பார்வைக்குத் திறக்கப்பட்டது
என் சித்திரக் கூடம்
கறுப்பின் பரப்பில்
மையலான சித்திரம்
எக்ஸ்ரே பாணி
நிர்வாண
காட்சிகளைப் பரப்பியிருந்தேன்.
மூளையின் மூளி
முதுகு தண்டின் வளைவு
கண்களின் ருசி
கால்களின் சதிர்
கைகளின் தாளம்
நாவின் ஜதி
விரல்களின் அரக்கம்
நகங்களின் ரத்தப் பூச்சு
பற்களின் மலுங்கள்
குறியின் மகர்ந்தம்
புத்தகப் படுக்கைச் சுகம்
என் லார்வா புழு
வண்ணத்துப் பூச்சி காலம்
பின் மறந்து போன சிரிப்பு
அர்த்த நாரீஸ்வர இருப்பு
உயிர் வதைப்பின் வலி
ஹிருதய அழுக்கின் நாற்றம்
காலாணி நடப்பின் கோணல்
இறக்கையற்றப் பறப்பென.
கண்டுக்
கொண்டவர்கள்
அருகிப் போனார்கள்.
பார்வையாளர்களுக்கான
குறிப்பு புத்தகத்தில்-
பகல் தூக்கம் கெட்டது
பண்டைய மிருகக் காட்சிகள்
ஹாலில் மின்விசிறி சுழலவில்லை
அமெரிக்க வாசனையின் சுகந்தம்
சீன சிகப்பின் கூசும் வண்ணம்
டாய்லெட் சுத்தமாக இருந்தது
நிர்வாணம் மருந்துக்கும் காணோம்
பெண் விரிவுரையாளர்களை
பணிக்கு அமர்த்தியிருக்கலாம்
இருட்டின் தேடல்கள்
நினைவிருக்கட்டும்
காலம் பொன் போன்றது.
காலம் பொன் போன்றது
பிடித்திருந்தது.
சித்திரங்களை
அள்ளி கடாசி எறிவதற்குப் பதிலாக
பூட்டி பத்திரப் படுத்தி
எரிக்க நினைத்தேன்.
***
குறிப்பு:
1995-ல் எழுதிய கவிதையிது.
-தாஜ்
satajdeen@gmail.com
10:08 AM 11/20/2011
No comments:
Post a Comment