Sunday, November 20, 2011

முஸ்ஸாஃபர் சத்திரம்

'முஸ்ஸாஃபர் சத்திரம்' என்கிற தலைப்பில் ஓர் குறு நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கி றேன். அது என் கணிப்பையும் மீறி நாவலாக மாறும் அபாயமும் உண்டு. எனது ஊரில் நான் வசிக்கும் பகுதியின் வட்டத்தில் அறுபதுகளில் நடந்த சம்பவங்களை கதையாக எழுத திட்டமி ட்டிருக்கிறேன். எங்கள் பகுதியில் அன்றைக்கு இருந்த மிகப் பெரிய முஸ்ஸாஃபிர்களுக்கான சத்திரம் ஒன்றுதான் இந்தக் கதையின் மையம். நூறு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான அந்தச் சத்திரத்தைச் சுற்றி ஆயிரம் சம்பவங்கள் உண்டு. குறிப்பாய் அன்றைக்கு எங்க ஊர் இஸ்லா மிய வாலிபர்கள் மிகவும் பின் தங்கிப் போனதற்கு அந்தச் சத்திரத்தையே முழு முதற்க் கார ணமாக நான் அறிய வந்தேன். கதை அன்றைய முஸ்ஸாஃபிர்களின் யதார்த்த வாழ்வோடு, எங்கள் மக்களின் தாழ்வையும் பதிவுக் கொள்வதாக இருக்கும்.

கீழே உள்ள பகுதி, அந்தக் கதையின் தொடக்க வரிகள். மேலான வாசகர்களின் பார்வைக்கு அதனை வைப்பதில் மகிழ்ச்சியுண்டு.
நன்றி
-தாஜ்

*

எல்லோருக்கும் ஒஜுபனம் தந்து வாழ்வளிக்கும் அல்லா சுபுஹானத்தாலா சிலரை பணக்கார் களாகவும் பலரை ஏழைகளாகவும் படைத்துப் பராமறித்து வருவதை யோசிக்கிறபோது என் கல்ஃபுக்கு வேதனையாக இருக்கிறது. மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வு தவிர்க்கமுடியாதது என்கிறார்கள். அதனை சரியென உணர வரும் நேரம் எழுந்த அவ் வேதனை அடங்கிவிடும் என்றாலும் உறுத்தாமலில்லை. இது குறித்து நான் சந்தித்துப் பழகிய மிகப் பெரிய ஹஜிரத் மர்களிடம் சந்தேகம் கேட்டு இருக்கிறேன். அதனைச் சிலர் விதி என்றார்கள். வேறு சிலர், அது குறித்து கவலை கொள்வது வீனென்றும், முயற்சித்தால் அவ் விதியை மதியால் வெல்ல முடியும் என்கிறார்கள். அப்படி விதியை மதியால் வெல்ல முடியும் என்றால், இறைவன் எழுதிய ஒன்றுக்கு மனிதன் மாறுசெய்வதாகாதா? குழப்பமாக இருக்கிறது. வேறு ஒரு ஹஜிரத் கொஞ்சம் வித்தியாசமாகச் சொன்னார். "தனக்கு இஸ்டமானவர்களை எல்லாம் இறைவன் ஏழையாகவே வைத்திருப்பான்" என்றும், "அதுக் குறித்து ஏன் கவலைக் கொள்கின் றீர்கள்? ஏழைகளோடு இறைவன் நெருக்கமாக இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?" என்றார். இறைவனின் மேற்கண்டக் கூற்று ஹதீஸில் சொல்லப்பட்டிருப்பதாகவும் சொன் னார். அப்படியென்றால், இஸ்லாத்தில் உள்ள பணக்காரர்களையெல்லாம் அவனுக்குப் பிடிக் காதா? பணம் சம்பாதிப்பதும் பணக்காரர்களாக ஆவதும் ஆகாதவொன்றா? ஒன்றும் புரியவில்லை.

ஆனால் பாருங்கள் இன்னொரு பெரிய ஹஜிரத் சொன்னதுதான் ஏக விசேசமானது. "அவர்கள் ஏழையாக இருப்பதில் மன சங்கடப்பட்டு ஏன் இப்படியென கேட்கிறீர்களே, இறையவன் அவர் களை இஸ்லாமாக்கி, ஈமானைத் தந்து வைத்திருக்கிறானே அது என்ன சாதாரணக் கொடை யா? ஏழைகளுக்கு அதைவிட ஒரு 'தர்ஜா' உண்டாயென்ன? அதுதானே நிஜமான செல்வம்? அதை ஏன் நீங்கள் யோசிக்க மாட்டேன் என்கின்றீர்கள்?" என்றார். அவர் எளிதாக சொல்லி விட்டதை விளங்கி கொள்ள அதிகத்திற்கும் அதிகம் நேரம் தேவைப்பட்டது. நான் விளங்கிக் கொண்ட வகையில் அவரை நான் மறுத்துக் கூற வேண்டும். குறைந்த பட்சம் அதையொட்டி இன்னும் சில கேள்விகளையேணும் கேட்க வேண்டும். இரண்டுமே இயலவில்லை. எப்பவும் ஒரு டஜன் பேர்களுக்கும் குறையாமல் அவரைச் சுற்றி இருந்து பணிவிடைகள் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். அவருக்கான அப் பணிவிடைகளை செய்ய அந்தப் பக்தகோடிகளுக் கிடையில் போட்டா போட்டி வேறு! காற்றில் படர்ந்து வரும் தூசால் ஹஜிரத் முகம் சுணங்கு வதைக் காணும் நாழியில் கூட அவர்கள் பதறிவிடுகிறார்கள். அந்த ஹஜிரத்தின் சொல்லை நான் தலையசைத்து ஒப்புக் கொண்டுவிடுவதே நல்லது. அதைத்தான் செய்தேன். அதுதான் எனக்கு எத்தனை மகத்தான வரவேற்பை பெற்றுத் தந்தது. அவரது சிஷ்யகோடிகளுக்கு என்னை ரொம்பவும் பிடித்துப் போய்விட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஏழை எளியவர்களின் ஏழ்மையையும் மிஞ்சும் ஏழ்மைக் கோலம் கொண்ட எங்கள் இன முஸ் ஸாஃபர்களின் இருப்பும், வாழ்வும் சொல்ல முடியாத சங்கடங்கள் கொண்டது. கண் கொண்டு காண முடியாததாக இருந்து வருகிறது. பாவத்திலும் பாவம். அவர்களை அல்லா ஏன் இப்படி விசேசமாக அலைக்கழிக்கிறான் என்றே புரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். இறைவன் நிகழ்த்தும் எந்தவொரு சித்தும் மனிதர்களால் புரிந்துக் கொள்ளவே முடியாது.

ஊர் ஊராய் திரிந்து யாசகம் வாங்கி, கூடுதலாக பொது மக்களிடம் வசவுகளையும் வாங்கி, கிடைத்த இடத்தில் கிடைத்ததை தின்று, இடம் கண்ட இடத்தில் உறங்கி, கையகள மறைவி டங்களில் தாம்பத்தியம் நடத்தி, வாய்க்குமிடத்தில் குழந்தைகளைப் பெற்று, போகிற ஊர் தோறும் பெற்றதுகளை தூக்கிச் சுமந்து, வெட்டவெளி என்றும் பாராமல் குந்துமிடங்களில் எல்லாம் அதுகளை கொஞ்சி வளர்த்தெடுத்து, படிப்பை மருந்துக்கும் காட்டது, தங்களை மாதிரியே பிச்சையெடுக்கப் பழக்கி, தங்களது சமூகத்திற்கு இன்னொரு பிரஜையை ஆளாக்கி விடுகிறார்கள். இஸ்லாத்தில் காலம் காலமாக இவர்கள் தனிப் பிரிவாகவே தொடர்ந்து வருகி றார்கள். அவர்களது நல்லதும், கெட்டதும் அவர்களோடு மட்டுமானதோர் வாழ்கையாகவே அவர்களுடைய வாழ்க்கை இருக்கிறது.

யாசித்துண்ண மதத்தில் அனுமதி இருப்பதாலும். பாவப்பட்ட மக்களுக்கு உதவும்படியான அல் லாவின் கட்டளை வேதத்தில் இருப்பதாலும் இந்த முஸ்ஸாஃபர்கள் ஆங்காங்கே தங்குத் தடையற பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். காலமாற்றத்தையோ, சமூக மாற்றத்தையோ இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. கண்களை மூடிக்கொண்டு வலுகட்டாய மாக தூங்குவதில் ஓர் சுகம் இருக்கத்தான் செய்கிறது.

நிஜத்தில், முஸ்ஸாஃபர் என்கிற அரபி பதத்திற்கு யாத்திரீகர்கள் அல்லது பயணம் மேற்கொள் பவர்கள் என்பதாக பொருள் இருந்தாலும், யாசித்துத் திரியும் இந்த பாவப்பட்ட ஏழை இஸ்லா மிய மக்கள் தங்களுக்குறிய அடையாள அடைமொழியாகவே அதனை வலிய வரித்துக் கொண்டுவிட்டார்கள். ஒருவகையில் அவர்களும் அரபு மொழிக்கு ஒன்றுவிட்ட சொந்தக்காரர் கள் என்பதையோ, அவர்களது பிழைப்பும் பயணத்தை முன்வைத்துதான் நடக்கிறது என்பதை யோ மறுக்க முடியாது. ஏன் இந்த மக்களை இறைவன் இப்படி கீழிணும் கீழாய் வைத்துப் பராமரிக்கிறான்? யாரால் அறிய முடியும்? மனிதர்களின் உள் மன தேவைகளை அறிந்து ஆமீனென ஆசீர்வதிக்கிற இறைவன், இந்த மக்களின் யாசிப்பு ஏக்கம் அறிந்து... ஏன் அவன் ஆமீன் சொல்லியிருக்கக் கூடாது?

****
-தாஜ்
satajdeen@gmail.com
11:15 PM 11/20/2011

9 comments:

ஆபிதீன் said...

நல்ல ஆரம்பம் தாஜ். இதற்குத்தான் அத்தனை கேள்விகளை ஜபருல்லாநானாவிடம் அன்று கேட்டீர்களா?!
- நாகூர் முஸாபர்-

மஜீத் said...

ம்ம்ம்.
நல்லாத்தான் ஜம்ப் ஸ்டார்ட் ஆயிருக்கு.

//நிஜத்தில், முஸ்ஸாஃபர் என்கிற அரபி பதத்திற்கு யாத்திரீகர்கள் அல்லது பயணம் மேற்கொள் பவர்கள் என்பதாக பொருள் இருந்தாலும், யாசித்துத் திரியும் இந்த பாவப்பட்ட ஏழை இஸ்லா மிய மக்கள் தங்களுக்குறிய அடையாள அடைமொழியாகவே அதனை வலிய வரித்துக் கொண்டுவிட்டார்கள். //

அந்தக்காலத்தில் சிறிது கௌரவமாக யாசிக்கக் கண்டுபிடித்த உத்தியாக இருக்கும்.

அவர்கள் வலிய வரித்துக்கொண்ட இன்னொரு பதம் ‘மிஸ்கின்’. இது சரியானதும் இதர Non-muslim பிச்சைக்காரர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட வல்லதுமாகும்.

- இன்னொரு முஸாஃபிர்

T.A.Abdul Hameed Educational Trust said...

மிஷ்கீனை
உபயோகப் படுத்திக் கொள்கிறேன்
மஜீத்.
நன்றி
நிஜ முஸ்ஸாபர்
தாஜ்

அரபுத்தமிழன் said...

நானா,
நமது உடற்கூறின் அடிப்படையான DNAமாறுவதில்லை என்ற போதிலும் அதன் நகலானதும், வேலையாளுமான RNA நமது எண்ணங்களுக்கும்உணர்ச்சிகளிற்கும் ஏற்ப தூண்டப்பட்டு அடிக்கடி தன்வேலையை மாற்றிக் கொண்டேயிருக்கிறது.

-- நன்றி
AgelessBody and Timeless Mind (வயதில்லா உடலும் காலமில்லா மனமும்) (author Deepak Chobra)

விதிகளில் இரண்டு வகை

1 மாற்றமுடியும் 2. மாற்ற முடியாதது

இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்

‍‍இவண்
அசல் முஸாஃபிர்
ஆபிதீன் பக்கங்களின் ஏழாவது பார்வையாளன் :)

அரபுத்தமிழன் said...

நன்றி கணேசன் சாருக்குச் சொல்ல மறந்து விட்டது, மன்னிக்கவும்.

http://enganeshan.blogspot.com/2011/11/blog-post_21.html

தாஜ் said...

என்னமோ....
சொல்லி இருக்கீங்க
ஆனாலும் பாருங்க
உங்க பேர் மாதிரியே
சுத்தமா புரியலை.
இப்போதைக்கு
இது போதும்
என்றிருப்பது மட்டும்
தெளிவா புரிஞ்சுது.
மீதத்தை
எப்ப சொல்ல போறீங்க?
நன்றி பாய்.
-தாஜ்

புல்லாங்குழல் said...

நல்ல கதையொன்றை தரப்போகிறார் தாஜ் என ஆவலுடனும், இந்த மனிதன் திருந்தவே மாட்டாரோ என்ற கவலையுடனும்,

என்றென்றும் அன்புடனும்,

அமீன்

தாஜ் said...

அன்புடன்
நூருல்.

உங்கள் கவலையைப்
புரிந்துக் கொள்ள முடிகிறது.

உங்களை குறித்து
நான் என்ன நினைக்கிறேனோ
அதையேதான்
என்னை குறித்து
நீங்கள் நினைக்கின்றீர்கள்.

நம் இருவரையும்
மட்டுமல்ல
சகல ஜீவராசிகளையும்
ஆட்டிவைப்பவன்
இறைவன்.
அவனின்றி
ஓர் அணுவும் அசையாது.
கவலை வேண்டாம்
அவன்
நிச்சயம்
அருள் பாவிப்பவன்
நம்பிக்கை வையுங்கள்.

என்ன செய்ய?
என்னளவில் கூட
உங்களுக்கு
நம்பிக்கை இல்லாதுப் போனதுதான்
ஆச்சரியம்.
-தாஜ்

புல்லாங்குழல் said...

ஃபீ அமானில்லா.

தெளிவான பதிலுக்கு நன்றி தாஜ்.

அன்புடன்,

அமீன்