவினோமா,
'பல்தியா' பணியென
'பீத்திக்கொண்டே'
தெரு பெறுக்கினோமா,
பெரிய அரபி கம்பெனியில்
வேலையென தம்பட்டம் அடித்து
அரபிகளுக்கு எடுபிடி
வேலைகள் செய்தோமா....
என்கிற விதமாய்
'பதூசாய்' இருந்தவர்கள்தான்
நமது வளரும் சமூகத்தினர்கள்
வேறு மார்க்கம் தெரியாது!
ஒரே இறைவன்... ஒரே பாதை!
*
அந்தச் செல்லங்களை
மறைமுகமாக தூண்டி
காலம் காலமான
அவர்களின் மந்தை வழி
சிந்தனையைச் சிதைத்து
வாழும் உலகத்தின்
யதார்த்தம் உணரவும்,
அதை எதிர்கொள்ள....
பெரிய பெரிய படிப்புகளை
கண்டுத் தெளியவும்
தீர படிக்கவும்
இன்னும் மேலாய்
'மஹா' பாரதத்துக்குள்ளே
இருத்திவைக்கவுமான
பெரிய உதவிகளை
எதிர்மறையான சம்பவங்களின்
வழியே வழங்கிய
பெருமைகள் அனைத்தும்
R.S.S மற்றும் இந்துவா
அரசியல் பிரிவினர்களுக்கே சாரும்!
*
இஸ்லாமியர்களை
இந்திய மைய அரசு
கட்டம் கட்டி
காலம் தொட்டு ஏமாற்றி வருகிற...
ரகசிய உண்மையை
இன்றைக்கு...
இஸ்லாமிய இளைஞர்கள்
உள்ளங்கை நெல்லிக்கனியாய்
கண்டுத் தெளிந்திருக்கிறார்கள்!
*
சுகந்திரம் அடைந்து
இந்த அறுபது
ஆண்டுகளுக்குப் பிறகு
தேசிய அரசியலில்
இஸ்லாமிய சமூகம்....
தங்களது உரிமைகளை
மீட்டெடுக்க,
மரியாதையோடு வாழ,
போராட்டகாரர்களாக
களத்தில்ஆர்ப்பரித்து நிற்கிறார்கள்!
*
அவர்களது பார்வையில்
இன்றைக்கு......
காங்கிரஸும் பி.ஜே.பி.யும் ஒன்று!
இஸ்லாமியனை பழிதீர்ப்பதில்
ஒன்று மிதவாதம்
இன்னொன்று தீவிரவாதம்
அவ்வளவே வித்தியாசம்!
மசூதியை இடித்தது
ஒரு கட்சியென்றால்..
அதற்கு பாதைத் திறந்துவிடும்
சிரத்தையான வேலையை
செவ்வனமே செய்தது
காங்கிரஸ்!!
சின்னக் கணக்கு!
குழப்பமே இல்லாமல்
புரிந்துவிட்டது அவர்களுக்கு!
*
எல்லா இன மக்களுக்கும்
கிட்டியது மாதிரியே
இஸ்லாமியனுக்கும்
தேசியம் வழங்கிய
உரிமைகள் அத்தனையும்
கிட்டியிருக்க வேண்டும்.
ஆனால் கிட்டவில்லை,
குழித்தோண்டிப் புதைத்து
மூச்சுகாட்டால் காபந்து செய்தன
அந்த இரு அரசியல் கட்சிகள்!
இஸ்லாமியர்களின்
முன்னேற்ற முனைப்புகளின்
சகல முனைகளையும்
அழித்தொழித்த அவர்களின் சாணக்கியம்
இன்றைக்கு சந்திக்கு வந்துவிட்டது!
*
இந்த மக்களவை தேர்தல்-2009ல்
தனது வெற்றிக் குறித்து
சந்தேகிக்கும் பி.ஜே.பி.
தனக்கு ஒத்த மாற்றான
அல்லது...
மேடை எதிரிமட்டுமேயான
காங்கிரஸ் கட்சி
தோற்றுவிடக் கூடாது என
கவலைப்படுவதாகப் படுகிறது!
மூன்றாம் அணி குறித்த
பி.ஜே.பி.யின் அதீதப் புலம்பலே
அதன் எண்ணவோட்டத்தை
நமக்கு திறந்துக் காட்டுகிறது.
*
தேர்தல் முடிவு
வெளிவரும் நாளில்
பாராளுமன்ற சிம்மாசனத்திற்கு
காங்கிரஸ் தாழ்ந்து
மூன்றாம் அணி கெலிக்குமேயானால்...
பி.ஜே.பி.
நிச்சயம் வெளியில் இருந்து
அதற்கு ஆதரவு தரும்!
முன் உதாரணம் உண்டு.
நிச்சயம் நம்பலாம்.
*
அரசியலில் இந்த மேல்மட்டத்து
சித்து வட்டம் புரியவர
எனக்கெல்லாம் முப்பது வருடமானது!
"காங்கிரஸை நம்பாதீங்க
அது...
பார்ப்பனின்
கைப்பாவையாக ஆகிவிட்டது"
சொல்லத்தான் செய்தார் பெரியார்.
அப்போதே யோசித்திருக்கனும்.
அறிவு போதவில்லை.
காமராஜுக்கு ஜே யென
காங்கிரஸுக்கு வக்காலத்து வாங்கிய
என்னை ஒத்த இஸ்லாமியர்கள்
அன்றைக்கு...
'கொஞ்சநஞ்சமல்ல'!!
*
இன்றைய வளரும்
இஸ்லாமிய சமூகத்தினர்கள்
அரசியலில் ஈடுபாடு கொள்வதும்
உரிமைகளுக்காக
போராடுவதென்பதெல்லாம் சரி!
ஆனால்....
அரசியலில் அவர்கள் கால் வைத்ததுமே
பிற அரசியல் கட்சிகளின்
முத்திரைத் தனங்களை
சட்டென சுவீகரித்துக் கொள்கிறார்கள்.
*
பதவி ஆசை/ பண ஆசை/ பறக்க ஆசை /
தின்க, தூங்க ஆசை/ சுக ஆசை/
சொத்துக் குவிப்பாசை யென
அத்தனை முத்திரை தனங்களுடனும்
ஓஹோ வென
வலம்வர முனைகிறார்கள்.
ஆறு மாதத்திற்கு ஒரு தரம்
தாங்கள் இருந்துவரும் கட்சிகளை
கட்டாயம்.....
கஷ்டப்பட்டு பிளக்கிறார்கள்.
கொஞ்சமும் வெட்கப்படாமல்
அடுத்தக் கட்டமாய்
கணக்கு வழக்கு சண்டையில்
இறங்கிவிடுகிறார்கள்.
விழித்துக் கொண்டிருக்கும்
சமூகத்தைப் பற்றி
கிஞ்சித்தும் கவலையில்லை அவர்களுக்கு!
*
இவர்கள் எல்லாம்...
கிளம்பித் துளிர்விட்டு
பச்சைக் காடாய் தழைத்த
ஒவ்வொரு கூட்டத்திலும்
பாபர் மசூதி இடிப்பை மையப்படுத்தி
சொந்தச் சகோதரர்களை
உணர்வு பூரணமாய்
கிள்ளித் துடிக்கவிட்டு...
இன்னும் இன்னுமென அடர்ந்து
பிரமிக்கவைத்தவர்கள்!
தங்களது நேர்மை பொருட்டு
கூட்டம் தவறாமல்
இறைவன் மீது
சத்தியம் செய்துவந்த உத்தமர்கள்!
ஒற்றுமையின் கயிற்றை
எல்லோரும்
பற்றிப் பிடியுங்கள் என்கிற
மாநபி வாசகத்தை
இந்த இவர்கள்தான்
தங்கள் இன சகோதரர்களுக்கு
கதறி கதறி போதித்தவர்கள்!
*
பெரிய இஸ்லாமிய கட்சிகளுக்கு
நிலைக்கொள்ளும் ஸ்தலம்
மண்ணடி, பெரிய மேடு,
லிங்கிச் செட்டி தெருவும் என்றல்....
அடுத்தரக கட்சிகளுக்கு
திருவல்லிக்கேணியின்
சந்துப் பொந்துகள்!
எனக்குத் தெரிந்து
அங்கத்திய மென்சன்களில்
ஏகப்பட்ட
முஸ்லீம் கட்சிகளின் அலுவலகங்கள்!
குறிப்பிடத்தகுந்த
கட்டிடங்களின் முதல் தளத்தில்
தொப்பியோடு
அலைபவர்கள் எல்லாம் அவர்கள்தான்!
இஸ்லாமிய நாட்டு மருந்து
விற்பவர்களில் இருந்து
பர்மாபஜார் பேர்வளிகள் மற்றும்
துபாய்வாழ் முதலாளிகளென
இந்தக் கட்சிகளுக்கு
துணிந்து பெரிய பெரிய
முதலீடுகளைச் செய்கிறார்கள்.
*
இந்த இஸ்லாமிய கட்சிகள்
எல்லாவற்றிற்கும்
கொடியுண்டு / தலைவன் உண்டு /
தொண்டர்கள் உண்டா? தெரியாது.
நாலுபேர்கள் கூடினால்
ஒரு கட்சி உதயம் என்கிற கணக்கில்
சொறிந்துவிட்டுக் கொள்ளும்
அரிப்புகளின் அமைப்புகளுக்கு
தொண்டர்களும் தேவையா என்ன?
*
நபிகள் நாயத்தின்
பிறந்த தினவிழா/
காயிதே மில்லத் நினைவு தின விழா/
நோன்பு காலத்தில்
இஃப்தார் விழா யென
சம்பிரதாய வைபவங்களை
தட்டாது நடத்துவதென்பது
இந்த 'ரப்பர் ஸ்டாம்ப்'
இஸ்லாமிய கட்சிகளின் சீரியப் பணி!
*
அவர்கள் நடத்தும் அந்த விழாக்களில்
தங்களுக்கு இஸ்டப்பட்ட
திராவிடக் கட்சிகளின்
தலைவர்களை அழைத்து
காரிய சிரிப்பு சிரித்து
குழைந்து பணிந்து...
விடைதந்த மறுநாளே
அந்த தலைவர்களின் வீட்டு வாசலில்
பல்லைக் காட்டிக் கொண்டு
நிச்சயம் போய் நிற்பார்கள்.
சிறுபான்மையின வாரியத்தில்
ஏதேனும் ஒரு துக்கடா பதவி
பெறாமல் திரும்ப மாட்டார்கள்.
*
பெரிய / சிறிய / இத்தினூண்டு
இஸ்லாமிய கட்சிகள் அத்தனையும்
அங்கே....
அவர்களது அலுவலக ஸ்தலங்களில்
அவர்களுக்குள்ளாக
பிறாண்டிக் கொண்டிருப்பது/
துண்டுவிழும் நேரங்களில்
சகோதர அமைப்புகள் பற்றி
குறைச் சொல்லி கிண்டிக்கிளரி மகிழ்வது/
அவர்களின் அன்றாட பொழுது போக்கு!
அடித்துக் கொள்வதென்பது
மாதந்திரப் பணி!
இப்படி சகிக்க முடியாது
கோணல் கோணலாய்
வளர்ந்து முகம்காட்டி
தேர்தல் காலங்களில்
இரண்டு பெரிய
திராவிட கட்சிகளிடமும்
கூட்டணி என்று அணுகுவதும்
தொகுதிகள் கேட்டு
அவர்களது அலுவலக வறாண்டாக்களில்
திரும்பத் திரும்ப திரிவதென்பதும்....
அவலம் தோய்ந்த நகைச்சுவை!
*
சென்ற வாரத்தில் ஒரு நாள்.....
இரவு எட்டை தொடும் நேரம்!
எங்களது ஊரின்
சின்னக் கடைத்தெருவென
அழைக்கப்படும் எங்களது பகுதியில்
கை விரலிடுக்கில் சிகிரெட் புகைய
யாரோடோ பேசிக்கொண்டிருக்கிறேன்.
*
கையில் கத்தைத் தாளோடு
தொப்பி, தாடி சகிதமாய்
ஐம்பதுக்கும் குறையாத ஒருவர்
என் அருகில் வந்து 'சலாம்' சொன்னார்!
பொதுவாக என்னிடம்
'சலாம்' சொல்பவர்கள் குறைவு!
தொப்பி தாடிகள் என் அருகில் என்பது
அதைவிடக் குறைவு!
சந்தோசம் மேலிட பதிலளித்தேன்.
*
மாயூரம் பாராளுமன்றத் தொகுதியில்
தான், வேட்பாளராக நிற்பதாக
தன்னை அறிமுகப்படுத்தி கொண்டே....
அவர் கையில் இருந்த
தாள் கத்தையில் இருந்து
ஒரு துண்டுத் தாளை
என்னிடம் நீட்டினார்.
வெளிச்சத்தில் அதை
விரித்துப் பார்த்தேன்!
அவரது படமும்
படிக்க கொஞ்சத்திற்கு
வாசகங்களும் இருந்தது.
*
'2009 மே 13-ம் தேதி
மயிலாடுதுறை தொகுதி
நாடாளுமன்ற தேர்தல்
உங்களின் வேட்பாளர்
(கட்டம்கட்டி....,
அவரது படம்.
செல்போன் பேசும்
ஸ்டைலும், புன்னகையுமாக!)
திரு.M.H.அஹ்மது மரைக்காயர்
நிறுவனத் தலைவர்
அகில இந்திய தேசிய ஜனநாயகக் கட்சி
அவர்களை வெற்றிபெற செய்யுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.'
*
வியப்பு மேலிட
அவரைப் பார்த்தேன்!
ஒரு கட்சியின் நிறுவனத் தலைவர்...
நாடாளுமன்ற தேர்தலில்
போட்டியிடும் வேட்பாளர்....
பக்கத்துணைகள் இல்லாமல்
தன்னந்தனியாக வோட்டு சேகரிக்க
வந்து நின்ற காட்சி.....
நிஜமாகவே என்னை
திக்குமுக்காட வைத்தது!!
*
அவரிடம் கேட்க
நிறைய கேள்விகள்
என்னில் வரிசைக்கட்டி நிற்க...
பக்கத்தில் உள்ள மசூதியில் இருந்து
'இஸா' தொழுகைக்கான 'பாங்கு' ஒலித்தது.
அஹ்மது மரைக்காயர்
பாங்கின் அழைப்பை காரணமாக்கி
என்னை விட்டு நழுவினார்.
*
இஸ்லாமிய கட்சிகளின்
விபர அட்டவணையில்
அஹ்மது மரைக்காயரின்
அகில இந்திய தேசிய ஜனநாயகக் கட்சி
எத்தனையாவது
இஸ்லாமிய கட்சியென விளங்கவில்லை!
*
இந்த பாராளுமன்ற தேர்தலில்
நான் ஓட்டளிக்க செல்வேன் என்பது
101% சந்தேகம்.
மீறி ஓட்டளிக்க போவேனானால்...
அஹ்மது மரைக்காயரது
கட்சிப் பெயரின் அழகிற்கும்
அவரது மனோதிடத்திற்கும்மாக
அவரது சின்னத்திற்கு
ஓட்டளிக்கலாம்தான்.
ஆனாலும் என்ன செய்ய?
ஓட்டுப் போடும் நாளில் எனக்கு
வயிற்றுப்போக்கு வந்துவிடுமே!
போன பொது தேர்தல் சமயத்து
ஓட்டளிக்கும் நாளிலும்கூட
வயிற்றுப் போக்கு வரத்தானே வந்தது!
அதற்கு முந்தைய பொது தேர்தல்....
வாக்களிக்கும் நாளிலும் அதுதானே கதை!
*
ஓட்டளிக்க தவறுவதென்பது
தேச துரோகத்திற்கு சமமான
குற்றம் என்கிறார்கள்...
விபரமறிந்தவர்கள்!

ஓட்டளிக்க தவறுவதென்பது
தேச துரோகத்திற்கு சமமான
குற்றம் என்கிறார்கள்...
விபரமறிந்தவர்கள்!
அவர்களுக்கு என்ன தெரியும்...
என் வயிற்றுப் போக்குப் பற்றி!
எனக்குத்தானே தெரியும்.
அதன் வலியும்....
செரிமானமின்மையின்
காரண காரியமும்!
--------------------------
- தாஜ்
_______

Thursday, April 23, 2009

தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்- 5




தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்- 5
**** *** ***
கி ரி க் கெ ட் டு ம் வ ரு ண் கா ந் தி யு ம்.
---------------------------------------------------------
அன்புடன்
ஆபிதீன்....
*
தேர்தலின் விசேசங்கள்
நாளுக்கு நாள்
கூடிக்கொண்டே போகிறது.
இன்றைய உஷ்ணத்தின்
எகிறும் அளவைப் போல!
எழுதியெல்லாம் மாளாது!
கவனம் செய்ய
தவறியிருக்க மாட்டீர்கள்.
*
தேர்தலை ஒட்டிய
அதீதங்கள் அத்தனையையும்
உற்று நோக்கும் கனமெல்லாம்
சராசரிகளை
வெட்கம் பிடுங்கித் தின்கிறது.
வாய் திறவா உங்களது மௌனமும்
அதைத்தான் நிறுவுகிறதோ?
*
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு
வெளியானதுதான் தாமதம்...
அரசியல் அரங்கில்
கட்சிகளின் ஆட்டங்கள்
ஆஹா... ஓஹோ.. பேஷ் பேஷ்!
ஒன்றுக்கொன்று
சளைத்தவர்களாகவே தெரியவில்லை.
*
சூடுப் பிடித்த
முதல் இரண்டு ஆட்டங்கள்
கவனம் கொள்ளத் தக்கது.
ஒண்ணு கிரிக்கேட்!
இன்னொண்ணு வருண்காந்தி!
*
நாடும், நாற்காலியும்
தங்களுக்கு மட்டுமே ஆனதென
'ராம் ராமை' உடம்பின் குறுக்கே
பிணைந்து பிடித்தப்படிக்கு
ஆளாய் பறக்கும் பி.ஜே.பி.
அந்த முதல் இரண்டை முன்வைத்து
மீடியாக்களின் பக்கங்களில்
ஆடித்தீர்த்த ஆட்டம்
எவரொருவரின்
பொது அறிவுக்குப் பொருந்தாதது.
*
'இந்தியன் பிரீமியர் லீக்'(ஐ.பி.எல்.)
வெளிநாட்டுக்கு டெண்டை தூக்ப் போகிறோம்...
என்கிற சர்ச்சையொட்டிய
கிரிக்கெட் போர்டின் வியாபார லொள்ளுக்கு
அதன் முதுகில் இரண்டு சாத்து சாத்துவதைவிட்டு
"தேசத்தின் மானமே போய்விட்டது,
மக்களே.....காங்கிரஸுக்கு ஓட்டுப் போடாதீர்கள்"
"குஜராத்தில் சேமமாய் ஆட்டம் நடத்த
நாங்கள் பாதுகாப்பு தருகிறோம்...
எங்களுக்கே வாக்களியுங்கள்"
- என்னும் விதாமாய்
உணர்ச்சி மேலிட
குதித்துத்தான் தீர்த்தது பி.ஜே.பி.!
அவர்களால் உணர்ச்சி கொப்பளிப்பில்லாமல்
எது ஒன்றையும் பேசவே முடியாது!
நண்பர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் போது...
'டீ சாப்பிட போகலாமா?' யென
அவர்கள் கேட்கும் நேரமும்
அதே உணர்ச்சி மேலிடலோடுதான்
கேட்பார்கள் போலிருக்கிறது!!
இருக்கும்! நம்பலாம்.
*
பி.ஜே.பி.யின்
அந்த முதல் குதியைக் கண்டு....
கிரிக்கெட் ஆட்டம் என்பது
ராமருக்கு கோவில் கட்டும்
சங்கதிக்கு உட்பட்டதோ?
அல்லது.....
ராமர் பாலத்தை காபந்து செய்யும் முனைப்பின்
தலையான காரியமோ?யென
ரொம்பவும்தான்
நான் குழம்பி போனேன்.
*
பிஜே.பி.யின்
'தேசத்தின் மானம் போகிறது...'
குதிக்குப் பிறகும்
மக்கள் தங்களது அன்றாட பணிகளில்
கவனம் கொண்டார்களே தவிர
இவர்களின்
அரசியல் கூத்துக்கெல்லாம்
கண்ணையோ காதையோ
திருப்பினார்கள் இல்லை.
இந்த யுகத்திலும்
ரதயாத்திரையெல்லாம் போன
நவீன அர்ஜுனன்களாயிற்றே யென
ஒரு மரியாதைக் கருதியேனும்
இந்த மக்கள்
திரும்பிப் பார்த்திருக்கலாம்.
மாட்டேன் என்றுவிட்டார்கள்.
*
ஓட்டுப் போடத் தெரியாத...
பூத்தின் பக்கம்
எந்த திக்கென அறியாத
மேல்மட்ட மக்களின்
அல்லது....
விடலைப் பருவத்தினர்களின்
அபிலாசைகளுக்கல்லவா
குரல் கொடுத்துக் கொண்டும்...
குதித்துக் கொண்டும் இருக்கிறோம்...
அந்தக் கட்சிக்கு
உறைக்கத் தொடங்கிய
நாட்களில்தான்....
"வந்தேனே....
வந்து நானும்.....
சபைக்கு...
வந்தனம் தந்தேனய்யா..."
சொல்லாமல் சொல்லும் விதமாய்
அமர்க்கள செய்தியாக வந்தார்
பி.ஜே.பி.யின் சரியான முத்திரை
இளம் துருக்கி வருண்!
*
வருணின் கசாப்புகடை பேச்சு
மீடியாக்களின் தலைப்பு தாகத்திற்கு
பால்வார்த்தது.
பக்கம் பக்கமாக
முத்து எழுத்துகளில்
அச்சுக் கேர்த்தார்கள்.
*
".............. .........களின்
கைகளை வெட்டுவேன்/
கால்களை முறிப்பேன்/
அவர்களது நாவை அறுப்பேன்..."
*
கலங்கித்தான் போனது பி.ஜே.பி.
சிகப்பு காளிஸ்வரனாக
வருண் தோன்றும்
புகைப்படக் காட்சிகள்
அவர்களை
உண்டு... இல்லையென ஆக்கிவிட்டது.
வருணின் அந்தப் பேசு என்ன
சாதாரணப் பேச்சா!?
கீழ்மட்டத் தொண்டனையும்
தலைவனாக்கும் பேச்சல்லவா!
ஆகாய அளவுக்கு
புகழ்ச் சேர்க்கும் பேச்சல்லவா!
ஒரு நொடியில்...
இந்திய மூலை முடுக்கெல்லாம்
வருண் போய் சேர்ந்துவிடுவாரே!
*
தங்களது பிரத்யோக
ஆயுதத்தை
தங்களிடம் பாடம் படித்த
கட்சிக்காரர் ஒருவர்தான்
கையில் எடுத்திருக்கிறார்
என்றாலும்.....
வருண் யார்?
நேருவின் வம்சாவளி அல்லவா?
*
பி.ஜே.பி. மேல்மட்டத் தலைவர்கள்
அத்தனைப் பேர்களும்
அன்று தொட்டு இன்றுவரை
இதையொட்டி
குழம்பலோ குழம்பல்.
என்ன செய்யலாம்?
வருணுக்கு....
ஆதரவளிப்பதா?
எதிர்ப்பைத் தெரிவிப்பதா?
ஆதரவு என்றால்...
வருண் வளர்வார்
வளர்வார்.... வளர்ந்தே விடுவார்!
எதிர்ப்பென்றால்...
சொந்தக் கட்சியிலேயே
தொண்டர்கள் கேள்வி எழுப்புவார்கள்...
"சரியாகத்தானே பேசியிருக்கிறார்!?"
"ஏன் எதிர்கின்றீர்கள்?"
*
மீடியாக்களை
மனதிற்குள் சபீத்தவர்களாக
1."அந்த பேச்சு
அவருடைய தனிப்பட்ட கருத்து.
கட்சிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை"
2."வருணின் பேச்சை வரவேற்கிறோம்"
சராசரி மனிதர்கள்
விளங்கிக் கொள்ள முடியாத
தெளிவான விளக்கம் இது!!
*
இப்படியே மாறி மாறி...
அவர்கள் குழம்ப
வருணுக்கு தேர்தலில் நிற்கத்
தடையென்றது
தேர்தல் கமிஷன்!
சிறையென்றது மாயாவதி அரசு.
*
வருணுக்கு கிட்டும்
மீடியா பரபரப்பில்
பங்குப் போட்டுக் கொள்ள
லாலுவும் மாயாவதியும்
முயற்சித்தாலும்,
இன்னமும் வருணுக்கே முதலிடம்!
*
இப்படியே
மீண்டும் மீண்டும்...
தோற்றுக் கொண்டிருக்கிறது பி.ஜே.பி.
அவர்களின்
தென் இந்திய ராஜகுருவான
சோவே கூட
பி.ஜே.பி.யின்
இந்த இரண்டு நிலைப்பாடுகளிலும்
அந்தக் கட்சிக்கு எதிராகவே
கருத்தைச் சொன்னார்.
*
ஐ.பி.எல்.கிரிக்கெட்
வெளிநாடு போனதில்
தேசிய அவமானமுமில்லை...
வருணை சிறையில் தள்ளியதில்
தப்புமில்லை
என்றுவிட்டார் சோ!
*
வாயில்லா ஜீவன்களின்
பாதுகாப்பிற்காக
இந்தியாவில் இயங்கும்
புளுகிராஸ் சேவைவாதிகளுக்கே
வகுப்பு எடுப்பவர்
வருணின் அம்மா
மேனகா காந்தி!!
"பசுவின் பால் அதன் கன்றுக்கானது!
அதை நாம் உபயோகிப்பதும் பாவம்!"
- என்று போதனைகள் செய்யும்
மேனகா காந்திக்கு
இப்படியொரு மகன்!!
வருண் நிச்சயம்
அம்மா பிள்ளையாக இருக்க மாட்டார்.
*
தனது பெயரோடு
தொங்கு தசையாக பிசிராடும்
'காந்தியை'
இனிமேலாவது வருண்
நீக்கிவிடுவது புண்ணியமாகப் போகும்.
கசாபுகடைக்காரனுக்கும்
காந்திக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?
உங்களது 'காந்தி'
உங்களின் தாத்தா வழிவந்த
காந்தியாக இருந்தாலும்....
வேண்டாம் பிளீஸ்... விட்டுவிடுங்கள்.
*
காது கொடுப்பீர்கள் என்றால்...
சொல்ல இன்னொரு விசயமுண்டு!
பெதுத் தேர்தல் முனைப்புகள்
ஆராவாரப்பட்டுக் கொண்டிருக்கும்
இந்தக் காலக்கட்டத்தில்
பாதுகாப்பாக நீங்கள்
சிறையில் இருப்பதே உசித்தம்!
தவறி... இப்பொழுது
வெளியே வரும் பட்சம்....
உங்களது பிரச்சனையின்
வலுவையொட்டி
கணக்குத் தீர்த்து
தங்களது கனவு நாற்காலியை
சுலபமாக எட்டிவிடுவார்கள் பாவிகள்!
நம் அரசியல்வாதிகள்
மஹா பாவிகள்!
அசல் அக்மார்க் பாவிகள்!!
தேர்தல் நேரத்தில்
அரசியல்வாதிகளுக்கு
ஜெயம்தான் முக்கியம்!
**** *** ***