Saturday, March 31, 2007

'கவிஞர் மாலதி' - ஓர் அஞ்சலி.


கவிஞர் மாலதி, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு / தொடர்ச்சியான மருத்து வம் பலனளிக்காமல் 27.03.2007 அன்று மாலை இயற்கையெய்தினார். மறு நாள் அவருடைய பெங்களூர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பெங்களூர் இலக்கிய நண்பர்களும், அலுவலக நண்பர்களும் அஞ்சலி செலுத்தினர். அன்று நண்பகல் அவருடைய உடல் எரியூட்டப்பட்டது.
கவிஞர் மாலதியின் மரணசெய்தி அறிந்து மிகுந்த மனவலி!
*
March 29, 2007 திண்ணையில் பாவாண்ணன், அவர்கள் 'மாலதி மறைவு' குறித்து எழுதியிருந்ததை முதலில் வாசிக்காது தவற விட்டேன். பின்னர் அபிதீன் செய்த தகவல் செய்தார். நிஜத்தை எதிர் கொள்ள முடியவில்லை!
*
சக கவிஞராக மாலதியின் ஆக்கங்களை தொடர்ந்து வாசித்த நாளில், அவரது கலைநுட்ப விஸ்தீரணம் கண்டு மலைத்திருக்கிறேன். கவிஞர் மாலதியை நான் சந்தித்தது இல்லை. அவரது இறப்பு குறித்த திண்ணைத் தகவலில், மாலதியின் புகைப்படத்தைபாவாண்ணன் பிரசுரித்திருந்தார். முதன் முதலில் அவரை அடையாளம் கண்டுகொண்ட நேரம் அவர் இல்லை!
*
கவிஞர் மாலதியின் கவிதைகள், கட்டுரைகள் எனக்குப் பிடிக்கும் என்பது மாதிரி என்னுடைய எழுத்துகள் அவருக்கும் பிடிக்கும். என் மெயில் முகவரி யில் அவர் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் உரத்த சிந்தனைக்கொண்டது.
*
நம் கவிஞர்களில், எனக்கு பிரம்மராஜனை பிடிக்கும் அதே அளவுகோலில் கவிஞர் மாலதிக்கும் பிரம்மராஜனை பிடிக்கும்! ஆபிதீனின் எழுத்தில் நான் ஈர்ப்பு கொண்டவன் என்றால் அவரும் அப்படிதான்! சரியாகச் சொன்னால் அது இன்னும்கூட கூடுதல். அது மாதிரியே, ஜெயமோகனின் 'இலக்கிய அரசியல்' கண்டு முகம் சுழிப்பவன் நான் ! அவரும் அதையே செய்தார்!
*
நான் மதித்த என் சமகாலக் கவிதைக் கலைஞர்களில் அவரும் ஒருவர்.பெண் கவிஞர்கள் வரிசையில் மாலதியை தவிர்க்கவே முடியாது. விடுதலை எப்ப வுமே கவிஞர்களுக்கு இஷ்டமான ஒன்று. கடல், மலை, வனம், வானம் என்று தேடி திரிவதில் இஷ்டம் கொண்டவர்கள். இயற்கையின் ஊடே பயணிப்பதில் தான் அவர்களுக்கு அப்படியொரு ஆர்வம்! இல்லாத உலகத்தைக்கூட விட்டு வைக்கமாட்டார்கள்! இன்றைக்கு கவிஞர் மாலதி புறப்பட்டுவிட்டார். அப்படி யொரு பயணமாக!!
*
- தாஜ்
தமிழ்ப் பூக்கள்.
31.03.07
*
பின் குறிப்பு:
மாலதி எழுத்தில் பிடித்தவைகள் அதிகம். பாதிக்குப்பாதி நிச்சயம். அதில் ஒன்று 'வீடு' என்கிற கட்டுரை. திண்னையில் வெளி வந்ததிருந்தது அது. அவருக்கு அஞ்சலி செய்யும் முகமாக இந்த பக்கத்தில் மீண்டும் 'வீடு'.
நன்றி:
திண்ணை.
*******
வீடு
-------- -
- மாலதி
*
மர நிழல்,வேலியோரத்துப்பூ,ஆற்றங்கரை இப்படி எதுவுமே அறியாத 'நகர விளைச்சல் ' நான்.அதுவும் அழுக்கு நகரத்தின் ஆபாசப் புழுதி படிந்த பிரஜை.
*
வீடு என்றால் விடுதலையாம். கை காலை நீட்டி ஆசுவாசம் பெறுவது வீடு என்கிற இடத்திலாம். இப்படியெல்லாம் யார் யாரோ எழுதிப் படித்த ஞாபகம். இவர்கள் வீடெல்லாம் ரொம்ப நன்றாயிருந்திருக்க வேண்டுமென்று நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
*
முத்துக் குளிக்க முங்குபவரைப் போல 'தம் ' பிடித்துக் கூடியவரை குறைந்த அளவு நேரத்தை நான் வீட்டில் கழித்திருக்கிறேன்.சின்ன இடைவெளி கிடைத் தாலும் பரந்த வெளி உலகில் கலந்து விடத்துடித்திருக்கிறேன். யாராவது கேட்கலாம். என் வீடென்ன அப்படி முள்ளாய்க் குத்தும்படி அன்பில்லாத மனிதர் கொண்டதா ? உறவில்லாத சூழலா ? என்று. இல்லையே !
வீடு வீடாவதற்கு அதில் வசிக்கும் மனிதர்களின் பிரயாசைகள் முக்கியம் என்று சொல்வார்கள். நான் சொல்வேன் மனிதன் மனிதனாவதற்கு வீட்டு டைய அமைப்பும் அம்சமும் முக்கியமென்று.
*
உணவு,உடை, உறையுள் ..இவற்றுள் உறையுள்ளுக்கு அதிக மதிப்பு கொடுக் கப்பட வேண்டுமென்பது என் அபிப்பிராயம்.
*
நினைவு தெரிந்த நாள் முதல் தூசி தூசி தூசி தான் சென்னையில் நான் வசித்தது ஹார்பருக்கும் பிராட்வேக்கும் இடைப்பட்ட பகுதியான மண்ணடி. இளமை ஞாபகங்கள் எல்லாவற்றிலுமே சாக்கடை நாற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை. தொடர் நினைவுகளாகப் பாசி , அசிங்கமான குளியலறை, நரகல் மிதக்கின்ற , மேலெல்லாம் படிந்த முழு இருட்டு டாய்லட்.. சிம்னி
விளக்கோடு தான் பகலிலும் போகும்படி.
*
தி. ஜானகிராமனின் மூன்று கட்டு வீட்டு வர்ணங்களைத் தஞ்சைப் பின்னணி யோடு வாசித்திருக்கிறேன். அவர் செய்த தவம் உயர்ந்த பின்னணிகளை எழுதவாவது முடிந்தது. நான் நகரத்தின் வறுமைக் கோட்டுக்குக் கீழெ பார்த்ததெல்லாம் கட்டை வண்டிகள், உழைப்பாளிகள், மூச்சிறைக்கப் பாரம் சுமந்த விலங்குகள், ஹார்பர் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்குப்
பலியாகி மூளை சிதறிய பாட்டாளிகள் , 'ரேவு ' கரையோரம் பருப்பு மூட்டைகளில் கோணி ஊசி யிறக்கித் திருடிக் கடை விரிக்கும் குடிசைப் பெண்கள்,நடை பாதை வாழ் மக்கள், 'பம்பரக்கண்ணாலே ' பாடிய சேரி வாழ் பரமேஸ்வரி, மூக்குப் பொடி போடும் லிங்கிச்செட்டித்தெரு மசூதி அருகாமை முஸ்லிம் பெண்கள், டஜன் டஜனாகப் பிள்ளை பெறும் ஜெரினா அம்மா ,
சுருட்டு பிடிக்கும் முத்துபேகம்....
*
எதற்குச் சொல்கிறேன் என்றால் கோட்டைக் கொத்தளப் பின்னணி இல்லா விட்டாலும் ,சின்னவீடு, கேட் , தோட்டம் என்று வர்ணிக்கவாவது ஒரு வீடு என் மனசில் நிற்க வேண்டுமே! ம்ஹூம்...இல்லவேயில்லை. வீட்டுக்குள் வாழ்ந்திராத எனக்கு வீட்டைப் பற்றி எதுவுமே எழுதத் தெரியவில்லை.நான் அமர்ந்தது, ஆடியது, பாடியது, எழுதியது, படித்தது, எல்லாம், மல்லிகேச்வரர் கோயில் பிரகாரம், 'அம்போ ' என்று தனித்து விடப்பட்டிருந்த மூலைப் பிள்ளையார் கோயில், லிங்கிச்செட்டித்தெரு மசூதிக் குளப்படி, அரமணக்காரத் தெரு ச்ர்ச்கேட் பள்ளம் , கச்சாலிஸ்வரர் கோயில் அக்ரஹாரத்திண்ணை கள் ,பாரி முனை ப்ஸ் நிறுத்தம் , இன்னும் நிறைய இடங்கள்.
[இன்னும் கூட கனவுகளில் அரமணக்காரத்தெருவை ஓடிக் கடக்கிறேன்]
*
நான் வசித்தது கூவ நதிக்கரைச் சேரியாக இருந்தால் சத்யஜித்ரே பாணியில் உண்மைக்கதை தந்திருப்பேன். கூவநதிக்கரைக் குப்பங்களில் நான் வசிக்க வில்லை. அதை விட மோசமான சேரி ஒன்று சென்னையில் உண்டு. கூவ நதி ஓரங்களாவது வெயில் கண்டு நாற்றமும் அழுகலும் காய்ந்து வீரியம் குறையும். நான் வசித்த சேரி பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்புச் சேரி. மூடி மூடி மறைத்து நாற்றமும் அழுக்குமாய் உள் வைத்துப் பூட்டிய உயர் வகுப்புச் சேரி.
*
புறக்குப்பை வழுக்கலோடு கப்பல் கப்பலாய் அகத்திலும் தூசையும் குப்பை யையும் பாசிப்புழுத்தல் நரகல் அனைத்தையும் சுமந்து மனிதர் வாழும் சேரி. அந்தணச்சேரி.
*
எனக்கு நினைவு தெரிந்து என் முதல் விளையாட்டுத் தோழன் ஜெயிலுக்குப் போனவன் மகன். கடன் பட்டு மீள முடியாமல் ஜெயிலுக்குப் போனதாகச் சொல்வார்கள்.பெரிய வீட்டின் இருட்டுப் பொந்தான பின்புறம் அது. முன்புறம் ஒரு டாக்டரின் கிளினிக் இருந்தது. பேஷண்ட்ஸ் உபயோகிக்கும் டாய்லட் டையே நாங்களும் உபயோகிக்க வேண்டியிருந்தது. அ..அந்த ஜெயிலுக்குப் போன அப்பா எதாவது வெட்டு கொலை பண்ணியிருந்தால் கூட எனக்கு கெளரவமாகத் தோன்றியிருக்கும். அவர் கடன் கொடுக்க இயலாமல் போனது என் சொந்த அவமானம் போல என் ஆறாவது வயதில் எனக்குப் பட்டது.
*
நாங்கள் இருந்த முரட்டு மூன்று மாடிக் கட்டிடத்தின் மாடிகளில் நாகரிகமான பெரிய குடும்பங்களிருந்தன.[டாக்டர் கோதண்டராமையரின் பேத்தி பிரமரா வை சமீபத்தில் ஜெய்ப்பூரில் சந்தித்துப் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன். ஏழைகளுக்கு உதவுகிற பெரும்போக்குடைய மிக நல்ல குடும்பம் அவர்களுடையது.]மாடிகளின் சாக்கடைகள் எல்லாம் எங்கள்
பின்கட்டுக் குடியிருப்பில் தான் சங்கமம்.மாடிக் குடியிருப்புகளுக்கு முத்து, கொட்டை கட்டி என்று இரு வேலையாட்கள் இருபத்து நான்கு மணி நேரமும் போரிங் பைப் அடித்து வருவார்கள். அந்த நாளில் ஆள் கொண்டு அடிக்கவைத்துதான் போரிங் பைப்பில் நீரை மேலே ஏற்ற முடியும். மோட்டார் எல்லாம் வரவில்லையோ வேறே என்ன காரணமோ! தெரியவில்லை.
*
சாக்கடை நாற்றமென்றால் அப்படி இப்படியில்லை. குடலையே பிடுங்குவது போல கும்பி நாற்றம்.பின்னால் மாட்டுக் கொட்டிலும் கொல்லை சந்தும் உண்டு[மாடுகள் இல்லை}சந்தில் ஒரு பேய் இருப்பதாக ரொம்ப பிரசித்தி. வேலைக்காரர்கள் கொட்டிலில் படுத்தால் நெஞ்சில் அமர்ந்து அமுக்குமாம். நானும் ஆனவரை தேடிப் பார்த்தேன். பேயின் தரிசனம் கடைசிவரை
எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பத்தாவது வயதில் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். ஆளை அமுக்குவதெல்லம் சாக்கடை நாற்றம் தான். பேய் இல்லவே யில்லை என்ற யதார்த்தமான முடிவு எனக்கு சோகம் கொடுத்தது. [பின்னா ளில் தைரியமும் தான்.பெங்களூர் சேம்பர் ஆப் காமர்ஸ் பில்டிங் மூன்றாவது மாடிப்பேய்,காஜியாபாத் ஹாஸ்டல் பேய் ,இவற்றையெல்லாம் ஒண்டியாகச் சமாளித்த தைரியத்தை மேற்படி முடிவு தானெ தந்திருக்கமுடியும் ?]
*
என்னுடன் செட்டி ஸ்கூலில் படித்த ருக்மணி பல நாள் சாப்பிடவேயில்லை என்பாள். எப்படிப் பசிக்கும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என்னைப் பசிக்காமல் காப்பாற்றத்தான் என் தாய் தந்தை பின்கட்டு வீட்டை சகித்து வந்தார்கள் என்பது அப்போது புரிந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேனோ தெரியவில்லை.சாப்பாடு பெரியவிஷயம் என்று எனக்குத்தோன்றியதில்லை அப்போது. ருக்மணியோடு அவள் வீட்டுக்குப் போயிருந்த போது எனக்குப் பொறாமை மிகுத்தது.ருக்மணி வீட்டில் சிவப்புத்திண்ணைகளும் பெரிய கூடமும், தூண்கள் வந்த உயரமான தாழ்வாரமும் நடு முற்றமும் ரொம்ப அழகு. அவள் அப்பா பெரியப்பாக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்தாம். தம்புச் செட்டித் தெருவில் வெண்ணைக் கடையை அடுத்து நீண்ட சந்துக்குள் நுழைந்தால் வலது திருப்பத்தில் சடக்கென்று வந்துவிடும். அதில் தான் முதுகு கூனலான ருக்மணியின் கோம்பைத்தங்கை ,கால் வராத தம்பி மற்றும் அதே சாயலில் எண்ணிக்கை தவறும் அளவுக்குச் சிறிதும் பெரிது மாய் நிறைய குழந்தைகள் வசித்தார்கள்..
*
அந்த வீட்டில் பெரிய ஆண்பிள்ளைகள் படுத்த படுக்கையாய் இருந்தார்கள். பெண்கள் எப்போதும் உட்கார்ந்தே இருந்தார்கள்.என்னுடைய அம்மா சுறு சுறுவென்றிருப்பாள். சதா வேலை செய்வாள்.
*
ருக்மணி வீட்டில் என்ன கஷ்டம் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் என் உணவையும் நோட்டுப் புத்தகங்ளையும் அவளோடு பகிர்ந்து கொண்டிருக் கிறேன்.ருக்மணி வீட்டை விட்டு வெளியே வரும்போது வீட்டு ஆட்கள் யாரையும் பார்க்கப் பிடிக்காமல் கம்பீரமாக வெளியே வருவேன்.
*
சாப்பிட ஒன்றுமில்லாவிட்டல் கஷ்டம் என்பது எனக்கு உறைக்காத அளவு க்கு இருந்தன என் அம்மா செய்யும் மஞ்சள் கலர் பொங்கல் புளிப் பச்சிடி பருப்புத் துவையல் ரசம் ,இவையெல்லாம். ருக்மணி ருசித்து முகமலர்ந்து சாப்பிடும் போது அந்த ரசனையின் மர்மம் புரியாமல் வியந்து பார்ப்பேன்.
சாப்பிட நிறையக் கிடைத்திருந்தது என் குட்டிக்குடும்பத்துக்கு. வீடு மட்டும் நல்லதாகக் கிடைக்கவேயில்லை. நரகம் போன்ற இருட்டு கவ்விய அந்தப் பின்கட்டு வீட்டைவிட்டு ஒரு ஸ்டோருக்குக் குடி போனோம். இதில் டாக்டர் வீட்டு பாத்ரூம்களில் போல உதிரமும் பஞ்சும் ஒருவித நெடியும் , மஞ்சள் கறை படிந்த பீங்கான்,எச்சில் குப்பி மூத்திரப் பாத்திரம் ரத்தம் உறிஞ்ச
அட்டைகளுடன்....இல்லை. நாற்றம் குடலை உருவும் நாசகாரப் பிரதேசங்கள் இல்லை. மொட்டைமாடி இருந்தது. புறாக்கூடு போன்ற சின்ன சின்ன போர்ஷன்களும் பொதுவான குளியலறை டாய்லட்டும் இருந்தன. ஸ்டோரில் சுமார் நூறு பேருக்கு மேல் வசித்தார்கள். ஆணும் பெண்ணுமாய். அவல வாழ்க்கை. சுற்றுப் புறத்தை அசிங்கப் படுத்தி தம் தம் போர்ஷன்களைச்
சுத்தமாய் வைத்துக் கொண்டார்கள். சுறுசுறுப்போடு சினிமா போய் வந்தார்கள் பிரபாத் பிராட்வே கொட்டகைகளில். சமையல்காரர்கள், புரோகிதர்கள், புரோக்கர்கள், பிளாட்பார டைப்பிஸ்டுக்கள் என்பது போல பல அலுவல் காரர்கள். அத்தனை பேரும் அந்தணர்கள். தோளுக்கும் இடுப்புக்குமான அழுக்கு நூலைத் தவிர அந்தணக் குணம் எதுவுமே அறியாதவர்கள். தப்பு, தப்பு... அப்படிச் சொல்லிவிட முடியாது. அந்தணருக்கே உரிய கோழைத்தனமும் வலியாரைக் கண்டால் காட்டுகிற பசப்பும் அத்தனை பேருக்கும் இருந்ததே!
*
ஸ்டோர் குடித்தனங்களில் எல்லா வகைத்துயரமும் வக்கிரங்களுமிருந்தன. உடம்பில் பதினெட்டு வளைசல் கொண்ட பொன்னக்காக் கிழவி, வயதுக்கு வந்த அரைப் பைத்தியப் பெண்,வயதான கன்னிப்பெண்கள்,அவர்கள் வீட்டுக்கு தினப்படி கைப்பையுடன்வருகை தரும் ரெகுலர் ராத்திரி விசிட்டர், மெஸ் வைத்து இளைஞருக்குச் சாதம் போட்டு த் தன் பெண்களுக்குக் காதல் திருமணம் அமையாதா என்று ஏங்கிய தாய், தன் மூன்று குழந்தைகளுக்கும் பேச்சு வராமல் பரிதவித்த பெற்றோர், மனைவியைப் பறி கொடுத்து பிள்ளை களோடு பாடு பட்ட தந்தை,ஒரு பெரிய மனிதனின் சின்னக் குடித்தனம், இப்படி எத்தனையோ!
*
ஆண்பிள்ளைகளில் ஒருவனும் குடிகாரன் அல்லன். ஆனால் குணக்கேடன். எந்த நல்ல அம்சத்தையும் ரசித்து ஏற்றுக்கொள்ள இயலாத அளவுக்கு அந்த ஆண்களின் உடல்களில் விரசங்கள் புரையோடியிருந்தன.நிறைய காட்டன் மார்க்கெட்டு கேஸ்கள்,நிறைய அவுட்டுப் பேச்சு,வெத்துவேட்டுக்கள்,திண்ணை தூங்கிகள்.
*
பெண்களிடையே மெலிதான விபச்சாரமிருந்தது. அப்பட்டமில்லாத அரசல் புரசல் விபச்சாரம். குணக்கேடான சமாச்சாரங்கள் அவ்வப்போது கண்ணீல் பட்டவாறு இருந்தன. அவசரக் கல்யாணங்கள் நடந்தன. பத்து மாதங்களுக்குள் ளான குழந்தை வரங்கள் கிடைத்தன. யாரோ ஒருவனின் மனைவி இன்னொ ருவனோடு பாத்ரூமிலிருந்து அரையிருட்டில் வெளிவந்ததைப் பார்த்த சாட்சி யங்களிருந்தன. நிறையப் பையன்கள் ஓடிப் போனார்கள். பெண்கள் வயதுக்கு வந்தார்கள். ஒரு நல்ல அம்சம் அந்தணச் சேரியில். எந்தப் பையனும் நிச்சய மாக எந்தப் பெண்ணையாவது இழுத்துக் கொண்டு ஓடிவிட மாட்டான். அந்த
பலம் எங்கள் சமூகத்து ஆண்பிள்ளை முதுகில் வந்ததே கிடையாது. அதனால் தான் எல்லாப் பெண்களும் எங்கள் வீடுகளில் முப்பத்திரண்டு வயசு வரை கன்னியாகவே மனசு கெட்டு இருந்து வந்தார்கள் பத்திரமாக.
*
'செளதாவுக்கு மார் அழகே போதும் ' என்பது மாதிரியான பேச்சுக்களை நடுக் கூடத்தில் பேசுகிற இல்லத்தரசிகளால் தானோ என்னாவோ விடலைகளின் பார்வைகளீல் சேஷ்டைகளில் விபரீதம் கலந்திருந்தது.
*
யாரோ எனக்குக் காதல் கடிதம் எழுத நானும் கவிதை வசப்பட என் தாய் தந்தை பயந்து போய் தாத்தா வீட்டில் சரண் புகுந்தார்கள்.
*
குத்து மதிப்பாய் ஒரு வாடகையையும் நாங்கள் சாப்பிடத் தயாரிக்கப் பட்ட உணவில் பெரும்பகுதியையும் எங்கள் சண்டைக்காரச் சித்திகள் கூட்டம் ஜீரணித்தது. என் தாயும் தகப்பனும் எப்போதும் போல ஏழையாகவே இருந்த னர். அவர்கள் அப்படி ஏழையாய் இருப்பதற்கு இன்னின்ன காரணங்கள் என்ப தை என் தாத்தா வீடு வரிசையிட்டுச் சொல்லியும் என் பெற்றோர்கள் பரோப காரங்களைக் குறைத்துக்கொள்ளவில்லை அத்தை குடும்பத்துக்குச் செய்வதை யும் நிறுத்திக் கொள்ளவில்லை. என் தாயும் சொத்தில் தன் பங்கைக் கேட்டுச் சித்திமார்களின் கொழுப்பை அடக்கவேயில்லை. கேளாமல் கொடுக்கப்படுவது மட்டுமே ஏற்கப் படும் என்ற கொள்கை. இப்படி அப்படியாக நான் மாநிலக் கல்லூரியில் எம் எஸ்ஸி முடித்த வருடம் விஜிபி தவணை முறையில் ஒரு மர்பி மினி பாய் டிரான்ஸிஸ்டர் வாங்குமளவுக்குப் பணக்காரர்களானோம்.
பின்னால் வேற்று மாநிலங்களில் பெரிய நகரங்களில் குடியிருந்தேன். குளிரு க்கு அடைத்துக் கட்டப்பட்ட சமையல் அறைகளிலும் குளியல் அறைகளிலும் மூச்சு விட முடியாமல் அவஸ்தைப் பட்டேன். நான் உப்புமாவுக்குத் தாளித்து விட்டால்போதும். வீட்டின் எந்த மூலைக்கு வந்தாலும் உப்புமா வாசம் மணிக் கணக்கில் நின்றது. மோர் மிளகாய் வறுத்து விட்டால் தீர்ந்தது.
*
ஆதியில் வீட்டை விட்டு வெளியே ஓடினால் நூலகமே புகலாயிருந்தது எனக்கு. மறைமலையடிகள் நூலகம் முதல் பல நூலகங்கள் நடை தூரத்தில் இருந்தன. இப்போதெல்லாம் அண்மையில் நூலகமே வாய்ப்பதில்லை. மாலை களில் கோகலே ஹாலில் இலக்கியச்சொற்பொழிவுகளுக்குப் போக முடியும் . க.த. திருநாவுக்கரசு இன்றும் காதில் ஒலிக்கிறார். நடக்கிற தூரத்தில் அண்ணா மலை மன்றம். சோ ,பாலச்சந்தர் நாடகங்கள், மனோகர் மேடையதிசயங்கள். [பத்மா மாமி ஸீஸன் டிக்கட் உபயம்] கச்சாலீச்வரர் கொயிலில் கதா காலட் சேபங்கள் இப்படி எத்தனையோ கிடைத்தன வெளியில்.. இப்போதைய பெரிய நகரங்களில் மாலை வாழ்க்கை மத்திய தரத்தினருக்கு வெகுவாக மறுக்கப் படுகிறது.
*
சென்னை வரும் நாட்களில் கடற்கரை தேட நினைத்ததுண்டு. கரையோரச் சமாச்சாரங்கள் கடலையே மறக்க வைத்தன.சுத்தமான சூழலுக்காக மனிதன் தன் ஆயுள் நாள் சேமிப்பைத் தர வேண்டிய காலம் வந்துவிட்டது.
*
சுமாராக அந்தஸ்து[ ?] வந்த கால கட்டத்திலும் ஏதோ கவனக் குறைவு. காலத் தின் கட்டாயம். இரு வருடங்களுக்கு ஒரு சிமெண்டுக் கிடங்குக்கு அருகில் வசிக்க நேர்ந்தது. சிமெண்டின் நுண்ணிய துகள்கள் வீடு முழுவதும் ஒரு பூச்சு போல,இறையுணர்வு போல படர்ந்து போயின. எப்போதும் கரண்டு கட் வேறு. முழு இருட்டு டாக்டர் வீட்டுப் பின்கட்டை நினைவு படுத்தியது. வாசலில் ஒரு சொறி நாய் வேறு படுப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தது. அதற்கு வந்திருந்ததைப் போன்ற சொறியை நான் கண்டதேயில்லை. கறுப்பு நிற ரோமம் முழுக்க உதிர்ந்து ,ஒரு முழு அப்பள வடிவில் கொதகொதவென்று சிவப்பு மாமிசம் வெளித் தெரிந்தது. அத்தனைக்கும் அந்த நாய் அலட்டவே யில்லை. லேசான முனகலோடு சரி. என் வீட்டுப் படி தவிர வேறு எந்தப் படியருகிலும் அது போனதுமில்லை.
*
இந்த வீட்டைத் துறந்து அடுத்த வீட்டுக்கு என் சம்பளத்தில் பாதியை வாட கையாய்க் கொடுக்கத் துணிந்த போது வீட்டில் யாருக்கும் இஷ்டமில்லை. எனக்கு சுவாசம் தான் அப்போது முக்கியமானதாயிருந்தது.
*

இவ்வளவுக்கும் ஒரு வீட்டைக் கட்டியிருக்கக் கூடாதா என்று கேட்பிர்கள். கட்டினேனே!புற நகரில் பார்த்தீனியம் சூழலில் இருந்த என் வீட்டுக்குள் நான் காலை வைத்த நிமிடமே எனக்கு ஆஸ்துமா வந்தது. ஆக்ஸிஜன் வைக்க வேண்டி வந்தது. விட்டுப் பிரிந்தேன் என் வீட்டை.
*
ஆக மொத்தம் கண்ணுக்கு அசிங்கமான அத்தனையையும், கருப்பு,மஞ்சள், பச்சை,சிவப்பு நிறங்களில் பார்த்து விட்டேன். மூக்குக்குப் பிடித்தமில்லாத அவ்வளவு நாற்றங்களையும் அனுபவித்தாகி விட்டது.
*
உதறிய சாக்குத் தூசு, கோலமாவுத்தூசு, மாடியிலிருந்து விழும் குப்பைத்தூசு, சாம்பல் தூசு, சிமெண்டுத் தூசு,ஓடும் வண்டிகள் கிளப்பிய தூசு, அரிசி பருப்பு புடைத்த தூசு, காரை விழும் தூசு, ஓட்டு மேலண்ணத்தூசு, மாடிப்படி,கைப்பிடி, கேட் கதவுகளில் உட்கார்ந்து கையில் நறநறக்கும் தூசு,இப்படி தூசிலேயே வாழ்ந்திருக்கிறேன்.
*
மனிதனுக்குப் பசிக்கு உணவு போதும். உடுக்க ஏதோ போதும். உறையுள் உடல் வாழ மட்டும் போதாது. உள்ளமும் வாழுமளவு வசதியான உறையுள் வேண்டும். அது தான் 'வீடு '
*
******
*
மாலதி[ சென்னை மாநகரம் பற்றின The Unhurried city யில் ஆங்கில மொழியாக்கம் வெளியிடப்பட்டுள்ளது]
*
*******

No comments: