Wednesday, June 04, 2008

தாஜ் / சிறுகதை - 6தி ல் லா னா.
-----------------------
- தாஜ்


அண்ணா பண்ணாட்டு முணையத்தின் மின் அறிவிப்பு பலகை மீண்டும் ஒரு முறை அவளை ஏமாற்றியது. எமிரேட்டின் வருகைதொடர்ந்து தாமதம்! அனு இடது கையைத் திருப்பி, 'ரோல க்ஸ்' சின்ன சதுரத்தைப் பார்த்தாள். 11.20 pm! இப்பவே அரை மணி தாமதம். இன்னும் ஒரு மணி காத்திருக்க வேண்டும்!
*
வீட்டில் டின்னர் முடித்து கை அலம்பியபோது, அவளை செல்லில் கூப்பிட்டான் ஜே.பி.
*
அனு......
*
ஹைய்....... ஏர் போர்ட்டுக்குத்தான் கிளம்பிக்கிட்டு இருக்கேன்.
*
ரியலி....
*
ம்....
*
துபாய்... டூட்டி ஃபிரில ஏதேனும்.... வேணுமா?
*
நோ..டேங்ஸ்... அங்கெங்கே?
*
துபாய்தானே டிரான்ஸிட்...! இங்கிருந்து எமிரேட்ல... சிங்கார சென்னை! பட் தாமதமாகும்போல் தெரியுது!
*
ஓய்...?
*
தேஸே... டெக்னிக்கல் பிராபளம்!
*
அப்புறம்...?
*
ஹாஃபனவர்ல சரியாயிடும் என்கிறானுங்க....
*
தட்ஸ் ரைட்..னா.....
*
எங்கே.....? பொய் சொல்றானுங்க...
*
வாட்...யூ... மீன்...?
*
அல்கெய்தா... அனாமஸ் கால்ன்னு... இங்கே தாம்தூம் நடக்குது! எல்லா ஃபிளைட்டையும் துருவோ துருவு....
*
வாட்......? என்ன சொல்றெ?
*
மிரட்டல் ஃபோனெல்லாம்.... இப்ப ரோம்ப ஃபேஷன் அனு!
*
ஃபி சீரியஸ்....
*
புரளியாதான் இருக்கும். என்ன கொஞ்சம் லேட்டாகும். 'லண்டன் வாரண்ஸ்டிரீட்' குண்டு வெடிப் புக்குப் பிறகு... எல்லா நாடுமே ரொம்ப அலாட்! எனிவே... நான் வந்துடுவேன். நாளைக்கு நம்ம ஃபஸ்ட் வெட்டிங் அனிவெஸ்ரியாச்சே!
*
ஆமாம்ல....
*
ஃபிளீவ் அனு, லண்டன்ல இன்னும் இரண்டு நாள் வேலை பாக்கி இருக்கு. ஸ்பெயின் கஸ்டமர் வில்லியம் டோரா நாளை காலை ஹோட்டல் ஷராட்டன்ல நாம சந்திக்கிறோம்ன்னு மெயில் அனுப்பி இருந்தான். முடியாது, போடா போன்னு பதில் எழுதிட்டு ஓடியாரேன் அனு...
*
சந்தோஷம்! கட் பண்ணட்டாம்..?
*
ஒன் மினிட்.... 'ரோமம்'கிற சிற்றிதழ்ல வந்திருந்த உன் 'அக்னி குஞ்சு' கவிதைய படித்துப் பார்த்தேனே....!
*
ரியலி.... இன்னைக்கு காலையில்தானே எனக்கே அந்த இதழ் கிடைச்சது... அதுக்குள்ளே.... அங்கே... எப்படி?
*
இங்கே, நம்மைத் தேடி வந்திருக்கிற புது கம்பெனியின் ஷேரெல்லாம் படுடாப்! இந்த இயர் பிஸ்னஸ்காக அவனுங்களோட தர்ட்டி மில்லியனுக்கு.... காண்ராக்ட் சைன் பண்ணியிருக்கேன் அனு....!
*
ஜே.பி. வாட் ஆர் யூ டாக்?
*
இந்த வருஷம் பர்ட்டிகுலர் காண்ராக்ட்ல மட்டும் சுளையா சிக்ஸ்ட்டி பர்செண்ட்டுக்கு குறை யாம லாபம் பார்க்கலாம்!
*
ஜே.பி....... ரோமம் பற்றி, அதில் என் கவிதைப் பற்றி, சொல்ல வந்ததை..... முதலில் சொல்லு!
*
லண்டன் ஏர்போர்ட்ல லப்டாப்பெ திறந்து, 'ஈரோ' மார்கெட்டைப் பார்த்துட்டு, அப்படியே ஊர்வம்பெ தேடி ராயர்கிளப், மரத்தடி, சந்தைப்பேட்டை, திறிஞ்சப்போ.... ஆப்பக் கடைல...
*
கம் டு த பாயிண்ட்...
*
ரோமத்தில் வந்திருக்கிற உன் கவிதையை பிரசுரிச்சி.... காரசாரமான விவாதம் நடந்தது.
*
இஸிட்..?
*
ஏன்... வீட்ல நீ... நெட்டை திறக்கலயா?
*
ம்ஹும்... வைரஸ்....
*
உன் கவிதைகள் எல்லாம் பாலியல் ரீதியானது என்றும், தில்லானா மாதிரியான பெண்கள் இப்படி கவிதை எழுதலாமா? என்றும்மூக்கைச் சிந்துது ஒரு குரூப். பெண்களின் அடக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடுன்னு..... உனக்கு ஆதரவா இன்னொரு குரூப்.
*
சடையாண்டி என்னை திட்டித் தீர்த்திருப்பானே?
*
பின்னே... அவன்தான் பெரிய எதிர்ப்பு குரலே.
*
முழு மடையனவன்...!
*
விடு அனு... எல்லாம் ஏற்கனவே பேசப்பட்டபேச்சுதான்! உன் 'கிளிப்பச்சை' கவிதையை சிலபேரு இன்னும்கூட சிலாகிக்கிறாங் கத் தெரியுமா? எனக்குதான் உன் கவிதைகள் பற்றி ஒன்னுமே புரிய மாட்டேன் என்கிறது! அதென்ன அனு... அடக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு?
*
ஜே.பி..... யூ ஆர் ஜோக்கிங்....?
*
நிஜம் அனு!
*
போதும்....
*
இருக்கே....
*
சொல்லு....
*
நாவல் எல்லாம் எழுதுறதா நீ எனக்கு அறிமுகப் படுத்தினியே..... உன் ஃபிரஃண்ட் விஸ்ணு!
*
ஆமாம்.....
*
அந்த விஷ்ணுதான், இந்த கவிதையை ஆப்பக்கடையில் சபை ஏற்றி... 'ரோமத்தில்' வந்ததென்ற அறிமுகத்தோடு அமர்க்களம் பண்ணி வச்சிருக்கார்! பெண் எழுத்தாளர்களில் அம்பைக்கு பிறகு, தில்லானாதான் நம்பிக்கை தரும் எழுத்தாளர் என்று அபிப்ராயமும் செய்திருக்கிறார்!
*
அப்படியா....?
*
எஸ்... அனு! யாரு அந்த அம்பை?
*
அவுங்க பெயர் லெட்சுமி! சீனியர் ரைட்டர். இப்போ பம்பாயில் தாமசம். தன்னார்வ தொண்டல் லாம் செய்துகிட்டு இருக்காங்க!
*
ஓ...கிரேட்! ஸோ... இலக்கியத்துக்காக லெட்சுமி அம்பை ஆன மாதிரி, என் அனு..... தில்லானாவா ஆயிட்ட!
*
புரிஞ்சிடுச்சில.... வந்து சேரு! பாக்கிய நேர்ல பேசலாமே... ஜே.பி.!
*
ஓ.கே..... ஒரே ஒரு கமெண்ட் மட்டும். தட்ஸ் ஆல்!
*
சொல்லு...
*
தமிழ்ச் சிற்றிதழுக்கு ஏன் ரோமம்ன்னு சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கனுமாம்...? அழகாக அசல் தமிழிலியே வைத்திருக்கலாமே ன்னு ஒரு அன்பர் ஆப்பக் கடையில கமெண்ட் செய்தி ருந்ததைப் படிக்கவும் சிரிச்சு மாளலே....
*
வை போனெ...
*
*****
மீண்டும் கையைத் திருப்பினாள். 11.30pm! விமான நிலையத்தின் வளாகத்திலிருந்தே இரவு, கண்ணுக்கு எட்டியத் தொலைவிற்கு விரட்டி அடிக்கப்பட்டிருந்தது. மக்களின் திமு திமுவும், ஒளிவெள்ளமும் அவளை இம்சைப் படுத்தியது. கூடவே நின்ற சாந்தி குட்டியை, பக்கத்தில் கிடந்த ஒரு இருக்கையில் அமரச் சொன்னாள். அவளை குனிந்து பார்த்து, ''குட்டிக்கு தூக்கம் வருதா?'' என்றாள். இல்லை என்று தலையாட்டினாள் குட்டி. அனுவின் பங்களாவில் பணி புரி யும் குருவம்மாவின் கடைசி மகள் அவள். பேச்சு வராது. ஊமை! அனுவுக்கு ரொம்ப செல்லம்! அவள் எங்கு போனாலும், குட்டி ஒட்டிக்கொள்வாள். சிங்கப்பூர், மலேசியா பயணிகள் வெளியே றிக் கொண்டிருந்தார்கள். வெளிநாடுகளுக்கு சென்று திரும்புகின்றவர்களை பார்க்கவும், வரவேற் கவும் அங்கு கூடுகிற கூட்டம் அவளை ஆச்சரியப் படுத்தியது! இன்றைக்கு, மனிதர்களிடம் இத்தனைக்கா அன்பு கரைபுரள்கிறது?
*
வந்திறங்கும் சிங்கப்பூர், ,மலேசியா ,பயணிகளில் ,பாதிக்கு மேல் ,வியாபாரிகளாமே! ,போடும் முதலுக்கு ,இருபத்தி ,நான்கு மணி நேரத்தில் லாபத்தை பார்த்துவிடும் திறமை கொண்டவர் களாமே! நம் பொருளாதாரத்தில் ,ஆங்காங்கே சின்னச் சின்ன ,ஓட்டைகள் விழுவது இவர்க ளால்தான் என்று என்.வி.மணி சர்மா ஒருதரம் இண்டியன் எக்ஸ்பிரஸில் விரிவாக கட்டுரை ஒன்று எழுதியிருந்தது அவளின் ஞாபகத்திற்கு வந்தது.
*
ஜே.பி.கூட வெளிநாட்டை குறிவைத்து லாபம் பார்க்கும் வியாபாரிதான்! இவர்களை மாதிரி பத்து பன்னிரெண்டு பாஸ்போர்ட் வைத்துக் கொண்டு, தினைக்கும் பறந்து அல்லாடுபவன் அல்ல. மேற்கத்திய நாடுகளில் இவன் பொருளைத் தேடும் கம்பெனிக ளோடு ஒரு வருஷம், இரண்டு வருஷம் என்று தீர கான்ராக்ட் போட்டு, பேங்கேரண்டியோடு எக்ஸ்போர்ட் செய்பவன். வெறும் இலை, தழைகளை ரீபர் கண்டைனர்களில் பண்டல் பண்டலாய் ரொப்பி, டன் கணக்கில் பெரும் டாலரை கறந்து விடும் சமர்த்தன்! 'கிரீன் இந்தியா' என்று ஆந்திரா கோதாவரியின் ஒரு சுழிப்பில் 300 ஏக்கரில் ஃபாம் இருக்கிறது! அத்தனை ஏக்கரிலும் வேம்பு, மருதாணி, துளசி, கீளாங்கன்னி என்று பயிரிட்டு வளர்த்திருக்கிறான். அதன் இலை, தழைகள் குப்பையல்ல! டாலர்!!
*
ஜே.பி. என்கிற ஜெய பிரதாப் 'எம்.எஸ்.ஸி' அக்ரி! ஆரம்பத்தில் ஒரு டுபாகோ கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவாக சேர்ந்து, அந்த கம்பெனி ஆந்திராவில் விளைவிக்கும் புகையிலை க்கு ஐரோப்பாவில் புதிய ஆடர்களை தேட அங்கே போனான்! தன் துறையைச் சார்ந்த இந்திய பொருட்களின் அதிமுக்கிய தேவைகள் எது எது என்று அங்கே அவனுக்கு புரிந்து போனது. அடுத்த ஆறு மாதத்தில் வேலையை துறந்து, பேங் உதவியுடன் சின்ன அளவில் தொடங்கி யதுதான் இந்த 'கிரீன் இண்டியா'! மூன்றே வரு டத்தில் வளர்ந்து, நிலைத்தும் விட்டான். மேற்கத்திய மூலிகை மருத்துவ கம்பெனிகள் தங்களின் தேவைகளுக்கு அணுகும் இந்திய சப்ளையர்ஸ் பட்டியலில், இன்றைக்கு நம்பகத் தன்மை கொண்டதாக விளங்குகிறது 'கிரீன் இந்தியா'!
*
கும்பகோணத்திற்கும் மேற்கே, காவிரி கரையோறம் வெறும் ஐந்து ஏக்கர் நஞ்சையில் ஐ.ஆர். எட்டையும், கட்டைப் பொன்னியையும் நட்டு... வானத்தை பார்த்து பார்த்து... லொக்கு லொக்கு... இரும்பி ஆஸ்த்மாவிலேயே போனவர் பிரதாபின் அப்பா! அவனது வெற்றியைப் பார்க்க அவர் இல்லை. பிரதாபின் இந்த வெற்றி சீக்கிரம் தளைத்த ஒன்றென்றாலும், முயற்சியும் கடின உழை ப்பும் கூடிய கலவியில் சரியாக சமைந்த வெற்றியது!
*
யூ...சி.. அனு, நெக்ஸ்ட் இயர் பிஸ்னஸ் லையன்லே, நம்ம 'நிதி பிரதர்ஸ்...' எனக்குப் பின்னாடி தான் இருப்பார்கள்...
*
யாரெ சொல்றெ? மூன் டி.வி. நெட் ஒர்க் சேர்மேன்களையா?
*
எஸ்...!
*
ஹவ்...?
*
'பிஸ்னஸ் மென் இன் சவுத் ஆசியா' லிஸ்டில் அந்த ஜெண்டில்மென் சகோதர்கள் ஒன் ஆஃப் த பவர் ஃபுல்!
*
தெரியும்...
*
மூன் நெட் ஒர்க் எவ்வளவு பெரிய கன்ஷன்! இப்போ ஒரு பெரிய பத்திரிகை குடும்பத்தை வாங்கி, அதிலும் கால்பதிச்சு ஜெய்த் தும் காட்டியிருக்காங்க!
*
எக்ஜாட்லி! நீ சொல்றது ரொம்ப சரி. பட்... வெயிட் அண்ட் ஸி.... கிரீன் இண்டியா இப்போ கர்நா டகாவுல ஃபாம் பண்ணி இருக் கிற ஐநூறு ஏக்கர்ல பப்பாயா ஹார்வெஸ்ட் ஆரம்பிக்க தொட ங்கிச்சின்னா... பாரு அப்போ...! அந்த லிஸ்ல நான் இடம் பிடிக்கத் துவங்கிடுவேன். வித் இன் டூ இயர்ல நிச்சயம் நான் எகிறிடுவேன் அனு. வெஸ்டனுல இந்திய பப்பாயி... இஸ்... லைக் கோல்ட்!
*
என்றைக்கும் அவன் பல சிந்தனைகள் என்று ஆட்படாதவன். ஒரே சிந்தனைதான். ஒரே பாதை தான். அது போய் சேருமிடம் பணம் என்பதாகத்தான் இருக்கும்! பணம் அவனுக்கு எப்பவுமே திகட்டுவதில்லை!
*
போன மாதத்தில் ஓசூருக்கு பக்கத்தில் இரநூறு ஏக்கர் புன்செய் பகுதியை அடிமாட்டு விலை க்கு வாங்கி இருக்கிறான். ஆடாதொ லையையும், காட்டாமணியையும் பயிரிடப் போகிறான். ஒன்று மருத்துவ குணம்! இன்னொன்று பயோ பெட்ரோல் புராடக்ட்! இரண் டுக்கும் ஜெர்மனி யில் ஏக டிமாண்ட்! மோப்பம் பிடித்து வந்தவன்... ஓசூரில் அதற்கான ஃபாமை எஸ்டாபிலிஸ் செய்ய தொடங்கி விட்டான்!
*
யூ..நோ... நமது கிராமத்துப் பக்கம், வீட்டு வேலிகளில் எல்லாம் கவனிப்பார் அற்று கிடக்கும் இந்த ஆடாதொலை செடிகளின் தழைகள் ஈரோப்பின் யுனேனிய மருந்து தயாரிப்புக்கு எவ்வளவு டிமாண்ட் தெரியுமா... தில்லானா?
*
எனக்கு எப்படி தெரியும் ஜே.பி.? இட்ஸ் நாட் மை பிஸ்னஸ்!
*
தில்லானா என்றால் தீவிர இலக்கியமே 'ஆ' என்கிறது! ஆஃப்ட்ரால்... ஆடாதொலையையும், அதன் மார்கெட் வேல்வூவும் தெரியாது என்கிறாயே?
*
என் கவிதை ஏதாச்சும் உனக்கு புரியுமா?
*
ஐயம் சாரி....... அது தண்டணை!
*
அப்படிதான் உன் ஆடாதொலையும்!
*
என் பிஸ்னஸ் யுக்தி, கிரின் இந்தியா, அதை நம்பி பதினைந்தாயிரம் தொழிலாளிகள், அவர்க ளின் எண்ணிக்கை அடுத்த வருடத் தில் இரட்டிப்பா உயர இருப்பது என்று எதைப் பற்றியும் உனக்கு புறிய வாய்ப்பே இல்லை!
*
அதான் நீ இருக்கியே! விடு... ஜே.பி....... போதும்!
*
பட் ஒன் திங், இந்த தமிழ்த் தொடர் கதையெல்லாம் நானும் ஒரு காலத்தில் ஆ.....ன்னு படிச்சிருக்கேன். ஆப்டர் மை காலேஜ்,அதெல்லாம் தூரப் போயிடுச்சு! ரெண்டு வக்கீலுங்கள விட்டு கதை எழுதுவாரே..... ஹூ ஈஸ் தட் ஜெண்டில் மேன்?
*
சுஜாதா....!
*
எஸ்.... அந்த ரைட்டர் படு பிர்லியண்ட்! அவர் கதைகளில் வக்கீல்கள் துப்பறியிற மாதிரி...... போலீஸ்காரர்களை விட்டு அவர் கோர்ட்ல வழக்காட வைத்து எழுதினா நல்லா இருக்குமே ன்னு.... அப்போ நினைப்பேன்!
*
ஹை... நல்லா இருக்கே.... சுஜாதாவுக்கு எழுதுறேன்.
*
ஆஃப்டர் காலேஜுக்கு அப்புறமும் வேலை வெட்டி இல்லாமே... உன் ஃபிரஃண்ட் விஸ்ணு மாதிரி ஒரு ஜிப்பாவும் ஜோல்னாபையும் மாட்டிக்கிட்டு, லைபரரி லைபரரியா திரிஞ்சி, அதைப் படிக்கிறேன், இதைப் படிக்கிறேன்னு நின்னா..... யூ லைக் மீ?
*
ஜே.பி. என்ன சொல்ல வர நீ! யூ..... ஆர் டோட்டலி ராங்.....
*
கருவேபில்லையாவது காசாகும்.... உங்க கவிதை?
*
காசு மட்டும் வாழ்கை இல்ல ஜே.பி.!
*
யூ நோ... எங்க அப்பா வைத்தியம் பார்க்க காசு இல்லாம, ஆஸ்துமால.... பார்க்க பாவமா செத்தார்.
*
ஐயம் ஸாரி, நிறைய தரம் சொல்லி இருக்கே...
*
ஐ.... மீன்... வாட் ஐ... மீன்...
*
ஜே.பி.... ரிலாக்ஸ்..... விடு.
*
*********
சிரித்தப்படியே மின் அறிப்பு பலகையைப் பார்த்தாள். மீண்டும் நாற்பத்தி ஐந்து நிமிடம் தாமதம் என்றது. ஹாண்ட் பேக்கில் இருந்து செல்லை எடுத்து அதன் ஸ்கிரீனுக்குள் விஸ்ணுவை இழுத்து பொத்தானை அழுத்தினாள், எதிர் முனையில் மணி அடித்தது.பதிலில்லை. நேற்றில் இருந்து அவனது அழைப்பும் இல்லை. ஆப்பக்கடையில் என் கவிதையையும், பாராட்டையும் பதிவு செய் திருக்கிற அவன்... செல்லில் சிக்காதது ஏன்?இத்தனைக்கும் அவனிடம் நிரம்ப உரிமை எடுத்துக்கொண்டு பேசிபழகுபவள் அவள். அவனது மென்மையான அனுகுமுறை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். அவனை திருமணம் முடிப்பவள் அதிஸ்டசாலி என்பாள்! நிறம்ப படித்திருந்தாலும், பணத்தைத் தேடி பறக்காத அவன் செய்கை அவளுக்கு வியப்பு கலந்த ஆச்சரியம்!
*
கிராமத்தில் இருக்கும் சொந்தகாரப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி வீட்டில் வற்பு றுத்துவதாகவும், இரண்டெரு நாளில்நிச்சிய தார்த்தம் வைக்க பரபரக்கின்றார்கள்... நான் என்ன செய்யட்டும்? என்று கடைசியாக பார்த்தப்போது கேட்டான். அது உன் இஸ்டம் என்று சொல்லி இருக்கலாம், ஆனால், அப்படி நான் சொல்லவில்லை! அதற்கு காரணமும் விளங்கவில்லை. ''விஷ்ணு.... நீ எழுதிக் கொண்டிருக்கும் பாற்கடல் நாவலை முடித்தப் பிறகு உன் கல்யாணத் தைப் பற்றி யோசி'' என்று நான் அவனி டம் சொன்னது கூட யதார்த்தமான பேச்சுதான். இன் றைக்கு அவனுக்கு நிச்சயதார்த்தமோ என்னவோ! பற்கடலை முழுமையாக எழுத, திருமணம் தேவையென்று அவன் நினைத்திருக்கலாம் என்றும் படுகிறது!
*
ஆப்பக்கடையில் அவன் எழுதியதற்கு நன்றி சொல்லவும், அது குறித்தான எதிர்வினைகளை அறியவும் விஷ்ணு அவளுக்கு வேண்டியதாக இருந்தான். குறிப்பாய் சடையாண்டியின் எதிர் வினைப் பற்றி! தனது கவிதைகளில் வெளிப்படும் பாலியல் ரீதியான, கவித்துவம் கொண்ட குறியீடுகளை, நேரிடையாக அருத்தப்படுத்தி அசிங்கம் செய்பவன் அவன் என்கிற கோபம் அனு வுக்கு உண்டு. தனது வக்கிரத் திணவுகளை எழுத்தில் பதிவு செய்ய தனது கவிதைகளை தொட ர்ந்தவன் பயன்படுத்தி வருகிறான் என் றும் கருதினாள். சடையாண்டி என்கிற புனைப்பெயரில் எழுதுவது யார் என்று அவள் அறிவாள்! சைஃபர் பேஸில் உலாவும் இன் னொரு ராஸ்கல்!
*
விஷ்ணுவுக்கு மீண்டும் தொடர்பு கொள்ள முயன்று, தோற்று, தனது சகாவும் நெருங்கியத் தோழியுமான நாச்சியாவின் நம்பருக்குமுயற்சி பண்ணினாள். நபிஸா பானு என்கிற நாச்சியா..., சமீப காலமாய் சிறு பத்திரிகைகளில் நிறைய கவிதைகள் எழுதி வருகி றாள். பாலியல் ரீதியான கவிதைகள் என்கிற குற்றச்சாட்டு இவளது கவிதைகளுக்கும் உண்டு! சரியாகச் சொன்னாள் இந்தக் குறச் சாட்டில் அதிகம் பேசப்படுபவளே அவள்தான்! புனைப் பெயரில்தான் கவிதைகளை எழுதி வருகிறாள் என்றாலும் மதம் குறித்த, அதன் பிறாண்டல் குறித்த அச்சம் எப்பவும் உண்டு. தன்னை இன்னொரு தஸ்லீமா நஸ்ரினாக ஆக்கிவிடுவார்களோ என்பதற்கா கவே புதிய பாஸ்போர்ட்டுக்கு அப்ளையும் செய்திருக்கிறாள்!
*
ஆரம்பத்தில், அவள் கவிதைகள் எழுதுவது அவளது கணவனுக்குகூடத் தெரியாது. அப்படித் தெரிய வந்தால், 'கொத்துப் புரோட் டா கடை வைத்திருக்கும் தன் கணவன் தன்னை புரோட் டாவுக்குப் பதிலாக தவாவில் இட்டு கொத்தி விடுவான்!' என்பாள். இப் பொழுது அந்த பயம் அவளுக்கு இல்லை. திருமணம் ஆகி மூன்று வருடத்திலேயே தன் கணவனை செல்லப் பிரா ணியாக வீட்டி லேயே கட்டிப் போட்டு விட்டாள்! பிறகுதான் அந்த கொத்துப் புரோட்டா கடை நகரின் பல இடங்களில் கிளை திறந்து ஜமாய் கிறது என்பது வேறு செய்தி!. இப்பொழுதெல் லாம், படுத்து எழுந்த நேரம் போக, மனைவி எழுதிக்கொண்டிருப்பதில் பெருமிதம்கொள்ளும் கணவனாக வலம் வருகிறான். நச்சியாவுக்கு, சில இலக்கிய அமைப்புகள் கவிதைக்கானப் பரிசு அல்லது பட்டயம் அளிக்கிறபோது, அவள் கூடவே.... சிரித்த முகத்தோடு திடகாத்தியமான ஒரு மனித உருவம் வருவதை சிலர் அவளது பாதுகா வலர் என்று நினைத்து விட்டுகிறார்கள்! அது தவறு! அது அவளது கணவன்!
*
இஸ்லாமிய பெண்களின் உள்ளார்ந்த ரகசிய மனகுரலை ஊர்.... ஊராக.... மாவட்டம்... மாவட் டமாக போய் பேட்டி பதிவு செய்து,அவர்களின் நிராசையானப் பகுதிகளை பிரபல டி.வி. ஒன்றில் தொடராகக் கொண்டுவரும் திட்டம் அவளிடம் உண்டு. எல்லாவளமும் கூடிய ஒரு இஸ்லா மியப் புருஷன் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளவும், ஒரே காலக்கட்டத்தில் அவர்களை பரிபாலணம் செய்யவும் பறந்ததோர் வாழ்வியல் சுதந்திரத்தை தனது மதம் அவர் களுக்கு வழங்கி இருப்பதில் அவளுக்கு ஆட்சேபனை கிடையாது. ஆனால், அதையொட்டிய பெண் சார்ந்த சுதந்திரத்தில்தான் அவள் கேள்வி எழுப்பக் கூடியவளாக முனைந்து நிற்க்கிறாள்.
*
எல்லா வளத்தோடும் கூடிய, திடகாத்தியமான இஸ்லாமியப் பெண்களுக்கு... தனது மதம் அவர்கள் விரும்பும் பட்சம்... ஆண்க ளுக்கு தந்திருக்கும் அதே அளவிலான சுதந்திரத்தை வழங்க ஆவணம் செய்திருக்க வேண்டும் என்கிற விடாப்பிடியான எண் ணம் கொண்டவளாக தன் கவிதைகளிலும், கட்டுரைகளிலும் தனது கேள்வியை ஆதங்கமாக பதிவு செய்துக் கொண் டிருக்கிறாள்!அப்படியொரு சுதந்திரம் அடிப்படையில் அது சரியாக இருக்கும் என்றும், வரவே ற்கத் தகுந்தது என்றும் நம்புகிறாள்! இதையொட் டிதான், அவள்... ஊர்.... ஊராக.... மாவட்டம்... மாவட்டமாகப் போய், சக இஸ்லாமியப் பெண்களின் கருத்தை அறிய நினைக்கி றாள்! "அவள் எதிர் பார்க்கும் அப்படியொரு சுதந்திரத்தை அந்த மதம், புதிய 'ஃபத்வா'வாக வழங்கக் கூடுமென் றாள் அதை முயற்சி செய்து பார்க்கும் முதல் இஸ்லாமியப் பெண் நாச்சியாவாகத்தான் இருக் கும் என்று, என்னோடு கல்லூரியில் படித்தவரும், என் பிரிய தோழியுமான பரிதா பானு சொன் னபோது சிரித்து விட்டேன்.
*
இத்தனை தீவிர சிந்தனையும், தீவிர கவிதைகளையும் எழுதி வரும் இவளுக்கு ஒரு மனக் குறை உண்டு. 'தான், வைரமுத்துவை படித்து கவிதை உலகில் காலடி வைத்தவள் என்றும், இங்கே இந்த இலக்கிய வட்டத்தில் அவரை யாரும் வரவேற்பதோ, சகஜம்பாராடுவதோ செய்ய தவறுகிறார்களே... அது ஏன்? என்று என்னிடம் பலமுறை வினவி இருக்கிறாள்! 'யோனி' என்ற இவளின் முதல் கவிதைத் தொகுப்பு விரைவில் வர இருக்கிறது. அதற்கு வரவேற்ப்பும் எதிர் ப்பும் இப்பவே பலமானதாக இருக்கிறது. செல் லில், நாச்சியாவைப் பார்த்து அழுத்தினாள் அனு. தாமதமில்லாமல் ஹலோ... கேட்க, அனு முகம் பிரகாசம்.
*
ஹலோ.... நாச்சியா.....
*
அனு... ஹை... எப்படி இருக்கே....?
*
ம்.... ஓ... கே.... !
*
என்ன..... இந்த நேரத்திலெல்லாம் கூப்பிட மாட்டியே?
*
சும்மாதான்... கொஞ்சம் பிரீ.... உன்னோடு பேசலாமேன்னுதான்.... டிஸ்ட்ரப் பண்ணிட்டேனா
*
அப்படியெல்லாம் இல்லே... அனு...
*
அக்னி குஞ்சு வாசிச்சியா?
*
ரொம்ப சுடுது!
*
இது என்ன விமர்சனமா?
*
ஐய்ய... நிஜம்.
*
என்ன சொல்றே?
*
இப்பத்தான் பெட்லப் படுத்து கையில் எடுத்தேன்....
*
இவ்வளவு மிட் நைட்லயா?
*
ஸோ... வாட்!
*
அப்பொ.... வீட்டுக்காரர் இல்லையா?
*
என் மேலேதானே இருக்கார்!
*
ச்சீ..... என்ற படி செல்லை அணைத்தாள். அது அடங்குவதற்கு முன்.... ''பரவாயில்லை அனு, பேசுடீ!'' என்கிற குரல் கேட்டதைநினைத்து சிரித்தாள்.
*
சாந்தி இருக்கையில் இருந்து எழுந்து வந்து, அசதியோடு அனுவின் முகத்தைப்பார்த்தது. நெஸ் காப்ஃபி ஸ்டாலை அனு காமித்து, கையில் பணம் தந்து, ''இரண்டு வாங்கி வா''என்றாள். அனு இருக்கையில் அமர்ந்தவளாக, ஹேண்ட் பேக்கில் இருந்து ரோமத்தை உருவி எடுத்தாள். தனது கவிதைப் பக்கத்தை திருப்பி கவனம் செய்தாள். அச்சுப் பிழை, ஒற்றுப் பிழையென்று ஏழு இட த்தை மனதால் சுழித்தாள். இந்த தவறுகளோடுதான் வாசகன் மெச்சவும், விமர்சகன் விமர்சிக் கவும் செய்கிறான் என்று நினைத்தபோது மனதிற்குள் விசாலமாக சிரித்தாள்.
*
பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட இந்த வாழவில், மேலும் மேலும் மறுக்கப்படும் உரிமைகள் குறித்து பெண்கள் தங்களது கோபத் தை கனலாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கவிதை. அதற்கு எடிட்டர் போட்டிருக்கும் படம் எந்த ஒரு வகையி லும் அந்தக் கவிதைக்குறிய படமே அல்ல. இத்தனைக்கும் அந்த இதழின் ஆசிரியர் இலக்கிய வட்டத்தில் விபரமானவர்! அக்னி குஞ்சை திருப்பினாள். ஆம்பூர் சூஃபியின் கட்டுரை ஒன்று பிரசுரமாகி இருந்தது. சாந்தி காப்ஃபி கொண்டு வந்து நீட்டவும்.... அவள் கன்னத்தைத் தட்டி டேங்யூ..... என்றபடி ஒரு மிடறு உறுச்சி பிரமாதம் என்றாள். கனத்திருந்த அவள் தலை தளர்ந்தது.
*
சமீப காலமாக ஆம்பூர் சூஃபியின் எழுத்து பிரபல்யமாகி வருகிறது. நெட்டில் அவரது கலக்கல் அதிகம். பல்வேறு தலைப்புகளில்அவர் புத்தகங்கள் எழுதியப்படியே இருந்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு எழுதும் வியாதி பீடித்திருப்பதாக இவரது நண்பர் ஒருவர் இவரிடம் நேரே கமெண்ட் அடித்தபோது...... ஏதோ நினைவில் இவர், வியாதியெல்லாம் ஒன்றுமில்லை சாதாரண ஜலதோ ஷம்தான் என்று சொல்லவும், நண்பர் சிரித்து விட்டாராம்! நிஜத்தில், சூஃபி.... அத்தனைக்கு அதிகப் புத்தகங்கள் எழுதுகிறவர் என்று விட முடியாது. வாரத்திற்கு ஐந்துதான். சனி, ஞாயிறு கட்டாயம் விடுமுறை! இவரைத்தாண்டிய சூரத்தணம் கொண்டவர்கள் நம்மில் உண்டு! அப்படி ஒருவர் தெற்கே இருக்கிறார்! அவர் ஞாயிறு மட்டும்தான் விடுமுறை விட்டுக் கொள்வார். அவரது புத்த கம் ஒவ்வொன்றும் எழுநூறு, எண்ணூறுப் பக்கங்கள்! இத்தனைக்கும் இவர்கள் இருவருமே அரசு உத்தியோகஸ்தர்கள்! ஒருவர் ஸ்டேட், மற்றொருவர் செண்டர்! இவர்கள் இருவருமே, பணியில் விடுமுறை எடுக்காது வேலைக்குப் போகும் பாராட்டையும் பெற் றவர்கள்!
*
எழுத்தாளர் முனீஸ்வரனின் இலக்கியத் திருட்டைப் பற்றிய.... ஆம்பூர் சூஃபியின் கட்டுரை ஆதாரப் பூர்வமாக இருந்தது. முனீஸ் வரன் தன் நண்பன் அமீர்தீனை வஞ்சித்த அந்த இலக்கியத் திருட்டுக் குறித்து, இலக்கிய வட்டத்தில் பலரும் அறியவே செய்திரு ந்தார்கள். ஆனால், யரும் இது நாள்வரை வாய்திறக்கவில்லை. சகப் படைப்பாளி ஒருவன் இப்படி அப்பட்டமாக ஏமாற்றப்பட்டி ருக்கிறான் என்ற உணர்வு கூட இவர்களுக்கு எழவில்லை! முனீஸ்வரனை விட்டுப் பிறிந்த, அவனது முதல் மனைவி ஓர் தேர்ந்த படைப்பாளி. அவரோடு எனக்கு நல்ல நட்பு உண்டு. அவர் இந்த இலக்கியத் திருட்டைப் பற்றி என்னிடம் ஒருதரம் ஆதங்கப் பட்டு சொன்னார். 'நம்பிய நண்பனை, கொஞ்சமும் மனசாட்சி இல்லாது ஏமாற்றிய வஞ்சகமே அவரது ஆதங்கத்தின் மையமாக இருந்தது. அப்பொழுது நான் எழுதிய கட்டுரை ஒன்றில் அதை அப்படியே பதிவு செய்தேன். அதில் முனீஸ்வரனுக்கு என் மீது வருத்தம் என்பதை இலக்கிய வட்ட நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். அதை நான் அசட்டை செய்யப்போய்தான் சடையா ண்டி என்றெரு புது ஆள் முளைத்து என் எழுத்துக்களை கண்டமேனிக்கு ஆங்காங்கே சர்ச்சை பண்ணிக் கொண்டிருக்கிறான். எந்த அழகில் அவன் தனது பெயரை மாற்றினாலும், ஒருவனது எழுத்தும் நடையும்... அதனூடான தனிநபர் சிந்தனையும் காட்டித் தந்துவிடாதா என்ன? இந்த முனீஸ்வரன்தான் அந்த சடையாண்டி! அதில் எனக்கு சந்தேகமே இல்லை.
*
அடுத்தப் பக்கத்தில் மெகலாய காலத்து ஓவியங்களைப் பற்றி காவேரி வர்ணம் ஆய்வு ஒன்றை எழுதி இருந்தார். ரசனையானகட்டுயையாக இருக்கும் என்று அனுவுக்குப்பட, அதை அவள் படிக்க முனைந்த நாழியில், சாந்தி குட்டி அனுவை தட்டி ஏர்போ ர்ட் சலசலப்பாக இருப்பதைக் காட்டினாள். விசிட்டர்ஸ் கெலரியில் நின்ற எல்லோரும் குசுகுசுவென்று பேசிக்கொண்டு பரபர ப்பு டன் காணப்பட்டார்கள். அனுவின் அருகில் நின்ற வயதான அம்மா ஒருவர் அனுவிடம், ''துபாயில் இருந்து வரவேண்டிய விமான த்திற்கு ஏதோ பிரச்சனை என்று பேசிக் கொள்கிறார் கள்" என்றார். அவளுக்கு குபீர் என்று வேர்த்து விட்டது.
*
பணம் பணம்.... என்று அலையும் ஜே.பி. பற்றிதான் முதலில் அனுவுக்கு ஆத்திரம் எழுந்தது. அங்கே நின்ற கூட்டம் ஏர் போர்ட் அதிகாரிகளை காணவும், சரியான செய்தி அறியவும் திரண்டு கோஷமிட்டது. கொஞ்ச நேரத்தில் ஏர்போர்ட் வளாகமே அமளி துமளியானது. அவசர அவசர மாக வந்த ஒருவர் எல்லோரிடமும் உரக்கச் சொன்னார்....''நான் பி.பி.சி. செய்தி கேட்டேன். துபா யில் இருந்து சென்னை வந்துக் கொண்டிருந்த எமிரேட் விமானத்தை தீவிரவாதிகள் ஹைஜாக் செய்து விட்டார்கள்! கடத்தியது எந்த தீவிரவாதிகளின் குழு என்று இன்னும் தெரியவில்லை, விமானத்தை எங்கு கொண்டு செல்கின்றார்கள் என்றும் தெரியவி ல்லை!'' என்றார். செய்தியின் சாரத்தை அறிந்ததும் ஏர்போர்ட் வளாகமே அழுகை குரல்கள் தேம்பியது! அனுவின் கண்களில் கண்ணீர் வடிந்தது! ஜே.பி., அவனது வளர்ச்சிக் கனவுகள், கிரீன் இண்டியா, பதினைந்தாயிரம் பணியாளர்கள், அடுத்த வருடம் முப்பது, என்று வரிசையாக.... மூடிய அவளது கண்களுக்குள் காட்சிகளாக நகர்ந்தது. சாந்திகுட்டியை இறுக அணைத்துக் கொண் டாள். அவள் கைகளில் இருந்து ரோமம் நழுவி விழுந்தது.
*************

No comments: