Tuesday, May 30, 2006

நவீனத்தில் ஒரு திசைச்சொல் ஆளுமைக் குறித்த விமர்சனம்.


அது ஒரு கிளிக்காலம்
விடுப்பட்டுப் பறப்பதிலன்று
இஷ்ட வயதெனக்கு
அவன்தான் காட்டினான்
கூட்டிலிருந்து தனது
முதல்பறப்பை
கண் கொட்டாமல் ரசித்தேன்
கூக்குரல் அற்ற சூழல்
கவனத்தைக் கூர்மையாக்கியது.

அவனது சலசலப்பு
கிளர்த்தெழுந்தபோது
வட்டம் கட்டியது மக்கள்
அலைந்து திறிந்த யென்
கால்களும் அங்கே நின்றது
சன்னமாகத் தொடங்கி
விடாது குரல் எழுப்பினான்
கூட்டம் சேர முண்டியது
அவன் பறப்பை அவனே
சொல்லக் கேட்ட எனக்கு
நெரிசல் உறுத்தவில்லை.

வடிவான குடையொன்றை
கையில் ஏந்தி
தூக்கிப் பிடித்தப் படியே
கம்பியின் மேல் ஏறினான்
அடிமேல் அடிவைத்து
அதன் ரம்மியத்தை
அப்படி இப்படியென
உயத்திக்காட்டியப் படியே நடக்க
எழுந்த கைத்தட்டல்களில்
நானும் மகிழ்ந்தேன்.

மேலிலிருந்து குடையை
லாவகமாக கீழே வீசினான்
கர்ணம் அடித்தப்படி
மையத்தில் குதித்தெழுந்து
குடையின் நுட்ப ஓட்டைகளை
கம்பிகளின் மழுங்களை
கைப்பிடியின் ஆட்டத்தையும் கூறி
அதனோடு மேலே
நடக்கமுடியாததைப் பகிர்ந்தான்
அடுத்த நிகழ்வைக் காண
பரபரத்தக் கூட்டமும்
குடையின்ரசமான வண்ணம்
கண்டுத் திளைத்ததை மறந்தது.

மேற்கு மலைச் சாரலில்
புராதானச் செல்வங்களை
மீட்டுருவாக்கும் வித்தைகள் பல
பயின்றதாக பறைச் சாற்றினான்
மணக்கும் இம்மண்ணுக்குள்
நுழையப் போகிறேன் என்றான்
நுழைந்து விட்டேன்...
ஆனது இதோ மேலே
வந்துவிட்டேனென சாதித்தான்
வட்டமிட்டவர்களின்
விழிகள் பிதுங்க
உடம்பில் ஒட்டித் தெரிவது சகதியல்ல
வாசனைத் துகள்கள் என்றான்.

பார்வையாளர்களின் பூத்தோய்ந்த
கண்களைக் காணவும்
பறக்கப் போகிறேன்
வலிமண்டல ஒளிப்
பிரவாகத்தில் அதோ நான்
வானத்தைக் கிழித்தப்படி
சிகரங்களை எல்லாம் கடந்தாயிற்று
என்காலடிக்கு கீழே
உங்கள்உச்சமெல்லாம்
புரள்கிறதென்றான்
கட்டுண்டக் கும்பல்
பார்ப்பதை விட்டும் பறக்கத் தொடங்கியது.

தனக்குத் தானே
கைகளை தட்டிக் கொண்டு
எல்லோரின் கவனத்தையும்
தன் சப்த சுழிகளில்
புதைக்க நினைத்த தருணம்
பேரோசை எழுப்பியக் காற்றில்
குடை மேலெழுந்து உயர
வட்டமிட்டுப் பறந்து
எல்லோரின் கவனத்தை ஈர்த்தப்படி
தூர தூரப் போய் மறைந்தது.

கண்டவர்களின்
கண்கள் அலைபாய
அதன் வண்ணமும்
எழுந்த உயரமும்
நினைவில் பளிச்சிட்டது
கவனம் கொண்ட அவன்
கரகரத்தக் குரலில் பறந்து
மறைந்த குடையைப் பற்றி
நீட்டி முழ்ங்கினான்...
அதனோடான புழக்கக்
காலத்தில் கவிழ்ந்தாலும்
தொனியின் ஏற்ற
இறக்க திணறல்களில்
தனது எண்ணத்தையே
பொத்தி வைத்தான்.

வித்தைகளில் கிரங்கியவர்கள்
அவன் மந்திரித்த
தாயத்து வாங்க நின்றனர்
தட்சணை நீட்டியக் கரங்களில்
தனது வடிவத்தைக் கட்டி
கூடுவிட்டு கூடுபாயும் இதிகாச
நிகழ்வு இப்பொழுது என்றான்
கலையத் தொடங்கிய நேயர்கள்
அந்த தந்திரத்தை யெல்லாம்
கண்டாகி விட்டதென்றது
தலையைப் பிடித்தப்படி
நானும் பின் தொடர்ந்தேன்.

***
குறிப்பு: சுந்தர ராமசாமி மறைவை யொட்டி, நினைவின் நதியில் எழுதிய ஜெயமோகனுக்கான எதிவினைக் கவிதை.

***

- தாஜ்

இப்பொழுது நாகூர் ரூமி.

நாகூர் ரூமியின் பன்முக ஆளுமையை வாசகர்கள் சமூகம் இன்றைக்கு பரவலாகஅறியத்துவங்கி இருக்கிறது. சிற்றிதழ்களில் அவர் புதுக்கவிதைகள் எழுத ஆரம்பித்தப்போது இப்படி விருச்சம் விட்டு தழைப்பாரென யூகித்தவர்கள் கம்மி.

கவிதை, சிறுகதை, நாவல், மொழிமாற்றக் கவிதை, மொழிமாற்றச் சிறுகதை, என்று இவரது புத்தகங்கள், ஆரம்பத்தில் நவீன இலக்கியம் சார்ந்து வந்தது. பின்னர் தன்னம்பிக்கைப்பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் கனத்த புத்தகங்கள் தந்தார். இந்தப் புத்தகங்களுக்குப்பிறகு காமராஜைப் பற்றி உயர்வான புத்தகம் ஒன்றும் எழுதினார்.இந்த காலக்கட்டத்தில்தான்பரவலான வாசகர்கள் அவரை பாக்கத் துவங்கினார்கள்.

வர இருக்கும் பகவான் ரஜினீஸ் பற்றியப் புத்தகமும், சூஃபிஸத்தைப் பற்றியப்புத்தகமும் இவரை இன்னும் கூடுதலாக அடையாளப் படுத்தும்.

மூவாயிர வருஷப் பழமையான ஹோமரின் இதிகாசத்தை எண்ணூறு பக்கங்களுக்குமேல் மொழி மற்றம் செய்து பதிப்பிற்குத் தந்திருக்கிறார். விரைவில் ஹோமரின் அந்த காவியத்தை நாம் தமிழிலில் படிக்க வாய்ப்பு இருக்கிறது. தன்னுடைய மிகப் பெரியபணியாக இதை அவர் குறிப்பிடுகிறார். நிச்சயமாக இதற்குறியப் புகழ் அவரைத் தேடி அடையும்.

நவீன இலக்கியத்தில் இன்னும் கூடுதலாக தனது முத்திரையைப் பதிப்பாரெனஇலக்கிய வட்டம் நம்பிக்கை கெண்டிருந்த நாளில்தான் இஸ்லாத்தைப் பற்றிய எளியவிளக்கம் என்ற அவரது நூல் வெளிவந்தது. அதில் எனக்கு அவ்வளவாக உடன்படு இல்லை.

மனதளவில் நான், மதம் தாண்டிய நிலைப்பாட்டை ஒப்புக்கொள்பவன். இங்கேஇந்த உடன்பாட்டின்மை என் நிலைப்பாட்டைக் கொண்டது அல்ல.நவீன இலக்கியம் சார்ந்தஎந்த ஒரு எழுத்தாளரும் இப்படி மதரீதியான புத்தகம் எழுதி நான் பார்த்ததில்லை. ஏன் இப்படி என்றேன்? ஏன் தாஜ்...எல்லாமே எழுத்துத்தானே என்றார். நான் சமாதானமாகவில்லை.

'பதிப்பகத்தைச் சார்ந்த என் நண்பர்கள் இப்படி ஒரு புத்தகம் எழுதித்தரப்பணித்தார்கள், அடிப்படையில் நான் ஆன்மிகவாதியானதால் ஒப்புக்கொண்டேன்' என்றார்.நான் சிரித்தேன். அந்த புத்தகத்திற்கு வலைத்தங்களில் எதிப்பு எழுந்தது. இது நான் எதிர்ப்பார்த்தகோணத்தில் நிகழ்ததல்ல. தன் முதுகை பார்க்கத் தவறுபவர்களின் எதிப்பாகப்போனது அது.பொருட்படுத்தவும் கூட தேவையில்லாமல் போய்விட்டது. இதில் பெரிய விசோசம் என்ன வென்றால்அந்த எதிப்பே அந்தப் புத்தகத்திற்கு போதுமான விளம்பரம் ஆகிப்போனதுதான். ஆன்மீகவாதிகள் தெளிவாகத்தான் திட்டமிடுகின்றார்கள்.

சமீபத்தில் ரூமியை சந்திதப்போது, தனது அடுத்தக் கட்ட முயற்ச்சிகளைப் பற்றிமனம் விட்டுப் பேசினார். அவர் நின்றப்படியே செல்லிக் கொண்டியிருக்க, நான் தலை உயர்த்தி அவரைப் பார்த்தேன். உட்கார்ந்திருப்பவன் பின் எப்படிப் பார்ப்பதாம்.

ஒரு வார இதழில் தொடர் கட்டுரை கேட்டிருப்பதாககூறி, அது வாசகர்களை கவரும் விதத்தில் அமையனும் என்று கவலைப் பட்டார். நாம் பத்து தலைப்புகள் தந்தால்தான், அவர்கள்அதில் ஒன்றை தேர்வு செய்வார்கள் என்றும் சொன்னார். பிறகு, தன்னிடம் சில தலைப்புகள்இருக்கிறது என்றும், வாசகர்களை கவரும் படியான சிலதலைப்புகளை நீங்களும்
யோசித்துச் சொல்லுங்கள் என்றார். தலையாட்டினேன்.

1.After Death.

2.நோபல் பரிசு வாங்கிய மேதைகள்.

3.ஆஸ்கர் பரிசுப் பெற்றத் திரைப்படங்கள்.

4.இந்திய இசை. (ரூமிக்கு இசையில் தேர்ச்சியுண்டு)

5.மதங்கள் பேசும் பாலியல் செய்திகள்.

6.கடலுக்குள் மூழ்கிய பண்டைய நகரங்கள்.

7.இந்திய கலைப் படங்களின் வரலாறு.

8.வரலாற்றில் பெண்களுக்காக நடந்த யூத்தங்கள்.

9.ஜீன் ஆய்வில்,இதுவரை வெளிவராத அடுத்தக் கட்ட வெற்றிகள்.

10. 3006 - ல் உலகம் / ஓர் தூர நோக்குப் பார்வை.

நான் எழுதிக் கொடுத்த தலைப்புகளை வாங்கிப் படித்துவிட்டு, என் முகத்தைப்பார்த்தார். அந்த இதழுக்கும் உங்கள் தலைப்புகளுக்கும் என்ன சம்மந்தம் என்பது போல் இருந்தது.

ரூமி ஒவ்வொரு அடியையும் கவனமாகத்தான் வைக்கிறார்.

***

- தாஜ்

Mind Vs Brain

சென்ற வாரத்தில் நண்பர்களைக் காண நாகூர் சென்றிருந்தேன். மத்திய விருந்துக்குப்பிறகு எங்களுக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் களைக்கட்டத் தொடங்கியது. நாங்கள் பாதிக்குப்பாதி என்ற அளவில் மட்டுமே ஒத்தக் கருத்துக் கொண்டவர்கள் என்பதால், எந்த ஒன்றையும் சர்ச்சைக்குள் இழுத்து வைத்து நாங்கள் சர்ச்சித்தபோதும் எங்களுக்குள் ஒத்த தீர்வு ஏற்பட நேரம் பிடித்தது.பேச்சில் கொஞ்சம் சுற்றி வரவேண்டி இருந்தது. ஒரு கட்டத்தில் எங்கள் விவாதம் Mind and Brain யைப் பற்றி நீண்டது.

இங்கே நாங்கள் என்பது நான்குபேர்கள். இருவர் Mind - யைப் பற்றிப் போசினார்கள்.அதை ஒரு தனிச்சையான செயல்பாடென்றார்கள். Brain தான் எல்லாம் என்றேன் நான். இன்னொரு நண்பரோ மெளனம் செய்துவிட்டார். எங்களை வோடிக்கைப் பார்ப்பதே அதிகமென அவர் நினைத்திருக்கலாம்.

Mind யைப் பற்றி போசிய நண்பர்கள் மனம்,இதயம்,ஆன்மா(soul) போன்ற பதப்ரயோகங்களையும் அர்த்தத்தில்தான் புழங்கினார்கள்.

Mind என்பது தனிப்பட்ட ஒன்றல்ல. Mind செய்வதாக கருதும் பணிகளை செய்வதும் மூளைத்தான்.

`மூளையின் தயவுடன் மாயையாக, நாம் நமக்குள் ஒர் நீதி துறையை ஆக்கி வைத்திருக்கிறோம். அதில் கீழ் கோர்ட் மேல்கோர்ட் போன்ற அடுக்குகள் , எதிர் எதிர் வழக்காட வழக்கறிஞர்கள் , நீதிபதிகள் என்பன எல்லாம் உண்டு. நாம் நமது சொயல்பாடுகளை அங்கே ஒவ்வொரு கணமும் நிறுத்தி தீர்வுகாண தவறுவதில்லை. அந்த தீர்வின் அடிப்படையில்தான் இலகுவான,கனிந்த அல்லது கடினமான செயல்பாடுகளை நாம் பெருகிறோம் . இதை தான் Mind என நாம் பிறித்துப் பார்க்கின்றோம்.

மேலும், இதயம் மனம் ஆன்மா யென நாம் குறிப்பிடும் அத்தனையும் நம்மால் உருவகிக்கப்பட்ட உருவகமே. காலாதி காலமாக இந்த உருவகத்தை மனித குலம் காபந்து செய்தப்படியே இருக்கிறது. நிஜத்தில் அப்படியான கூறுகள் நம் உடம்பில் இல்லை. ஹிருதய செயல்பாடு,சுவாசம், என்பதான ஒரு சில அனிச்சை செயல்பாடுகளைத் தவிர, மற்றைய உடல் இயக்கங்கள் அத்தனைக்கும் மூளைதான் பிரதானம்.

வாதிட்ட நண்பர்கள் என்னை ஒப்புக்கெள்ளவில்லை.மேலும் அழகாக கவிதையாய் அவர்கள் தங்களதுப் பக்கத்தை விவரித்தார்கள். அதற்க்கு மேலே என்னால் முண்ட முடியவில்லை. எனக்கு சிறுநீர் கழிக்கவேண்டும்போல் இருந்தது, கூடவே புகைப் பிடித்தால் தேவலாம். வீட்டின் பின்புறம் போய்விட்டு வந்தேன்.

இப்பொழுது என் நண்பர்கள் மூவரையும் 'கஜல் புகழ்' குலாம் அலி ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார்.ஆனால், அங்கே குலாம் அலி இல்லை, அவர் இசையும் கூட கேட்கவில்லை. எல்லாம் வெறும் பேச்சு. இப்பொழுது நான் வேடிக்கைப் பார்க்க அமர்ந்தேன்.

***

குறிப்பு: இந்த கட்டுரையை எழுதுகிறபோது Oxford mini dictionary யைப்பார்த்தேன் அதில் 'Mind' என்பதற்கு Ability to be aware of things and tothink and reason, originating in the brain என்று இருந்தது. பின் க்ரியாவின் தற்கால தமிழ் அகராதியை புரட்டினேன். அதில் 'இதயம்' என்பதற்கு மென்மையான உணர்வுகளுக்குஇருப்பிடமாக கூறப்பட்டிருந்தது. 'மனம்' என்பதற்கு ஒருவரின் எண்ணம், உணர்வு பேன்றவற்றிக்குகாரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது என்கிறது.

அந்த அகராதியில் 'மூளை' (Brain) என்ற பதத்திற்கு உடலின் செயல்பாடுகளைக்கட்டுப்படுத்துவதும் தொடுதல் போன்ற உணர்வுகளைத் தோற்றுவிப்பதுமான மண்டையோட்டினுள்அமைந்திருக்கும் உறுப்பு என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

அவ்வளவுதான்.

இனி வாசகர்கள்தான் வெட்டியோ ஒட்டியோ அபிப்ராயங்களைச்செய்யனும்.செய்வீர்கள். நம்புகிறேன்.

***

-தாஜ்...

கதவை மூடு (சுந்தர ராமசாமி நினைவாக... )

கதவை மூடு
காற்று வருகிறது
குப்பைக் கூளமாக
சாக்கடை நாற்றமும்
சுவாசத்தை அறுக்கிறது.

கதவை மூடு
ஏதேதோ அலைகிறது
பனிமூட்ட விடியலில்
குளிர் காயும் வெறியோடு
ஒழுங்குகளைத் துவைக்கிறது.

கதவை மூடு
ஊர்வன மேவும் நேரமிது
விஷக் கொடுக்குகளின்
வலியற்ற தீண்டலில்
மெய்யுடல் தடிக்கிறது.

கதவை மூடு
இரைச்சல் எழுகிறது
தலையெடுப்பவர்களது
காலடிப் பதிவின் அதிர்வில்
நினைவுகளும் சிதைகிறது.

கதவைத் திற
காற்று வரட்டுமென்ற
காலம் போய்விட்டது.
திசைகளற்றப் பேரோசை
பெரு வெளிக் காட்டி.

***

-தாஜ்

தமிழ்ப் பூக்கள்


இணையத்தின் பக்கம், தமிழ் வலைத் தளங்கள்அல்லது வலைப் பூக்கள் என்பது இன்றைக்கு சாதாரணம்.நித்தம் மலர்கிற சங்கதி.

கணினி பயின்ற நம் மாணவர்களில் தமிழை விசேசமாகநேசிபோர் சிலர், தங்களது தேர்ச்சிக்குப்பிறகு பணிக்குச்செல்ல முயற்சிக்கும் அதே வேளை, ஆளாளுக்குஒரு வலைப் பதிவை முன்வந்து முனைந்து வடிவமைத்துக் கொள்கின்றார்கள்.இதை அவர்கள் தங்களது தழிழ் ஆளுமை சார்ந்த செயலாக நினைக்கின்றார்கள்.

தமிழ்ப் பூக்கள் என்ற இந்த வலைப் பதிவு, வாசிப்பவர்களின் பார்வையில் இன்றைக்கு பத்தோடு பதினொன்றுத்தான். அல்லது இன்னொரு இம்சை. அப்படியெல்லாம் இல்லையென வாசகர்களைநம்ப வைப்பதில்தான் இந்த வலைப் பதிவின் வெற்றி இருக்கிறது.

***
80-களின் ஆரம்பத்தில் பஞ்சம் பிழைக்கவென செளதிஅரேபியா சென்றிருந்த போது, மிகப்பெரிய பெட்ரோல்சுத்தகரிப்பு நகரான ரஸ்த்தணூராவில் வேலை, அங்கே என்பணி நேரம் போக கிட்டிய ஓய்வில் நண்பர்களின்உறுதுணையோடு முயன்று கையெழுத்து இதழை கொண்டு வந்தேன். அதன் பெயர் தமிழ்பூக்கள். மாத இதழாக கணக்கு வைத்தும் ஒன்னறை வருடக்காலத்தில் பதினோரு இதழ்கள் மட்டுமே வந்ததது.

***
அதன் பெரிய விசேசம் செளதிஅரேபியாவின் முதல்தமிழ் இதழ் என்பதுதான். அதை விட விசேசம் அதை வாசித்தப்பலருக்கும் அது பிடித்துப் போனதுதான்.அந்த தமிழ்ப் பூக்களை முன்வைத்துதான் அன்றைக்கு ஜெயகாந்தனிடம் பேட்டிக்காணமுடிந்தது. தி.ஜானகிராமனோடு நெருக்கமாக நட்புடன் உரையாடமுடிந்தது.அந்த பின்புல முகவரி கொண்டே நாகர்கோவில் போய் சுந்தாராமசாமியிடம்ஒரு நாள் பூராவும் கேள்விகளால் அவரை துழைக்கமுடிந்தது. சுஜாதா கூடஎன் இதழைப் பற்றி கணையாழியில் ஒருதரம் கடைசிப் பக்கம் எழுதினார்.

***
இத்தனை காலத்திற்குப் பிறகு அதன் நீட்சியாக இந்த வலைப்பதிவை தமிழ்ப் பூக்கள் என்று பெயரிட்டுப் பார்க்கிறேன்.

***
தமிழ்ப் பூக்கள் கையெழுத்துப் பிரதிக்கும், இந்த வலைப் பதிவு தமிழ்ப் பூக்களக்குமான ஒரு நீண்ட இடைவெளியில் என்னில் பல படிமங்களும் சிதைவுகளும் நிகழ்ந்திருக்கிறது. அறுபடாது தொடர்ந்த நவீனஇலக்கியப் புழக்கத்தால் பல தெளிவுகள் சாதாரணமாகி இருக்கிறது.எங்கும் எதிலும் நிஜத்தின் நிதர்சணத்தை தொடவும் வேறு பழகிஇருக்கிறேன். இவைகள்தான் இனி இங்கே எழுதப்போகும் எவற்றிற்குமான பின் புலன்கள்.

***

இந்த வலைப் பதிவு வழியே வாசகர்களை சென்று அடையவேண்டும் என்கின்ற என் திட்டமிடல் நடக்கலாம் அல்லது நடக்காமல் கூடப் போகலாம் . பழுதில்லை.ஜெயித்தால்தான் வியப்பாக இருக்கும். ராசி அப்படி.

பார்க்கலாம்......

-தாஜ்

நன்றி

கணினி வழியே தமிழின் அடுத்தக் கட்ட மீட்சியும். மலர்ச்சியும் பெருமைக் குறியதாக இருக்கிறது.செம்மையான நீட்சி கணக்காக கனிந்திருக்கிறது.

இணையதள வலைப் பதிவுகளில் தமிழின் விசாலம். வியக்க வைக்கிறது. நாளை இதன் ஆட்சியும் மாட்சிமையும் பேசப்படலாம்.

கணினியில் தமிழ் காண, காலத்தே தமிழ் சார்ந்த கணினி வல்லுனர்கள் பல முனைப்புகளில், பல நூறு கூறுகளில் முனைந்து செயல்பட்டு, பெரிய வெற்றிக்கு அடித்தாமிட்டுத் தந்திருக்கின்றார்கள். இவர்களின் மகா புருஷத்தனம் தீர்க்க தரிசனம் கூடியது.

புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்கு இதில் அதிகம். தமிழ் மீது அவர்கள் கொண்ட நிஜமான பிரியம் ஒன்றே இப்படி ஆக்கப் பூர்வமான வெற்றியாக கனிந்திருக்கிறது.

தூர நோக்கு பார்வையோடு, தமிழ்ச்சார்ந்த அரசு அதன் நிர்வாக கரங்களை முடுக்கி தமிழ் சமூகத்திற்கு சாதித்து தந்திருக்க வேண்டிய இந்த கட்டாயப் பணியினை புலம் பெயர்ந்த தமிழர்கள் காலத்தே நேர் செய்து வைத்திருக்கின்றார்கள். நான் மட்டுமல்ல, தமிழ் சமூகம் மட்டுமல்லஅறிவு சார்ந்த உலகமும் அவர்களுக்கு நன்றி செல்லக் கடமைப் பட்டிறுக்கிறது. தமிழ் கணினி வரலாற்றுப் பக்கங்கள் அவர்களை காலத்திற்கும் நினைவுக்கொள்ளும்.

இங்கே.... அந்த முயற்சிகளின் திருகரங்களை ஏந்தி முத்தமிடுகிறேன் நன்றியோடு. ‎‏

***
நன்றி

கணினியில் தமிழ் என்று, அதன் வல்லுனர்கள் முனைந்தபோது, அவர்களுக்கு மிகவும் லாவகமாக உதவியது தந்தை பெரியார் செய்து வைத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்தான். இங்கே என் முதல் நன்றியை, இன்னும் கூடுதலான அர்த்தப் பொதிவுகளுடன் அந்த பெரியவரின் நினைவுக்கே செய்கிறேன்...சிரம் தாழ்த்தி.

***
நன்றி

கணினியிலும் வலைத்தங்களிலும் எனக்கு ஆர்வமூட்டி, அதன்கண் வாசிக்கவும் எழுதிப் புழங்கவும் ஊக்கப்படுத்திய நண்பர் அபிதீனுக்கும், நாகூர் ரூமிக்கும் என் நன்றி ஆகட்டும்.

-தாஜ்