Sunday, July 23, 2006

நான் - பெரியார் / குடியரசு / 17.05.1931

மனிதன் தன்னை 'நான்' என்று சொல்லிக்கொள்வது எதனால், அது எது என்னும் ஆராய்ச்சியானது, இந்து மதம் என்பதின் கடைசி 'வேதாந்த' தத்துவமாகப் பாவிக்கப்பட்டு, 'அதைக் கண்டுபிடிப்பதே' கடவுளைக் கண்டுபிடிப்பதாகும் என்று சொல்லப்பட்டு வருகின்றது.

உதாரணமாக, தன்னை அறிந்தவனே கடவுளை அறிந்தவனாவான், தன்னைத் தான் அறிந்தால் கடவுளை அறியவேண்டியதில்லை, தன்னை அறிந்தவனே ஞானி என்றல்லாம் சொல்லப்படுவதைநாம் கேட்டிருக்கிறோம்.

ஒரு மனிதன் தன்னை 'நான்' என்று சொல்லிக் கொள்கின்ற அர்த்த பாவம் எது என்று கண்டுபிடிக்கும் விஷயத்தில் ஏதோ ஒரு பெரிய கஷ்டம் இருப்பதாக நினைத்தோ, அது சுலபத்தில் மனத்துக்கு எட்டாதது என்று கருதியோ அவர்கள் இப்படிச் சொல்லி இருக்கக்கூடும். 'நான்' என்பதை என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து ஒருவன் அதைக் கண்டுபிடித்து விட்டானேயானால் பிறகு அவன் ஞானியாகவும், துறவியாகவும் அல்லது கடவுளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியவனல்லாத.... இலட்சியம் செய்யப்பட வேண்டியவனல்லாத.... நாத்திகனாகவும் ஆகிவிடக் கூடும் என்று கருதிச் சொன்னதாகவும் முடிவு செய்து கொள்ள வோண்டியிருக்கின்றது.

எப்படி இருந்தாலும் ஒரு மனிதன், தான் யார்? தனக்குள் இருக்கும் 'நான்' 'என்' என்று வரும் உணர்ச்சி எது? அது எப்படி உண்டாகின்றது? எதுவரையில் அவ்வுணர்ச்சி இருக்கின்றது? என்பதான உண்மையை உணர்ந்தால், அவன் நாத்திக அபிப்பிராயத்தை அதாவது ஆத்மாவோ கடவுளோ இருக்கின்றது என்பதை நம்பாத கொள்கையையே கொள்ள வேண்டியவனாகி விடுவான் என்று சொல்லப்படுவதில் உண்மை உண்டு என்பதை ஒப்புக்கொள்கின்றோம்.

உலகத்தில் பெயரும் உருவமும் உள்ள பொருள்கள் எல்லாம் ஒருவித சேர்க்கையால் அதாவது பல கூட்டுப் பொருள்களால் சேர்ந்து இருக்கும் வடிவத்தையே பெரிதும் உணர்த்துவதாகும்.

உலகத்தில் உள்ள எந்தப் பெயர் கொண்ட வஸ்துவிற்கும் மாறுதல் அடையாத தனித் தன்மை என்பது கிடையவே கிடையாது. எந்த பெயரும் ஒரு தோற்றத்திற்கு அதாவது வடிவத்திற்கு சொல்லப்பட்டு வருகின்றதே அல்லாமல் வஸ்துவுக்குப் பெயர் சொல்லப்படுவதில்லை.

ஒரு லாந்தர், ஒரு மேஜை, ஒரு கடிகாரம், ஒரு புத்தகம், என்பது போன்ற வஸ்துகளில் ஏதாவது ஒன்றை எடுத்து அதன் பெயர் என்ன என்று ஒருவனை கேட்டால், அதன் பெயரை சொல்வான். ஒரு லாந்தர் எது என்றுதொட்டுக்காட்டச் சொன்னால்... லாந்தர் என்பதில் அவன் தொட்டுக் காட்டியப் பாகம் ஒரு சிம்ணியையோ, கண்ணாடியையோ, தகட்டையோ, கம்பியையோ, ஆணியையோதான் தொட்டுக் காட்டுவதாய் இருக்கும். அது போலவே, ஒருமேஜையைத் தொட்டுக் காட்டச் சொன்னால் தொட்டுக் காட்டிய பாகம் ஒரு பலகையோ, அல்லது காலையோ, ஆணியையோ, குமிழையோ,கைப்பிடியையோதான் தொட்டுக் காட்டியதாகக் காண்போம். இப்படியேதான் கடிகாரம், புத்தகம்ஆகிய பொருள்களிலும் ஒரு பாகத்தையே தொடமுடியும்.

அவன் லாந்தர் என்பதாக காட்டியது கம்பி என்பதானாலும், கம்பி என்பதாக ஒன்றைத் தொட்டுக் காட்டியதாக இல்லாமல் இரும்பைத் தொட்டுக் காட்டியதாகத் தான் காணப்படும். இரும்பு என்பதைக் காட்டும் போது, ஏதோஒரு வகையான மண்ணின் சேர்க்கையைக் காட்டியதாகத்தான் முடியும்.

பெயருக்கு வஸ்துகள் கட்டுப்பட்டு, அந்த வஸ்துகள் வேறு எந்த ரூபத்தை கொண்டிருந்தாலும் வேறு குணத்தை அடைந்தாலும், அந்த பெயரையே உடையதாகக் காணப்படமுடியாது என்பதாக இவற்றிலிருந்து நன்றாய்உணரக் கிடக்கின்றது.

ஆகவே லாந்தர், மேசை, கடிகாரம், புத்தகம் என்றதும் ஒருவித வடிவத்தில் காணப்படும் ஒரு தோற்றத்தின் பெயரே தவிர ஒரு வஸ்துவின் பெயர் அல்ல.

மேசை, நாற்காலி, பெஞ்சு, ஊஞ்சல் என்று சொல்லப்படுவதான வஸ்துக்கள் மரம் என்னும் ஒரே மூலப்பொருளாலும், இரும்பு என்னும் ஒரே உபமூலப் பொருளாலும் செய்யப்பட்டிருந்தாலும் தனித்தனி வடிவத் தோற்றத்தினால் தனித்தனி பெயரை உடையதாகி இருக்கிறது. உலக வஸ்துக்கள் எல்லாம் வடிவம், உருவம், சாயல், குணம், நிலை முதலாகிய பேதத்தால் பலவிதப் பெயர்களை உடையதாக இருந்தாலும், பலப்பல காரணங்களால் அதே வஸ்துகள்வேறு பல பெயர்களை அடைந்தாலும், முடிவில் அவற்றின் மூலப் பொருட்களின் பெயர் எல்லாவற்றிற்கும் ஒரே தாதுபெயருடைய வஸ்துவாகவேதான் இருக்கும்!

இது போலவேதான், ஜீவன்கள் என்கின்ற 'உயிர்'ப் பிராணிகள் எல்லாம்கூட உருவத்தில், தோற்றத்தில்வேறுவேறு வகையாய் பெயராய்ச் சொல்லப்பட்டாலும் அவற்றின் மூலப்பொருள்களும் ஒன்றேயாகும். மரத்தையேமூலப் பொருளாய்க் கொண்ட மேஜை, நாற்காலி, பெஞ்சு, முதலிய பல பெயர்களுக்கு உருவம், தோற்றம் ஆகியவையே காரணமாய் இருப்பது போல, அணுக்கிருமி, பூச்சி, புழு, பட்சி, மிருகம், குரங்கு, மனிதன் முதலாகிய பல ஐந்துக்களுக்கும் உருவம், தோற்றம், குணம் முதலிய காரணமாய்ப் பல பெயர்கள் சொல்லப்பட்டாலும், தொட்டுக்காட்டும் பாகங்களானவை எல்லா ஜீவ வர்க்கத்துக்கும் ஒரே மாதிரியான, ஒரே பெயர் கொண்டதான மூலப்பொருளாகத்தான் இருக்கும். ஆகவே, ஜீவ வர்க்கங்கள் என்பனவாகிய சகல ஜீவப்பிராணிகளும் சாயல், உருவம், தோற்றம், குணம் முதலியவை தவிர அவற்றின் மூலப்பொருள்களும் தத்துவமும் ஒன்றேயாகும்.

எத்தனையோ கோடி ஜீவப்பிராணிகள் என்பதில் மனிதன் என்பதும் ஒருவிதமான தோற்றமுடைய உருவத்திற்குச் சொல்லப்படும் பெயரேயொழிய மனிதன் என்கின்ற ஒரு தத்துவத் தனிப்பொருள் இல்லை என்பதைஇதனால் ஒருவாறு உணரலாம். ஏனெனில், மனிதன் என்று குறிப்பிடுவதற்குத் தொட்டுக்காட்டக்கூடிய ஒரு வஸ்து மனித சரீரத்தின் எந்தப் பக்கத்திலும் கிடையாது.

ஒரு மனித உருவத்தைக் காட்டி, அவனை மற்ற ஒரு மனிதனால் தொட்டுக் காட்டச் சொன்னால், அவன்ஒரு மனிதன் என்பவனின் சரீரத்தில் ஏதாவது ஓர் அவயத்தைத்தான் தொட்டுக் காட்டுவான். அந்த அவையத்திற்கு ஏற்கனவே கை, கால், வயிறு, முதுகு, மார்பு, என்பதாக ஏதாவது பெயருடையதாக இருக்கும். அந்த பெயருடைய அவைய வஸ்துவையும் கவனித்துப் பார்க்க ஆரம்பித்தால்.... அது தசை, தோல், முதலாகிய பெயர்களையுடைய பொருளாகத்தான் காணப்படும். இப்படி எல்லாம் இருந்தாலும்கூட, அப்படிக் காட்டப்பட்ட மனிதனும் இயங்குதல் அதாவது, அசைகிற சக்தி இருக்கும்போதுதான் அந்த தோற்றத்திற்கு மனிதன் என்கின்ற பெயரையுடையதாகவும், அசைகின்ற சக்தி இல்லாது போய்விட்டால் மனிதன் என்ற பெயருடைய அதே தோற்றம் பிணம் என்னும் பெயருடையதாகவும் ஆகிறது.

***
- சிறிய சில நீக்கங்களுடன்/தட்டச்சு/தகவல்: தாஜ்.

- நன்றி: உண்மை/ஜூலை 1 - 15, 2006

satajdeen@gmail.com

Saturday, July 22, 2006

தாஜ் கவிதைகள்..4



சரணம்
********
மரமேறி விழுந்தவன் கதையை
கனவில் இடறப் படித்தபோது
கண்களில் உயிர்த்தது ஒளி.
முறிந்த இடங்கள் கூட
சிதைந்தப் பிண்டங்கள்
ஒட்டிக் கொள்ள
கரங்களில்
திரண்டது புஜம்.
உடைப்பட்ட மூக்கு
வடிவெடுத்து விடைக்க
முகத்தில் எழிலலை.
சிராய்ப்புக் கொண்ட மேனியோ
சொல்லொன்னா மினுமினுப்பு.
சித்தம் பேதலித்த சிரசுக்கு
அதிகார அதிஸ்டம் வேறு.
பட்டத்து யானை
மாலையேடு வலம் வர,
கோட்டை மாடத்துச் சாளரத்தில்
சிறகடிக்கும் மணிப்புறாக்கள்.
பணிப் பெண்களின்
சாமர மேவலில்
இடைவாள் பளபளக்க,
படுக்கை விதியாகிப் போன
மூட்டைகளின் நமைச்சல்
இன்றைக்கும் பழிதீர்த்தது.
***
கணையாழி/மார்ச்/1999

படம்.
*****
அம்மா எனக்கு நேர்
வகிடெடுத்து சிங்காரித்த
குழந்தைப் படம்.

உச்சி முகர்ந்த தந்தையுடன்
விழி பிதுங்கும் குண்டுப்
பையன் படம்.

பல்லெல்லாம் போனயென்
பாட்டியோடு
வாய்விட்டு சிரிக்கக் காட்டும்
அரும்பு மீசை படம்.

சம்பாத்திய மிடுக்கும்
பச்சை ஜொலிப்புமாய்
என்னவளோடு மகிழும் படம்'

ஈன்ற மழைகளிடம்
முத்துக்கள் சிந்தியப்
பதிவுகளையும் சேர்க்க
வண்ணமென ஒருபாடு
பத்திரப் படுத்தியிருக்கிறேன்
இன்றைய அழகைத் தவிர.

***
E-mail: tamilpukkal@gmail.com

Monday, July 17, 2006

கல்வி கண் திறந்த காமராஜ் பேசுகிறார்...

'தமிழகம் கண்ட நிஜமான
அரசியல் தலைவர்களில்
ஒருவராக கருதப்படும்
திரு. காமராஜ் அவர்களின் 104 -வது
பிறந்த தினத்தை நினைவுகூறும் முகமாக...'
- தாஜ்...

"எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசவும் ஆரம்பித்திருக்கின்றார்கள். யார் பேசுகின்றார்கள்என்று தெரியுமா? இதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஏழை மக்களை மேலும் ஏழையாக்குபவர்களே இதை கூறுகின்றார்கள். நீ ஏழையாய் இருப்பது, ஏழையாய் இருக்க வேண்டும் என்பது உன் தலை எழுத்து ( கடவுள் கட்டளை )என்று கூறி ஏமாற்றுகின்றார்கள். தங்களின் நிலையை உயர்த்திக் கொண்டே இருக்கும் சூழ்ச்சியே அது.

உழைக்கவேண்டியதே, ஏழையாய் இருப்பதே தலையெழுத்து என்றால் அந்த தலையெழுத்தை மாற்றிஎழுதுவோம். எழுத வேண்டியது அவசியம் என்றுதான் சொல்லுகின்றேன். எனவே கடவுள் பெயரைச் சொல்லி உங்களை ஏமாற்றுகின்றவர்கள்தான் என்னை கடவுள் நம்பிக்கையில்லாவன் என்று சொல்லுகின்றார்கள். இப்படிப்பட்டவர்களோடு திமுகவும் இப்போது சேர்ந்து கொண்டிருப்பதுதான் விந்தையாக உள்ளது.( சிரிப்பு)

ரஷியாவிலும் அமெரிக்காவிலும் செல்வம் செழித்து வருகிறது. அங்கு இவை எல்லாம் குறுக்கிடவில்லை. அந்த நாடுகளைப் போன்று நம்முடை நாட்டிலும் செல்வம் பெருக வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது. அதற்காக பாடுபடவேண்டும். அதிகம் உழைக்கவேண்டும். சோம்பேறித் தனமாக இருந்தால் பயன் படாது. கடவுளை எண்ணிக் கொண்டு கைகட்டிக் கொண்டிருந்தால் எப்படிச் சாப்பிடுவது?"
காமராஜ்உரை/இராயக்கோட்டை/26.04.1966

"அவனவன் தலை எழுத்துப்படி நடக்கட்டும் என்பதுதான் சுகந்திராக் கட்சியின் தத்துவமாக உள்ளது. எவன் தலையில் எவன் எழுதினான் என்று சொல்லட்டுமே!! தலை எழுத்து என்று ஒன்று உண்டென்றால் அதை மாற்றியே ஆகவேண்டும். இதற்காகவே சண்டை போடுகிறேன்."
காமராஜ் உரை/பழைய மாம்பழம்/13.04.1961

"அன்று பள்ளிகளை மூடினார் ராஜாஜி. நான்தான் கங்கிரசிலிருந்து போகச் சொன்னேன். அந்த கோபம்அவருக்கு இன்னும் தீரவில்லை. 53 -ல் செய்ய முடியாததை, எல்லாப் பள்ளிகளையும் மூட முடியாமற்போனதைஇப்போது செய்யப் பார்க்கிறார். அதுவும் திமுக வைக் கொண்டு செய்துவிட நினைத்துச் சூழ்ச்சி செய்கின்றார்.
இந்த சூழ்ச்சி என்னிடம் பலிக்காது. மக்கள் அறிவற்றவர்களாகவே இருக்கவேண்டும் என்பது அவர் தர்மம். தாம், தர்மத்தைக் காப்பதாக ராஜாஜி சொல்லிக்கொண்டிருக்கிறார். இவர் இல்லை என்றால் தர்மமே இல்லாமல்போய்விடுமா? இவர் தர்மம்தான் என்ன? 1953-ல்தான் பார்த்தோமே! குலக்கல்வித் திட்டத்தின் மூலம் பள்ளிகளைமூட முயற்சித்தார். அந்த முயற்சியில் தோல்வி கண்டார். இப்பொழுது திமுகவின் உதவி கொண்டு நிறைவேற்ற எண்ணுகிறார். ராஜாஜியைப் பற்றி எனக்குத் தெரியும். அவர் சதி இனி ஒன்றும் பலிக்காது. நான் இருக்கும் வரை அதைப் பலிக்க விடமாட்டேன். பயப்படவும் மாட்டேன். ஏழை ஏழையாகவே இருக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார்.அவரது தர்மம் அப்படிச் சொல்கிறது. அதை மாற்றியே தீருவேன். தனி ஒருவனாக நிற்க வேண்டி வந்தாலும் அதைமாற்றியே தீருவேன்."
காமராஜ் உரை/வாணியம்பாடி/04.05.1966

"உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளை இந்த நாட்டில் நீண்ட காலமாக இருந்து கொண்டு, மக்களை மடமையில் ஆழ்த்தி வருகின்றன. இந்த நாட்டிலே உயர்ந்த சாதி என்பவன் அயோக்கியனாய், திருடனாய், சோம்பேறியாய் இருந்தாலும் அவன் உயர்ந்த சாதியில் பிறந்தவன் என்பதற்காக உத்தமன் ஆகிவிடுகின்றான். உதாரணமாக பாரதத்தில் வரும் தர்மன் ஆட்சியை, தன் உடன்பிறப்பை, தன் மனைவியை, ஏன் தன்னையே அடகு வைத்துப்பகடையாடினான். அவனை நம் நாடு தர்மவான் எனப் போற்றுகிறது. உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதற்காகச் சமுதாயக் குற்றச் சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்கின்றான். ஆனால் தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவன் நாணயப் பொறுப்புள்ளவனாக இருந்தாலும் இனப் பாகுபாடு அவனை முன்னுக்கு வராமல் தடுக்கிறது. இப்பிளவைப் போக்கிஅனைவரும் சமம் என்ற ரீதியிலே மக்களை மக்களாக நடத்துவதுதான் சமதர்மம்."
காமராஜ் உரை/கிருஷ்ணகிரி/12.01.1967
*
நன்றி: உண்மை, ஜூலை 1-15, 2006
தகவல்/தட்டச்சு: தாஜ்

satajdeen@gmail.com

Tuesday, July 11, 2006

தாஜ் கவிதைகள்..3

நிஜத்தின் உண்மை.
**
உண்டு மகிழ்ந்த
என் கனவுகளில்
உயிர் வளர்த்தேன்.
உபாதைகள் காண
வைத்தியனை
நேர் கொண்டபோது
உணவை உண்டு
வாழப்
பழகென்றார்.

உயிர் வாழ
கொண்ட
உணவுதான் அது
விழுங்கியப் பொழுதிற்கு
எல்லாம் ஜெயம்
மனம் சிறகசைக்க
விண்ணில் பறந்ததும்
நிஜம்.

உபாதைகளின்
உபத்திரவம் அற
வைத்தியன் சொல்லே
வைத்தியம்.
முயற்சிக்க அவை
பல் வேறாக கிளைத்தது.

***
மீட்சி / 1988


மெளனம்.
**
தகித்தடங்கிய
எண்ணங்களைக்
கொட்டி
வார்த்தைகளால்
திரித்து
வரி வரியாய்
கடைந்தபோது
கிட்டிய ஈவின்
அமிர்த மொழி
கவிதையாய்
திரண்டதோர்
மந்திரம்.

***
கணையாழி / செப், 98

Sunday, July 09, 2006

தாஜ் கவிதைகள் .. 2

கோலம்
-----------

மையத்தில் ஒற்றைப் பட்ஷி
சிறகசைத்துப் பறக்க
புள்ளிகளை அளந்து
வரிசைக் கிரமமாக வைத்தேன்.
ஒவ்வொன்றாய்ப் பற்றி
வரைதலைத் தொடங்கவும்
கற்ற கோலம் கை கொடுக்க
இட்ட கோலத்தை முன்னெடுத்தேன்.

உச்சத்தில் அன்னியமென விட்ட
இறைச் சுழி வேண்டுமென்றார்கள்
மையத்தில் மணையிட்டு
ஜோடிக் கிளியாய்க்
காணணுமென சொன்னார்கள்.

என் கோலம் பெரிதாகிப் போனது
ஜோடிக்கு உயிர்ப்பாய்
குஞ்சுகளையும் வரைந்தேன்.
ஒவ்வொரு வளைவுகளிலும்
அழகின் அர்த்தம் கண்ணுர
எட்டெடுத்து வைத்ததில்
எங்கோ பிசகி
வட்ட வட்டப் பின்னலாய்
கால்போன திசைக்கும் விரிந்தது.
எந்த திசையில் நின்று பார்த்தாலும்
என் கோலம் எனக்கே புரியவில்லை.
***
- கணையாழி. மார்ச்/1997


வேஷம்.
-----------

என்னைக்
கழட்டி வைத்தேன்
அரிதாரம் கொள்ள முழு
வேஷத்திற்குப் பின்
மாறிவிட்டேன்.
மேடை
பிரவேஷத்தில்
கரவோலி.
கண்கள் பூக்க
மலர்ந்த மக்கள்
மீண்டும் மீண்டும்
எதிர்பார்ப்பில்.
எல்லாம் கலைந்து
எனக்குள் என்னை
நுழைத்துக் கொள்ள
சாதாரணனானேன்.
***
- தமிழ் நேசன்/மலேசியா/
ஜனவரி/1997

- தாஜ்

Thursday, July 06, 2006

ஈழப் பிரச்சனைகளும் / தமிழ்ப் பூக்களும்

முன் குறிப்பு:
------------------

ஈழத்தில் சமாதானம் மலரவேண்டும் என்ற நோக்கில் உருபெற்ற ஆக்கம் இது. கட்டுரை + பேட்டி வடிவம் கொண்ட இந்த வரைவை தயார் செய்து சுமார் ஒரு மாதம் காலம்ஆகிவிட்டது.

இதனிடையில், ஈழத்தில் மீண்டும் வழக்கமான போர் வெடிக்க பிரசுரத்திற்கு லாயக்கற்று இந்த எழுத்துக்கள் முடங்கின.

திரும்பவும்..... நார்வே சமாதான குழு விரைகிறது என்கின்றார்கள். முயற்ச்சிகள் தொடர்வதை நாம் கண்ணுறும் போதே போர் படகுகள் கடலில் முழ்கிய செய்திகளும் வருகிறது. கொழும்பு விமானத்தளத்தின் அருகான்மை கடலில் குண்டுகள் வெடித்ததாக வேறு மீடியாக்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இந்த நாட்களில் திடுமென ஒரு நாள் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொலை செய்தோம். அது ஓர் பழைய செய்தி, விட்டுத் தள்ளுங்கள் யென ஆன்டன் பாலச்சிங்கம் காய் நகர்த்தினார்.

ராமேஸ்வரத்திற்கு அகதிகள் நித்தமும் வருகின்றார்கள். பத்திரிகைகளும் பேட்டிகளுக்கு போட்டிப் போடுகின்றன. ஆக, ஈழ அப்பாவி மக்கள் எதிர் நோக்கும் சமாதானம் என்பது இப்பொழுது இல்லை.

நாளை மீதான நம்பிக்கை இத்துவிட்டது. நாளெள்ளாம், ஒத்த நாளாகவே இருக்கிறது. தினமும் அது இருளிலில் இருந்தே தொடங்குகிறது.
***

1980 களில் ஈழப் பிரச்சனைகள், தமிழக மக்களுக்கு பிடிப் படாத குழப்பமானசங்கதி. இந்திய அரசு 'நாட்டின் நலனை' முன்னிறுத்தி ஈழப் பிரச்சனையில் பங்கு கொண்டதுமாதிரி, தமிழகத்து அரசியல் கட்சிகள் தங்களது 'கட்சி அரசியலை' முன் நிறுத்தி ஈழப் பிரச்சனைகளைப் பேசியது. இவர்களின் இந்த அணுகுமுறையால் தமிழக மக்களுக்குமிஞ்சியதென்னவோ குழப்பம்தான்.

1982 ல் சௌதி அரேபியாவில் நான் பணிப்புரிந்தபோது 'தமிழ்ப் பூக்கள்' என்றகையெழுத்துப் பிரதி ஒன்றை நடத்தினேன். ஈழக் குழப்பங்களுக்கு தெளிவைத் தேடி அதில்ஒரு கட்டுரை கொண்டு வர நினைத்தேன். எனது நண்பர், தான் பணிப் புரியும் கம்பெனியில் சில ஈழச் சகோதரர்கள் சிலர் பணிப் புரிவதாக கூறினார். அவர்களிடம் ஒரு பேட்டிக்கு ஏற்பாடு செய்ய இயலுமா என நண்பரை கேட்டேன். பாக்கலாம்மென போனவர், " நேரடிப் பேட்டிக்கு அவர்கள் மறுக்கின்றார்கள் என்றும், கேள்விகள் எழுதித் தரும் பட்சம், பதில் எழுதித் தருவதாக சொல்கின்றார்கள்" என்றார்.

கேள்விகளை எழுதித் தந்தேன் பதிலும்கிடைத்தது. தந்திருந்த கேள்விகளில் சில தவிக்கப் பட்டிருந்தது. நேர்காணலுக்கு அவர்கள் சம்மதித்திற்கும் பட்சம் கேள்விகளை ஒட்டித்துணைக் கேள்விகளை கேட்டுயிருக்கலாம். இயலாமல் போய்விட்டது. அந்த பேட்டி,'நங்கள் ஏன் தனி நாடு கேட்கின்றோம்' என்ற தலைப்பில் 'தமிழ்ப் பூக்கள்' /ஜூன் -82/ 10 வது இதழிலில் பிரசுரமானது.

இந்த பேட்டியை கீழே நீங்கள் வாசிக்கும் முன், ஈழப் பிரச்சனையைமுன்வைத்து என் மனதின் வார்த்தைகளாக சில வரிகள்.

ஈழப் பிரச்சனைகள் தீருமா? தமிழ் ஈழம் மலருமா? என்ற நேற்றைய கேள்விகள் இன்றைக்கும் 'மாறா' இளமையுடன் அப்படியே இருக்கிறது. எத்தனை உயிர் பலிகள்!எத்தனை எத்தனைப் பெண்களின் சிதைவுகள்! எத்தனை ஆயிரம் வாழ்க்கை நொறுங்கல்கள்!ஈழத்து ஊர்களின் உருகுலைதக் காட்சிகள்தான் எத்தனை! இத்தனைக்குப் பிறகும், அந்த கேள்விகளுக்கு பதில் இல்லை.

நாளைக்கும் அந்த கேள்விக்கு பதில் சொல்பவர்கள் இருக்கப்போவதில்லை.யாரால்தான் பதில் சொல்ல முடியும்! கஷ்டம். பதில் நோக்கிக் காத்திருப்பவர்களோ இதனை'மில்லியன் டாலர் கொஸ்டீன்' என்கின்றார்கள். எனக்கென்னவோ அது 'பில்லியன் டாலர் கொஸ்டீனென்றாலும்' பதில் கிட்டாது என்றுதான் தோன்றுகிறது.

ஓர் தீர்வு என்பது, இரண்டு பக்கமும் விட்டுக் கொடுப்பதில் மட்டுமேசாத்தியமாகக் கூடியது. போராளிகளிடமும் / அரசு அதிகார வர்க்கத்திடமும் அவரவர்கள் பக்கத்தை நியாயப் படுத்த அவரவர்களிடம் காரணக் காரியங்கள் ஒருபாடு இருக்கிறது. இருவருக்குமான வாழும் காரண காரியங்களுக்கு இடையேதான் அவர்களது பிரச்சனைகளின் விருட்ச்சமும் தளைக்கிறது.

பிரச்சனைகளைத் தீர்க்க வருகிறேன் பேர்வழிகளும் இந்த விருட்ச்சத்திற்குகீழே அமர்ந்து, பெருமூச்சுகளை விட்டப் படியே போய்கொண்டு இருக்கின்றார்கள். நாளையும் அவர்கள் வரக்கூடும். வருகிறபோதும் அப்படித்தான் திரும்புவார்கள். சில சமயம் அரசும் / போராளிகளும் சமாதானம் என்று நிஜமாக முன் வந்தாலும், அது நடந்தேறவாய்ப்புகள் குறைவு. அதன் தீர்வென்பது அவர்களது மனம் சார்ந்தது. இருதரப்பினரும் எல்லையில்லாது விட்டுக் கொடுத்தால் மட்டுமே அது கூடும்.

சில நேரம், சாமாதானத்தை முன் எடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இலங்கை அரசும் அதன் எதிர்கட்சிகளும் முயல்கிற போதெல்லாம்...புத்த குருமார்கள், குறுக்கே நிற்பதை நாம் காண முடிகிறது. அவர்களைச் சார்ந்த அந்த மூன்றாவது சக்தியை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை.

போராளிகளின் பக்கமும் இப்படியோர் மூன்றாவது சக்தி இருப்பதாக நோக்கர்கள்கணிக்கின்றார்கள். தமிழ் ஈழப் பிரச்சனைகளை முன்வைத்து ஐரோப்பா/ கனடா/ ஆஸ்த்ரேலியாயென புலம் பெயர்ந்து வாழும் அந்த ஈழத் தமிழர்களைத்தான்... மூன்றாவது சக்தியாக கணிக்கின்றார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில், அந்த சகோதரர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதால், கிட்டிய சுகபோகங்களை அவர்களால் இனி விட்டு விலக இயலாது என்கின்றார்கள். அதையொட்டியே ஈழப் பிரச்சனைகள் சமாதானமென முடிவுக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை என்கிறார்கள். பல வழிகளில் அவர்கள் போராளிகளுக்கு உதவிகரமாக
இருக்கின்றார்கள் என்பதினால், மறைமுகமான அவகளது இந்த கோரிக்கையை போராளிகள் ஏற்றிருக்கக் கூடும் என்றகின்றார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

அந்த பேட்டி தமிழ்ப் பூக்களில் பிரசுரமான காலக் கட்டம் என்பது ஈழப் பிரச்சனைகள் சூடுப்பிடிக்கத் துவங்கி, இழப்புகள் பெருகத் தொடர ஆரம்பித்தக் காலம். பேட்டித் தந்த அந்த ஈழத்து நண்பர்கள், இறுக்கமான மனதுடன்/ எதிகாலக் கனவுகளைத் தேக்கியப்படி/ வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் என்கின்ற தன்னம்பிக்கையுடந்தான் அந்த பதிலைத் தந்தார்கள். இன்றைக்கு அந்த நம்பிக்கைகளுக்கும் அவர்களின் அந்த கனவுகளுக்கும் என்னத்தான் விடியல்? தெரியவில்லை.

பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வாக, இருசாராரும் இது நாள்வரை யுத்தத்தையே நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள். சமாதானம் கூட ஒருவகையில் அரசியல் தீர்வுதான்.

தமிழ் ஈழத்து மக்களின் இன்றைய வாழ்க்கையையும், எதிர்காலகனவுகளையும் 'எங்கும் வியாபித்திற்கும் இயற்கைதான்' எளிதாக்கித்தரனும்.

இதோ அந்த பேட்டி....

கேள்வி: தீவு நாடான அந்த சின்ன இலங்கைக்குள்ளேயே,தனி நாடு கேட்கும் நீங்கள்எவ்வளவு ஜனத்தொகை கொண்டவர்கள்? மொத்த இலங்கை ஜனத்தொகையில் நீங்கள்எத்தனை சதவிகிதம்?

பதில்: சுமார் 35 லட்சம் (3.5 மில்லியன்) தமிழ் பேசும் மக்கள் இலங்கையில்வசிக்கின்றார்கள். இது மொத்த ஜனத்தொகையில் 26 சதவிகிதம்.

கேள்வி: இலங்கையில் வாழும் அத்தனை தமிழகளுக்கும் இந்த கொள்கை(தனி ஈழக்கொள்கை) உடன் பாடுதானா?

பதில்: இல்லை. குறுக்கு வழியில் புகழ், பொருளை நாடுபவர்கள் இல்லாது,உலகில் எந்தச் சமூகமும் இல்லையே! இந்தியச் சுதந்திரத்தை எதிர்த்த இந்தியர்களும்இருந்திருக்கின்றார்கள். சுதந்திரம் கிடைத்தப்பின் அவர்களும் பங்கு கேட்காமலா விட்டார்கள்.

கேள்வி: இலங்கையில் எத்தனை அரசியல் கட்சிகள் உள்ளன? அவைகளில் உங்களை ஆதரிக்கும் கட்சிகள் எத்தனை?

பதில்: அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் இலங்கையி ஏழு மட்டுமே.இவற்றுள் பாராளமன்ற பிரநிதித்துவம் உள்ளவை ஐந்து.

1. ஜெயவர்த்தனாவை தலைவராகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி (தற்போது ஆட்சி புரிகின்றது)

2. ஸ்ரீமவோ பண்டார நயக்காவைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திராக்கட்சி.

3. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி.

4. தமிழர்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர் விடுதலைக் கூட்டணி.

5. மற்றயது திரு.தொண்டமான் தலமையிலான இலங்கை தொழிலாளர்காங்கிரஸ்.

பெரும்பான்மையான தமிழர்களை பிரதிநிதித்துவம் படுத்தும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்கள் இன்றைய நாடாள மன்றத்தின் ஒத்தியோகப் பூர்வ எதிகட்சித் தலைவர். தமிழர்களுக்கு தனி நாடொன்று'தமிழ் ஈழம்' என்றப் பெயரில் நிறுவப் படவேண்டும் மென்ற கோரிக்கையை முன் வைத்துத.வி. கூட்டணி சென்ற தேர்தலில் போட்டியிட்டு, நாடாள மன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மையை உறுப்பினர்களை பெற்றது. அது மட்டுமின்றி தனிநாடுக் கோரிக்கையைஅதிகப் பெரும்பான்மைத் தமிழர்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி முன் வைத்தார்கள்.தமிழ் மக்களின் அவ் ஆணையை நிறைவேறுவதற்காகவே இன்று இக்கட்சி நாடாளமன்றத்தில்உள்ளும் புறமும் போராடி வருகின்றது.

கேள்வி: உங்களால் ஏன் இலங்கை சிங்கள மக்களுடன் உடன்பட்டுப் போகமுடியவில்லை?

பதில்: எம்மை எமது சொந்த நாட்டிலே இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்தி வருவதினாலும், இந்த நாடு சுதந்திரம் பெற்றபின் மாறி மாறி ஆட்சி செய்த இரண்டுகட்சிகளின் தலைவர்களுடனும் தமிழர்கள் செய்துக்கொண்ட ஒப்பந்தங்கள் நடைமுறைப் படுத்தப்படாது துரோகம் இழைக்கப் பட்டமையால் ஒத்து வாழும் சாத்தியக் கூறுகள்எப்பவுமே தென்படவில்லை.

கேள்வி: தமிழகத்தில் பெரியார் ஈ.வே.ரா. கேட்ட 'தனி நாடு' கொள்ககையின் பாதிப்பே உங்களின் இந்த
நிலைக்கு காரணம் என்று கொள்ளலாமா?

பதில்: இது தவறான கருத்து. தமிழ் நாட்டின் அரசியல், இலங்கை தமிழர்களின்அரசியல் பாதையை வகுக்கவில்லை. பெரியார் திராவிட நாடு கேட்டமையும் பின் கைவிட்டமையும் பழைய வரலாறாகிவிட்ட காலக்கட்டத்தில்தான் இலங்கைத் தமிழர்கள்1976 ம் ஆண்டில் ஏகோபித்தக் குரலில் 'தமிழ் ஈழம்' கேட்டார்கள். சிங்களவருடன் சேர்ந்துஒன்றுபட்ட இலங்கையில் வாழ்வதற்கு தமிழர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகள்பயனற்று, மாறாகத் தமிழர்கள் திட்டமிட்டு அழிக்கப் படுவதை இனிமேலும் தாங்க முடியாதநிலை ஏற்பட்ட போதே 'தமிழ் ஈழம்' கோரிக்கையை தமிழர்கள் விடுத்தார்கள்.

கேள்வி: உங்களின் இந்த கொள்கைப் போராட்டத்திற்கு பிற வெளிநாடுகள்ஆதரவு தருகிறாதா?

பதில்:நீங்கள் இந்த கேள்வியைக் கேட்கலாமா!

கேள்வி: இதற்கான தலைமை அமைப்பு, இலங்கைக்கு வெளியே பிற நாடுகளில்இருப்பதாக சொல்லுகின்றார்களே உன்மையா? எந்த நாட்டில் என்று குறிப்பிட முடியுமா?

பதில்: மேலேயுள்ள கேள்விக்கான பதிலே இதற்கும் பதிலாம்.

கேள்வி: இந்த கொள்கைக்காக அரசாங்க இராணுவத்தையே எதித்துப் போராடுகின்றீர்களே... அதற்கான ஆயுதங்கள் உங்களுக்கு எப்படிக் கிடைக்கின்றது?

பதில்: ம்....ஹும்.....

கேள்வி: தனி நாடு கேட்கும் உரிமை உங்களுக்கு இருப்பதாக எதை வைத்துதீர்மானிக்கின்றீர்கள்?

பதில்: இலங்கைத் தீவு 1833ம் ஆண்டு வரை ஒரு நாடாக இருக்கவில்லை.1796ல் இலங்கையை கைப் பற்றிய ஆங்கிலேயர்கள் தமது நிர்வாக நலன் கருதி, இரு தனியான மக்களையும் - நாடுகளையும் 1833ல் ஒன்று சேர்த்து விட்டார்கள்.ஒத்து வாழலாம் என்றுதான் பார்த்தோம்...ம்...ஹும்..., எமது பழைய உரிமையைநிலை நாட்ட முயன்றேம். இதுதான் உரிமை வந்த வரலாற்றின் சுருக்கம்.

கேள்வி: நீங்கள் எந்த விதத்தில் அரசாங்கத்தால் பாதிக்கப் படுகின்றீர்கள்?

பதில்: அரசாங்கம் தனது சொலவில் திட்டமிட்டு தமிழ்ப் பிரதேசங்களில்சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் எமது பிரதேசத்திலேயே எம்மைசிறுபான்மையினராக்கும் சதி நடைப் பெறுகின்றது. தமிழ் மாணவர்களின் உயர் கல்விதிட்டமிட்டு மறுக்கப் படுகின்றது. தொழில் வாய்ப்பும், மொழியுரிமையும் பறிக்கப்பட்டு விட்டது. தமிழர்களின் பொருளாதாரம் வேண்டுமென்றே நசுக்கப் படுகின்றது.இந்த நிலைத் தொடர்ந்தால் எமது நாட்டிலேயே நாம் விரைவில் அடிமைகளாக்கப்பட்டுவிடுவோம்!

கேள்வி: உங்களின் இந்த கொள்கைக்காக நீங்கள் இதுவரை எத்தனைபோராட்டங்கள் நடத்தியுள்ளீர்கள்? இதனால் உங்களுக்கு ஏதாவது அனுகூலம்ஏற்பட்டதுண்டா?

பதில்: நாடு வெள்ளையனிடம் இருந்து சுதந்திரம் பெறும்போதே எமதுஉரிமைப் போராட்டமும் ஆரம்பமாயிற்று. மாறி, மாறி நடைப் பெற்ற போராட்டங்களில்தலைவர்கள் சிறையிலடைக்கப் பட்டார்கள். தேசதுரோக குற்றத்திற்காக நீதிமன்றத்தில்நிறுத்தப் பட்டார்கள். தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.ஒவ்வொரு போராட்டமும் தமிழ் மக்களுக்கு மேலும் மனவுறுதியையும், நம்பிக்கையையும்அளித்து வருகின்றது.

கேள்வி: நீங்கள் நினைப்பது மாதிரி நாளையத் தினம் உங்களுக்கு தனிநாடுகிடைக்குமானால்.... எந்த மாதிரி ஆட்சியை நிர்மானிப்பீர்கள்?

பதில்: மதசார்பற்ற ஜனநாயக சமதர்மக் குடியரசு ஒன்றினை நிறுவுவதற்குத்தான் தமிழ் மக்கள் 1977ம் ஆண்டு ஜூலை 21ல் நடைப் பெற்ற பொதுத் தேர்தலில்தா.வி. கூட்டணிக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.

கேள்வி: அருகில் இருக்கும் தமிழ் நாடு உங்களுக்கு எந்தெந்த வகையில் உதவிப்புரியவில்லை என்பதில் ஏதேனும் ஆதங்கங்கள் உண்டா?

பதில்: ஆம், தமிழ் நாட்டு அரசாங்கத்திடம் இருந்தும் மக்களிடமிருந்தும் தற்போதைக்கு தமிழ் ஈழ மக்கள் எதிபார்ப்பது அவர்களின் தார்மீக ஆதரவினை மட்டுமே.அத்தகைய ஆதரவு இன்றும் எமக்கு முழுமையாக கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் நிறையவே உண்டு. "இலங்கையில் தமிழர்களா....? தமிழ் எழுத வாசிக்கக் கூட அவர்களுக்கு தெரியுமா?" என்று வியந்து கேட்கும் 'படித்த தமிழ் நாட்டவர்' பலர்இன்றும் இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் எற்க மறுப்பீர்களா..?

கேள்வி: இது மாதிரியெல்லாம் தமிழ் நாட்டின் பிரஜைகளுக்கு எண்ணம்ஏற்படாததை குறித்து உங்களது மனநிலை என்ன?

பதில்: தமக்கெனவும் தனிநாடு வேண்டும் என்பது பற்றித் தீர்மானம் எடுக்கும் உரிமையை அவர்களிடமே விட்டு விடுவோமே! அதில் நாம் கருத்துக் கூறுவதுஅறிவுடமையாகாது.

கேள்வி: நாங்கள் ஏன் தனி நாடு கேட்கின்றோம் என்ற வகையில் நறுக்கென்றுஒரு சின்ன விளக்கம் தரமுடியுமா?

பதில்: 1833ல் இழந்த எமது உடமையை, உரிமையை மீண்டும் பெறுவதற்காகவேபோராடுகிறோம்.

***
நன்றி: இந்த பேட்டிக்கு உதவிய, அந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஈழத்து சகோதரர்களுக்கும், என்னுடன் உதவிய ஹாமு என்கின்ற ஹாஜா மொகையதீனுக்கும்.
***
_ தாஜ்..

Email:tamilpukkal@gmail.com