Saturday, December 10, 2011

ஆபிதீன் கதைகள் - அஸ்ரஃப் ஷிஹாப்தீன்

*

ஒரு நாள் நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில் கணினியின் முன் அமர்ந்திருந்த நான் ஆபிதீ னின் சிறுகதையொன்றைப் படித்ததும் சத்தம் வராமல் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித் தேன்.

திண்ணை இணையத் தளத்;தில் இடம்பெற்றிருந்த அந்தக் கதையைப் படித்த போது எழுந்த அடக்க முடியாத சிரிப்பை நான் வாய் பொத்தாமல் வழமைபோல மனந் திறந்து வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்திருந்தால் எனது மனைவியும் பிள்ளைகளும் எனக்கு நட்டுக் கழன்று விட்ட தாக நினைத்திருப்பார்கள்.

ஆபிதீன் என்றொரு படைப்பாளியைப் பற்றி எனக்குச் சொன்னவர் யாரென்று ஞாபகம் இல் லை. எனக்குச் சொல்லப்பட்ட விதத்தில் அவரது எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஒரு மூலையில் கிடந்தது. சாருநிவேதிதா என்ற எழுத்தாளரின் படைப் புகள் பற்றிக் கவிஞர் அல் அஸ_மத் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் ஆபிதீன் பற்றியும் அவர் சொன்னார். அப்போதுதான் ஆபிதீன், சாருநிவேதிதா சர்ச்சை பற்றிய குறிப்புக்களை நான் எப்போதோ இணையத்தில் ஏதோ ஒரு தளத்தில் படித்த ஞாபகம் வந்தது. எனவே ஆபிதீன் பற்றி எனக்கு யாரும் சொல்லவில்லை, நான் இணையத்தில் படித்த சாருநிவேதிதா, ஆபிதீன் குறித்த சர்ச்சை ஏற்படுத்திய தாக்கம்தான் ஆபிதீனைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்திருந்தது என்ற முடிவுக்கு வந்தேன்.


ஆபிதீன்

ஆபிதீன் என்னளவில் ஒரு மகத்தான படைப்பாளி. ‘இடம்’, ‘உயிர்த்தலம்’ ஆகிய அவரது சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றையேனும் நான் படித்ததில்லை. ஒரு கவிஞனை நமக்குப் பிடித்த கவிஞனாகவும் ஒரு சிறுகதையாளரை நமக்குப் பிடித்த சிறுகதையாளராகவும் வரித்துக் கொள்ளஅக்கவிஞரின் எல்லாக் கவிதைகளையுமோ சிறுகதையாளரின் எல்லாக் கதைகளையுமோ படிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு கவிதை, ஒரு சிறுகதை போதுமானது. ‘அங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு’ என்ற நான் படித்த ஆபிதீனின் ஒரே ஒரு கதையுடன் அவர் எனக்குப் பிடித்த எழுத்தாளராகி விட்டார்.

ஆபிதீனின் கதைகளில் உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் நையாண்டியும். ஆனால் அதை வெறும் எள்ளலாக மட்டும் அவர் கதைகளில் பயன்படுத்தவில்லை என்பதுதான் அடிக்கோடிட்டுச் சொல்லப்பட வேண்டியது. வலிந்து புகுத்தப்படும் நகைச்சுவையோ நையாண்டியாகவோ அவை இருப்பதில்லை. தடவித் தடவி வந்து வலிக்க நோண்டிவிட்டு மீண்டும் தடவி விடுவது போன்ற ஒரு நுணுக்கம் அவற்றில் பரவியிருக்கும். கண்டிக்க வேண்டியதை, கேவலங்களை, அசிங்கங்களை, கேலிக்குரியவற்றை, சொல்ல வேண்டும் என்று நினைத்ததை அவர் இந்த நையாண்டியுடனும் நகைச்சுவையுடனும்தான் வெளிப்படுத்தி வருவார்.

ஆபிதீன் நாகூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நாகூரில் தர்ஹாவில் அடங்கப் பெற்றிருக்கும் இறை நேசர்களால் அந்த ஊருக்குத் தனி மவுசு உண்டு. வருடா வருடம் அங்கு நடக்கும் கந்தூரி வைபவமும் அக் கொண்டாட்டங்களையிட்டுக் கூடும் ஜனத்திரளும் எண்ணிலடங்காதது. இன்னும் அந்த அடக்கத்தலங்களைத் தரிசிக்கப் பல்வேறு நாடுகளிலுமிருந்து மக்கள் வருகை தருகிறார்கள். இந்த இறை நேசர் அடக்கத்தலங்கள் காரணமாகக் கூடும் மக்களை எதிர்பார்த்துத் தொழில் புரிவோர் அங்கு வாழ்கின்றனர். ஒரு வருடாந்தக் கொண்டாட்டத்தின் போது உறவினர் திறக்கும் ரெக்கோர்ட் பாரில் வேலை செய்திருக்கிறார் ஆபிதீன். இந்த வேளை கடைகளுக்கு வரி வசூலிக்க வரும் அரசு அதிகாரி பற்றி ‘கடை’ என்ற அவரது கதையில் இப்படிச் சொல்கிறார்:-

“இன்னும் ஓரிரு மாதங்கள் இந்தக் கடையில் இருக்கலாம். இதற்குள் வரி..வரி..என்று வரும் அரசு அதிகாரிகளைப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். பரவாயில்லை. எனக்கு நன்றாகவே நடிக்க வருகிறது. ஒருநாள் பந்தலுக்கு வரி என்று ஒருவன் வந்தான். முப்பது ரூபாயாம் வருடத்திற்கு. 'ஹீ..ஹீ..ஹீ.. ' என்று இளித்துக் கொண்டே அடுத்த நாள் வரச் சொன்னேன். அடுத்த நாள் வரும்போது ஒரு பத்துப் பதினைத்து வருடம் தன் நாயகனைப் பிரிந்து, இப்போது அவனை வரவேற்கிற, ஒரு கற்புக்கரசி மார்க் மனைவியின் முகபாவம் எனக்கு இருந்தது. அன்று ஹீ..ஹீ..பலனளித்தது. அவன் வந்தவுடனேயே முதல் அடி. நன்னாரி சர்பத் இரண்டு! விழுந்து விட்டான். எல்லாக் கடைகளிலும் வசூலித்ததை விட பத்து ருபாய் குறைவாக வாங்கிக் கொண்டு போனான். அவனுக்கு சினிமா பாட்டெல்லாம் பிடிக்காதாம். பக்திப் பாட்டுகள்தானாம். 'திருமுருகன் தேனிசை ' ஒரு கேஸ்ஸட்டில் போட்டு வேண்டுமென்று சொல்லி விட்டுப் போனான். சேல்ஸ் டாக்ஸ் ஐயரும் என்னிடம் விழுந்தார். அவருக்கும் பக்திப் பாட்டுகள்தான் பிடிக்குமாம். அதென்னமோ அரசு அதிகாரிகள் பெரும்பாலோர் இப்படித்தான் பக்தியில் திளைக்கிறார்கள். கடவுள் வாழ்க !”

இங்கே ஆபிதீன் சொல்ல வருவது என்னவென்றால் - லஞ்சம் அது எந்த வடிவினதாகவும் இருக்கலாம் என்பதைத்தான். வரி பெற வரும் அதிகாரி அல்லது அரச ஊழியன் ஒரு நன்னாரி ஷர்பத்திலும் இடறி விழுகிறான், அந்த லஞ்சத்தைப் பக்திப் பாடல் வடிவத்திலும் பெற்றுக் கொள்கிறான் என்ற கேவலத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறார்.


1981ல் ஆபிதீன் எழுதிய கதை ‘குழந்தை’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. இந்தக் கதையில் ஒரு நீலக் குழந்தை பிறந்து சில நாட்களில் இறந்து விடுகிறது. ஆபிதீனின் ஒரு விடயத்தைச் சொல்ல வந்தாரென்றால் அந்த விடயம் பற்றி அவரது சிந்தனையில் ஊறும் அனைத்தையும் வார்த்தையில் வடித்து விடுவார். அவை சில வேளை கதைக்குச் சம்பந்தம் உடையதாகவும் இருக்கும். கதையோடு சம்பந்தம் அற்றதாகவும் இருக்கும். சம்பந்தம் அற்றதாக இருந்தாலும் கூட கதையின் ஓட்டமும் சுவையும் குன்றாது. இந்த இடத்தில் இது அவசியமில்லை என்று தோன்றினாலும் கூட அதை ஒதுக்கி விட ஆபிதீனின் எழுத்து நடை நம்மை அனுமதிக்காது.

குழந்தை என்ற கதையில் இளைஞன் ஒருவனின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இப்போதைக்குப் போல் மருத்துவ வசதிகள் அற்ற காலத்தில் மருத்துவிச்சி வீட்டுக்கு வந்து பிரசவம் பார்த்ததை நாம் அறிவோம். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முஸ்லிம் கிராமத்து வீட்டுப் பிரசவம் எப்படியிருந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள நாம் ஆபிதீனிடம்தான் போக வேண்டியிருக்கிறது.

“மறப்பு உள்ளே பொம்பளைகள் ராஜ்ஜியமாக இருக்கும். சின்னப் பிள்ளைகள் மறப்பின் கீழுள்ள இடைவெளி மூலம் உள்ளே நடக்கும் ரகசியத்தை அறிய முயற்சிக்கும். தலையில் தட்டி அனுப்புவார்கள் பெண்கள். சில பெண்கள் ' உம்மாடி..பொறந்த எடத்தை பாக்கனும்டு ஆசைப்படுறான் பாவம்..டேய்...எல்லாமே ஹயாவுதாண்டா.. ' என்று வெடிப்பாய் பேசி அனுப்பும். பையன்கள் வெட்கத்துடன் ஓடி விடுவார்கள். நானும் சின்னப் பிள்ளையில் இப்படி மறப்பிற்குக் கீழ் பார்த்திருக்கிறேன். சுற்றிலும் பெண்கள் கூட்டம் உட்கார்ந்திருந்ததுதான் ஞாபகம் வருகிறது. அப்பொதெல்லாம் பிள்ளைகள் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வருவதாகத்தான் தீவிரமாய் நம்பிக்கை கொண்டிருந்தேன். நான்காவது படிக்கும்போது பக்கத்து பெஞ்ச் அப்துல்லா விஷயத்தைப் போட்டு உடைத்தான் என்றாலும் உம்மா வாப்பா விளையாட்டு என் வயது பெண்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போதிலும் எனக்கு இதில் முழு நம்பிக்கையில்லை. இந்த அப்துல்லா அவன் நண்பர்கள்தான் இப்படிச் சொல்வார்கள். வீட்டில் கேட்டால் வயிற்றிலிருந்துதான் வந்தது என்று சத்தியம் பண்ணிச் சொல்வார்கள். நிறைய புரியாமலிருந்தது.

P.U.C திருச்சியில் படிக்கும்போது நண்பனுடன் ஒரு படம் பார்த்தேன். அதில்தான் குழந்தை எப்படி வருகிறது என்று காண்பித்தார்கள். எனக்கு புரிந்து போயிற்று. ஆனால் முன்னாடியிருந்த ஒரு ஆர்வம் சப்பென்று போனது. வீட்டில் 'புள்ளய எவ்வளவு செரமப்பட்டு பெக்குறொம் தெரியுமா ? ' மாமாவிடம் மாமி கொஞ்சலாய் கேட்கும்போது 'ஆமா..தொட்டித் துணியை நல்லா கையால இறுக்கிப் புடிச்சிக்கிட்டு 'யா முஹய்யத்தீன் 'னு மூணு தடவை கத்தி ரெண்டு முக்கு முக்குறீங்க. பெரீய்ய இதா இது ?! ' என்று நக்கலான குரலில் சொல்வார். பொம்பளைகள் சிரிப்பார்கள். ஒரு தரம் தம்பி, வீட்டில் Decky; Donna SummerI போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் செக்ஸியாக முனகுவதை குஷியாகக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு 'என்னடாது புள்ள பெக்குறவ கத்துறமாதிரி கத்துறா.. நல்லாத்தான் பாட்டு கேக்குறே போ ' என்ற லாத்தாவின் குரல் சிரிப்பைக் கொடுத்தது.

ஆபிதீன் கதைகளில் அவர் எதையும் நேரடியாகப் பேசுகிற பண்பு உண்டு. பாலியல் விடயங்களையும் சிலவேளை நேரடியாகவும் சில வேளை இரட்டை அர்த்தத்திலும் பயன்படுத்துவார். அவரது கதைகளை வாசித்துச் செல்லும் போது முகத்தைச் சுளிக்க வைப்பதற்குப் பதிலாகப் பெருஞ் சிரிப்பைத்தான் அவை ஏற்படுத்துகின்றன. சமூகக் கழிசடைத்தனங்களை நேரடியாக அல்லது வேறொரு வகையில் அவர் கிண்டலடிப்பது போல்தான் இதை என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது. இந்த விடயத்தில் உடன்பட முடியாதவர்கள் இருக்கக் கூடும். கருத்துக்களில் ஏற்றுக் கொள்ளும் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களும் ஆளுக்காள் வேறுபடக் கூடும்.

கதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆணியடித்துச் சட்டகம் செய்து வைத்திருக்கின்ற சூழல் ஆபிதீன் கதைகளை சிறுகதைகளாக ஏற்றுக் கொள்ள மறுக்கும். ஒரு கதையைச் சொல்லத் தொடங்கி எங்கெங்கெல்லாமோ சென்று திரும்புவார் ஆபிதீன். அவரது ‘உயிர்த்தலம்’ சிறுகதைத் தொகுப்புக்கு கோ.ராஜாராம் எழுதியுள்ள பதிப்புரையில்,

"ஆபிதீன் கதைகளைப் படிக்கையில் இரண்டு உணர்வுகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. ஒன்று : அவை சம்பிரதாயமான கதைகள் அல்ல. கதைகளின் இலக்கணத்தைப் பொருத்திப் பார்த்தால் அவை கதைகளே இல்லை என்று கூடச் சொல்லிவிடலாம். இன்னொன்று அபார நகைச்சுவை உணர்வு. சிறுகதைகளின் இலக்கணம், எடுப்பு, தொடுப்பு, சிக்கல், சிக்கலின் வளர்ச்சி, முடிவு என்று எந்தப் படிநிலையும் இல்லாமல், சரேர் என தொடங்கி, மனம் போன போக்கில், ஆனால் ஒரு திட்டத்துடன் நகர்ந்து மையப்புள்ளியை உருவாக்கிய நிமிடமே அதைச் சிதைத்து, மறு மையம் நோக்கிப் பாய்தல் என்று எல்லா இலக்கணங்களையும் மீறிய ஒர் அமைப்பு அவருடைய கதைகளில் காணக் கிடைக்கின்றது. அதனாலேயே தமிழின் கதைசொல்லலில் ஒரு புது அழகியலை அவை உருவாக்குகின்றன. சுவாரஸ்யம் இலக்கியச் சிறப்பிற்கு ஒவ்வாது என்ற அழுகுணி இலக்கணத்தையும் இவை மறுக்கின்றன. அவருடைய நகைச்சுவை அவருடைய தனித்த பார்வைக்குச் சான்று. நகைச்சுவை மூலம் சுற்றிலும் உள்ள அவலங்களையும், ஒவ்வாமைகளையும், முரண்பாடுகளையும் அவர் சித்தரிக்கிறார் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம்.

ஆனால் சிரிப்பு எழுந்த மறு வினாடியே மனதைப் பிசைகிற ஒரு துயரம் பெருக்கெடுக்கும் தருணங்கள் அவர் கதைகளில் உள்ளன. பிழைப்பிற்காக நாடு விட்டு நாடு வந்து, மனைவி மக்களைப் பிரிந்து உழலும் மனிதர்கள் சித்தரிக்கப் படுகிறார்கள். உன்னதமும் மலினமும் ஒன்றேபோல் பிணைந்து கிடக்கிற மனிதக் கூட்டம் ஏதோ கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளால் பிணைக்கப் பட்டு திணறும் உணர்வை இந்தக் கதைகள் ஏற்படுத்துகின்றன" என்கிறார்.

ஆபிதீனின் கதைகளுக்குள் பல்வேறு சம்பவங்களையும் கதைகளையும் சேர்த்துச் சொல்லிக் கொண்டு செல்வார். அவை கதைக்கு அல்லது கதையில் வரும் பாத்திரத்துக்கு அல்லது பாத்திரத்தோடு சம்பந்தப்பட்ட விடயம் ஒன்றைப்பற்றிச் சொல்வதற்கு அல்லது துணைப்பாத்திரம் ஒன்று பற்றி விவரிப்பதற்கு அல்லது துணைப்பாத்திரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயம் பற்றிச் சொல்வதற்கென்று கதை விரிவுபட்டுக் கொண்டே செல்லும். அவ்வாறான சில சுவாரஸ்யமான இடங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

‘வலை’ என்ற கதையில் வரும் சம்பவங்கள் இவை.

“மெய்தீன் மாமா பழக்கமானது நண்பன் ரஃபீக்கை அவர் காப்பாற்றியதில் வந்த நன்றியால்தான் என்று கூற வேண்டும். கொமெய்னி ஃபத்வா கொடுத்த ஒரு இந்திய எழுத்தாளனை , 'அவன் சில நல்ல கட்டுரைகளும் எழுதியிருக்கிறான்; ஒரு கருத்தை எதிர்க்க கொலைவாளினை எடுப்பது தவறு' என்று உலகத்தைப் புரியாமல் மேதாவித்தனமாக அவன் ஒரு கடிதம் நுஒpசநளள பத்திரிகைக்கு அனுப்ப, காத்துக் கொண்டிருந்த அவர்களும் துரிதமாக பிரசுரிக்க , காம்பூரிலிருந்து ஒருவர் வாளினை எடுத்துக் கொண்டு வந்து விட்டார் நாகூருக்கு..

ரஃபீக்கைப் பற்றி விசாரிக்கத்தான்..

அப்போதுதான் மாமா அவருக்கு ஒரு கதை(?)யைச் சொல்லி சமாதானப் படுத்தி விட்டிருக்கிறார் சமாளித்து. என்ன கதை ? இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது ஒருவரை ஒருவர் வெட்டிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். சொர்க்கத்திற்கு வழி சொல்லும் மதங்கள்..

ஒரு முஸ்லீம் இளைஞனிடம் ஒரு 'காஃபிர்' மாட்டிக் கொண்டு விட்டான் வசமாக. தன் குடும்பத்தாரை ஈவு இரக்கமில்லாமல் கொன்று தீர்த்த காஃபிர்களுள் ஒருவன் என்ற வெறி இவனுக்கு...

'போலோ கலிமா..!' - முஸ்லீம் இளைஞன் , வெறியோடு கத்திக் கொண்டு உருவிய வாளுடன் விரட்டுகிறான். வேறு வழியில்லை. சரியாக ஒரு மூலையில் மாட்டிக் கொண்டாகி விட்டது..தன் கடவுள்கள் யாரும் இப்போது உதவிக்கு வரப் போவதில்லை..

'சரி சொல்கிறேன்..நீ சொன்னபடியே செய்கிறேன்..சொல். எப்படிச் சொல்ல வேண்டும் கலிமா?'

அப்போதுதான் 'கலிமா' என்றால் என்னவென்று தனக்கே தெரியாது என்று முஸ்லீம் இளைஞன் உணர்ந்தானாம்! 'கலிமா' என்பது ஒரு கைலி பிராண்ட் அல்ல. 'லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' எனும் இஸ்லாத்தின் மூல மந்திரம். ”

முஸ்லிம் சமூகத்தில் சிலரது நிலை இதுதான். தான் யார்? தனது மார்க்கம் என்ன? எதை எப்படி அணுகச் சொல்லியிருக்கிறது? எது கட்டாயம்? எதைச் செய்வது சிறப்பு? பல்லின தேசத்தில் வாழும் ஒரு முஸ்லிம் சக இனத்தாரோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்கிற எந்தத் தெளிவும் இல்லாமல் வாழும் கேடு கெட்ட நிலை. இந்த நிலையைச் சில இயக்கங்கள் பணமாக்குகின்றன. அரசியல் வாக்குகளாக மாற்றுகிறது. சிலர்வாழ்கிறார்கள். சிலர் வீழ்கிறார்கள். இவ்வாறான அவலங்களை மறைமுகமாகத் தனது கதைகளில் சொல்லிச் செல்வதால் ஆபிதீன் எழுத்துக்களை நான் கொண்டாடுகிறேன்.

‘மூடல்’ என்று ஒரு கதை. அந்தக் கதையில் ஆபிதீன் எழுதிச் செல்வதை அவதானியுங்கள்.

கல்யாணமானாலும் 'ஒத்தத் துப்பட்டி 'யோடு பெண்கள் போக முடியாது. எந்தப் பெண்ணும் ஒரு பெண் துணையோடுதான் போவார்கள். அப்படிப் பார்த்தால் நாலு பெண்டாட்டி கட்டியவரின் பெண்கள் , எட்டு பெண்களாக போக வேண்டி வருமோ ? கணக்கெடுப்பது சிரமம். அதெல்லாம் தெம்புள்ள வம்பர்களின் சமாச்சாரம். நமக்கெதற்கு ? இங்கே ஒன்றைத் தணிப்பதற்குள்ளேயே உள்ளெல்லாம் உதறி ஒடுங்குகிறது. ஸ்ஸ்ஸ்....!

தனியாக நாங்கள் அப்படி வருவதை தெருவில் பார்த்தவர்கள் உம்மாவிடம் வத்தி வைக்கப் போய் பொசுங்கிப்போனதுதான் மிச்சம். நானே எதிர்பார்க்கவில்லை! உம்மா ரொம்பவும்தான் மாறிவிட்டார்கள்!

'அவன் பொண்டாட்டியோடதான் வர்றான். வரட்டுமே..நாங்களுவதான் விதியத்துப் போய் வூட்டுலேயே கெடக்குறோம். எங்க மாப்புள்ளைமார்க்கும் தஹிரியம் இல்லை.. '

ஆஹா! இனி அடுத்த முயற்சிதான். என் நண்பரொருவன் ஒரு பிராமணைப்பெண்ணை காதலித்து அவளை முஸ்லீமாக மாற்றி கல்யாணம் செய்தும் அவளை துப்பட்டி இல்லாமலேயே ஊரில் வலம் வரச் செய்தான். இதை மட்டும் ஊர் சகித்துக் கொண்டதற்கு நான்கு காரணங்கள்:

1. அந்தப் பெண் பேராசிரியர். (இஸ்லாம் பத்தி புத்தகம் எழுதுங்கம்மா..!)

2. ஒரு காஃபிரை இஸ்லாத்திற்கு கொண்டு வந்தான். (ராமகோபலனுக்கு செம அடி!)

3. அந்த அம்மா இன்னும் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளவில்லை (அல்லா சீக்கிரம் மாத்திடுவான்!)

4. நண்பன் வற்றவற்றக் குறையாத பணக்காரன். அதாவது தர்கா டிரஸ்டி!

இந்த நான்குக்கும் எனக்கும் சம்பந்தமில்லையானாலும் வேதாளத்தையே இறக்கியே தீருவேன். அப்போதுதான் நான் ஆணாதிக்கவாதியில்லை. 'திண்ணியம் ' ஒதுக்கி பெண்ணியம் பேசும் புண்ணியரும் பாராட்டுவர்.

'அஸ்மா, எப்ப இதையிலாம் தூக்கியெறியப்போறே ? '

அஸ்மா என்னை தீர்க்கமாகப் பார்த்தாள்.

'நாங்கள்லாம் உசுரோட இக்கெ வாணாம் ? ' என்றாள்

' ? ? ? '

'நம்ம பாளையம் , மூஞ்சிலெ 'ஆசிட் ' ஊத்துனா என்னாவுறதுண்டு கேட்டேன் '

'!!! '

'ஆத்திர அவசரத்துக்கு ஒடனே வரமுடியாதே ஒங்களாலே மச்சான் அப்ப..! '
'அதனாலெ ? '

'அதனாலெ அல்ல, எதனாலேயும் ஊரோட ஒத்துத்தான் போவனும்மா.. '

அந்த பதில் என்னைப் பொசுக்கியது. இரண்டு வருடத்தில் ஒருமாதம் ஊரில் இருக்கிறவன் ஊராரை மதிக்காமலிருப்பது முட்டாள்தனம். இல்லையேல் கலவரங்களின்போது காப்பாற்ற மாட்டார்கள்.

முஸ்லிம் கிராமங்களுக்கென சில சட்ட திட்டங்களை ஊராரே உருவாக்கி வைத்திருந்த ஒரு காலகட்டம் இருந்தது. திருமணமான ஒ பெண் கூட மற்றொரு துணையுடன் செல்லவேண்டும் என்கிற நிலையை ஆபிதீன் சுட்டிக் காட்டுகிறார். இலங்கையில் இவ்வாறான நிலை இருபது அல்லது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே மாறிவிட்டது. இந்தியாவில் கூட இந்நிலை இப்போது இல்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் அந்தச் சூழ்நிலையை ஆபிதீன் அழகாக எடுத்துக் காட்டுகிறார். அதை மீறவும் முயற்சிக்கிறார்.

இதில் அவதானிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம், பணம் உள்ளவன், செல்வாக்குள்ளவன் - பள்ளிவாசல் தர்மகர்த்தாவாக அவன் இருந்த போதும் அவனால் இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களை மிக இலகுவாக மீற முடிகிறது என்பதைத்தான். நீதி சொல்பவர்கள், பத்வா வழங்குபவர்கள் எல்லோரும் அப்போது கவட்டுக்குள் கையை வைத்துக் கொண்டு தூங்கி விடுவார்கள். பெண்கள் தனியே வந்தால் அசிட் அடிக்குமாறு இஸ்லாம் அதிகாரம் கொடுத்து விட்டதாகத் தாங்பளாகவே நினைத்துச் செயல்படுபவர்கள் எல்லோரும் தர்மகர்த்தா இஸ்லாத்தை மீறினாலும் கண்டு கொள்ளமாட்டார்கள். இதைத்தான் இன்னொரு வார்த்தையில் இங்கே ஆபிதீன் சுட்டிக் காட்டுகிறார்.

குறைகளை நையாண்டி பண்ணும் அதே சமயம் இஸ்லாம் மார்க்கத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்களையும் வரலாற்றுத் துணுக்குகளையும் கூடத் திணிக்காமல், பிரச்சார நெடியில்லாமல் ஆங்காங்கே அவர் இயல்பாகக் கைள்கிறார்.

‘அமானுதம்’ என்ற கதையில் அவர் சொல்லும் சம்பவம் இது: -

மக்கா வெற்றியின் போது நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவில் நுழைவதற்கு சாவி கேட்கிறார்கள். அது உஸ்மான் பின் தல்ஹா என்பவரிடம் இருக்கிறது. கஃபாவின் பாதுகாப்பாளர் (சதானா) அப்போது இஸ்லாமியரல்ல. தயக்கத்துடன் சாவியைக் கொடுக்கிறார் உஸ்மான். உள்ளே சென்று , பின் கஃபாவை விட்டு வெளியில் வந்ததும் அதைப் பூட்டி , மறக்காமல் சாவியை உஸ்மானிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு '(சாவி) ஊழுழிகாலமட்டும் உம்மிடமும் உம் சந்ததியினரிடமுமே இருந்து வரட்டும் ' என்று சொல்கிறார்கள் உத்தமத் திருநபி. அமானுதம் சம்பந்தமான முக்கியமான இறைவசனம் பிறந்த இடமும் இதுதான். நாயகத்தின் பெருந்தன்மையையும், கனிவையும், அமானுதப் பொருளில் அவர்களுக்கிருந்த எச்சரிக்கையையும் பார்த்து நெகிழ்ந்து , சாந்தி மார்க்கத்திடம் சரணடைந்து விடுகிறார் உஸ்மான். கஃபாவின் சாவி இன்றுவரை அவருடைய சந்ததியிடம்தான் இருக்கிறது.

ஆபிதீன் எழுத்தில் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யம் தூக்கலாக இருக்கும். ஒரு கதைக்குள் ஒரு நூறு விடயங்களைச் செய்திகளை, கதைகளை, தகவல்களைச் சொல்லிக் கொண்டே செல்வது அவரது எழுத்தின் இயல்பாகி விட்டிருக்கிறது. ‘நாங்கோரி’ உறுப்பினர் என்று ஒரு கதை. கல்லூரியில் விழாவில் பாடும் கதை நாயகனுக்கு வரும் அநாமதேய நக்கல் விமர்சனச் சீட்டுப் பற்றி ஆரம்பமாகி இணையத்தளங்களில் நடக்கும் கூத்துக்களைக் கிண்டலடித்துக் கொண்டு நகரும் அந்தக் கதையில் வருகிறது இந்தச் சம்பவம்.

“அட, ஊரைப் பற்றி எழுத வேண்டாம், உலகத்தில் எத்தனையோ அயோக்கியத்தனங்கள் நடக்கின்றன... முக்கியமாக ஈராக் விவகாரம்... விபரமாக எழுதலாம் இல்லையா? வீராவேசமாக நான் கூட - இரண்டாம் வளைகுடாப் போர் நிகழப் போவதற்கு முதல்நாள் - துணிச்சலான துபாய் அரசு காட்டிய ஒரு நிமிடக் குறும்படம் பற்றி எழுதவில்லையா - அந்த 'புத்தகப் புல்லு' இணையக் குழுமத்தில்?

இரண்டு புத்திசாலிக் குரங்குகள் சேர்ந்து களிமண்ணால் ஒரு சிலை வடிக்கின்றன. வசனமெல்லாம் இல்லை. வேடிக்கையான பின்னணி இசை மட்டும்தான். சிலையின் பின்பக்கம் மட்டும்தான் மங்கலாக நமக்குத் தெரிகிறது. தட்டித் தட்டி ஒருமாதிரியாக சிலை உருவாகி விட்டது. 'டக்'கென்று சிலையின் முன்பக்கம் தெரிகிறது இப்போது நமக்கு.

வடிக்கப்பட்டதும் ஒரு குரங்கு.

அடுத்த நொடியில் செய்திநேரம் ஆரம்பமானது. புஷ்ஷ¥ம், பிளேரும் அறிக்கை விடுக்கிறார்கள் - ஈராக்கில் ஜனநாயகத்தைக் கொண்டுவர போர் தொடுப்பதாக.

அசந்து விட்ட அத்தனை உறுப்பினர்களில் ஒரே ஒருவர் மட்டும் உடனே எழுதினார் : 'அந்த குறும்படத்தில் அருமையாக நீங்கள் நடித்திருந்தீர்கள்'

உலகத்தில் பொதுவாக படித்தோர், படிக்காதோரை இணைக்கும் பாலங்கள் சில உள்ளன. அவற்றுள் அரசியல், சினிமா, விளையாட்டு, நகைச் சுவை ஆகியன அடங்கும். இவற்றை எல்லாத் திறத்தவரும் சமமாக அமர்ந்து பேசுகிறார்கள். கருத்துப் பரிமாறிக் கொள்கிறார்கள். இவற்றில் சகலரையும் கவர்வது நகைச்சுவை மட்டும்தான். நகைச் சுவை சொல்வதற்கு எல்லோருக்கும் வாலாயப்படாது. அதைச் சொல்வதற்கு ஒரு முறை உண்டு. எப்படிச் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். நகைச் சுவையொன்றைச் சொல்லுவதாக இருந்தால் அதற்கு ‘டைமிங்’ தேவை. ‘டைமிங்’ தவறினால் அது எடுபடாது. நடிகர்களில் மிகச் சிறந்த நடிகர்கள் நகைச்சுவை நடிகர்கள்தாம். நகைச் சுவை எழுதுவதாக இருந்தால் அதற்குரிய சொற்கள் தேவை. அதைச் சொலவதற்கான வசன அமைப்புத் தேவை. நகைச் சுவையொன்றுக்கூடாக ஒரு தகவலை, செய்தியை, ஒரு கருத்தை இலகுவாக மக்கள்மயப்படுத்த முடியும்.

எனவே, சமுதாயக் கேவலங்களையும், பிறழ் நடத்தைகளையும், தப்புத் தாளங்களையும் கண்டிப்பதற்கும் ஒரு நல்ல கருத்தை முன்வைப்பதற்கும் நகைச்சுவையையும் சுவாரஸ்யம் மிகுந்த எழுத்து நடையையும் கைக் கொள்வதில் தப்பே கிடையாது என்பது எனது கருத்து. சுவாரஸ்ய எழுத்து நடை வாசகனைத் தன்னுடனேயே அழைத்துச் செல்ல வல்லது. அவ்வாறான எழுத்து நடை சென்று சேரும் களங்களும் பரந்தவையாகவே இருக்கும். இப்படியிருந்தால்தான் சிறுகதை என்று நாம் போட்டு வைத்திருக்கும் சட்டகங்களுக்கு அடங்காமல் சிரித்துக் கொண்டே அந்த எல்லைகளை ஆபிதீனின் எழுத்துக்கள் தாண்டிப் போகின்றன. அதே போல்தான் அவரது கதைகளின் வாக்கிய அமைப்பும். இலக்கணங்களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. ஒரு சொல்லைக் கூட ஒரு வசனமாக ஆனால் அர்த்தம் பொதிந்ததாக அவரால் பயன்படுத்த முடிகிறது.

ஆபிதீன் நகைச்சுவையை வேண்டுமென்றே புகுத்தும் ஒரு படைப்பாளி அல்லர். அது அவருக்கு இரத்தம் ஊறுவது போல எச்சில் ஊறுவது போல இயல்பாகச் சுரக்கிறது. மூடல் என்ற கதையில் இப்படி வருகிறது.

சென்னையில் தங்கி கைலி கம்பெனிகளுக்கு Tricolor லேபிள் டிசைன் போட்டுக் கொண்டிருந்த காலத்தில் முதலாளி ஷேக் காக்காதான் அடிக்கடி சொல்வார் என்னிடம் : 'தம்பிவாப்பா, உங்க பல்லை கொஞ்சம் சரி பண்ணுங்களேன்..

'பளீர் ' வெள்ளையுடன் பளபளக்கும் அவர் பல்லைப் பார்த்து நான் சொல்வேன் : 'சும்மா இருங்க காக்கா.. 'பல்லாலெயா வரையிறேன் நான் ? '

'அதுக்கில்லெ...பாக்க அலஹா இரிக்க வாணாமா ? கம்பி கட்டுனா கொஞ்ச நாள்லெ சரியாயிடும்லெ ? '

டிசைனுக்கு காசு வராது. டிசைன் செய்ய Rotring Pen வராது. ஆலோசனை மட்டும் அள்ள அள்ள வரும்.

அந்த காக்கா ஒருமுறை ஜியாரத்திற்காக என் ஊருக்கு போய் அப்படியே என் வீட்டுக்கும் போய் மூன்று ரூபாய் பத்து காசு கொடுத்துவிட்டு வந்ததும் ஏனோ என் பல்லைப் பற்றி பேச்சே எடுக்கவில்லை. எனக்கே எப்படியோதான் இருந்தது. ஈறுகளும் சேர்த்துத் தெரியுமாறு நான் சிரித்துக் காட்டியும் 'உம் 'மென்றே இருந்தார். நானாக 'கம்பி.. ' என்று துவக்கினால் 'சூ, அதை வுடுங்க தம்பி.. டிசைன் பத்திப் பேசுவோம். அந்த.. மஞ்சள்லெ நீலம் உக்காரும்போது... ' என்று தவிர்த்தார்.

வெட்கப்படாமல் ஒருநாள் கேட்டே விட்டேன் அவரிடம். 'ஏன் காக்கா இப்பல்லாம் பல்லுகம்பி பத்தி எதையுமே பேசமாட்டேங்கிறீங்க ? '

தன் பல்செட்டைக் கழட்டிவிட்டுச் சொன்னார் : ' ஒரு ஆளுண்டா பரவாயில்லே..ஒங்க குடும்பமே அப்படித்தான் இக்கிது! என்னா செய்யிறது ? அல்லாட படைப்புண்டு அப்படியே அக்குசெப்டு பண்ணிக்க வேண்டியதுதான்! '

ஆபிதீன் கதைகள் முழுவதுமே வெறும் நகைச்சுவைகளால் நிறைந்தவை அல்ல. ஆவை நகைச் சுவையூடான ஆழ்ந்த சிந்தனைக்குரிய விடயங்களைப் பேசுகின்றன. நகைச்சுவையே கலந்திருந்தாலும் உள்ளத்தைத் தொடுமாறும் கலங்கடிக்குமாறும் எழுதவும் அவரால் முடியும் என்பது ‘குழந்தை’ கதையில் வெளிப்படுகிறது. இறந்த நீலக் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்படும் காட்சியை அவர் சொல்லும் போது உயிர் உருகி விடுகிறது: -

“குழந்தைக்க்காக வெட்டிய குழி வடக்கு தெற்காக இருந்தது. இடம் ஞாபகம் வைப்பதற்கு வசதியாக (ஹபரடி ஃபாத்திஹாவுக்கு) பக்கத்தில் ஒரு பெரிய வேப்பமரம் இருந்தது. மோதினார் ஃபாத்திஹா ஓதியபிறகு, சின்னாப்பா குழியில் நின்று கொண்டு பிள்ளையை வாங்கி 'பிஸ்மில்லாஹி அலாமில்லதி ரசூலில்லாஹி ' என்று சொல்லியவண்ணம் குழியில் வைத்தார். தலை கிப்லா பக்கமாய் சாய்ந்திருந்தது. ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் மண் எடுத்துத் தந்தார்கள். அதை வாங்கிக் குழந்தையின் வலது கன்னத்தின் அடியில் வைத்தார் சின்னாப்பா. நானும் மண் கொடுத்தேன். முன்னொரு தடவை சின்னப்பட்டனார் சக்கரப்பாவின் மௌத்தின்போது - அப்போது நான் சின்னப்பிள்ளை - மண்ணை குழியில் நிற்பவரிடம் (அப்போதும் சின்னப்பாதான் நின்றிருந்தார் ) கொடுப்பதற்கு பதிலாக உடல் மேலேயே கொட்டியது ஞாபகம் வந்தது. நின்றவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். 'பரவாயில்லெ..சின்னப்பையன்தானே ' என்று சின்னாப்பா சொன்னார் அப்போது. எல்லோரும் மண் எடுத்துக் கொடுத்து முடித்து சின்னாப்பா அதை வாங்கி சற்று உருண்டையாக்கி குழந்தையின் வலது கன்னத்தின் அடியில் வைத்து விட்டு நிமிர்ந்தபோது ஒரு சின்ன கை 'ம்..இந்தாங்க சின்னாப்பா ' என்று நீண்டது. கடைசித் தம்பி ஹாஜா. அழுது கொண்டே கொடுத்தான். அதையும் வாங்கி வைத்தார் சின்னாப்பா. கடைசியாய் குழந்தையின் முகத்தைப் பார்த்தேன். பிறந்த மூன்று நாளிலேயே ஒரு மிகப்பெரிய புதிரின் விடையைக் கண்டுவிட்ட சிரிப்பு உறைந்து போயிருந்தது முகத்தில் அழகாய்..ஹமீது என்னை தட்டி இழுத்து அணைத்துக் கொண்டான்.”

ஆபிதீனின் எழுத்தில் மிக முக்கியமான சிறப்பு தன்னையும் தன் சார்ந்தோரையும் தன் சமூகத்தையும் தன்னோடு பழகும் பிற சமூகத்தவரையும் தொழில் ரீதியாகத் தொடர்புள்ளோரையும் சுற்றியே அவரது கதைகள் அமைவதுதான். அதிலுள்ள மேலதிகச் சிறப்பு என்னவெனில் யாருக்காகவும் தனது பாரம்பரிய பழக்க வழக்கச் சொற்களை நவீன மயப்படுத்தவோ நாகரீக வார்த்தைகளில் சொல்லவோ அவர் ஒரு போதும் முற்படுவதில்லை. கிழக்கில் ஒரு முஸ்லிம் கிராமத்தில் பிறந்த நான் இவரது கதைக@டே எனது கடந்த காலத்தையும் எனது மூதாதையரையும் சந்திக்கிறேன். அவர்கள் பயன்படுத்திய அறபுச் சொற்களை ஆபிதீன் எனக்கு மீட்டுத் தருகிறார். இந்தியாவும் இலங்கையும் வேறு தேசங்களாக இருந்த போதும் முஸ்லிம்கள் என்ற வகையில் பயன்படுத்தப்படும் சொற்களும் செயற்பாடுகளும் பெரும்பாலும் ஒரு நேர் கோட்டிலேயே பயணித்திருக்கின்றன என்பதை நான் காண்கிறேன்.

முஸ்லிம் சமுதாயத்துடன் இணைந்து வாழ்ந்த தமிழ் சமுகத்துக்கும் முஸ்லிம்கள் பயன்படுத்தும் அரபுச் சொற்களில் பரிச்சயம் இருந்ததுண்டு. இன்றும் கூட பல தமிழ் சகோதரர்கள் இச்சொற்களில் பரிச்சயம் உடையவர்களாகவும் முஸ்லிம்களுடன் உரையாடும் போது அதே சொற்களைப் பயன்படுத்துபவர்களாகவும் உள்ளனர். மௌத், கபுர், பாங்கு, மோதினார், ஆலிம், மௌலவி, ஜனாஸா, பர்தா போன்ற சொற்களை உதாரணமாகச் சொல்ல முடியும்.



தலைமை வகித்த திருமதி வசந்தி தயாபரன் மற்றும் நான்
உரை முடிவடைந்ததும் கருத்தத் தெரிவிக்கும் சட்டத்தரணி ராஜகுலேந்திரா

ஆபிதீன் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார் என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அவர் எழுதியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள 25 கதைகளில் 14 கதைகளை மாத்திரமே நம்மால் படிக்கக் கூடியதாகப் பதிவிடப்பட்டிருக்கிறது.

ஆபிதீனை அவரது வலைத்தளம் மூலமாக நாம் படிக்க முடியும். கதைகள் மட்டுமன்றி ஏனைய நூல்கள் பற்றிய குறிப்புக்கள், மற்றைய எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பற்றிய குறிப்புகள், இசை, ஞானிகள், இஸ்லாம் குறித்த அம்சங்கள், சர்வதேச விவகாரம், கவிதை என்று பல்வேறு விடயங்கள் குறித்து அவரது எழுத்துக்களைப் படிக்க முடிவதுடன் அவரது இணையத் தளமூடாக பல எழுத்தாளர்களைத் தொடர்பு கொள்ளவும் அவர்களைப் படிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளார்.

http://abedheen.wordpress.com/

சின்னச் சின்ன ஆசைகள் எல்லோருக்கும் உண்டு. ஆபிதீன் காக்காவின் வீட்டில் அவரோடு சேர்ந்திருந்து சிரித்துச் சிரித்து விருந்துண்டு மகிழும் ஓர் ஆசை என் மனதில் உள்ளது. என்றாவது ஒரு நாள் அது நிறைவேறக் கூடும்.
------------------------------------------------------------------------------------------------------

(கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இலக்கியக் களம் நிகழ்ச்சியில் 02.12.2011 அன்று ஆற்றிய உரை)

1 comment:

மஜீத் said...

//கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இலக்கியக் களம் நிகழ்ச்சியில் 02.12.2011 அன்று ஆற்றிய உரை//

என்னது?? 02.02.2011 ஆ?
இவ்வளவு சூடான தகவலும் தருவீங்களா? சூப்பர்!

ரொம்ப அழகா பேசிருக்கார் -
பேசவேண்டிய இடத்தில்
(Please upload the photos)