Friday, November 18, 2011

அழகிய முன் மாதிரி சமூகம் நாங்கள்

அன்புடன் வாசகர்களுக்கு

இந்த நடைச் சித்திரம்
என் இன்றைய சமூகம் சார்ந்த பார்வை.
விமர்சனம் உள்ளடக்கியது என்றும் சொல்லலாம்.

இதனை வாசிக்கும்
நண்பர்கள் சிலர்
என்னிடம் வருத்தம்கொள்ள
வாய்ப்பிருக்கிறது.
அந்த அளவில்
இந்த நடைச் சித்திரத்தில்
நான்
சற்று எல்லைதாண்டி இருக்கிறேன்.
உறுத்தும் சமூகம் சார்ந்த விசயங்களை
சொல்லாமல் / விமர்சிக்காமல்
இருக்க முடியவில்லை.

சிந்தனைப் பரப்பில்
நம்மில் ஆரோக்கியமானவர்கள்
பலர் உண்டுதான்.
என்றாலும்
பீடித்த நோவை அறியாதவர்கள்/ கலையாதவர்கள்
வைத்தியம் செய்துக் கொள்ள முயலாதவர்கள்/
அதன் வழி அறியாதவர்கள்
நம்மில் அநியாயத்திற்கு அதிகமாகவே இருக்கிறார்கள்.
இந் நிலைக் குறித்து யோசிக்கிற போது
மனம் சுடுகிறது.

புண்ணை மூடி மறைத்து வைப்பது
வேண்டாத வேலை என்பதால்
இப்படி எழுதியிருக்கிறேன்.

*
கவிதைக்காரனின் கலகம்
நல்லதாக முடிந்தால் சரி.

*

அழகிய முன் மாதிரி சமூகம் நாங்கள்

-தாஜ்


எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்?
சகாக்களின் சப்தம் காதைப் பிளக்க
எங்கள் உட்சுற்று வட்டத்திற்குள்
விவாதம்!
நாலு கால்கள் என்றவனை
ஆறு கால்கள் என்றவன் மறுத்தான்.
எட்டுக் கால்கள் சொன்னவன்
இரண்டுகால்களென குழம்பத் தொடங்கினான்.

பறக்கையில் அதைப் பார்த்திருக்கிறேன்
பவளமாக இரண்டு கால்கள்தானென
உறுதிசெய்தான் இன்னொருவன்.
நீர் நிலைகளில் அதைக் கண்டிருக்கிறேன்
கொக்கு மாதிரி அதற்கு ஒரே கால்தான்!
சத்தியம் செய்தான் ஒரு பூந்தாடிக்காரன்.
எட்டுக்கால் பூச்சி எந்த ஊர்?
தெளிவு கேட்டான் அதிகம் படித்தவன் , அவசரமாய்.

நீரில் நீந்தியது கரையேறும்போது
என் இரண்டு கண்களாலும் கண்டிருக்கிறேன்
பாம்பு மாதிரி அதற்கு…
உடம்பெல்லாம் கால்கள் என்றான்
சந்தேகமற்ற ஒரு தாராளக்காரன்!

அதுவோர் அற்பம்…
ஐந்தறிவு கொண்ட ஜந்து
ஆறறிவு படைத்த நாம் ஏன்…
அதை அறிய அவஸ்தைப்படணும்?
அதற்கு கால்கள் இருந்தாலென்ன?
இல்லாது போனாலும்தான் என்ன?
மெத்த மானிடக்கொழுந்தொருவன்
முற்றுப்புள்ளி வைக்க முனைந்தான்.
‘ஸ்ஃபைடர் மேனில்’ நான் பார்த்திருக்கிறேன்…
அவனுக்கு இரண்டு கால்கள்தான்.
நாட்டாண்மை வீட்டு ஹைஸ்கூல் துள்ளினான்.

அந்தப் பூச்சியைப்பற்றி
நம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது….
புற்று மாதிரியான திட்டுதிட்டான
தனது தாடியைக் கோதியபடி
குரலெழுப்பினான் ஒரு தவ்ஹீது!
எதிரிகள் ரசூலுல்லாவைத் தேடித் திரிந்து
அருகாமையில் வந்தபோது..
வலை பின்னி அது
ரசூலுல்லாவை காபந்து செய்ததென
ஆண்டவனே சொல்லியிருக்கிறான்!
ஆனால், அதற்கு எத்தனைக் கால்களென
ஒரு இடத்திலும் அவன் சொல்லவில்லை.
அதற்கு இரண்டு கால்களா?
ஒட்டகம் மாதிரி அது பெரிய ஸைஸ் பூச்சியா?
தெரியாது.
நானாக எதைச் சொல்லமுடியும்?
வேதத்தில் ஆண்டவன் விளக்காமல் விட்டுவிட்டதில்
ரொம்பவும் கைசேதப்பட்டவனாக ஓய்ந்தான் அவன்.

இஸ்லாமியனுக்கு இறைவனின்
வேதமும் ஹதீஸும் இரண்டு கண்கள்.
வேதத்தில் சொல்லப்பட்ட அந்தச் செய்தி….
ஏன் ஹதீஸில் சொல்லப்படவில்லை?
சாலிஹாக கேள்வி எழுப்பினான்
தவ்ஹீதுக்கு நேர் எதிரே
தொழுகை அமர்வில் அமர்ந்திருந்த ஒரு சுன்னத் ஜமாத்!
வேதம் சொன்னால் போதும்.
ஆண்டவனின் சொல்லுக்கு…
அப்பீல் ஏது! என்றான் தவ்ஹீது.

வேதம், ஹதீஸுங்கிற பெரிய சங்கதிகளை
இங்கே இழுக்க வேணாம்….
அந்தப் பூச்சியை மட்டும் பேசுவோம்.
என்னைக் கேட்டால்…
என் இத்தனை வயதில்
நான் அதைப் பார்த்ததேயில்லை…
அதனால் உறுதிபட சொல்கிறேன்
அப்படியொரு பூச்சியே இல்லை, இல்லவே இல்லை!
பேசிய அந்தப் பகுதியே அதிர
தீர்மானமாக குரல் எழுப்பினான்
எங்களில் ஒரு அடாவடி சண்டியன்!
அண்ணன் சொன்னா அது சரியா இருக்கும் என்றான்
நிழலாக பக்கத்தில் நின்றதொரு கூஜா தொப்பி!

எங்க அய்யாவுக்கு இப்பவே….
போன் செய்து கேட்டு விடட்டுமா? என்று துடித்தான்
வெள்ளை பாக்கெட்டில் எல்லோரும் பார்க்க
டாக்டரை வைத்திருந்த
பாமகவின் சிறுபான்மைப் பிரிவின்…
மாவட்ட துணைத் தலைவரும்
நகர துணை அமைப்பாளருமான ஒரு பணக்காரக் கைலி!

நாங்களெல்லாம் சசிகலா மேடத்திடமே…
செல்லுல பேசுவோமில்ல…
தூரத்தில் ஒலித்த அந்தக் கிண்டலுக்குச் சொந்தம்
சிகப்பு கருப்பு நடுவுல வெள்ளைக் குரல்!
எங்கத் தலைவர் பேசினா
சத்தியம் நீதி நேர்மை மட்டும்தான் பேசுவார்!
நாங்க ஆட்சிக்கு வந்தா
கூட்டணி என்கிற வார்த்தையை
உலக அகராதியிலிருந்தே ஒழிச்சிடுவோம்! என்றான்
‘விருதகிரி’ பார்த்து விஜயகாந்தான
ஆலிம் வீட்டு மாப்பிள்ளை!

எவனும் ஒண்ணும் நிம்ப முடியாது
எட்டுக் கால் பூச்சி மேடமானாலும் சரி…
பதினாறு கால் நடிகனானாலும் சரி…
தேர்தலுக்கு முன்னாடியே
ஆப்பு வச்சுடுவோமுல்ல!
தொகுதிக்கு நூறு கோடி!
தமிழ் நாட்டை பவர்போட்டு
எழுதி வாங்டுவோமுல்ல!
எங்க துணை முதல்வர்தான்…
நாளைய முதலமைச்சர்!
காலத்தின் கட்டாயம் அது என்றது
கதிரவன் என்கிற அரபு பெயர்!
துணை முதலமைச்சர் வாழ்கவென
இன்னும் பல குரல்கள்!

செல்லோடு காதல் மொழி
பேசிக்கொண்டிருந்த ஒரு த.மு.மு.க. குஞ்சு தாடி
அதை அணைத்து தியாகம் செய்துவிட்டு,
இதையெல்லாம் பேசுறதுக்கு உட்கார்ந்திடுறீங்க….
டிசம்பர்-6 க்கு குரல் கொடுக்க
வாங்கன்னா வரமாட்டீங்கிறிங்க.
பாபர் மசூதிய திரும்ப கட்டவேணாமா?
நம்ம உரிமையை மீட்டெடுக்க வேணாமா? என்றான்.
பழய இரும்பு வாங்குற உருதுகாரனெல்லாம்
நமக்கு புத்தி சொல்ல வந்துட்டானுங்க என்றார்
தீவிர ‘சுன்னத் ஜமாத்’ ராவுத்தர்.

போய் சேருற இடத்துக்கு…
புண்ணியம் சேர்க்கிற மாதிரி
எதாயிருந்தாலும் ‘ஹக்கா’ பேசுங்க.
இஸ்லாமானவன் ஒவ்வொரு நிமிஷமும்
‘ஆகிரத்’தை’ நினைக்கக்கூடியவனாவே இருக்கணும் என்றார்
எதிர் வீட்டுத் திண்ணையில்
கைத்தடியோடு சாய்ந்திருந்த வயதான அப்பா ஒருத்தர்.

நிகழ்வுகள் அத்தனையும்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
முதியவர் ஒருவரை
அவசரமாய் சீண்டினான் ஒரு அரை.
மரைக்காரே…. நீங்க எதுவும் சொல்லலியா?
என்னத்தைச் சொல்றது,
ஒரு பாத்திஹா… ஒரு மௌலது
ஓதுனா தப்புங்கிறானுங்க இப்ப!
அதுதான் போகட்டுன்னா…
சாஹுல் ஹமீது பாதுஷா இடத்துக்குப் போய்
ஜியாரத்து செய்றதைக்கூட
ஹராமுங்கிறாங்கன்னா…
நாமல்லாம் வெளங்குவோமா? சொல்லு தம்பி
அவரில்லாம ஏது நம்ம?
மீண்டும் சோர்ந்துபோனார் அவர்.

விசயத்துக்கு வாங்கப்பா என்ற சபை நடத்தி,
ஒதுங்கி நின்ற ஒருவனைப் பார்த்து
நீ சொல்லுப்பா…
அந்தப் பூச்சிக்கு எத்தனைக் கால்களுண்ணு? கேட்டால்
சரியாகத் தெரியாததால்
பதில் சொல்ல இயலாது என்றான்
என்னையொத்த அந்தப் பாவம்.
என் நண்பர் ஒருவர் அங்கே இல்லை.
இருந்திருப்பாரேயானால்…
சபை நடத்தியைப் பார்த்து,
அப்பாவியாக… தாழ்ந்த குரலில்
உனக்கு எத்தனைக் கால்களென
உனக்குத் தெரியாதா? என்றிருப்பார்!
அவனும் குழம்பிப் போயிருப்பான்.
விவாதமும் அப்பவே முடிந்து போயிருக்கும்.

அதோ தெரியும்…
நம்ம ஆண்டவனின் பள்ளியைப் பாருங்கள்
பாங்கு சொல்லும் நேரம் நெருங்கிகிட்டு இருக்கு
ஆண்டவனைக் குறித்து மட்டும் பேசுங்கள்.
ஒன்றுக்கு ஏழு நன்மை கிடைக்கும்!
இப்படியொரு தாராள மனம் யாருக்கு வரும்.
அற்பமான இந்த துனியா சங்கதிகளும்தான் எதற்கு?
விட்டுத் தள்ளுங்கண்ணு வேண்டிக் கொண்டான்
ஆறுமாத தப்லிக் யாத்திரையை நேர் செய்து
முடித்துவந்த ஒரு சகோதரன்.
பழம்பெரும் ஆன்மீகவாதி ஒருவர்
இடை புகுந்து….,
புரியாதத குறித்து
நீங்கள் ஏன் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்?
நம்ம பள்ளி ஹஜ்ரத்திடம் கேட்டால் போச்சு! என்றார்.

தனது கண்ணியமான உருவால் உடையால்..
மஹல்லா ஒப்பரையினர் அனைவரின்
மதிப்பையும் பெற்ற
மரியாதைக்குரிய ஹஜ்ரத்தும் வந்தார்.
புன்னகைப் பூக்க சபைக்கு சலாம் சொன்னார்.
கோரஸாக சபையும் பதில் சலாம் சொன்னது.
தவ்ஹீத் நண்பர்கள் ஓரிருவர்
பதில் சலாம் சொல்லாமல் எழுந்தார்கள்.
சுன்னத் ஜமாத்தைச் சேர்ந்த
ஒருவரின் சலாமுக்கு
தவ்ஹீத்காரர்கள் பதில் சலாம் சொல்வதில்லை.
கோட்பாடு சார்ந்த நெறிச் சிக்கல்!
அவனுங்கள போகவிடுங்க என்றார் தீவிர சுன்னத்.

ஹஜ்ரத் தொடர்ந்து புன்னகை பூத்தபடி
சபையின் மையம் பார்க்க
அங்கியின் மடிப்பு குலையாமல்
பதுவுஸாக உட்கார்ந்தார்.
மெல்லிய வெள்ளைத் துணியை அள்ளி
தலையில் போட்டுக் கொண்ட விதமான
அவரது தலைப்பாகை
அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது.
மகிமை கூடித் தெரிந்தது.
காலம் கடத்தாமல்
கேள்வி அவரின் முன் வைக்கப்பட்டது.
பதில் சொல்வதற்கு முன்
எல்லோரையும் பார்க்க பெரிதாக சிரித்தார்.
இதுயென்ன கேள்வி? என்பது போல்.

இந்த மண்ணில்…
மூணுலட்சத்து முப்பத்தி மூவாயிரத்து மூன்று
பூச்சிகள் வாழ்வதாக நம் பெரியோர்களும்
சான்றோர்களும் சொல்லி இருக்கிறார்கள்.
அத்தனையும் மனிதர்களுக்காகவே
படைக்கப்பட்டதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
சகலவிதமான குணம் கொண்ட பூச்சிகள்
அத்தனையும் அவனது படைப்புகள்தான்.
மனிதனுக்கு தீங்கிழைக்கும் பூச்சிகளும் கூட
சந்தேகமற அவனது ‘ஹொஜரத்’துதான்!
அவைகளுக்கு எத்தனை கால்கள் இருந்தாலும்
இல்லாவிட்டாலும் அது ஆண்டவனின் படைப்பு!
அதனையெல்லாம் நாம்
கேள்விக்குள்ளாக்கிக் கொண்டு இருக்கக் கூடாது!

ஒரு சஹாபி… மரங்கள் அடர்ந்த காட்டுவழியே…
போய்க்கொண்டு இருந்தபோது
ஒரு தேனீப் பூச்சி
அவரை கடிக்க வழி மறித்ததாம்.
நீ ஏன் என்னை வழிமறித்து கடிக்க வருகிறாய்? என்று
சஹாபி வினவும்
இந்த வழியே உள்ள ஓர் மரத்தில்தான்
என் குடும்ப தேனீக்களின் தேனடை உள்ளது
அதனைப் பாதுகாக்கும் பொருட்டே
உம்மை சீண்ட வந்தேன் என்றதாம்.
அதற்கு அந்த சஹாபி,
நீ நினைப்பது மாதிரி
உன் தேனை அபகரிக்க வந்தவன் இல்லை நான்!
நம் இறைவனின் செய்தியை தூரதேச மக்களுக்காக
எடுத்துச் செல்பவன் நான்!
தேனீப் பூச்சியே… நீயும் இறைவனின்
படைப்புகளில் ஒன்றென
என்பதை மறக்காதே…. என்றார்.
தேனீப் பூச்சி அந்த சஹாபியிடம்
பணிந்து வழிவிட்டு விட்டதாம்!

நாமெல்லாம் சாதாரண மனிதர்கள்
மண்ணால் படைக்கப்பட்ட ஆதி மனிதனின்
வம்சாவளி வந்த மக்கள்!
அவனது கருணையால்…
அழகிய முன் மாதிரி சமூகமானவர்கள்!
வீண் கேள்விகளும்
வீண் விவாதங்களும் நமக்கு வேண்டாம்.
இந்த மண்ணில் நம் அறிவுக்கு எட்டாத
ஆண்டவனின் சிருஷ்டிகள்
கோடிகோடியென உண்டு!
இறைவன் ஒருவனுக்கே அத்தனையும் வெளிச்சம்!
அவனை மறந்த விதமாய்
அவனது படைப்புகள் குறித்து சர்ச்சைகள் கூடாது.
வீண் விவாதம் செய்வதெல்லாம் மஹா பாவம் என்பதாக
ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கிறது!

நம் எல்லாப் பிழைகளில் இருந்தும் அவன் காப்பான்!
பயம் வேண்டாம்.
நம் பாவங்களை நிச்சயம் மன்னிக்கக் கூடியவன்
அவனின்றி வேறொருவரும் இல்லை.
உங்களது தகாத செயல்களுக்கெல்லாம்
அவனிடம் மன்னிப்பு தேடுங்கள்.
கருணை பொங்க அவர் சொன்னதும்
தட்சணை முன்வைக்கப்பட்டது.
பத்தி கொளுத்தப்பட்டது.
அது எங்கள் எல்லோரையும்
ஊடுருவி மணம்கமழச் செய்தது.
அவர் எங்களுக்காக
வேற்று பாஷையில் மன்றாடினார்
நாங்களும் நெஞ்சுருக அதே பாஷையில்
‘ஆமீன்’ சொன்னோம்.

பாத்திஹா ஓதிய இடத்தைக்
கூட்டி சுத்தப்படுத்தித் தந்த
வேற்று மத வேலைக்காரப் பெண்ணொருத்தி,
எல்லோரின் கண்ணெதிரே
விட்டத்தில் வலைபின்னிக் கொண்டிருந்த
எட்டுக்கால் பூச்சியை நச்சென அடித்து
அதன் வலையோடு தூர வீசியபோது
எல்லோருக்கும்
அதைக் காட்டித்தந்து போனாள்.
அதனால் என்ன….?
எங்களது பாவம்
நிச்சயம் மன்னிக்கப்பட்டிருக்கும்.
பாத்திஹாவில் எங்களுக்காக
ஹஜ்ரத்தும்தான்
எத்தனை உருகி மன்றாடினார்!

***
குறிப்பு:
இது ஓர் மறு பிரசுரம்.
எனக்குப் பிடித்த
என் எழுத்துகளில் இதுவும் ஒன்று.
ஆபிதீன் பக்கங்களில்
இவ்வாண்டு பிப்ரவரியில் வெளியானது.
ஆபிதீனுக்கு நன்றி.
-தாஜ்
8:51 AM 11/19/2011

***

No comments: