Thursday, February 15, 2007

தாஜ் கவிதைகள் - 8

மிகு.
-------

உச்சி சாயும் காலம்
வெகு தூரம் கடந்து விட்டது
உறைத்தது.
சந்தடிகள் கூடிய
சாலைகளை விட்டு
மாற்றுப் பாதைகளில் நடந்து
ஒத்ததையடி வழியாக
விஸ்தீரணப் பொட்டலில்
நடந்து கொண்டிருந்த
தடமும் மறைய
கண் பார்க்கும்
திசையெல்லாம்
பெருவெளி
ராட்ஷசியின் கொண்டாட்டம்.
எதிர்ப்பட்ட ஒருவரிடம்
தங்கும் ஸ்தலமேதும்
உண்டோ இங்கெனக் கேட்டேன்.

வறண்டு தூரத் தெரிந்த
குன்றுகளைக் காட்டி
சிலர் அங்கே தனித்
தனியே வசிக்கின்றார்கள்.
முகங்களைத் தவிர
வேறெதுவும்
அவர்களுக்கில்லை.
திரும்பி நின்ற நிலையில்
அவர்களின் முடியாப் பேச்சை
பேசிக் கொண்டே
இருக்கின்றார்கள் என்றார்.

நீங்கள் யார்யென
வினவியபோது,
அடர்ந்த தாடியை நீவியப்படி
எனக்கு முகமும் இல்லாது
போய் விட்டதேயென வருந்தி
அதே குன்றிலிருந்துதான்
இறங்கி வருகிறேன்.
என் மக்களின்
வசிப்பிடங்களைத் தேடி
இரைச்சல் மிகுந்த அதன்
வழித் தடங்களை
நாடிப் போகிறேன்.
பார்த்துப் போய் வாருங்கள்
விரைவாக கடப்பது நல்லது
இருள் கவிழத்
தோடங்கி விடும் என்றார்.

*****

வேஷம்.
------------

என்னைக்
கழட்டி வைத்தேன்.
அரிதாரம் கொள்ள முழு
வேஷத்திற்குப் பின்
மாறிவிட்டேன்.
மேடை
பிரவேஷத்தில்
கரவோலி.
கண்கள் பூக்க
மலர்ந்த மக்கள்
மீண்டும் மீண்டும்
எதிர்பார்ப்பில்.
எல்லாம் கலைந்து
என்னில் என்னைக்காண
சாதாரணனானேன்.

*****

- தாஜ்..

1 comment:

Esha Tips said...

oh great