தாஜ் கவிதைகள் - 21
அன்புடன்.....----------------
- தாஜ்..உயிர்...
தறித்தவர்களுக்கெல்லாம்
சுவாசமட்டுமல்ல
தேவைகளின் தொடர் நீளம்.
இன்றைய கணக்கில்
நித்தம் உயிர் பேணும்
உன் கடிதமும் இல்லை.
நாம் அறியா நொடிகளில்
கூறுகளின் வழியே
பொசுக்கும் உஷ்ணம்
இருத்தலுக்கோர் சோதனை.
காலமும்
கால்பட்ட நிலமும் அப்படி!
கொண்ட சூட்டிற்கு
களிம்பிட்டுக் கொள்ளும்
விசனத்தில்
தவறவிட்ட நட்சத்திரச்
சங்கதிகள் ஏராளாம்.
உன்னில்... எனக்கான
கடிதங்களையும் சேர்த்து.
என் யூகங்கள்
பொய்க்குமெனில் உன்
பொதுப்பார்வைக்கு நான்
நகர்த்தப் பட்டிருக்கக்கூடும்
உடைந்த சிற்பமாய்
வற்றிய நதியாய்
காய்ந்த மரமாய்
அல்லது....
இன்னொருவன் என்கிற
ஸ்தானம்!
தவிர,
கடிதமெழுதும் மொழி
உனக்கு மறந்துவிட்டதென
நினைக்கவும்
சாத்தியமேது?
**********
satajdeen@gmail.com
No comments:
Post a Comment