Wednesday, April 29, 2009

தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல் - 6


தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல் - 6
------------------------------------------------
இஸ்லாமிய கட்சிகள்: நடப்பு - நான் - மற்றும் ஏதேதோ!
---------------------------------------------------------------------------
- தாஜ்
*
அன்புடன்
ஆபிதீன்........
*
சிறுபான்மையின
இஸ்லாமியர்களை குறிவைக்கும்
அகில இந்திய ஆளும் கட்சி /
எதிர் கட்சிகளின்
அரசியல் சதிகள்!
அதை எதிர் கொள்ளும்
இஸ்லாமிய கட்சிகளின்
வேடிக்கைகள்
வேதனைகள் என்று....
*
இந்த முரண்களின்
குறுக்கு வெட்டுத் தோற்றத்தை
உங்களோடு பகிர்வதில்
கொஞ்சம் ஆருதல் உண்டு.
*
"வேறு வேலையே....
இல்லையாய்யா உனக்கு?
"ஹையா....
வேறு யார் என்னை
இந்த அழகில் திட்ட முடியும்!
அந்தவகை அழகுகளை
நினைவில் எத்தனையெத்தனை
கோர்த்து வைத்திருக்கிறேன்!
அது தரும் கிளர்ச்சியும்தான்
எவ்வளவு ஆருதல் எனக்கு!!
*
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு....
தமிழக இஸ்லாமியர்களில்,
கல்வி / கேள்வி
வாய்த்தவர்களிடையே
துளிர்திருக்கிற
அரசியல் ஆர்வம்
பச்சைப் பசேல்!
சிலிர்க்கவைத்த பிரமிப்பு!
*
இஸ்லாமியனாகப் பிறந்தோமா...
மதராஸாவுக்குப் போனோமா
'அலிப்...பே...' ஓதினோமா
'அல்ஹம்து' தொடங்கினோமா
'கலிமா' சொல்லக் கற்று கொண்டோமா
'சுன்னத்' செய்து விட்டதைப்
பார்த்தப்படிக்கு திரிந்தோமா
எலிமெண்ட்ரியில் தொடங்கி
ஹைஸ்கூலில் தடுமாறி
படிப்பை தவறவிட்டோமா
பாஸ்போர் எடுத்தோமா
விசிட்டில் மலேசியா போய்
'ஓவர் ஸ்டே'யெனப் பதுங்கி
'சாப்பாட்டுக் கடை'யில்
புரோட்டாவுக்கு
மாவு பிசைந்தோமா
அல்லது....
*
சென்னை / மும்பாய்
ஏஜண்ட்டுகளிடம்
வழிமுறையாய் ஏமாந்தோமா
வெம்பி நொந்து
தொடர் முயற்சியென
அரபு நாடுகளில்
போய் விழுந்தோமா
A/C அலுவலகங்கள்,
A/C பங்களாக்களென
சொல்லிக் கொண்டு
கக்கூஸ் கழுவினோமா,
'பல்தியா' பணியென
'பீத்திக்கொண்டே'
தெரு பெறுக்கினோமா,
பெரிய அரபி கம்பெனியில்
வேலையென தம்பட்டம் அடித்து
அரபிகளுக்கு எடுபிடி
வேலைகள் செய்தோமா....
என்கிற விதமாய்
'பதூசாய்' இருந்தவர்கள்தான்
நமது வளரும் சமூகத்தினர்கள்
வேறு மார்க்கம் தெரியாது!
ஒரே இறைவன்... ஒரே பாதை!
*
அந்தச் செல்லங்களை
மறைமுகமாக தூண்டி
காலம் காலமான
அவர்களின் மந்தை வழி
சிந்தனையைச் சிதைத்து
வாழும் உலகத்தின்
யதார்த்தம் உணரவும்,
அதை எதிர்கொள்ள....
பெரிய பெரிய படிப்புகளை
கண்டுத் தெளியவும்
தீர படிக்கவும்
இன்னும் மேலாய்
'மஹா' பாரதத்துக்குள்ளே
இருத்திவைக்கவுமான
பெரிய உதவிகளை
எதிர்மறையான சம்பவங்களின்
வழியே வழங்கிய
பெருமைகள் அனைத்தும்
R.S.S மற்றும் இந்துவா
அரசியல் பிரிவினர்களுக்கே சாரும்!
*
இஸ்லாமியர்களை
இந்திய மைய அரசு
கட்டம் கட்டி
காலம் தொட்டு ஏமாற்றி வருகிற...
ரகசிய உண்மையை
இன்றைக்கு...
இஸ்லாமிய இளைஞர்கள்
உள்ளங்கை நெல்லிக்கனியாய்
கண்டுத் தெளிந்திருக்கிறார்கள்!
*
சுகந்திரம் அடைந்து
இந்த அறுபது
ஆண்டுகளுக்குப் பிறகு
தேசிய அரசியலில்
இஸ்லாமிய சமூகம்....
தங்களது உரிமைகளை
மீட்டெடுக்க,
மரியாதையோடு வாழ,
போராட்டகாரர்களாக
களத்தில்ஆர்ப்பரித்து நிற்கிறார்கள்!
*
அவர்களது பார்வையில்
இன்றைக்கு......
காங்கிரஸும் பி.ஜே.பி.யும் ஒன்று!
இஸ்லாமியனை பழிதீர்ப்பதில்
ஒன்று மிதவாதம்
இன்னொன்று தீவிரவாதம்
அவ்வளவே வித்தியாசம்!
மசூதியை இடித்தது
ஒரு கட்சியென்றால்..
அதற்கு பாதைத் திறந்துவிடும்
சிரத்தையான வேலையை
செவ்வனமே செய்தது
காங்கிரஸ்!!
சின்னக் கணக்கு!
குழப்பமே இல்லாமல்
புரிந்துவிட்டது அவர்களுக்கு!
*
எல்லா இன மக்களுக்கும்
கிட்டியது மாதிரியே
இஸ்லாமியனுக்கும்
தேசியம் வழங்கிய
உரிமைகள் அத்தனையும்
கிட்டியிருக்க வேண்டும்.
ஆனால் கிட்டவில்லை,
குழித்தோண்டிப் புதைத்து
மூச்சுகாட்டால் காபந்து செய்தன
அந்த இரு அரசியல் கட்சிகள்!
இஸ்லாமியர்களின்
முன்னேற்ற முனைப்புகளின்
சகல முனைகளையும்
அழித்தொழித்த அவர்களின் சாணக்கியம்
இன்றைக்கு சந்திக்கு வந்துவிட்டது!
*
இந்த மக்களவை தேர்தல்-2009ல்
தனது வெற்றிக் குறித்து
சந்தேகிக்கும் பி.ஜே.பி.
தனக்கு ஒத்த மாற்றான
அல்லது...
மேடை எதிரிமட்டுமேயான
காங்கிரஸ் கட்சி
தோற்றுவிடக் கூடாது என
கவலைப்படுவதாகப் படுகிறது!
மூன்றாம் அணி குறித்த
பி.ஜே.பி.யின் அதீதப் புலம்பலே
அதன் எண்ணவோட்டத்தை
நமக்கு திறந்துக் காட்டுகிறது.
*
தேர்தல் முடிவு
வெளிவரும் நாளில்
பாராளுமன்ற சிம்மாசனத்திற்கு
காங்கிரஸ் தாழ்ந்து
மூன்றாம் அணி கெலிக்குமேயானால்...
பி.ஜே.பி.
நிச்சயம் வெளியில் இருந்து
அதற்கு ஆதரவு தரும்!
முன் உதாரணம் உண்டு.
நிச்சயம் நம்பலாம்.
*
அரசியலில் இந்த மேல்மட்டத்து
சித்து வட்டம் புரியவர
எனக்கெல்லாம் முப்பது வருடமானது!
"காங்கிரஸை நம்பாதீங்க
அது...
பார்ப்பனின்
கைப்பாவையாக ஆகிவிட்டது"
சொல்லத்தான் செய்தார் பெரியார்.
அப்போதே யோசித்திருக்கனும்.
அறிவு போதவில்லை.
காமராஜுக்கு ஜே யென
காங்கிரஸுக்கு வக்காலத்து வாங்கிய
என்னை ஒத்த இஸ்லாமியர்கள்
அன்றைக்கு...
'கொஞ்சநஞ்சமல்ல'!!
*
இன்றைய வளரும்
இஸ்லாமிய சமூகத்தினர்கள்
அரசியலில் ஈடுபாடு கொள்வதும்
உரிமைகளுக்காக
போராடுவதென்பதெல்லாம் சரி!
ஆனால்....
அரசியலில் அவர்கள் கால் வைத்ததுமே
பிற அரசியல் கட்சிகளின்
முத்திரைத் தனங்களை
சட்டென சுவீகரித்துக் கொள்கிறார்கள்.
*
பதவி ஆசை/ பண ஆசை/ பறக்க ஆசை /
தின்க, தூங்க ஆசை/ சுக ஆசை/
சொத்துக் குவிப்பாசை யென
அத்தனை முத்திரை தனங்களுடனும்
ஓஹோ வென
வலம்வர முனைகிறார்கள்.
ஆறு மாதத்திற்கு ஒரு தரம்
தாங்கள் இருந்துவரும் கட்சிகளை
கட்டாயம்.....
கஷ்டப்பட்டு பிளக்கிறார்கள்.
கொஞ்சமும் வெட்கப்படாமல்
அடுத்தக் கட்டமாய்
கணக்கு வழக்கு சண்டையில்
இறங்கிவிடுகிறார்கள்.
விழித்துக் கொண்டிருக்கும்
சமூகத்தைப் பற்றி
கிஞ்சித்தும் கவலையில்லை அவர்களுக்கு!
*
இவர்கள் எல்லாம்...
கிளம்பித் துளிர்விட்டு
பச்சைக் காடாய் தழைத்த
ஒவ்வொரு கூட்டத்திலும்
பாபர் மசூதி இடிப்பை மையப்படுத்தி
சொந்தச் சகோதரர்களை
உணர்வு பூரணமாய்
கிள்ளித் துடிக்கவிட்டு...
இன்னும் இன்னுமென அடர்ந்து
பிரமிக்கவைத்தவர்கள்!
தங்களது நேர்மை பொருட்டு
கூட்டம் தவறாமல்
இறைவன் மீது
சத்தியம் செய்துவந்த உத்தமர்கள்!
ஒற்றுமையின் கயிற்றை
எல்லோரும்
பற்றிப் பிடியுங்கள் என்கிற
மாநபி வாசகத்தை
இந்த இவர்கள்தான்
தங்கள் இன சகோதரர்களுக்கு
கதறி கதறி போதித்தவர்கள்!
*
பெரிய இஸ்லாமிய கட்சிகளுக்கு
நிலைக்கொள்ளும் ஸ்தலம்
மண்ணடி, பெரிய மேடு,
லிங்கிச் செட்டி தெருவும் என்றல்....
அடுத்தரக கட்சிகளுக்கு
திருவல்லிக்கேணியின்
சந்துப் பொந்துகள்!
எனக்குத் தெரிந்து
அங்கத்திய மென்சன்களில்
ஏகப்பட்ட
முஸ்லீம் கட்சிகளின் அலுவலகங்கள்!
குறிப்பிடத்தகுந்த
கட்டிடங்களின் முதல் தளத்தில்
தொப்பியோடு
அலைபவர்கள் எல்லாம் அவர்கள்தான்!
இஸ்லாமிய நாட்டு மருந்து
விற்பவர்களில் இருந்து
பர்மாபஜார் பேர்வளிகள் மற்றும்
துபாய்வாழ் முதலாளிகளென
இந்தக் கட்சிகளுக்கு
துணிந்து பெரிய பெரிய
முதலீடுகளைச் செய்கிறார்கள்.
*
இந்த இஸ்லாமிய கட்சிகள்
எல்லாவற்றிற்கும்
கொடியுண்டு / தலைவன் உண்டு /
தொண்டர்கள் உண்டா? தெரியாது.
நாலுபேர்கள் கூடினால்
ஒரு கட்சி உதயம் என்கிற கணக்கில்
சொறிந்துவிட்டுக் கொள்ளும்
அரிப்புகளின் அமைப்புகளுக்கு
தொண்டர்களும் தேவையா என்ன?
*
நபிகள் நாயத்தின்
பிறந்த தினவிழா/
காயிதே மில்லத் நினைவு தின விழா/
நோன்பு காலத்தில்
இஃப்தார் விழா யென
சம்பிரதாய வைபவங்களை
தட்டாது நடத்துவதென்பது
இந்த 'ரப்பர் ஸ்டாம்ப்'
இஸ்லாமிய கட்சிகளின் சீரியப் பணி!
*
அவர்கள் நடத்தும் அந்த விழாக்களில்
தங்களுக்கு இஸ்டப்பட்ட
திராவிடக் கட்சிகளின்
தலைவர்களை அழைத்து
காரிய சிரிப்பு சிரித்து
குழைந்து பணிந்து...
விடைதந்த மறுநாளே
அந்த தலைவர்களின் வீட்டு வாசலில்
பல்லைக் காட்டிக் கொண்டு
நிச்சயம் போய் நிற்பார்கள்.
சிறுபான்மையின வாரியத்தில்
ஏதேனும் ஒரு துக்கடா பதவி
பெறாமல் திரும்ப மாட்டார்கள்.
*
பெரிய / சிறிய / இத்தினூண்டு
இஸ்லாமிய கட்சிகள் அத்தனையும்
அங்கே....
அவர்களது அலுவலக ஸ்தலங்களில்
அவர்களுக்குள்ளாக
பிறாண்டிக் கொண்டிருப்பது/
துண்டுவிழும் நேரங்களில்
சகோதர அமைப்புகள் பற்றி
குறைச் சொல்லி கிண்டிக்கிளரி மகிழ்வது/
அவர்களின் அன்றாட பொழுது போக்கு!
அடித்துக் கொள்வதென்பது
மாதந்திரப் பணி!
இப்படி சகிக்க முடியாது
கோணல் கோணலாய்
வளர்ந்து முகம்காட்டி
தேர்தல் காலங்களில்
இரண்டு பெரிய
திராவிட கட்சிகளிடமும்
கூட்டணி என்று அணுகுவதும்
தொகுதிகள் கேட்டு
அவர்களது அலுவலக வறாண்டாக்களில்
திரும்பத் திரும்ப திரிவதென்பதும்....
அவலம் தோய்ந்த நகைச்சுவை!
*
சென்ற வாரத்தில் ஒரு நாள்.....
இரவு எட்டை தொடும் நேரம்!
எங்களது ஊரின்
சின்னக் கடைத்தெருவென
அழைக்கப்படும் எங்களது பகுதியில்
கை விரலிடுக்கில் சிகிரெட் புகைய
யாரோடோ பேசிக்கொண்டிருக்கிறேன்.
*
கையில் கத்தைத் தாளோடு
தொப்பி, தாடி சகிதமாய்
ஐம்பதுக்கும் குறையாத ஒருவர்
என் அருகில் வந்து 'சலாம்' சொன்னார்!
பொதுவாக என்னிடம்
'சலாம்' சொல்பவர்கள் குறைவு!
தொப்பி தாடிகள் என் அருகில் என்பது
அதைவிடக் குறைவு!
சந்தோசம் மேலிட பதிலளித்தேன்.
*
மாயூரம் பாராளுமன்றத் தொகுதியில்
தான், வேட்பாளராக நிற்பதாக
தன்னை அறிமுகப்படுத்தி கொண்டே....
அவர் கையில் இருந்த
தாள் கத்தையில் இருந்து
ஒரு துண்டுத் தாளை
என்னிடம் நீட்டினார்.
வெளிச்சத்தில் அதை
விரித்துப் பார்த்தேன்!
அவரது படமும்
படிக்க கொஞ்சத்திற்கு
வாசகங்களும் இருந்தது.
*
'2009 மே 13-ம் தேதி
மயிலாடுதுறை தொகுதி
நாடாளுமன்ற தேர்தல்
உங்களின் வேட்பாளர்
(கட்டம்கட்டி....,
அவரது படம்.
செல்போன் பேசும்
ஸ்டைலும், புன்னகையுமாக!)
திரு.M.H.அஹ்மது மரைக்காயர்
நிறுவனத் தலைவர்
அகில இந்திய தேசிய ஜனநாயகக் கட்சி
அவர்களை வெற்றிபெற செய்யுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.'
*
வியப்பு மேலிட
அவரைப் பார்த்தேன்!
ஒரு கட்சியின் நிறுவனத் தலைவர்...
நாடாளுமன்ற தேர்தலில்
போட்டியிடும் வேட்பாளர்....
பக்கத்துணைகள் இல்லாமல்
தன்னந்தனியாக வோட்டு சேகரிக்க
வந்து நின்ற காட்சி.....
நிஜமாகவே என்னை
திக்குமுக்காட வைத்தது!!
*
அவரிடம் கேட்க
நிறைய கேள்விகள்
என்னில் வரிசைக்கட்டி நிற்க...
பக்கத்தில் உள்ள மசூதியில் இருந்து
'இஸா' தொழுகைக்கான 'பாங்கு' ஒலித்தது.
அஹ்மது மரைக்காயர்
பாங்கின் அழைப்பை காரணமாக்கி
என்னை விட்டு நழுவினார்.
*
இஸ்லாமிய கட்சிகளின்
விபர அட்டவணையில்
அஹ்மது மரைக்காயரின்
அகில இந்திய தேசிய ஜனநாயகக் கட்சி
எத்தனையாவது
இஸ்லாமிய கட்சியென விளங்கவில்லை!
*
இந்த பாராளுமன்ற தேர்தலில்
நான் ஓட்டளிக்க செல்வேன் என்பது
101% சந்தேகம்.
மீறி ஓட்டளிக்க போவேனானால்...
அஹ்மது மரைக்காயரது
கட்சிப் பெயரின் அழகிற்கும்
அவரது மனோதிடத்திற்கும்மாக
அவரது சின்னத்திற்கு
ஓட்டளிக்கலாம்தான்.
ஆனாலும் என்ன செய்ய?
ஓட்டுப் போடும் நாளில் எனக்கு
வயிற்றுப்போக்கு வந்துவிடுமே!
போன பொது தேர்தல் சமயத்து
ஓட்டளிக்கும் நாளிலும்கூட
வயிற்றுப் போக்கு வரத்தானே வந்தது!
அதற்கு முந்தைய பொது தேர்தல்....
வாக்களிக்கும் நாளிலும் அதுதானே கதை!
*
ஓட்டளிக்க தவறுவதென்பது
தேச துரோகத்திற்கு சமமான
குற்றம் என்கிறார்கள்...
விபரமறிந்தவர்கள்!

ஓட்டளிக்க தவறுவதென்பது
தேச துரோகத்திற்கு சமமான
குற்றம் என்கிறார்கள்...
விபரமறிந்தவர்கள்!
அவர்களுக்கு என்ன தெரியும்...
என் வயிற்றுப் போக்குப் பற்றி!
எனக்குத்தானே தெரியும்.
அதன் வலியும்....
செரிமானமின்மையின்
காரண காரியமும்!
--------------------------
- தாஜ்
_______

Thursday, April 23, 2009

தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்- 5




தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்- 5
**** *** ***
கி ரி க் கெ ட் டு ம் வ ரு ண் கா ந் தி யு ம்.
---------------------------------------------------------
அன்புடன்
ஆபிதீன்....
*
தேர்தலின் விசேசங்கள்
நாளுக்கு நாள்
கூடிக்கொண்டே போகிறது.
இன்றைய உஷ்ணத்தின்
எகிறும் அளவைப் போல!
எழுதியெல்லாம் மாளாது!
கவனம் செய்ய
தவறியிருக்க மாட்டீர்கள்.
*
தேர்தலை ஒட்டிய
அதீதங்கள் அத்தனையையும்
உற்று நோக்கும் கனமெல்லாம்
சராசரிகளை
வெட்கம் பிடுங்கித் தின்கிறது.
வாய் திறவா உங்களது மௌனமும்
அதைத்தான் நிறுவுகிறதோ?
*
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு
வெளியானதுதான் தாமதம்...
அரசியல் அரங்கில்
கட்சிகளின் ஆட்டங்கள்
ஆஹா... ஓஹோ.. பேஷ் பேஷ்!
ஒன்றுக்கொன்று
சளைத்தவர்களாகவே தெரியவில்லை.
*
சூடுப் பிடித்த
முதல் இரண்டு ஆட்டங்கள்
கவனம் கொள்ளத் தக்கது.
ஒண்ணு கிரிக்கேட்!
இன்னொண்ணு வருண்காந்தி!
*
நாடும், நாற்காலியும்
தங்களுக்கு மட்டுமே ஆனதென
'ராம் ராமை' உடம்பின் குறுக்கே
பிணைந்து பிடித்தப்படிக்கு
ஆளாய் பறக்கும் பி.ஜே.பி.
அந்த முதல் இரண்டை முன்வைத்து
மீடியாக்களின் பக்கங்களில்
ஆடித்தீர்த்த ஆட்டம்
எவரொருவரின்
பொது அறிவுக்குப் பொருந்தாதது.
*
'இந்தியன் பிரீமியர் லீக்'(ஐ.பி.எல்.)
வெளிநாட்டுக்கு டெண்டை தூக்ப் போகிறோம்...
என்கிற சர்ச்சையொட்டிய
கிரிக்கெட் போர்டின் வியாபார லொள்ளுக்கு
அதன் முதுகில் இரண்டு சாத்து சாத்துவதைவிட்டு
"தேசத்தின் மானமே போய்விட்டது,
மக்களே.....காங்கிரஸுக்கு ஓட்டுப் போடாதீர்கள்"
"குஜராத்தில் சேமமாய் ஆட்டம் நடத்த
நாங்கள் பாதுகாப்பு தருகிறோம்...
எங்களுக்கே வாக்களியுங்கள்"
- என்னும் விதாமாய்
உணர்ச்சி மேலிட
குதித்துத்தான் தீர்த்தது பி.ஜே.பி.!
அவர்களால் உணர்ச்சி கொப்பளிப்பில்லாமல்
எது ஒன்றையும் பேசவே முடியாது!
நண்பர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் போது...
'டீ சாப்பிட போகலாமா?' யென
அவர்கள் கேட்கும் நேரமும்
அதே உணர்ச்சி மேலிடலோடுதான்
கேட்பார்கள் போலிருக்கிறது!!
இருக்கும்! நம்பலாம்.
*
பி.ஜே.பி.யின்
அந்த முதல் குதியைக் கண்டு....
கிரிக்கெட் ஆட்டம் என்பது
ராமருக்கு கோவில் கட்டும்
சங்கதிக்கு உட்பட்டதோ?
அல்லது.....
ராமர் பாலத்தை காபந்து செய்யும் முனைப்பின்
தலையான காரியமோ?யென
ரொம்பவும்தான்
நான் குழம்பி போனேன்.
*
பிஜே.பி.யின்
'தேசத்தின் மானம் போகிறது...'
குதிக்குப் பிறகும்
மக்கள் தங்களது அன்றாட பணிகளில்
கவனம் கொண்டார்களே தவிர
இவர்களின்
அரசியல் கூத்துக்கெல்லாம்
கண்ணையோ காதையோ
திருப்பினார்கள் இல்லை.
இந்த யுகத்திலும்
ரதயாத்திரையெல்லாம் போன
நவீன அர்ஜுனன்களாயிற்றே யென
ஒரு மரியாதைக் கருதியேனும்
இந்த மக்கள்
திரும்பிப் பார்த்திருக்கலாம்.
மாட்டேன் என்றுவிட்டார்கள்.
*
ஓட்டுப் போடத் தெரியாத...
பூத்தின் பக்கம்
எந்த திக்கென அறியாத
மேல்மட்ட மக்களின்
அல்லது....
விடலைப் பருவத்தினர்களின்
அபிலாசைகளுக்கல்லவா
குரல் கொடுத்துக் கொண்டும்...
குதித்துக் கொண்டும் இருக்கிறோம்...
அந்தக் கட்சிக்கு
உறைக்கத் தொடங்கிய
நாட்களில்தான்....
"வந்தேனே....
வந்து நானும்.....
சபைக்கு...
வந்தனம் தந்தேனய்யா..."
சொல்லாமல் சொல்லும் விதமாய்
அமர்க்கள செய்தியாக வந்தார்
பி.ஜே.பி.யின் சரியான முத்திரை
இளம் துருக்கி வருண்!
*
வருணின் கசாப்புகடை பேச்சு
மீடியாக்களின் தலைப்பு தாகத்திற்கு
பால்வார்த்தது.
பக்கம் பக்கமாக
முத்து எழுத்துகளில்
அச்சுக் கேர்த்தார்கள்.
*
".............. .........களின்
கைகளை வெட்டுவேன்/
கால்களை முறிப்பேன்/
அவர்களது நாவை அறுப்பேன்..."
*
கலங்கித்தான் போனது பி.ஜே.பி.
சிகப்பு காளிஸ்வரனாக
வருண் தோன்றும்
புகைப்படக் காட்சிகள்
அவர்களை
உண்டு... இல்லையென ஆக்கிவிட்டது.
வருணின் அந்தப் பேசு என்ன
சாதாரணப் பேச்சா!?
கீழ்மட்டத் தொண்டனையும்
தலைவனாக்கும் பேச்சல்லவா!
ஆகாய அளவுக்கு
புகழ்ச் சேர்க்கும் பேச்சல்லவா!
ஒரு நொடியில்...
இந்திய மூலை முடுக்கெல்லாம்
வருண் போய் சேர்ந்துவிடுவாரே!
*
தங்களது பிரத்யோக
ஆயுதத்தை
தங்களிடம் பாடம் படித்த
கட்சிக்காரர் ஒருவர்தான்
கையில் எடுத்திருக்கிறார்
என்றாலும்.....
வருண் யார்?
நேருவின் வம்சாவளி அல்லவா?
*
பி.ஜே.பி. மேல்மட்டத் தலைவர்கள்
அத்தனைப் பேர்களும்
அன்று தொட்டு இன்றுவரை
இதையொட்டி
குழம்பலோ குழம்பல்.
என்ன செய்யலாம்?
வருணுக்கு....
ஆதரவளிப்பதா?
எதிர்ப்பைத் தெரிவிப்பதா?
ஆதரவு என்றால்...
வருண் வளர்வார்
வளர்வார்.... வளர்ந்தே விடுவார்!
எதிர்ப்பென்றால்...
சொந்தக் கட்சியிலேயே
தொண்டர்கள் கேள்வி எழுப்புவார்கள்...
"சரியாகத்தானே பேசியிருக்கிறார்!?"
"ஏன் எதிர்கின்றீர்கள்?"
*
மீடியாக்களை
மனதிற்குள் சபீத்தவர்களாக
1."அந்த பேச்சு
அவருடைய தனிப்பட்ட கருத்து.
கட்சிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை"
2."வருணின் பேச்சை வரவேற்கிறோம்"
சராசரி மனிதர்கள்
விளங்கிக் கொள்ள முடியாத
தெளிவான விளக்கம் இது!!
*
இப்படியே மாறி மாறி...
அவர்கள் குழம்ப
வருணுக்கு தேர்தலில் நிற்கத்
தடையென்றது
தேர்தல் கமிஷன்!
சிறையென்றது மாயாவதி அரசு.
*
வருணுக்கு கிட்டும்
மீடியா பரபரப்பில்
பங்குப் போட்டுக் கொள்ள
லாலுவும் மாயாவதியும்
முயற்சித்தாலும்,
இன்னமும் வருணுக்கே முதலிடம்!
*
இப்படியே
மீண்டும் மீண்டும்...
தோற்றுக் கொண்டிருக்கிறது பி.ஜே.பி.
அவர்களின்
தென் இந்திய ராஜகுருவான
சோவே கூட
பி.ஜே.பி.யின்
இந்த இரண்டு நிலைப்பாடுகளிலும்
அந்தக் கட்சிக்கு எதிராகவே
கருத்தைச் சொன்னார்.
*
ஐ.பி.எல்.கிரிக்கெட்
வெளிநாடு போனதில்
தேசிய அவமானமுமில்லை...
வருணை சிறையில் தள்ளியதில்
தப்புமில்லை
என்றுவிட்டார் சோ!
*
வாயில்லா ஜீவன்களின்
பாதுகாப்பிற்காக
இந்தியாவில் இயங்கும்
புளுகிராஸ் சேவைவாதிகளுக்கே
வகுப்பு எடுப்பவர்
வருணின் அம்மா
மேனகா காந்தி!!
"பசுவின் பால் அதன் கன்றுக்கானது!
அதை நாம் உபயோகிப்பதும் பாவம்!"
- என்று போதனைகள் செய்யும்
மேனகா காந்திக்கு
இப்படியொரு மகன்!!
வருண் நிச்சயம்
அம்மா பிள்ளையாக இருக்க மாட்டார்.
*
தனது பெயரோடு
தொங்கு தசையாக பிசிராடும்
'காந்தியை'
இனிமேலாவது வருண்
நீக்கிவிடுவது புண்ணியமாகப் போகும்.
கசாபுகடைக்காரனுக்கும்
காந்திக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?
உங்களது 'காந்தி'
உங்களின் தாத்தா வழிவந்த
காந்தியாக இருந்தாலும்....
வேண்டாம் பிளீஸ்... விட்டுவிடுங்கள்.
*
காது கொடுப்பீர்கள் என்றால்...
சொல்ல இன்னொரு விசயமுண்டு!
பெதுத் தேர்தல் முனைப்புகள்
ஆராவாரப்பட்டுக் கொண்டிருக்கும்
இந்தக் காலக்கட்டத்தில்
பாதுகாப்பாக நீங்கள்
சிறையில் இருப்பதே உசித்தம்!
தவறி... இப்பொழுது
வெளியே வரும் பட்சம்....
உங்களது பிரச்சனையின்
வலுவையொட்டி
கணக்குத் தீர்த்து
தங்களது கனவு நாற்காலியை
சுலபமாக எட்டிவிடுவார்கள் பாவிகள்!
நம் அரசியல்வாதிகள்
மஹா பாவிகள்!
அசல் அக்மார்க் பாவிகள்!!
தேர்தல் நேரத்தில்
அரசியல்வாதிகளுக்கு
ஜெயம்தான் முக்கியம்!
**** *** ***

Saturday, April 18, 2009

தாஜ் கவிதைகள் - 36 / தேர்தல் ஸ்பெஷல்: மேடை


தேர்தல் ஸ்பெஷல்:
மேடை
----------
- தாஜ்
*
இரவில் சூரியன் உதிக்கும்
பகலில் சந்திரன் காயும்
பூக்காத செடி பூக்கும்
காய்க்காத மரமும் காய்க்கும்
எட்டிகூட இனிக்கும்
மலடி மட்டுமல்ல
குடுகுடு கிழவியும் பிரசவிப்பாள்.
கழுதைகளுக்கும்
தெரியவரும்
கற்பூர வாசனை
நரிகளெல்லாம் இனி
நாய்களாகும்!
வீடுகளைச் சுற்றிவரும்
கண்டவர்களுக்கும் வாலாட்டும்.
*
புல்லாங்குழலாய்
மயக்குகிறது
தூரத்தில் கேட்கிற ஊளை.
கூசும் ஒளி வெள்ளம்
இரவைப் பகலாக்க
மேடை போட்டாகிவிட்டது
பொறுத்திருங்கள்
பொதுத்தேர்தல் வருகிறது.
**** **** **

Friday, April 10, 2009

தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்-4


தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்-4
*** *** ***
தேர்தல் மஹாத்மியங்கள்!
-----------------------------------
அன்புடன்
ஆபிதீன்…..
*
நாடாளுமன்றத் தேர்தல்-2009
அமர்க்களமோ அமர்க்களம்.
அரசியல் கட்சிகளின்
ஸ்பெஷல் ‘காப்ரே’யை
நீங்களும் ரசித்திருப்பீர்கள்தானே!
*
இனாம் லேப்டாப்
இனாம் சைக்கிள்
இனாம் அரிசி
இனாம் கோதுமை
இனாம் பசுமாடு கன்னுக்குட்டி
இனாம் கடன் வசதி
இனாம் கடன் தள்ளுபடி
இனாம் வீட்டு மனை
இனாம் வீடு
இனாம் மருத்துவம்
இனாம் மாதாந்திரப் பணம்
ரேஷன் சாமான்களை வீட்டிற்கு
இனாமாக கொண்டுவந்து தருதல்.
இப்படி.......
இந்தப் பட்டியலின் நீளம் அதிகம்
எழுதி காட்டித் தீராது.
ஆண்களுக்கு…
நாளுக்கொரு வப்பாட்டி
பெண்களுக்கும்…
அதே காலக்கணக்கில் வப்பாட்டன்
தருவோம் என்பதைத் தவிர
பிற அத்தனையும்
அந்த நீண்ட பட்டியலில் இருக்கிறது.
*
சென்ற சட்டசபைத் தேர்தலில்
கலைஞர்
கையிலெடுத்த ஆயுதத்திற்கு
பேட்டன் ரைட்
வாங்கி இருப்பாரேயானால்
இந்திய அரசியல் கட்சிகள்
விழி பிதுங்கியிருக்கும்.
ஏதோ போகட்டுமென
இந்தியாவுக்கே
தமிழகம்வழி காண்பித்திருக்கிறது!!
*
வெள்ளைக்காரனை
மண்ணைவிட்டு துரத்திய
பெருசுகள்
இந்த நாட்டிற்கு
‘மேக்-அப்’பெல்லாம் போட்டு,
ரசித்து
வாய்களின் வழியே
காதுகளுக்கு
சொல்லப்பட்ட குடியரசில்…
‘மக்கள் எல்லாம் மன்னர்கள்
இந்த பூமி அவர்களுடையது
மந்திரிகள்
அவர்களின் எடுபிடிகள்….அல்லது
சேவகர்கள்’!
யதார்த்தத்தில்….
இன்றைக்கு
சேவகர்கள் மன்னர்களுக்கு
பிச்சைப் போட
போட்டா போட்டி
அறிவிப்பு செய்கிறார்கள்!
*
அவர்கள்
சுரண்டிக் குவித்திருக்கும்
அந்தக் குவியலில் இருந்து
தர்மம் என்றாலும் கூட
போகட்டும் எனலாம்.
நம் வரிப் பணத்தில் இருந்து
நமக்கு பிச்சை இடுவதற்கல்லவா
இந்த போட்டியும்!!
இந்த அறிவிப்பு கத்தலும்!!!
*
சரியாக யோசித்தால்....
ஓட்டுக்கு….
வெளிப்படையான
கையூட்டு இது.
இவர்களேதான்…
ஐம்பது ரூபாய்
கையூட்டு பேர்வழிகளை
செய்தித்தாளில்
தினமும் பிடிக்கிறார்கள்.
என்ன லாஜிக் ஐயா இது?
*
தேர்தல் அறிக்கையில்
பிற கட்சிகள்
செய்யாத அறிவிப்பு ஒன்றை
ப.ஜ.க. செய்திருக்கிறது!!
அதன் தனி சிந்தனை
எப்பவும் உலகப் பிரசித்தம்!
இப்போது அது....
இன்னும்பிரகாசிக்கிறது.
தங்களது கட்சி ஜெயித்தால்…
‘நமது நாட்டினர்
சுவிஸ் பேங்க்-ல்
போட்டு வைத்திருக்கும்
அத்தனை பணத்தையும் எடுத்து வந்து
அரசாங்கம் நடத்தவும்,
ஏழைகளுக்கு உதவவும்
பயன்படுத்துவோம்!’ என்கிறது.
*
ரூம் போட்டு யோசித்து
புது புது அறிவிப்பை
செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
*
எல்லா அரசியல் கட்சிகளும்
அந்தவகை பணக்காரர்களுக்கு
அடிமைச் சாசனம்
எழுதி கொடுத்துவிட்டுதானே…..
அவர்கள் சிதறவிட்ட
பிச்சைக் காசில்தானே…..
ரதயாத்திரை என்றும்
தேர்தல் பவனியென்றும்
நம்முன் வருகிறார்கள்!!
பின் எப்படி?
சுவிஸ் பேங்க்…
டிரில்லியன் டாலர்களின்
மீட்பெல்லாம்?
*
டில்லிக்கு எவன் வந்தாலும்…
அமெரிக்காவில் இருந்து
காலையில் வரும்
‘ஒயிட் ஹவுஸ்’
Fax Message-ஐ
பார்த்து விட்டுதானே
நாற்காலியிலேயே குந்த வேண்டும்!
இதில்....
நான்... நாங்கள்…
என்னவேண்டிக் கிடக்கிறது?
தேர்தலே கூட
என்ன வேண்டிக் கிடக்கிறது?
*** *** ****
- தாஜ்

தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்-3


தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்-3
*** **** ****
சிரஞ்சீவி!
-------------
அன்புடன்
ஆபிதீன்…
*
நாட்ல
‘தேர்தல் மேளா’
நடக்கும் புண்ணியத்தில்…
பொழுது கொஞ்சம் விசேசமாகவே போகிறது.
கிட்டெ இருந்து நான் பார்க்கும் ஒன்றை
தூர இருந்து நீங்க பார்ப்பவரா இருந்தாலும்
கவனிப்பில்…. ம்!
*
தமிழகத்தில்
இந்த மேளா…. அத்தனைக்கு ஜோர் இல்லை.
வடக்கே கலக்குறாங்க!
உட்கார்ந்து இருந்தவங்களும்
படுத்துக் கிடந்தவர்களும்
எழுந்து
குதிக்கிற குதி
கவனத்தைக் ஈர்க்கிறது.
*
வஞ்சனையே இல்லாது
மம்தா பனர்ஜியும்
மாயாவதியும்
இந்த மேளாவிலும்
பிரமாதப்படுத்துறாங்க.
இவர்கள் குதிக்கும் குதியில்
பா.ஜா.க.வின்
ஆதி தாண்டவ ஆட்டம்
காணாமல்....
போயே போச்சு.
*
தெற்கே….
இந்த ஆட்டத்திற்கு
ஆண்கள்தான் ஜோர்.
கருணாகரனின் ஆட்டம்
இந்த முறை களைகட்டவில்லை
என்பது ஓர் சோகம்.
முன்னால் பிரதமர்
கௌடா அந்த குறையை தீர்த்திருக்கிறார்.
உடம்பு குலுங்காது
ஆடும் அவரது ஆடாத ஆட்டம் ஜோர்.
கம்யூனிஸ்ட்டுகளின்
கதகளியும் பார்க்கப் பிடிக்கிறது.
*
தமிழகத்தில்....
எப்பவும் கருணாநிதிதான்
நம்பர் ஒன் ஆசாமி!
இந்த முறை
கொஞ்சம் முன்னாடியே
குறுக்கே புகுந்து
‘த கிரேட் மேதை’ சோ
என்னதான் ஆடினாலும்
முதல்வரின்
சக்கர நாற்காலி சுற்று ஒன்றுக்குத்
தாங்கவில்லை சோ!
ஜெயா…
பரதநாட்டியம் கற்று தேர்ந்திருந்தாலும்
பார்த்து ரசிப்பது மாதிரி
அவருக்கு ஆடத்தெரியவில்லை.
ஆடியவர்தான்…
மறந்து விட்டது.
சட்டசபையில் சேலையை
உருவிப் போட்டு
ஆடிய அவரது ஆட்டமெல்லாம்...
பொன்னெழுத்தில் மின்னும்
தமிழக சரித்திரம்!
*
ஆந்திராவில்..
சத்திய நாராயணா
ஆடிய ஆட்டத்திற்கு
கட்சி தொடங்கியிக்கலாம்
எளிதாக வென்றிருப்பார்.
அவருக்கு புத்தி சொல்ல
ஆளில்லாமல் போய்விட்டார்கள்.
*
தெலுங்கு தேசம்
காங்கிரஸ்
இரண்டும் அங்கே
கிழ ஆட்டம் போட
பிரஜா ராஜியம்
ஆட்டமே போடாமல்
அசத்துகிறது.
*
சிரஞ்சீவியின்
பத்திரிகை பேச்சையெல்லாம்
விடாமல் படிக்கிறேன்.
அவரது ஒவ்வொரு வார்த்தையும்
அரசியல் ஆட்டமில்லாமல்தான் இருக்கிறது.
‘ஆந்திராவுக்கு
தேவதூதன்
விஜயம் செய்திருக்கிறானோ…!!’
நிஜமாகவே எண்ணனத் தோன்றுகிறது!
**** **** *****
- தாஜ்

தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்-2

தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்-2
*** **** ***
பிரதமர்கள் ஆயிரம்!!
----------------------------
அன்புடன்
ஆபிதீன்…
*
கவனித்த வகையில்…
இந்த நாடாளுமன்ற விசேசம்:
*
எல்லா மாநிலக்
கட்சிகளுக்கும்
பிரதமர் பதவிமீது
கண் விழுந்திருக்கிறது.
*
இன்னும் கலைஞர்
அது குறித்த தனது
ஆசையை வெளிப்படுத்தாதது
ஆச்சரியமாக இருக்கிறது.
*
மந்திரிகள்…
இன்னொரு ஸ்பெக்ட்ரான்…
கோடிக்கணக்கில் கோடிகள்….
போதுமென நினைக்கிறாரோ என்னவோ?
*
அதுதான் நிஜமெனில்…
எல்லா மாநிலக் கட்சிகளைவிட
குறைவாக ஆசைப்படும்
கலைஞரை பாராட்டலாம்.
*
- தாஜ்
*
பின்குறிப்பு:
இந்திய சுற்றுலா வாரியத்திற்கு
ஓர் யோசனை கூறத்தோன்றுகிறது.

உலக சுற்றுலாவாசிகளை கவர
நமது பாராளுமன்ற தேர்தல் கால வைபவத்தை
முன்வைத்து விளம்பரம் செய்யலாம்.
உலக பயணிகள்
வந்து குவிய வாய்ப்பு உண்டு.
***** ***
satajdeen@gmail.com

தேர்தல்- 2009: நண்பரோடு பகிர்தல்- 1


தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்-1
*** ** *
வாழும் செய்திக் குறிப்புகள்.
------------------------------------
ன்டபுன்அ…….
ன்தீபிஆ
எழுதுவதற்கு ஒன்றுமில்லை.
எழுதாமலும் இருக்க முடியவில்லை.
எதுவும் இல்லாது போனாலும்
இன்றைய டைரியை எழுதலாம்.
கருணாநிதி உபயம்.
அவரது ஹாஸ்பிட்டல் டைரி
இப்பொழுது பத்திரிகையில் பிரபலம்.
நானும் எப்படியெல்லாமோ யோசிக்கிறேன்…
எதற்காக
கருணாநிதியின்
ஹாஸ்பிட்டல் டைரியை
பத்திரிகைகளில்
பிரசுரிக்கத் தருகிறார்கள்?
புரியலை சாமி!
சுப்ரமணியசாமியுடைய
அரசியலைவிட
கூத்தாக இருக்கிறது.
***
1. பா.மா.க. யாரோடு கூட்டு?
விஜயகாந்த் முடிவெடுத்துவிட்டாரா?
சிறுத்தைகளை
காங்கிரஸ் விழுந்து
பிறண்டாமல் இருக்குமா?
இஸ்லாமிய கட்சிகள்
எப்படியான வார்த்தைகளில்
முதலமைச்சரையும்,
அம்மாவையும் புகழப் போகிறது?
அவர்கள் இவர்களுக்கு
என்ன மாதிரி அல்வாவை
எந்தப் பதத்தில் கிண்டி
கொடுக்கப் போகிறார்கள்?
இவற்றை அறிய
நம் மக்கள் மத்தியில் நிலவும்
அசாத்திய மௌனம்
சாதாரணமானதல்ல!
‘த்ரில்’ கூடியதாக இருக்கிறது.
*
2. முதலமைச்சர்
ஹாஸ்பிட்டலில் இருந்து
007% உயிரோடு
சக்கர நாற்காலியில் உருண்டு வந்து
2009 பார்லிமெண்ட்
எலெக்சனை நடத்துவதென்பது
கின்னஸ் சாதனை!!
**** **** ***
satajdeen@gmail.com