Thursday, April 24, 2008

தாஜ் கவிதைகள் - 28


இ ந் தி ய க் கூ லி யி ன் அ ரே பி ய க் கா ல ம்.
---------------------------------------------------------------------------------
- தாஜ்

சூறாவளியின்
அடாத வீச்சில்
நேர்வழிகளின் தடயங்கள்
மறைந்தொழிந்தன
நடுவழியில் இப்படி
சிக்கிக் கொள்வோமென
கணித்தோமில்லை
மணலில் கால்கள் புதைய
தொடரவோ திரும்பவோ
திசைகளற்றுப் போகலாம்.


நவீன யுகத்தின்
கருப்பு மச்சத்தில்
பாசிஸத்தின் கொடி உயர
சமாதானப்
பறவைகளுக்கெல்லாம்
யுத்த இறக்கைகள்.


வியக்கும் நேரமில்லையிது
காற்றில் செய்திகளும்
புழுதிகளும் விஞ்சின
சுவாசம் இப்பவே திணறுகிறது
தலைக்கு மேலே
பாலைவனச் சூறாவளி
விடாது
பேரிரைச்சல் செய்கிறது.
--------------------------------------

குறிப்பு:
# வளைகுடாப் போரில் (1990 - 91 ) ஈராக்கை எதிர்கொண்ட ஐக்கிய நாட்டுப் படைகளின் போர் ஆயத்த முறைக்கு 'பாலைவனச் சூறாவளி ' (Desert Storm) என்று பெயர்.

# போர் தொடங்கி, அச்சம் சூழ்ந்த முதல் வாரத்தில்; செளதி அரேபியாவின் தலைநகரான ரியாத்-ல் இருந்து நேரடி அனுபவம் கூடிய நிலையில் எழுதியது.

***
நன்றி:
சொல்புதிது / ஆகஸ்ட்-டிசம்பர் 1999
----------------------------------------------------

No comments: