Thursday, June 01, 2006

நன்றியுடன் நண்பர் கிரிதரனுக்கு

பதிவுகள் ஆசிரியர் நண்பர் கிரிதரன் எனது நீண்ட நாள் இலக்கிய ஸ்நேகிதர்.

அவரது இரண்டு புத்தகங்களை வாங்கி வாசித்து மெச்சி கடிதம் எழுதி நட்பு பாராட்டிக் கொண்டவன் நான். காலத்தின் சுழற்சியில் பல திக்குகளில் நான் அலைகழிக்கப்பட, நண்பருடன் தொடர்பு விட்டுப் போனது.

சில ஆண்டுகள் கழித்து பதிவுகள் வலைத் தளம் பார்க்க வாய்த்தபோது, அது நண்பர் கிரிதரனுடையது யென அறியவும் மனதில் இனம்புரியாத மகிச்சி. கடந்த நான்கு வருடகாலமாக வய்ப்பு கிடைக்கிறபோதெல்லாம் பதிவுகளை வசித்தேனே தவிர, நண்பரேடு அதன் வழியே புழங்கவில்லை.

தமிழில் டைப் அடித்தல், அதை ஃபைலாக மாற்றி 'நெட்டுக்கு' அனுப்புதல் என்பதெல்லாம் எனக்கு பிரமாண்டமாகத் தெரிந்தது.

இன்றைக்குத் தமிழ்ப் பூக்கள் வெளி கொண்டு வந்த நாளில், நண்பர் கிரிதரனுக்கு இரண்டு வரியில் ஓர் மெயில் அனுப்பினேன். அதில் இந்த வலைப் பூவை, பதிவுகள் பக்கத்தில் அறிமுகம் செய்து தாருங்கள்..பிளீஸ்... என்றிருந்தேன். பழைய நட்பைக் கூட நினைவுறுத்த தவறியவனாகத்தான்
அதை அனுப்பி வைத்தேன்.

நண்பர் கிரிதரன் என்ணோடடான பழைய நட்பை நினைவுறுத்தியும், மிகுந்த ஈடுபாடுடனும் தமிழ்ப் பூக்களை, பதிவுகளின் பக்கங்களில் அறிமுகம் செயது வைத்திருக்கிறார். நட்பின் இந்த மழை யொத்த இனிமைக்கு... என் கைமாறுதான் என்னவென்று எனக்குப் புரியவில்லை. நன்றி.

கீழே, பதிவுகளில் வெளிவந்திருக்கும் தமிழ்ப் பூக்களுக்கான அறிமுகம்.

- தாஜ்
தமிழ்ப் பூக்கள்: எழுத்தில் நிஜத்தை தரிசிக்க விரும்பும் வாசகர்களுக்கு மேலும் ஒரு வலைப்பதிவு!

-இம்முறை எழுத்தாளர் தாஜ் அவர்களின் 'தமிழ்ப்பூக்கள்' வலைத்தளத்தினைப் பதிவுகள் வாசகர்களுக்காக அவர் மூலமாகவே அறிமுகம் செய்து வைக்கின்றோம். தமிழ்நாடு சீர்காழியைச் சேர்ந்தவர் எழுத்தாளர் தாஜ். தாஜ் அவர்களின் கவிதைளை அவ்வப்போது 'காலச்சுவடு' சஞ்சிகையில் நீங்கள் வாசித்திருக்கலாம். ஆனந்தவிகடன் நடாத்திய பவளவிழாக் கவிதைப் போட்டியிலும் முத்திரைக் கவிதையாக அவரது கவிதையொன்று, 'அம்மா' பற்றி, பிரசுரமாகி சிறந்த கவிதைகளிலொன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஞாபகம். எழுத்தாளர் தாஜ்ஜின் 'தமிழ் பூக்கள்' பற்றிய அறிமுகக் கடிதம் கிடைத்ததும் சென்று பார்த்தோம். வாழ்த்துக்கள். இப்பொழுதுதானே ஆரம்பித்திருக்கின்றார்.அவரது எழுத்தாற்றலும், அர்ப்பணிப்பும், ஆர்வமும் இத்தளத்தினை நிச்சயம் வெற்றியடைய வைத்திடுமென்பதை ஆரம்பமே உணர்த்துகின்றது. தாஜ் அவர்களே! அர்ப்பணிப்புடன், அலுக்காமல், சலிக்காமல் உங்கள் எண்ணங்களை, ஆக்கங்களை, கனவுகளையெல்லாம் இங்கு பதிவு செய்யுங்கள். அவ்விதம் தொடர்ந்து செய்து வருவீர்களானால், நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் உங்களை நோக்கி ஆதரவுக் கரங்களை நீட்டும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கண்டு , இணையத்தின் வலிமை கண்டு நீங்களே அசந்து விடுவீர்கள்.

இச்சமயத்தில் இன்னுமொரு விடயத்தையும் தனிப்பட்டரீதியில் நினைவு கூர்வதும் பொருத்தமானதாகக் கருதுகின்றேன். தமிழகத்தில் 1996இல் 'ஸ்நேகா' பதிப்பகத்தினர் எனது இரு நூல்களை 'அமெரிக்கா' (சிறுகதை, குறுநாவற் தொகுதி) மற்றும் 'நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு' ஆகிய இரு நூல்களை வெளியிட்டிருந்தார்கள். கணையாழி 'நல்லூர் இராஜதானி' பற்றியும் 'புதியபார்வை' சஞ்சிகை 'அமெரிக்கா' பற்றியும் நூல் மதிப்புரைகளை வெளியிட்டிருந்தார்கள். மேலும் தமிழக இலக்கியச் சூழலில் என்னைப் பலருக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்காது ஒரு சிலரைத்தவிர. இந்நிலையில், தமிழக நூல்நிலையங்களில் எனது மேற்படி நூல்களை வாசித்துவிட்டு சீர்காழியிலிருந்து நீண்ட ஆரோக்கியமான விமர்சனக் கடிதங்களை தாஜ் அனுப்பியிருந்தார். இதுபோல் எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் 'அமெரிக்கா' நூல் கிடைத்ததும் நீண்டதொரு கடிதமொன்றினை தனது கைப்பட எழுதி அனுப்பியிருந்தார். அவற்றை இன்னும் கவனமாகப் பாதுகாத்து வருகின்றேன்.அத்துடன் தாஜ் அவர்கள் கனடாவில் வசிக்கும் தனது நண்பர்கள் மூலமாக வைக்கம் முகம்மது பஷீரின் 'எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' என்னும் புகழ்பெற்ற நாவலினையும் அனுப்பி உதவியிருந்தார். அவற்றையும் இச்சமயத்தில் தனிப்பட்டரீதியில் நன்றியுடன் நினைவு கூர்ந்து கொள்கின்றேன்.-வ.ந.கிரிதரன் -

தமிழ்ப் பூக்கள்: எழுத்தில் நிஜத்தை தரிசிக்க விரும்பும் வாசகர்களுக்கு மேலும் ஒரு வலைப்பதிவு!

http://www.tamilpukkal.blogspot.com/


தமிழ்பூக்கள் தளத்திலிருந்து......

மேற்படி தளத்தில் தன்னைபற்றிய அறிமுகத்தில் 'நவ கலைகளின் ஈடுபாடு மனிதனகுல மேன்மைக்கு அழகும்-கீர்த்தியும் சேர்க்கும் என்று நம்பும் இன்னொருவன்' எனக் குறிப்பிடும் எழுத்தாளர் தாஜ் தனக்குப் பிடித்த இரு நூல்களாக சு.ரா.வின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' மற்றும் தி.ஜா.வின் 'உயிர்த்தேன்' ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார். அத்துடன் 'கணினியில் தமிழ் என்று அதன் வல்லுனர்கள் முனைந்தபோது, அவர்களுக்கு மிகவும் லாவகமாக உதவியது தந்தை பெரியார் செய்து வைத்த தமிழ் எழத்துரு சீர்திருத்தம்தான். இங்கே என் முதல் நன்றியை, இன்னும் கூடுதலான அர்த்தம் பொதிவுகளுடன் அந்த பெரியவரின் நினைவுக்கே செய்கிறேன்...சிரம் தாழ்த்தி' என்றும் 'கணியிலும் வலைத்தங்களிலும் எனக்கு ஆர்வமூட்டி அதன்கண் வாசிக்கவும் எழுதிப் புழங்கவும் ஊக்கப்படுத்திய அபிதீனுக்கும், நாகூர் ரூமிக்கும் என் நன்றி ஆகட்டும்' என்றும் நன்றி கூறிக்கொள்கின்றார். மேற்படி தளத்திலிருந்து அதன் ஆரம்பக் கவிதையான 'கதவை மூடு (சுந்தர ராமசாமி நினைவாக..) என்னும் கவிதையினையும் பதிவுகள் வாசகர்களுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம்


'கதவை மூடு (சுந்தர ராமசாமி நினைவாக..)

கதவை மூடு
காற்று வருகிறது
குப்பைக் கூளமாக
சாக்கடை நாற்றமும்
சுவாசத்தை அறுக்கிறது.

கதவை மூடு
ஏதேதோ அலைகிறது
பனிமூட்ட விடியலில்
குளிர் காயும் வெறியோடு
ஒழுங்குகளைத் துவைக்கிறது.

கதவை மூடு
ஊர்வன மேவும் நேரமிது
விஷக் கொடுக்குகளின்
வலியற்ற தீண்டலில்
மெய்யுடல் தடிக்கிறது.

கதவை மூடு
இரைச்சல் எழுகிறது
தலையெடுப்பவர்களது
காலடிப் பதிவின் அதிர்வில்
நினைவுகளும் சிதைகிறது.

கதவைத் திற
காற்று வரட்டுமென்ற
காலம் போய்விட்டது.
திசைகளற்றப் பேரோசை
பெரு வெளிக் காட்டி.

Email: tamilpukkal@gmail.com

5 comments:

Anonymous said...

Great site lots of usefull infomation here.
»

Anonymous said...

Nice idea with this site its better than most of the rubbish I come across.
»

Anonymous said...

Super color scheme, I like it! Good job. Go on.
»

Anonymous said...

Your are Nice. And so is your site! Maybe you need some more pictures. Will return in the near future.
»

Anonymous said...

I find some information here.