Tuesday, November 22, 2011

ஆபிதீனின் உயிர்த்தலம்

-தாஜ்

*

"இந்த உலகில் ஒரு இலக்கியவாதிக்கு மிஞ்சப்போவது என்ன தெரியுமா? ஒரு சின்ன உண் மையை எழுதிவிட்ட தாளும், அந்தப் பக்கத்தை உணர்ந்து படிக்கிற வாசகனும்தான்..... அந்த ஒரு பக்கத்தை எழுதுவதற்கு ஒவ்வொரு இலக்கியவாதியும் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருக்கிறது"
- ஆல்பெர் காம்யூ.(நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு இலக்கியவாதி)

தமிழின் நவீன இலக்கியப் பரப்பில் சிறுகதை/ நாவல்/ கட்டுரை முதலான ஆக்கங்களை ஆத் மசுத்தியோடு எழுதுபவர்களின் எண்ணிக்கை இன்றைக்கு அருகிக் கொண்டிருக்கிறது. இங்கே கொஞ்சத்திற்கு தலைதூக்கி வளர்ந்து வலம் வரும் படைப்பாளிகளில் பலர், பெருகிவரும் நவீ னப் புத்தகச் சந்தையை முன்வைத்து எழுதுபவர்களாக ஆகிவிட்டார்கள். எழுதும் வேகம் மட்டுமே இப்பொழுது படைப்பாளிக்குப் போதுமென்ற தகுதியாகிவிட்டது. சந்தையும் அதன் போட்டியும் இன்றைய இலக்கிய ஆக்கங்களின் மேல் ஆதிக்கம் செய்யும் நிலை ஊன்றி கவ னிக்கும் வாசகர்களுக்கு கவலைத் தருவதாக இருக்கிறது.

இந்தச் சூழலிலும் கூட சில படைப்பாளிகளிடமிருந்து ஆசுவாசம் கொள்ளத் தகுந்த சில நல் லப் படைப்புகள் இன்றைக்கும் வரவே செய்கிறது. நவீன இலக்கியத் தாயின் சுரப்பு நாம் பயம் கொள்கிற அளவுக்கு அப்படியொன்றும் வற்றிப் போய் விடவில்லை. இப்பொழுது வெளிவந்திருக்கும் ஆபிதீனின் சிறுகதைத் தொகுப்பான 'உயிர்த்தலம்' அதற்கு ஓர் சரியான சான்று!

இருபத்தி ஏழு வருடங்களுக்கு முன் வெங்கட் சாமிநாதனின் 'யாத்ரா'வில் அவரது 'குழந் தை' குறுநாவல் வந்திருந்ததை, பின்னர் பத்து வருடங்கள் கழித்து கோள்வியுற்ற நான், "யாத்ராவிலா...?" என்று கேட்ட வியப்பைவிட, அது வாசிக்கக் கிடைத்து, வாசித்த போ தான வியப்பு இன்னும் அதிகம்! இன்றைக்கும் அந்த வியப்பின் பின் அதிர்வுகள் என்னில் உண்டு. அந்தக் குறுநாவலில் பதிவு செய்யப்பட்டிருந்த அவரது சொந்த வட்டார வழக்கு மொழி என்னை கிளர்ச்சியூட்ட செய்தது. அதுவரை யாரும் அப்படி ஒரு அழகில், அவரது வட்டார வழக்கை, நம் இலக்கியத்தில் பதிவு செய்ததில்லை.

அரபி சொற்களில் சிலவற்றை சந்தனப் பூச்சாக பூசிகொண்டிருக்கும் அந்த மொழியின் மினு மினுப்பும், கிண்டலும் கேலியும் ததும்பும் அதன் பரிபாஷைகளும் வாசிப்பவரின் புருவத்தை உயர்த்தவே செய்யும்! குழந்தை வெளிவந்த அன்றை காலக்கட்டத்தில்(1981) நமது நவீன இலக்கியத்தில் 'இந்திரன், சந்திரன்' என்று பேர் போட்ட எழுத்தாளர்களுக்கெல்லாம் அப்படி யொரு வட்டார வழக்கு நம் தமிழ்ப் பரப்பில் இருப்பதை அறிந்தும் இருப்பார்களா என்று எனக்குத் தோன்றவில்லை. ஆபிதீனின் ஊரான நாகூர் மற்றும் அதன் சுற்று வட்டத்து வட் டார வழக்குமொழி அப்பகுதியின் அழகியல் சமாச்சாரங்களில் ஒன்று! இதையொட்டி கொஞ் சம் வித்தியாசப்பட்ட 'ஓர் வட்டார வழக்கு மொழி'யை தோப்பில் முகம்மது மீரான், (கடைக்கோடி தென்மாவட்ட கடற்கரையோர இஸ்லாமிய கிராமியங்களில் பேசும் மொழி) தனது நாவல்களில் பதிவேற்றியிருந்தாலும் அது, ஆபிதீனின் 'குழந்தை'க்குப் பிற்பட்ட காலக்கட்ட சங்கதி.

உயிர்த்தலம் தொகுப்பில் காணும் பதிமூன்று சிறுகதைகளையும் ஒரு பொது நோக்கில் 'யதார்த்த' கட்டுக்குள் வைத்துப் பார்க்கலாம். என்றாலும், இதன் செய்நேர்த்தியில் அதை மீறும் கூறுகள் உண்டு. சிறுகதை என்கிற பெயரிலான கட்டுரையோ, தகவல் தரும் பத்தி யோ, நண்பருக்கான கடிதமோவென ஒரு கணம் யோசிக்க வைக்கிற 'நவீன யதார்த்த'மாக இந்தத் தொகுப்பில் உள்ள இவரது கதைகளை கணிக்கலாம்! தொடர்ந்து பரிசோதனைக்குள் ளாகும் சிறுகதை வடிவத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு வாசிக்கும் வாசகர்கள் இதனை நேராய் புரிந்து வரவேற்கவே செய்வார்கள். "இலக்கணங்களை மீறிய ஓர் அமைப்பு அவரு டைய கதைகளில் காணக் கிடைக்கின்றது. அதனாலேயே தமிழின் கதைசொல்லலில் ஒரு புது அழகியலை அவை உருவாக்குகின்றன" என்று இந்தத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக் கிற திரு.கோபால் ராஜாராம் தீர்க்கமாகவே சுட்டிக்காட்டி இருக்கிறார். அதுதான் எத்தனை சரியானப் பார்வை!!

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் ஆபிதீன் தன்னையே முன்னிலைப்படுத்தி, தானே கதைச் சொல்லியாகி, படைப்பினூடாக வாழ்வின் நிஜங்களைக் கூச்ச நாச்சமற்று பதிவாக்கி யிருப்பதிலும்/ தான் சார்ந்த மத, இன, மொழி, கலாச்சாரங்களின் மீது பூடகமாக தயவு தாட் சண்யமற்று விமர்சனங்கள் வைத்திருப்பதிலும் / வாழ்வின் தேவை குறித்து பஞ்சம் பிழைக்க வென்று தஞ்சமான அரபு மண்ணில் அவர் எதிர்கொண்ட அல்லது அவரைப் பாதித்த அத்த னை நிகழ்வுகளையும் நிறம் பிசகாது சுட்டி, அந்தந்த மக்களை அவரவர்களின் மொழிபேசும் முகங்களோடான பதிவாக இத் தொகுப்பில் ஆக்கம் கண்டிருக்கிறார்.

மனதை ரணப்படுத்துகிற வாழ்வியல் நிஜங்களை அங்கதமாக மாற்றி நம்மைச் சிரிக்கவைத்து, பிரச்சினைகளின் உள்ளார்ந்த கூற்றை நுட்பமாக நமக்கு உணர வைத்திருக்கிற அழகியல் வித் தையினை யோசிக்கிறபோது, அவரின் ஆக்கங்கள், அவரிடம் எத்தனை பெரிய உழைப்பைப் பெற்று எழுந்து நிற்கிறது என்கிற மலைப்பே எழும்! வாசித்து முடித்து, அவர் எழுப்பிய அந் தப் பிரமாண்டத்திலிருந்து வெளியேறுவ தென்பதும் மனதளவில் எளிதற்றே போகும்.

இந்த மனச் சலனத்திற்கு அடிப்படைக் காரணம், அவரது அந்த பிரமாண்டம் உண்மைகளின் அஸ்த்திவாரத்தில் நிற்கிறது என்பதினால்தான்! இந்தத் தொகுப்பின் எல்லாக் கதைகளிலும் அவர் வலிந்து சொல்லியிருக்கிற உண்மைகள் கொஞ்சமல்ல! குறிப்பாய், தன்னைச்சார்ந்த உண்மைகளையும்கூட அப்படித்தான் வலிந்தே சொல்லியிருக்கிறார். படைப்பில் வாசகனின் சுவைக்கேற்ப கற்பனையின் வித்தைகள் கொண்டு மாய உலகத்தை விதவிதமாக படைத்துக் காட்டலாம். கேட்பாரும் இல்லைதான். ஆனால், அப்பட்டமான உண்மை சார்ந்து எழுதுவ திலான சிரமம் படைப்பாளிகளை அலைக்கழிக்கக் கூடியது. எளிதில் சாத்தியமற்ற சங்கதி.

வாழ்வின் ஓட்டத்தில் தினம் தினம் நாம் எதிர்கொள்ளும் அசிங்கங்களையும், அபத்தங்களை யும், தோல்விகளையும், எதிர்கொள்ளும் சகமனிதர்களின் கோரங்களையும் பதிவில் ஏற்று வதற்கு நிச்சயமாக அச்சமற்ற / முதிர்ந்த மனம் வேண்டும். தவிர, மனத்திடமும் வேண் டும். படைப்பாளிக்கு இத்தகைய நிலை கிட்டினால் ஒழிய உண்மைகளை பதிவில் ஏற்றுவ தென்பது இயலாது. ஆபிதீன் அதில் கெட்டி. கதைகளில் தனது மனைவியின் பெயரைக் கூட எழுத்துச் சுத்தமாய் எழுதக் கூடியவர்.

படைப்புகளை வாசிக்கும் வாசகனை ஒவ்வோர் திருப்பத்திலும் நிறுத்தி வைத்து நீதி சொல்லி, தத்துவார்த்தங்கள் பேசி, வெளிநாட்டு எழுத்தாளர்களின் பெயர்களை இஸ்டத்திற்குப் புழங்கி, ஓர் படைப்பாளி தன் கீர்த்தியை நிலைநாட்டலாம். அந்த யுக்தி அலுத்துப்போகும் நாளில், ஆதியில் எழுதி குவித்து வைத்திருக்கிற புராண இதிகாசங்களின் பக்கமாக போய், பகுதி பகு தியாக அதனைச் சூறையாடி புது மோஸ்தரிட்டு சுடச்சுட வாசகனுக்கு படைத்து பணம் பார்க் கலாம்தான். ஆனால் தான்சார்ந்த நிஜத்தைச் சொல்ல, எப்போதுமான அவர்களின் வித்தை யோ, அவர்களின் குதிரையோட்ட எழுத்தோ அவர்களது கீத்திக்கு ஒருபோதும் பயன்படாது. நாளை ஓர் ஆய்வாளனின் ஆய்வில் பொசுக்கென தலைக் குப்புற விழவே விழுவார்கள்.

ஆபிதீன், தன் கதைகளில் தன்னையே முன்னிலைப்படுத்தி, கதை சொல்லிப் போகிறார் என் றாலும், சில கதைகள் விதிவிலக்காகவும் இருக்கின்றன. 'உயித்தலம்' கதையில், முன்னி லைப் படுத்தப்படுபவரும், கதை சொல்லியும் அவர் அல்ல. தனது தம்பி என்பதாக ஒருவரை முன்னிலைப்படுத்தி, அவரை கதை சொல்லியக்கி கதையின் சம்பவங்களை நகர்த்துகிறார். இந்தச் செய் நேர்த்தியினூடே தன்னை அவர் விமர்சனத்திற்கு உள்ளாக்கிக் கொள்ளும் யுக்தி அலாதியானது. குடும்ப சம்பவங்கள் பொருட்டு அவரைப் பற்றி அவரே வைத்திருக்கும் விமர் சனம் என்பது ரசிக்கத் தகுந்தது.

உயிர்த் தலம் என்கிற இந்தக் கதையின் நாயகன் மூளை வளர்ச்சியற்ற / இயக்கமற்ற / சுயத் தின் நிதானத்தை முழுவதுமாய் இழந்தவன். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பாரமாக, வயதிற் கேற்ற பருமானத்தோடு வீட்டின் மையக் கூடத்தில் மாட்டப்பட்டு தொங்கும் தொட்டிலில் தன் வாழ்நாளை அறியாமலேயே கழிப்பவன். பெயர் வஹாப். அவனைக் கொண்டு எழும் பிரச்சி னைகள்தான் கதை. கதையின் முத்தாய்ப்பில் 'லௌகீக' சாபு(ஹஜ்ரத்)ஒருவர், ஓர் சந்தர்ப் பத்தில் நாயகனின் வீட்டிற்கு வருகிறார். வஹாபைக் கண்டவுடன் அவருக்கு மனிதாபிமான மும், உயிர்களிடத்திலான நேயமும் ஒரு சேரப் பெருக்கெடுத்துவிடுகிறது. வஹாபை எடுத்த ணைத்து உச்சி முகராத குறையாக அன்பை வழியவிடுகிறார். வீட்டில் உள்ளவர்களிடத்தில் வஹாப் குறித்த நம்பிக்கை வார்த்தைகளை சொல்கிறார். அதோடு அவர் முடித்துக் கொண் டிருக்கலாம். அவனுக்கு இன்னும் 'சுன்னத்' செய்யாததைச் சுட்டி, மதரீதியான வீம்பில் இறங்குகிறார். இது போதாதோ ஆபிதீனுக்கு! இஸ்லாத்தை முன்வைத்து அவர் செய்யும் கிண்டலும், விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும் அல்லாஹ்வும் என்பதாக அக்கதை பிரமாதப் படுகிறது! முடிவில், பிரமாதப்படுத்துவதில் ஆபிதீனையும் மிஞ்சுகிறான் கதையின் நாயகன் வஹாப்! சாபு அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடிப்பதென்பது வஹாபின் அந்த முத்திரைத் தனத்தால்தான். எந்த முத்திரை தனம்? தொகுப்பை வாங்கிப் படிக்காமலா போய்விடுவீர்கள்?

இந்தத் தொகுப்பில் பதிமூன்று கதைகள் உள்ளன. 'விளக்கக் குறிப்புகள்' மிக அதிகமாக, எட்டுப் பக்கங்கள் கொண்டதாக இருப்பதால் அதனையும் சிறுகதையென வாசகன் வாசித்து வைக்கும் அபாயம் உண்டு. வாசகர்கள் பிரித்தறியும் நுட்பத்தோடு வாசிக்கக் கூடுமெனில், பதிமூன்று கதைகள் என்றது சரியாக இருக்கும். இந்தப் பதிமூன்றில் என் பார்வையினூடான முதல் தேர்வென்றால் அது 'ருக்உ' தான்! 'ருக்உ' உரைநடையால் தீட்டப்பட்ட ஓர் மனித னின் பல்வேறு சித்திரங்கள்! அந்தத் தொகுப்பில் அதிகப் பக்கங்களைக் கொண்ட கதை அது. அத்தனைக்கு ஒன்றும் அதிகமில்லை வெறும் ஐம்பத்தியொரு பக்கங்கள்தான்! என்றாலும், வாசிக்கும் வாசகர்கள் மலைக்கக் கூடும். ஆபிதீனின் ஸ்டையில் அது. குறையாவாக எழுத வராது. சிறுகதையை அவர் நூறு பங்களுக்கு எழுதாமல் விட்டாரே என்று நிம்மதி கொள் வதே சிறப்பு. வாழ்வைப் பதிவாக ஆக்குவதிலான முரண்கள் இவை. என்றாலும் அவர் எழு தும் அத்தனைப் பக்கங்களும் அலுக்காதவை!

'நகுதா' என்கின்ற 'நானா' அடிப்படையில் கவிஞர்! மேலும், அரசில்வாதி / நகைச்சுவை ததும்பப் பேசும் மேடைப் பேச்சாளர்/ எளிமையும் தன்மையும் கொண்டு ஏழைமையிலும் மலர்ச்சி கொண்டவர் / பிரச்சினைகளோடு அவரை அணுகும் எவருக்கும் அரிய மருந்தானவர் / இறைவனின் மீது அபார நம்பிக்கை கொண்டவர் / அவருக்கென்று ஓர் இஸ்லாத்தை வடிவ மைத்துக் கொண்ட வர்/ அந்த இஸ்லாம் ரொம்ப எளிமையானது, கையடக்கமானது/ அதில் அவரின் இறைவன், சதா நேரமும் அவர் கேட்பதைத் தருவதற்காகவே இருப்பவன் / நானே உனக்கு சகலமும் தருகிறேன் என்று சொல்லப்போய் இறைவன், அவரிடம் எக்குத் தப்பாய் சிக்கிக் கொண்டவன் / 'கேட்டால் தருகிற இறைவன் இருக்கிறபோது' ஏன் வேலைக் குப் போகணுமாம், எதற்குத் தொழில் பண்ணணுமாம் என்கிற ரீதியில் வாழ்வின் அத்தியா வசியமான நடப்புகளைத் தவிர்த்தவர். இப்படி, நானாவின் அத்தனை முகங்களையும் பல் வேறு முனைகளில் இருந்து பார்த்து, எழுத்தால் ஆபிதீன் வரைந்திருக்கும் சித்திரங்கள் சாதாரணமானதல்ல!

ஆபிதீனின் கதைகளில் பரிச்சயம் கொள்ள முனையும் வாசகர்கள், வாசிப்பினூடே காணும் நெருடலையும்/திணறலையும் முயன்றுணர்ந்து தாண்டி போகவேண்டியே இருக்கும். அந்த நெருடல், கதைகளில் காணும் வழக்குச் சொல்லினால் நிகழ்வது. அதன் நிவர்த்திக்குப் போதும் போதும் என்ற அளவில் விளக்கக் குறிப்புகள் அந்தத் தொகுப்பில் உண்டு. அவரது யுக்தி சார்ந்த வலைப் பின்னலான எழுத்தினை வாசகர்கள் உணர்ந்தால்தான் அவரது கதை களை வாசகர்கள் அணுகவே முடியும்.

-தாஜ்

*****

குறிப்பு:
இது ஓர் மறுபிரசுரம்.
சில திருத்தங்களை கொண்டது.

satajdeen@gmail.com
2:51 PM 11/22/2011

****

No comments: