Monday, April 28, 2008

தாஜ் / சிறுகதை - 4



பெண்கள்...!
------------------
- தாஜ்



என்.வி. சார், இந்த சிறுகதை ரொம்ப பழையதா?

சிறுகதையல்லமா, நாவல்! எழுதி பத்து வருஷத்திற்கு மேலாச்சு.

நிறையப் பக்கங்களை காணவில்லையே?

கிழிச்சுட்டேன். பிடிக்கலை.

இதை மட்டும் பாக்கி வைத்துவிட்டீர்கள்?

இந்தப் பகுதியை கிழிக்க மனசு வரலை. வைச்சுகிட்டேன். அதற்குப் பல காரணங்கள்!

ஒகே... ஓகே...! நீங்க கவிதையெல்லாம் எழுதிறீங்கல?

ம்.....

தொகுப்பு ஏதேனும் இருக்கிறதா? பார்க்கலாமா....?

உன் பெயர் என்ன சொன்னே...?

குழலி...

இதோ பார் குழலி... நீங்க என் எழுத்துக்களை ஆய்வு செய்ய வந்திருக்கிங்க, அச்சில் வந்த எழுத்துக்கள் போக அச்சில் வராத எழுத்துக்கள் என்று எழுதிய இந்த பேப்பர் கட்டையும் உங்க பார்வைக்கு எடுத்து வச்சிருக்கேன். என் கவிதைகளை பார்த்திங்கன்னா சொல்லாம போய்டு விங்க. கொஞ்ச வயசு பொண்ணா வேற இருக்கிங்க... அதைப் படிச்சி முடியை பிச்சிகிட்டீங் கன்னு வச்சிகிங்க அப்புறம் பார்க்க நல்லா இருக்க மாட்டிங்க! யாருக்கும் புரியலைங்கிறதுதான் என் கவிதைகளின் டோட்டல் ரிசல்ட்.

ரொம்ப ஹாஸ்யமா பேசுறீங்க சார்! சும்மா... அதையும் படிச்சி வைக்கிறது நல்லதுன்னு....

நல்லதுதான்... ஒப்புக்கிறேன். அதைப் படிக்கிறப்போ... குறைந்த பட்சம் சில கவிதைகளுக்காவது அர்த்தம் கேட்பிங்க...?

சம் டைம்.

ஒரு கவிதைக்கு, சம்பந்தப்பட்ட கவிஞனை அர்த்தம் சொல்ல வைக்கிறதைவிட; அவனுக்கு வேறு கொடுமை இருக்க முடியாது. உங்க ஆய்வை எனது நாவல், சிறுகதைத் தொகுப்புகளோடு நிறுத்திக்க முயற்சிப் பண்ணுறதுதான்.. நம்ம இரண்டு பேர்களுக்குமே சேஃப்!

எஸ்... நீங்கள் சொல்றது சரி....

****

பாத்ரூமுக்குள் போய் கதவைத் தாழிட்டவள், தனது ஒவ்வொரு ஆடைகளாக கழற்றிச் சுவற் றுக் கொக்கியில் மாட்டினாள். குளிப் பதற்கு முன் பக்கச் சுவற்றில் பதித்துள்ள நிலைக் கண் ணாடியில் தனது உடம்பை அவள் பார்ப்பதுண்டு. இன்றைக்கு நின்று நிதானித்து கைகளால் குழல் கூந்தலைக் கலைத்து விட்டு ரசித்தாள். உடம்பை நீவி மஸாஜ் செய்தபடி அங்குல அங்குலமாக அளந்தாள். முகம் ஓ.கே., ரேகை நெளியும் நெற்றி, கூரிய மூக்கு, திருத்தப்பட்ட புருவம், அலைபாயும் கண்கள், அதில் தொற்றித் தெறிக்கும் மின்னல், இதழில் விரியும் புன்னகை, உள்ளே முகம் காட்டும் முத்துக்கள்... அவள் சிரித்துக் கொண்டே... இன்னும் கீழே வந்தாள். பச்சை நரம்பு காட்டும் கழுத்து, சுரத்தேறிய புஜம், நீள கைகள், மார்பின் திரட்சிகள், அதை வருடும் மென்மை விரல்கள், வற்றிய வயிறு, மையம் காட்டும் சுண்டுவிரல் பதியும் குழி மச்சம், இரண்டு பிருஷ்டங்களது திமிசின் மினு ப்பு, ரோமப் புற்களின் அலசலில் மறையும் பீடம்.... அத்தனையும் அச்சு மாறாமல் நேற்றைக்குப் பார்த்த மாதிரியேதான் இருக்கி றது. சரியாகச் சொன்னால் இன்னும் வனப்பின் எழில் கூடித்தான் தெரிகிறது. நான் இழந்து நிற்பதாக அம்மா எதை குத்திக் காட் டிக் கொண்டே இருக்கிறாள்? நேற்று வசந்தன் வீட்டுக்கு வந்தான். நான் ஹலோ கூட சொல்லவில்லை. அம்மாவிடம் வத்தி வைத்திருப்பான், வைக்கட்டுமே. அவனை என் தலையில்கட்ட இந்த அம்மா ஏன் இப்படி நிற்கிறாள்! அவன் எம்.எஸ்.சி. மேக் ஸாம்.. புண்ணாக்கு! நான்.. ஐஸ்... ஐஸ்வரியா... அப்ஸரஸ்... ஐஸ்வரியா!
*
வசந்தன் என் முதல் காதலன் என்பதை எப்பவும் நான் மறுப்பவள் இல்லை. பழகினேன்.. பிடிக்கவில்லை. நான் ரித்திக்ரோஷனைபார்க்கனும் என்றால், அவன் விஜயகாந்தை பார்க்க வா என்கிறான். உலகத்தில் இப்படி ஒரு கொடுமையை யாராவது கேள்விப் பட்டதுண்டா? அந்த நிமிஷமே அவனை எதிரே நிற்க வைத்து, கையெடுத்துக் கும்பிட்டேன். 'ஏன்' என்றான். 'போய் வா' என்று விட்டேன். விமலராஜோடு ரித்திக்ரோஷ்னைப் பார்க்கப் போனால், அவன் பல்லிளித்தபடி இஷா தியோலை பார்த்துக் கொண்டிரு க்கிறான். அய்யா சாமி உனக்கும் ஒரு கும்பிடு என்றுவிட்டேன். பிறகு...மகேஷ், கணேஷ், காஜா, அருள் பாண்டி, தமிழ்ச் செல் வன் என்று எல்லோருக்கும் வழியனுப்பும் படலம் நடத்தி.. ஏக 'டயர்ட்' ஆன நாளில், என் கண்டெடு ப்புதான் சுப்புடு! எங்க அலுவலகத்தில் அனைவராலும் அறியப்படும் 'பேட்பாய்'! இப்போ அவன்தான் என் பெஸ்ட் ஃபிரண்ட். நடவென்றால் ஓடுகிறான்... நில் என்றால் படுத்துவிடுகிறான். ரொம்பவும் பிடித்திருக்கு. செல்லப் பிராணி வளர்க்காத குறையும் இன்றைக்கு இல்லை! அவனுக்கு நான் இன்னும் சுதந்திரம் கொடுக்கவில்லை!
*
என்.வி.சார்! இதான் அந்த கிழிபட்ட நாவலின் ஆரம்பமா? என்ன இப்படி செக்ஸியா... எழுதி யிருக்கிங்க?
*
எங்கே... ஓ... இதுவா....!! நான் எழுதினதுதான். ஒரு வாரப்பத்திரிகையின் தீபாவளி மலருக்குக் காக எழுதியது. எழுதும்போதே தெரிந்தது இந்த மாதிரியெல்லாம் நம்மால் எழுதிட முடியாது ன்னு! கிழிச்சுட்டேன். இந்த பக்கம் மட்டும் எப்படியோ தப்பி...... ஸாரிம்மா !
*
பரவாயில்லை... இத்தனை கிளாமரா நீங்க எழுதி நான் படிச்சதில்லை என்கிற 'ஷாக்' மட்டும்தான்...
*
மறுபடியும் ஸாரி... ரொம்ப அதிர்ச்சியா ஆக்கிட்டேன் இல்லே... இப்படித்தான் பத்திரிகைகாரர்கள் எழுதி கேட்கிறார்கள். வாசகர் களில் பெரும்பாலோர் இந்த மாதிரியான கதைகளைத்தான் படிக்க விரும்புறதா அவர்கள் சொல்றாங்க!
*
இட்ஸ் ஓகே.. இந்த கதைக்கு என்ன பெயர் வைத்திருந்திங்க...
*
அது முடிஞ்சி போன விஷயமில்லையோ?
*
இல்லெ... ஒரு க்யூரியாஸிட்டி...
*
'நவீன பதுமைகள்'
*
நைஸ் நேம்...
*
அதைக் கடாசிட்டு, மற்றதைப் படி.
***
இங்கே நான் நிம்மதியா இருக்கேன். இந்த குணசீலம் உன் பார்வையில் பட்டதோ இல்லையோ எனக்குத் தெரியாது. அடிப்படை யில் இது அழகான கிராமம். ஊரைச் சுற்றி பச்சைப் பசுமை களின் ஆதிக்கம் அதிகம். இங்கு இன்னும் வெட்டப்படாத, வளர்ந்துகிளைப் பரப்பி நிற்கும் தடித்த மரங்கள் நூற்றாண்டு காலப் பழமை கொண்டது. ஆங்காங்கே தென்படும் இந்த மரங்கள் தங்கள்கரங்களால் ஊரையே நிழலில் வைத்திருக்கிறது. யோசிக்கிறபோது இந்த கிராமத்தின் இன்றைய வசீகரம், நாலைந்து தலைமுறைக்கு முன் இன்னும் ரம்மியமாக இருந்திருக்க வேண்டும்.
*
நான் இங்கே மன நோயாளியாக வந்து சேர்ந்தபோது, பிற மனநோயாளிகளேடு கழித்த முதல் மூன்று நாட்கள் மிகவும் வித்தியாச மானது. அவர்களது கூக்குரல் பல நேரம் அச்சத்தைத் தரும். அவர்களின் சேட்டைகளுக்குப் பஞ்சமே இல்லை. தனக்குத்தானே விவாதம் நடத்துவது, உடலை அஷ்டகோணத்தில் வளைப்பது, விடியற்காலை நேரங்களில் மிகவும் தேர்ந்த மனிதர்கள் மாதிரி பேசுவது. இப்படி எல்லாமே இங்கு எனக்கு புதிய அனுபவமாகவே இருந்தது.
அவன்தான் என்னை இங்கே கொண்டுவந்து, இந்த அமைப்பின் நிர்வாகியிடம் ஒப்படைத்தான். நான் யாரை அவன் என்கிறேன்என்பதை அறிவாய் என்று நினைக்கிறேன். இங்கே நிர்வாகி ஒருவன் என்னை இழுத்துப் போய் கோவில் புறத் திண்ணை ஒன்றில் அமரசெய்து காலில் விலங்கிட்டான். நான் பிரமை கொண்டவள் மாதிரி புதிய இடத்தையும், பிற மனநேயாளிகளை யும் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
*
மூன்றாம் நாள் காலை இரண்டு சாமியார்கள் வந்தார்கள். எல்லா மனநேயாகளுக்கும் துளசி தீர்த்தத்தை அவர்களது தலைகளில்தெளித்துக் கொண்டே என்னிடமும் வந்தார்கள். நான் தலையைக் குனிந்துக் கொண்டேன். 'பெண்ணே' என்றழைக்க நிமிர்ந்து பார் த்தேன். அவர்கள் என் கண்களை உற்றுப் பார்த்துவிட்டு பணியாளை உரத்த குரலில் அழைத்தார்கள். வயதான பெரியவர் ஒருவர் ஓடிவந்தார். 'யார் இந்தப்பெண்ணுக்கு விலங்கிட்டது?'என்று பெரிய சாமியார் கேட்கவும், ஓடிவந்தவர் மிரண்டு போனார். 'முதலில் அந்தப்பெண்ணின் விலங்களை கழட்டு' சாமியார் உத்தரவுபோட, என் விலங்குகள் கழட்டப்பட்டன. 'பெண்ணே எங்களுடன் வா' என்று அழைத்துக் கொண்டு கோவில் மண்டபத்துக்குப் போனார்கள்.
*
உன் பெயர் என்ன..?
*
மேகலா...
*
எத்தனை நாளாகிறது இங்கே வந்து? மூன்று நாட்களாகிறது. யார் உன்னை வஞ்சித்தது?
*
என் கணவர்..!
*
ஏன் அவனை காட்டிக் கொடுக்கவில்லை?"
*
எனக்கு அவரிடமிருந்து ஏதோ ஒரு வகையில் விடுதலை தேவையாக இருந்தது, அதனால் தான்.... சாமி.
*
சாமியார் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். கோவில் நிர்வாகிகள் இரண்டுபேர் ஓடிவந்து சாமியாருக்கு வணக்கம் கூறி, ஒதுங்கி நின்றார்கள்.
*
"பிரமை பிடித்திருப்பவர்களுக்கும், பிடிக்காதவர்களுக்கும் வித்தியாசப்படுத்திப் பார்க்கத் தெரியா தா உங்களுக்கு?" என்று பெரிய சாமி குரல் உயர்த்தவும் நிர்வாகிகள் இருவரும் மிரண்டு விட் டனர்."'மூன்று நாட்கள் இந்தப் பெண் பட்ட வேதனை இவளது கணவனை மட்டுமல்ல உங்க ளையும் சும்மா விடாது!" என்று அவர்களிடம் சொல்லும் முகமாக வேதனைப்பட்டார். பின்னர் என் பக்கம் திரும்பி, "தவறு நடந்துவிட்டது.. உன் கணவன் கோவிலுக்கு நிறைய நன்கொடை தந்திருப்பான், அதைவைத்து... இவர்கள் ஏமாந்திருக்கக் கூடும். பெண்ணே நீ இன்றே ஊர் திரும் பலாம்" என்றார்.
*
கைகளைக் குவித்தபடி, "சாமி... நான் ஊர் போக விரும்பவில்லை. நீங்கள் அனுமதித்தால் இங்கேயே தங்கிவிடுகிறேன். அவர் என்னை இங்கே கொண்டுவந்து தள்ளினார் என்றாலும்... இந்த மண் எனக்கு இஷ்டமானது. என் தாய் இந்த மண்ணில்தான் இற ந்து போனாள். இந்த வளாகத்தில் என்னை பணி செய்ய அனுமதித்தால் மன நிறைவோடு இந்த மனநோயாளி களுக்கு சேவை செய்யச் சித்தமாக இருக்கிறேன். என் தாயின் ஆன்மா இங்கேதான் எங்கோ இருக்கிறது. என் காலமும் இங்கேயே கழியட்டும்.." என்றேன். என்னைப் பார்த்து சிரித்தவராக,
"இந்தப் பெண்ணிற்கு தங்க எல்லா வசதிகளையும் செய்து கொடுங்கள்" என்று உத்தரவு பிறப்பித்தார்! என்னையும் ஆசீர்வதித்தார்.
*
என்.வி.சார் இதனுடைய தொடர்ச்சி.... காணோமே..?
*
நீ எதைப்படித்துக் கொண்டிருக்கிறாய்? தனிப்பக்கங்களாக கிடப்பதை எல்லாம் விடு. தொடர்ச்சி யிருக்க வாய்ப்பில்லை. கொஞ்சம் பக்கங்களை 'பன்ஞ்' செய்து வைத்திருக்கிறேன், அதை மட்டும் படிக்க எடுத்துக் கொள்... போதும்.
*
ஸாரி... ஸார்..
****
அன்பு அனுவுக்கு...
இந்தக் கடிதம் உனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியையும், இன்னொரு பக்கம் சஞ்சலத்தையும் தரலாம். எல்லாவற்றையும் சுவீகரிக்கும்மனம் உன்னுடையது. நான் அறிவேன். என்னை நீ தேடியிருக்கக் கூடும். நான்தான் ஒளிந்துக்கொண்டு விட்டேன்... தகவலேசெய்யாது ஒளிந்துக் கொண்டு விட்டேன்.....
*
உன்னிடத்தில் நான் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டதும், இப்படி இங்கேயே தங்கிவிட்டதும் உனக்கு வியப்பைத் தந்திருக்கும். இவள் ஒரு கடிதமேனும் எழுதுவதற்கு என்ன? என்று நீ அதிகமும் வெகுண்டிருப்பாய். ஆனால் அந்தக் கோபம் நிச்சயம் நீடித் திருக்க வாய்ப்பில்லை. என்னை நீயும், உன்னை நானும் தீர புரிந்துக் கொண்டவர்கள். உன்னால் என் மீது ஓர் எல்லை யைத் தாண்டி கோபப் பட முடியாது. முட்டாள், பைத்தியக்காரி என்று வேண்டுமானால் இஸ்டத் துக்கு திட்டியிருப்பாய். வாஸ்தவம், நான் பைத்தியக்காரிதான்! அப்படி என்றுதான் நான் முக்தி அடைந்திருக்கிறேன். இல்லையென்றால் இப்படி இந்த விடுதலைக் காற்றை சுவாசிப்ப தென்பது தான் ஏது?
*
இந்தக் கடிதம் கண்டவுடன் நீ புறப்பட்டு வர முயல்வாய். தெரியும். என் இந்த இருப்பு கடல் தாண்டிய சங்கதியல்ல! கைக்கெட்டும் தூரத்தில்தானே இருக்கிறேன். இந்தக் கடிதம் கிடைக்கும் பட்சம் நீ மனக் கிலேசத்திற்கும் ஆளாகக் கூடும். ஆனால்.. இதை எழுதி முடித்த பிறகு தபா லில் சேர்ப்பேனா... எனக்குத் தெரியவில்லை. கேரளாவில் இருந்து வெளிவரும் ஆங்கில இத ழான 'தி வீக் எண்ட்'ல் நீ எழுதிய கட்டுரைத் தொடரான 'The Third face of Tamil Ladies' வாசிக்கக் கிடைத்தது. அதை வாசிக்கத் தொடங்கிய நாளிலிருந்து, உனக்கு எழுதணும் என்றுதான் மனசு கிடந்து அரற்றியது. எழுதிக்கொண்டிருக்கிறேன்.
*
இப்படி ஒரு கட்டுரையை இதற்கு முன் உன்னிடத்தில் நான் வாசித்ததே இல்லை! நான்கு இந்திய தலை நகரங்களில் எயிட்ஸ் நோய் கொண்ட பெண்களை நீ விரிவாக பேட்டி எடுத்து, அவர்களின் யதார்த்தத்தை வாசகர்களின் பார்வைக்கு வைத்திருக்கிறாய், சென்ற வருடம் தாய்லாந்தில் வைத்து உலக விலைமாதர்களோடு கலந்தாய்வு செய்து அறிய பல உண்மை களை வெளிக் கொண்டு வந்திருந்தாய். ஆப்ரிக்காவின் பல நாடுகளுக்கு சென்று, அங்கே பசியால் இறந்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் குறித்து உலக மனதைத் தொடும் அளவிலான உன் ஆய்வுவை ஐக்கிய நாட்டு சபையின் பார்வைக்கு சமர்ப்பித்தாய். இந்திய சிறைச் சாலை களில் உள்ள பெண்கைதிகள் குறித்த உனது ஆய்வும் பிரபலமானது. எல்லாமே உன் பாதை யின் மைல் கற்கல்தான். என்றாலும்... இப்பொழுதான... உனது முயற்சி இன்னும் உன்னதம் கூடியது. இந்தக் கட்டுரைக்காக நீ கொண்டிருக்கிற சிரமமும் அப்படிதான். 'தி வீக் எண்ட்' இத ழில், உன் கட்டுரை வந்த ஆறு வாரமும் முதல் வாசகியாய் என்னை நினைத்து அதைப் படித் தேன். அதனூடான செய்திகளில் சிந்தனை வயப்பட்டவளாய் அதை அசைபோடுவதிலேயே நேரங்களைச் செலவழித்தேன். கட்டுரை தந்த அதிர்வுகள் கொஞ்சமல்ல!
*
உன் கட்டுரையை வாசித்ததில் எனக்குச் சில இழப்புகள் ஏற்பட்டது. அதை இங்கே சொல்ல லாம். உன்னத பயணத்திற்கென்று...நாள், கிழமை, நேரம் எல்லாமும் குறித்து மிகச் சரியாக திட்டமிட்டிருந்தேன். இந்தப் பயணத்திற்கான ஆயத்த தினத்தில்தான் 'தி வீக் எண்ட்'ல் உன் கட்டுரை எதிர்பட்டது. பயணமும் தடைப்பட்டது. கட்டுரையின் ஆறுவார வாசிப்புக்குப் பிறகு பயணம்குறித்த நினைவு எழவில்லை. மாறாய், எனது மூன்றாவதுமுகத்தை எப்படியேனும் கண்டெடுத்துவிட வேண்டும் என்கிற எண்ணமே விஞ்சி நின்றது. என் பயணம் தடைப்பட்டதை இழப்பென்று சொன்னேன். நிச்சயம்... இழப்புதானா? காலம்தான் சொல்லனும்.
*
தீர மழை கொட்டி ஓய்ந்த ஒரு மாலைப் பொழுதில், இளஞ்சூட்டில் வெண்ணீர் வைத்துக் குளித்தேன். எனக்குப் பிடித்த வண்ணத் தில் பிரத்யேகமாக வாங்கி வைத்திருந்த ஆடையை அணிந்துக் கொண்டேன். கருமேகங்களால், மீண்டும் பொழுது இருளத் துவங் கியது. வெளியே, வீட்டை ஒட்டிய தோட்டம், இலேசான வெளிச்சப் பொழுதில் பார்க்க ரம்மியமாக இருந்தது. மழையால் கழுவி விடப்பட்ட மண்தரை மினுத்தது. தோட்டத்தில் இறங்கி கொஞ்ச தூரம் காலார நடந்தேன். வானத்தின் தூர மின்னல் கீற்றுகள் பரவ சப்படுத்தியது. வேலியில் அப்பொ ழுதுதான் பூத்த வெள்ளைப் பூக்கள்... அச்சு அச்சாய் தலையசைத்தது. கண் கொட்டாமல் பார்த் தேன். பூக்களே... வெள்ளைப் பூக்களே நாளைக்கு நீங்கள் எல்லாம் எப்படி இருப்பீர்கள்?
*
வீட்டைப் பூட்டிக்கொண்டு பக்கத்து டவுனுக்கு போகப் புறப்பட்டேன். பஸ்பிடிக்க ரோட்டிற்கு வந்தபோது, மின்சாரம் தடைப் பட் டிருந்தது. இரு புறமும் ஏழெட்டுக் கடைகள். மண்ணெண்னை விளக்கில் அந்தச் சின்ன கடைகளின் முகங்கள் வித்தியாசமாகத்தெரிந்தது. பக்கத்து டவுனுக்குப் போய் சேர்ந்தபோது அங்கே மின்சாரம் இருந்தது. மழைக்காலங்களில் கடைகளில் ஒரு சேர மின்விளக்குகள் எரிகிறபோது பார்க்க மஹா கிளர்ச்சி! ரசித்துக் கொண்டே நான் தேர்வு செய்து வைத்திருக்கும் ரெஸ்டாரெண்ட்க் குள் போய், பிடித்ததை ஆர்டர் செய்தேன். ஊறவைத்து அரைத்த தானியங்களிலான அடை இங்கு ரொம்பப்பிடிக்கும். கூடுதலாக மிளகை உடைத்துப் போட்டிருப்பார்கள். வாசனை வித்தியாசமாக இருக்கும். காஃபியும் கூட இங்கு நன்றாக இருக் கும். பில்டர் காஃபி. சிக்கரி கலக்காதது என்கிறார்கள். வாஸ்தவமாக இருக்க வாய்ப்பில்லை. அத்தனையும் ருசித்துச் சாப்பிட்டேன்.
*
ரெஸ்டாரெண்டை விட்டு வெளியே வந்தபோது, வாயிலில் கையேந்தியபடி ஓர் வயதான அம்மா! பர்ஸைத் திறந்து புதிய நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு அந்த அம்மாவையே பார்த்தேன். மிரட்சியும் மகிழ்ச்சியுமாய் இரண்டு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி கும்பிட்டு 'நீ நூறு வயசு வாழணும்' என் திரும்பத் திரும்ப வாழ்த்தினாள். சிரித்தேன். வெகு நாட்களாக மறந்து போயிருந்த சிரிப்பு அது.
*
வீட்டிற்குப் போய் இஷ்டமான எழுத்தாளர்களின் எழுத்துகளை நடு நிசி வரைக்கும் படித்து விட்டு, தூங்கப் போய்விட வேண்டும்என்பது அட்டவணைப்படியான அந்த இரவின் அடுத்த நிகழ்வு. மாலையிலிருந்து தடங்கலே இல்லாமல் ஒவ்வொன்றாய் 'டிக்' செய்து கொண்டே வருவது பிடித்திருந்தது. சரியாக அடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு எழ மனம் சந்தோஷத்தில் தழைத்தது. தூங்கப்போவதற்கு முன்னால் ஒரு முழு வெள்ளைத்தாளில் மறக்காமல் நாலே நாலுவரி எழுத வேண் டும். 'என் பயணத்தை நான்தான் தேர்வு செய்தேன். இது யாருடைய நிர்பந்தமும் அல்ல. மகிழ்ச்சியான மன நிலையில்தான் இதை எழுதுகிறேன். புறப்படுகிறேன். நன்றி!' மிக துல்லியமாய் அந்த நான்கு வரிகளும் மனதில் வந்து மோதி, 'சரியா?' என்றது. மனதிற்குள் படித்துப் பார்த்தேன். விசேஷமாகவே இருந்தது.
*
அடுத்த வீதியில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குப்போய் கண்ணோட்டமிட்டபடி மேய்ந்தேன். சின்ன அளவில் ஏதேனும் நல்ல புத்தகம் போதும். பிரியமான எழுத்தாளரின் சமீபகால வெளியீடு ஏதேனும் கிட்டினால்.... பாக்கியம். உள்ளே வட்டம் அடித்து விட்டு உதட்டைப் பிதுக்கியபடி வாசல் அருகில் வந்தபோது, முகப்பில் தொங்கியது அந்த வாரத்து 'தி வீக் எண்ட்!' அட்டையில் நீ! உன் கட்டுரை உள்ளே தொடங்கியிருப்பதற்கான குறிப்பும், உன் சிரித்த முகமும்! சந்தோசத்திற்கு அளவே இல்லை. உன்னை அப்படியே உருவி மார்போடு அணைத்துக் கொண்டேன்.
*
தூங்கப்போவதற்கு முன் வழக்கமாக சாப்பிடும் தூக்க மாத்திரைகள் வீட்டில் இருக்கிறதா? அல்லது வாங்க வேண்டுமா? என்னை நான் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன். அந்தப் பாட்டிலில் முக்கால் அளவுக்கு மாத்திரைகள் இருப்பதான நினைவை உறுதி செய்துக் கொண்டேன். எல்லாம் சின்னச் சின்ன மாத்திரைகள். தினமும் ஒரு மாத்திரை. நன்றாகத் தூக்கம் வரும். முக்கால் பாட்டில் மாத்திரைகளையும் ஒரு உள்ளங்கையில் தேக்கிவிடலாம். துவர்ப்போ கசப்போ தெரியாத ஸ்வீட் மினி சாக்லெட்! உட்கொள்ள விரும்பும் வாசம் வேறு! இன்றைக்கு ஒன்று என்பதற்கு பதிலாக எல்லாம். இன்னும் நன்றாகத் தூக்கம் வரும். நீண்ட நெடியத் தூக்கம்! இந்தப் பிரபஞ்சம் உள்ளளவும் நீளும் தூக்கம்! ஆனால்....! திட்டமிட்டிருந்த என் பயணத்திற்கு பெரிதாக எதுவும் காரணமில்லை, போதும் என்கிற எண்ணம்தான். என்ன ஆனது இப்போ... இரவு வெகு நேரமாகியும் உன் கட்டுரையையே திரும்பத் திரும்ப வாசித்துக் கொண் டும், நீ உயிர் தப்பிய நிமிடங்களை நினைத்து நினைத்து அதிர்ந்துக் கொண்டும், உணர்ச்சிமய மான உன் ஆங்கில நடையில் கிறங்கிக் கொண்டும்... வழக்கமான தூக்கமும் கெட்டதுதான் மிச்சம்.
*
அட்டவணைப்படி என் பயணம் இரண்டாம் கட்டத்தை அடைந்திருக்க வேண்டும். எப்பவும் மாதிரி தூங்கி யிருந்தால் கூட மூன்றாம் ஜாமம் ஆகியிருக்கும். இப்பொழுது என் நினைவெல்லாம் உனது அடுத்தவார கட்டுரையைப் பற்றித் தான். எப்பொழுது வரும் அந்த அடுத்த வாரம்?
*
டவுனில் இருந்து பஸ் பிடித்து இருப்பிடம் திரும்பிய சில நிமிடங்களுக்கெல்லாம்... என் புனித இரவு கலையத் துவங்கி விட்டது. நான் விரும்பிப் படிக்க நினைத்த எழுத்து உன்னுடையதாக அமைந்து விட்டதில்தான்... எத்தனை மகிழ்ச்சி! எனது பயணத்தைக் கேள்விப்பட்ட மாதிரி, திடுமென நீ, இப்பொழுது என் வட்டத்திற்குள் வந்து, இப்படி என் கையில் கட்டுரையாக அமர்ந்திருப்பது நான் எதிர்பாராத ஒன்று! 'தி வீக் எண்ட்' இதழைப் பிரித்து உனது 'Third face of Tamil Ladies' கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தேன்.
*
தமிழீழத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் ராணுவ அத்துமீறல்களையும், அதன் அரசியல் பின்னணியையும் விவரித்துவிட்டு, தமிழீ ழத்து மக்களின் கனவுகள் சரியா? தவறா? என்பதை காலம்தான் கூறும் என்கிற உனது அபிப்ராயத்தையும் எழுதி இருக்கிறாய். தமிழ்ப் போராளி களில் ஓர் அங்கமான பெண் போராளிகளின் போர் முனை மோதல்களை, அவர்களது வெற்றி களை, உயிர்த்தி யாகங்களை, வல்லிய மனோதிடத்தை போற்றும் முகமாக அறிமுகக் குறிப்பு களைத் தந்துவிட்டு, அவர்களின் விசேசமான மூன் றாவது முகத்தை ஆய்வு செய்வது தான் உன் கட்டுரையின் நோக்கம் என்றும், 'உலகப் பெண்கள்' என்கிற நோக்கிலும், 'பெண்ணியத்தை போற்றும்' பாங்கிலும் இப்படி பல சவாலான பேட்டிகளை எடுத்துத் தொகுத்து வழங்கி வரும் பத்திரிக்கையாளியான என்னிடம் 'உலக மகளிர் அமைப்புகள்' பலவும் கேட்டுக் கொண்டதற்கி ணங்க இப்பணியை மேற்கொண்டேன் என்றிருக்கிறாய்! சத்தியத்தில் மிகப் பெரிய பணிதான் இது.
*
இந்தக் கட்டுரைக்காக, கடந்த ஒரு வருட காலமும் ஆயத்தப் பணிகள் செய்ய வேண்டியிருந்த தையும், இந்தப் பயணம் சென்று திரும்பும்வரை பிற யாரிடமும் அது குறித்து சொல்லாது; உற்றத் தோழியிடம் கூட இந்த செய்தியை பகிர்ந்து கொள்ள முடியாதது, அதையொட்டிய மன உளைச்சல் என்று அத்தனையையும் அந்த அறிமுகக் குறிப்பில் தெளிவு படுத்தியிருக்கிறாய். நீ சுட்டி இருக்கும் அந்த 'உற்ற தோழி' அநேகமாக நானாக இருக்கலாம். என் யூகம் சரியாக இருக் கும் பட்சம்.., என்னை அதிகத்திற்கு விசேஷப் படுத்தி இருக்கிறாய்!
*
கட்டுரையின் மணிச் சித்திரத் தாழைத் திறக்கிறாய். இந்தியாவை விட்டு யாழ் தீபகற்பத்திற்கு எங்கிருந்து எந்த வழியாகப் புறப் பட்டாய் என்பதைக் கூறாமல், ஓர் அமாவாசை இருளில், நான்கு இஞ்ஜின்கள் பூட்டப்பட்ட 'ஃபைபர்' படகில் கடலைக் கிழித்துக் கொண்டு சென்றதையும், தமிழீழத்தை நெருங்கும் தறுவாயில் போராளிகளின் படகுகள் சில உன்னை பாதுகாப்பாக எதிர்கொண்டு அழைத்துச் சென்றதையும் திகில்கூடிய யதார்த்தத்தில் எழுதியிருக்கிறாய். தூர த்தே ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒரு பெரிய படகில் இருந்து 'செல்'கள் எங்களை நோக்கி பாய்ந்து வந்தபடி கடலில் விழுந்து கொண்டே இருந்தது என் நீ எழுதிக் கொண்டே போகும்போது நான் இங்கே மூச்சற்றுப் போனேன்.
*
போராளிப் பெண் ஒருத்தி சக்திமிக்க குண்டுகளுடன் கடலில் குதித்தவுடன், ஏதோ விபரீதம் நடக்கப் போவதாக நீ பதட்டப் பட் டுக் கொண்டிருக்கையில் அந்தப் பெரிய ராணுவப்படகு, பயங்கரமான வெடிச் சப்தத்துடன் விண்ணுக்குத் தாவி நெருப்புக் கோளமாய் கடல் பரப்பில் விழுவதைக் கண்டு, நீ உறைந்துபோனதாக எழுதியிருக்கிறாய். நீ ரொம்பவும் தைரியசாலி. தெரியுமெனக்கு. அதனால்தான் உறைந்ததோடு நிறுத்திக் கொண்டாய்! உன்னிடத்தில் நானாக இருக்கும் பட்சம்... அந்த அதிர்ச்சியில் இரண்டு தரம் இறந்திருப்பேன். கட்டுரை தொடரும்...... என்று போட்டுவிட்டார்கள். தமிழ்ப் பெண்களின் மூன்றாவது முகத்தைக் காண முயன்ற உன் கட்டுரையில்.... வெளிப்பட்டிருக்கும் உன்னுடைய மூன்றாவது முகமும் சாதாரணது அல்ல!
*
படித்த வரை.... சம்திங் டிஃபரண்ட் ...
*
நன்றி... மா..
*
மீதத்தை நாளைக்கு வந்து படிச்சு, குறிப்பெடுத்துக்கிறேனே...
*
வெரி குட்! எனக்கும் கூட கொஞ்சம் வேலை இருக்கு....
*
படிச்சதுலே, பக்கங்கள் ஒண்ணு ரெண்டு மாறியிருக்கிறதா... தோணுது.
*
இருக்கும்! பரவாயில்லை! எல்லாமும் என் எழுத்துகள்தானே.... அடிப்படையில் வாசகர்கள் எழுத்தை படிக்கிறவங்கதானே!
*
இந்த கதைக்கு என்ன பெயர்?
*
என்ன பெயர் வைக்கலாம் என்று நீயே சொல்.
*
'தமிழ்ப் பெண்களின் மூன்றாவது முகம்!' என்கிற பெயரையே வைத்துவிடலாமே சார்.
*
வைக்கலாம்... அதற்கு அனுவின் பர்மிஷன் வேண்டுமே...
*
ஓ.... சம்திங் ரைட்... இதை எழுதி எத்தனை வருஷம் ஆச்சுன்னு சொன்னீங்க?
*
பத்து வருஷம்.
*
இப்போ 2007, பத்து வருஷம் போச்சுன்னா.. 1997.., 'பெண்கள் 1997'
என்னவோ மாதிரி இருக்கே...
*
'பெண்கள்!'
*
ம்... 'பெண்கள்!'.... வெரி குட்!
*
என்.வி.சார்..., ஒரு ரிக்கொஸ்ட்.... 'நவீன பதுமைகள்' வேறு காப்பி ஏதேனும் இருந்தா தேடிப் பாருங்களேன்.
*
நம்புங்க... குழலி... நோ மோர்.
****************

Thursday, April 24, 2008

தாஜ் கவிதைகள் - 28


இ ந் தி ய க் கூ லி யி ன் அ ரே பி ய க் கா ல ம்.
---------------------------------------------------------------------------------
- தாஜ்

சூறாவளியின்
அடாத வீச்சில்
நேர்வழிகளின் தடயங்கள்
மறைந்தொழிந்தன
நடுவழியில் இப்படி
சிக்கிக் கொள்வோமென
கணித்தோமில்லை
மணலில் கால்கள் புதைய
தொடரவோ திரும்பவோ
திசைகளற்றுப் போகலாம்.


நவீன யுகத்தின்
கருப்பு மச்சத்தில்
பாசிஸத்தின் கொடி உயர
சமாதானப்
பறவைகளுக்கெல்லாம்
யுத்த இறக்கைகள்.


வியக்கும் நேரமில்லையிது
காற்றில் செய்திகளும்
புழுதிகளும் விஞ்சின
சுவாசம் இப்பவே திணறுகிறது
தலைக்கு மேலே
பாலைவனச் சூறாவளி
விடாது
பேரிரைச்சல் செய்கிறது.
--------------------------------------

குறிப்பு:
# வளைகுடாப் போரில் (1990 - 91 ) ஈராக்கை எதிர்கொண்ட ஐக்கிய நாட்டுப் படைகளின் போர் ஆயத்த முறைக்கு 'பாலைவனச் சூறாவளி ' (Desert Storm) என்று பெயர்.

# போர் தொடங்கி, அச்சம் சூழ்ந்த முதல் வாரத்தில்; செளதி அரேபியாவின் தலைநகரான ரியாத்-ல் இருந்து நேரடி அனுபவம் கூடிய நிலையில் எழுதியது.

***
நன்றி:
சொல்புதிது / ஆகஸ்ட்-டிசம்பர் 1999
----------------------------------------------------

Tuesday, April 22, 2008

தாஜ் கவிதைகள் - 27



யுத்த நெடி.
----------------
- தாஜ்


இந்தியப் பசுக்கள்
பாலைவனத்தில் பொதி சுமப்பதை
வளைகுடாவில் பார்க்கலாம்
புஷ்டிப் புண்ணாக்கின் கனவில்
ஒட்டகங்களுக்குச் சமமாய்
ஒன்றி நடக்கிறது
சொந்த மண்ணின் பசுமையைத்
தொலைத்தது போக
திரிந்த காலத்திற்கும் சோதனை.

வல்லரசுகளின்
இயந்திரப் பறவைகள்
பூமி அதிரும்படி
தலைக்கு மேலே
சமாதானம் தேடுகிறது
நவீன ஹிட்லரோ
அமில வாயுவை
மூச்சாகக் கருதுகிறான்.

சூழல் கறுத்து
நெடி வீசத் தொடங்கி விட்டது
எந்நேரமும்
அணு மழை பெய்யலாம்
அலைகழிப்பில் ஆடும்
பேரீச்சை மரங்கள்
தன் அந்திம காலத்திற்கு
நேரம் குறிக்க
தப்ப முடியாத ஒட்டங்கங்கள்
பசுக்களைப் பார்க்கின்றன
ஓட முடியாத பசுக்கள்
ஒட்டகங்களைப் பார்க்கின்றன.
-----------------------------------------
- கணையாழி / நவம்பர் 1990

தகவல் குறிப்புகள்:

# வளைகுடாப் போர் (1990 - 91 ) துவங்குமுன் ஐக்கிய நாடுகளின் சபை, ஈராக்கை எச்சரித்து/ அதிபர் சதாம் ஹூஸைனை சமாதானத்திற்கு முன்வர வற்புறுத்திம் நூறு நாட்கள் கெடு வைத்தது.

# என்றாலும், வளைகுடா பிராந்தியத்தில் ஐக்கிய நாட்டுச் சபையைச் சார்ந்த இருபத்தி நான்கு உறுப்பு நாடுகள் போர் முஸ்தீபுடன் வலம் வரவே செய்தது.

# செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்-ல் இருந்து, நேரடி அனுபவம் பெற்ற நிலையில் எழுதியது.
- தாஜ்

**********

Saturday, April 19, 2008

தாஜ் கவிதைகள் - 26


தந்தையின் காலம்.
------------------------------
- தாஜ்
*
என் பிள்ளைகள்
படிக்கிறார்கள்
சுமக்க இயலா
சுமக்கவே படிக்கிறார்கள்.
*
வீட்டில் யென்
அசைவுகளிலும்
பார்வை அகலா
சிரத்தையோடே
படிக்கிறார்கள்.
*
மண்ணில் பாதம்
பதியும் இதம் வேண்டி
காலணிகளை
விட்டுச் செல்ல
படிப்பால்
தெளிகிறார்கள்.
*
குறுக்கீடுத் தவிர்க்க
சப்தமற
காலடிகளை அளந்து
பாதை ஒற்றியே
நடக்க வேண்டியிருக்கிறது.
*
என் உடுப்புகளில்
கறைபட்ட எச்சங்கள்
இன்னும் அவர்களுக்குப்
புலப்படாதது ஆச்சரியம்.
*
அவர்களது புத்தகக்
குவியலுக்குப் பக்கத்தில்
நான் நகலெடுத்த
என் கவிதைப் பக்கங்கள்
விரிந்து கிடக்கிறது
இன்னொரு படிப்பாக.
*
காலம் காலமாக
எல்லோரும்
கவிதைகளை
விரும்புவதில்லை
சந்தோஷமாக இருக்கிறது.
******

Monday, April 14, 2008

தாஜ் / சிறுகதை - 3



கை நழுவிய உலகம்.
-------------------------------
- தாஜ்


'பைத்தியக்காரர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் அதிகத்திற்கு அதிகமாக சிரிப்பார்கள், கத்துவார்கள், புலம்பு வார்கள், தனக்குத்தானே பேசுவார்கள், அடிக்கவரும் பாவனை செய்வார்கள், சில நேரம் கையில் கிடைப்பதைக் கொண்டு அடிக் கவும் செய்வார்கள். நாமும் சில பல நேரங்களில் இத்தனையும் செய்பவர்களாகவே இருக்கிறோம்! இதில் என்ன பெரிய வித்தியா சம் என்றால், நாம் செய்யும் அத்தனை அதீதத்துக்கும் காரணம் காரியம் சொல்லிவிடுவோம். சிரிப்பதற்கு ஒரு காரணம், அழுவ தற்கு ஒரு காரணம், பொண்டாட்டியிடம் பணிந்து போவதற்கும் கூட ஒரு காரணம் என்று! தனித்தனியே நமக்கு 'ஒடுக்கத்தியக்' காரணங்கள் பல இருந்துக் கொண்டே இருக்கும். பைத்தியமானவர்களிடம் அது சாத்தியமில்லை. தங்களது எந்த ஒரு செய்கை க்கும் அவர்களால் விளக்கம் சொல்லத் தெரியாது!' - இது என்னுடைய நோக்கின் கண்டெடுப்பல்ல; பிரபல எழுத்தாளர் ஒருவரின் கட்டுரையில் எப்பவோ படித்திருந்த ஞாபகத்தின் பதிவு. அதை அப்படியே பதிந்திருக்கிறேன். அட்சர சுத்தமாக பதிந்திருக்கி றேன் என்றும் சொல்லிவிட முடியாது. அவர் எழுதியிருந்ததின் சாரம் நிச்சயம் இந்த வரிகளில் உண்டு.

என் ஞாபகம் இப்பவெல்லாம் அத்தனை பலமானதாக இல்லை. எல்லாவற்றையும் மறந்து தொலைத்து விடுகிறேன். வலிய அதைநினைவுக்கு இழுத்து வரும்போதெல்லாம் அதன் அடுக்குகள் கலைந்து போகின்றன. யோசிக்க யோசிக்க இதற்கு காரணங்கள் என்று எதுவும் பிடிபடவில்லை. சிலர் சொல்கிறமாதிரி தலைக்கு 'டை' அடிப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது நான் பயணிக்கும் கரடு முரடான பாதைகளில் பல தடவைகள் தடுக்கி விழுகிறேன். அது தரும் சிராய்ப்புகளின் வலி அதிகம். அதைப் பொறுத்துக் கொள்கிறபோது எழும் மன அழுத்தம் இப்படிப் பாதிக்கும் என்கிறார்கள்! தவிர, அந்தப் பாதையில் ஓரிரு முறை குப்புற விழ நேர்ந்ததில் நெத்திப் பொட்டில் அடி! சித்தம் பேதலிக்கிற அளவுக்கு! இதெல்லாம்கூட காரணமாக இருந்திருக்கலாமோ என்னவோ! ஞாபக மறதியைத் தொடர்ந்து, இப்பொழுது என் செயல்பாட்டில் சரளமாக அதீதங்கள் தெரிவதாகச் சொல்கி றார்கள்."இரவில் படித்துக் கொண்டிருந்தபோது ஏன் அப்படி சிரித்தீர்கள்? தூங்கும்போது யாரிடம் பேசுகிறீர்கள்?" என்று மனைவியோ, மகளோ கேட்டால் பதில் சொல்லத் தெரிவதில்லை.

புத்தகங்களை படிக்கும்போது சில நேரம் வாய்விட்டு சிரிப்பது உண்டுதான். என்னடா இப்படியெல்லாம் எழுதுகிறார்களே என்ப தற்காக அல்ல! அதற்காகவெல்லாம் சிரிக்கனும் என்றால் முடிகிற காரியமில்லை! தேர்ந்த படைப்பாளிகளின் வித்தைக் கொண்ட வார்த்தைகள், வாசிப்பின் ஆழத்தில் எங்கெங்கோ குத்தி வெடிக்கும்போது கிளைக்கும் சிரிப்பு அது. இந்த விளக்கத்தை மனை வியிடமோ மகளிடமோ இப்படிச் சொல்ல முடியுமா? இப்பவே என் மீது ஒரு மாதிரி யோசனையில் இருக்கிறார்கள். தூக்கத்தில் யாருடன் என்ன பேசினேன் என்று தெரியவில்லை. நல்ல பகல் பொழுதில் சந்திப்பவர்களிடம் பேசும் எல்லாமும் மறந்து போகும் நிலையில் இதற்கெல்லாம் கவலைப்பட முடியாது.

யாசிக்க வருகிற முஸாஃபர்களிடம் யாசகம் இடும் வேளையில், மனித நேயத்தோடு இரண்டு வார்த்தைகள் பேசுவது உண்டு. இது எனக்கு ரொம்பகாலப் பழக்கம். இப்பொழுது அப்படி அவர்களிடம் பேசுவதும்கூட என் மனைவிக்கு தப்பாகப் போகிறது. நேற்று ஒரு பெண் முஸாஃபரிடம், "இரவுகளில் அங்கே இங்கே படுத்துக்கிடக்கிறீங்களே... இப்பொழுது குளிர் காலமாச்சே எப்படி சமாளிக்கிறீங்க?" என்று கேட்டேன். அவள் கிலுக்கென்று சிரித்து வெட்கம் சிந்திப் போய்விட்டாள். இத்தனைக்கும் அவளுக்கு நாற்பது வயதுக்கு மேல் இருக்கும். இதை கவனித்து விட்ட மனைவி, "நீங்க என்ன கேட்கிறீங்க..., அவள் என்ன செய்துட்டுப் போறா பார்த்தீங்களா? கதவைத் திறந்தோமா.. காசு போட்டோமான்னு இல்லாமே என்ன வேண்டிக்கிடக்கு அவள்டலாம் பேச்சு!" என்றவள் கொஞ்சம் தள்ளிப் போய், "இந்த மனுஷனுக்கு பைத்தியம் புடுச்சிடுச்சுப் போலிருக்கு!"என்று முனங்கினாள்.

நான் எங்கே போய் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு தெளிவாகவே தெரிந்தது. என் மனைவி ஒன்றை உறுதி செய்து விட்டால்நிச்சயம் அதை சாதிக்காமல் விடமாட்டாள். வாழ்வின் நகர்வுகள் நேர்த்தியாக இயங்குவதாகவே பட்டது. யாருக்கும் பதில் சொல் லத் தேவையில்லாத உச்சம் கிட்டப்போகிறது! சுதந்திரப் பறவை மாதிரி வலம் வர இன்னொரு உலகத்திற்கு விசா கிடைக்கப்போகிறது!

என் ஊரில் எனக்குத் தெரிந்து நான்கு பைத்தியங்கள் வீதிகளில் எப்பவும் ஆஜர். அது இல்லாமல், அவ்வப்போது மணிக்கூண் டுப் பக்கம், பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கம் தென்படும் இப்படியான சிலர், ஓரிரு நாட்களுக்குப் பின் தென்பட மாட்டார்கள். பின் னர் எப்பவாவது அவர்களை அந்த அழகில் அந்த இடங்களிலேயே பார்ப்பதும் உண்டு.

நல்ல உடுப்பில் அவர்களைப் பார்க்க லெட்சணமாகவும், செய்கைகளில் மிடுக்கும் இருக்கும். பெரும்பாலும் உயர் தர வகைச் சேட்டைகளைத்தான் செய்வார்கள்.ரோட்டில் கூட்டத்தை சரி செய்வது, டிராஃபிக் நெரிசலில் பஸ்களுக்கு வழியேற்படுத்திக் கொடு ப்பது, சாலை சந்தில் நின்று, கைகளை நீட்டியும் மடக்கியும், வலது புறமாக அனுமதி தந்து, பின்னர் இடது புறத்திகு அனுமதியை மாற்றி.... தேர்ந்த ட்டிராஃபிக் கான்ஸ்டபிளை விட நேர்த்தியாக செயல் படுவது. பெரிய கடைகளின் பிளாட்ஃபாரத்தை பெருக் கித்தருவது என்பதாக இருக்கும். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? எங்கு மறைந்து போகிறார்கள் என்பதெல்லாம் பிடிபடாத புதிராகவே இருந்தது. நண்பன் ஒருவனைக் கேட்டேன், "இவர்கள் குறித்து உனக்குத் தெரியுமா?"

அவன் தெளிவாகவே சென்னான்... "அவர்கள் எல்லாம் நம்ம ஊரில் உள்ள பெரிய பெரிய வீட்டுக்காரர்களின் பிள்ளைகள், அல் லது பிள்ளைகளின் அப்பா, சித்தப்பா, பெரியப்பா.. ஏன்.... அந்த வீட்டு தலைவனாக கூட இருக்கும்! வீட்டில் அடைக்கப் பட்ட திலிருந்து சில நேரம் காவலை மீறி இப்படி வீதிக்கு வந்து தங்களது சுதந்திர வேட்கையைத் தீர்த்துக் கொள்பவர்கள். திரும்பவும் வீட்டு நபர்களால் வீட்டுக் காவலுக்கே வலுக்கட்டாயமாக கொண்டு சொல்லப்பட்டு விடுவதால் அவர்களை தொடர்ந்து பார்க்க முடிவதில்லை!" என்றான். ஒருவனுக்கு முத்திரை குத்திவிட்டால், விட்டு விட வேண்டும். அப்புறம் என்ன குடும்ப கௌரவம்...? வீட்டுக்காவல்...? இப்படி மீறி வந்து விட்டப் பிறகு தன்னை யாரும் குடும்ப கௌரவம் சொல்லி திரும்ப வீட்டுச் சிறை வைக்க சம்மதிக்கக் கூடாது என்ற எண்ணம் உறுதிப்பட்டது.

ஊரில் வழக்கமாகத் தென்படும் அந்த அங்கீகரிக்கப்பட்ட நால்வருக்கும் என்னை நன்கு தெரியும். அதில் இரண்டுபேர் எங்க வட் டத்தைச் சேர்ந்தவர்கள். என்னை பெயர் சொல்லி அழைப்பவர்கள். அதில் ஒருவன் முஸ்லீம். பெயர் அய்யூபு! தெக்னி. உருது அவனது தாய் பாஷை. தமிழ் அவனுக்கு சரளமாக வரும். தமிழ் மட்டுமல்லது இன்னும் இரண்டு பாஷைகள் அதே சரளம்! பள்ளிக்கூடத்தில் எனக்கு சீனியர். அங்கே அவனை தள்ளி நின்றுதான் பார்க்க முடியும். எப்பவும் அவனுடன் பல்வேறு தினுசான மாணவர்கள்! அவனது பருவக்காலத்து விசேச கூறுகளை தெரிந்தவர்கள் சொன்னால், கேட்பவர்கள் இன்றைக்கு நம்பமாட்டார்கள்.

மாவட்ட அளவில் மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன். அப்பொழுது அவன் ஆடாத ஆட்டமில்லை. இன்னும் வேகத்தாண்டுதல், உய ரத்தாண்டுதல், அம்பு வீசுதல், ஓடுதல் என்ற விளையாட்டு களிலும் கெட்டி அவன். அவனது வேறோரு விளையாட்டாக, ஜாதி வித்தியாசம் பாராது சமத்துவமாக எல்லாப் பிரிவிலிருந்தும் இரண்டுக்கு மேற்பட்ட காதலிகளை வட்டமிட வைத்திருந்தான்! அவர் களும் அவனை மொய்த்தார்கள். அவர்களின் பிடி தளர்ந்து போகாத வகையில் மந்திரமாய் சில காந்த வித்தைகளையும் வைத் திருந்தான். அதிலொன்று இசை! எல்லா தரப்புகளிலிருந்தும் அங்கீகரிக்கப்பட்ட குரல். அவன் அன்றைக்குப்பாடி, அரங்கம் அதிர கைத்தட்டலைப் பெற்ற இந்துஸ்தானியையும், கவாலி, கஸலையும் வித்தியாசப் படுத்திப் புரிந்துக் கொள்ளவே எனக்கு அதன் பிறகு இருபது வருடங்கள் பிடித்தது.

பள்ளிப்பருவத்திலேயே அவன் எல்லா இசைக்கருவிகளையும் வாசிப்பான். பிரமாதமாக இசையும் அமைப்பான். வசீகரம் கொஞ்ச மிடுக்காய் பேசுவான், நடப்பான். லாவகமாக சிகரெட் பிடிப்பான், அவ்வப்போது பிரமாதமாகப் பொய் சொல்வான். அலங்கார மாக நெய்யப்பட்ட ஆடையாக அது இருக்கும். குடும்பத்தில் வறுமை அவனை சக்கையாய்பிழிந்து நாறாக காயப் போடுகிற போ தெல்லாம் அதைத்தான் அணிவான். எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளும்படி அத்தனை கச்சிதமாக அவனுக்கு அதுப் பொருந்திப்போகும்.

இப்பக்கூட, இந்த விடியற் காலை குளிரில் அவனைப் பார்த்துவிட்டுதான் வருகிறேன். பள்ளிவாசல் பக்கமுள்ள வேப்பமரத்தடி டீக்கடையின் வாசலில் நின்றான். சாவகாசமான நேரத்தில் அவனை எங்கே பார்த்தாலும் "மிஸ்டர் அய்யூப்" என்று அழைத்து பேச தவற மாட்டேன். அவன் பேசும்போது பேச்சு கோர்வையாக இருக்காது. விட்டு விட்டு துண்டு துண்டாக வரும். நான் ஒன்று பேச அவன் ஒன்று பேசுவான். சிலநேரம் சரியான பதிலும் வருவதுண்டு. அவனை சந்திக்கும் நேரங்களில் கட்டாயம் அவனோடு டீயும் சிகரெட்டும் பகிர்ந்து கொள்வேன். பலவற்றை மறந்தவனாக காணப்பட்டாலும், எந்த முத்திரை குத்தப்பட்டு அவன் சீர்குலைந்திரு ந்தாலும் சிகரெட் புகைப்பதில் மட்டும் இப்பவும் அவனிடம் அதே ஆதி முத்திரை. கொஞ்சமும் மாறாத லாவகம்! இன்றைக்கு அவன் ஆடை வழக்கத்தைவிட மிகமிக அழுக்காக இருந்தது. முகச்சுழிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு. இவன் உலகத்தில் பிரவே சிக்க அனுமதி கிடைக்கும் பட்சம் இத்தனை அழுக்காக உடுத்தக் கூடாது, உடுத்திக் கொள்ளவும் மாட்டேன். இவனை மாதிரி ஒரே இடத்தில் நிற்கவும் மாட்டேன். விட்டை விட்டால்.. எத்தனை ஊர் சுற்றினோம் என்கிற கணக்கு எகிற வேண்டும்.

அய்யூபும் நானும் பேசிக்கொண்டிருந்ததை யாரோ பார்த்துப் போய் வீட்டில் என் மனைவியிடம் அவசியமாக சொல்லி இருக்கிறா ர்கள். "பள்ளிவாசல் கிட்டே நின்னுகிட்டு பைத்தியத்திட்டெ யெல்லாம் பேசிகிட்டு இருக்கிங்களாமுள்ள?" என்று அவள் கேட்கவும், சற்று நேரம் இவள் யாரை குறிப்பிட்டு கேட்கிறாள் என்று புரியாத குழப்பம்பினேன்! அங்கே நின்று நிறைய பேர்களிடம் நான் பேசுவது வழக்கம். தொழப் போகிறவர்கள் வருகிறவர்கள், ஊர் ஹஜ்ரத், பஞ்சாயத்துக்காரர்கள் என்று! இன்றைக்குப் பார்த்து எங்க பக்கத்து கட்சிக்காரப் புள்ளி ஒருவனிடமும் பேசிவிட்டு வந்திருந்தேன். போன பொதுதேர்தலுக்கு இந்தத் தொகுதிக்காக அவனது கட்சியில் சீட் கேட்டவர்களில் அவனும் ஒருவன். தனக்கு சீட் கிடைத்து, தனது கட்சியும் ஜெயித்து ஆட்சியைப் பிடிக்கு மென்றால், இஸ்லாமியர்கள் என்கிற அடிப்படை கோட்டாவில் தனக்கு மந்திரி பதவி நிச்சயம் என்று பேசித்திரிந்தவன் அவன்.

அய்யூபுவைப் பற்றி அவள் அந்த நேரத்தில் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. என்னை அவள் முறைக்கவும், ஞாபகம் வந்த வனாக 'யாரு.. அய்யூபிடம் பேசியதை கேட்கிறாயா' என்றேன். "உங்களுக்கு என்ன செய்யுறோம், ஏது செய்யுறோம்... என்பது தோனுறதே இல்லை! நீங்க பைத்தியத்துக்கிட்டே இப்படி பேசிகிட்டு நிக்கிறத நாலுபேர் பார்த்தா என்ன நினைப்பாங்கன்னு உங் களுக்கு 'ஒன்ன்ன்னும்' நிஜமாகவே ஒன்னும் தோனல. வர வர 'இது' இப்படியா ஆகனும்!" என்று சலித்துக் கொண்டாள். அவள் 'இது' என்றது என்னைத்தான். சமயத்தில் 'அது' என்று தன்மையாகவும் குறிப்பிடுவாள். பழகிப்போச்சு.

இதற்குப்போய் இவள் ஏன் இப்படி அநியாயத்திற்கு சலித்துக் கொள்கிறாள் என்று தோன்றியது. எத்தனையோ பேர்களிடம் பேசு கிறவது மாதிரிதானே அவனிடமும் பேசுகிறேன்! சரியாகச் சொன்னாள் அவனிடம் பேசுவது எனக்கு உகந்ததாகத்தான் இருக்கி றது. அவன் திருடுவது கிடையாது. சூது, வாது, பித்தலாட்டம் கிடையாது. லஞ்சப் பேர்வழியுமில்லை. ரசிகர் மன்றத்துக்காரனு மல்ல. எந்த அரசியல் கட்சிகளிலும் அவன் உறுப்பினனோ அனுதாபியோ கூட இல்லை. குறிப்பாய் மதங்களிலிருந்தும் அவன் விலக்கு பெற்றவனாகவேறு இருக்கிறான். இந்த அளவில் அன்னியமாகிப் இருப்பவனிடம் பேசியதை இவள் இத்தனைக்கு பெரிது படுத்தக் கூடாது. நாளைக்கு என்னிடம் யாரும் பேச வேண்டாமா? முத்திரை குத்துவதென்று முடிவு செய்த பிறகு அதைச் செய்ய வேண்டியதுதானே. அதற்காக இவள் ஏன் இவ்வளவு அழிச்சாட்டியம் செய்யவேண்டும்!

போன மாதம் இப்படிதான், குறுக்குத்தெரு மேட்டு வீட்டு ரஹமத்துல்லா என்னைப் பார்க்க வந்திருந்தான். சௌதியில் இருந்து அவன் எப்ப ஊர் வந்தாலும் என்னைப் பார்க்க வருவான். இப்பவும் அப்படித்தான் வந்து பார்த்துவிட்டுப் போனான். என்னை விட இளையவன். மத விசயங்களில் கெட்டி. நிறைய ஓதிக் கற்றவன். ஓர் இஸ்லாமியன் நெறி தவறாமல் எப்படி நடக்க வேண் டும் என்று குரான் ஹதீஸ் அடிப்படையில் அவன் பேசத் துவங்கினால் கேட்பவர்கள் சுயத்தின் குற்ற உணர்வால் பிரமைப் பிடித் தவர்கள் மாதிரி ஆகிவிடுவார்கள். அவன் காதலித்த அவனது பக்கத்து வீட்டு கமர்னிஸாவை பெரிய போராட்டத்திற்கு இடையில் அவனுக்கு திருமணம் செய்து வைத்ததில் என் மேல் மிகுந்த மரியாதை.

அவன் வீட்டுக்கு வந்து பேசி விட்டுப்போன பிறகு இவ சப்தம் போட்டாள். "அந்த மனுஷன் திண்ணையில் உட்கார்ந்து உங்க கிட்ட பேசுற பேச்சை, கூடத்தில் உட்கார்ந்து கேட்கிறப்போவே எனக்கு மண்டைவலி வருது. உங்களுக்கு ஒன்னுமே வரலையா? அந்த ஆளு பைத்தியமா இருந்தவருன்னு உங்களுக்கே நல்லா தெரியும்! ஏன் அவர்கிட்டே அத்தனை மணி நேரம் பேசிகிட்டு இருக்கிங்க?" அவனோடு பேசிக்கிட்டு இருந்ததை சுட்டி அவள் திட்டுவதில் கொஞ்சத்திற்கு கூடுதலாக நியாயம் இருப்பதாகவே பட்டது.

இப்பொழுதெல்லாம் என்னாலும் அவன் பேசுவதை பத்து நிமிடம் கூட கேட்க முடிவதில்லை தான். மங்காவில் பேச்சை ஆரம்பித் தான் என்றால்... தேங்கா, பனங்கா, புளியங்கா, கொய்யாக்கா என்று புலம்பிக் கொட்டி சரியாய் மாங்காயில் வந்தே முடிப்பான். அத்தனைக் காய்களையும் மாங்காயாகவே பாவித்துப் பேசியதை அவன் உணரமாட்டான். ஐந்து வருடங்களுக்கு முன் அவன் ஏதேதோ புலம்புவதாகவும், அதை வாயால் சொல்வதுகூட பாவம் என்றும் எங்களில் சிலர் பேசிக் கொண்டார்கள். நான் போய் அவனைப் பார்த்தபோது, தூய வெள்ளாடையில் இருந்தான். அவன் இருந்த ரூமின் சன்னல் கதவுகளையெல்லாம் அடைத்து இருளாக வைத்தி ருந்தான். மூலையில் அளவுக்கு அதிகமாக வத்தி புகைந்துக் கொண்டிருந்தது.

அவனை பெயர் கூறி அழைத்தேன். "என்னை பெயர்கூறி அழைக்காதே!" என்றான். சற்றைய நாழிக்கெல்லாம் "நான் யார் தெரிகி றதா?" என்றான். எப்பவும் என்னை எதிர்கொண்டு அழைப் பவனின் இந்த பதில் கொஞ்சத்திற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவன் மனநிலை சரியில்லா மல் பேசுகிறானென்று சமாதானம் ஆனேன். பிற்பாடு அவன் கூறிய பிரமாண்ட வார்த்தைகளின் வாக் கியம் என்னை நிலைகுலைய வைத்தது. நிஜமாகவே அதிர்ந்துதான் போனேன். "நான்தான் அல்லா" என்று அவன் கூறுகையில் சக ஜமாகவா இருக்க முடியும்? அவன் மனைவியை அழைத்து...

என்ன செய்றதா உத்தேசம்?

புரியலண்ணே. ஏர்வாடிக்கு கொண்டுப் போகலாமுன்னு எங்க அம்மா சொல்றாங்க.

அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், முதலிலே இதற்குண்டான வைத்தியத்தியம் செய்ய தகுந்த டாக்டரைப் பாருங்க.

யாரு என்னான்னு தெரியாதெண்ணே.

பக்கத்து டவுனில் உள்ள நல்ல மனோதத்துவ டாக்டரின் முகவரியை எழுதிக் கொடுத்து, அவர் இருக்கும் இடத்திற்கு போகும் வழியையும் சொன்னேன். அந்தப் பெண்ணிடம் ஒரு தயக்கம் இருப்பது மாதிரிப்பட்டது.

ஏதாவது தயக்கமிருந்தா சொல்லும்மா.. பணம் காசு ஏற்பாடு செய்து தரனுமா?

இல்லண்ணே.... பணம் இருக்கு! இல்லெ... ஒரு சமயம் அவரு சொல்ற மாதிரி.....

என்ன சொல்ற மாதிரி....?

இல்லண்ண... அவரு.... நான் 'அல்லா'ங்கிறாரே... நிஜமா இருக்குமோ?

அவன் ஏதோ உளறுறான்னா.... நீ வேறே...! அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா.

ஒரு வாரத்திற்குள் குணமாகி வீடு திரும்பி விட்டிருந்தான். சந்தோசமாக இருந்தது. அவன் மனைவி வீட்டுக்கு வந்து அந்த டாக் டரின் 'ட்டிரீட்மெண்"டைப் பற்றிப் புகழ்ந்து சொன்னது. தொடர்ந்து ஐந்து நாள், காலையும் மாலையும் 'சேக்' தந்ததில் அவன் சரி யாகி விட்டதாக விவரித்தது மகிழ்ந்தது. அவனை நான், போய் பார்த்து வந்தேன். அவன் குணமானதெல்லாம் சரி! ஆனால் முந் தைக்கு இப்பொழுது அதிகத்திற்கு அதிகம் உதறலாகப் பேசுவது மாதிரி தெரிந்தது. அநியாயத்திற்கு 'சேக்' தந்திருப்பார்க ளோ! போகப்போக சரியாகிவிடுமென்று சமாதானம் ஆனேன். அடுத்த ஆறு மாதத்திற்கெல்லாம் அவனை அவன் மனவி சௌதி க்கு ஏற்பாடுகள் செய்து பயணம் அனுப்பி வைத்து விட்டது. இப்பொழுது பிரமாதமாக சம்பாதிக்கவேறு செய்கிறன். இவனை மாதிரி ஆட்களை எந்த அரபு நாடும் வஞ்சிப்பதே இல்லை! இறையருள் அப்படி! வருடா வருடம் ஊர் வருகிற போதெல்லாம் என்னைப் பார்ப்பதை அவன் தவிர்ப்பது இல்லை. அவனது உளறலும் குறைந்தபாடில்லை. என் மனைவி அவன் குறித்து புலம்பி யது சரிதான். இவர்களின் இந்த உலகத்திற்கு இவன் ஒரு மோசமான உதாரணம். இவனை மாதிரி நான் இருக்கக் கூடாது. ஒன்னு அந்தப் பக்கம் இருக்கனும் அல்லது இந்தப் பக்கம் இருக்கனும்.

என்னைக் குறித்து மீண்டும் வீட்டில் புகார். ஒரு நல்ல புத்தகத்தையோ, நல்ல கதைகளையோ படிக்கமுடிவதில்லை. மனம் சரியில் லையே என்று நேற்று ஆபிதீனின் குறு நாவலான 'கடை'யை எடுத்து மறு வாசிப்பு செய்தேன். மனம் விட்டும் சிரித்தேன். இப்படி சில நேரம் தி.ஜானகி ராமனின் 'பத்து செட்டி', ஜெயமோகனின் 'மாடன் மோட்சம்', எஸ்.ராம கிருஷ்ணனின் 'உலகம் ஓர் பெரிய எழுத்து கதை! போன்றவற்றை தேர்வு செய்து மனம் விட்டுச் சிரித்து வைப்பதுண்டு. நேற்று, 'கடை' படித்து அப்படிச் சிரித்து தப்பாகிவிட்டது.

என்னைப் பார்க்க என் அம்மா, பழைய வீட்டில் இருந்து வந்திருந்தார்கள். இப்படி, எனது புதிய வீட்டிற்கு எப்பொழுதாவதுதான் 'நல்லது கெட்டது' என்கிற அளவில் பார்க்க வருவார்கள். அப்பப்ப வரவும் அவர்களால் முடிவதில்லை. வயதாகிவிட்டது. இறப்பு எந்நேரமும் வரும் என்கிற கணக்கில் தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு வெளியே நகர்வது கிடையாது.'மௌத்'என்றால் அது அங்கேதான் நடக்கனும் என்பது அம்மாவின் திண்ணம். இப்பொழுது வந்திருக்கிறார்கள். நல்லதுக்கா..? கெட்டதிற்காக..? தெரியாது.

என் அம்மாவை என் மனைவியும், மகளும் குசலம் விசாரித்தபடியே வரவேற்றார்கள். துப்பட்டியைக் கழட்டச் சொல்லி மகள்வாங்கி உதறி மடித்து வைத்தாள்.

எம் புள்ளெ எங்கே?

அறையிலதான் இருக்கு.

பேத்தியை இழுத்து முத்தம் தந்தவர்களாக, காலையிலே புள்ளெ போன் செய்யவும் என்னமோ ஏதோன்னு பதறிட்டேன். கையும் ஓடல காலும் ஓடல... என்ன செய்து அவனுக்கு? நம்ம குடும்பத்துக்கு அந்த மாதிரியெல்லாம் ஒன்னும் வராது. நம்ம யாருக்கு என்ன செஞ்சோம்? எனக்குத் தெரிச்சி நம்ம குடும்பத்திலயும் சரி, நம்ம சொந்தப்பந்ததுலேயும் சரி இப்படி யாருக் கும் வந்ததில்லம்மா! அல்லா ரசூல் வச்சி காப்பாத்தனும்.

ஒன்னுமில்ல மாமி, அது என்னமோ ராத்திரி சிரிச்சின்னு இவ பயந்துட்டா. அது எப்பவும் இப்படி தான் சிரிக்கும். அதுக்கோசறம் காலங்காத்தாலெ உங்களுக்கு போன் செஞ்சி சொல்லிருக்கா.

இப்படிதாம்மா.. ஒரு மாசமா அத்தா ராத்திரி ராத்திரி சிரிக்குது.

எங்க அம்மாவை என் மகளும் அம்மா என்றுதான் அழைப்பாள்! எல்லா கூத்தையும் அறையில் இருந்து கேட்டபடியும், கதவின் கொஞ்சம்போல திறப்பால்.... குறுக்காலத் தெரியும் சில காட்சிகளைப் பார்த்தபடியும் இருந்தேன்.

அவன் சும்மா சிரிச்சிருப்பாண்டி.

சும்மா... போமா.... ராத்திரில அப்படி சிரிக்கறதே கேட்கிறப்போ... எனக்கு என்ன பயமா இருக்குத்தெரியுமா!

நீ தூங்க வேண்டியதுதானே? நீயேன் முழிச்சிட்டி கெடக்கே?

அத்தாவுக்கு உடம்பு சரியில்லங்கிறப்போ எப்படி தூக்கம் வரும்?

முதலுலே இவளுக்கு ஓதிவிடனும்! புள்ளெ ரொம்ப பயந்திருக்கா. ஏண்டி.. அத்தா மேலே இவ்வளவு அக்கறையா இருக்கேயே 'குல் அவூதுல்ல மூனுதரமும், குல்ஹூவல்லாவுலே மூனுதரமும், ஓதித்துட்டுப் போயி அத்தா மேலே ஊதிவிட்டா என்ன? காத்துக்கருப்புன்னு ஒன்னும் அண்டாதுல்ல.

நல்லா..... ஓத விடுமே! போடி.... பைத்தியக்காரி...ங்கும்.

அப்படிதான் சொல்லுவான். நான் ஓதிவிடுறேன்னாலும் காட்டத்தான் மாட்டான். அதெ இதெ படிக்கிறான்ல.. அதான்.. தாந்தான்னு நிக்கிறான். ரப்புல் ஆலமீன் எப்பத்தான் அவனுக்கு நல்ல புத்திய கொடுக்கப் போறானோ!

ஆமாம்மா.. எப்பப்பாத்தாலும் எதையாவது படிச்சிகிட்டுதான் இருக்கு. இல்லாட்டி எழுதுது. கைவலிக்காது?

எங்க அம்மா மௌத்தாவுறத்துக்கு முன்னாடி இவனெப் பத்திதான் கவலைப் படுவாங்க. இப்படி எழுதிட்டு படிச்சிட்டே இருக்கா னே.... 'எங்கே கூத்தாடியா போயிடுவானோன்னு' என்கிட்ட எத்தனைத் தரம் கவலைப்பட்டிருக்காங்க! 'அறிவை அறிவு அறுதிடு ம்டா பாவான்னு' அவன் கிட்டேயும் தன்மையா எடுத்துச் சொல்லியிருக்காங்க கேட்டாத்தானே. நானும் எத்தனையோ தரம் சொல் லிட்டேன், இப்படி படிச்சிகிட்டே இருக்காதேடா மூளை கெட்டுடும்ன்னு. புள்ளையா பொறந்ததுங்க பெரியங்க, தாய் தகப்பன் சொல்றதெக் கேட்கனும்!

ஆமாம்மா மூளைத்தான் கெட்டிடுச்சி. டாக்டர்கிட்டே கூப்பிட்டுப் போயி காமிமா... நீ கூப்பிட்டாதாம்மா அத்தா வரும்.

எங்க அம்மாவுக்கு காப்பி போட்டு எடுத்து வந்து தந்தவளாக என் மனைவி, இவ ஒருத்தி... அதுக்கு அதெல்லாம் ஒன்னுமில்லடி என்றாள்.

துபாயிக்கு போறதுக்கு விசா ஏற்பாடு செய்திருக்கார்ன்னு சொன்னியே... இன்னும் ஆவுலெயா?

அதான் கவலை அதுக்கு. சம்பாத்தியம் இல்லாம வூட்லயே இருக்குல.. நான் வேற அப்பப்ப சத்தம் போடுறேன்ல... அதான்... அது சேம்புனா மாதிரி அதை இதை செஞ்கிட்டு, ஒன்னு கெடக்க ஒன்னு பேசிகிட்டு, பத்தும் பத்தாதுக்கு சிரிச்சுகிட்டுவேற... கெடக்கு.

அப்படிதான், அவன் பயணம் போறவரை சத்தம் போட்டுகிட்டே இரு... இல்லன்னு வையி இப்படியே சுத்த ஆரம்பிச்சுடுவான்!இல்லெ படிக்கிறேன்னு கிளம்பிடுவான். புள்ளையா பொறந்ததுங்க சம்பாதிச்சி சொத்தா வாங்குதுங்க, இவன் புஸ்தகமா வாங்குறேங்குறான், இந்த அநியாயத்தே எந்த ரகமான்டெ சொல்றது?

அதான் சத்தம் போட்டுகிட்டேதான் இருக்கேன். பொறுப்பு வரட்டுமேன்னு. அது என்ன நினைக்கிதோன்னுவேற பயமா இருக்கு. அந்த விசா இன்னும் ரெண்டுநாள்ளெ தாபால்லெ வந்து கெடைச்சிடும்னு போன் வந்துச்சி. போன் வந்து நாலு நாளாச்சி இன்னும் வந்து கிடைக்கல.

அதானெ பார்த்தேன். எனக்கு அந்த ரோசனை உதிக்கல, நான் என்னமோ ஏதோன்னு அமீன்டெ வேற சொன்னே. இது ஏதோ சேட்டை.. மஞ்ச கொல்லை பாவாகிட்டெ போன் போட்டு பேசிட்டு வரேன்னான்.

அமீன் என் தம்பி. தாடியெல்லாம் வச்சிகிட்டு எனக்கு அண்ணன் மாதிரி இருப்பான். அவனுக்கு வீட்டை விட்டா பள்ளிவாசல்தெரியும், பள்ளிவாசலை விட்டா கடை தெரியும். அங்கேயும் போயி உட்கார்ந்துக்கிட்டு வியாபாரம் செய்கிறானோ இல்லையோகுரான் ஆயத்தை ஓதிக்கிட்டே இருப்பான். கேட்டா பரகத்துக்காக என்பான். மூனு லட்ச ரூபா முதல் போட்டு வியாபாரம் ஆரம்பிச்சான். இப்போ கடையும் அவனுந்தான் பாக்கி. என்னடான்னு கேட்டா யாரோ செய்வினை வச்சிட்டதா சொல்றான். அவன் கிட்டெ யாருபோயி உடம்பு சரியில்லைன்னு பேசிக்கிட்டு இருந்தாலும், ஒன்னு நாட்டு மருந்தைப் பற்றி அவர்களிடம் பேசத் தொடங்கி விடுவான், அல்லது மஞ்ச கொல்லை ஹஜரத்தைபோயி பாருன்னு சிபாரிசு செய்வான். இப்ப என்னைப் பார்க் காமலேயே மஞ்சகொல்லை ஹஜிரத்துட்டெ அனுப்புறதுன்னு முடிவு செய்திருக்கான். அண்ணேதானேன்னு அனுமதியையும் உரிமை யையோடு எடுத்துகிட்டுயிருக்கான்.

போஸ்ட்மேன் வாசலில் கூப்பிட்டான். மகள்தான் சொன்னாள். அறையை விட்டு வெளியே வந்தேன். "என்னடா செய்யுது"?ன்னு கேட்டாங்க அம்மா.

போஸ்ட்மேனை பார்த்துட்டு வறேன்.. அமீன் கிட்டே சொல்லி உங்க ரெண்டுபேரையும் மஞ்சக்கொல்லைக்கு அனுப்பி வைக்கிறே னா இல்லையா பாரு! - இன்னொரு உலகம் எனக்கு நழுவிப் போனதில் சொல்ல முடியாத ஆத்திரம்வேறு.

இப்படித்தான் மாமி..... ஒன்னும் இல்லாததுக்கொல்லாம்..... கோபப்படுது.

ஆமாம்மா என்றாள் மகள். அவன் கிடக்கறான், நீ போயி அவனுக்கு காப்பி எடுத்துகிட்டு வா... என்றார் அம்மா. வாசலில் போஸ்ட்மேன் ரிஜிஸ்டரோடு நின்றார். கையொப்பம் இட்டு வாங்கிப் பிரித்தேன். உள்ளே, மீண்டும் குல வழக்கத்தை தொடர புதியதோர் அனுமதி!

*********************
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com