Thursday, March 08, 2007

பெரியார் வருகிறார்!! - தாஜ்..

'பெரியார்' வருகிறார். சினிமாக்கோலமாக. பெரியாருக்கு நமது சினிமா ஆகாது. ஆனாலும் அதற்குள்தான் இன்றைக்கு அவரை வரவழைக்கிறார்கள். நமது சினிமாவின் போக்கில் முகம் சிவந்து, கடுமையாக அவர் சாடிய சாடலெல் லாம் இன்னும் அப்படியே பதிவாக இருக்கிறது. அன்றைக்கு அவருடன் இருந்தவர்கள் சிலர் தமிழ்ச்சினிமாவில் ஈடுபாடு கொண்டிருந்த போ தும் தனது கருத்தை அவர் மாற்றிக் கொண்டவரில்லை. சமூகத்தை மடமையில் ஆழ்த்தும் முதன்மைகளில் ஒன்றாகவே அதை அவர் பார்த்தார். பக்தி, மூடத் தனம், விடாப்பிடியான பழமை, பெண்ணடிமைத்தனம், வெளிப்படையான இனக்கவர்ச்சி என்ப னவைகள் நம் சினிமாவில் மலிந்து கிடந்ததில் முகம் சுழித்தவரவர். தமிழ்த் திரைப்படம் ஒன்றின்100 வது நாள் விழாவிற்கு அவரை
கலந்துக்கொள்ளவைக்க வற்புறுத்தி அழைத்து வந்தபோது, தமிழ்த் திரைப் படங்களினால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளையும், அதன் முரண்களையும் ஒளிமறைவில்லாமல் அந்த மேடையிலேயே பேசினவரவர்.


இன்னொருப் பக்கம் சமூக இழுக்குகளை சாடிய முற்போக்கான நாடகங்களு க்கு தடையில்லாமல் பலமுறை தலைமை ஏற்றிருக்கிறார், பலவற்றைப் பாராட்டியும் இருக்கிறார். அதில் நடித்த சில நடிகர்களுக்கு பட்டங்கள்கூட தந்திருக்கிறார். மேடை ஊடகங்கள் என்கிறவகையில் நாடகமும், சினிமாவும் ஒன்றின் இரண்டுப்பக்கங்களே. அந்த வகையில் பார்த்தால், முற்போக்கான
அந்த மேடைநாடகங்கள் மாதிரி நமது சினிமாவும், மூடத்தனங்களிலிருந்து நம் மக்கள் விடுப்பட உதவக்கூடியதாக இருந்திருக்கும் பட் சம் அதை அவர் பாராட்டவே செய்திருப்பார்.


திரைப்படத்தில் பெரியார் என்பது புதிய செய்தியல்ல! 'இயக்குனர் ஞானசேக ரின் பெரியார்' என்பதுதான் புதிய செய்தி. நடிகை ஜெயதேவியும், இயக்குனர் பிரபாகரனும் பெரியாரை திரையேற்றிக் காட்டியிருக்கிறார்கள். பெரியாரு டைய பல்வேறு கருத்தாக்கங்களைக்கூட கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தொடங்கி, இன்றைய சத்தியராஜ், மணிவண்ணன், விவேக் வரையிலான பல
கலைஞர்கள் திரையில் மக்கள் வரவேற்புடன் வெளிப்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கூட அந்தப் பட்டியலில் இருந்திருக் கிறார். நடிகர்வேள் எம்.ஆர்.ராதா அந்தவகையில் திரையில் புரட்சி செய்தவ ராக அறியப்படுகிறார். ஆனால் இந்த சமூகம் அவ்வளவையும் ரசித்து, சிரித்து, உள்வாங்கி ஜீரணித்துவிட்டு தன்போக்கில்தான் போய்கொண்டிருக்கிறது. 'இந்த' மகத்துவம் பொருந்தியச் சமூகத்திற்காகத்தான் இன்றைக்கு இந்த 'பெரியார்' படம்! நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.


என் மாதிரியே பெரியாரின் பெரும்பான்மையான கருத்துகளில் மதிப்புக் கொண்ட என் நண்பர் ஒருவரிடம் 'பெரியார்' திரைப்படம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, ஞானசேகரின் திறமையின்மீது அபார நம்பிக்கைக் கொண்டவராகவே பேசினார்.'காந்தி' இயக்கிய ரிச்சட் அட்டன்பாரோ 'ரேன்ஞ்'ஜுக்கு அவரை பார்க்கிறமாதிரி தெரிந்தது. 'காந்தி' படத்தை நண்பர்
பார்த்திருக்கக்கூடும். ஆனால் 'காந்தியில்' ரிச்சட் அட்டன் பாரோவை பார்த்திருப்பாரா? சந்தேகம்தான்.


ஞானசேகரின் முந்தையை மூன்றுப்படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். நம் திரைப்பட இயக்குனர்களுக்குள் கவனம் கொள்ளத்தக்கவர் என்பதில் உடன்பாடு உண்டு. அவருடைய 'முகம்' தமிழ்த் திரையில் அதுவரை காணாத முகம்தான். மேஜிக்கல் ரியலிஸத் தன்மைக் கொண்டப் பின்னல் அது. அதன் பிரமாண்ட தோல்வியினால், அவரே கூட இனியொருத்தரம் அப்படியொரு
திரைப் படத்தை எடுக்க முனையமாட்டார். அவரது மற்றைய இரண்டுப் படங் களான மோகமுள்ளும், பாரதியும் பாராட்டவேண்டிய சாதனை வடிவங்கள். சந்தேகமில்லை.

திரு.ஜானகிராமனின் படைப்பான 'மோகமுள்' நாவலை, திரைக்கதையாக மாற்றியபோது ஞானசேகரன் அதிகம் சிரமம்பட்டிருக்க மாட்டார். பாலின மையமும், இசைப் பிரவாகமும் அந்த நாவலின் அடித்தளமாகிப்போனதினால், தமிழ்த் திரைப்படத்திற்கேற்ற சட்டைத் தைக்க அதுவே அனுகூலமாகக் கூடி வந்திருக்கும். ஆனால். 'பாரதி' படத்திற்கான திரைக்கதைக்கு அவர் அதிகம் அவ ஸ்த்தைப் பட்டிருப்பார். அந்தப்படத்தைப் பார்த்தபோதும் அப்படித்தான் உணர்ந்தேன். என்றாலும் கவிதையும், இசையும் பாரதி' திரைக்கதைக்கு ஓரள விற்கு ஒத்திசைவாய் கூடிவந்திருக்கும்.


பெரியாரின் எரிமலையான வரலாற்றை தமிழ் திரைப்படத்திற்கேற்ற சட்டை யாகத்தைக்க இயக்குனருக்கு எந்தஅனுகூலமும் கிட்ட வாய்ப்பே இல்லை. என்றாலும் இன்றைக்கு பெரியார் படத்தின் பாடலொன 'இசை நயம்கூடியப் பாடல்களைக் கேட்கிறோம்! அந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள நடனக் காட்சி களின் 'ஸ்டில்'களைக்கூடப் பார்க்கிறோம். இதெல்லாம் 'பெரியார்' திரைப் படத் தில் எந்த ரூபத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. பெரியாரின் இளமைக்காலப் பரிமாணத்தில் இதற்கெல்லாம் இடமிருந்தது என்றாலும், 'பெரியாரை' இன்னொரு வியாபாரத் தமிழ்ப்படத்தின்
வரம்புக்குள் கொண்டு வந்திருப் பதில், ஞானசேகரன் தன் அடையாளம் குறித்து தனித்து பெருமைப்பட முடியுமா? இந்தப் படத்திற்கும் தமிழ்த் திரைப் படத்திற் கேர்ப்ப திரைக்கதைச் சட்டையை அப்படி இப்படியென்கிற அளவில் தைக்க முனைந்திருப்பார்கள் என்றால்.... நிச்சயம் பார்வை யாளர்கள் மத்தியில் அதையொட்டிய முரண்கள் நெருடவேச் செய்யும்.


Lion of the Desert / The Message போன்ற புரட்சி நாயகர்களின் படங்களை இயக் கிய 'முஸ்த்தஃபா அக்காட்'க்கு இப்படி சட்டைத் தைக்கும் தொல்லை இல்லா மல் போனதால்தான் அவரால் அப்படியொரு பிரமாண்டமான நிஜத்தை நிஜமாகவே சொல்ல முடிந்தது.


சென்ற மாத சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தபோது, அங்கே அன்றைக்கு நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழா விற்கு திரு.சத்தியராஜை வந்திருந்தார். அங்கேவைத்து அவரிடம் பேசமுடிந்தது. பேசியபோது 'பெரியார்' திரைப் படம் குறித்து மிகவும் திருப்திகரம் தெரிவித்தார். அந்தப்படத்தில் பங் கெடுத்துக் கொண்டதில் அவருக்கு ஏகத்திற்கும் சந்தேஷம்.


"தந்தைப் பெரியார் ஒரு நாய் வளர்த்தாரே... படத்தில் அதையெல்லாம் காட்டி யிருக்கிறார்களா?" என்று ஒருவர் கேட்டார். "சீட்டா... சீட்டா......." என்றுவிட்டு, சீட்டா என்றப் பெயர்கொண்ட அந்த நாய் படத்தின் ஒரு காட்சியில் வருகி றது என்றார். மேடையில் அவர் பேசியப் போது, "இந்தப் படத்தில் நடித்ததி னால் எனக்கு பல திக்கில் இருந்தும் பாராட்டுதல்கள் கிடைத்துக் கொண்டி ருக்கிறது" என்றார். பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர் மேடை யருகில் வந்து, வள்ளலார் ராமலிங்க அடிகளாராக அடுத்து நீங்கள் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். சத்தியராஜும் அந்த கோரிக் கையை ஏற்றுக்கொண்டவராகத் தனது பேசைத் தொடர்ந்தார். என் மனக்கண் ணில், தலைவழிய வெள்ளை முக்காடுப் போற்றிக்கொண்டு, ஏழடி உயரத்திற்கு ஒரு பெரியவர் திரும்பத் திரும்ப "அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை" சொல்லிக்கொண்டிருந்தார்.

புதிய பார்வை இதழ்க்கு பேட்டி தந்திருக்கும் ஞானசேகரனும் தனது 'பெரியார்' படம் குறித்து திருப்தியையே தெரிவித்திருக்கிறார். அந்தப் படத்திற்காக, பெரி யார் சம்மந்தப்பட்ட எழுத்திலிருந்து அவர் சேகரித்தக் குறிப்புகளை வைத்து
பெரியார் பற்றி 10 படம் எடுக்கலாம் என்றிருக்கிறார். இன்னொரு பதிலில், "என்னுடைய பார்வையில் 1950 க்கு முன்பு பெரியார் உலகளாவிய சிந்தனை யாளராக உருவெடுத்திருகிற விதத்தைப் பற்றி இந்தப் படத்தில் சொல்லியிரு க்கிறேன். கடவுள் எதிர்ப்பாளராகவும், பார்ப்பன எதிர்ப்பாளராகவுமே அவர் பார்க்கப்பட்டிருந்தாலும் அவை மட்டுமே பெரியாரின் அடையாளங்கள் அல்ல. இவற்றிற்குப் பின்னால் அவர் பெரும் மனிதாபிமானி. சகமனிதர்கள் ஏற்றத் தாழ்வுக்குட்படுத்தப்பட்டுக் கீழான நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்களே என்று, அதற்கு எதிரான தார்மீகக்கோபம்தான் அவருடைய வாழ்வின் மையம். இந்தப் படத்தில் சொல்லப் பட்டிருப்பதும் அதுதான்" என்கிறார். "படம் பார்த்த பக்திகரமான பெண்மணி ஒருவர், ஒரு புதுப் பெரியாரைக் காட்டியிருக்கிறீர் கள்" என்று தன்னிடம் கூறியதாக இன்னொருயிடத்தில் குறிப்பிட்டுச் சொல்லி யிருக்கிறார்.


ஆக, திரைக்கு வர இருக்கிற பெரியாரை நம்மால் ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது. பிரச்சனைகள் அற்ற முறையில் பெரியாரைக் காட்ட விரும்புகி றார் களோ என்றும் படுகிறது. 'டபுள் ஃபில்டர்' செய்யப்பட்ட பெரியாரைத்தான் நாம் காணமுடியும் போலிருக்கிறது. 'எதிர்ப்பிற்கு அஞ்சி அடக்கி வாசிப்ப தென்பது' நமது பெரியார் அறியாத ஒன்று. இந்தத் திரைப்படப் பெரியார்
எப்படி என்று முழுமையாகத் தெரிவில்லை. அனுமானத்திலான என் கணிப்பு தேற்கும் என்றால்... சந்தேஷப்படும் முதல் ஆளே நானாகத்தான் இருப்பேன். தவிர, ஞானசேகரன் பெரிதாக ஏமாற்றமாட்டார் என்கிற நம்பிக்கையும் இருக்கத்தான் செய்கிறது. விரைவில் 'பெரியார்' வரத்தானே இருக்கிறார்! வரட்டுமே. பின் பேசினால் போச்சு!

****

புதிய பார்வை இதழில் வந்திருந்த இயக்குனர் ஞானசேகரனின் பேட்டியை கீழே தட்டச்சு செய்திருக்கிறேன். இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட மற்றும் சொல்லப்படாத செய்திகளின் விசாலம் கருதி அந்த பேட்டி இங்கே முக்கிய மாகிப்போனது. சுருக்கப்பட்ட வடிவில்தான் அது இங்கே இடம்பெறுகிறது. 'பேட்டியின் முழுமைதான் புரிதலின் தீர்க்கத்திற்கு ஏதுவாக இருக்கும்' என்று கருது பவர்கள் 'புதிய பார்வை, பிப்ரவரி 16 - 28, 2007' இதழைத் தேடிப்பிடித்து வாசிக்கலாம்.

****

பெரியார் படம் எடுப்பதே ஒரு சவால்தான் -
இயக்குனர் ஞானசேகரனுடனானப் போட்டி.
--------------------------------------------------------

இலக்கியத் தொடர்பு எந்த வயதிலிருந்து தொடங்கியது?

சிறு வயதிலிருந்து என்னுடைய ஆர்வம் நடிப்பிலேயே இருந்தது. மூன்றாம் வகுப்பிலேயே மேடையேறி நடித்தேன். 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் அவ்வளவு ஈடுபாடு. அந்தப் படத்தின் துவக்கத்திலிருந்து கடைசி வரை உள்ள கட்டபொம்மனின் வசனங்களை மறக்காமல் பேசுவேன். அதனால் எட்டாவது வகுப்பு வரை என்னை 'கட்டபொம்மன்' என்றே கூப்பிடுவார்கள். எங்கள் பகு தியில் உள்ள கிராமங்களில் நடக்கும் திருமணங்களில் திருமணத்திற்கு முந்திய நாளே மைக்செட் என்று தடபுடலாக இருக்கும். முந்திய நாளில் மைக்கை என்னிடம் கொடுத்துவிடுவார்கள். நான் சரளமாக கட்டபொம்மன் வசனம் பேசுவேன். நடித்துக்காட்டுவேன். என்னுடைய ஈடுபாடு வேறு திசையில் திரும்பியதற்கு அடிப்படை இதுதான். எங்கள் ஊரில்உள்ள நூலகம் என்னைப் படிக்க வைத்தது. பாகுபாடே இல்லாமல் ஏராளமான புத்தகங்களை வெறிபிடித்தது போல வாசிப்பேன். அப்போது அங்கிருந்த என்னுடைய சம வயது நண்பர்களிடம் மற்றவகளைவிடக் கூடுதலாக யார் படித்திருக்கிறோம் என்கிற வீராப்பெல்லாம் உண்டு. நானும் அதற்காகவே போட்டி மனப்பான்மை யில் வேலூருக்குப் போய் அங்குள்ள நூலகத்தில் படித்துவிட்டு வருவேன்.
ஏழாம் வகுப்புப் படிக்கும் போது தனிச்சுற்றுக்காக கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன். ஓவியங்கள் வரையும் பழக்கம் அதன் மூலம் வளர்ந்தது. கவிதை கள் எழுதிக்கொண்டிருந்தேன். அவை சிலபத்திரிகைகளிலும் வெளிவந்தன. இருந்தும் சினிமாதான் என்னுடைய கனவாக இருந்தது. சிவாஜி நடித்த படங்கள், ஸ்ரீதர், பாலசந்தரின் படங்கள் அப்போது மிகவும் பிடித்திருந்தன.
திருப்பத்தூர் கல்லூரிக்குப் போனதும் எதனாலோ இந்தப் படங்கள் எல்லாம் பிடிக்காமல் போனது.


எதனால் அந்த மனமாற்றம் உருவானது?

அப்போது டேவிட் லீனின் 'ஸாண்ட் பெபிள்ஸ்' ஆங்கிலப் படத்தைப் பார்த் தேன், அந்தப் படம் ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. அப்போதெல்லாம் ஒரு படம் எனக்குப் பிடித்துவிட்டால் அதே படத்தைத் தொடர்ந்து மூன்று காட்சிகளும் பார்ப்பது வழக்கம். அதன்படி இந்தப் படத்தையும் தொடர்ந்து பார்த்தேன். கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த ஒருவனின் கதை மிக அழகாகச்
சொல்லப்பட்டிருந்தது. தமிழின் வழக்கமான செண்டிமெண்ட்களை உடைத்த மாதிரி இருந்த அந்தப்படம் தொடர்ந்து பல ஆங்கிலப் படங்களைப் பார்க்கத் தூண்டியது. பார்க்க ஆரம்பித்தேன். சென்னைக்கு சத்யஜித்ரேயின் 'பிரதித்வந்தி' படத்தைப் பார்ப்பதற்காகவே வந்தேன். ராஜகுமாரி தியோட்டரில் பார்த்தேன். அப்படிப் பார்த்த பல திரைப்படங்கள் எனக்குள் வேகத்தை உருவாக்கின. எப் படியாவது ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்துவிட வேண்டும் என்கிற உணர்வு கூடிக்கொண்டிருந்தது. கல்லூரியிலேயே சற்று மாறுதலாக மூன்று நாடகங் களை நிகழ்த்தினேன். பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு இயக்க ஆரம்பித்து விட்டேன்.


இதற்கிடையில் எப்படிப் படித்தீர்கள்?

ஆச்சரியமான ஒரு முரண்பாடு என்னவென்றால், இந்த ஈடுபாடுகள் ஒருபுற மிருந்தாலும் நான் நன்றாகப் படிப்பேன். 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மார்க் வாங்கி விடுவேன். அதனால் என்னதான் சுற்றினாலும் படிப்பில் கெட் டிக்காரனாக இருக்கிறேன் என்பதில் எங்கப்பாவுக்குத் திருப்தி. உதவாக்கரை என்று என்னுடைய விருப்பத்தை அவரால் உதறிவிட முடியவில்லை.
பி.எஸ்.சி. முடித்ததும் வீட்டில் ஒருவழியாகச் சமாதானப்படுத்தி விட்டு சென் னைக்கு வந்து ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து விட்டேன். கிளம்பும்போது, 'போய்ச்சேரு சினிமா உனக்குச் சரிவரும்னு எனக்குத் தோணலை அப்படி உனக்கு அது சரிப்படாதுன்னு உனக்கே தோணினால் நான் சொல்றதைக் கேட்டு நீ எம்.எஸ்.சி. யில் சேர்ந்துடணும்' என்று என்னிடம் வாக்கு வாங்கிக் கொண்டார் அப்பா. அதே மாதிரி என்பது சதவிகிதத்திற்கு மேல் மார்க் எடுத்து வந்த என்னைப் பார்த்து இயக்குனர் பஞ்சு 'இவ்வளவு மார்க் எடுத்துட்டு இதுக்கு வந்திருக்கியே சினிமாவுக்குள் நீ நுழையணும்னா எங்கேயிருந்தாலும் நுழையலாம்' என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். மீறி ஃபிலிம் இன்ஸ்டிடியூட் டில் சேர்ந்தபோது ருத்ரய்யாவெல்லாம் சக மாணவர். மூன்று மாதங்கள்தான் அங்கு இருந்தேன். சினிமாவைத் துவக்க நிலையிலிருந்து கற்றுக்கொள்கிற நிலையே அங்கிருந்தது. என்னுடைய கூடுதலான எதிர்பார்ப்புகளுக்கேற்ற சூழ்நிலை அங்கு இல்லை. சலிப்பு வந்து அங்கிருந்து விலகி சென்னை பிரசி டென்சி கல்லூரியில் எம்.எஸ்.சி. யில் சேர்ந்து விட்டேன். அங்கு போயும் சினிமா ஆர்வம். நல்ல மலையாளப் படங்களைப் பார்த்தேன். சென்னையில் உள்ள ஃபிலிம் சொஸைட்டி மூலம் பல படங்களைப் பார்க்க முடிந்தது. இரு ந்தும் சினிமாவைப் பற்றியத் தெளிவு ஏற்படவில்லை.


எந்த முன்னணி இயக்குநரிடமாவது உதவி இயக்குநராகச் சேரவேண்டு என்று தோன்றவில்லையா?

அந்த எண்ணம் தோன்றவில்லை. அந்தச் சமயத்தில் இலக்கியப் பரிச்சியம் ஏற்பட்டது. பல சிறுபத்திரிகைகளுடன் தொடர்பு உருவானது. அந்தச் சமயத் தில் என்னுடைய அப்பா காலமாகிவிட்டார். அவருடைய மரணத்தைப் பலத்த அடி மாதிரி உணர்ந்தேன். வீட்டு வருமானத்தைக் கவனிக்கவேண்டிய அவசி யம் ஏற்பட்டு, சினிமா ஆசையையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டுப் படிப் பில் கவனம் செலுத்தினேன். படித்து முடித்ததும் பம்பாயில் 'இண்டலி ஜன்ஸ் பீரோவில்' டெக்னிக்கல் அதிகாரியாக வேலை கிடைத்தது. நேரே பம்பாய்க்குப் போய்விட்டேன். அங்கிருந்த தமிழ்ச் சங்கம், நாஞ்சில் நாடன் போன்ற எழுத்தாள் நண்பர்கள் என்று நல்லதொரு சூழல். தமிழகத்திலிருந்து விலகித் தூரத்திற்குப்போன பிறகே பலவற்றில் தெளிவு கூடியது. விலகி நின்ற நிலையில், நம்மால் செய்யக்கூடிய விஷயங்கள் குறித்துக் கணிப்புகளு க்கு வர முடிந்தது. அது எனக்கு முக்கியமான காலகட்டம். பல மராட்டிய நாடகங்களைப் பார்த்தேன். ஹிந்தியில் நாடகம் நிகழ்த்துபவர்களுடன் தொடர்பு உருவானது. ந.முத்துசாமியின் 'நாற்காலிக்காரர்' நாடகத்தை அங்கே நிகழ்த்தினோம். நாடகம் பற்றிய கவனம் கூடி 'வயிறு' என்கிற நாடகத்தை எழுதி மேடையேற்றினேன். வேலை தொடர்பாக டெல்லிக்கு அடிக்கடி சென்று வரவேண்டியிருந்தது. அங்கிருந்த விமர்சகரான வெங்கட்சாமி நாதனுடன் நெருக்கம் ஏற்பட்டு, அங்கு பல நாடகங்களைப் பார்க்க முடிந்தது. வயிறு நாடகத்தைத் தொடர்ந்து மரபு, பாடலிபுத்திரம் என்கிற நாடகங்களை எழுதினேன்.


ஐ.ஏ.எஸ்.தேர்வு எப்போது எழுதினீர்கள்?

பம்பாயில் அப்போது ஃபோட்டோ டிவிஷனின் தலைமைப் பொறுப்பில் இரு ந்தேன். 'கோடாக்' என்கிற பிரபலமான ஃபிலிம் தயாரிப்பு நிறுவனம் அந்தச் சமயத்தில் நடத்திய இண்டர்வியூவில் நான் தேர்ந்தெடுக்கப் பட்டேன். லண்டனுக்குப் போய்ப் பயிற்சி எடுத்துவிட்டு ஜெர்மனிக்குப் போய் வேலை யில் சேரச்சொல்லிவிட்டார்கள். நல்ல வேலை, கூடுதலான சம்பளம். ஊருக் குப்போய் அம்மாவிடம் சொன்னேன். அவர் வெளிநாட்டுக்குப் போவதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பா விரும்பியபடி ஐ.ஏ.எஸ். எழுதச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஒப்புக்கொண்டேன். வரலாற்றையும், தமிழ் இலக்கியத்தை யும் விருப்பப் பாடமாக எடுத்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினேன். மசூரியில் பயிற்சி முடித்து கேரளாவில் கோட்டயத்தில் சப்-கலெக்டரானேன். அங்கு போனதும் விரைவிலேயே மலையாள மொழியை எழுதப் படிக்கப் பேசக் கற்றுக்கொண்டேன். தகழி வைக்கம் முகமது பஷீர், கேசவதேவ், போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை மலையாளத்திலேயே படித்தது நல்ல அனுபவம். கேரளாவிலேயே அடுத்தடுத்து வேறு சில பதவிகளுக்குப் போய், என் ஆர்வத்தின் காரணமாக அங்குள்ள ஃபிலிம் கார்ப்பரேஷனின் இயக்குந ராக நியமிக்கப் பட்டேன். நிறைய மலையாளப் படங்கள், குறிப்பாக ஆடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தனின் படங்களுடன் எல்லாம் பரிச்சயம் ஏற்பட்டது. மலையாளப் படங்களின் மிகையற்ற இயலபான தன்மை
எனக்குப்பிடித்திருந்தது. அங்குள்ள பல இயக்குநர்களுடன் உருவான நட்பு சினிமாவை மேலும் மேலும் நேசிக்க வைத்தது. நானும் திரைப்படத்தை இயக் கவேண்டும் என்கிற உந்துதலை உருவாக்கியது. தி.ஜானகிராமனின் 'மோக முள்' நாவலைப் படமாக்கவேண்டும் என்கிற கனவு எனக்குள் இருந்தது.


'மோகமுள்' நாவலைத் திரைப்படமாக்க தி.ஜானகிராமன் சுலபமாகச் சம்மதம் தெரிவித்து விட்டாரா?

'மோகமுள்' எனக்குள் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நாவல். அது குறித்த காட்சிப் பிம்பங்கள் எனக்குள் இருந்தன. நான் இயக்கப்போகிற முதல் படமாக அதுதான் இருக்கவேண்டும் என்கிற வேகத்துடன் இருந்தேன். இது பற்றி தி.ஜானகிராமனைச் சந்தித்து அவருடைய அனுமதியைக் கேட்டேன். பலர் அதைப் படமாக்க விரும்பியது பற்றித் தயக்கத்துடன் சொன்னவர்
என்னுடைய ஈடுபாட்டைப் பார்த்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார். நாவலைப் பற்றி மேலும் அவரிடம் விளக்கம் கேட்க முனைந்தபோது, "அதுக்கு என்னி டம் எந்தப் பதிலும் இருக்காது, நானே இப்போது அதற்கு வாசகன் மாதிரிதான், நான் என்ன எழுதியிருக்கிறேனோ அவ்வளவுதான்" என்று சொல்லிவிட்டார். அவர் வர்ணனைகள் மூலம் ஏற்படுத்திய தோற்றத்தை திரைப்படக் காட்சி வடிவத்திற்கு கொண்டுபோவது சிரமந்தான் என்றாலும் மனது ஒன்றிப்போய் அந்தநாவலைத் திரைக்கதை வடிவமாக்கினேன். அந்த நாவலை இன்னொரு வர் திரைப்படமாக்கும் உரிமையை வாங்கி வைத்திருந்தார். அவரிடம் திரைக் கதையைச் சொன்னதும் பிடித்துப்போய் அவரே அந்தப் படத்தின் தயாரிப்பாள ராகிவிட்டார். நிதிப் பிரச்சனையெல்லாம்கூட வந்தது. படம் முடிக்க மூன்றா ண்டுகள் வரை ஆனது.


இருந்தும் அந்தப் படம் வணீகரீதியான வெற்றியைப் பெறவில்லையே?

அந்தப் படத்திற்குச் சரியான விளம்பரங்கள் இல்லை. ப்ரிவ்யூ மட்டுமே 55 தடவைகள் போட்டிருக்கிறோம்.படத்தை யாரும் வாங்காததால் நாங்களே நேரடியாகத் தியோட்டர்களில் வெளியிட்டோம். அதற்கும் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. நல்ல படம் என்கிற மதிப்புக் கிடைத்தது. கேரளாவைச் சேர்ந்தவர், படம் எடுக்கப்பட்ட விதத்தைப் பற்றி இப்படிச் சொன்னார்."தமிழ் வசனங்களு டன் மளையாளப் படத்தை எடுத்திருக்கிறீர்கள்" என்றார். அதற்கு தேசிய அள வில் விருது கிடைத்தது. அந்தச் சமயத்தில் தமிழகத்தில் சென்ஸார் அதிகாரி யாக வந்து சேர்ந்தேன்.


தமிழ்த் திரைப் படங்களைத் தொடர்ந்து பார்த்தே ஆகவேண்டிய பணிச்சூழலை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

நான் சென்ஸார் அதிகாரியாக இருந்த ஐந்தாண்டுகளில் 750 தமிழ்ப் படங்கள் வரை பார்த்தேன். தொழில் சார்ந்ததாக இருந்தாலும் பலவற்றைத் தெரிந்து கொள்ள அந்த அனுபவம் உதவியது. தமிழ் மக்கள் எதை ரசிக்கிறார்கள் எதை ரசிக்கவில்லை என்பதை எல்லாம் ஆய்வு செய்வதற்கான சந்தர்ப்பமாக அது அமைந்தது. என்னுடைய படங்களில் அதன் விளைவாகச் சிலவற்றை மாற்றி யமைக்க முடிந்தது.


பாரதி படத்தை எப்போது எடுக்க ஆரம்பித்தீர்கள்? தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெற்றியடைந்த அளவுக்கு கப்பலோட்டிய தமிழன் படம் ஓடவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த பிரபலயங்களின் வாழ்க்கையைச் சார்ந்து எடுக்கப்படுகிற படங்களுக்கு நேர்கிற இந்த அனுபவத்தை நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டீர்களா?

அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டே நான் பட முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன். தமிழ் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை போய்விடவில் லை. புதிதாகச் சில படங்களைத் தயாரித்தவர்கள் இங்கு கவனிக்கப்பட்டிருக்கி றார்கள். அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. என்னுடைய அனுபவத் தில் இந்தியாவில் மற்ற மொழிப்படங்களில் இப்படிப்பட்ட அங்கீகாரம் அவ்வ ளவு லேசில் கிடைப்பதில்லை. பாரதி படத்திற்கான வேலைகளை பாஸிட்டி வான உணர்வுடனே செய்தேன். படம் முடிய இரண்டு வருடங்கள் வரை ஆனது. பாலியல் காட்சிகளோ, செண்டிமெண்ட் காட்சிகளோ இருந்தால்தான் தமிழ் ரசிகன் பார்ப்பான் என்கிற அளவில் திரைப்படத் துறையினரில் சிலர் வைத்திருந்த எண்ணத்தை இங்குள்ள தமிழ் ரசிகனே மாற்றியும் காட்டியிருக் கிறான். அதே சமயம் கலைப் படங்களில் வரும் மெதுவான அசைவுகளை யும், மௌனமான இடைவெளிகளையும் அவனால் தாங்கிக் கொள்ள முடிவ தில்லை. சென்ஸார் அதிகாரியாக நான் கற்றுக்கொண்ட அனுபவத்தை 'பாரதி'யில் செயல்படுத்தினேன். காட்சிகளை விரைவாக அமைத்தேன். ஒரு வணிக ரீதியான படத்தின் அங்கீகாரம் எனக்கு கிடைத்தது. படத்தை உருவாக் குவதில் மட்டுமல்ல, படத்தை மக்களிடம் கொண்டு போய்ச்சேர்ப்பதில் எப்படிப்பட்ட அணுகுமுறை வேண்டும் என்பதையும்'பாரதி' படஅனுபவமே
கற்றுக்கொடுத்தது.


நீங்கள் இயக்கிய 'முகம்' படம் சரியாகச் சென்றடையவில்லையே?

பாரதி படத்திற்கு முன்பு 'முகம்' எடுத்தேன். இப்போது அதைப்பற்றி நினைக் கிறபோது அதை வேறுமாதிரி எடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அந்தப் படத்தில் ஒருகருத்தை நாடகமயமாக்கிய மாதிரி சொல்லியிருந்தேன். சீரியஸான விஷயத்தை மிகவும் சீரியஸான வடிவத்தில் சொன்ன மாதிரி நினைக்கிறேன். நவீன நாடகங்கள் எனக்குள் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தினா லும் அந்தப் படம் உருவாகியிருக்கலாம். என்னைப் பொறுத்தவரை அது சோதனை முயற்சி.


பெரியார் என்கிற மனிதரை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

தமிழ்ச்சமூகம் வெளியே கொண்டுவந்த உலகளாவிய மனிதர்கள் என்று இரண்டு பேர்களை நான் சொல்வேன். முதலாவது பாரதி இரண்டாவது பெரியார். பாரதியாரை அக்கினிக் குஞ்சு என்று சொன்னால், பெரியார்ஒரு எரிமலை. பெரியார் நீண்டகாலம் வாழ்ந்ததால் அவரைப் பற்றிப் பலருக்குப் பலவிதமான கருத்துக்கள் பதிந்து போயிருக்கும். 1950 க்குப் பிறகுள்ள பெரி யாரைப்பற்றித் தான் இங்குள்ள பலருக்கும் தெரியும். அதற்கு முன்புள்ள பெரியாரைப் பற்றிப் பரவலாகத் தெரியவில்லை. என்னுடைய பார்வையில் 1950 க்கு முன்பு அவர் உலகளாவிய சிந்தனையாளராக உருவெடுத்திருக்கிற விதத்தைப் பற்றி இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். கடவுள் எதிர்ப்பா ளாராகவும், பார்ப்பன எதிர்ப்பாளராகவுமே அவர் பார்க்கப்பட்டிருந்தாலும்
அவை மட்டுமே பெரியாரின் அடையாளங்கள் அல்ல. இவற்றிற்குப் பின்னால் அவர் பெரும் மனிதாபிமானி. சக மனிதர்கள் ஏற்றத்தாழ்வுக்குட்படுத்தப்பட்டுக் கீழான நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்களே என்ரு அதற்கு எதிரான தார்மீகச் கோபம்தான் அவருடைய வாழ்வின் மையம். இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருப்பதும் அதுதான். பெரியாரைப் பற்றிப் பலர், 30 சதவிகிதம்
கூடச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. இன்னும் 70 சதவிகிதம் புரிந்து கொள்ளப் படாமல்தான் இருக்கிறார். அவரது வாழ்கைப்பயணம் மிக அபூர்வ மானது. துவக்கத்தில் மைனர் மாதிரிச் சாதாரண வாழ்க்கையைத் துவங்கிய அவர், காலப்போக்கில் சென்றடைந்த இலக்கு பலருக்குச் சாத்தியமில்லாதது. தன் பலவீனங்களைக்கூட மிகவும் வெளிப்படையாக முன்வைத்தவர். திரை யில் இவருடைய இவ்வளவு அம்சங்களையும் கொண்டுவர நான் சிரமப் பட் டிருக்கிறேன். படம் முடிந்ததும் அவர் என் மனதில் எழுப்பிய பிரமிப்பு இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது.


பாரதியின் எழுத்தியலைவிட பெரியாரின் எழுத்தியல் நீண்டகாலப் பின்னணி யும் விரிவும் கொண்டது. அதை எப்படி திரைப்படத்தில் வெளிக்காட்டியிருக்கி றீர்கள்?

திரைப்படத்தில் எல்லாவற்றையுமே கொண்டுவந்து விட முடியாது. நான் பெரியாரைப் பற்றிச் சேகரித்து வைத்திருக்கின்றவற்றை வைத்தே பத்து படங்கள்வரை எடுக்கலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. பெரியார் அடிக்கடி தன்னுடைய கருத்துக்களை மாற்றிக்கொள்கிறார் என்கிற விமர்ச னத்தைக்கூட வைக்கிறார்கள். கருத்து என்பதே காலச் சூழலுக்கேற்றபடி மாறக்கூடியதுதான் என்பதை பெரியார் அடிக்கடி வலியுறுத்துகிறார். எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பவனைப் பிணத்துடன் ஒப்பிடுகிறார்.
மாறுவதும், வளர்வதும்தான் அறிவு என்பதில் அவர் உண்மையாகவே விஞ்ஞானக் கண்ணோட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். எதிலும் வெளிப்படையான தன்மை, சமகாலத்தின் கருத்துக்களைப் பாரபட்சமில்லாமல் பரிசீலிப்பது என்பதுடன் தன்னைவிட வயதில் மிகச் சிறியவர்களைக்கூட மரியாதையுடன் அழைத்துப் பழகுவது என்பதில் எல்லாம் பலருக்கு முன்னு தாரணமாகத் திகழ்ந்திருக்கிறார். அவருடைய அணுகு முறையிலிருந்தே படத்தில் பல காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.


பெரியார் பாத்திரத்திற்கு சத்தியராஜ் எந்த அளவுக்குப் பொருத்தமாக இருந்திருக்கிறார்?

சத்தியராஜ் பெரியார் கதாபாத்திரத்தைப் பிரமாதமாகப் பண்ணியிருக்கிறார். என்னுடைய அனுபவத்தில் பாரதி கதாபாத்திரத்தில் சாயாஜி ஷிண்டே நடித்ததைவிட இன்னும் சிறப்பாகச் செய்திருக்கிறார். எத்தனையோ கிளிஷே வேசங்களில் நடித்திருக்கிறவரா இவர் என்கிற வியப்பு படத்தைப் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் ஏற்படும். படத்தின் இறுதிக் காட்சிகளில் மிக அற்புதமாக நடித் திருக்கிறார்.


இந்தப் படத்தின் மூலம் பெரியாரைப் பற்றி என்ன செய்தியைக் கொண்டு போயிருக்கிறீர்கள்?

இந்தச் சமூகத்தில் நடக்கும் பலவிதமான ஏற்றத்தாழ்வுகளுக்கு மூலக்காரண மாக உணர்ந்தது சாதியை. சாதியக் கட்டுமானத்தைத் தொடர்ந்து எதிர்த்து வந் தார். அதைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறேன். 1928 லிருந்தே அவருடைய சுயமரியாதைக் குரலில் ஒலித்தது இந்த எதிர்ப்புதான்.


பெரியார் படம் உருவாகத் துவங்கி நடிகர் தேர்விலிருந்து ஒவ்வொரு கட்ட த்திலும் எத்தனையோ எதிர்ப்புகள், போராட்ட அறிவிப்புகள் என்று சர்ச்சைகள் நீடிப்பதை எப்படி எடுத்துக் கொள்கிகிறீர்கள்?

பெரியாரைப் போன்ற சமூகத் தளத்தில் எதிர்ப்புகளையே சந்தித்த ஒருவரைப் பற்றியப் படம் எடுக்கப்படும்போது இம்மாதிரியான எதிர்ப்புகளும், சர்ச்சை களும் எழுவது தவிர்க்க முடியாதது. இது மாதிரியான சலசலப்புகள் இல்லை யென்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும். வாழும்போது அவர் உருவாக்கிய அதிர்வுகளை அவரைப் பற்றிய படமும் உருவாக்குமோ என்கிற சந்தேகங்கள் சிலருக்கு இருப்பது இயல்பானதுதான். இதற்காக வருத்தப்படுவதோ, சோர்வடைவதோ சரியல்ல. அதே சமயம் அவர்களிடம் போய் விவாதித்து மல்லுக்கட்டுவதை நான் விரும்புவதில்லை. அடிப்படையில் நான் ஒரு சினிமாக்காரன். என்னுடைய ஊடகம் சினிமா. என்ன எடுக்கப்போகிறேன் என்பதை 'பெரியார்'படத்தி லேதான் நான் சொல்லவேண்டுமே ஒழிய அது பற்றி வெளியே விவாதித்துக்கொண்டிருக்க முடியாது. அவரை எதிர்ப்பவர் களுக்கு 'பெரியார்' படம்தான் பதில்.

*****

நன்றி: புதிய பார்வை.
கட்டுரை/ பேட்டி - தட்டச்சு/ வடிவம் : தாஜ்
satajdeen@gmail.com

No comments: