Thursday, June 22, 2006

இன்னுமொரு தரிசனம்.

( மலையாளக் கவிஞர் ஐய்யப்பன் அவர்களது, 'ஐய்யப்பன் கவிதைகள்' தொகுப்பிற்கான மதிப்புரை. உன்னதம் நவ, டிச 2005 இதழில் வெளி வந்தது. சில மாற்றங்களுடன் மீண்டும்.)
***

சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் நண்பரும் படைப்பாளியுமான ஜெயமோகனால் எனக்கோர் பின்னடைவு ஏற்பட்டது. சிற்றிதழ்களின் வழியே,தமிழ் மொழியில் மாற்றம் காணும் மலையாளக் கவிதைகளைத் தேடி ஆர்வமாய் வாசிப்பதிலிருந்து நேர்ந்த பின்னடைவு அது.

'தற்கால மலையாளக் கவிதைகள்' என்கின்ற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன் ஜெயமோகன் ஒரு தொகுப்பை கொண்டு வந்திருந்தார். அதில் பல மலையாள கவிஞர்களின் கவிதைகளில் ஒரு சிலவற்றை தேர்வு செய்து, அவரே மொழி மாற்றமும்செய்திருந்தார். காலச்சுவடு இதழில் பிரசுரிக்க வேண்டி அந்தப் பணியை தாம் மேற்கொண்டதாக அதன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.

"இக்கவிதைகள் தனக்கு எவ்விதமான அனுபவத்தையும் ஏற்படுத்தவில்லை,இவை கவிதையின் பின்தங்கிய நிலையையே கட்டுகின்றன" என்று சுந்தர ராமசாமிநிராகரித்துவிட்டார் என்று கூறிய ஜெயமோகன், உள்ளூர அவருடைய பாரபட்சமின்மையின் மீது அபரிமிதமான மரியாதை உடையவன் என்பதால் அந்தக் கவிதைகளைத் தூரத் தூக்கிப் போட்டு விட்டேன் என்றும் தெளிவுப் படுத்துகிறார்.

தூர தூக்கி போட்ட அந்த கவிதைகளை பின்னர் அவர் ஒரு தொகுப்பாகக் கொண்டு வந்தார். அப்படி கொண்டுவர காரணம் என்ன என்பது பற்றியும், தனது மொழிபெயர்ப்பை நியாயப்படுத்தியும் அந்த முன்னுரையின் கடைசியில் ஒரு பாடு விளக்கமும் எழுதியிருந்தார்.

மேலே குறிப்பிட்டிருக்கிற என் பின்னடைவு சிலகாலம்தான் நீடித்தது. ஜெயமோகன் அல்லாத வேறு நபர்களால் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட மலையாள கவிதைகளை தொடர்ந்து வாசிக்க, பிடித்தும் போனது. சச்சிதானந்தன், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, ஆற்றூர் ரவிவர்மா, போன்றோர்களின் கவிதைகளில் பழைய மாதிரியே ஈடுபாடு கொண்டேன். இன்னொரு பக்கம் ஜெயமோகன் மீதிருந்த அழுத்தமான பிடி நழுவத் தொடங்கியது.

ஐய்யப்பனின் இந்த தொகுப்பை வாசித்ததற்கு முன், அவரது 'இரவு உணவு' இன்னும் ஓரிரண்டுக் கவிதைகளைத் தவிர அவரது பிற கவிதைகளை வாசித்ததாக நினைவில்லை. எம்.கோவிந்தன், குஞ்நுண்ணி, டாக்டர்.கெ.அய்யப்ப பணிக்கர், ஆர். ராமச்சந்திரன், என்.என். கக்காடு போன்ற மலையாளக் கவிஞர்களை தனது கவிதைத்தொகுப்பில் ஜெயமோகன் தாராளமாகவும் சிறப்பாகவும் அறிமுகம் செய்திருந்த அதே நேரம்,அய்யப்பன் குறித்த அறிமுகம் என்பது ஏனோ தானோ ரகம்தான். " நிறைய எழுதியுள்ளார், தனித்துவத்தை நிருபிக்காதவர், திருவனந்தபுரத்துக்காரர் " எண்ணி சில வார்த்தைகள். அவ்வளவுதான்.

"வேறு பட்ட கவிதையாக்கம் காரணமாக எழுபதுகளில் இலக்கிய கவனத்திற்குள்ளான அய்யப்பன்" "பேதலிப்பின் தடுமாற்றங்களுக்கும் தெளிவின் பரவசத்திற்கும் இடையில் உருவாகின்றவை அவரது கவிவெளிகள்" "கண்ணீர்த் துளியின் விசும்பலிலிருந்தும் குருதியோட்டத்தின் மௌனத்திலிருந்தும் உயர்கிறது அவரது மொழி"
'ஐய்யப்பன் கவிதைகள்' தொகுப்பின் முன்னுரையில் அவரை நமக்கு இப்படிஅறிமுகப்படுத்தி சிலாகிக்கிறார் கவிஞர் சுகுமாரன். ஜெயமோகனின் வரிகளால் ஐய்யப்பனை கண்டுக்கொள்ளாமல் இருந்ததுப் போக, சுகுமாரனால் அவர் மீதான கவனம் இன்றைக்கு இரட்டிப்பாகியது.

அய்யப்பன் கவிதைகளை வாசித்து அசைப் போட்டபோது,கவிஞர் சுகுமாரனின்கூற்றில் இம்மியும் பிசகு இருப்பதாக தோன்றவில்லை.
ஏமாற்றத்தின் வருத்தமும், மரணத்தின் துயரமும், சங்கடத்தின் கோபமும் அவரது கவிதைகளில் பதிவு கொள்கிறபோது அவைகள் முகமற்று, சிதிலமான கட்டமைப்பினுள், எங்கோ ஒரு தொய்யலில் அதுவும் நமது உணர்தலுக்கு மட்டுமே சிக்குவதாக இருக்கிறது.

கவிதையின் ஊடுபாவு அறுபடாத நேர்த்தியோடு/ எல்லா முனைகளையும்இழுத்துப்பிடித்து நெய்யப்பட்டிருக்கும் நயம் நம் ரசனையைக் குவிக்கிறது/ இன்னும், புராண இதிகாச காட்சிகளின் படிம வேலைப்பாடுகள் யென அவரது கவிதைகள் தனித்துத் தெரிகின்றது.

'பறவைகளின் பாட்டும்/ ஆறும் பூக்களும்/ தாயின் அழுகையும் நிறைந்த/ தகர்ந்து போன அதிகாலையில்/ நண்பன் தலை வைத்த/ தண்டவாளத்தோடு நான்/தீர்த்த யாத்திரைக்குச் சென்றேன்/ யமுனை நிறைய கண்ணீர்/ கங்கா நீருக்கு சவத்தின்ருசி/ இமயத்தில்/ ரத்தம் உறைந்து போன/ பனிக் கட்டிகள்.'

தாயின் அழுகையில் தகர்ந்து போன கவிஞன், மனதிற்கு இதமாய் தெரிகிறமண்ணை விட்டும் புண்ணிய நதிகளில் நீராடச் சென்றான். பாவங்களை கழுவி புது பிறவி எடுக்க யத்திரையை மேற்கொண்டவனுக்கு அங்கே கண்ட காட்சிகள், மீதமிருந்த அவன் நிம்மதியை பறிப்பதாக இருக்கிறது. கவிஞனது ஏமாற்றத்தின் வருத்தத்தை கூறும் 'பாலங்கள்' என்ற அந்த கவிதையின் மொத்த காட்சிகளும் உணர்தல் எனும் மூன்றாவதுகண்ணுக்கே சிக்குவதாய் இருக்கிறது.

'கர்ப்பத்தில் உருவாகிய செடி/ மயானத்தில் மகாவிருட்சம்/ இல்லை சூடு/ இல்லை மழை/ இல்லை வசந்தம்/ இலைகள் உதிர்ந்த/ அம்மாவின் சிரசில்/ இறந்த மகனின் சிரிப்புகள் மட்டும்/ பயமே அபயம் பலன் கூடாத/ சிலையை உடைத்தேன்/ தெய்வம் வரவில்லை/ இலயுதிர் காலத்தில் தீ பிடிக்கின்றது/ சிதையில் குதிக்கிறாள் அம்மா.'

சாவு என்பது பிறப்பு மாதிரியே சாதாரண நிகழ்வாக தத்துவங்கள் பேசினாலும்,தாயின் மரணத்தில் மகனின் துயரம் தவிர்க்க முடியாதது. இங்கே கவிஞன் தனது தாயாரின்மரணத்தால் அளவிட முடியாத துயரம் கொள்கிறான்.

'மரணத்தைக் கண்டு அஞ்சு, அந்த பயத்தை நிகழ்த்தும் சக்தியிடமே நீ பாதுகாப்பு தேடு, அதனால் நேரும் பலாபலன்களை குறித்து யோசிப்பதையும் தவிர்' யென கடவுள்களின் வேதங்கள் கூறும் கூற்றிற்கு, தன் தாயாரின் மரணத்தால் துயர்கொள்ளும் கவிஞன் கோபாவேசம் கொள்கிறான். கவிதையும் அதன் தாக்கமும் நம் புருவத்தை உயர்த்துகிறது. 'இல்லை சூடு, இல்லை மழை, இல்லை வசந்தம்' என்கிற தலைப்புக் கொண்ட அந்த கவிதையோ கலை நுட்பமாக மலரக்காட்சித் தருகிறது. அங்கே, கவிஞனின் துயரமும் கோபமும் அந்த கவிதையின் துண்டாடப்பட்டவரிகளில் படிமங்கலாகவே காணக் கிடைக்கிறது.

நவ இலக்கியத்தை நாடி வருபவர்களிடம், புதுக் கவிதை புரிவதில்லை என்றமுனு முனுப்பு உண்டு. இந்த உள் வட்ட சங்கதிகள் குறித்து, கவிதைப் படைப்பாளிகளிடம் மனசங்கடங்களும் கொஞ்சம் போல மின்னும் கோபமும் உண்டு. சங்கடத்தினாலான அந்த கோபத்தை ஐய்யப்பன் தனது கவிதை ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். 'கண்களின் வசந்தம்' என்ற அந்த கவிதையின் நேர் பார்வையில் அவரது கோபத்தின் சரடும் தட்டுப்படாத பிசிர்அற்றப் படைப்பு.

உள்ளங்கைத் தண்னீர்/ ஒரு தடாகம்/ இருட்டு மரத்தில்/ கருத்தப் பட்சி/ வெடி வெடித்தால்/ கடைசி காலம்/ பெருந்தச்சனின் உளிபட்டு/ ஜனன இந்திரியங்கள் உட்பட/அனைத்தும் புனர் சிருஷ்டிகள்/ பொந்தில் ஒளிந்த சிவசர்ப்பத்தை/ பாம்பாட்டி பிடித்துச் செல்கிறான்/ தொப்புளில் முளைக்க வேண்டிய அரவிந்தம்/ சகதிக் கிடங்கில் மலர்கிறது.

அய்யப்பனின் பூர்வீகம் தமிழகம் யென கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ளஅவரது குடும்பத்தில் புழங்கு மொழி இன்றைக்கும் தமிழ்தான் என்கிறார்கள். என்றாலும், பிறந்துவளர்ந்த விதத்தில் மலையாள மொழிக்காரராகவே அறியப்படுகிறார். அதனாலோ என்னவோஅவரது கவிதைகள் சிலவற்றில் திராவிட கருத்தாக்கங்களும், வேறு சில கவிதைகளில்கம்யூனிஸ மனோபாவமும் காணமுடிகிறது.

ஒரு நல்ல கவிதைக்கு ஆகாத பிரச்சாரத் தொனி, இந்த கவிதைத் தொகுதியில் மேலேழுந்தவாரியாக சிலவற்றில் முகம் காமிக்கிறது. இருந்தும் அவைகளை புறம் தள்ளிவிட முடியவில்லை. அத்தனைக்கு அந்த கவிதைகள் உயிர்ப்போடு இருக்கிறது. கொள்கை ரீதியாக,இன ரீதியாகவும் அவர் கொண்டிருப்பதாக நாம் உணர வரும் 'ஜென்மாந்திர கோபம்த்தினை' உள்ளடக்கியதாக அந்த கவிதைகள் இருக்கிறன .

'ஏகலைவா/ உன்னை காண்பதற்கில்லை/ இன்றும் நீ / அந்த துரோணனின்சிற்ப சிருஷ்டியிலா/ அறிவின் அங்கமான உனது/ பெருவிரல் வளர்ந்து விட்டதா/ ஏகலைவா நீயின்று எங்கிருக்கிறாய்/ உனது கறுத்த உடம்பை நம் குலம் தேடுகிறது/ ஓர்மையில்/ பழைய பனிக்காலம் தந்த/ போர்வையை நினைவூட்டுகிறாய் நீ/ வா ஏகலைவா/ நீ கலகம் செய்யவோண்டிய காலம் தானிது/ படைக்கின்ற சிற்பத்தை மிதித்துக் குழைத்தொரு மிருகமாக்கு/ குரு ஞாபகம் வோண்டாம் அம்புகளை எடு/ அவனது ஐம்புலன்களைத் தகர்த்தெறி.'

'ஏகலைவா' என்கிற இந்த கவிதை திராவிட கருத்தாக்கத்தை பிரதி பலிக்கிறதுஎன்றால், 'காணத சரித்திரம்' என்னும் தலைப்புடையக் கவிதையோ அவரது கம்யூனிச மனோபாவத்தைப் பிரதி பலிக்கிறது. இந்த தொகுப்பில் காணும் சில குறியீடுகளும், அதனோடான படிமங்களும் ஒன்றிற்கு மேற்பட்ட கவிதைகளில் திருபத் திரும்ப வெளிப்பட்டிருப்பதை காணமுடிகிறது. சில கவிதைகளின் சில வரிகள் வசன நடை. இந்த சின்னச்சின்ன நெருடலான சங்கதிகளைத் தவிர்த்துப் பார்த்தால்... இந்த தொகுப்புத் தந்த அனுபவம் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கிறது. கவிதை வாசிப்பில் எனக்கு கிடைத்த இன்னொரு தரிசனம்.

கவிஞர் ஐய்யப்பன் அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனுதாபியாக அறிய முடிகிறது. கவிதை என்ற ஊடகத்தின் வழியே பார்த்தால், அவர் கலை நுட்பங்களை ஆராதிக்கிறவர் என்பது தெளிவு. இங்கே தமிழகத்தில், இந்திய கம்யூனிஸ்டைச் சார்ந்த முற்போக்கு எழுத்தாளர் சங்க எழுத்தாளர்களுக்கு'லோக்கல்' சித்தாந்தத்தின்படி கலை நுட்பங்கள் ஆகாது. அப்படியான எழுத்தாளர்கள் அத்தனைப் பேர்களும் ஆகாதவர்கள். இவகளின் பார்வையில்இன்னும் ஐய்யப்பன் புலணாகவில்லை என்றே தோன்றுகிறது. நல்ல வேளை அவர் வேறு மானிலத்தவராகப் போய்விட்டார்!

யார் கண்டது, இப்படியான ஒரு பிடியில் அங்கே ஐய்யப்பனும் தன் இயக்கத்தாரிடம்சிக்கித் தவிக்கின்றாரோ என்னவோ!

இந்த கவிதைகளை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் சொய்திருக்கும் என்.டி. ராஜ் குமார் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்திருப்பதை நிதர்சணமாக உணரமுடிகிறது. இரு மொழியும் அறிந்து தேர்ந்த 'மகானுபாவன்களுக்கும்' கிட்டாத மொழி மாற்றமாக இது இருப்பதை அனுபவம் கொண்டு யூகிக்க முடிகிறது.

"புதிய கவிதை வடிவமாற்றம் அல்ல, உணர்வு நிலை மாற்றம் என்பதை திட்பமாகஅறிந்த நவீன கவிஞர்களில் ஒருவர் அய்யப்பன்" என்கின்ற கவிஞர் சுகுமாரனின் கூற்றை கர ஒலி எழுப்பி ஒப்புக்கொள்கின்ற தருணத்தில், ஐய்யப்பன் குறித்து ஜெயமோகன் எழுதியிருந்த'அந்த' அறிமுகம் ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

***
ஐய்யப்பன் கவிதைகள் / தமிழில்: டி.எம். ராஜ்குமார் / வெளியீடு: புது எழுத்து / 39, ஜே. கே. சி. தெரு / காவேரிப் பட்டினம் / கிருஷ்ணகிரி மாவட்டம் /
pin: 635 112 / விலை ரூபாய் : 60.

- தாஜ்

Email: tamilpukkal@gmail.com

Friday, June 09, 2006

தாஜ் கவிதைகள் .. 1

.(இலக்கிய இதழில் வெளியான எனது முதல் கவிதைகள். மீட்சி /இதழ் 27/ஆசிரியர்: பிரம்மராஜன்/அக்டேபர் & டிசம்பர் ..1987 )

ஆசை.
--------
புத்தனை அறிய வந்த வயதில் இருந்து
மனக் கிடங்குப் பூராவும்
பெரிய பெரிய ஆசைகள்.
இன்றைக்கோ
ஆசைகளை பரீசீலிக்கும் ஆசை.

சாதகமாகிப் போன சொற்பங்களைத் தவிர
முகம் தெரியாமல் மழுங்கி இருந்தன சில
மக்கி குப்பையாய் குவிந்து கிடந்தன பல
உயிர் இருக்கும் ஓரிரண்டு கூட
இப்பவோ நாளைக்கோ முன்னவைகளை போல

நிதர்சனம் பிடிக்காமல்
வெளியேறினேன்
உயரத்தில்
சின்னச் சின்ன பறவைகள்
சின்னச் சின்ன இறக்கைகளால்
ஏகத்திற்கு உலாவிக் கொண்டிருந்து.

*
கணக்கு
-----------
நிழல் தேடிஒதுங்கின
பண மரத்தின்நிழல் தரும் சுகம் = x
அந்நியமான அரபு ராஜ்ஜியம் +
சுதந்திரமின்மை + நினைவில்
விரியும் குடும்பம் + என்
பிஞ்சுக் குழந்தைகள் + இரவில்
உணரும் மனைவியின் உஷ்ணம்
+ குறியின் தொல்லை = y
இன்னும்......
அது இல்லை + இது இல்லை = y
y x y = y2 (y squre )
x - y2 (y squre) = எதிகால நிம்மதி.
மனக் கணக்குஒவ்வொன்றாய் பெருகிக் கூடும்.
ஒன்றோடு ஒன்று மோதி
பத்து நூறாகும்.
மூளையோ எல்லாவற்றையும்
கூட்டிப் பெருக்கிக்
கழித்து விடும்.

*
- தாஜ்

புலிநகக் கொன்றை நாவலை

* 'புலிநகக் கொன்றை நாவலை' முன்வைத்து, திரு. பி.ஏ.கிருஷ்ண் அவர்களுக்கு ஓர் திறந்த மடல்.

திரு.பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கு...

அன்புடன்....

இந்த் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போய் இருந்தபோது ,வாங்கனும் என்றுகுறித்தெடுத்துப் போன புத்தகங்களின் பெயரில் உங்களது 'புலிநகக் கொன்றை' முதல் எண்ணாக இருந்தது.

அநத புத்தகம் வெளி வந்தபோது நான் துபாயில் இருந்தேன். முயன்றிருந்தால், அப்பொழுதே வரவழைத்துப் படித்திருக்கலாம். பணியை ஒட்டிய சூழ்நிலை, சிறிதும் பேரிதுமானகுறுக்கீடுகள் என்று விட்டுப்போய்விட்டது.

இன்றைக்கு 'புலிநகக் கொன்றை' வாசித்தாகிவிட்டது. இந் நாவல் குறித்து என் கவனத்திற்கு வந்திருந்த மதிப்பீடுகளின் வழியே நான் வளர்த்து வைத்திருந்த எதிர்பார்ப்புகளையும்தாண்டி, அது என்னில் எழுந்து நின்ற உயரம் அதிகம். நிமிர்ந்து பார்க்கவைத்து விட்டது.

'புலிநகக் கொன்றையின்' முதல் ஐம்பது பக்கங்கள் வாசிக்கையில், இன்னொருதி.ஜானகிராமனின் எழுத்தை வேறொரு மாவட்டம் சார்ந்த மண்ணின் சூழ்நிலையில் வசிப்பதாகத்தான் பட்டது. மேலும் ஐம்பது பக்கங்கள் என்றானபோது தோன்றிய எண்ணங்கள் வேறு. இது தி.ஜா. இல்லை, வேறொரு மாதிரியான அழகு. வெகு காலத்திற்குப் பிறகு வாசிக்கக் கிடைத்திற்கும் அபூர்வம்!!

தொடர்ச்சியான வாசிப்பில் மனம் லயித்துப் போனது. அசைப்போட்டு உள்வாங்கியஅந்த மணித்துளிகளை மறக்க இயலாது. நாவலைப் பூர்த்திச் செய்து வாரம் சில கடந்தும்,நினைவின் திரையில் காட்சிகளாக விரிந்துக் கொண்டிருந்தது. இத்தனை மாதத்திற்குப் பிறகும்இப்பவும் அதன் தாக்கம் உண்டு.

இந்த நாவல் வழியே, உண்டியல் கடைக் குடும்பத்தின் அத்தனைப் பேர்களும் ஒருவகையில் எனக்கு மரியாதைக் குறியவர்களாகிப் போனார்கள். வளர்ந்த ஞானத்தோடு எல்லோருமேமுகம் செய்ததினால் என்னவோ அத்தகையதோர் ஈர்ப்பு. குறிப்பாக அந்த குடும்பதில் சிலரிடம்கூடுதல் பிரியமும், சகோதர வாஞ்சையும் கூட தகைத்தது. திருமலை என் பியத்திற்குறிய தந்தை என்றால்.......நம்பி நெஞ்சம் நிறைந்த சகோதரன்.

சமூகம் / மதம் / அரசியல் / சினிமா / என்பனப் பற்றியெல்லாம் இந்த நாவல் முன் வைக்கும் கருத்துப் பகிர்வுகள் எனக்கு உடன் பாடானவை. இவைகள், என் நேர்கோட்டுச் சிந்தனைகளோடு ஒட்டு உராய்வோ, கிரீச் சப்தமோயின்றி அத்தனை சுத்தமாய் ஒட்டிப் போவது கண்டு என்னில் இரட்டிப்பு ஈடுபாடு.

அரசியல் குறித்து நம்பியும் கண்ணனும் பகிர்ந்துக் கொள்ளும் சர்ச்சைகள்,தர்க்கங்கள் அதை ஒட்டி அங்கே தெறிக்கும் தீர்க்கங்கள் அனைத்தும் நுட்பம் சார்ந்தவை.

''மார்க்ஸ்களும் லெனின்களும் மாவோகளும் லெட்சுமி விலாசில் போய் முடிந்தார்கள்/பொட்டலங்களுக்கு ஏற்றவர்கள்/அட்டையை எடுத்துட்டா புஸ்தகமெல்லாம்காத்தால்ல இருக்கு/லெனின் இரண்டு பாகமும் அண்டக் கொடுக்க உபயோகமானது'' இடதுசாரிகளின் தத்துவார்தங்களை, தலைவர்களை இந் நாவல் தன் போக்கில் வைக்கும்விமர்சன வரிகள் மெத்தவும் துல்லியம்.

பெரியார், கண்ணன் வசிக்கும் வீதிக்கு அருகில் பேச வந்தபோது நீங்கள்முன் வைக்கும் அப்பட்டமான காட்சிகளும் வர்ணணைகளும் அனியாயத்திற்கு யதார்த்தம். இன்னும் சொல்லனும் என்றால்...அப்படி சொல்லவும் ஒரு மனம் வோண்டும். மிகை உணர்ச்சியோ, தாழ்வுணர்ச்சியோ இல்லாது யதார்த்தமாக இப்படி பெரியாரை நமது தமிழ் நவீனத்துவக்கார்கள்தங்களது நாவல்களில் கொண்டு வந்து நிறுத்தி, சர்ச்சித்து நான் வாசித்ததில்லை. அதற்கெல்லாம்ஒரு மனம் வேண்டும். பி.ஏ. கிருஷ்ணம் ஒருபடி மேலேதான்.

இந்த நாவல் குறித்து, குறிப்பிட வோண்டிய இன்னொன்று அதன் நடை. அதன்விசேசம் சொல்லி மாளாது.

மூன்று நான்கு தலைமுறை சங்கதிகளை சராசரி நாவல்களின் பக்கங்களையொத்தக் கனத்தில் சொல்லி முடித்திருக்கின்றீர்கள் என்றால் அது உங்கள் நடையிலான சாத்தியமே.

கண்ணன் தன் உமாவுக்கும், உமா தன் கண்ணனுக்கும் எழுதும் கடிதங்கள்மெனமையான வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட அழகு. திரும்பத் திரும்ப வசிக்கவும் வைப்பது.

நகைச்சுவையை அத்தனை செருக்காய் அந்த நடை தனது வரிகளின், வார்த்தைகளின் சிடுக்குகளுக்குள் வைத்துக் கொண்டு வந்து, நம்மை மெல்ல குழுங்க வைக்கும் நேர்த்திஅலாதியானது.

நம்பி இறந்து கிடக்கிறான்.தண்ணிரைக் காணாத ஓர் கழிப்பறையில் ஐந்து நாட்களாககிடக்கிறான். வாசிப்பில் மனமெல்லாம் வீங்கி வலிக்கிறது. அவன்தான் எத்தனைப் பெரிய ஆகிருதி ! ஆனால் பாருங்கள் அவன் இறப்பை சொல்ல வந்த உங்களது நடை, மிக சாதாரணமாகச் சொல்லிச் செல்கிறது. எல்லாவற்றையும் ஒன்றாகப் பாக்கும் ஞானிகளின் நடை. இன்னும் என் கவனத்தில் அந் நடை பிடிப்படாத சில கேள்விகளை எழுப்பியப் படியே இருக்கிறது.

யதார்த்த நாவல் என்று பின் நவீனத்துவப் பண்டிதர்கள் இந்த நாவலை புறம்தள்ளலாம். அவர்கள் அப்படித்தான். நிஜத்தின் மீது பயணப்படும் நாவலுக்கு யதார்த்த அமைப்பியல்தான் அச்சு.

இந்த நாவல் தொடர்ந்து, பல்வேறு விதமான வீச்சங்களை பல இடங்களில். அந்த முகச்சுழிப்பை எல்லாப் பாத்திரங்களும் செய்கிறது. இந்த வீச்சம் நாவலில்குறியீடாக பின்னப் பட்டிருக்கிறதா என்றால்...அப்படியும் தெரியவில்லை. இடதுசாரி அல்லதுஅதற்கும் மேலே உள்ள மனிதர்களைப் பற்றியும், அவர்களின் மனோ விஸ்தீர்ணத்தைப் பற்றியும் பேசும் இந்த நாவலில் இந்த வீச்ச சங்கதி, வீச்சம் தருவதாக இருக்கிறது.

படைப்பு சார்ந்த நிஜம் இந்த நாவலின் பிரதான அம்சம். அதை யொட்டிய கணிப்பில், கூடுதல் ஆண்டுகளாக நீங்கள் சுமந்த ஓர் தாக்கத்தை அதனோடான வலியைஇன்றைக்கு படைப்பில் இறக்கி வைத்திருக்கின்றீர்கள். அப்படியே யென நம்புகிறேன்.

அது நிஜம் என்கும் பட்சம்....இப்பொழுது இங்கே உங்கள் படைப்பு சார்ந்தவெற்றியைப் பாராட்டுவதா? அல்லது நீங்கள் எதிர் கொணட இன்னல்களுக்காக கனத்தமனத்தோடு இருக்கும் நான், கண்ணீர் கசீவதா?

தெரியவில்லை!

நீங்கள்தான் சொல்லனும்.

- தாஜ்

tamilpukkal@gmail.com

***

Tuesday, June 06, 2006

கருணாநிதியும் நவீன தமிழ் இலக்கியமும்

* கருணாநிதி Vs ஜெயமோகன்.
இவர்கள் இருவரிடையே மூன்று வருடங்களுக்கு முன் மூண்ட இலக்கியச் சச்சரவை முன் வைத்து 27.11.2003 அன்றையத் திண்ணை இணையத் தளத்தில் நான் எழுதிய எதிர்வினை கட்டுரை.

- தாஜ்
------------------------------------------------------------------------

Thursday November 27, 2003

கருணாநிதியும் நவீன தமிழ் இலக்கியமும்

தாஜ்

பழுத்த அசல் அரசியல்வாதியான திரு. மு. கருணாநிதிக்கு பல முகங்கள். அதில் ஒன்றுதான் இலக்கியம்.மூத்த இலக்கியவாதி. மறுக்க முடியாது. அவர் ஈடுபாடு கொள்ளும் பண்டைய இலக்கியச் சங்கதிகளில் இந்த வயதிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் காட்டி வருகிறார் என்பது பெரிய விஷயம். பாராட்டலாம்.

பண்டைய இலக்கியத்தின் நேர் எதிர்முனையில் விருட்சமாய் நிற்பதுதான் நவீன இலக்கியம். பண்டைய இலக்கிய அபிமானிகள் யாரும் இதன் போக்கை, நுட்பத்தை, மிளிரும் அழகை இன்னும் அதன் சாதிப்புகளை ஒப்புக் கொண்டது கிடையாது.

பண்டைய இலக்கியங்களையும் அதன் மகோன்னத சாதிப்புகளையும் அதன் அபிமானிகளையும் அவர்களது எழுத்துப் பணிகளையும் நவீன இலக்கியவாதிகள் ஒப்புக்கொள்வது மாதிரி அந்தப் பக்கம் இவர்களை ஒப்புக்கொள்வது கிடையாது. இது ஒரு தொடரும் உண்மைதான் என்றாலும் இன்றைக்கு அந்த நிலைமையில் 'தேவலாம் ' தெரிகிறதுதான்.

இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த பார்வை , அதில் நிகழ்ந்து வரும் மறுமலர்ச்சி குறித்த சிந்தனை ஆகியவற்றை ஒதுக்கி அதன் படைப்பாளிகளை அவர்கள் முற்றிலும் தீண்டாத ஒரு காலகட்டம் இருந்தது. க.நா.சு அவர்கள் அப்போது தட்டாத கதவு கிடையாது. எல்லா கல்லூரி மற்றும் பல்கலைக் கழக தமிழ்த்துறைகளின் கதவையும் தட்டினார். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் சங்கதிதான் நடந்தது.

மூத்த இலக்கியவாதியான கருணாநிதியும் அதே நிலை கொண்டவர்தான். நவீன இலக்கியம் என்றைக்குமே அவருக்கு அந்நியம். தவிர நவீன இலக்கியம் குறித்து அவருக்கென்று வினோதமான ஒரு கருத்தும் இருந்தது. நவீன இலக்கியப்போக்கை ஒப்புக்கொள்ள மறுத்த பல மிழ்ப்பேராசியர்களுக்கு கூட அப்படி ஒரு கருத்து இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். அப்படி ஒரு கருத்தை கருணாநிதியைத் தாண்டி வேறு எவர் வாயிலாகவும் கேட்டதுமில்லை.

கருணாநிதியின் அந்தக் கருத்து வினோதமானது மட்டுமல்ல; வேடிக்கையானதும் கூட. அவரே ஒருதரம் தனது பேட்டி ஒன்றில் அதை வெளிப்படுத்தியும் இருக்கிறார்.

நவீன இலக்கியத்தை கருணாநிதி பொருட்படுத்தவில்லை என்றாலும் தனது இலக்கிய முயற்சிகளை சகல தரப்பினரும் பாராட்ட வேண்டுமென நினைப்பார். தாராள சிந்தனை. அரசியல்வாதியாயிற்றே! குறிப்பாக நவீன இலக்கியவாதிகள் பாராட்டது போனால் கூட பரவாயில்லை. பெருந்தன்மையாய் மன்னித்துவிடுவார். மாறாக விமர்சனம் என்று எதுவும் வைத்துவிடக் கூடாது. அவ்வளவுதான்...

கருணாநிதியின் முகரேகைகளைப் பார்த்து படபடத்துவிடும் அவரது துதிபாடிகள் திசைக்கொருவராய் கிளம்பிவிடுவார்கள். அரசியல் பாணி வசவுகளும் மிரட்டல்களும் தெறிக்கும். மொத்த இலக்கியவட்டமும் திக்பிரமை பிடித்தமாதிரி மெளனித்து விடும். கருணாநிதியும் கூட கடல் அளவு அமைதியோடுதான் இருப்பார். அவரது பெருந்தன்மையை நவீன இலக்கியவாதிகள் புரிந்துகொள்ளவில்லையென்றால் எப்படி ? அதான் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்.

இந்தப் பட்டியலின் இன்றைக்கு ஜெயமோகன். நேற்றைக்கு நான்! ஆமாம். ஜெயமோகனுக்காவது பரவாயில்லை. நவீன இலக்கிய உலகம் மெளனம் கலைத்து தனது எதிர்ப்புக் குரலையாவது காட்டியது. எனக்கோ...அதன் ஆழ்ந்த நித்திரையின் குறட்டைச் சத்தம்தான்.

கருணாநிதியின் இலக்கிய அபிமானியும் முன்னால் தமிழ்த்துறை பேராசிரியருமான 'கவிக்கோ ' ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் தன் தலைவரோடு மேடையேறிவிட்டால் தன்னையே மறந்து விடுவார் மனிதர். அது கவியரங்கமாக இருந்துவிட்டால் போச்சு. இரண்டு தரம் மறந்து விடுவார் இவரது கவியரங்கம் கேட்டு இருக்கிறீர்களா ?

கருணாநிதியின் இலக்கியம் சார்ந்த - தமிழ் சார்ந்த - தமிழ் மன்னர்கள் சார்ந்த உள்மன விருப்பங்களை மேடையில் அவரை வைத்துக்கொண்டே காது கிழிபடப் பேசி புளகாங்கிதம் அடைவதென்பது கவிக்கோவின் பழக்கம். இதை ஒரு தொண்டாகவே நெடுங்காலமாய் செய்தும் வருகிறார்.

ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்காக கருணாநிதியோடு மேடையேறிய கவிக்கோ தனது வழக்கமான புகழாரங்களுக்குப் பிறகு, தலைவரின் முகம்பார்த்து கொசுறாய் நவீன இலக்கியவாதிகளைப் பற்றி ஏக தாளத்தோடு நக்கல் அடித்திருக்கிறார்.

நவீன இலக்கியவாதிகளை மூன்று சதவிகிதத்தினர் என்று அப்துல் ரஹ்மான் துச்சமாய் கேலி செய்ய 'அவர்களை ஒன்றும் சொல்லாதீர்கள். நமது தயவு நாடி வந்திருக்கிறார்கள் ' என்றிருக்கிறார் கருணாநிதி அவர் பங்கிற்கு. இது அப்துல் ரஹ்மானைத் தாண்டிய நக்கல்.

அப்துல் ரஹ்மானுக்கு நவீன இலக்கியவாதிகளின் மீது தனிப்பட்ட வருத்தம் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் கவிதைக்காக சாகித்திய அகாடமி பரிசை அவர் வாங்கி வென்றபோது நவீன இலக்கியவாதிகள் எவர் ஒருவரும் இவரை பாராட்டவில்லை. அவர் மனம்தான் என்ன பாடுபட்டிருக்கும்! போதாதற்கு அரசியல் லாபி வழியாகத்தான் இவருக்கு இந்த பரிசு கிடைத்திருக்கிறது என்ற உண்மையைப் போட்டு உடைத்த கவிஞர் ஞானக்கூத்தன் வேறு அங்கே அந்த மேடையில் அமர்ந்திருக்கிறார். விடுவாரா மனிதர் ?

நேரில் கூட்டம் பார்த்து பேச்சை அவதானித்த ஜெயமோகன் மறுநாள் தனது புத்தகக் குவியலின் வெளியீட்டு விழாவில் கருணாநிதிக்கு எதிர்வினை புரிந்திருக்கிறார்.

'இந்த மேடையில் நின்று அந்த மூன்று சதவிகித முணுமுணுப்பின் பிரதிநிதியாகச் சொல்கிறேன். திரு. கருணாநிதி அவர்கள் எழுதும் எழுத்துக்கள் தீவிர இலக்கியத்தின் எப்பிரிவிலும் பொருட்படுத்தக் கூடியவை அல்ல '
இப்படி ஜெயமோகன் பேதமையாக பதில் சொல்லியிருப்பதை விட எதிர்வினை புரியாமலேயே இருந்திருக்கலாம். இலக்கிய உலகத்தின் அமைதி கெடாமலாவது இருந்திருக்கும்.

இலக்கியத்தைப் பொறுத்தவரை கருணாநிதி சுத்த சைவம். மறந்தும் தனது எழுத்தை தீவிர இலக்கியத்தின் பக்கம் வைத்துப் பார்க்கவும் பார்க்காதவர். சங்கத் தமிழில் செய்யப்பட்ட பழந்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தின் நீட்சியாகத்தான் தனது எழுத்தைப் பார்க்கிறவர் அவர். யோசிக்கிறபோது கருணாநிதியின் பார்வையின் ஜெயமோகன் சொல்லியிருப்பது வரவேற்புக்குரியது.

சீண்டியவர்களுக்கு துல்லியமாய் பதில் சொல்லும் கலை ஜெயமோகனுக்குத் தெரியும். எதை, எப்படி, எந்த தருணத்தில். எந்த ரூபத்தில் என்கிற எல்லா நுட்பமும் தெரியும். இங்கே அடக்கி வாசித்திருக்கிறார். ஆன்மீகத்தைப் போதிக்கும் அவருக்கு அடக்கம் இல்லாமலா போகும்! 'நாச்சியார் மட ' விவகாரத்தை தனது இதழில் வெளியிட்டு குளிர்காய்ந்தபோது காற்றாய் போய்விட்ட அவரது அடக்கம் இன்றைக்கு முழு உருக்கொண்டு வெளிப்பட்டிருக்கிறது.

கருணாநிதியை விமர்சிப்பது மாதிரியும் அது இல்லாத மாதிரியும் என்று ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருப்பதாகத்தான் அவரது மேடைப் பேச்சை முதல் வாசிப்பில் கவனித்தேன். அது தவறு என்று பிறகுதான் புரிந்தது. இரண்டல்ல; ஏகப்பட்ட மாங்காய்கள் அடித்திருக்கிறார். மூன்று சதவிகிதத்தினரின் பிரதிநிதியாக அவரே தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது அதிலொன்று.

கருணாநிதியின் எழுத்துக்களை காத்திருந்து வாங்கி புத்தகம் போடும் 'விபரம் ' கொண்ட பதிப்பக வியாபாரியான இளையபாரதி ஜெயமோகனை நோக்கி உருட்டலும் மிரட்டலும் சாடியிருக்கிறார். தனது மேடையில் நவீன இலக்கியவாதிகளை பிறாண்டப் போய்தான் எதிர்வினை கிளம்பி இருக்கிறது என்ற அடிப்படை ஞானம் கூட அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
கருணாநிதியைச் சுட்டி ஜெயமோகன் எப்படி பேசலாம் என்கிற பார்வையில்தான் இளையபாரதியின் கோபம் கிளைத்திருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஜனநாயகம் வளர்ந்த ஒரு நாட்டில் வலியவனை எளியவன் விமர்சிக்கலாகாது என்கிற சாபம் இன்னும் ஒழிவதாகத் தெரியவில்லை.

இளையபாரதி தனது வசவில் உபரியாக ஜெயமோகனை மலையாளி , மனநோயாளி என்றிருக்கிறார். மலையாளி என்ற இளக்காரம் மடமையும் அநாகரீகமும் கொண்டது. மனிதனை மனிதனாகப் பார்க்க மறுக்கிற வீம்பு இது. தவிர மனநோயாளி என்கிற அவரது வசவு குறித்து சட்டென்று மறுத்துச் சொல்லிவிட முடியாது. இளையபாரதி என்னைவிட நெருக்கமாக ஜெயமோகனிடம் பழக்கம் கொண்டவராக இருந்திருக்கலாம். மேலும் நான் ஜெயமோகனை சந்தித்து மூன்று வருடங்களுக்கு மேலும் ஆகிறது.

இளையபாரதியிடம் கேட்க ஒன்று இருக்கிறது. நமது தயவை நாடி வந்திருக்கிறார்கள் என்று கருணாநிதி பேசி இருக்கிறாரே..எப்படி அது ? புரிகிறதா ? சொல்வீர்களா ? ஒருசமயம் உங்களை மனதில் கொண்டுதான் அப்படி சொல்லியிருப்பாரோ ? இருக்காது. பின் எதற்காக அப்படி பேசினார் ?

நவீன இலக்கியவாதிகளுக்கு கருணாநிதியின் தயவு எதற்கு என்றுதான் புரியவில்லை. வாசிப்பு - அனுபவம் - முயற்சி என்பதான பின்னணியில் கனிமொழி கவிதைத் துறையில் சாதித்திருக்கும் சாதிப்பு மலைக்க வைக்கக் கூடியது. இதில் ஏதேனும் கருணாநிதியின் தயவு உண்டா ? அவரது மகளுக்கு தேவைப்படாத தயவு பிற நவீன இலக்கியவாதிகளுக்கு தேவைப்படுமா என்ன ?

வேண்டுமானால் இப்படி யோசித்துப் பார்க்கலாம். கருணாநிதி முன்வந்து - தயவு காட்டி - நவீன இலக்கியமும் இலக்கியம் சார்ந்ததுதான் என ஒப்புக் கொண்டவராய் தனது தொண்டர்களுக்கு சிபாரிசு செய்யலாம். படிக்கும்படியாக அன்புக் கட்டளை கூட பிறப்பிக்கலாம். நல்ல விசயம்.

இப்படி ஒரு அறிவிப்பு அவர் செய்வதாக இருந்தால் முதலில் நவீன இலக்கியங்களை அவர் தீர வாசித்திருக்க வேண்டும். இல்லையென்றாலும் இது சாத்தியமாகக் கூடிய ஒன்றுதான்.

இவரது தொண்டர்கள் குட்டி அரசியல் தலைவர்களாக பரிணமிக்க எத்தனையோ கலைகளை கற்றுத் தேற வேண்டியிருக்கிறது. இதில் நவீன இலக்கியம் படிப்பதென்றால் எப்படி ? கிடைக்கும் கொஞ்சத்து ஓய்வு நேரங்களில் கூட அவர்கள் சன் டி.வி தொடர்களைப் பார்த்து தங்களது விசுவாசத்தை பறைசார்த்த வேண்டியல்லவா இருக்கிறது ?

1992-ம் ஆண்டு சுபமங்களா தீபாவளி சிறப்பு இதழில் கருணாநிதியின் இலக்கியம் சார்ந்த பேட்டி வந்திருந்தது. மறைந்த திரு. கோமல் சுவாமிநாதன் அதன் ஆசிரியர். கோமல் அவர்களுக்கு தமிழகத்து அரசியல் கட்சி தலைவர்களோடு நட்பு இருந்தது. கருணாநிதியிடம் அது கொஞ்சம் அதிகம். அதனால்தானோ என்னவோ அவரது சுபமங்களாவுக்கு இலக்கிய ரீதியான பேட்டி தர கருணாநிதி சம்மதித்து இருக்க வேண்டும். பொதுவாக அவர் நவீன இலக்கிய இதழ்களுக்கு பேட்டி தருவதில்லை. மொத்ததில் ஐம்பத்தி மூணே முக்கால் பேர்கள் படிக்க வெளிவரும் சிற்றிதழ்களுக்கு அளிக்கும் பேட்டியால் எந்தப் பயனுமில்லை என்று அவர் கணித்திருக்க வேண்டும். சரியான கணிப்பு அது. எனக்குத் தெரிந்து இலக்கிய இதழில் அவர் பேட்டி என்பது சுபமங்களா பேட்டிதான் - முதலும் கடைசியும்.

அந்த பேட்டியில் குறிப்பிடத்தகுந்த கேள்விகளுள் ஒன்று: நவீன இலக்கியம் குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன ?

பதில் சொல்லியிருந்தார் கருணாநிதி. அந்த காலகட்டத்தில் அவர் முதலமைச்சர். IAS அதிகாரிகளை முடுக்கிவிட்டு அரசாங்கம் நடத்துபவர். இன்னொரு பக்கம் இலக்கிய முன்னோடிகளில் ஒருவர். மேற்கண்ட கேள்விக்கு அவரா அப்படி பதில் சொன்னார் என்பதான வியப்பு எழுந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அந்த வியப்பு அப்படியே இருக்கிறது.

'ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதப்படும் எழுத்துக்களை நான் வரவேற்பவன் அல்ல. அதைத்தானே நவீன இலக்கியம் என்று சொல்கின்றீர்கள் ? அதன் மீது மதிப்பில்லை ' என்றிருந்தார்.

என் நினைவுகளின் சுருதி சுத்தமாக இருக்கும் பட்சத்தில் இப்படித்தான் பதில் அளித்திருந்தார் கருணாநிதி. வாக்கிய அமைப்பு வேண்டுமானால் கொஞ்சம் மாறி இருக்கலாம். ஆனால் சாரம் இதுதான்.

நவீன இலக்கியம் குறித்த கருணாநிதியின் நிலைப்பாட்டை முன்வைத்து சுபமங்களாவுக்கு ஓர் நீண்ட கடிதம் எழுதினேன். அதில் அவர் இலக்கியம் குறித்து சின்ன அளவில் விமர்சனமும் வைத்திருந்தேன். அடுத்த இதழில் அது பிரசுரமாகி இருந்தது. சுபமங்களாவில் இரண்டு பக்க அளவில் வெளிவந்திருந்த பெரிய சைஸ் வாசகர் கடிதம் அது.

கருணாநிதி குறிப்பிட்டு இருப்பது மாதிரி ஆங்கிலம் கலந்த தமிழில் சில எழுத்தாளர்கள் எழுதிவருகின்றார்கள் என்பது வாஸ்தவம்தான். மறுக்க முடியாது. கண்டிக்கத்தக்கதும் கூட. ஆனால் ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதப்படும் எழுத்தை நவீன இலக்கியம் என்று யார் சொன்னது ? அவர் இந்த நிலைப்பாட்டை எங்கணம் பெற்றார் என்பதை அறிய விரும்புகிறேன் என்று எழுதி இருந்தேன்.

நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கம், வளர்ச்சி, சாதிப்புகள், நுட்பத்தின் அழகு, இன்னொரு பக்கம் கருணாநிதியின் எழுத்து, அவர் படைப்புகளில் உள்ளார்ந்து வெளிப்படும் பிரச்சார நெடி, அதனாலேயே அன்றைக்கு அவர் எழுதிவந்த திருக்குறள் காமத்துப்பாலின் அர்த்தப்பாங்கு மாசு கொண்டு விட்டதெனவும் எழுதியிருந்தேன்.

இன்றைக்கு யோசிக்கிறபோது சுபமங்களாவில் வெளிவந்திருந்த கடிதத்தில் இடம் பெற்ற எனது இரண்டு மதிப்பீடுகள் மீது நான் கொஞ்சம் மாறுபடுகிறேன்.

கருணாநிதியின் பண்டைய இலக்கிய ஈடுபாட்டையும் அதையொட்டிய அவரது முயற்சிகளையும் கேலி செய்திருக்கிறேன் . அப்படித்தான் இருந்தது அவரது கதைகளும் கவியரங்கத்து கவிதைகளும். ஆனால் பிற்காலத்தில் அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியப் பூங்கா என்று பலதைப் பற்றியும் காட்சி விரிவுரைகள் எழுதிய வண்ணம் இருக்கிறார். இன்றைக்கு யோசிக்கிறபோது எனது அந்த கேலி தவறு என்று படுகிறது. கற்று பெற்ற வழியில் அவர் முன்னேறுவது சரிதான். பாராட்டுதல்களுக்கும் உரியதே.

கருணாநிதி வசனம் எழுதிய பழைய படங்கள் மூலமாய் அன்றைக்கு அவர் தமிழின் புதிய எல்லைகளைத் தொட்டு சாதித்தவராக என் கடிதத்தில் புகழ்ந்து இருந்தது அத்தனைக்கு சரியான கணிப்பல்ல என்று இப்போது படுகிறது. அவரது திரைப்பட வசனங்கள் கணக்கு வழக்கில்லாமல் புகழப்பட்டதற்கும் இன்றைக்கும் அவரது பராசக்தி வசனங்களை ஒப்பித்துக் காட்டி சிலர் புளகாங்கிதம் அடைவதற்கும் பின்னால் மறைமுகமாய் முடுக்கி விடப்பட்ட அரசியல் விசையே பெரிய அளவிலான காரணம் என்று படுகிறது.

சுபமங்களாவில் என் விமர்சனக் கடிதம் வந்த ஆண்டில் கருணாநிதியின் மந்திரிசபையில் இடம் பெற்றவரும் தி.மு.கழகத்தின் இலக்கிய அணி செயலாளராகவும் இருந்த திரு. தமிழ்க் குடிமகன் தன் தலைவருக்காக பரிந்து எனக்கு பதில் எழுதியிருந்தார் அடுத்த இதழில். நான் எடுத்து வைத்த சங்கதிகளுக்கு பதில் இல்லை. மாறாய் அவர்களது அரசியல் எதிகளின் சூழ்ச்சி இது என்றிருந்தார். தலைவரின் இலக்கியப் புகழை மாசு படுத்துகிறேன் என்பதாக நினைத்து வடிவு செய்யப்பட்ட பதில் அது. என்றாலும் இளையபாரதி ஜெயமோகன் திசைபார்த்து செய்த உருட்டல் மிரட்டல் மாதிரி அது இல்லை. நரகல் தனமான வார்த்தைகளும் கிடையாது. ஒரு அரசியல் கட்சியில் ஈடுபாடு கொண்டு மந்திரியாகிற அளவுக்கு உயர்ந்தும் கூட மொழி உபயோகிப்பில் அரசியல் இலக்கணம் மீறினால் எப்படி ?

சுபமங்களாவில் என் வாசகர் கடிதம் பிரசுரமாகி இருந்த அதே இதழில் அடுத்த கடிதமாக பெரியவர் தி.க.சியின் கடிதம் சின்ன அளவில் பிரசுரமாகி இருந்தது. கருணாநிதி வசனமெழுதி பங்கெடுத்துக் கொள்ளும் இன்றைய சினிமாக்கள் நடப்பு கால கட்டத்தில் சரியாகப் போகவில்லை என்பதாகவும் அவரின் சினிமா மவுசு குறைந்து விட்டதென்றும் எழுதியிருந்தார். அவரது கடிதத்தை வாசித்தபோதே எனக்கு சிரிப்பு வந்தது.

பெரியவர் தி.க.சி கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்டவர். அதன் தலைவர்களில் ஒருவராகவும் கம்யூனிஸ்ட் இலக்கிய இதழ் ஒன்றில் ஆசிரியராகவும் இருந்தவர். கம்யூனிஸ்ட்கள் இலக்கியத்தை மதிக்கக் கூடியவர்கள்தான். மிகுந்த ஈடுபாடும் மக்களைப் படிக்க நிர்ப்பந்திக்க விடிய விடிய பிரச்சாரமும் செய்பவர்கள்தான். என்றாலும் வாசிப்பிலோ எழுதுவதிலோ ஒரு எல்லையைத் தாண்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்கள். மக்கள் இலக்கியம்தான் எழுதுவார்கள். படிப்பார்கள். இதனாலேயே சிந்துபாத் படக்கதை எழுதுபவரிலிருந்து கருணாநிதிவரை யாரையும் எழுத்து விஷயமாய் விமர்சித்து விடமுடியாது. மக்களுக்காக எழுதுகிறவர்களாயிற்றே! அதனால்தான் என்னவோ கருணாநிதியின் சினிமா மார்கெட் நிலவரம் பற்றி மட்டும் மதிப்பீடு செய்திருந்தார்.

தமிழ்க் குடிமகனுக்கு பெரியவர் தி.க.சியைத் தெரியும் என்று தெரிகிறது. அவர் எழுதிய பதிலில் பெரும்பாலும் தி.க.சிக்கே என்று இருந்தது. நாகரீகமாக அவரை விளித்துதான் பதில் சொல்லியிருந்தார். அதன் கசிவோ என்னவோ நானும் நாகரீகமாகவே விளிக்கப்பட்டேன். நான் இதற்காக தி.க.சிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தமிழ்க் குடிமகன் ஓரிடத்தில் என்னை 'யார் எவர் என்று பெயர் தெரியாதவர் ' என்பதாய் குறிப்பிட்டு இருந்ததாக ஞாபகம். அன்றைக்கு நான் இலக்கிய வட்டத்தில் பெயர் போடாதவன்தான். இன்றைக்கும் கூட மாசு குறையாமல் அப்படியேதான் இருக்கிறேன். இப்பவும் கூட என்னை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இலக்கிய வட்டம் மட்டுமல்ல பொதுவாகவே காலம் முதலில் பழி தீர்ப்பது நவீன கவிதைகள் எழுதுபவனைத்தான்.

அடுத்த ஆண்டு குற்றாலத்தில் கலாப்ரியா ஏற்பாடு செய்திருந்த கவிதைப் பட்டறைக்கு சென்றிருந்தேன். கோமல் அவர்களும் அங்கு வந்திருந்தார். அவரைப் பார்த்து கைகளைப் பற்றி வணக்கம் சொன்னபோது 'என்னை வம்பில் மாட்டி விட்டாய். உனது கடித விமர்சனத்திற்காக கருணாநிதியின் குடும்பத்தார்கள் என்னிடம் கோபித்துக் கொண்டார்கள் - எப்படி அதை பிரசுரிக்கலாம் என்று. நீ பயப்படாதே. நான் சமாளித்துக் கொண்டேன் ' என்றார்.

இலக்கிய விமர்சனத் தகிப்பில் மறுப்பு எழுதப்போய் பழக்கமற்ற அந்த குடும்பத்தார்களின் மனநோவுக்கு ஆளாகி விட்டோமே என்று வருத்தமாக இருந்தது. நின்ற நிலையில் சென்னைப் பக்கம் திரும்பி கண்களை மூடினேன்.
இன்றைக்கு இலக்கிய உள்வட்டம், வெளிவட்டம் எல்லாம் கூடிப்பிரிந்து நின்று வாதப் பிரதிவாதத்தில் ஜமாய்க்கிறார்கள்.

1. கருணாநிதி இலக்கியவாதிதான் . ஆம் / இல்லை

2. கருணாநிதியின் தமிழ் நடை அரதப் பழசு. ஆம் / இல்லை

3. ஜெயமோகன் கருணாநிதியைச் சுட்டி விமர்சனம் வைத்தது வேண்டாத வேலை. ஆம் / இல்லை

4. ஜெயகாந்தன் ஜெயமோகனை புகழ்ந்தது ரொம்பவும் அதிகம். ஆம் / இல்லை

5. ஞானக்கூத்தன், கல்யாண்ஜி, கலாப்ரியா போன்ற நவீன இலக்கியவாதிகள்
கருணாநிதியின் இலக்கிய சங்கதிகளை புகழ்ந்தது சரி. ஆம் / இல்லை

இப்படி பல முகாந்திரங்கள். நடப்பு இலக்கியச் சங்கதிகளை அதன் அனுதாபிகள் ரொம்பவும்தான் அலசுகிறார்கள். பெரும்பாலான வாராந்திரிகள் அநியாய கரிசனத்தோடு அவைகளை பதியவும் செய்கின்றன. நடக்கும் விவாதங்களின் மேல் ஒருபக்கம் சங்கடம். இன்னொரு பக்கம் அவைகளின் போதாமை குறித்த யோசனை. நான் மதிக்கும் ஞாநி கூட இது குறித்த பதிவில் ஏனோ தானோ என்றுதான் எழுதியிருக்கிறார்.

இந்த இலக்கியச் சர்ச்சை நடிகைகளின் திருப்பதி கல்யாணச் செய்தி மாதிரி ஆகிவிட்டது.

ஆழமான - தீர்க்கமான - தீர்மானமான - எதிர்த்து நின்ற - எள்ளி நகையாடிய - நேற்றுவரை உனதம் என்று கருதிய இலக்கியம் சார்ந்த தனது நிலைப்பாடுகளை அவ்வப்போது ஒரு நொடிப்பொழுதில் நம்ம ஜெயமோகன் மாற்றிக் கொள்ளக் கூடியவர். மாற்றிக் கொண்டபடியும் இருப்பவர். அப்படி ஒரு அசுர பரிணாம வளர்ச்சி. மையம் கண்டு நில்லாத ஓட்டம்.

வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஓடுகிற ஓட்டமாக என் நண்பர்கள் சிலர் அவரது ஓட்டத்தை கணிக்கிறார்கள். யதார்த்த்தில் வெற்றியை நிர்ணயிக்கும் கம்பம் எதிலும் கிடையாது என்பதுதான் வாழ்வின் சோகம்.

இந்த ஓட்டத்திற்கிடையேயும் சிலநேரம் ஒரு சுற்றுக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி அதன் உன்னதம் குறித்து ஒருபாடு நமக்கு எடுத்துரைப்பார். அப்பொழுது நாம் அங்கேதானே நின்றுகொண்டு இருக்கிறோம் என்பதை பொருட்படுத்த மாட்டார். எழுத்தால் எதனையும் நிரூபித்துவிட முடியும் என்ற எண்ணம் கொண்டவர். அப்படி ஒரு எழுத்து தமக்கு சமைந்திருப்பதாக கருதக் கூடியவர். எழுதுகோளைத் திறந்தால் அப்படியே கொட்டும்படியான எழுத்து வரம் தனக்கு வாய்த்திருப்பதாக நம்பிக்கை அவருக்கு.

கிளைவிட்டு கிளையில் எத்தனை முறை மாறினாலும் அன்றைக்கு கையில் எடுக்கும் நிலைப்பாட்டை தூக்கிப் பிடிக்கும் விதமாகவும் நவீன இலக்கியவாதிகள் தனக்குப் பின்னால் அணிவகுக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாகவும் கட்டுரைகள் எழுதுவார். அது மாதிரியான கட்டுரைகள் ரொம்ப விசேஷமாக இருக்கும்.

நவீன இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, அணுகி, கிடைக்கும் எழுத்தை எல்லாம் வாரி விழுங்கும் நமது விடலைகள் அந்த கட்டுரையை கண் சிமிட்டாமல் படிக்க , இங்கத்திய பெரிசுகள் அவர்களை வேடிக்கைப் பார்ப்பவர்களாக இருப்பார்கள்.

பொதுவாகவே ஜெயமோகன் எதையும் தீர்க்கமாய் சொல்லியே பழக்கப் பட்டவர். சு.ராவை புகழ்ந்த போதும் சரி, அவரை உண்டு இல்லையென கிழித்துக் கடாசியபோதும் சரி அவரது தீர்க்கம் துல்லியம் கொண்டது. அதே தீர்க்கத்துடன் சில ஆண்டு கடந்த நூறு வருடங்களுக்கு முன்காலத்தில் தமிழில் வெளிவந்த நாவல் படைப்புகள் அத்தனையும் உதவாக்கரை என்றும் தமிழில் நாவலே இல்லையென்றும் இவர் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்.

இந்த தீர்க்கம் இன்னும் இன்னும் பெரிதாகி நம்மை வியப்பூட்டுவதாக பரிமாணம் கொண்டு காட்சி தருகிறது. உலக அளவில் போற்றப்படும் நான்கு நாவல்களில் தனது விஷ்ணுபுரமும் ஒன்று என்ற உண்மையை நமக்கு அவர் உணர்த்தியிருக்கிறார். அந்த பட்டியலில் உள்ள முதல் மூன்று நாவல்களைக் குறித்து அவர் எதுவும் சொல்லவில்லையெனினும் ஊகிப்பது எளிது. அநேகமாக கல்கி, சாண்டில்யன் எழுதிய சரித்திர நாவலாகவே இருக்கும். மூன்றாவது அவரது 'பின் தொடரும் நிழலா 'கத்தான் இருக்கும். வேறு சான்ஸே இல்லை.

தீர்க்கம் மாதிரியே இவரிடம் சில அமானுஷ்ய சக்திகளும் இருக்கிறது. அநேகமாய் இந்த சக்தி இவர் ஈடுபாடு கொண்டு பரப்பும் கேரளத்து ஆன்மீகத்ததால் விளைந்த அற்புதமாகவும் இருக்கலாம்.

ஜெயகாந்தனுடைய 'அக்னிபிரவேசம் ' என்ற முப்பது வருஷத்து பழைய சிறுகதையை இன்றைக்கு பார்த்து விமர்சனம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். ஜெயகாந்தனைப் பற்றிய இவரது மதிப்பீட்டுக் கட்டுரையில் இது வருகிறது. மேற்கண்ட கதையில் ஓர் இடத்தை ரசித்து சப்புக்கொட்டி விளக்குகிறார். அந்த விளக்கம் அந்த கதையை எழுதிய ஜெயகாந்தனுக்கே தெரிய நியாயமில்லை என்று உரக்கச் சொல்கிறார். அப்படியே நம் புலனெல்லாம் விழித்துக் கொள்கிறது. எத்தனை பெரிய அமானுஷ்ய சக்தி! ஜெயமோகன்தான் எத்தனை பெரிய மனிதர்!!

ஜெயமோகனின் மகாத்மியத்தைத் தொகுத்தால் அது விஷ்ணுபுரத்தைவிட அளவில் பெரிதாகவும் ரசனையிலும் கூடியதாகவும் இருக்கும்.

நவீன இலக்கியத்தின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதும் நிஜமான அக்கறை கொண்டவர்களின் பார்வைக்கு :

கருணாநிதியும் அவரது துதிபாடிகளும் நவீன இலக்கியத்தை துச்சமாக நினைப்பவர்கள். இன்றைக்கு கொஞ்சம் மேலே போய் நவீன இலக்கியம் சார்ந்த வாசகர்களை மேடையில் வைத்துக் கொண்டே கிண்டலும் கேலியும் செய்திருக்கிருக்கின்றார்கள். கண்டிக்கத்தக்க ஒன்று. ஜெயமோகன் இதற்கு அவர் பாணியில் பதில் சொல்லியிருக்கிறார். இப்படிச் சொல்லியதற்காகவே வசவையும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். இது குறித்த ஆதங்கத்தோடும் இது சார்ந்த பழைய செய்திகளை கூடுதலாக பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும்தான் இந்த கட்டுரையை வடிவமைத்தேன். கருணாநிதிக்கு நவீன இலக்கியத்தைச் சேர்ந்த இலக்கியவாதிகள் கண்டனத்தை பதிவு செய்து விட்ட நிலையில் நானும் என் பங்கை செய்திருக்கிறேன்.

இப்பொழுது மீண்டும் கருணாநிதியையும் ஜெயமோகனையும் பற்றி வேறு கோணத்தில் பார்க்கலாம்.

கருணாநிதியும் ஜெயமோகனும் ஒரே நிறம் கொண்டவர்கள். கருணாநிதி அரசியல் முகம் கொண்ட இலக்கியவாதி என்றால் ஜெயமோகன் இலக்கியத்தை அரசியலாக்கிக் கொண்டிருக்கும் லட்சணம் கொண்டவர்.

தன்னை விமர்சித்தவர் யாராக இருந்தாலும் சரி அவரால் ஆதாயம் உண்டென்று தோணும் பட்சத்தில் அவரை அழைத்து தோளில் கை போடக் கூசாதவர் கருணாநிதி. அப்படி ஒரு சமத்து நம்மவருக்கும் உண்டு. எனக்குத் தெரிந்து அவரை தீர எதிர்த்தவர்களை எந்த எதிர்வினையும் முன் வைக்காமல் ஜெயமோகன் கரம் கோர்த்துக் கொண்ட நிகழ்வுகள் அதிகம்.

தங்களது ஆதாயத்தை முன் நிறுத்தி எதையும் எப்படியும் என்றைக்கு வேண்டுமானாலும் பந்தாடக் கூடியவர்கள் இவர்கள்.

நில்லாது சுழலும் உலகில் கருணாநிதியும் ஜெயமோகனும் ஒரே மேடையில் ஏற வெகுகாலம் பிடிக்காது. கருணாநிதி ஜெயமோகனை பாராட்டுவார். ஜெயமோகனோ பாராட்டுதல் மட்டுமல்லாமல் ' கருணாநிதியின் படைப்பாக்கங்களை நவீன இலக்கியவாதிகள் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் ' என்ற வேண்டுகோளும் வைப்பார்.

கல்கியின் நூற்றாண்டு விழா மேடையில் மூப்பனாரோடு ஏறி மாலை மரியாதையை பெற்றுக் கொண்டு கல்கியின் எழுத்துக்களை நவீன இலக்கியவாதிகள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஜெயமோகன் சொல்லவில்லையா என்ன ? இந்த மறுஆய்வு வேண்டுகோள் பட்டியலில் சுஜாதா பிறகு வந்து சேர்ந்தார். இன்றைக்கு ஜெயகாந்தனும் இடம் பிடித்திருக்கிறார். தொடர்ந்து கருணாநிதியும் அந்தப் பட்டியலில் இடம் பெற எத்தனை காலம் ஆகும் ?

கருணாநிதிக்கு நவீன இலக்கியம் இரண்டாம் பட்சம். அவ்வப்போது அதை பிறாண்டி வைக்கத் தவற மாட்டார். மற்றபடி அவருண்டு அவருடைய பண்டைய இலக்கியம் உண்டு என்று போய்விடக் கூடியவர்தான். மேலாய் தமிழர்கள் எல்லோரையும் கட்டி அழைத்துப் போய் கரைசேர்த்து ரட்சிக்க வேண்டிய களப்பணி வேறு. யதார்த்தத்தில் இவரால் நவீன இலக்கியத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது.

இன்றைக்கு எல்லா பிர்ச்சனைகளிலும் ஜெயமோகனின் ஆளுமை ஓர் நட்சத்திர சங்கதி. இங்கு எழும் பாதிக்கு மேலான பிரச்சனையில் ஜெயமோகனது தடத்தின் பதிவு இருக்கக் காணலாம். 'ரப்பரு 'ம் 'மண் 'ணும் இன்னும் அவரது சில சிறுகதைகளும் படித்து உச்சி முகரப்போய் இன்றைக்கு விழிக்கிறோம். இலக்கிய வட்டத்தில் இவரது ஒவ்வொரு நடை மீது கவனம் கொள்வது நல்லது. முடிந்தால் மனதளவில் தள்ளிவைப்பு கூட செய்யலாம். பாவமில்லை.

இலக்கியம் தனிமனிதர்களின் ஆளுமையை விட பெரியது. அதன் நெடிய ஓட்டம் தடைபடக் கூடாதது. அந்த தீரா நதியில் தாகம் தணிப்பவர்கள் நாம். அதற்காக எந்த விலையும் கொடுக்கலாம்.

ஞானக்கூத்தன், வண்ணதாசன், கலாப்ரியா போன்றவர்கள் கருணாநிதியை பாராட்டியது குறித்து நான் விமர்சனம் வைப்பதை விட நான் மதிக்கும் படைப்பாளிகளில் ஒருவரான திரு. சா. கந்தசாமி அவர்களைப் பற்றி எப்போதோ கேட்டறிந்த ஒரு செய்தியை இங்கே சொல்வது சரியாக இருக்கும். சா.கந்தசாமி சில வருடங்களுக்கு முன் குங்குமத்தில் பணிபுரிந்தார். அந்த வகையில் கருணாநிதியுடன் தீர நட்பு இருந்தது. அந்த கால கட்டத்தில் ஒரு சமயம் கருணாநிதியின் எழுத்தை பாராட்டும்படியான ஒருவித நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டபோது தனது குங்குமம் பணியைத் துறந்து வந்து விட்டதாக சொல்வார்கள். - கருணாநிதியின் எழுத்துக்கு அங்கீகாரம் தருவதென்பது மடமையான செயலென்று அவர் கூறியதாக சொல்வார்கள்.

அந்த மூவரையும் முன்வைத்து நவீன இலக்கியவாதிகளை அப்துல் ரஹ்மான் நக்கல் அடித்ததையும் கருணாநிதி அதைக் கிளறி வேடிக்கைப் பார்த்ததையும் அவர்கள் வேண்டுமானால் அப்துல் ரஹ்மான் எங்களின் நண்பர்; கருணாநிதி வயதில் மூத்தவர் என்று அன்றைய சீண்டலை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கலாம். இங்கே எங்களுக்கல்லவா ஏதோ அறுக்கிறது.

திராவிட இயக்கத்தைச் சார்ந்த தலைவர்களின் எழுத்து குறித்து மறைந்த க.நா.சு அவர்கள் தனது அபிப்ராயத்தை இரண்டு கட்டுரைகளில் எழுத படித்திருக்கிறேன். இரண்டும் வெவ்வேறு சமயங்களில் எழுதியவை.
திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களுள் பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் எழுத்தை சிறப்பானது என்கிறார் . எது ஒன்றையும் மறைத்தோ திரித்தோ சொல்லவேண்டியதை சொல்ல அவருக்கு தடையோ இல்லாததால் அவரின் எழுத்து சிறப்பாகவும் தனித்தும் மிகைத்தும் தெரிகிறது என்றிருக்கிறார் அவர்.

இன்னொன்று தமிழ் இனக் காவலர் கருணாநிதி குறித்து.

கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்களை விட கருணாநிதி சிறப்பாக எழுதுகிறார் என்று ஒரு இடத்தில் சொல்லி இருக்கிறார்.

நவீன இலக்கிய கர்த்தாவும் பிரபல விமர்சகர் என்றும் போற்றப்படுபவருமான மறைந்த க.நா.சு அவர்களின் இந்த பாராட்டுதலுக்காக கருணாநிதி நிச்சயம் சந்தோஷப் படலாம். என்ன....கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்களையோ அவர்களின் தமிழ்ப் பணியையோ க.நா.சு ஒருபோதும் ஒப்புக் கொண்டது கிடையாது. மதித்ததும் கிடையாது.

Email:tamilpukkal@gmail.com

Sunday, June 04, 2006

விமர்சனங்களும்-எதிர் வினைகளும்.

"உங்கள் படைப்புகளின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, நீங்கள் எந்தஒரு பதிலும் சொல்வதில்லையே?" என்று தி. ஜானகிராமனிடம் கேட்கப்பட்டப்போது"யானையை ஒருவர் தனது கண்ணோட்டத்தில் பார்த்து விவரிக்கும் அந்த பார்வைஅவர் அளவில் சரியானதே. அதற்க்கு பதில் சொல்வது தேவை அற்றது" என்றார்.

தி.ஜா. இயல்பாகவே மெளனப் பேர்வழி. எல்லோரிடமும் சகஜம் பாராட்டும்குணம் அவரது குணம். மனப் பாதிப்பின் அதிர்வுகளையும், கோபத்தாபங்களையும் படைப்புகளின் வழியே மட்டும் வெளிப்படுத்தியவர். அவரது சுபாவத்தை முன்வைத்து, அவர் நழுவியதை நாம் புரிந்து கொள்வதே சரியாக இருக்கும்.

க.நா.சு.வின் விமர்சனங்கள் படைப்புலகில் மிகவும் பிரபல்யமானது.அவர் விமர்சனங்கள் வைக்கத் தொடங்கிய காலம் என்பது, விமர்சனம்என்ற ஒன்றை நம் படைப்பாளிகள் எதிகொண்ட தொடக்க காலம்.அன்றைக்கு அவரது விமர்சனத்தால் நம் படைப்பாளிகள் அநியாயத்திற்குச் சங்கடப்பட்டுப்போனார்கள்.

க.நா.சு.வின் விமர்சன அனுபவம் என்பது, பெருவாரியான உலக இலக்கியங்களைஅவர் கற்று தேர்ததினாலானது. நம் இலக்கிய வட்டத்தில் யாரதுப் பிடிக்கும் அகப்படமட்டார்.அவ்வப்போது அவர் தேர்வு செய்யும் படைப்பாளிகளின் பட்டியல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏர்படுத்தக்கூடியது. அந்த பட்டியல், காலத்தால் அவராலேயே மற்றங்களுக்கும் உள்ளாகும். இந்த மாற்றத்தை இயற்கையான நிகழ்வென்பார். நம் படைப்பாளிகள் அதை ஒப்புக் கொள்வது கிடையாது.

வெங்கட் சாமிநாதன் விமர்சன வட்டத்தில் இன்னொரு சிகரம். இந்த நிலையைஅடைய, அவர் எழுதிக் குவித்தவைகளைத் தாண்டி கலைகளின் எல்லா கூறுகளிலும் அவர் தேடியத்தேடல்கள் அதிகம். பெரும்பாலும் அவரது விமர்சனங்கள் நுட்பம் சார்ந்தவைகளாக இருக்கும்.என்றாலும், சில நேரம் அவற்றில் அவரின் பார்வை தடுமாற்றம் பளிச் என்று தெரியும். கலை இலக்கியம் தாண்டிய அவரது அரசியல் நோக்கே அதற்கு பிரதான காரணமாகத் தெரிகிறது.

வெ.சா.வுக்கு 'ஈகோ' சார்ந்தப் பிரச்சினைகளும் அதிகம். எந்த ஒருமேலானப் படைப்பாளியானாலும், தன்னை மதிக்கவில்லை என்றாலும், தனது அரசியல் நோக்கிற்குமுரணானவர்யென அறிய வந்தாலும் தாட்சணையற்று புறம் தள்ளுவார். அவரது கணைகள் எதிர்பட்டவர்களை அவ்வப்போது குத்திக்கிழிக்கவும் கிழிக்கும்.இப்பொழுது அவரிடம்'தேவலாம்போல்ஒரு தோற்றம்' தென்படுவதாக கூறுகின்றார்கள். அது அவரது முதுமையை ஒட்டிய இயலாமை யென்றே இலக்கிய நோக்கர்கள் கணிக்கிறார்கள்.

விமர்சன உலகிற்குள் சுந்தர ராமசாமி பெரிய அளவில் பிரவேசித்ததில்லை.பிரவேசிக்கும் தருணங்களில் முழு ஈடுபாடுடன் செம்மையாகவே செய்வார். எதை ஒன்றை எழுதினாலும்அதனின் எல்லா கதவுகளையும் திறந்துப் பார்த்து எழுதுவதென்பது அவர் கைவரப்பெற்ற தீர்க்கம். அவரது விமர்சனக் கட்டுரைகளில் அதனை நாம் முழுமையாக தரிசிக்கலாம். ஆழமான சித்தரிப்புகளில் கூட நம்மை உள்ளார்ந்து சிரிக்க விடுவார், பல இடங்களில் நின்று நிதானித்து யோசிக்கவும் செய்வார். விமர்சனத்தின் சில காரணிகள் எதிர்வினை எழுப்பும் என்று அவர் கருதும் பட்சம், அதன் வார்த்தை அடுக்குகளை மெருகூட்டி அலையெழா கடல் பரப்பாக காமிக்கவும் காமிப்பார்.

தனது மூத்தப் படைப்பாளிகள் சிலரைப் பற்றி நினைவுக் குறிப்புகளுடனும், ஆய்வு நோக்கில் இவர் எழுதியவைகள் புத்தகங்களாக தனியே வந்திருக்கிறது. அவைகளுக்குஎதிர்வினைகள் பெரியதாக இல்லையென்றலும், அரசியல் ஆளுமைக்கொண்ட ஜீவாவைப் பற்றி சு.ரா. எழுதிய புத்தகதிற்கு பரவலாக எதிர்வினை எழுந்தது. சு.ரா. வின் பழைய காம்ரேட்டுகளும், மார்க்சிஸ்ட்அனுதாபிகளும் அந்த புத்தகத்தின் சிலப் பகுதிகளை முன்வைத்து எதிவினைப் புரிந்தனர்.

மார்க்சிஸ்ட் சிந்தனைக் கொண்ட இலக்கிய வாசகர்களுக்கு சு.ரா. விடம் எதிர் படுவதென்பது அவர்களின் தினச் செயல்பாடுகளில் ஒன்றாகவே இருந்தது. சு.ரா. வின் ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலை முன் வைத்து அவர்கள் இதழ்கள் வழியாகவும், இலக்கிய மேடைகள் வழியாகவும் ஆண்டு கணக்கில் எதிவினைப் புரிந்தார்கள் என்றால் பாருங்கள்.

விமர்சனங்களின் வழியே, எதிர்படும் சகப்படைப்பாளிகளை தங்களது தடித்த வார்த்தைகளால்ஒடுங்கச் செய்த சாமர்த்தியசாலிகளின் வித்தைகளெல்லாம்இன்றைக்கு பழங்கதையாகப் போய்விட்டது. மறைந்த பிரமிளும், இன்றைக்கு பெரிய மாற்றம் கண்டிருக்கும் சாரு நிவேதிதாவும் அன்றைக்கு அப்படி ஒரு முகம் பெற்றவர்கள்.

எதிப்பு ரீதியான விமர்சனத்திற்கு கட்டுரைகள் எழுதி சலிக்கிறபோது, தனது கவிதைகளை ஆயுதங்களாக்குவார் பிரமிள். தொண்ணூறுகளில், ஒரு சிற்றிதலில் இவர் எழுதிய நாற்பத்தி ஆறு கவிதைகள், வெளியாகி இருந்தது. 'அத்தனையும் எதிப்புக் கவிதைகள்' என்ற அறிவிப்புடன்.

பிரமிளின் விமர்சனங்களில், அவரது கோபமே பிரதான இடத்தை வகிக்கும்.அது விமர்சனங்களின் உள்ளார்ந்த் சாரத்தை நிறம் மாற்றவும் செய்யும். அதை அவர் உணர்ந்தாக அறிகுறியே இல்லை. சாருவிடம் இவர் முரண்பட்ட காலக்கட்டத்தில், அவரை கட்டுரை ஒன்றில் சாடியது போக சாருவையும், அவரது ஊரைச் சேர்ந்த இன்னொருப் படைப்பாளியான ஆபிதீனையும் இருவர் அல்ல ஒருவரே என்ற ரீதியில் தீர நிறுவியிருந்தார். அந்த கட்டுரை வாசித்தற்கு முந்தைய வாரம்தான் நாகூர் சென்றிருந்தேன். அங்கே, அவர்கள் இருவருடன் நண்பர் நாகூர் ரூமியையும் சேர்த்து வைத்து சந்தித்தது நினைவுக்கு வந்தது. கட்டுரையில், குறிப்பிட்ட அந்தப் பகுதியை மீண்டும் ஒருதரம் வாசித்து என்னை நான் கிள்ளிப் பர்த்தேன். வலித்தது.

அன்றைக்கு, சாரு நிவேதிதாவின் விமர்சனப் பாங்கு என்பது அவரது பிரத்தியோகதிட்டமிடலில் இருந்து துவங்கக் கூடியது. தனது இருப்பை இலக்கிய வட்ட பெரும்பான்மையினரின்பார்வைக்கு கொண்டு சேர்க்கும் முகமாக, அவர் கைக்கொண்ட மாறுப்பட்ட திட்டமிடல் அது. தனது சொந்த மண்ணில், காலத்தின் நாகரீகம் பொருட்டு வழக்கொழிந்துப்போன சொல்லடைகளும் வளமான வசவுகளும் சாருக்கு விரல் நுனிச்சங்கதி. விமர்சனங்களில் மேவும் அவரது வசவுகள் கிளர்ச்சியூட்டும்.அதன் ரசனைக்காகவே அவரது கட்டுரைகளைத் தேடிப் படித்ததுண்டு. அன்றைக்கு அவரது கட்டுரைகளைத் தேடிப் படித்ததற்கு வேறு வலுவான காரணங்களும் இருந்தது. சாருவின் இலக்கிய வாசிப்பு உலகளாவியது. கட்டுரைகளிலும் விமரசனங்களிலும் அதன் தாக்கம் பரவலாக இருக்கும். வாசிப்பில் அது தரும் போதை, அவரது வசவுகளைத் தாண்டும் கிளர்ச்சிக் கொண்டது.

சமீபத்திய தமிழ் வார இதழ் ஒன்றில், தனக்கு நேர்ந்ததாக குறிப்பிட்டிருக்கும் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சாரு ரொம்பவே மாறிவிட்டதாகத் தெரிகிறது. அருட்பெரும் ஜோதிதனிப்பெரும் கருணை என்கிறார். கேட்கும் நம் காதுகள் பாக்கியம் செய்தவை.

நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளில் நடமாடும் ஆண்களும் பெண்களும் இன்னும்உடைகள் அணிந்து, தங்களது தேகப் பசியை மறைக்க வேசம் கட்டுபவர்களாகவே இருப்பதில் அவருக்கு ரொம்ப வருத்தம். நம் படைப்பாளிகள் திருந்தினால்தானே அவர்களின் படைப்பு மாந்தர்களும் திருந்துவார்கள் என்ற ரீதியில் சமீப காலங்களாக ஆதங்கப்பட்ட சாருதான், இன்றைக்கு இன்னொருப் பக்கம் சத்திய சன்மார்க்கத்தை / உயிர்களிடம் நேயத்தையும் போதித்த வள்ளார் ராமலிங்க அடிகளிடம் பணிகிறாரென அறிய வந்தபோது எங்கோ இலேசான நெருடல். மெய்ஞானத்தையும் 'அதி அதி' நவீனத்தையும் ஒருசேரப் பார்த்து நான்தான் குழம்புகிறேனோ என்னவோ.

ஜெயமோகனின் விமர்சனங்கள் இலக்கிய வட்டத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தக்கூடியது அல்ல, என்றாலும் அவ்வப்போது பேசப்படும். தொட்டதற்கெல்லாம் கட்டுரை எழுதிக்கொண்டிருப்பார். அந்த கட்டுரைகள் விமர்சனக் கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கும். அவைகளில்அவரது இலக்கிய அரசியல் பிரதானமாகப் பின்னி நெளியும்.

மூத்தப் படைப்பாளிகள் பலர் இன்னும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நம் இலக்கிய வட்டத்தில், தன்னை முதல் ஸ்தானத்தில் நிலை நிறுத்திக்கொள்ள எழுத்தின் வழியே இவர் கொள்ளும் அவஸ்த்தைகள் நம்மைப் படுத்தும். சு.ரா.வோடு தன்னை ஒப்பிட்டு ஒப்பிட்டு தாந்தான் சரி, தாந்தான் கீர்த்திக் கொண்டவன் என்ற இவரது ஓங்காரமும் அப்படித்தான்.

நாவல் மரபுடன் எழுதிய நாவல்கள் எதுவும் தமிழில் இல்லை என்ற ஜெயமோகன்தான், உலகின் தலைச்சிறந்த நான்கு நாவல்களில் தனது 'விஷ்ணுபுறம்' ஒன்றென கூறி, நம் நாவல் உலகின் 'இல்லாமையைக்' கலைந்து அதற்க்குப் பெருமையும் சேர்த்தார். தமிழ் விமர்சனப் பரப்பில்இத்தகைய சுய தம்பட்டக் கூற்று இதற்க்கு முன் கேள்விப் படாத ஒன்று.

சு.ரா. வின் மறைவையொட்டி ஜெயமோகன் எழுதி காமித்திருக்கும் 'நினைவின் நதியில்'என்கின்ற நினைவு அஞ்சலி கவனிக்கத் தக்கது. சு.ரா.வைப் பற்றிய நெஞ்சை கிள்ளும்நினைவுகளை மிக நுட்பமாக அதில் கோர்த்திருக்கிறார். சு.ரா.வின் நேரடிப் பேச்சையும், அவரதுநகைச்சுவை மிளிரும் மேற்கோள்களையும் பல இடங்களில் பதிவும் செய்து இருப்பதினால்அந்த புத்தகம் முக்கியத்துவம் கொண்டு விடுகிறது. என்றாலும், புத்தக நெடுகிலும் ஆங்காங்கேசு.ரா.வைப் பற்றி ஜெயமோகன் குறைப்பட்டு சிணுங்கியிருப்பது கவனிக்கத் தக்கது.

சு.ரா. மேற்கத்திய நாகரீக மோகம் கொண்டவர் / அந்த சிந்தனைப் பாங்கைமெச்சித் திறிந்தவர் / மார்க்சிஸ்ட் அடிப்படையில் இருந்து மாற்றம் கொள்ளாதவர் / லெளகீகவாழ்வில் ஈடுபாடு உடையவர் /பொருள் ஈட்டுவதில் மிகுந்த நாட்டம் கொண்டவர் / அவரது கஞ்சத்தனம் அலாதியானது / மன உந்தலின் போக்கில் விரைவாக எழுத இயலாதவர் /ஆன்மீகத்தில் நாட்டம் காட்டாதவர் / தத்துவங்களைச் சீண்டமாட்டார் / நார்த்திகவாதி.

ஒருவர் பெது நியாய தர்மங்களை மீறும் பட்சம், அது குறித்து அவர் மீது விமர்சனங்களை வைக்கலாம் அல்லது அந்த குறைகளை வெளிச்சம் போட்டும் காமிக்கலாம்.அதை விட்டு தனிமனிதச் சுதந்திர செயல்பாடுகளையும், அனுபவத்தால் தேடிக் கொண்ட அவர்களின் அடிப்படை உறுதிப்பாடுகளையும் பிழையாக சுட்டிக்காட்டுவது எந்த வகையிலும் ஒப்புக் கொள்ள இயலாது.

சு.ரா. வுக்கு நான் பல நேரங்களில் வலியுறுத்தியும், இம்மண்ணுக்கேர்த்த இலக்கியக்கோட்பாடுகளை அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை என்ற பொருள் படும்படி ஜெயமோகன் இந் நூலில் விசும்புவதெல்லாம் அதிகம். அநியாயத்திற்கான அலம்பல். யார், யாருக்கு சொல்வது? இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசத்தை நான் பெரிது படுத்தவில்லை, ஆனால் அனுபவ வித்தியாசத்தை அத்தனை எளிதில் தள்ளிவிட முடியாது.

யதார்தத்தில் எந்த ஒரு நிலைப்பாடும் காலத்தால் மாற்றம் கொள்ளக் கூடியதுதான்.எல்லாமும் கூட கடைசியில் சூனியத்தைத்தான் மெய்ப்பிக்கும். ஜெயமோகனின் இன்றையஇலக்கியக் கோட்பாடும், அவர் கிளர்ச்சிக் கொள்ளும் மேற்கு கடற்கரையோற ஆன்மிகமும்நாளை அவரிடம் மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.

கட்டுரைகள், விமர்சனங்கள் என்று மட்டுமல்லாது இலக்கிய மேடைகளிலும் இவரது இலக்கிய அரசியல் பிரசித்தியம். மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜனவரியில், ஜெயமோகனின்ஏழுப் புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த மேடையில், கருணாநிதியின் எழுத்திற்கும் இலக்கியப் போக்கிற்கும் எதிப்பு தெரிவித்து ஓர் கொந்தளிப்பு நிலையில் ஜெயமோகன்சாடிப் பேசினார். அந்த விழாவுக்கு முந்தைய நாள் அதே சென்னையில் கருணாநிதியின் புத்தக வெளியீடு விழா நடந்தது. அதில் அவரது பேச்சும், அவரை புகழ்ந்தவர்களின் தாராளப் பாராட்டும் தன்னைபாதிக்கவே, இந்த எதிர்வினையும் கொந்தளிப்பும் என்றார்.

கருணாநிதியின் இலக்கியப் போக்குகள் குறித்தும், அதை மிகையாக பாராட்டித் திறியும் நம் 'பாவப்பட்ட' எழுத்தாளர்களைப் பற்றியும் ஜெயமோகனுக்கு அன்றக்குத்தான் தெரியுமா என்றால் இல்லை. நவீன இலக்கியத்திற்குள் அவர் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே அது அத்துப்படி.

1992-நவம்பர் சுபமங்களாவில் கருணாநிதியின் நேர்காணல் வந்திருந்தது. அதில் அவர் நவீன இலக்கியம் குறித்து, பிழையான மாறுபட்டக் கருத்தொன்றை சொல்லியிருந்தார். அடுத்த இதழில், அது குறித்த எதிர்வினையக நான் கருணநியை விமர்சித்திருந்தேன். அது பிரசுரமானதில் எனக்கு எதிப்பும், மிரட்டல்களும் தொடர்ந்தது. அன்றைக்கு என் கூற்றை ஆதரித்து, பாராட்டி, தைரியம் கூறியும் இலக்கிய நண்பர்கள் சிலர் கடிதம் எழுதியிருந்தார்கள். அதில் ஒன்று ஜெயமோகனுடையது.

பிறகு ஏன் கருணாநிதிப் பற்றி, அன்றைக்குப் பார்த்து அந்த கொந்தளிப்பு. அதுதான் அவரது இலக்கிய அரசியல். அந்த பேச்சைத் தொடர்ந்து மூன்று வாரக் காலத்திற்கு மீடியாக்களிலெல்லாம் கருணாநிதி - ஜெயமோகன் மயம்தான். அவரது புத்தகங்கள் அத்தனையும் அன்றைய 'ஜனவரி புத்தகக் கண்காட்சியில்' ஏகத்திற்கு விற்பனை.

நினைத்த உயரத்திற்கு துரிதகெதியில் வெற்றிக் கொள்ள நினைப்பதும் அதையொட்டி தந்திரமாக காய் நகர்த்துவதும், அடிப்படைகளை நம்பாதவர்களின் செயல்.

இணையத்தளங்களில் படைப்புகளின் மீதான விமர்சனங்களும், எதிர்வினைகளும் உடனுக்குடன் நடைப்பெற்ற வண்ணமிருக்கிறது. கணினியில் புழங்கும் உலகளாவிய தமிழ் அன்பர்கள், இதற்காகவே எந்நேரமும் ஆயத்ததுடன் இருப்பது மாதிரி ஓர் பிரமையே தட்டுகிறது. நமது சிற்றிதழ்களில் அறியப்படாத பல புது முகங்கள் இந்த பக்கம் பிரமாதப் படுத்துகின்றார்கள். அவர்களின் விமர்சனங்களும் அதில் தெறிக்கும் தர்க்கங்களும் நுட்பம் கூடியதாக இருக்கிறது.

இவர்கள் தமிழ் இலக்கிய உலகத்திற்கு புதிய சக்தி. விமர்சனங்களும், எதிவினைகளும் இவர்களின் வழியே பல எல்லைகளைத் தொடும். சந்தேகமில்லை.

***
குறிப்பு: தி.ஜானகி ராமன், க.நா.சு., வெ.சா., சு.ரா., பிரமிள், சாருவுடன் ஜெயமோகன் உட்பட நம் இலக்கிய வட்ட பெரும் தலைகளை முன்வைத்து, 'விமர்சனங்களும்... எதிர் வினைகளும்' குறித்தப் பார்வை.

***
- தாஜ்

Email:tamilpukkal@gmail.com

Thursday, June 01, 2006

நன்றியுடன் நண்பர் கிரிதரனுக்கு

பதிவுகள் ஆசிரியர் நண்பர் கிரிதரன் எனது நீண்ட நாள் இலக்கிய ஸ்நேகிதர்.

அவரது இரண்டு புத்தகங்களை வாங்கி வாசித்து மெச்சி கடிதம் எழுதி நட்பு பாராட்டிக் கொண்டவன் நான். காலத்தின் சுழற்சியில் பல திக்குகளில் நான் அலைகழிக்கப்பட, நண்பருடன் தொடர்பு விட்டுப் போனது.

சில ஆண்டுகள் கழித்து பதிவுகள் வலைத் தளம் பார்க்க வாய்த்தபோது, அது நண்பர் கிரிதரனுடையது யென அறியவும் மனதில் இனம்புரியாத மகிச்சி. கடந்த நான்கு வருடகாலமாக வய்ப்பு கிடைக்கிறபோதெல்லாம் பதிவுகளை வசித்தேனே தவிர, நண்பரேடு அதன் வழியே புழங்கவில்லை.

தமிழில் டைப் அடித்தல், அதை ஃபைலாக மாற்றி 'நெட்டுக்கு' அனுப்புதல் என்பதெல்லாம் எனக்கு பிரமாண்டமாகத் தெரிந்தது.

இன்றைக்குத் தமிழ்ப் பூக்கள் வெளி கொண்டு வந்த நாளில், நண்பர் கிரிதரனுக்கு இரண்டு வரியில் ஓர் மெயில் அனுப்பினேன். அதில் இந்த வலைப் பூவை, பதிவுகள் பக்கத்தில் அறிமுகம் செய்து தாருங்கள்..பிளீஸ்... என்றிருந்தேன். பழைய நட்பைக் கூட நினைவுறுத்த தவறியவனாகத்தான்
அதை அனுப்பி வைத்தேன்.

நண்பர் கிரிதரன் என்ணோடடான பழைய நட்பை நினைவுறுத்தியும், மிகுந்த ஈடுபாடுடனும் தமிழ்ப் பூக்களை, பதிவுகளின் பக்கங்களில் அறிமுகம் செயது வைத்திருக்கிறார். நட்பின் இந்த மழை யொத்த இனிமைக்கு... என் கைமாறுதான் என்னவென்று எனக்குப் புரியவில்லை. நன்றி.

கீழே, பதிவுகளில் வெளிவந்திருக்கும் தமிழ்ப் பூக்களுக்கான அறிமுகம்.

- தாஜ்




தமிழ்ப் பூக்கள்: எழுத்தில் நிஜத்தை தரிசிக்க விரும்பும் வாசகர்களுக்கு மேலும் ஒரு வலைப்பதிவு!

-இம்முறை எழுத்தாளர் தாஜ் அவர்களின் 'தமிழ்ப்பூக்கள்' வலைத்தளத்தினைப் பதிவுகள் வாசகர்களுக்காக அவர் மூலமாகவே அறிமுகம் செய்து வைக்கின்றோம். தமிழ்நாடு சீர்காழியைச் சேர்ந்தவர் எழுத்தாளர் தாஜ். தாஜ் அவர்களின் கவிதைளை அவ்வப்போது 'காலச்சுவடு' சஞ்சிகையில் நீங்கள் வாசித்திருக்கலாம். ஆனந்தவிகடன் நடாத்திய பவளவிழாக் கவிதைப் போட்டியிலும் முத்திரைக் கவிதையாக அவரது கவிதையொன்று, 'அம்மா' பற்றி, பிரசுரமாகி சிறந்த கவிதைகளிலொன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஞாபகம். எழுத்தாளர் தாஜ்ஜின் 'தமிழ் பூக்கள்' பற்றிய அறிமுகக் கடிதம் கிடைத்ததும் சென்று பார்த்தோம். வாழ்த்துக்கள். இப்பொழுதுதானே ஆரம்பித்திருக்கின்றார்.அவரது எழுத்தாற்றலும், அர்ப்பணிப்பும், ஆர்வமும் இத்தளத்தினை நிச்சயம் வெற்றியடைய வைத்திடுமென்பதை ஆரம்பமே உணர்த்துகின்றது. தாஜ் அவர்களே! அர்ப்பணிப்புடன், அலுக்காமல், சலிக்காமல் உங்கள் எண்ணங்களை, ஆக்கங்களை, கனவுகளையெல்லாம் இங்கு பதிவு செய்யுங்கள். அவ்விதம் தொடர்ந்து செய்து வருவீர்களானால், நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் உங்களை நோக்கி ஆதரவுக் கரங்களை நீட்டும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கண்டு , இணையத்தின் வலிமை கண்டு நீங்களே அசந்து விடுவீர்கள்.

இச்சமயத்தில் இன்னுமொரு விடயத்தையும் தனிப்பட்டரீதியில் நினைவு கூர்வதும் பொருத்தமானதாகக் கருதுகின்றேன். தமிழகத்தில் 1996இல் 'ஸ்நேகா' பதிப்பகத்தினர் எனது இரு நூல்களை 'அமெரிக்கா' (சிறுகதை, குறுநாவற் தொகுதி) மற்றும் 'நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு' ஆகிய இரு நூல்களை வெளியிட்டிருந்தார்கள். கணையாழி 'நல்லூர் இராஜதானி' பற்றியும் 'புதியபார்வை' சஞ்சிகை 'அமெரிக்கா' பற்றியும் நூல் மதிப்புரைகளை வெளியிட்டிருந்தார்கள். மேலும் தமிழக இலக்கியச் சூழலில் என்னைப் பலருக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்காது ஒரு சிலரைத்தவிர. இந்நிலையில், தமிழக நூல்நிலையங்களில் எனது மேற்படி நூல்களை வாசித்துவிட்டு சீர்காழியிலிருந்து நீண்ட ஆரோக்கியமான விமர்சனக் கடிதங்களை தாஜ் அனுப்பியிருந்தார். இதுபோல் எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் 'அமெரிக்கா' நூல் கிடைத்ததும் நீண்டதொரு கடிதமொன்றினை தனது கைப்பட எழுதி அனுப்பியிருந்தார். அவற்றை இன்னும் கவனமாகப் பாதுகாத்து வருகின்றேன்.அத்துடன் தாஜ் அவர்கள் கனடாவில் வசிக்கும் தனது நண்பர்கள் மூலமாக வைக்கம் முகம்மது பஷீரின் 'எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' என்னும் புகழ்பெற்ற நாவலினையும் அனுப்பி உதவியிருந்தார். அவற்றையும் இச்சமயத்தில் தனிப்பட்டரீதியில் நன்றியுடன் நினைவு கூர்ந்து கொள்கின்றேன்.-வ.ந.கிரிதரன் -

தமிழ்ப் பூக்கள்: எழுத்தில் நிஜத்தை தரிசிக்க விரும்பும் வாசகர்களுக்கு மேலும் ஒரு வலைப்பதிவு!

http://www.tamilpukkal.blogspot.com/


தமிழ்பூக்கள் தளத்திலிருந்து......

மேற்படி தளத்தில் தன்னைபற்றிய அறிமுகத்தில் 'நவ கலைகளின் ஈடுபாடு மனிதனகுல மேன்மைக்கு அழகும்-கீர்த்தியும் சேர்க்கும் என்று நம்பும் இன்னொருவன்' எனக் குறிப்பிடும் எழுத்தாளர் தாஜ் தனக்குப் பிடித்த இரு நூல்களாக சு.ரா.வின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' மற்றும் தி.ஜா.வின் 'உயிர்த்தேன்' ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார். அத்துடன் 'கணினியில் தமிழ் என்று அதன் வல்லுனர்கள் முனைந்தபோது, அவர்களுக்கு மிகவும் லாவகமாக உதவியது தந்தை பெரியார் செய்து வைத்த தமிழ் எழத்துரு சீர்திருத்தம்தான். இங்கே என் முதல் நன்றியை, இன்னும் கூடுதலான அர்த்தம் பொதிவுகளுடன் அந்த பெரியவரின் நினைவுக்கே செய்கிறேன்...சிரம் தாழ்த்தி' என்றும் 'கணியிலும் வலைத்தங்களிலும் எனக்கு ஆர்வமூட்டி அதன்கண் வாசிக்கவும் எழுதிப் புழங்கவும் ஊக்கப்படுத்திய அபிதீனுக்கும், நாகூர் ரூமிக்கும் என் நன்றி ஆகட்டும்' என்றும் நன்றி கூறிக்கொள்கின்றார். மேற்படி தளத்திலிருந்து அதன் ஆரம்பக் கவிதையான 'கதவை மூடு (சுந்தர ராமசாமி நினைவாக..) என்னும் கவிதையினையும் பதிவுகள் வாசகர்களுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம்


'கதவை மூடு (சுந்தர ராமசாமி நினைவாக..)

கதவை மூடு
காற்று வருகிறது
குப்பைக் கூளமாக
சாக்கடை நாற்றமும்
சுவாசத்தை அறுக்கிறது.

கதவை மூடு
ஏதேதோ அலைகிறது
பனிமூட்ட விடியலில்
குளிர் காயும் வெறியோடு
ஒழுங்குகளைத் துவைக்கிறது.

கதவை மூடு
ஊர்வன மேவும் நேரமிது
விஷக் கொடுக்குகளின்
வலியற்ற தீண்டலில்
மெய்யுடல் தடிக்கிறது.

கதவை மூடு
இரைச்சல் எழுகிறது
தலையெடுப்பவர்களது
காலடிப் பதிவின் அதிர்வில்
நினைவுகளும் சிதைகிறது.

கதவைத் திற
காற்று வரட்டுமென்ற
காலம் போய்விட்டது.
திசைகளற்றப் பேரோசை
பெரு வெளிக் காட்டி.

Email: tamilpukkal@gmail.com