Tuesday, May 30, 2006

நவீனத்தில் ஒரு திசைச்சொல் ஆளுமைக் குறித்த விமர்சனம்.


அது ஒரு கிளிக்காலம்
விடுப்பட்டுப் பறப்பதிலன்று
இஷ்ட வயதெனக்கு
அவன்தான் காட்டினான்
கூட்டிலிருந்து தனது
முதல்பறப்பை
கண் கொட்டாமல் ரசித்தேன்
கூக்குரல் அற்ற சூழல்
கவனத்தைக் கூர்மையாக்கியது.

அவனது சலசலப்பு
கிளர்த்தெழுந்தபோது
வட்டம் கட்டியது மக்கள்
அலைந்து திறிந்த யென்
கால்களும் அங்கே நின்றது
சன்னமாகத் தொடங்கி
விடாது குரல் எழுப்பினான்
கூட்டம் சேர முண்டியது
அவன் பறப்பை அவனே
சொல்லக் கேட்ட எனக்கு
நெரிசல் உறுத்தவில்லை.

வடிவான குடையொன்றை
கையில் ஏந்தி
தூக்கிப் பிடித்தப் படியே
கம்பியின் மேல் ஏறினான்
அடிமேல் அடிவைத்து
அதன் ரம்மியத்தை
அப்படி இப்படியென
உயத்திக்காட்டியப் படியே நடக்க
எழுந்த கைத்தட்டல்களில்
நானும் மகிழ்ந்தேன்.

மேலிலிருந்து குடையை
லாவகமாக கீழே வீசினான்
கர்ணம் அடித்தப்படி
மையத்தில் குதித்தெழுந்து
குடையின் நுட்ப ஓட்டைகளை
கம்பிகளின் மழுங்களை
கைப்பிடியின் ஆட்டத்தையும் கூறி
அதனோடு மேலே
நடக்கமுடியாததைப் பகிர்ந்தான்
அடுத்த நிகழ்வைக் காண
பரபரத்தக் கூட்டமும்
குடையின்ரசமான வண்ணம்
கண்டுத் திளைத்ததை மறந்தது.

மேற்கு மலைச் சாரலில்
புராதானச் செல்வங்களை
மீட்டுருவாக்கும் வித்தைகள் பல
பயின்றதாக பறைச் சாற்றினான்
மணக்கும் இம்மண்ணுக்குள்
நுழையப் போகிறேன் என்றான்
நுழைந்து விட்டேன்...
ஆனது இதோ மேலே
வந்துவிட்டேனென சாதித்தான்
வட்டமிட்டவர்களின்
விழிகள் பிதுங்க
உடம்பில் ஒட்டித் தெரிவது சகதியல்ல
வாசனைத் துகள்கள் என்றான்.

பார்வையாளர்களின் பூத்தோய்ந்த
கண்களைக் காணவும்
பறக்கப் போகிறேன்
வலிமண்டல ஒளிப்
பிரவாகத்தில் அதோ நான்
வானத்தைக் கிழித்தப்படி
சிகரங்களை எல்லாம் கடந்தாயிற்று
என்காலடிக்கு கீழே
உங்கள்உச்சமெல்லாம்
புரள்கிறதென்றான்
கட்டுண்டக் கும்பல்
பார்ப்பதை விட்டும் பறக்கத் தொடங்கியது.

தனக்குத் தானே
கைகளை தட்டிக் கொண்டு
எல்லோரின் கவனத்தையும்
தன் சப்த சுழிகளில்
புதைக்க நினைத்த தருணம்
பேரோசை எழுப்பியக் காற்றில்
குடை மேலெழுந்து உயர
வட்டமிட்டுப் பறந்து
எல்லோரின் கவனத்தை ஈர்த்தப்படி
தூர தூரப் போய் மறைந்தது.

கண்டவர்களின்
கண்கள் அலைபாய
அதன் வண்ணமும்
எழுந்த உயரமும்
நினைவில் பளிச்சிட்டது
கவனம் கொண்ட அவன்
கரகரத்தக் குரலில் பறந்து
மறைந்த குடையைப் பற்றி
நீட்டி முழ்ங்கினான்...
அதனோடான புழக்கக்
காலத்தில் கவிழ்ந்தாலும்
தொனியின் ஏற்ற
இறக்க திணறல்களில்
தனது எண்ணத்தையே
பொத்தி வைத்தான்.

வித்தைகளில் கிரங்கியவர்கள்
அவன் மந்திரித்த
தாயத்து வாங்க நின்றனர்
தட்சணை நீட்டியக் கரங்களில்
தனது வடிவத்தைக் கட்டி
கூடுவிட்டு கூடுபாயும் இதிகாச
நிகழ்வு இப்பொழுது என்றான்
கலையத் தொடங்கிய நேயர்கள்
அந்த தந்திரத்தை யெல்லாம்
கண்டாகி விட்டதென்றது
தலையைப் பிடித்தப்படி
நானும் பின் தொடர்ந்தேன்.

***
குறிப்பு: சுந்தர ராமசாமி மறைவை யொட்டி, நினைவின் நதியில் எழுதிய ஜெயமோகனுக்கான எதிவினைக் கவிதை.

***

- தாஜ்

2 comments:

Anonymous said...

Hi! Just want to say what a nice site. Bye, see you soon.
»

Anonymous said...

Great site lots of usefull infomation here.
»