Tuesday, April 22, 2008

தாஜ் கவிதைகள் - 27



யுத்த நெடி.
----------------
- தாஜ்


இந்தியப் பசுக்கள்
பாலைவனத்தில் பொதி சுமப்பதை
வளைகுடாவில் பார்க்கலாம்
புஷ்டிப் புண்ணாக்கின் கனவில்
ஒட்டகங்களுக்குச் சமமாய்
ஒன்றி நடக்கிறது
சொந்த மண்ணின் பசுமையைத்
தொலைத்தது போக
திரிந்த காலத்திற்கும் சோதனை.

வல்லரசுகளின்
இயந்திரப் பறவைகள்
பூமி அதிரும்படி
தலைக்கு மேலே
சமாதானம் தேடுகிறது
நவீன ஹிட்லரோ
அமில வாயுவை
மூச்சாகக் கருதுகிறான்.

சூழல் கறுத்து
நெடி வீசத் தொடங்கி விட்டது
எந்நேரமும்
அணு மழை பெய்யலாம்
அலைகழிப்பில் ஆடும்
பேரீச்சை மரங்கள்
தன் அந்திம காலத்திற்கு
நேரம் குறிக்க
தப்ப முடியாத ஒட்டங்கங்கள்
பசுக்களைப் பார்க்கின்றன
ஓட முடியாத பசுக்கள்
ஒட்டகங்களைப் பார்க்கின்றன.
-----------------------------------------
- கணையாழி / நவம்பர் 1990

தகவல் குறிப்புகள்:

# வளைகுடாப் போர் (1990 - 91 ) துவங்குமுன் ஐக்கிய நாடுகளின் சபை, ஈராக்கை எச்சரித்து/ அதிபர் சதாம் ஹூஸைனை சமாதானத்திற்கு முன்வர வற்புறுத்திம் நூறு நாட்கள் கெடு வைத்தது.

# என்றாலும், வளைகுடா பிராந்தியத்தில் ஐக்கிய நாட்டுச் சபையைச் சார்ந்த இருபத்தி நான்கு உறுப்பு நாடுகள் போர் முஸ்தீபுடன் வலம் வரவே செய்தது.

# செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்-ல் இருந்து, நேரடி அனுபவம் பெற்ற நிலையில் எழுதியது.
- தாஜ்

**********

No comments: