Monday, May 26, 2008

தாஜ் / சிறு கதை - 5



மரணயோகம்
---------------------
- தாஜ்...

விடிக்காலை ஆறரைக்கெல்லாம் பள்ளிவாசலின் நகரா சப்தம் கேட்டது. தூக்கம் கலைய விழித் துக் கொண்டேன். அந்த நகரா சப்தம் ஊரில் யாரோ இறந்து விட்டார்கள் என்பதின் முதல் அறி விப்பு. வீட்டில் அது குறித்த முனுமுனுப்பு எழுந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் மைக்கில் விப ரம் சொல்லி விடுவார்கள். அதற்குள் 'அது யாராக இருக்கும்?' என்பதில் ஓர் முனைப்பு! அந்த நே ரம் பார்த்து மின்சாரம் போய்விட்டதால், வழக்கமான பள்ளிவாசலின் மைக் அறிவிப்பு தடை பட, வீட்டில் எழுந்த அந்த முனைப்பு இன்னும் விஸ்தீரணமாக களைக்கட்டியது.
*
ஃபஜர் தொழுது சலாம் கொடுத்த கையோட, முஸசல்லாவில் உட்கார்ந்த மேனிக்கு தசுமணி உருட்டிக் கொண்டிருந்த என் அம்மா, "யாராயிருக்கும்...? புள்ளே,,," என்று என் மனைவியிடம் திரும்பத் திரும்ப கேட்கவும்... என் மனைவி, அவளுக்கு தெரிந்த வகை யில் ஊரில் இறக்க ஆயத்தமாக இருந்து கொண்டிருக்கும் வயதானவர்களின் பட்டியலில் சின்னத் தயக்கத்தோடு, சிலரதுப் பெயர்களையும், அவர்கள் சார்ந்த உறவின் பெயர்களையும், குடும்ப பட்டப் பெயர் களையும் சொல்லி 'அவரா இருக்குமோ?' 'இவரா இருக்குமோ?' என்பதாக, ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் குறிப்பிட்ட எல்லோருமே நோயில் விழுந்து நாட்களை எண்ணிக்கொண்டு இருப்பவர்கள்தான். அதிலும் சிலர்.... டாக்டராலேயே, "இனி வைத்தியம் பார் க்க முடியாது வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போங்கள்!" என்றச் சான்றுப் பெற்றவர்கள்.
*
படுக்கையில் விழித்தப்படி, போர்வையை கலைக்காமல், மார்கழி மாத குளிரை செல்லமாய் அனுபவித்த சுகத்தில் அவர்களது சம் பாஷனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, என் மனைவியின் இந்த பரந்த அறிதல் வியப்பைத்தந்தது. 'ஊர் நாட்டாண்மை பஞ்சாயத்தில் இரு க்கும் எனக்கும் தெரியாத பல செய்திகள் அவளுக்கு தெரிந்திருக்கிறது!' பெண்கள் எப்பவுமே கெட்டிக்கார் கள்தான்! ஆண்களாகிய நாம்தான் புரிந்துக் கொள்ள மாட்டோமென அடம் பிடிக் கிறோம்.
*
பழைய வீட்டில் இருந்து என் தம்பியின் மனைவி, டெலிபோனில் என் மனைவியை அழைத்து, "யாரு ஆச்சி இறந்துப் போனது?" என்ற ஆர்வமாக கேட்கவும். "தெரியாதுலெ" என்றவள், தொடர் ந்து அது யாராக இருக்கும் என்கிற கலந்தாய்வை என் தம்பி மனைவியோடு டெலிபோனிலே யே நடத்தி, முடிவில் இன்றைக்குப் புடவை எடுக்க இருவரும் பக்கத்து டவுனுக்குபோக இருந்த புரோகிராம் தட்டிபோய் விடுமோ! என்ற கவலையோடு பேச்சை முடித்தார்கள். எனக்கு வேறோ ரு கவலை. இன்றைக்கு மூணுகால் சாயபு வீட்டில் அவரது பொண்ணுக்கு பரிசம். பெரிய அள வில் செய்கிறார். அவர் வீட்டு விசேசத்தை தட்ட முடியாது. இந்த அலைச் சலைக் குறித்து நேற்றே யோசித்து மருகப் போய், இன்றைக்கு இன்னொரு அலைச்சல்! இறந்தது யாராக இருந் தாலும்..... கூடுதல் அலைச்சல் நிச்சயம்.
*
முஸல்லாவில் இருந்த அதே நிலையில் இருந்தே, மீண்டும் என் அம்மா, யாரு புள்ளே டெலி போன்ல பேசுனது? இறந்தது யாரு ன்னு தெரிஞ்சிச்சா? என்று என் மனைவிடம் கேட்டார்கள்.
*
பழைய வீட்டிலேயிருந்து தங்கம்மா பேசிச்சி... மாமி! அதுக்கும் யாருன்னுத் தெரியலையாம்... என்றாள் மனைவி.
*
இது என்னடி ஹொதரத்தா இருக்கு...! யாருன்னு தெரியலையே...! ஒரு சமயம், மேலத்தெரு சம்சாத்து அம்மாவா இருக்குமோ?
*
நீங்க ஒன்னு மாமி, அவுங்களுக்கென்ன கல்லுமாதிரி இருக்காங்க!
*
இல்லடி.. புள்ளே.. அவுங்கத்தான் ரொம்பவும் முடியாம கிடக்கறாங்கன்னு முந்தாநேத்து ரேசன் கடைக்கு சீனி வாங்கப்போனப்போ ரசூலு சொல்லுச்சின்னு.... என் அம்மா அரற்றிக் கொண்டி ருந்தார்கள்.
*
திடுமென அப்பொழுது பக்கத்து வீட்டு ஜன்னத்தும்மா, எங்க வீட்டுக்கு வந்து, நேராக என் மனை வியைத் தேடிபோய், "யாரடி புள்ளே இறந்துப்போனது?" என்று கேட்கம், தெரியல ஆச்சி..... என் றாள் அவள்.
*
நேத்து மாமியார் வீட்டுக்குப்போன என் மோவன், இப்பத்தான் புள்ளே பஸ் இறங்கி வரான்... அவன் பஸ் இறங்குன இடத்துல... உம் மாமி இறந்துட்டதா பேசிகிட்டாங்களாம்... அதை கேட்டு ட்டு வந்த என் புள்ளே, பரப்பரபரக்க 'ஏம்மா பக்கத்து வீடு மாமி மௌத்தாவா போயிட்டாங்க?' என்கவும், எனக்கு தூக்கிவாரி போட்டுடுச்சு. எந்த ஒரு கழிச்சிடபோறவன் சொன்னதுன்னு திட்டி ட்டு வறேன் புள்ளே...
*
மாமியையா சொன்னானுவலாம்...! பைத்தியமா அவனுவலுக்கு....! அது காதுல விழுந்தா... அவ னுவல சும்மா விட்டுட்டு தேடாதே!
*
அவனுவல விடு.... நீ தம்பிகிம்பிக்கிட்டே இதை சொல்லிடாதே... என்ன...
*
இல்ல ஆச்சி, மனசு எப்படி பதறது...! இப்படியா.. விபரம் தெரியாம பேசுறது...? பாயிலயா படுத்து ட்டாங்க... அவுங்க?
*
பின்னிப் பின்னி அதேயே பேசுறியே... அதே விடுபுள்ளே, 'நான் இப்பத்தான் வறேன் நீ எங்க போ றேன்னான்' எம்மெவன், செத்த போயி... நீ குழிச்சிட்டுவாடா... நான் போயி.... இந்தக் கூத்தெ பக் கத்து வீட்டு ரஹமத்துட்டெ சொல்லிட்டு, அப்படியே ஒரு வா காப்பித் தண்ணி வாங்கி குடிச்சி ட்டு வறேன்னு வந்துட்டேன்... என்று ஜன்னத்தும்மா சொல்லவும், 'அப்படி சொன்னவர்களை' என் மனைவி அரை குறையாக திட்டிக் கொண்டே அந்த அம்மாவுக்கு காப்ஃபி கலக்கி எடுத்து வர நகர்ந்தாள்.
******

இன்னும் மின்சாரம் வராவிட்டாலும், அடுத்த அரைமணி நேரத்தில் எல்லாம் தெரியவந்து விட் டது. 'பெரிய வீட்டு' மருமகள் தவறி விட்டார். இரவு இண்டரைக்கே தவறி இருக்கிறார்! இரவில் நகராவே அடிச்சு சொல்லக்கூடாது என்பதால் விடியற்காலை ஃபஜர் தொளுகை முடிந்தக் கை யோடு நகரா அடித்திருக்கிறார்கள். அந்தப் பொண்ணுக்கு இரண்டு வாரமா மஞ்சக்காமாலையாம். நாட்டு மருந்து சாப்பிடவைக்காமே, அவர்களது குடும்ப டாக்டர் இடம் மட்டுமே காட்டி இருந்தி ருக்கின்றார்கள். அந்த டாக்டர் 'ஒண்ணு கெடக்க ஒண்ணு' மருந்து தந்தது மட்டுமல்லாமல், பார் த்துக்கலாம் பயப்படாதிங்கண்ணு சொல்லி சொல்லியே சாகடிச்சிட்டதா பேச்சு! வீட்டிற்கு வந்து வாடிக்கையாக பால் ஊற்றும் அம்மா, பால் தந்துவிட்டு கூடுதலாக இந்த தகவலையும் சொல் லிச் செல்ல, என் அம்மாவிடமும் மனைவியிடமும் பதட்டம் கூடிக் கொண்டது. பதட்டம் கூடிக் கொண்ட தை தொடர்ந்த அவர்களது ஓயாதப் பேச்சில் அறிய முடிந்தது.
*
அல்லாஹு... அல்லாஹு... அந்தப் புள்ளையா மௌத்தாயிடுச்சி? தங்கமான பதூசி புள்ளை யா ச்சே...! எங்கே என்னைப் பார்த்தா லும் 'நல்லா இருக்கியாம்மா'ன்னு வாய் நிறைய கேட்பாளே...! அவ கொடுத்து வச்சது அவ்வளவுதான் போலிருக்கு போயேன்....!
*
ஆமாம் மாமி..., அந்தபொண்ணு, அந்த குடும்பத்திலுள்ள மத்தப் பொண்ணுங்க மாதிரி இல்லைத் தெரியுமா! எங்கப் பார்த்தாலும் என்கிட்டேயும் 'நல்லாயிருக்கியா ஆச்சி?'ன்னு கேட்காம போக மாட்டா! அன்னைக்கி பள்ளிக்கூடம் போயிருந்தேல...
*
என்னைக்குப் புள்ளே....
*
நிஷா சரியா மார்க்கு வாங்குல, அவுங்க அப்பாவையாவது அம்மாவையாவது வரசொல்லு பேசனுன்னு, அவுங்க டீச்சர் சொல்லி அனுப்பிச்சப்போ நான் போகல... போன திங்களுக்கும் முந்தினத் திங்கள்...
*
ஆமாம்...
*
பள்ளிக்கூடத்துக்கு போறப்போ நடந்துல போனேன்! அன்னைக்கி, தன் தங்கச்சிக்கு ஃபீஸ் கட்ட னுன்னு இந்த 'மெகரு' அங்கே வந்திருந்துச்சி. என்னை பார்த்துட்டு விடலை. நல்லா இருக்கியா ஆச்சி? அண்ணன் நல்லா இருக்கா? ன்னு இதெ வேறே கேட்டு ச்சி. திரும்பி வறப்போ... விடமா ட்டேன்னு அது கார்ல ஏத்தி அலைச்சிகிட்டு வந்து, வீட்ல விட்டுட்டுதான் போச்சு.
*
மெகரு.... ன்னா.... யார் புள்ளெ?
*
அதான் இன்னைக்கி மௌத்தா போயிருக்கே.... அது பேருதான் மெகருன்னிஸா! மெகரும்பாங்க!
*
மெகருன்னிஸாவா.. அந்தப் புள்ளே பேரு...! அந்த பொண்ணோட புருஷன் பேருதான் எனக்கு தெரியும்! அஜீஸூ...
*
மெகரு புருஷன் பேருதானே.... ஆமாம் அஜீஸ்தான்.
*
சின்ன புள்ளையில பார்த்தது.... மாமி... மாமின்னு பேசுவான்! கொஞ்சம் கொஞ்சம்.... திக்கித் திக்கிப் பேசுவான் இல்லே?
*
கொஞ்சம் தாங்கி தாங்கிவேற நடப்பாரு...
*
ஆனா.... அந்த பொண்ணு கண்ணுக்கு அழகா இருப்பா... ஒரு கொறை சொல்ல முடியாது புள்ளே...!, குணமும் அப்படித்தான்!
*
தங்கம்ல அவ...., அவுங்க வீட்டுலெ போன மாசம் மௌலது ஓதினப்போ... விருந்துக்கு கூப்பிட்டாங்கன்னு போனல்ல...
*
எப்பப் போன...? நீதான் ஒரு வூட்டுக்கும் போக மாட்டியெ!
*
நீங்கத்தானே மாமிபோகச் சொன்னீங்க... அன்னைக்கி...
*
ஞாபகம் இல்லம்மா....
*
என்னெ கண்டதும் அந்தப்பொண்ணு தனியா அழைச்சுட்டுப்போயி... அறையில உட்காரவச்சி... சாப்பிடு ஆச்சி... சாப்பிடு ஆச்சி ன்னு பிரியாணிமேலே பெறிச்சக் கோழியும், குருமாவோடு கறி யையும் அள்ளி வைக்குது. நான், வேணாம்மா... வேணாம்மா... சாப் பிட மாட்டேன்... அல்சருன் னா கேட்கமாட்டேங்குது. சும்மா சொல்லக் கூடாது மாமி, அந்த புள்ளெ மாதிரி இன்னொன்னே தேடினாலும் பாக்க முடியாது!
*
ஆண்டவன்தான் நல்லவங்களையெல்லாம் இப்படி சோதிக்கிறானே.
*
'சக்கராத்து ஹால்லெ' நாலு நாளா அந்தப் பொண்ணு பாயிலயே கிடந்தாங்கிறாங்க... நமக்கு தெரியலப் பாருங்க மாமி!
*
அந்த வீட்ல எது நடந்தாலும் வெளியெ தெரியாது புள்ளே...! தெரிஞ்சியிருந்தா ஒரு தரம் போய் பார்த்துட்டு வந்திருக்கலாம்தான்.
*
மௌவுத்தான அந்தப் புள்ளைக்கு.... சின்னப் புள்ளே வேற இருக்கு மாமி.
*
அல்லாஹூ... அல்லாஹூ.... சின்னப் புள்ளைவேறய்யா இருக்கு? என்ன வயசு ஆவுதாம்?
*
இன்னும் மூணுவயசுகூட ஆயிருக்காது. 'ஹல்வாபொறை' பொறந்தாதான் மூனுவ வயசு முழுசா ஆவுமுன்னு நினைக்கிறேன்.
*
எப்படி புள்ளே இப்படி... சரியா சொல்றே?
*
என் தம்பி பொண்டாட்டி ஹைருன்னிஸா, இரண்டாவது ஆம்பளைப் பிள்ளையை பெத்துக்க றப்போ பழனியம்மா ஆசுப்பத்திரிக்கு தானே போச்சு. அது புள்ளைப் பெத்தெடுத்த அடுத்த நா ளோ அதுக்கு அடுத்த நாளோ இந்தப்பொண்க்கு இடுப்பு வலி எடுத் துடுச்சின்னு கொண்டு வந்து சேர்த்தாங்க. ஹைருன்னிஸா... புள்ளெ அல்வா பொறே அஞ்சுல பொறந்துச்சு.... இந்தப் பொண் ணுக்கு பொறெ எட்டுலேயோ, ஒன்பதுலேயோ புள்ளே பெறந்துச்சு... நான் கூட அப்புறம் போயி பாத்துட்டு வந்து சொல்லலெ.
*
தலைப் பிரசவம், அந்தப் புள்ளே ரொம்பவும் அவஸ்த்தைப் பட்டாளாம்ன்னு.... சொல்லலெ? மறந்துட்டீங்க!
*
எல்லாம் மறந்து... மறந்துபோது. அந்த சின்னப் புள்ளையை இப்ப யாருள்ள பாத்துப்பாங்க?
அதான் மெகருக்கு... தங்கச்சி ஒண்ணு இருக்குல...
*
அது பள்ளிக் கூடம் போயிட்டு இருக்கிற புள்ளன்னு இப்பத்தானே சொன்னே.. இன்னும் வயசுக்குகூட வருலலெ....?
*
வேற என்ன செய்றது? சொத்துகிடக்கு! சின்னப் பிள்ளைவேற... இதெல்லாம் பாத்துக்க உரிய ஆள் வேணாமா? மெகரு புருஷ னும் சின்ன வயசுகாரர்தானே! கல்யாணம் செஞ்ச கையோட ஒரு 'சபுரு' போயிட்டு வந்தாருன்னா.. சரியா போச்சு... அதுகுள்ள அவ திரண்டிட மாட்டா?
*
வஸ்தவம்தான்.... அதுக்கு மெகரு புருஷன் ஒத்துக்குவாறா?
*
ராத்திரியே சிங்கப்பூருள்ள உள்ள மெகரு புருஷனுக்கு டெலிபோன் போட்டு சொல்லிட்டாங்க ளாம். அவரு கதறு கதறுன்னு கதறி இருக்காரு, 'காலையில ஏரோ பிலேன்லே எப்படியாவது மதராஸ் வந்துடுறேன், காரை அனுப்புங்கன்னாராம்....' இவங்களும் விடிக் காலையிலேயே காரை அனுப்பிட்டாங்களாம்! அவரு வந்துதான் ஒத்துக்குவாரா... இல்லையா..ன்னுத் தெரியும். ஒத்துக்காம எங்கே போறது மாமி?
*
அது வரையிலும் மௌத்தெ அப்படியே போட்டாளே... வைச்சிருப்பாங்க! வீச்சம் வந்துடாது?
*
நீங்க எந்த காலத்திலெ மாமி இருக்கிங்க! இப்பத்தான் மௌத்தான கையோடு ஐஸ் பெட்டி கொ ண்டுவந்து பக்குவமா வச்சிடுறாங் களே! அந்த காலம்னா நீங்க சொல்றது சரி! மேல முடுக்குத் தெருவில... நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தம்பி ராவுத்தர் இறந்தபோ, அவரு புள்ளைக ளுக்குள்ள சொத்து சண்டை நடந்து... மௌத்தெ ரண்டு நாளு அடக்கம் செய்யாம போட்டு வச்சி, அதுல வீச்சம் கிளம்பி.... பக்கத்துல யாரும் போயி அழுவக்கூட முடியாமபோச்சே அப்ப டியா இப்போ....?
*
சரியா சொன்னபோ... இதுக்குதான் சொத்தே சேத்து வைக்கக் கூடாதுன்னு.... உங்க மாமாகூட சொல்லும்.
*
இதே புத்திதான் அதுக்கும் இருக்கு. தம்பி ராவுத்தர் குடும்பத்துல அப்படி அடிச்சிகிட்டாங்க ன்னா... எல்லாமா அப்படி! ஒங்க புள்ள காதுல... அத்தா அதெ சொல்லிச்சி, இதை சொல்லிச் சின்னு இந்த செய்தியையெல்லாம் சொல்லி வைக்காதிங்க...! அதான் சாக்குன்னு எனக்கொன் னான்னு இருந்துடும்! நமக்கு பொம்பளைப் புள்ளே இருக்குது.... அது கல்யாணத்துக்காவது காசு பணம் சேர்த்து வைக்க வேணாம்!
*
நீ சொல்றதும் நியமாதான் இருக்கு. பயணம் போடான்னா... கேட்க மாட்டேங்கிறானே! நாலு காசு இருந்தாதான் நம்மலெயும் ஒருத்தன் மதிப்பான். ஊர்ல பஞ்சாயித்தா இருந்தா மதிப்புன்னு நெனைக்கிறான். ஊர்காரனுவோ பின்னாடி நின்னு திட்டுவானு வோங்கிறது அவனுக்கு புரிய மாட்டேன்கிறது.
*
சத்தம் போடாதிங்க மாமி. அது முழிச்சிகிட்டு கேட்டுகிட்டு இருக்கப் போவுது.
*
கேட்கட்டும் அவன். நியாயத்தெ யார் சொன்னாலும் கேட்டுக்கனும்னு எங்க அம்மா எத்தனை யோ தரம் அவன்கிட்டெ படிச்சி படிச்சி சொல்லி இருக்காங்களே.
*
அதெ உடுங்க.. மாமி! என்றுவிட்டு, தெருவாசலில் உட்கார்ந்து பரிச்சைக்கு படித்துக் கொண்டிரு ந்த சின்ன மகளை அழைத்து, 'அத்தாவுக்கு காஃபி கலக்கி கொடும்மா..' என்றாள் மனைவி.
அத்தா எட்டரைக்குதான் எழுதிறிக்கும். எனக்கு படிக்க வேண்டியது இருக்கு. முக்கியமான பரி ட்சை இன்னைக்கு!
*
செத்த நேரம்தானே... நான் மாமிகிட்டே பேசிகிட்டு இருக்கல்ல. அத்தாவுக்கு இன்னிக்கி நிறைய வேலை இருக்கும். ஊரு வேலைக்கு இடையில அது வயலுக்கு வேறே போவனும். நாத்து அடிக்கறதாவேற சொன்னாங்க. அத்தாவே முதல்ல எழுப்பி விடு.
*
அத்தா முழிச்சுகிட்டுதான் படுத்து இருக்கு. நீ பேசுறதையெல்லாம் கேட்டுகிட்டுதான் படுத்து இருக்கு.
*
கேட்டுகிட்டுதான் படுத்து இருக்கா! கேட்கட்டும் கேட்கட்டும்.... சீக்கிரம் காஃபி கொடு அதுக்கு.... 'இந்தப் பாருங்க உங்க தேடி கிட்டு... ஊர் மோதினாரு இரண்டுதரம் வந்துட்டாரு!' சாக்கு போக்கு சொல்லி அனுப்பிட்டேன். சீக்கிரம் போயி குளிங்க.
*
ஏன் வந்தாரு...? என்று நான் கேட்கவும், அதென்னவோ... தெரியல..., ஒரு தரம் மெகரு அத்தா பாக்கனுமுன்னு சொன்னாருன்னு வந்தாரு. இன்னொருதரம்... மெகரு புருஷனோட மாமி கூப்பி ட்டு அனுப்பியதா சொல்லிட்டுப் போனாரு.
*
சரி.. சரி.. நான் குளிச்சிட்டு வரேன்.... என்றேன்.
*
பிள்ளை காஃபி கலக்கி எடுத்து வரப் போயிருக்கா..... குடிச்சிட்டு, குளிக்கப் போங்க... என்றாள் மனைவி.
*
அந்தப் பையனுக்கு மாமி பொண்ணுவேறே இருக்கே! படிப்பையெலாம் முடிச்சிட்டு கல்யாணத் துக்கு நிக்கிறான்னு பேசி கிட்டாங் களே.... என்று என் மனைவியிடம் என் அம்மா சொல்லவும்
ஆமாம்.... ஆமாம்..! அவரு.... மாமி சம்சுனிஸாதானே.... பெரிய ஆளுதான்! என்ன செய்வாங்க ன்னு தெரியிலத்தான். ஒரு சமயம் இரண்டாம் தரத்துக்கு தான் பொண்ணே கொடுக்குறாங்க ளோ என்னவோ?
*
எல்லாம் கொடுப்ப! சம்சு வித்தைக்காரியாச்சே... ஆட்டுதலையே மாட்டுதலையா ஆக்குவா... மாட்டுத்தலையை மனுஷன் தலையா க்குவா... அவக்கிட்ட உரைப்போட நம்மலெல்லாம் ஆவாது. அந்தப் பையன் கல்யாணத்துக்குன்னு கப்பலில் இருந்து வந்தப்போ, முதலே இவதான் பொண்ணுத்தறேன்னு நின்னா, பையனுடைய அம்மாவுக்கு அந்த நாத்தனாவே புடிக்காதுங்கு றதாலே சரியா முகம் கொடுக்கல. "என் அண்ணன் மொவனுக்கு எம் பொண்ணுனே கட்டுறதே யவ தடுக்குறா.. பாப்போன்னா..!" சம்சு. அப்ப அவ பொண்ணு வயசுக்கு வராது போனதையே சாக்கா வச்சு... "எனக்கிருக்கிறது ஒரு புள்ளே... என் கண்ணு இருக்குறப்போவே அவனுக்கு... கல்யாணம் பண்ணிப் பார்த்தாதான் ஆச்சுன்னு" உள்ளூர்லே அவுங்க சொந்தத்துலேயே பார்த்து கட்டி வச்சுட்டு, அந்த மாராசியும் போய் சேர்ந்துட்டாங்க. அந்தப் பையன், மாமிப் பொண்ணே காட்டிக்காட்டியும், அவுங்க அத்தா சொன்னாரு ன்னு... மாமிக்கு காசு பணம் நிறைய அனுப்பி வச்சான். அப்புறம்தான் சம்சுன்னிசா ஓஞ்சா...! இப்போ என்ன செய்யிறாளோ? யார் கண்டது.
*
அவுங்க வாக்கப் பட்ட ஊர் பக்கம், அவுங்க அண்ணன் பேர்ல உள்ள பூர்வீக நிலம் அஞ்சு ஏக்கர் இருக்காம்... அதே தன் பேருக்கு மாத்திக் கேட்டுகிட்டுல சம்சுன்னிசா இரண்டு மூணு வருஷ மா... நிக்குது! அதை அதுக்கு கொடுக்கச் சம்மதிச்சிட்டாஇப்ப அவுங்க பிரச்சனை பண்ண மாட் டாங்கன்னு தோணுது.
*
காசு பணம் கொடுத்தா... ஓஞ்சுப்போறவத்தான் அவ! என்னன்றாலும்... அண்ணன் புள்ளெ, பிக்கல் புடுங்கள் இல்லாத ஒத்தப் பையனா வேற இருக்கான்... இத்தனைச் சொத்தும் இருக்குன்னு அவ கணக்குப் போட மாட்டான்னு யாரு கண்டா!
*
உண்மைதான். வர அந்தப் பையன், வேறு ஏதேனும் முடிவு வச்சிருந்தாலும் உண்டு! யாரு கண் டா...! பெரிய இடம் யாரும் ஒண்ணும் பேச முடியாது... கொள்ள முடியாது!
*
அப்ப கல்யாணமுன்னா... மைத்த எடுத்துட்டு வைப்பாளுவளா...? மைத்தப் போட்டுகிட்டு வைப் பாளுவளா?
*
மைத்த எடுத்துட்டப் பிறகு அவரு..... மாட்டெண்டா என்ன செய்யுறதுன்னு பொண்ணு ஊட்டுக் காரங்க மைத்த எடுக்க விட மாட்டாங்க மாமி! கல்யாணத்துக்கு பிறகுதான் மைத்தெ..... எடுக்க சம்மதிப்பாளுங்க.
*
இறந்துப் போன பிள்ளையின் தங்கச்சி பேரு என்ன?
*
எனக்குத் தெரியலையே மாமி!.... என்ற என் மனவி, "நிஷா" என்று மகளை அழைத்தாள்.
*
"என்னங்க" என்று வந்து நின்றாள் மகள்.
*
உன் கூடப் படிக்கிற மெகருன்னிஸா தங்கச்சி பேரு என்ன?
*
கமருன்னிஸா...! அவ பரிச்சைக்கெல்லாம் வர மாட்டான்னு நெனைக்கிறேன்.
*
அவ அக்கா இறந்திருக்கா... எப்படிடி வருவா?
*
இல்லம்மா... முந்தா நாளு அவ பள்ளிக்கூடத்துல என்னை தனியா அழைச்சிட்டுப் போயி அழுதா...தெரியுமா? ஏன்டின்னேன்..!
*
என்னை மச்சானுக்கு கல்யாணம் கட்டி வைக்கப் போறாதா... வீட்டுல பேசிக்கிறாங்கன்னா... அப்புறம், பள்ளிக்கூடம் வரமுடியாததை நினைச்சா அழுகையா... வருதுன்னு... அழுதாம்மா...!
*
சரி... சரி..... நீ போய் குளிச்சிட்டு பள்ளிக்கூடம் கிளம்பு... என்று மகளிடம் சொல்லி விட்டு, என்னை அழைத்தாள். "இங்கே பாருங்க..... அங்கே போயி யாருக்காகவும் பேசித் தொலைக் காதிங்க, அப்புறம் ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆயி, திட்டிக்கிட்டி தொலைக்கப் போறாளுவோ!" என்றாள். வீட்டில் சற்று நாழிக்கு நிசப்தம் நிலவியது.
*
"அந்த சின்னப் புள்ள கமருன்னிஸாவை நினைச்சா என்னவோ மாதிரிதான் இருக்கு! என்னப் பண்ணுறது? எல்லாம் போகப் போக சரியாயிடாது......? நான் கூட கல்யாணம் ஆனதுக்கப்புறம் தான் வயசுக்கு வந்தேன்!" என்றார் என் அம்மா. "ஏன் மாமி அடிச்சிகிறீங்க... கல்யாணம் யாரோ டன்னு இப்போ யாருக்குத் தெரியும்? அல்லா என்ன நினைக்கிறான்னு நாம என்னத்தெ கண் டோம்"என்று மனைவி தொடர்ந்த அந்தப் பேச்சிக்கு பிரமாண்டமாய் முற்றுப் புள்ளி வைத் தாள்.
*
*****
*
மணி பத்திருக்கும். வீட்டை விட்டு வெளியே கிளம்ப ஆயத்தமானேன். ஊரில் இந்தப் பேச்சு என் வீட்டில் மட்டும் நடக்கும் ஒன்றா? அல்லது பரவலாக இப்படிப் பேசிக் கொள்வார்களா? என்று என்னை நான் கேட்டுக் கொண்டதற்கு, பரவலாகவும், இன்னும் தீவிரமாக கூட நடக்கும் சங்கதிதான் இது என்று பதில் கிடைத்தது. ஒரு வாழவேண்டிய பெண் இறந்து கிடப்பதற்கு பின்னாலே ஈவு இரக்கமில்லாமல் இத்தனைச் செய்திகள் எழுந்து வலம் வருவதும், ஒரு மனித சாவு பின்னுக்கு தள்ளப்படுவதும் அறிய வருத்தமாக இருந்தது. என்றாலும், இன்றைய என் நடைப் பாதையின் வரைப் படத்தை அறுபது சதவீதத்திற்கு மேல் என் வீட்டில் வரைந்து தந்து விட்டார்கள்! இன்னும் பத்து சதவீதம்தான் பாக்கி. அதற்கு சிங்கப்பூரில் இருந்து அந்தப் பையன் அஜீஸ் வரணும்! வாசலுக்கு வந்தபோது... மூணுகாலு சாயபு, "தம்பி...." என்றபடி காம்பொண்ட் கதவைத் திறந்துக் கொண்டு வந்தார்.
*
அஸ்ஸலாமு அலைக்கும்....
*
அலைக்கும் சலாம். வாங்கண்ணே...
*
என்னத் தம்பி நம்ம வீட்டு விசேசத்தனைக்கு இப்படி ஆயிபோச்சே!
*
அதெ விடுங்க... உங்க காரியமெல்லாம் நடந்துட்டு இருக்குள்ள?
*
அடியக்கா மங்கலத்து பண்டாரி நேற்றே வந்துட்டான். முண்ணூறு கிலோ இரைச்சியை ராத்தி பண்ணிரெண்டரை மணிக்கு கறிக் காரன் எடைவச்சி கொடுத்துட்டான். விடியற் காலை மூணு மணிக்கி சட்டியெ அடுப்புல ஏற்றி தாளிச்சி கறியை வேகவிடப் போறப்பத்தான்.... தம்பி... இந்த மௌத்துச் செய்தியை 'அரசல் புரசலா' பேசிகிட்டாங்க. விசாரிச்சா... ஆமான்னு தெரியுது. பெரிய இடமாச்சே... இப்ப என்ன செய்யுறதுன்னு தெரியாம செத்த நேரம் குழம்பிட்டேன் தம்பி.
*
அண்ணே.. உங்க பொண்ணு விசேசத்தை நீங்க பாருங்க. குழம்பிக்காதிங்க. நம்மை மீறி நடக்கற காரியத்துக்கு நம்ம என்ன செய்ய முடியும்?
*
சரியா சொன்னிங்கத் தம்பி! இதுக்குத்தான் உங்கள வந்துப் பார்க்கணும் என்கிறது!
*
மாப்பிளை வீட்டு காரங்களாம் வந்துட்டாங்களா?
*
ஒரு பஸ் நிறைய வந்துட்டாங்க! இன்னும் இரண்டு பஸ், ஒண்ணுப் பின்னால ஒண்ணா வரு தாம். முத்தவல்லி அஜ்மீர் போயி இருந்ததா சொன்னாங்களே... வந்துட்டாரா தம்பி?
*
அவரு வர இன்னும் நாலஞ்சு நாளாவும். நான் ஹஜிரத்து, மோதினாருட்ட எல்லாம் சொல்லிடு றேன். சரியான நேரத்துல வந்துடு வாங்க. இன்னொரு பஞ்சாயத்தா இருக்காருல்ல பசிரு.... அவருகிட்டேயும் சொல்லிடுறேன். நான் பரிசம் போடுற நேரம் பார்க்க வந்துடுறேன். தைரியமா செய்யுங்க.
*
சரி தம்பி. நம்ம ஊர் ஜனங்க எல்லாம் இன்னைக்கு தட்டாம நம்ம வீட்டு விசேசத்துக்கு வரு வாங்கல?
*
அடியக்கா மங்கலத்து பண்டாரிதானே பிரியாணி போடுறதா சொன்னிங்க! எல்லாம் வருவாங்க... சந்தோஷமாகவும், சிரித்தப்படியும் "நான் வறேன் தம்பி"ன்னு அவர் போனப் பிறகு, என் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து உதைத்தேன். சரி என்றது. எங்க முகல்லாவின் நான்கு வீதியை கடந்து பெரியவீட்டிற்கு போகும் வழியெல்லாம்... திபுன்னு துப்பட்டிப் போட்ட பொண் கள், சலவை உடுப்பில் தொப்பி சகிதமாக ஆண்கள், பட்டாடையில் பெண் பிள்ளைகள், ஜீன் ஸில் சிறுவர்கள் என்று ஊர் களைகட்டி இருந்தது. ஒரு பக்கம் பணக்கார வீட்டு விசேசம், இன்னொரு பக்கம் ஒரு பெரிய வீட்டு மை யத்து! சுற்று வட்டாரத்து முஸ்லீம் ஜனங்கள் எல்லாம் வந்து சாரி சாரியாய் குவிந்து விட்டார்கள் குவிந்து.
*
என் வாகனத்தை பெரிய வீட்டு அருகில் நிறுத்தி விட்டு, உள்ளே போனேன். ஓய்திருந்த பெண்க ளின் அழுகையும், ஒப்பாரியும் திடுமென கூடிக் கொண்டது. இறந்த அந்தப் பெண், வெள்ளாடை சுற்றிப் போற்றப்பட்ட பாங்கோடு, பெரிய விசுப்பலகையில் கிடத்தப் பட்டிருந்தள். அப்பாவித் தனமான முகம்! என் கண்களில் அரும்பியக் கண்ணீரை அங்கேயே துடைத்து விட்டு வெளி யேறினேன். வாசலில் ஏகப்பட்ட போர்கள் பிளாஸ்டில் நாற்காலியில் உட்கார்ந்து பேசிகொண் டும், அன்றைய தினசரிகளை படித்துக் கொண்டும் இருந்தார்கள். இடையிடையே ஐந்தாறு வயசு பெண் பிள்ளைகள் சிலரோடு மூன்று வயசு மதிக்கத்தக்க ஒரு சிறுமி யும் ஓடிப்பிடித்து விளை யாடிக் கொண்டிருந்தாள். கவனித்துப் பார்த்தேன். பக்கத்தில் நின்ற அந்த வீட்டு வேலைக்காரச் சிறுமியிடம் "இறந்துபோன மெகருடைய மகள்தானே அது?" என்று உறுதிப் படுத்திக் கொண் டேன். தாங்கவில்லை மனசு!
*
மெகருவின் அத்தா, என்னிடம் வந்து சலாம் சொன்னார். பிறகு தனியே அலைத்துப்போய் பன்னிரெண்டுமணிக்கு தன் மாப்பிளை சென்னை வந்து இறங்குவதை ஊர்ஜிதம் செய்தார். ஊர் வந்து சேர அடுத்த ஐந்து மணி நேரம் பிடிக்கும் என்றார். டெலிபோனில் தான் சொன்னதற் கெல்லாம் அவர் மாப்பிள்ளை 'சரி' சொன்னதை கம்மியக் குரலில் விவரித்தார். சற்று நேரத்தில் மெகரு மாப்பிள் ளையின் சொந்த மாமி கூப்பிடுவதாக ஒருவர் வந்து சொல்ல, பக்கத்து அறை க்குபோனேன். தேம்பிய கண்களை துடைத்துக் கொ ண்டு, "காப்ஃபி கொண்டுவர சொல்லட்டுமா?" என்றார். "வேண்டாம்!" என்றேன். மப்பிள்ளைப் பையனுக்கு, தான் போன் போட்டு பேசியதாக அவ ரும் சொன்னார். எல்லாவற்றிற்கும் 'சரி' என்பதாக 'வாக்கு' தந்திருப்பதாகவும் சொன்னார். அவர் சொன்னதையும் சிரத்தையாக கேட்டுக் கொண்டுவிட்டு வெளியே வந்தேன்.
*
மனசு இன்னும் வலித்தது. மண்டையும் அநியாயத்துக்கு கனத்தது. அந்த வீட்டை விட்டு சற்று தள்ளியுள்ள வேப்ப மரத்தடிக்குப் போய், சிகரெட் பாக்கெட்டை திறந்தேன். என் யோசனை, வாசலில் விளையாடிய அந்தச் சிறுமியில் இருந்து தொடங்கி.... அப்பா வித்தனமாக இறந்து கிடக்கும் மெகரின் சலனமற்ற முகம் வழியாக... இன்னும் சிலமணிகளில் அங்கே தொடங்கி நடக்க இருக்கும் கூத்தின் முகாந்திரங்கள், நிச்சயம் என்று தெரிந்துப் போன திருமணம், மூணு கால் சாயபு வீட்டு பரிசம், ஊர் கொள்ளாது குழுமி யிக்கும் இரு உறவுகளின் ஜனங்கள் என்று போனது. சிகரெட் பிடித்தும் பயனில்லை. மண்டை பிளந்தது. மனசும் ஆறலை.
சக பஞ்சாயத்து பசீர் அங்கே என்னைத் தேடிக்கொண்டு வந்தான். "மூணுகால் சாயபு வீட்டு விருந்துக்குப் போறேன் நீ வறியா?"
*
என்றான். நான் மௌனமாக இன்னொரு சிகரெடை பற்ற வைத்தேன். "அடியக்கா மங்கலம் பண்டாரி சமையலாம் மாப்பிள்ளை!" என்றான். அதற்கும் மௌனமாக இருந்தேன். என்னை இப்படி 'மாப்பிளை' என்று அழைப்பது, என்னோடு அவன் கல்லூரியில் படித்தக் காலம் தொட்டுத் தொடரும் பழக்கம். சமயங்களில் 'டா' போட்டும் அழைப்பான். "என்னடா மௌனமா இருக்கே... யோச னையா? விடு... அதற்கெல்லாம் ஒரு யோகம் வேணும்டா....." என்றவன், தொடர்ந்து "அந்தப் பைய... அஜீசுக்கு 'அதுல' மச்சம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்... மாப்பிளை!"என்றான்.
*
******************
*
satajdeen@gmail.com

No comments: