Monday, May 19, 2008

தாஜ் கவிதைகள் - 29


தாலி
---------

அவளைப் பார்த்ததாகச் சொல்லி
அடையாளங்களும் சொன்னான்
ஏழ்மை கோலமெல்லாம்....
சொன்னவரை சரி
கழுத்தில் தாலியாம்!
நடப்பின் யுகப் பெருமை
புரியவில்லை அவனுக்கு
அது அவளாக இருக்காது.

*****

பின்னே விழும் பிம்பங்கள்
-------------------------------------------

உயரே தூக்கி
மாட்டப்பட்டிருக்கிறது
முறுக்கேறிய
ஆணின் பிம்பம்
இன்னும் மேலே
ஏற்றி வைத்துப் பார்க்க
நவீன கலவைகளோடு
பெண்ணை தீட்டுகிறேன்
புத்துயிர்ப்புடன் அவள் எழ!

எத்தனை அற்புதங்களைக்
கூட்டினாலும் அவளின்
மரபார்ந்த மார்பைப்
புடைக்க வைக்கத்தான் வேண்டியிருக்கிறது.
கார்க் கூந்தலைத் தவிர்த்தாலும்
கொஞ்சமேனும் நீள முடி காட்டி
புருவத்தை சிரைத்து நீட்டி
கண்களுக்குள் காந்தத்தை ஏற்றனும்!

ஆணின் மீசைப் பிரதேசம்
இங்கே பொட்டலாக
கொவ்வை உதடுகளுக்கு
வண்ணப் பூச்சைக் கூட்டனும்!
இன்னும் கூடுதலாய் அவள்
பற்களையும் பளிச்சிட வைத்தால்
மாசுப்படுமென விட்டு
குடத்தைத் தட்டி ஒடுக்கி அவள்
இடுப்பின் வடிவில் கூடுதல்
யோசனை கொள்ளும் நேரம்
புருஷர்களால் ஸ்தலம் ஸ்தம்பிக்க
உயிர் கொண்டது சித்திரம்
முறுக்கு மீசையோடு
பளீச்சென தெரிந்தனப் பற்கள்
ஆதி சிரிப்பின்
ஆயுதச் சுழிப்போடு.

*******
satajdeen@gmail

No comments: