Friday, April 20, 2007

தாஜ் கவிதைகள் - 13




காலமும் காலமும்.
-------------------------


தாரைத் தப்பட்டைகளின்
எதிரொலி வெள்ளத்தில்
கரங்கள் குவிய சிரங்கள்
தாழும் ஆராதனைக் கொண்டு
வலம் வருமாம் நேற்று
கோல வெளியில்
வித்தகர்களின் தேரழகு.


வியக்கும் விரல்களது
கண்களின் நசிவில்
பூத்த மா திரட்சி
திரு பார்வைகள் தீண்டா
காலத்தில் விண்டு
தடுப்பிற்குள் பொழிவழிய
சுற்று அடி
சந்தைக் கடைகளில்
பரபரப்பு அடையும்
கலைகள் வளர்த்த
வம்சாவளிகள்.

மண்ணின் நிறம் தேடி
பகலில் சூரியனையும்
இரவில் சந்திரனையும்
கண் சிமிட்டும்
நட்சத்திரங்களையுமே
காணவியந்து
இடைமலை வண்ணங்களில்
பாதம் பரவாப் பாச்சலாய்
நம் நடப்பு
காலத்தை கடக்கிறது.

( அமரர் ந. பிச்சமூர்த்தி நினைவுக்கு.)

*****

பாரதியார் சாலை.
-----------------------

மறையத் தெரிகிறது
மாமலைகளின் தொடர்
குன்றுகளைச் சார்ந்து
குண்டும் குழியுமாய்
விண்டு கிடக்கிறது சாலை
புறங்களில் விட்டு விட்டு
தழைத்திருக்கும்
மரங்களுக்கு குறைவில்லை
சிட்டுகளின் வட்டமும்
குயில்களின் ரிதமும்
சிங்காரக் காட்சி.

நவமணித் தடங்களில்
சங்கமிக்கும் இச் சாலையின்
ஆரம்பம் பாழடைந்த சங்கதி
நிழல் மேவ ராகம்கூடி
காட்சிகளைக் கண்டபடி
இந்த பாதையில்
ஆதி தரிசனத்திற்கே
சுற்றுலாப் பயணிகள்
கூடுதல் விஜயம்
சிலர் இவ்வழியில்
போதைப் பொருட்களைக்
கடத்துகின்றனர்
காவல் துறையினருக்கு
எப்பவும் கனவுகளில்
அதீத அலைச்சல்.

**********

No comments: