Thursday, July 06, 2006

ஈழப் பிரச்சனைகளும் / தமிழ்ப் பூக்களும்

முன் குறிப்பு:
------------------

ஈழத்தில் சமாதானம் மலரவேண்டும் என்ற நோக்கில் உருபெற்ற ஆக்கம் இது. கட்டுரை + பேட்டி வடிவம் கொண்ட இந்த வரைவை தயார் செய்து சுமார் ஒரு மாதம் காலம்ஆகிவிட்டது.

இதனிடையில், ஈழத்தில் மீண்டும் வழக்கமான போர் வெடிக்க பிரசுரத்திற்கு லாயக்கற்று இந்த எழுத்துக்கள் முடங்கின.

திரும்பவும்..... நார்வே சமாதான குழு விரைகிறது என்கின்றார்கள். முயற்ச்சிகள் தொடர்வதை நாம் கண்ணுறும் போதே போர் படகுகள் கடலில் முழ்கிய செய்திகளும் வருகிறது. கொழும்பு விமானத்தளத்தின் அருகான்மை கடலில் குண்டுகள் வெடித்ததாக வேறு மீடியாக்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இந்த நாட்களில் திடுமென ஒரு நாள் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொலை செய்தோம். அது ஓர் பழைய செய்தி, விட்டுத் தள்ளுங்கள் யென ஆன்டன் பாலச்சிங்கம் காய் நகர்த்தினார்.

ராமேஸ்வரத்திற்கு அகதிகள் நித்தமும் வருகின்றார்கள். பத்திரிகைகளும் பேட்டிகளுக்கு போட்டிப் போடுகின்றன. ஆக, ஈழ அப்பாவி மக்கள் எதிர் நோக்கும் சமாதானம் என்பது இப்பொழுது இல்லை.

நாளை மீதான நம்பிக்கை இத்துவிட்டது. நாளெள்ளாம், ஒத்த நாளாகவே இருக்கிறது. தினமும் அது இருளிலில் இருந்தே தொடங்குகிறது.
***

1980 களில் ஈழப் பிரச்சனைகள், தமிழக மக்களுக்கு பிடிப் படாத குழப்பமானசங்கதி. இந்திய அரசு 'நாட்டின் நலனை' முன்னிறுத்தி ஈழப் பிரச்சனையில் பங்கு கொண்டதுமாதிரி, தமிழகத்து அரசியல் கட்சிகள் தங்களது 'கட்சி அரசியலை' முன் நிறுத்தி ஈழப் பிரச்சனைகளைப் பேசியது. இவர்களின் இந்த அணுகுமுறையால் தமிழக மக்களுக்குமிஞ்சியதென்னவோ குழப்பம்தான்.

1982 ல் சௌதி அரேபியாவில் நான் பணிப்புரிந்தபோது 'தமிழ்ப் பூக்கள்' என்றகையெழுத்துப் பிரதி ஒன்றை நடத்தினேன். ஈழக் குழப்பங்களுக்கு தெளிவைத் தேடி அதில்ஒரு கட்டுரை கொண்டு வர நினைத்தேன். எனது நண்பர், தான் பணிப் புரியும் கம்பெனியில் சில ஈழச் சகோதரர்கள் சிலர் பணிப் புரிவதாக கூறினார். அவர்களிடம் ஒரு பேட்டிக்கு ஏற்பாடு செய்ய இயலுமா என நண்பரை கேட்டேன். பாக்கலாம்மென போனவர், " நேரடிப் பேட்டிக்கு அவர்கள் மறுக்கின்றார்கள் என்றும், கேள்விகள் எழுதித் தரும் பட்சம், பதில் எழுதித் தருவதாக சொல்கின்றார்கள்" என்றார்.

கேள்விகளை எழுதித் தந்தேன் பதிலும்கிடைத்தது. தந்திருந்த கேள்விகளில் சில தவிக்கப் பட்டிருந்தது. நேர்காணலுக்கு அவர்கள் சம்மதித்திற்கும் பட்சம் கேள்விகளை ஒட்டித்துணைக் கேள்விகளை கேட்டுயிருக்கலாம். இயலாமல் போய்விட்டது. அந்த பேட்டி,'நங்கள் ஏன் தனி நாடு கேட்கின்றோம்' என்ற தலைப்பில் 'தமிழ்ப் பூக்கள்' /ஜூன் -82/ 10 வது இதழிலில் பிரசுரமானது.

இந்த பேட்டியை கீழே நீங்கள் வாசிக்கும் முன், ஈழப் பிரச்சனையைமுன்வைத்து என் மனதின் வார்த்தைகளாக சில வரிகள்.

ஈழப் பிரச்சனைகள் தீருமா? தமிழ் ஈழம் மலருமா? என்ற நேற்றைய கேள்விகள் இன்றைக்கும் 'மாறா' இளமையுடன் அப்படியே இருக்கிறது. எத்தனை உயிர் பலிகள்!எத்தனை எத்தனைப் பெண்களின் சிதைவுகள்! எத்தனை ஆயிரம் வாழ்க்கை நொறுங்கல்கள்!ஈழத்து ஊர்களின் உருகுலைதக் காட்சிகள்தான் எத்தனை! இத்தனைக்குப் பிறகும், அந்த கேள்விகளுக்கு பதில் இல்லை.

நாளைக்கும் அந்த கேள்விக்கு பதில் சொல்பவர்கள் இருக்கப்போவதில்லை.யாரால்தான் பதில் சொல்ல முடியும்! கஷ்டம். பதில் நோக்கிக் காத்திருப்பவர்களோ இதனை'மில்லியன் டாலர் கொஸ்டீன்' என்கின்றார்கள். எனக்கென்னவோ அது 'பில்லியன் டாலர் கொஸ்டீனென்றாலும்' பதில் கிட்டாது என்றுதான் தோன்றுகிறது.

ஓர் தீர்வு என்பது, இரண்டு பக்கமும் விட்டுக் கொடுப்பதில் மட்டுமேசாத்தியமாகக் கூடியது. போராளிகளிடமும் / அரசு அதிகார வர்க்கத்திடமும் அவரவர்கள் பக்கத்தை நியாயப் படுத்த அவரவர்களிடம் காரணக் காரியங்கள் ஒருபாடு இருக்கிறது. இருவருக்குமான வாழும் காரண காரியங்களுக்கு இடையேதான் அவர்களது பிரச்சனைகளின் விருட்ச்சமும் தளைக்கிறது.

பிரச்சனைகளைத் தீர்க்க வருகிறேன் பேர்வழிகளும் இந்த விருட்ச்சத்திற்குகீழே அமர்ந்து, பெருமூச்சுகளை விட்டப் படியே போய்கொண்டு இருக்கின்றார்கள். நாளையும் அவர்கள் வரக்கூடும். வருகிறபோதும் அப்படித்தான் திரும்புவார்கள். சில சமயம் அரசும் / போராளிகளும் சமாதானம் என்று நிஜமாக முன் வந்தாலும், அது நடந்தேறவாய்ப்புகள் குறைவு. அதன் தீர்வென்பது அவர்களது மனம் சார்ந்தது. இருதரப்பினரும் எல்லையில்லாது விட்டுக் கொடுத்தால் மட்டுமே அது கூடும்.

சில நேரம், சாமாதானத்தை முன் எடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இலங்கை அரசும் அதன் எதிர்கட்சிகளும் முயல்கிற போதெல்லாம்...புத்த குருமார்கள், குறுக்கே நிற்பதை நாம் காண முடிகிறது. அவர்களைச் சார்ந்த அந்த மூன்றாவது சக்தியை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை.

போராளிகளின் பக்கமும் இப்படியோர் மூன்றாவது சக்தி இருப்பதாக நோக்கர்கள்கணிக்கின்றார்கள். தமிழ் ஈழப் பிரச்சனைகளை முன்வைத்து ஐரோப்பா/ கனடா/ ஆஸ்த்ரேலியாயென புலம் பெயர்ந்து வாழும் அந்த ஈழத் தமிழர்களைத்தான்... மூன்றாவது சக்தியாக கணிக்கின்றார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில், அந்த சகோதரர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதால், கிட்டிய சுகபோகங்களை அவர்களால் இனி விட்டு விலக இயலாது என்கின்றார்கள். அதையொட்டியே ஈழப் பிரச்சனைகள் சமாதானமென முடிவுக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை என்கிறார்கள். பல வழிகளில் அவர்கள் போராளிகளுக்கு உதவிகரமாக
இருக்கின்றார்கள் என்பதினால், மறைமுகமான அவகளது இந்த கோரிக்கையை போராளிகள் ஏற்றிருக்கக் கூடும் என்றகின்றார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

அந்த பேட்டி தமிழ்ப் பூக்களில் பிரசுரமான காலக் கட்டம் என்பது ஈழப் பிரச்சனைகள் சூடுப்பிடிக்கத் துவங்கி, இழப்புகள் பெருகத் தொடர ஆரம்பித்தக் காலம். பேட்டித் தந்த அந்த ஈழத்து நண்பர்கள், இறுக்கமான மனதுடன்/ எதிகாலக் கனவுகளைத் தேக்கியப்படி/ வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் என்கின்ற தன்னம்பிக்கையுடந்தான் அந்த பதிலைத் தந்தார்கள். இன்றைக்கு அந்த நம்பிக்கைகளுக்கும் அவர்களின் அந்த கனவுகளுக்கும் என்னத்தான் விடியல்? தெரியவில்லை.

பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வாக, இருசாராரும் இது நாள்வரை யுத்தத்தையே நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள். சமாதானம் கூட ஒருவகையில் அரசியல் தீர்வுதான்.

தமிழ் ஈழத்து மக்களின் இன்றைய வாழ்க்கையையும், எதிர்காலகனவுகளையும் 'எங்கும் வியாபித்திற்கும் இயற்கைதான்' எளிதாக்கித்தரனும்.

இதோ அந்த பேட்டி....

கேள்வி: தீவு நாடான அந்த சின்ன இலங்கைக்குள்ளேயே,தனி நாடு கேட்கும் நீங்கள்எவ்வளவு ஜனத்தொகை கொண்டவர்கள்? மொத்த இலங்கை ஜனத்தொகையில் நீங்கள்எத்தனை சதவிகிதம்?

பதில்: சுமார் 35 லட்சம் (3.5 மில்லியன்) தமிழ் பேசும் மக்கள் இலங்கையில்வசிக்கின்றார்கள். இது மொத்த ஜனத்தொகையில் 26 சதவிகிதம்.

கேள்வி: இலங்கையில் வாழும் அத்தனை தமிழகளுக்கும் இந்த கொள்கை(தனி ஈழக்கொள்கை) உடன் பாடுதானா?

பதில்: இல்லை. குறுக்கு வழியில் புகழ், பொருளை நாடுபவர்கள் இல்லாது,உலகில் எந்தச் சமூகமும் இல்லையே! இந்தியச் சுதந்திரத்தை எதிர்த்த இந்தியர்களும்இருந்திருக்கின்றார்கள். சுதந்திரம் கிடைத்தப்பின் அவர்களும் பங்கு கேட்காமலா விட்டார்கள்.

கேள்வி: இலங்கையில் எத்தனை அரசியல் கட்சிகள் உள்ளன? அவைகளில் உங்களை ஆதரிக்கும் கட்சிகள் எத்தனை?

பதில்: அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் இலங்கையி ஏழு மட்டுமே.இவற்றுள் பாராளமன்ற பிரநிதித்துவம் உள்ளவை ஐந்து.

1. ஜெயவர்த்தனாவை தலைவராகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி (தற்போது ஆட்சி புரிகின்றது)

2. ஸ்ரீமவோ பண்டார நயக்காவைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திராக்கட்சி.

3. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி.

4. தமிழர்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர் விடுதலைக் கூட்டணி.

5. மற்றயது திரு.தொண்டமான் தலமையிலான இலங்கை தொழிலாளர்காங்கிரஸ்.

பெரும்பான்மையான தமிழர்களை பிரதிநிதித்துவம் படுத்தும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்கள் இன்றைய நாடாள மன்றத்தின் ஒத்தியோகப் பூர்வ எதிகட்சித் தலைவர். தமிழர்களுக்கு தனி நாடொன்று'தமிழ் ஈழம்' என்றப் பெயரில் நிறுவப் படவேண்டும் மென்ற கோரிக்கையை முன் வைத்துத.வி. கூட்டணி சென்ற தேர்தலில் போட்டியிட்டு, நாடாள மன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மையை உறுப்பினர்களை பெற்றது. அது மட்டுமின்றி தனிநாடுக் கோரிக்கையைஅதிகப் பெரும்பான்மைத் தமிழர்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி முன் வைத்தார்கள்.தமிழ் மக்களின் அவ் ஆணையை நிறைவேறுவதற்காகவே இன்று இக்கட்சி நாடாளமன்றத்தில்உள்ளும் புறமும் போராடி வருகின்றது.

கேள்வி: உங்களால் ஏன் இலங்கை சிங்கள மக்களுடன் உடன்பட்டுப் போகமுடியவில்லை?

பதில்: எம்மை எமது சொந்த நாட்டிலே இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்தி வருவதினாலும், இந்த நாடு சுதந்திரம் பெற்றபின் மாறி மாறி ஆட்சி செய்த இரண்டுகட்சிகளின் தலைவர்களுடனும் தமிழர்கள் செய்துக்கொண்ட ஒப்பந்தங்கள் நடைமுறைப் படுத்தப்படாது துரோகம் இழைக்கப் பட்டமையால் ஒத்து வாழும் சாத்தியக் கூறுகள்எப்பவுமே தென்படவில்லை.

கேள்வி: தமிழகத்தில் பெரியார் ஈ.வே.ரா. கேட்ட 'தனி நாடு' கொள்ககையின் பாதிப்பே உங்களின் இந்த
நிலைக்கு காரணம் என்று கொள்ளலாமா?

பதில்: இது தவறான கருத்து. தமிழ் நாட்டின் அரசியல், இலங்கை தமிழர்களின்அரசியல் பாதையை வகுக்கவில்லை. பெரியார் திராவிட நாடு கேட்டமையும் பின் கைவிட்டமையும் பழைய வரலாறாகிவிட்ட காலக்கட்டத்தில்தான் இலங்கைத் தமிழர்கள்1976 ம் ஆண்டில் ஏகோபித்தக் குரலில் 'தமிழ் ஈழம்' கேட்டார்கள். சிங்களவருடன் சேர்ந்துஒன்றுபட்ட இலங்கையில் வாழ்வதற்கு தமிழர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகள்பயனற்று, மாறாகத் தமிழர்கள் திட்டமிட்டு அழிக்கப் படுவதை இனிமேலும் தாங்க முடியாதநிலை ஏற்பட்ட போதே 'தமிழ் ஈழம்' கோரிக்கையை தமிழர்கள் விடுத்தார்கள்.

கேள்வி: உங்களின் இந்த கொள்கைப் போராட்டத்திற்கு பிற வெளிநாடுகள்ஆதரவு தருகிறாதா?

பதில்:நீங்கள் இந்த கேள்வியைக் கேட்கலாமா!

கேள்வி: இதற்கான தலைமை அமைப்பு, இலங்கைக்கு வெளியே பிற நாடுகளில்இருப்பதாக சொல்லுகின்றார்களே உன்மையா? எந்த நாட்டில் என்று குறிப்பிட முடியுமா?

பதில்: மேலேயுள்ள கேள்விக்கான பதிலே இதற்கும் பதிலாம்.

கேள்வி: இந்த கொள்கைக்காக அரசாங்க இராணுவத்தையே எதித்துப் போராடுகின்றீர்களே... அதற்கான ஆயுதங்கள் உங்களுக்கு எப்படிக் கிடைக்கின்றது?

பதில்: ம்....ஹும்.....

கேள்வி: தனி நாடு கேட்கும் உரிமை உங்களுக்கு இருப்பதாக எதை வைத்துதீர்மானிக்கின்றீர்கள்?

பதில்: இலங்கைத் தீவு 1833ம் ஆண்டு வரை ஒரு நாடாக இருக்கவில்லை.1796ல் இலங்கையை கைப் பற்றிய ஆங்கிலேயர்கள் தமது நிர்வாக நலன் கருதி, இரு தனியான மக்களையும் - நாடுகளையும் 1833ல் ஒன்று சேர்த்து விட்டார்கள்.ஒத்து வாழலாம் என்றுதான் பார்த்தோம்...ம்...ஹும்..., எமது பழைய உரிமையைநிலை நாட்ட முயன்றேம். இதுதான் உரிமை வந்த வரலாற்றின் சுருக்கம்.

கேள்வி: நீங்கள் எந்த விதத்தில் அரசாங்கத்தால் பாதிக்கப் படுகின்றீர்கள்?

பதில்: அரசாங்கம் தனது சொலவில் திட்டமிட்டு தமிழ்ப் பிரதேசங்களில்சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் எமது பிரதேசத்திலேயே எம்மைசிறுபான்மையினராக்கும் சதி நடைப் பெறுகின்றது. தமிழ் மாணவர்களின் உயர் கல்விதிட்டமிட்டு மறுக்கப் படுகின்றது. தொழில் வாய்ப்பும், மொழியுரிமையும் பறிக்கப்பட்டு விட்டது. தமிழர்களின் பொருளாதாரம் வேண்டுமென்றே நசுக்கப் படுகின்றது.இந்த நிலைத் தொடர்ந்தால் எமது நாட்டிலேயே நாம் விரைவில் அடிமைகளாக்கப்பட்டுவிடுவோம்!

கேள்வி: உங்களின் இந்த கொள்கைக்காக நீங்கள் இதுவரை எத்தனைபோராட்டங்கள் நடத்தியுள்ளீர்கள்? இதனால் உங்களுக்கு ஏதாவது அனுகூலம்ஏற்பட்டதுண்டா?

பதில்: நாடு வெள்ளையனிடம் இருந்து சுதந்திரம் பெறும்போதே எமதுஉரிமைப் போராட்டமும் ஆரம்பமாயிற்று. மாறி, மாறி நடைப் பெற்ற போராட்டங்களில்தலைவர்கள் சிறையிலடைக்கப் பட்டார்கள். தேசதுரோக குற்றத்திற்காக நீதிமன்றத்தில்நிறுத்தப் பட்டார்கள். தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.ஒவ்வொரு போராட்டமும் தமிழ் மக்களுக்கு மேலும் மனவுறுதியையும், நம்பிக்கையையும்அளித்து வருகின்றது.

கேள்வி: நீங்கள் நினைப்பது மாதிரி நாளையத் தினம் உங்களுக்கு தனிநாடுகிடைக்குமானால்.... எந்த மாதிரி ஆட்சியை நிர்மானிப்பீர்கள்?

பதில்: மதசார்பற்ற ஜனநாயக சமதர்மக் குடியரசு ஒன்றினை நிறுவுவதற்குத்தான் தமிழ் மக்கள் 1977ம் ஆண்டு ஜூலை 21ல் நடைப் பெற்ற பொதுத் தேர்தலில்தா.வி. கூட்டணிக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.

கேள்வி: அருகில் இருக்கும் தமிழ் நாடு உங்களுக்கு எந்தெந்த வகையில் உதவிப்புரியவில்லை என்பதில் ஏதேனும் ஆதங்கங்கள் உண்டா?

பதில்: ஆம், தமிழ் நாட்டு அரசாங்கத்திடம் இருந்தும் மக்களிடமிருந்தும் தற்போதைக்கு தமிழ் ஈழ மக்கள் எதிபார்ப்பது அவர்களின் தார்மீக ஆதரவினை மட்டுமே.அத்தகைய ஆதரவு இன்றும் எமக்கு முழுமையாக கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் நிறையவே உண்டு. "இலங்கையில் தமிழர்களா....? தமிழ் எழுத வாசிக்கக் கூட அவர்களுக்கு தெரியுமா?" என்று வியந்து கேட்கும் 'படித்த தமிழ் நாட்டவர்' பலர்இன்றும் இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் எற்க மறுப்பீர்களா..?

கேள்வி: இது மாதிரியெல்லாம் தமிழ் நாட்டின் பிரஜைகளுக்கு எண்ணம்ஏற்படாததை குறித்து உங்களது மனநிலை என்ன?

பதில்: தமக்கெனவும் தனிநாடு வேண்டும் என்பது பற்றித் தீர்மானம் எடுக்கும் உரிமையை அவர்களிடமே விட்டு விடுவோமே! அதில் நாம் கருத்துக் கூறுவதுஅறிவுடமையாகாது.

கேள்வி: நாங்கள் ஏன் தனி நாடு கேட்கின்றோம் என்ற வகையில் நறுக்கென்றுஒரு சின்ன விளக்கம் தரமுடியுமா?

பதில்: 1833ல் இழந்த எமது உடமையை, உரிமையை மீண்டும் பெறுவதற்காகவேபோராடுகிறோம்.

***
நன்றி: இந்த பேட்டிக்கு உதவிய, அந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஈழத்து சகோதரர்களுக்கும், என்னுடன் உதவிய ஹாமு என்கின்ற ஹாஜா மொகையதீனுக்கும்.
***
_ தாஜ்..

Email:tamilpukkal@gmail.com

1 comment:

தாஜ் said...

Thank you