
காவு !
---------
மூப்பனை
எங்கள் குடும்பத்தார்
கொடைசாமிஎன்பார்கள்
பந்துக்கள்
படையலிட்டு
காத்தவராயா என
சிலிர்த்துப் போவார்கள்!
காவல் தெய்வமென
உருகினால்
நினைந்த நாழிக்கு
ஜெயமாம்!
பொம்மைச் சாமியாய்
கண்டு
நகைப்போரெல்லாம்
அறை பட
இரத்தம் கக்க நேருமென்பது
வழக்கு!
உச்சி வெயிலுக்கு
உதவும் நிழலால்
அதன்மீது
பிரியமானேன் நான்
பிதுங்கிய விழியும்
முறுக்கு மீசையும்
கேள்விகள் எழுப்ப
சுட்ட மண்ணாலான
பிரமாண்டச்
சிற்பம் தவிர்த்து
எந்த சாமியுமில்லை எனக்கு.
ஊரில் உலா வந்த மூப்பன்
வேண்டி முணுமுணுத்ததாக
எல்லோரும்
என்னைப் பார்க்க
பூசாரிப் பட்டம் கட்ட முயன்றார்கள்
குடும்பத்தின்
மகிழ்ச்சி புரிபட
எனக்கு நானே புதிரானேன்.
மூப்பனைச் சுற்றி
அச்சமூட்டிய
புதர்க் காடுகளை
அகற்றினேன்
அழகுச் செடிகளை
பதியமிட்டு நிழலுக்கு
மரங்கள் வளர்த்தேன்
சுற்றிச் சுவரெடுத்து
வண்ணம் பூசி
இரவிலும் ஒளி வளர்த்தேன்.
போதை நெடி விலக்கி
இரத்த வாடையும் அற்று
வசீகரமாய்
ஸ்தலம் பேண
ஐயன் ஐயனார் என
பலரும் சகஜம் பாராட்டினர்
குழந்தைகளுக்கும்
பூத பயம்
விலகியோட
மூப்பனின் முகம்
மாறிவிட்டது.
புன்னகை கொண்டு
வலம் வந்த மக்களிடம்
அரண்டு போன அது
கும்பிட வருவோரிடமெல்லாம்
பூசாரி விளங்காதவன்
வெட்டிக்கொண்டு வந்து
சாய்க்காதவனெனப் புகார்.
சாமி அப்படி பேசாதென
வாளாதிருந்தேன்
இரத்தக் காவு கேட்பதாக
பந்துக்களும்
மிரண்டனர்
பூசாரியின் இரத்தமே
அதுவென
அசரீரியாய்
கேட்கவும் கலங்கினர்!
எல்லைச் சாமியை
கண்டுவிட
எல்லைக்கே போனேன்
அதன் கையிலிருந்த
கொடுவாளை
கை மாற்றிக்கொண்டு
கழுத்தருகே பிடித்தேன்
நிகழ்வின்
உச்சக் கனவு விடுபட
எழுந்து
பேனாவை உருவி
அதன் கூர்மையை
காகிதத்தில் தீட்டினேன்
அன்புடன் மூப்பனுக்கு
இரத்தம் தெறிக்க
தலையெழுத்து
அங்கே உருண்டது.
*********
satajdeen@gmail
No comments:
Post a Comment