Thursday, August 02, 2007

தாஜ் / சிறு கதை - 1


தமிழ்ப் பேசும் ஆங்கில படம்.
----------------------------------------
*
- தாஜ்
*
தெரு விளக்குகள் அணைந்து விட்டது. எல்லா திசைகளிலும் பூரணமான இருட்டு. மணி எட்டேகால் சொச்சம்தான். காற்று சூறை யாக சப்தம் காட்டிய படி தாறுமாறாக வீசியது. இந்த கோடையில் காய்ந்து சருகாகி மடித்துப் போன சாலைப் புழுதியெல்லாம் காற்றில் மேலெழுந்து கண்களில் அப்பியது. மேலெல்லாம் புழுதியின் பூச்சு. நட்சத்திர மண்டலம் மறைந்துப் போனது. தேய்ந்து போய் வளர்ந்த நிலவையும் காணோம். மழை வரும் என்று பேசிக் கொண்டு சிலர் ஓட்டமும் நடையுமாய் விரைந்தார்கள். தூற்றலும் பலமாக விழுந்து காட்டியது. ஏறிவந்த சைக்கிளை தள்ளிக் கொண்டுகூட போக இயல வில்லை. சுழற்றியடித்து அதை நிறுத்தி யது காற்று. உடல் பலஹீனம்வேறு. தேங்கிவிட்டேன். காலமும் என் முன்னே இருளாக கவிழ்ந்து போனது.
*
விளக்குகள் மீண்டும் உயிர்பொற்றன. காற்றும் தூறலும் கூடிக்கொண்டே இரு ந்தது. நாலுவீடு தள்ளி, ஒரு வீட்டின் முன்புறம் கொஞ்சம் பெரிய பெட்டிக் கடை. அதன் முன்னால் போடப்பட்டிருந்த கீற்றுப் பந்தலில் சிலர் ஒதுங்கி நின்றார்கள். மழை விடட்டுமென சைக்கிளை ஓரத்தே விட்டுவிட்டு அங்கே ஏறிக்கொண்டேன். தூரத்தில் இருக்கும் எங்க முஹல்லா பள்ளியில் இருந்து 'இஸாதொழுகை'க்கான பாங்கு, சூறைக் காற்றின் வினோத இரைச்சல்களை யும் விஞ்ச கேட்டது.
*
என்னை கண்டவுடன் கடைக்காரன் என் பிராண்ட் சிகரெட் பாக்கெட் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினான். அவ்வப்போது சிகரெட் வாங்க அங்கே போவ துண்டு. கடைவைத்த புதிதில் அவன் துரு துருவென வியாபாரம் செய்வதை பார்க்கப் பிடிக்கும். அவனுக்கு திருமணமாகிய சில மாதங்களில் விபத்தில் சிக்கிக் கொண்டான். பெரும்பாலும் பலருக்கு நிகழும் பொது விபத்துதான். சில ரால் அதில் மீண்டுவிட முடிகிறது. சிலரால் முடிவதில்லை. அதன் பிறகு சிலநேரம் கணவனுக்கு உதவிகரமாக கடையில் அவன் மனைவி நிற்பதைப் பார்த்திருக்கிறேன். அவள் அவனைவிட கெட்டி. புன்னகைத்தப்படி அவள் வியாபாரம் செய்வதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
*
இப்பொழுது அங்கே நிற்க இடம் காணவில்லை. இன்னும் சிலர் வந்து கூடிக் கொண்டார்கள். எதிரே சினிமா கொட்டகை. தமிழ்ப் பேசும் ஆங்கிலப்படம்! போஸ்டர் ஒட்டியிருந்தது. அதில் கூட ஒருத்தி நிமிர்ந்து புடைத்துக் கொண்டி ருந்தாள். இப்பொழுது அவள் மழையின் சாரலில் கழன்று மடிந்து கிடந்தாள். நிற்பவர்களில் பலரும் அந்தப் படம் பார்க்க முன்கூட்டியே வந்தவர்கள். அது ஆங்கிலப் படம் என்றாலும், மொழிமாற்றம் செய்யப்பட்டிருப்பதால் அதனை விளங்கிக் கொள்வதில் சிரமம் ஏற்படாது. ஆனால் அந்தப் படத்தின் மாறுப் பட்ட கலாச்சார வடிவைதான் இவர்கள் புரிந்துக் கொள்ள சிரமம் இருக்கும். அதையும் தமிழ்ப் படுத்த முடியுமாயென்ன? என்றாலும் அதுவும் அத்தனை சிரமம் தராதென்றே நினைக்கிறேன். இப்பொழுதெல்லாம் மேற்கிற்கும் நமக் குமான கலாச்சார வித்தியாசம் சிரமமில்லாதவகையில் ரொம்பவே சுறுங்கி விட்டது.
*
கடையின் உள்பகுதியில் தவணைக்கு பணம்பெற்ற ஒருவனை அழைத்து வந்து வைத்து, வட்டிக் குறித்த சர்ச்சையாக பஞ்சாயத்து ஒன்று நடந்துக் கொண்டிருந்தது. தவணைக்கு பணம் தருவது கடைக்காரனின் இன்னொரு தொழிலாக இருப்பது எனக்குப் புதிய செய்தி. அந்த ஏரியாவின் சவடால் பேர்வழி ஒருவன் கடைக்காரனுக்காக, அவனது குரலாவே தவணை வாங்கி யவனிடம் பேசிக் கொண்டிருந்தான். தவணை வாங்கியவனின் அக்கா, தங்கைகளின் கற்பில் அவன் உரசலை நிகழ்த்தும் பேச்சாக அது இருந்தது. கடைக்காரன் வட்டி நோட்டை புரட்டிப் பார்த்து அசலும் வட்டியுமான சுத்தத்தை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
*
வீட்டின் உள்ளிலிருந்து கடைக்காரனின் மனைவிவந்து கடைவாசலில் நின்ற கூட்டத்தை எட்டிப்பார்த்தாள். நல்ல மழையென சிரித் தாள். சவடால் பேர்வழி அவளை பார்த்ததும், பெயர்கூறி அழைத்து குடிக்க தண்ணி எடுத்துவரச் சொல் லிச் சிரித்தான். அவளும் சிரித்துக் கொண்டே உள்ளே போனாள். தண்ணி யெ டுத்துவர போனவளை திரும்பிப் பார்த்தபடி, "கடையை அடைத்துக் கொண்டு நிற்காதீர்கள்" என்று கூறியவனாக கடைக்காரன் எல்லோரையும் போகப் பணி த்தான். என்னிடம் "பாய் போங்க மழைவிட்டா மா திரி இருக்கு, இப்படியே நின்னா எப்படி?" என்றான்.
*
விளக்கு மீண்டும் அணைந்தது. மழை வேகம்பிடித்து. சுழன்று சாறல் வேக மாக அடிக்கத் துவங்கியது. வீட்டுக்காரி சொம்புடன் வந்தாள். அங்கே வருகி றேன் என்று ஜாடைக்காட்டியப்படி கடைக்காரனுக்காகப் பரிந்து கத்திக் காட் டிக்கொண்டே கடையைவிட்டு வெளியே இறங்கி வந்தான் சவடால். தவ ணைப்பெற்றவன், தான் வாங்கிய மூவாயிரத்துக்கு மாதம் முண்ணூறுமேனி இரண்டு வரு ஷம் தந்திருக்கிறேன், இன்னும் என்னிடம் பணம் கேட்டால் எப்படி? என்ற பழையப்பட்டையே மீண்டும் பாடினான். கடைக்காரன் கூட்டு வட்டிக் கணக்கு பேசினான். முதலும் வட்டியுமாக இன்னும் ஆறாயிரத்து எழுநூற்றிச் சொச்சம் பாக்கியிருப்பதற்கான கணக் கை, நோட்டு குறிப்பிலிரு ந்து எடுத்துக் காட்டினான். "இது ரொம்ப அநியாயம், வெளங்காமெ போயிடு விங்கெ" என்று புலம்பிய வாரே தவணை வாங்கியவன் இறங்கி நடந்தான். "அவன் போறான் பாரு" என்றான் கடைக்காரன். "விடுண்ணெ எங்கே போயி டப் போறான், நாளைக்கு இழுத்து வச்சி நாலு தட்டுதட்னா தான பணத்தெ வைக்கிறான்" என்றான் சவடால். "வட்டி சுத்தமா அவன் கிட்டே வாங்கியா கனும்" என்கிற கேரிக்கையை அழுந்த வைத்தான் கடைக்காரன்.
*
தன் மனைவி, தண்ணீர் குடிக்கும் சவடாலிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருப் பதை பார்த்து, "நாளைக்கு அந்தப் பயலை விடக்கூடா து" என்றவனாக தவ ணை நோட்டைத் திறந்து மீண்டும் வட்டி விகிதத்தை கூட்டிப் பார்ப்பவனாக வும், கும்பலை கலைந்துப் போ கும்படி சப்தம் கொடுத்தவனாகவும் இருந் தான். திரும்பவும் மழை தன் வேகத்தைக் கூட்டியது. காற்றின் சாரலில் கொட்டகையில் நின்ற அத்தனைப்பேரும் தப்பமுடியவில்லை. தண்ணீர் குடித் துக் கொண்டிருந்த சவடாலும், படியிறங்கிவந்து செம்பைத் தந்த அவளும் முழுக்க ஈரமாகிப்போனார்கள். மின்னலும் இடியும் அதிர்ந்தது. கடைக்காரன் எல்லோரையும் போகச் சொல்லி மீண்டும் மீண்டும் பணித்தான். நின்றவர்கள் யாரும் கடைக்காரனைப் பொருட்டாகவே நினைக்கவில்லை. நின்று போன காலத்தோடு தாங் களும் அசைவற்றுப் போனமாதிரி மௌனம் காட்டினார் கள்.
*
ஒன்றை நினைத்தவனாக எனக்கு சிரிப்பெழுந்தது. காலம் இருளாக கவிழ்ந் தது, காலம் நின்றுப்போனது என்றெல்லாம் நான் எழுது வதை என் நண்பன் ஒருவன் படிக்கக் கூடுமென்றால், "உங்களுக்கெல்லாம் மூளை வெந்து அவி ந்து விட்டது என்பான். காலத்தை காலமாகப் பார்க்கப் பழகுங்கள், அதன் பிறகு கதை, கவிதை எழுதலாம்" என்பான். அவனிடம் விவரிக்கவோ, ஏதேனும் பதில் சொல்லவோ என்னிடம் எந்த வார்த்தையும் இருக்காது. வாங்கித்தான் கட்டிக் கொள்ளவேண்டும். எனக்கும் அது பிடிக்கும்.
*
கடைக்காரனின் மனைவி, சவடாலை 'அண்ணெ' என்றே அழைத்தாள்.
அவனை, தனது விரல்களால் மழையில் தள்ளி விளையாட் டுக் காட்டினாள். மழைத் தண்ணீரை கரங்களில் ஏந்தியவன் அவள் மீது தெளித்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல ஈரத்தோ டும் நிறைந்த சிரிப்போடும் உள்ளே போனாள். தலைத்துவட்ட துண்டு வேண்டும்யென கேட்டப்படி சவடால் பின் தொடர்ந்தான். கடைக்காரன் கொளுத்திவைத்திருந்த காண்டாவிளக்கு அணை த்தது. மீண்டும் அதைக் கொளுத்திக் கொள்ளலாம் என்பதாக பரபரப்பு அற்று காணப்பட்டான்.
*
கூட்டம் மௌனம் கலைந்து, "மழை இன்னும் வேகம் பிடிக்கும் போல் தெரிகி றது! இடியும் மின்னலையும் பார்க்க அப்படித்தான் இருக்கிறது!" என்றதென் றார்கள். "படத்திலே கூட இப்படி ஒரு மழைக்காட்சி பார்க்கமுடியாது!" என்ற வர்களாக."இன்றைக்கு படம் பார்த்தாமாதிரிதான்! போகலாம்" என்று விருப்ப மில்லாமல் ஒவ்வொருவராக கலைந்தார்கள். வீட்டின் உள்ளே இருந்து கடை க்கார னின் மகள் கதவை திறந்து வெளியேவந்ததும் அதை பொறுப்பாக சாத்தியப்படி தூக்கக்கலக்கத்தில் சிலேட்பல்பத்தோடு வந்தாள். மகளைப் பாத்ததும் கடைக்காரன் முகத்தில் பெரியதிருப்தி! "இன்னும் வீட்டுக்கணக்கு போட்டுமுடியலப்பா, தூக்கம் வேறே வரது. அம்மாதான் அப்பாகிட்டே போயி கேட்டுப் போட்டுக்கோன்னு அனுப்பிட்டாங்க" என்றாள். "இங்கே வந்து உட்கார், கணக்குத்தா னே... நான் போட்டுத்தருகிறேன்" என்றபடி கடைக்காரன் காண்டாவிளக்கை கொளுத்த முற்பட்டான். தீகுச்சியை தேடி எடுத்து தீபொட் டியின் ஓரபட்டையின் மீது உரசினான். தீ பற்றிக்கொண்டது. பற்றியத் தீயைக் கொண்டு காண்டா விளக்கை கொளுத்த, ஸ்தலத்தில் மீண்டும் மங்கலானப் பிரகாசம். யோசித்தபோது, எந்த சிரமும் இல்லாமல் எத்தனை சுலபத்தில் அந்தப் பிரகாசத்தை மீண்டும் உண்டாக்கிக் கொள்கிறான்! என்றே தோன் றியது. நாளைக்கு இவனுக்கு இவன் எதிர்பார்த்த வட்டியும் முதலும் வசூல் ஆகிவிடுமென கருதியவாறு இருளுக்குள் இறங்கி, எனது சைக்கிளை தேடினேன்.
*
*************

No comments: