Monday, June 09, 2008

தாஜ் கவிதைகள் - 31


மலைக் கள்ளன்!
--------------------------
ஓடும் நதிக்கரையில்
தூண்டிலோடு நிற்பவனின்
வெள்ளை அலங்காரத்திற்குள்
எத்தனையோ தடயங்கள்.
திறந்து விடப்பட்ட
வாயிலின் வழியே நுழையும்
தடய பரிசோதிப்பாளர்கள்
தவழும் வாசனையில் கிரங்கி
உயரத்தில் மலைத்தும்
கவனம் செய்யும் பட்சம்
அவன்தான் மனிதன்!
ஆண்குறித் தொட்டு
கபாலச் சிடுக்குவரை
போக்கில் மேயவிட்ட
மிருக வளர்ப்பை
பருவச் சுதந்திரமென ஆழ்
நினைவுக்கடியில் மொழுகி
ருசித்த அசிங்கங்களை
யாரும் புலப்படா இருளில்
மலக்குடல் வழியே
சப்தம் காட்டாது
வெளியேற்றியவன்.
கசையடிப் பெறாத
தப்பித்தல்களை உடல்
மொழியில் கவிதைகளாக்கி
கற்றுத்தேர்ந்த கபடங்களை
வளர்ச்சியின் அரசியலென
மொழிப் பெயர்த்து
பிள்ளைகள் முகம் சுழித்த
கரு மச்சங்களை இருக மூட
தர்ம நியாயங்களின்
இன்னொரு நட்சத்திரமாய்
உபதேச வானில்
வயதையும் முன் நிறுத்தி
வணக்கம் பெறுகிறான்.
******
ஜீரோ - வேல்யூ
-------------------------
பீடம் நோக்கி அண்டும்
கேள்விகளை கொல்!
பூப்பூவாய் பூத்தாலும்
பதில்களை ஆழப்புதை!
முதலில் இருப்பை உடை!
நில்லாது சுழலும் உலகமிது
சுற்றி வரும் ஈர்ப்பிற்கிணங்க
நிர்வாணமாய்
பயணப்படும் நாட்களில்
கட்டியெழுப்பிய மனித
கீர்த்திகள் அத்தனையும்
ஓடுப்பாதையில் அறைபடும்
நிதர்சணம் கொள்ளலாம்!
*******

No comments: