Friday, October 17, 2008

உமா மகேஸ்வரி கவிதைகள்

உமா மகேஸ்வரி கவிதைகள்
----------------------------------------
நவீனத் தமிழின் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவரான உமா மகேஸ்வரியின் கவி தைப் பின்புலம் வீடு சார்ந்தது. வீட்டின் உறவுகள் - குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளின்

உலகம் - சார்ந்தது. வீட்டிலிருந்து விரியும் நிலக் காட்சிகள், வான்வெளி சார்ந்தது. இவற்றுடான
உரையாடல் இந்த வாழ்க்கையின் அர்த்தம் குறித்தான தேடலாக விரிவுகொள்கிரது. அதில் தவிர்க்கவியலாது கசியும் துக்கத்தையும் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் உனர்த்துகின் றன. வாசக மனத்தில் கவிதைகளை அழுத்தமாகப் பதியவைக்கும் வகையிலான சிற்றோடை
யின் நீரோட்டம் போன்ற மொழிநடை உமா மகேஸ்வரியின் தனிச் சிறப்பு.
*
காலச்சுவடு வெளியிட இருக்கும் உமா மகேஸ்வரியின் புதிய கவிதைத் தொகுப்பான
'இறுதிப் பூ'விற்கு காலச்சுவடு எழுதியிருக்கும் விளம்பர வரிகளைத்தான் நீங்கள் படித்தீர்கள்.
நிஜத்தில் இந்த வரிகள் உமா மகேஸ்வரியின் கவிதை வீச்சுக் குறித்த முழுமையான அபிப்ரா
யமாக நான் கொள்ளவில்லை. பல முகம் கொண்ட அவரது கவிதைகளின் அரூபத்தை அளக்க
பெரிய ஆய்வு செய்ய வேண்டும்.
- தாஜ்
*
சித்திர அரூபம்
-------------------
எல்லாமும் நகர்கின்றன
விரைந்து.
நிற்பதேயில்லை அவை
திரும்பியும் பார்ப்பதில்லை.
அவற்றை
மீட்டெடுக்க முடிவதில்லை மீண்டும்
மீண்டும்
எந்தச் சக்தியும்.
பறந்து மறைகின்றன
அவை.
இந்த அரூபச் சித்திரத்தின்
வளைவுகளோடு
இழைதல்
உன்னை மீறியதா?
சுழலும் இதே
திகிலின்பத்தில்
சுண்டப்பட்டு தொலைந்து
சிதறுவதும்?
***
நுழைதலற்ற கதவுகள்
----------------------------
கார்த்திகை மழைநாளின்
கரிய இரவுகள்
நடக்கின்றன
ரகசியக் காலடிகளோடு,
கண்காணிப்புகளைத் தவிர்த்து.
இன்று உதயத்தின் விழிமூட
கிழக்குக் காற்றின்
நச்சரிப்புக்களைப்
பொருட்படுத்தாமல்
நீல வானில்
ஒரு அடர்திரை
இழுக்கப்படுகிறது.
புல்வெளிகளின் முணுமுணுப்பு
மூடிய கதவுகளோடு வீடுகள்.
இந்தப் பாலைத் தெருவில்
தனித்த பயணியின் பாதத்தடங்கள்
கடக்கின்றன
என் திறந்த வீட்டின் கதவுகளுக்குள்
நுழையாமல் தாண்டி.
***
அழையாமை
-----------------
செல்போன் ஒலியென
நடுங்குகிறது பாதி விழிப்பு.
கோதிக் கொண்டிருக்கிறது காற்று
கந்தலான இரவுகளை.
சுருண்ட ஓடுகளோடு
குறுகிக் கிடக்கும் காலம்
செத்த ஆமையாக.
*
தூர மயான நெருப்பு
கேலிக்குளிர் வீசுகிறது
என் நாட்களின் மீது
அடிக்கடி.
உலர்ந்த முத்தங்களில்
இருந்து வடியும் சீழ்.
*
உணர்ந்தேயிராத
தாய்மை இதழ் தேடி
கனகாம்பரத்தைத்
தொடுக்கையில்
உறுத்தும் பாதச் சிறகு.
விரிந்த விரல்களின் சல்லடையில்
யாருடையதோ கண்ணீர்.
பொருக்குக் காய்ந்த
உணர்வுகளுக்குள்
புனல் சிறகசைக்க
போதுவதேயில்லை
ஒற்றை அழைப்பு.
****
தட்டச்சு:தாஜ்
satajdeen@gmail.com

1 comment:

நந்தினி மருதம் said...

உமாமகேசுவரி அற்புதமான ஒரு கவிஞர் .
ஆரவாரம் இல்லாமல்
தமிழ்க் கவிதையில் ஒரு புதிய போக்கைமுன்னெடுத்துச் செல்பவர்.
அவருடைய கவிதைகளைப் படிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி
----------------------------------

நந்தினி மருதம்
நியூயார்க்
2012-சூன் 25