பால்ய விவாஹம்
-----------------------
-தாஜ்
இன்று வியாழக்கிழமை. நாளை வெள்ளி! ‘பள்ளி’ கிடையாது. கண்விழித்தவுடன் தோன்றிய முதல்நினைவே சந்தோஷம் தந்தது. நாளைக்கு காலை ஏழு, ஏழரை வரை துங்கலாம். எட்டும் தூங்கலாம். என்னை எழுப்ப என் அம்மா நிலையாய் நிற்கும்தான். ‘இத்தனை நேரம் தூங்குறானேன்னு…!’ பாட்டி விடாது. “பிள்ளை நல்லா தூங்கட்டும்டீ….” என சொல்வார்களே தவிர, எழுப்ப சம்மதிக்கமாட்டார்கள். ஆனால், பள்ளி இருக்கும் நாள்தோறும், என் பாட்டிதான் என்னை எழுப்பி விடும். அஞ்சேகால் விட்டா… அஞ்சரை! கொல்லை நடைக்கு போய் கிணற்றடியில் ‘கைகால்’ அலம்பிவிட்டு, பல்விளக்கச் சொல்லும்.
தூக்கம் கலையாது எழுந்து போய், கொல்லைக் கதவை திறப்பேன். திறந்த நாழிக்கு, கோழிகளின் அதன் குஞ்சுகளின் கெக்கரிப்பு, தூக்கக் கலக்கத்தை விரட்டும். இந்தக் கெக்கரிப்புதான் தினம்தினம் நான் கேட்கும் முதல் இசை! கொல்லைத் தாழ்வாரத்தின் கிழக்குப்பக்க மூலையில், கள்ளிப்பலகையிலான, கம்பிவலையிட்ட கோழிப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கோழிகளையும் குஞ்சுகளையும் பார்க்க ஆவலெழும்! இன்னும் தீரவிடியாத, அந்த இருட்டில், அதுகள் எதுவும் சரியா தெரியாது. சப்தம் மட்டும்தான் ஆறுதல். தாழ்வாரத்திலிருந்து படியிறங்கி, இடதுபுறம் திரும்பி, பத்து தப்படி வைத்தால், சின்ன கிணறு. அதைச்சுற்றி சிமெண்ட்தளம்! கிணற்றை குனிஞ்சுப் பார்க்க மாட்டேன். பயம். பார்த்தாலும், தண்ணீர் தெரியாது. இருட்டுத்தான் கிடக்கும்! கொஞ்சத்துக்கு விடியல் கண்டுவிட்டதென்றாலும், எங்க வீட்டுக்கொல்லை இன்னும் இருட்டுதான்!
கொல்லையில் ஏகப்பட்ட மரமட்டைகள்! கிணற்றடி தளத்தைச் சுற்றி வகைவகையான குரோட்டன்ஸ்! கொஞ்சம்தள்ளி கடாரங்காய், நார்த்தன், பம்பளிபாஸ் என்று! தாத்தா ரொம்ப ரசனை கொண்டவராக இருந்திருக்கக் கூடும்! கொல்லைப்படியில் இருந்து நேரா நடந்தா, மையத்தில் ஒருமாமரம். பெரிசா கிளைகளையும் கொம்புகளையும் பரப்பி, தளையா தழைச்சி கிடக்கும்! அந்த மாமரம், என்ன வகை மாமரமுன்னு யாருக்கும் தெரியாது. காய்த்தால்தானே தெரியறதுக்கு?
“ஒட்டுதாண்டி ரொகையா”ன்னு, வடகரையில் இருந்து வந்திருந்த தன் தங்கையிடம், என் பாட்டி ஒருதரம் சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் ‘ஊரும்மா’ என்று அழைக்கும் என் சின்னப்பாட்டி, அதனை நம்புவதாக இல்லை! தான் நம்பவில்லை என்பதை, குறைந்தது அரைமணி நேரத்திற்கு மேல் பேசி புரியவைக்க முயன்றார்கள். ‘சரிதான் சும்மாயிருடீ..’ என்றோ, ‘போடி இவளே’ என்றோ நீட்டி முழங்கி, என் பாட்டி மறித்தால்தான் அடங்குவாங்க. அப்போதும் அப்படிதான் பாட்டி அடக்கினாங்க. தன் அக்காவிடம் ஊரும்மாவுக்கு மரியாதை உண்டென்றாலும், தங்கச்சிங்கிற முறையில அவ்வப்போது அக்காவ மறுத்து, கண்டதையும் கண்ட நேரத்தில் பேசிகிட்டுதான் இருப்பாங்க. என் பாட்டி, தன்னுடைய தங்கச்சி பேச்சை சிலதரம் கேட்பாங்க, பலதரம் காதுல விழாத மாதிரிக்கு இருந்துடுவாங்க. ‘அவகிடக்குறா, வாள்வாளுன்னு கத்தத்தான் தெரியும் அவளுக்கு!’ என்பது அவுங்களது தீர்மானம்.
காய்ப்பும் இல்லாம, காரணமும் இல்லாம இந்த மரம் எவ்வளவு பெரிய இடத்தை அடைச்சுகிட்டும், கொல்லையை இருட்டா ஆக்கிக்கிட்டும்ல நிக்கிது. எங்க வீட்ல மாடு வளர்க்கிறது கிடையாது. அப்படி வளர்த்திருந்தா, அதை இதுல கட்டிப்போடலாம்! அத்தனைக்கு தாராள இடம்! எந்நேரமும் நிழல்! பொருக்க நிழல் தரும் மரத்தை, மாடுகளும் விரும்பும்! விடிந்தும் விடியாத இந்தக் காலைப் பொழுதில் அம்மரத்தை ஏறிட்டுப் பார்க்கவும் பயம். ராட்சஷி மாதிரி பரப்பிகிட்டுல நிற்கிறது! அந்த நேரத்தில், கிணற்றடிக்கு போகும்போதெல்லாம், என் வேலைகளை சுருக்கமுடிச்சுட்டு வீட்டுக்குள் வருவதிலேயே குறியாயிருப்பேன். அதை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்.
நேற்று பள்ளிவிட்டு வீடு திரும்பும்நேரம், ‘பொத்தகாவீட்டு’ ரவூஃபு, என் தொப்பியைத் தட்டிவிட்டான். கீழேவிழுந்ததில் தொப்பியெல்லாம் மண். அதற்காக, அவன் தலையில் நான் குட்டியது இப்ப, கிணற்றடியில் நிற்கும் இந்நேரம் ஞாபகத்திற்குவந்து. இன்னெக்கி அவன் அதனை ஹஜ்ரத்திடம் சொல்லி விடுவானோங்கிற பயம் கூடியது. அதே யோசனையில் இருந்த போது, வீட்டின் உள்ளே இருந்து பாட்டியின் சப்தம் கேட்க, கலைந்தது அது.
“எவ்வளவு நேரமா அங்கேயே நிற்ப, இருட்டுல பூச்சிப்பொட்டு இருக்கும். கிணற்றடிக்கு அந்தப் பக்கமுள்ள மோடையில் கரித்தூள்டப்பா இருக்கு பாரு, கொஞ்சமா உள்ளங்கையில் கொட்டிக்கிட்டு, மேலே கீழே நல்லா தேய்த்து வெளக்கி வாய்கொப்பளிக்கணும். தொண்டைக்குள் விரலைவிட்டு கழலையெ காறி உமிழணும். நாக்கையும் தேய்த்து சுத்தமா விளக்கு. அப்பதாம்பா ஓதுதல நல்லா வரும்! நின்னுகிட்டு இருக்காதே. நேரம்வேற ஆயிட்டே இருக்குது பாரு.”
வாளியைவிட்டு கிணற்றில் நீர்மொண்டு வைத்துகொண்டவனாக, மூலையில்போய் மூத்திரம் அடித்து அலம்பிவிட்டு, பல்துலக்கி, வாய்க்குள் விரலைவிட்டு,
‘ழ்ழ.. ழ..ழா..’ இசைத்து, கழலையை காறிக்காறி பலமா உமிழ்ந்தேன். முகம்கழுவி, சீக்கிரம் சீக்கிரமாக கூடத்திற்கு விரைந்தேன். கைலியை கணுக்காலுக்கு மேலே அளவா தூக்கிப்பிடித்து நேர்பார்த்து, மடக்கி இறுகக்கட்டி, தொப்பியை எடுத்து அதன் மேல்புறம் பூசினமாதிரி ஒட்டித் தெரிகிற மண்ணை தட்டிவிட்டுவிட்டு தலையில் கவிழ்த்து கொள்ளும்வரை, முஸல்லா அமர்வில் இருந்தப்படியே, குறுகுறுவென பாட்டி நோட்டம் விட்டுக்கொண்டும், அப்பப்ப சின்னச் சின்ன கட்டளைகளை பிறப்பித்து கொண்டும் இருப்பார்கள்! அதில், சில கட்டளைகள் எனக்கு. இன்னும் சில கட்டளைகள் அவர்களது மகளான என் அம்மாவுக்கு. “காப்பித்தண்ணி போட்டாச்சா..? புள்ள பள்ளிக்கு கிளம்ப நேரமாச்சுல!” அவர்களின் பிசிரே இல்லாத அழுத்தமான குரல், அதிகாலை நிசப்தத்தில் மோதித் தெறிக்கும். “எனக்கு மாமியாக்காரின்னு ஒருத்தி இருந்திருந்தாக் கூட, காலங்காத்தாலே இப்படி கத்தமாட்டா?” இது என் அம்மா. மகளின் மறுமொழியை கேட்டு, பாட்டி குனிந்த தலை நிமிராமல் முகம் மலரும்.
நாள் தவறாது காலை மூணுமணிக்கெல்லாம் பாட்டி எழுந்து, முற்றத்து கைப்பம்படியில் ஒதுவெடுத்து, ‘தஹஜத்’ எனும் பிரத்தியோக தொழுகைக்கு விரைவார். அதைத் தொழுதுவிட்டு, அதே ‘முஸல்லா’ விரிப்பில் முழங்கால்களை மடக்கிய அமர்வில் பவ்யமாக வெகுநேரம் அமர்ந்து, நன்மை பயக்கும் ஆயத்துக்கள் பலவற்றை திரும்பத்திரும்ப ஓதியவராக, தசுமணி உருட்டி கொண்டிருப்பார். விடியற்காலை நாலரைவாக்கில் ஃபஜர் பாங்கு கேட்கவும், சாவகாசமாக எழுந்து ஃபஜ்ர் தொழுகையையும் தொழுதவராக, நீண்ட ஃபாத்திஹாவை ஓதி முடித்தெழுந்துவந்து, என் நெற்றியை தடவியபடி ஊதிவிடுவார். அதே நாழியில், என்னை அசைத்து எழுப்பிவிட்டுவிட்டு, நல்ல உறக்கத்திலிருக்கும் மூணுவயதான என் தம்பிக்கும் ஊதிவிடுவார்.
“பள்ளிக்கூடத்தில போய் என்னத்தான் பெரிசா படிச்சாலும், ஆண்டவனை தொழுவவென்று ஓர் ஐந்தாறு சூராக்களையாவது மனனம் செய்துக்க தெரியவேண்டாமா? ஈமான் பிடிமானம் நெஞ்சில் நிலைக்க ‘கலிமா’ சிலதை கத்துக்கவேண்டாமா? அப்பப்ப மனபாரம் போக்க ‘யாசின்’ ஓத தெரிந்து கொள்ளவேண்டாமா?” என்று பாட்டி ஆதங்கத்தோடு சொல்வார்கள். தொடர்ந்து, “அல்லாவின் ‘ந்நாமா’வை நாவால் ஓதினால்தானே இம்மையிலும் ஆகிரத்திலும் நம்மை அவன் பாதுக்காப்பான்!” என உறுதியாகவும் அறுதியிட்டும் நம்பியவர்களாக என் காதுபட அழுத்தமாக சொல்லியுமிருக்கிறார். தவிர, சொந்தபந்தங்கள் யாரும், ‘இந்தப் பொம்பளே, தன் பேரனை காஃபிரா வளர்த்திருக்கிறாளேன்னு’ சொல்லிவிடக் கூடாது என்பதில், ரொம்பவே கவனமாக இருப்பார்கள். அதற்காகத்தான் கண்ணும் கருத்துமாக என்னை பள்ளிக்கு அனுப்பிவைக்க, தினைக்கும் இந்த அவஸ்தை கொள்கிறார்!
இஸ்லாமிய சிறுவர் சிறுமிகளுக்கு, அரபு மொழியினை எழுத்துக் கூட்டி ஓதக் கற்றுத்தரும் ஆரம்பப் பாடசாலையை எங்கபக்கத்தில் ‘பள்ளி’ என்பார்கள். இந்தப் பள்ளிகள் பெரும்பாலும் பள்ளிவாசல் வளாகத்திலேயே இருக்கும். இதனை ‘மதரஸா’ என்றும் சொல்லலாம்தான். ஆனா, அரபு மொழியில் உயர் படிப்பினை வழங்கும் கல்விக்கூடத்தையே ‘மதரஸா’ என்பது எங்களிடையே வழக்காகிவிட்டது. மதரஸா, பரவலாக எல்லா ஊர்களிலும் இருக்காது. மாவட்டத்திற்கு ஓரிரண்டுதான். பள்ளி அப்படியல்ல. எல்லா முஸ்லிம் ஊர்களிலுமுள்ள எல்லா மசூதிகள் தோறும் கட்டாயம்.
“கைலியை சரியா கட்டிக்கடா, இல்லன்னா ரோட்ல நடக்கிறப்பா கால் சீக்கிக்கும், தடுமாறி விழுந்தீனா, ஜுதும் கீழே விழுந்திடும். அல்லாவின் ‘ந்நாமா’டா அது! ஜாக்கிரதை. அங்கேயிங்கேன்னு கீழேயெல்லாம் வைக்கக் கூடாது, பத்திரமா நெஞ்சோடு அணைச்சி எடுத்துட்டு போணும் எடுத்துட்டு வரணும். தெரியுதா..?” என்கிற என் பாட்டியிடம், “அதெல்லாம் விழாதும்மா” என்றபடிக்கு. கைலிக்கட்டை காட்டி, ‘ஓகே’ வாங்க நிற்பேன். “சரி சரி சட்டையை சரியா போட்டுக்கிட்டு சீக்கிரம் கிளம்பு, எல்லா பொத்தானையும் ஒழுங்கா போட்டிருக்கல? மார்பு தெரியக்கூடாதுப்பா, ஜில்லுப்பு காத்து நெஞ்சில பட்டிச்சுன்னா, உடம்புக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஏதாவது ஆயிடும். ம்... சீக்கிரம் சீக்கிரம்.. விடிஞ்சிடப் போகுது” என்பார்கள். அம்மா காப்பி டம்ளரை எப்படா கொண்டுவந்து தருவார்கள் என்றிருக்கும். எங்கவீட்டு காப்பித்தண்ணி வித்தியாச சுவை கொண்டது!
மணி அஞ்சேமுக்காலாகிவிட்டது. ஆறுமணிக்கு மேல்போனால் பள்ளியில் முட்டிபோட வேண்டியிருக்கும்! பள்ளிக்கு வரும் கால்வாசி பேர்கள் கட்டாயம் முட்டி போடுபவர்களாகவே இருப்பார்கள்! முட்டிப்போட்ட நிலையில்தான் ஓதவும்வேண்டும்! தாமதமாக வந்தால், ஹஜ்ரத் பின்னேயென்ன கொஞ்சவா செய்வார்? அவர் மனசு இரக்கப்பட்டு உட்காரச் சொல்லும்வரை அவர்கள் உட்கார முடியாது. எங்க ஹஜ்ரத்துக்கோ இரக்கப்படவே தெரியாது. தெரியாது என்று முற்றாய் சொல்லி விடவும் முடியாது, சில பணக்கார வீட்டுப்பிள்ளைகளிடம், அதுவும் குறிப்பாய் பெண்பிள்ளைகளிடம் அவருக்கு இரக்கம் கசியக் கண்டிருக்கிறேன். அந்தக் கசிவு சிலநேரம், அவரிடம் பெருக்கெடுத்து, குதூகலமாக பீறிடுவதையும் கண்டிருக்கிறேன்.
பள்ளிவாசல், அடுத்த தெருவில்தான் இருக்கிறது. மூணே நிமிஷத்தில் ஓடிவிடலாம். பள்ளிக்கூட ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்தெல்லாம் இருக்கிறேன்! இங்கிருந்து பள்ளிக்கு சுறுக்க ஓடுவதா பெரிசு! முதலில் அம்மா காப்பித்தண்ணி தரட்டும். எதிர்பார்த்த நாழியில் அம்மா டம்ளரோடு வந்தார். காப்பித்தண்ணி சூடுபறந்தது. சீனிக்கு பதிலான அச்சுவெல்லத்தின் முறுகல் வாசனை கமகமத்தது! அதை வாங்கிய வேகத்தில் குடிக்க நின்றேன். “உட்கார்ந்து மெதுவா குடிடா. சூடா இருக்குல்ல! ஊதிவிட்டு மெதுவா குடி” அம்மா சொல்கிற மாதிரி அப்படி ஆறஅமற குடிச்சுட்டு போன, பொழுது விடிஞ்சுடும். இப்பவே மணி அஞ்சியம்பது! ஆறுமணி ஆச்சோ இல்லையோ பள்ளியில் முட்டிதான். பொம்பளெப் புள்ளிங்க வேற சிரிப்பாளுவோ. எங்க கடைத்தெரு பள்ளிக்கூடத்தில், மூணாவதுபடிக்கிற பாத்துமா ரொம்பவும்தான் சிரிப்பா. நாக்கைப் பிடுங்கிக்க தோணும். அங்கே, அவ மக்குபிளாஸ்திரி! கணக்கு.. ம்..ஹும். ரெண்டையும் ரெண்டையும்கூட பெருக்க தெரியாது. அவ வாத்தியார் அதுக்காக அடிச்சப்ப என் ரெண்டு கண்ணாலப் பார்த்திருக்கேன். தமிழ்ப் பாடமும் அவளுக்கு அப்படிதான். வராது. வாத்தியாரிடம் தினைக்கும் திட்டு வாங்குவா. அங்கே நான் நாலாவதாக்கும்! ஆனா, இங்கே அவ ‘குர்ஆன்’ஐ முடித்து, சுன்னத்து சுபியான் ஓதிட்டிருக்கா. நான் இப்பதான் அல்ஹம்து!
அவ அண்ணன் குத்புதீன், எங்க பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறான். அவன் ரெண்டாம்கிளாஸ்! ரெண்டு வருஷமா அவனால அத தாண்டமுடியலை. தங்கச்சியை விட, தான் ஒரு கிளாஸ் மட்டங்கிற உறுத்தலெல்லாம் அவனுக்கு கிடையாது. அப்படியொரு லூசு! அதுவும் கிறுக்குப்புடிச்ச லூசு! அவன் பேச்சுதான் அவனுக்கு. எப்பப்பார்த்தாலும் பேசுவான் பேசுவான்.. பேசிகிட்டே இருப்பான்! அவனது வாத்தியாருகிட்டே கூட அப்படித்தான் பேசுவான்! அவருக்கே பாடம் படிச்சுதர மாதிரி, ஆனா, எல்லா பரிச்சையிலும் எப்பவும் சைபர்தான். அவன், இங்கே அத்தனை ஜூதையும் ஓதிமுடிச்சுட்டு, (குர் ஆனை மூணுதரம் திரும்பத்திரும்ப ஓதியிருக்கானாம்!) இப்ப மௌலது ஓத கத்துக்கிட்டு இருக்கான்! இங்கே ‘குர்ஆன்’ ஓதுகிறவர்களிடம் பாடம் கேட்கிறவனே அவன்தான்! அவன் தங்கச்சி பாத்துமா அல்ஹம்துக்கு!
எனக்கும் அவளுக்கும் ஆகாது. நான் எத்தனை அழுத்தந்திருத்தமா ஓதிக் காமிச்சாலும், சரியா ஓதவரலைன்னுடுவா. ஹஜ்ரத்தும் அவசொல்றததான் நம்புவார். அல்ஹம்து தொடங்க வாங்கிய புதுஜுதும் பழசாயிடுச்சி! இன்னும் ‘தப்பத்தெதா’வைத் தாண்டல. அவ தாண்டவுடுல. போடின்னு மனசுக்குள்ளே திட்டுவனே தவிர, அதுக்காக அவகிட்ட கெஞ்சிப் பணிந்து மேலே ஓதணுமுன்ணு எண்ண மாட்டேன். அல்ஹம்து ஜுதிலேயே உட்கார்ந்திருக்கோமேன்ணு கவலையும் கிடையது. ஆனா பள்ளிக்கூடத்தில, அவளோடு படிக்கும் மாணவர்களிடம் ‘அவ மந்திரவாதி வீட்டுப் பொண்ணுன்ணு போட்டுக் கொடுத்துடுவேன். பசங்களும் அவளிடம் பொறுப்பா போயி, ‘நீ மந்திரவாதி வீட்டுப் பொண்ணாமேன்ணு!’ கேட்டுடுவானுங்க. “யாருடா உங்களுக்கு இதெ சொன்னான்னு?” அவகேட்கிறப்ப, என்னை கை யைக்காட்டிடுவாங்க. அப்படியே நெருப்பாத்தான் பார்ப்பா. அது எனக்கு சந்தோஷமா இருக்கும். ‘உண்மையைச் சொன்னா இவளுக்கு ஏன் இப்படி பத்திகிட்டு வரது!?’ மந்திரவாதி மகதானே இவ?
அவளோட ‘பாவா’ மைதீன் என்கிற மைதீன்லெப்பை, எங்க மஹல்லாவுக்கு வெளியூர்லேந்து வந்து குடியேறுனவரு! ஆனா, இன்னியதேதிக்கு அவரை சுத்துப் பட்டு பதினாறு கிராமமும் அறியும்! பயந்தவங்களுக்கு நூல்முடிந்து தருவது, காரியம் கைகூடனுமுன்ணு வரவங்களுக்கு தாயத்து ஓதி கட்டுவது, பாம்பு, பூரான், நட்டுவாக்களி, இன்னுமான விஷக்கடிங்க பூராவுக்கும், ஆயத்து ஓதி கடிவாய் விஷத்தை இறக்குவதில் இருந்து பேய், பிசாசு ஓட்டுவது, பில்லிசூனியம் வைப்பது, எடுப்பதுவரை ஒண்ணு பாக்கியில்லை. அதனால்தான் அவருக்கு ‘மந்திரவாதி’ங்கிற பட்டம்! அவரு வீட்டுமுன்னாலே எப்பவும் ஒரு கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும். என்றாலும் அவரை எங்க மஹல்லாகாரங்க ஒருத்தரும் மதிக்க மாட்டாங்க. அவரு ‘பௌவுசு’ அவ்வளவுதான்!
மணி அஞ்சியம்மது! காப்பித்தண்ணி குடித்தானது. அல்ஹம்து ஜுதையும் ரேகாலியையும் எடுத்து மார்போடு அணைத்தப்படிக்கு வீட்டு வாசலுக்குவந்தால், வானம் விடியாது கறுத்துக் கிடக்கிறது. பனிப்பொழிவையொத்த மழைச்சாரல்! “மழை வராது, காத்து அடிக்கிற வேகத்தைப்பார்த்தா வர மழையையும் கலைச்சிடுமுன்னுதான் தோணுது. எதுக்கும் குடையெடுத்துட்டு போ, பத்திரமா எடுத்துவந்திடணும். தூறலிலே ஜூது நனைஞ்சிடபோகுது. அல்லாவின் ஆயத்துடா அது!” பாட்டியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ள நேரம் இல்லாதவனாய், ரேகாலியையும் ஜூதையும் சட்டைக்குள் சொருகிகொண்டு, தெருவில் இறங்கி பள்ளியைப் பார்க்க ஓடினேன். ஓடுகிறபோது, ‘பொத்தகா வீட்டு’ ரவூஃபு ஞாபகம் வந்து பயமுறுத்தியது.
பள்ளிவாசல் தெரு முனையில், மிகப் பெரிய முஸாஃபர் சத்திரம்! பாவப்பட்ட வழிப்போக்கர்களுக்கானது அது! அவர்கள் தங்கிப்போக, அந்தக்காலத்தில ‘பரங்கிப் பேட்டை மரைக்காயர்’ என்று வழங்கப்படும் தனவந்தர் ஒருவரால் கட்டி, ‘ஹதியா’ செய்யப்பட்ட கட்டிடம். அவரது மனசு விசாலமானது என்று பெரியவர்கள் எல்லோரும் வியக்க கேட்டிருக்கிறேன்! நிஜம்தான், எத்தனை புண்ணியகாரியம் இது! அவரது சிந்தைபடிக்கே, பாவப்பட்டவர்கள் எப்பவும் அதில் நிறைவாகவே இருந்தார்கள்! அதன் இடப்பக்கம் திரும்பி நடந்தால், சத்திரத்தின் நேர்பின்புறமாக வரும் ‘மொஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல்’ எனும் பெயர்கொண்ட பள்ளி வாசல்! இதுவும்கூட அந்த மரைக்காயர் கட்டியதாகத்தான் சொல்கிறார்கள்!
எங்க பள்ளிவாசல், அந்தக் காலத்திய வடிவமைப்பு கொண்டது. 250 வருசத்துக்கு முந்தி, கட்டப்பட்டதாக சொல்வார்கள்! அதன் சுற்றுச்சுவர்கள் அகலமானது! தெற்குப் பக்கச் சுவற்றில் காற்று ஊடாட ஏகப்பட்ட சாளரங்கள்! பள்ளிவாசல் வெளிவராண்டவில் சுண்ணாம்பும் செங்கல்லிலுமான, ரெண்டுகைகளினாலும் கட்டியணைக்க முடியாத தூண்கள்! ஒரு தூணுக்கும் இன்னொரு தூணுக்கும் இடைப்பட்ட மேல்பாகம், நெளிவுவட்ட வரும்புகொண்ட துருக்கிய வேலைப்பாடு! அதனை அண்ணாந்துபார்த்தா, அழகான அரைவட்டச் சித்திரமாக தெரியும்! கட்டிடத்தின் வடபுறம்பார்க்க, பெரிய சதுரவடிவான ஹவூஜ்! ஒரே நேரத்தில் ஐம்பது பேர்களுக்கு குறையாமல் ‘ஒழு’ வெடுக்கமுடியும்! எப்பவும் நீர் நிரப்பப்பட்டு சலசலவெனவிருக்கும்! அதில்தான் எண்ணிக்கைகொள்ளா எத்தனை வண்ண மீன்கள்!
அந்த ஹவூஜிற்கு மேற்குப்பக்கம் ஓர் திண்ணை, தெற்கு வடக்கில் ஹவூஜின் அகலத்திற்கு சற்று கூடுதலாக நீண்டிருக்கும். அந்தத் திண்ணைதான் பள்ளி! எதிரும் புதிருமாக இரண்டுவரிசை அமரும் நீளம் கொண்டது. சுமார், முப்பது முப்பது பேர்கள் எதிரெதிரே உட்கார்ந்து ஓதுவோம். ஓதவருபவர்களின் எண்ணிக்கை சிலநேரம் கூடும். அப்படி கூடிவிடும் நேரம், இடம் பற்றாக்குறையாகி நெருக்கமாக உட்காரும்படி ஆகிவிடும். பெரும்பாலும் எண்ணிக்கைக் கூடாது. திண்ணையின் தெற்குப் பக்கத்து ஆரம்ப விஸ்தீரணம்தான் எங்க ஹஜ்ரத்தின் அமர்விடம். அவர் அருகே உட்கார்ந்து ஓத, ஓர் சின்னக் கூட்டமே இருக்கும். அவர்கள் நன்றாக ஓதவும் ஓதுவார்கள். ஹஜ்ரத்தும் அவர்களுக்கு மட்டும்தான் நேரடியாக பாடம் எடுப்பார். ஒருநாளும் அவர் அருகே நான் அமர்ந்ததில்லை. அமரவும் நினைத்ததில்லை. அவரைவிட்டும், தூரம்பார்த்து உட்காரக் கூடியவர்களில் நான் முக்கியமானவன். அதிலும், அவரது பார்வை என் மீது விழாதகோணத்தில்! ஆனால், அவரை அவ்வப்போது நான் கவனிக்கத் தவறுவதேயில்லை.
எங்க ஹஜ்ரத் மிகுந்த திறமைகொண்டவர் என்கிற பேச்சுண்டு! மிக அழகாக அரபி எழுதுவார். சித்திரம் வரைவார். புத்தகங்களுக்கு பைண்ட் போடுவார். எங்க மஹல்லாவில் உள்ள ‘சுத்தானந்த ஜோதி மறுமலர்ச்சி மன்றம்’ எனும் ‘பைத் சபை’யின் நிர்வாகிகள் வேண்டுகோள் வைக்கும் தருணமெல்லாம் தட்டாது ‘சோபனம்’ எழுதித் தருவார். சோபனம் என்பது, எங்க மஹல்லாவில் நடக்கும் திருமணங்களையொட்டி மணமக்களை ‘பா’வால் வாழ்த்தும் பாடல். நபிமார்களின், அவர்களது மனைவிமார்களின், அவர்களது பிள்ளைமார்களின் வழிநின்று இஸ்லாத்திற்கு பெருமைசேர்க்க அறிவுருத்தி, மனமினிக்க மணமக்களை வாழ்த்துவதாக இருக்கும்!
மணமகனை தெருவலமாக அழைத்து செல்லும் ஊர்வலங்களில், இறைத்துதிப் பாடல்களை பைத் சபையினர் பாடுவது அவசியம். அப்பாடல்களை பழைய சினிமா மெட்டில், அவ்வப்போது புதிதுபுதிதாக எழுதியும் தருவார்! பெரும்பாலும் அந்தப் பாடல்கள், பழைய இந்திப்பட பாடல்களின் மெட்டில் ‘கட்டுவது’ என்பது எங்க ஹஜ்ரத்தின் ஸ்பெஷல்! அவர் அப்படிக் கட்டும் எல்லாப் பாடல்களிலும் அவரது பெயரான ‘அப்துற்ரஹீம்’ கட்டாயம் சொறுகப்பட்டிருக்கும். ‘விபரம் அறிந்த ஊர்காரர்கள்’ அப்பாடல்களின் அர்த்தப்பாங்கை ஓகோன்னு சிலாகிப்பதை கேட்டிருக்கிறேன். அதனை வாங்கிகொண்டு போகவரும் பைத்சபையின் நிர்வாகஸ்தர்களை கிட்டக்க அழைத்து, எப்படி ராகமிட்டுப் பாடவேண்டுமென மெல்ல பாடியும் காட்டுவார்! அவரது இந்த உபப்பணிகள் எல்லாமும் பள்ளி நேரங்களில்தான் பெரும்பாலும் நடக்கும்!
ஹஜ்ரத்தை கவனிக்க தவறும்பட்சம், என் பார்வைக்கு ஹவூஜும் அதனின் மீன்களும்தான்! பார்க்க பச்சையாக தெரியும் நீர்கொண்ட ஹவூஜின் நாலாபுற சுற்றுச் சுவற்றிலும் ஒருவருடம் சுரண்டி எடுக்கக்காணும் பச்சைப்பாசி அப்பிக் கிடக்கும்! அந்த பச்சை அடர்பாசியால்தான் அதன் நீர் பார்க்க பச்சையாக தெரிகிறதோ என்னவோ! ஹவூஜில் துள்ளித் திரியும் மீன்கள், பார்க்கப் பார்க்க மீண்டும் மீண்டும் பார்க்க சொல்லும்! அம்மீன்கள் எப்பவுமே கூட்டம் கூட்டமாக வலம் வந்தபடியே இருக்கும். ஹவூஜின் நடுவில் அடர்ந்து ஹவூஜ் பூராவும் பரவிக்கிடக்கும் ஒருவகை நீரினப் புல்வெளிக் குவியலில் நுழைந்து மறைந்து, நேரம் எடுத்துக்கொண்டு திடுமென வெளிப்பட்டும். ஓதுதலையும் மறந்து, அதனைக் கவனிக்கும் தருணமெல்லாம், என்னிடம் உற்சாகம் மெல்லிய சப்தமாக எழும். இதன்பொருட்டு ஹஜ்ரத்திடம் மாட்டிக் கொள்வதும் நடக்கும். சில நேரம் அதட்டலோடு விடுவார். சில நேரம் கூப்பிட்டு கையை நீட்டசொல்லி விரல்களை விரிக்க சொல்லி, பிரம்பால் சுளீரென விளாசுவார். அடியின் வலி வெகுநேரம் நோகும்.
*
எங்க வீட்டுக் கொல்லையில் அவ்வப்போது பாம்பு நடமாட்டம் உண்டு. குறிப்பாக, நாங்கள் புழங்கும் இடங்களில் அதனை கண்டுவிடும் தோறும் என் பாட்டி புலம்ப ஆரம்பித்துவிடுவார். ‘அல்லா.. அல்லா..!’ வென ஆத்து போவார்! இந்த தொல்லைக்கு நிவர்த்திவேண்டி, எங்கவீட்டில் வருடாவருடம் ‘மொஹரம் மாதம்’ பிறை பதினைந்தில் மூசாநபிக்கு ‘பாத்திஹா’ ஓதுவார்கள். ‘மூஸாநபி’ பாம்புகளை தன்கட்டுக்குள் வைத்திருந்தவராம்! அவரது கைத்தடி, பாம்பால் ஆனதாம்! அவரது சொல்லுக்கு அதுகள் அஞ்சி நடுங்கி கட்டுப்படுமாம்! இதனை, என்பாட்டி அப்பப்ப வியந்துசொல்லும்! அந்த பாத்திஹாவுக்காக, நன்றாகக் கூவக்கூடிய சேவல் ஒன்றை தேடிப்பிடித்துவாங்கி, அறுத்து சமைத்து, நெய்சோறாக்கி, பகல்விருந்து ஏற்பாட்டோடு ஹஜ்ரத்தை அழைத்து, பாத்திஹா ஓதச் செய்வார்கள். இந்த வருடத்திய மொஹரம் மாதம் தொடங்கியது.
எதிர் பார்த்தமாதிரியான கூவும் சேவல் கிடைக்கவில்லையென்று என் பாட்டி என்னை இழுத்துகொண்டு, பாதரகுடி கிராமத்திற்குபோய் குத்தகைகாரர் வீட்டில் சொல்லிவைத்து, இரண்டுநாள் கழித்து மீண்டும் என்னை இழுத்துப்போய் அதனை வாங்கி வந்தார்கள்! அவர்களுடன் போய்வந்த அலுப்பில் ‘பாம்பு தொல்லைக்கு பாத்திஹா ஓதுவதால் நிவர்த்தியாவது எப்படி?’ என்று தோன்றியது. குறிப்பிட்ட நாளில் பாத்திஹாவுக்காக ஹஜ்ரத்தை அழைத்துவந்தேன். பாத்திஹா ஓதிமுடிந்த நாழியில் விருந்து! சாப்பாடு ஆனபிறகு ஹஜ்ரத்தின் பார்வை எப்பவுமே வெற்றிலைசீவல் தாம்பாள வருகையின்மீதே இருக்கும். இப்பவும் அப்படிதான். அதில், வெற்றிலை சீவலுக்கு கீழ், மூன்று ரூபாயிக்கு குறையாமல் இருந்தால், ஹஜ்ரத்தின் முகம்மலரும். வலியசிரிக்கச் சிரிக்க தாம்பூலம் போடுவார். எங்க அம்மா மூன்று ரூபாயிக்கு மேல், எட்டணாவை வைத்து தந்தது. ஹஜ்ரத்தின் சிரிப்பும் பேச்சும் கூடுதலானது.
“என்ன மும்தாஜு, தம்பி அப்துல்லா நல்லாயிருக்காறா? எப்ப ஊர்வராராம்?” அம்மாவிடம், என் அத்தாவைக் குறித்த சேமநல விசாரிப்போடு பேச்சைத் துவங்கி, அக்கறையாக எல்லாவற்றையும் விசாரித்தார். “இப்பத்தானே பயணம் போனாங்க, இரண்டுவருஷம் கூட இன்னும் ஆகலையே” என்று ஹஜ்ரத்தின் விசாரிப்புகளுக் கெல்லாம், பணிவோடும் தாழ்ந்தக்குரலிலும் அம்மா பதில் சொன்னது.
“தாஜு, அல்ஹம்து ஜுதை முடிப்பேனா என்கிறானே ஹஜ்ரத், நீங்க கொஞ்சம் கவனிக்கக் கூடாதா? இப்படியே போனா அவன் எப்ப குர்ஆன் தொடங்குவது?” உள்கூடத்தில் இருந்து பாட்டியின் கணீர் குரல். “யாரு ரஹ்மானி பீவியா.., எங்கம்மா, அவன் பள்ளிக்கு வந்து என்னசெய்ய? ஒழுங்கா ஜூதைப்பார்த்து கவனமா ஓதுனாதானே! நல்லா பராக்குப் பார்க்குறேன் என்கிறான். யாருவரா, யாருபோறான்னு! அதைவிட்டா, ஹவூஜ் மீன்களை கண்கொட்டாமல் பார்த்துகிட்டு இருக்கான்!”
“ஆமாம் ஹஜ்ரத், அவன் விளையாட்டு புத்தியாதான் இருப்பான். அவனுக்காக நான்தான், ‘அல்லா... அல்லா’ன்னு கிடக்கவேண்டி கிடக்கு. சில நேரம் பார்த்தா, ஒவ்வொன்னையும் புத்தியா செய்றான். ஆனா, கீழகிடக்கிற பேப்பருதாளு, பழையபுஸ்தகம் எதைக் கண்டாலும் விடமாட்டேங்கிறான். உடனே எடுத்து படிக்க நிற்கிறான்! இப்படி கண்டதையும் படிச்சா மூளைகொழம்பி, அல்லா பயம் இல்லாம போயிடும்டான்னா.. கேட்க மாட்டேங்கிறான். எனக்கு பயமாயிருக்கு ஹஜ்ரத்! ‘அல்லா முகம்மது’ அச்சம் மனசுல அழுத்தமா உட்காரக் கூடியதை, இவன் தேடிப்படிச்சால நல்லது. இவன் என்னடான்னா அல்ஹம்தையே அக்கறையா ஓதி முடிக்க மாட்டேங்கிறானே! அல்லா பயமில்லாம போயி, எங்கே ‘கூத்தாடி புத்தி’ வந்துவிடுமோன்னு பயமா இருக்கு ஹஜ்ரத். என் பேரப்பிள்ளையை நல்லாவைடான்னு அல்லாகிட்ட நான் துவா கேட்காத நாளேயில்ல ஹஜ்ரத்” என்று பாட்டி கைசேதப்பட்டார்.
“இவன் அப்படியெல்லாம் போயிடமாட்டான். பயப்படாதிங்கமா, நான் பார்த்துக்கிறேன். நீங்கவேணுமுன்னா பாருங்க சீக்கிரமாவே குர்ஆன் தொடங்குறான இல்லையான்னு!” என்று விட்டு, என்னை அழைத்து முதுகில் தட்டிக் கொடுத்து, “இப்ப என்ன பாடம்டா ஓதுற?” என்று கேட்டார். கைகளைக் கட்டிகொண்டு, ‘தப்பதெதா’ என்றேன். “தப்பத்தெதா’னு சொல்லணும். அடுத்த வாரத்தில் இருந்து என்கிட்ட பாடம்படிச்சு காமி. சரியா. நீ சரியா ஓதிக்கலைன்னு உன்பாட்டி எவ்வளவு கவலைப்படுறாங்க பாரு. அப்புறம் நீ தெனைக்கும் ஐஞ்சு வேளையும் தொழுதுக்கவரணும். தவறக்கூடாது. சரியா?” என்று என்னிடம் சொல்லியவராக, அம்மாவுக்கும், பாட்டிக்கும் சலாம் சொல்லிவிட்டு புறப்பட ஆயத்தமானார்.
“ஹஜ்ரத்..” என் பாட்டியின் குரல் மீண்டும் எழுந்தது. “சொல்லுங்கமா” என்று நின்றார். “ஏழு வருஷத்து முன்னாடி, ஆறுமாச ‘மாசெடிப் பதியன்’ ஒன்னெ வாங்கி வீட்டுக் கொல்லையில வச்சேன் ஹஜ்ரத், இத்தனை வருஷமாயும், காய்ப்பேனா எங்குது! மூணுவருஷத்துக்கு முன்னாடி, ஒருதரம் ரெண்டுகாயோ மூணுகாயோ காச்சிச்சி. அதன் பிறகு இன்னியவரைக்கும் சோதனையா பாருங்க, சுத்தமா காய்ப்புங்கிறதே இல்ல. இது வெளங்கவராத ‘ஹொதரத்தா’ இருக்கு ஹஜ்ரத்! என்ன காரணமா இருக்கும்?” வீட்டுக்குவரும் ஹஜ்ரத்திடம், சில நேரம் இப்படி பிடிபடாத பிரச்சனைகளை எடுத்து சொல்லி தெளிவு கேட்பதென்பது பெரும்பாலான வீடுகளில் உள்ள பழக்கம்தான். ஹஜ்ரத் நிறைய ஓதி அறிந்தவர், மார்க்க ரீதியா தெளிவான பதில் சொல்லக் கூடும் என்கிற எதிர்பார்ப்பில் இப்படி கேட்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
ஹஜ்ரத் சிரித்தார். சிரித்துவிட்டு, “ஏதாவது மரக்குழவி அந்த மரத்தில் துளைப்போட்டு சேதப்படுத்தி இருக்கும்மா. அதனால்கூட இப்படி காய்ப்பில்லாமல் போக வாய்ப்பிருக்கிறது. பூச்சுமருந்து கடையில், விற்கிற பூச்சுமருந்து பவுடர் ஏதையாவது வாங்கி மரத்தில உள்ள பொந்துகளில் தூவிப்பாருங்க. எதுக்கும் நாளைக்கு தாஜுகிட்டே ஹார்லிக்ஸ் பாட்டலில தண்ணி ஓதிகொடுத்தனுப்புறேன். அந்த ஓதுனத் தண்ணியை மரத்துமேலே தெளியுங்க. அல்லாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, அடுத்தக் காய்ப்புல அது காய்த்தாலும் காச்சதுதான்!” என்றபடி, போய்வரேன் என்று புறப்பட்டார்.
*
என் பாட்டியிடம் ஹஜ்ரத் பேசிய பேச்சில் இருந்து, பள்ளியில் என்னை அவர் நல்லாவே கண்டுவைத்திருக்கிறார் என்பது புரியவந்ததும், பயம் கூடியது. இனி ஒழுங்கா நேரத்திற்கு போயி, பராக்கு பார்க்காம ஓதவேணும் என்று தோன்றியது. ஆமாம், கொஞ்ச நாளா அப்படித்தான் இருக்கிறேன். ஆனா, ஒருவாரம் ஆகிவிட்டது இன்னும் பாத்துமாவிடம்தான் ஓதிகொண்டிருக்கிறேன். ஹஜ்ரத் எப்ப தன்னிடம் ஓதிக்காட்டசொல்வாரென்று தெரியவில்லை. சொல்வார், நம்புகிறேன். அன்று, ஹஜ்ரத் என்னிடம் காட்டிய அந்தப் பிரியம் நிஜமானது! நம்புகிறேன்.
மழைத்தூறலில் நனைந்தப்படிக்கு இப்படி ஓடிவந்ததைப்பார்த்த ஹஜ்ரத், சைகைக்காட்டியழைத்து, “குடையெடுத்துகிட்டு வந்தாயென்னா?”ன்னு கேட்டார். கைகளை கட்டியபடிக்கு பதில் சொல்லாமல் நின்றேன். “போ,போய் உட்கார்” என்று அவர் சொன்னப் பிறகுதான் உட்காரபோனேன். நான், இத்தனைப் பதூசாயென்னா? என்னாலேயே நம்பமுடியல! ‘தாஜு’ மெல்லிய சப்தம் கொடுத்து, சைகைக்காட்டி, ஹஜ்ரத் மீண்டும் அழைத்தார். “இனைக்கி வியாழக்கிழமை. நல்ல நாளா இருக்கு, இன்னையலேர்ந்து, தினைக்கும் கடைசி ஆளாவந்து பாடத்தை ஓதிக்காட்டு. ஒழுங்கா ஓதணும். சரியா?” என்று கேட்டவராக, போய் உட்காரசொல்லி சைகைக்காட்டினார். தலையாட்டியபடிக்கு, ஹஜ்ரத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாத்துமாவைப் பார்த்தேன். அவ ஒண்ணும் புரியாமல் வியப்போடு ஹஜ்ரத்தையே பார்த்து கொண்டிருந்தாள். உட்கார போகும் முன், பாம்புத் தொல்லைக்காக வீட்டில் பாத்திஹா ஓதியது சரியெனப்பட்டது.
போய் உட்கார்ந்தா, பக்கத்தில் ‘பொத்தகாவீட்டு’ ரவூஃபு! அவன, நேற்று நான் அடிச்சதப்பத்தி ஹஜ்ரத்திடம் சொல்லிடுவானோன்னு பயம் மீண்டும்பலமாக தொற்றிக்கொண்டது. இப்பத்தான் ஹஜ்ரத்திடம் நல்லபேர் எடுத்துட்டிருக்கோம், இந்தநேரம் பார்த்து அவரிடம் ரவூஃபு ஒண்ணுகிடக்க ஒண்ணு சொன்னானா..? குழம்பி போனேன். ஆனா, ரவூஃப் என்கிட்ட எப்பவும் மாதிரி சகஜமாகவே பேசினான். நேற்று நடந்ததையே மறந்திட்டமாதிரிதான் தெரிந்தது. மறந்தே விட்டான்தான்! “ஏண்டா நீ மழையில நனைஞ்சிக்கிட்டு ஓடிவந்திருக்கே? எங்கேயாவது நின்றுவிட்டு, மழைவிட்டவுடன் வந்தாயென்ன?” ன்னு கரிசனையோடு கேட்டான். “பள்ளிக்கு நேரமாச்சு, லேட்டா வந்தா முட்டிபோட வேண்டியிருக்குமே! அதான் அவசரஅவசரமா வந்தேன்” “இன்னிக்கிதான் முட்டிபோட வேண்டாமுல்ல.” “ஏன்?” “யேய் இன்னிக்கு என்ன கிழமை?” ன்னு அழுத்தி அவன் கேட்கவும்தான் சட்டுன்னு விளங்கியது. சிரித்தேன். வியாழக்கிழமைதோறும் ‘லீவுகாசு’ வாங்கும் தினம்! வழக்கமான பள்ளி விதிமுறைகள் இன்றைக்கு கொஞ்சம் தளர்வு.
லீவுகாசு வாங்க, இன்னும் ஒருமணி நேரத்தில், மணிஏழரைவாக்கில் எல்லோரையும் வீட்டுக்கு போய்வர அனுப்புவார்கள். போனவர்கள் அத்தனை பேர்களும் ஒரணா, இரண்டணா, கால் ரூபாயென காசோடு, கால்மணி நேரத்தில் பள்ளிக்கு திரும்பிவந்து ஹஜ்ரத் முன்னால் அக்காசை வைத்தவர்களாக இருக்கைக்கு செல்வார்கள். அடுத்த அரைமணி நேரத்தில் அவரவர்கள் தங்களது பாடங்களை ஓதிக்காட்டவும் பள்ளிமுடிந்து போகும். வியாழக்கிழமையை பள்ளியில் ஓதும் எல்லோருக்கும் பிடிக்கும். மறுநாள் பள்ளிலீவு என்பதை முன்வைத்து, அவரவர்களின் தகுதிக்கேற்ப தரப்படும் இந்தச் சன்மானத்தை லீவுகாசு என்று பொதுவில் அர்த்தப்படுத்தப்பட்டாலும், நிச்சயம் அது அதன்படிக்கு இருக்கவாய்ப்பில்லை. ‘ஹஜ்ரத்தின் சம்பளம் போதாமைதான் காரணம்’ என்று என் ஒண்ணுவிட்ட அண்ணன் ஜியாபுதீன் என்னிடம் ஒருமுறை சொன்னதே சரி! ஏன்னா... எங்க அண்ணன் எப்பவும் சரியாவேதான் சொல்லும்! ஆனா, எங்கவீட்டில் என்பாட்டியோ, “எங்க விழுவுது எங்கப்பழுக்குதுன்னு நிக்கிறார் இந்த மனுஷன்! இந்த சில்லரைக் காசுக்காக புள்ளிங்க ஓதுதலையை கெடுத்து, இப்படி அனுப்பிவைக்கிறாரே, இது, எந்த ஊரு நியாயம்? இவர கேட்கிறதுக்கு ஊர்ல பஞ்சாயத்துகாரங்களெல்லாம் இல்லையா?” என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.
லீவுகாசு வாங்க நான் வீட்டுக்கு போனேன். என் ஊரும்மாவும், புங்கனூரில் வாக்கப்பட்டிருக்கும் அவர்களது மகளான சம்சுனிசா என்கிற, என் ஆச்சிம்மாவும் வந்திருக்கும் சப்தம் வாசலிலேயே கேட்டது. காது தெறிக்கும் இந்தச் சப்தத்தில் சாவகாசமாக பேசிக்கொண்டு இருந்தார்கள்! வடக்கே போகும் ஏழுமணி ரயிலுக்கு அவர்கள் இருவரும் வந்திருக்கக்கூடும். என் பாட்டியோ, தன் தங்கையும், தன் சின்ன மகளும் போட்டிபோட்டுக்கொண்டு தன்னிடம் பேசுவதை, வெயில்படும் ஒரு தூணோரம் விரிக்கப்பட்டிருந்த தடுக்கில் அமர்ந்து, அந்தத் தூணில் சாய்ந்தவராக வாயைப்பார்த்து கொண்டிருந்தார். அவ்வப்போது பாட்டி. தன் பொக்கைவாய் விரிவதை தனது வலதுகை விரல்களால் பொத்தி, சிரிப்பை சிந்தவிடாத கவனத்தில் இருந்தார். ஊரும்மா மாதிரிதான் ஆச்சிம்மாவும். வாயடிக்கவும், சப்தம் போட்டு பேசவும், இவருக்கும் பெரிய காரணங்களென்று எதுவும் தேவையில்லை. ஊரம்மா என்னைக் கண்டதும், “யத்தா பாவா நல்லா இருக்கியா?” என்று கேட்டாங்க, என் ஆச்சிம்மா என்னை, மிடுக்காய் செல்லமாய் உரிமையோடு “தாஜு... இங்கேவா, அம்மாவை அழைச்சுட்டு ஞாயிற்றுகிழமையில ஊருக்குவந்தா என்னடா? உன்னை தேடிவரதுல்ல, உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்..” என்றபடி கட்டியணைத்து முத்தமிட்டு, “உனக்கு பிடிக்குமேன்னு முறுக்கு சுட்டு எடுத்து வந்திருக்கேன் போய் சாப்பிடு.” என்றார். குழந்தைப் பாக்கியமில்லாத என் ஆச்சிம்மாவுக்கு, நான் ரொம்ப செல்லம். ஊருக்கு போகும்போது காசெல்லாம் கொடுக்கும்.
அடுப்பங்கரையில் அம்மா, அழுதுகொண்டிருக்கும் என் தம்பியை மடியில் அமர்த்தியப்படி ஊதுகுழலும் கையுமாக, அடுப்போடு மல்லுக்கு நின்றார். காலை நேர ‘பசாற’வுக்கு, இட்லி சட்னி செய்யவே மேலயும் கீழேயும் பாக்கிறவங்க! அதுவும் சட்னிக்கு என்பாட்டித்தான் அம்மி வேலைய செய்து கொடுக்கணும். இப்ப பாட்டி அங்கே உட்கார்ந்துட்டாங்க. அம்மாதான் ஒண்டியா கிடந்து மாரடிக்கிறாங்க. இட்லியை அவிச்சுபோட்டுட்டு, வடைதட்டிக்கிட்டு இருக்காங்க. இன்னொரு அடுப்புல உள்ள பானையில என்னவோ ஆகி முடிந்திருக்கிறது. நெய்யும் பெருஞ்சீரமுமா, வாசனை அள்ளுது! நிச்சயமது ‘பாச்சோறு’தான்! ஏதாவது விசேநாட்களில்தான் எங்க வீட்ல இதை செய்வாங்க. அப்ப வீட்ல, இன்னைக்கென்ன விசேசம்?
அம்மாவிடம் லீவுகாசு கேட்டேன். “அதோ அந்த அலமாரிய திறந்து, அச்சுவெல்லம் டப்பாவுக்குமேலே இரெண்டணா இருக்குபாரு, அதெ எடுத்துட்டுபோ” என்றார்கள். எடுத்துட்டு புறப்படும் போது பாட்டி, “போயிட்டு சீக்கிரமா வா. அங்கே இங்கே வேடிக்கைப்பார்த்திட்டு நிக்காதே” என்றார்கள். ஊரும்மாவும் ஆச்சிம்மாவும் கூட, “போயிட்டு சீக்கிரமா வாத்தா” என்றார்கள். இன்னியெலேர்ந்து, கடைசி ஆளா என்னை ஓதிக்காட்ட ஹஜ்ரத் சொல்லியிருப்பது ஞாபகத்திற்குவரவும், விரைந்தேன். லீவுகாசை, ஹஜ்ரத்தின் எதிரில் குவிக்கப்பட்டிருந்த சில்லரைகளின் மேல் வைத்துவிட்டு, இடம்சென்று அமர்ந்து பாடங்களை புரட்டி ஒருமுறை ஓதிப்பார்த்தேன். ஹஜ்ரத்திடம் பாடம் ஓதிக்காட்டியவர்கள் எழுவும், ஹஜ்ரத்.. “தாஜ்” என்க, ஜூதை எடுத்துகொண்டு அவர் எதிரில்போய் அமர்ந்தேன். பக்கத்தில் பாத்துமா! குனிந்த தலை நிமிராமால் ‘பதூசா’ ஹூதைப்பார்த்து ஓதிகொண்டு இருந்தாள்!
நான் அமர்ந்த நாழிக்கு தன்பக்கத்தில் இருக்கும் பிரம்பை எடுத்து தரையில் மூன்று தட்டு தட்டினார் ஹஜ்ரத். அப்படித் தட்டினால், பள்ளி முடிந்துவிட்டது என்று அர்த்தம். எல்லோரும் கூடி கலிமா சொல்லிவிட்டு, ஹஜ்ரத்துக்கு சலாம் கூறியவர்களாக புறப்பட்டு போய்க்கொண்டிருந்தார்கள். “பிஸ்மில்லா சொல்லி, பாடத்தை முதலில் இருந்து தொடங்கி ஓதிக்காட்டு” என்றார் ஹஜ்ரத். ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான்..’னை, நிறுத்தி நிதானமாக உரத்தக் குரலில் சொல்லி, பாடங்களை விறு விறுவெனவும் படபடவெனவும் ஓதிமுடித்தேன். “நாளைக்கு பள்ளி லீவு இல்லையா.., மறுநாளைக்கு மீண்டும் ஒருமுறை இதனையே நிறுத்தி நிதானமா பயமில்லாம ஓதிகாட்டிட்டு, அப்புறம் புதிதாக இரண்டிரண்டு பாடமா சொல்லித்தாரேன். கவனமாகேட்டு விறுவிறுன்னு அல்ஹம்தை முடிக்கப்பாரு. அத்தா ஊருக்கு வரதுக்குள்ள குர்ஆன் சரீஃபை முடிஞ்சுக்காட்டணும்... சரியா?” ஹஜ்ரத் சொன்னவைக்கெல்லாம் தலையைதலையை ஆட்டினேன்.
“அம்மாகிட்ட அன்னிக்கி சொல்லிட்டு வந்திருக்கேன். எனக்கு ‘பச்சை பெல்ட்டும், மீசைக்கார தைலமும்’ வேணுன்னு, உங்க அத்தாவுக்கு லட்டர் போடும்போது மறக்காமல் எழுதவும் சொல்லிவந்தேன். உங்க அம்மாவும் எழுதுறேன்னு சொல்லிச்சு. அம்மா அது குறித்து லட்டர்எழுதி போட்டாங்களான்னு தெரியுமா உனக்கு?” நான் அதற்கும் தலையாட்டினேன். “டேய்.., நான் என்ன சொல்றேன், நீ என்னென்னனு தலையாட்டுறே!? நான் சொன்னது புரிஞ்சிச்சா? இல்லையா?” ஹஜ்ரத் அழுத்தம் திருத்தமாக கேட்கவும், கொஞ்சமும் தயங்காமல் “எழுதி போட்டுட்டாங்க ஹஜ்ரத்!” என்று அறுதியிட்டு சொன்னேன். லட்டர் போட்டாங்களான்னு, அம்மாகிட்ட இனிமேதான் விசாரிக்கணும். “சரி நீ போ..” வென ஹஜ்ரத் சொல்ல, சலாம் சொன்னவனாக, ஜூதை எடுத்து கொண்டு ஹவூஸ் ஓரமாக நடைக்கட்டினேன். ஹவூஜில் சலசலத்தப்படி கும்மாளமிட்ட மீன்கள், என்னை தொடர்ந்து வந்து வேடிக்கைப் பார்த்தது. மீன்களுக்கு சிரிக்க தெரியாதென ஒரு புத்தகத்தில் எழுதியிருந்ததை வாசித்திருக்கிறேன். அதுவரை நிம்மதி.
ஊரும்மா, ஆச்சிம்மா பேச்சுகளின் தீவிரம் இன்னும் குறைந்தபாடில்லை. வீட்டின் மூலைமுடுக்கெல்லாம் அவர்களது பேச்சுபட்டு தெறித்து கொண்டிருந்தது. அடுப்பங்கரைக்கு போனேன். அம்மா, “வடையெடுத்து தின்னுப்பாரு” என்றார்கள். ஒன்றை எடுத்து தின்றேன். வடையின் விசேச மணத்தில் அம்மாவின் அன்பு இருந்தது. “பாச்சோறு கொடும்மா” என்றேன். அது அப்புறம் சாப்பிடலாம், நீ போய் குளிச்சுட்டுவா என்றார்கள். கூடத்திற்குபோய் ஜூதைவைத்துவிட்டு தொப்பியைக் கழற்றி சுவற்று ஆணியில் மாட்டியபோது, என்பாட்டி என்னை கவனித்துவிட்டார்கள். “நீ வந்திட்டீயாத்தா, ஏன் இவ்வளவு நேரம்? சீக்கீரம்போய் குளிச்சுட்டுவா..” என்றார்கள். அதையே என் ஊரம்மாவும், ஆச்சியம்மாவும் சொன்னார்கள். எல்லோரும் ஒத்தமாதிரி ஒரே செய்தியை சொல்வது புதிராக இருந்ததெனக்கு. கொல்லைக்கு போனேன். தூரத்தில் கோழிகளும், அதன் பாதுகாப்பில் குஞ்சுகளும் மேய்ந்துகொண்டிருந்தன. வழக்கமான, பக்கத்துவீட்டு 'அம்மா பொண்ணு' சண்டை வழக்கமான நேரத்தில் தொடங்கிவிட்டதற்கான சப்தம் எழுந்தது. கொல்லை இப்ப கொஞ்சம் வெளிச்சமாக இருந்தது. மரங்களெல்லாம் காற்றில் ஆட்டம் போட்டது. மாமரம் கூட சந்தோஷம்கொண்டு ஆடுவது மாதிரி தெரிந்தது. அதன் வேரடியில் மழைநீர் தேங்கி நின்றது. அந்த அளவுக்கு காலையில் மழை பேயவில்லை. உற்றுப்பார்த்தேன். மரத்தை ஆறடி உயரத்திற்கு கழுவி விட்டிருந்தார்கள். அதனாலான நீர்தான் தேங்கி நிற்கிறது! வாளியால், கிணற்றில் நீர்யிறைத்து உடல் குளிரும்வரை குளித்தேன்.
அறைக்குள் போய் பாட்டி துவைத்துவைத்திருந்த என் அரைக்கால்சட்டையையும் அரைக்கைசட்டையையும் அணிந்து, தலையை சீவியவனாக வெளியே வந்தேன். என் ஆச்சிம்மா என்னை அழைத்து, “என்னடா இது? இன்னிக்கி போயி இந்தக் கால்சட்டையையும் அரைக்கை சட்டையையும் போட்டிருக்கே?” என்றார்கள். “போறும்மா சம்சு, இது போறும்” என்றார்கள் பாட்டி. “நீ சும்மா இரீ....கா, வடகரை ‘கூலாண்டி வீடு’க்கார ஜொஹராக்கா என்னென்ன செஞ்சாங்களோ அதை அப்படியே செய்யணும். இல்லன்னா செய்யிறது எல்லாம் வீணாயிடும்... கா!” ஊரும்மா எதைக் குறித்து இப்படி தீர்மானமாக என் பாட்டியிடம் பேசுகின்றார்கள் என்று எனக்கு விளங்கவரவில்லை.
கூடத்து தொட்டியில் உட்கார்ந்து ஆடிக்கொண்டே பேசிக்கொண்டிருந்த என் ஆச்சிம்மா, எழுந்து நேரே என் அம்மாவிடம் வந்து, “எங்கக்கா வைச்சிருக்க இவன் புது சட்டையையும் கைலியெய்யும்?” என்று கேட்டார். அடுப்படி அவஸ்தையில் இருந்து அம்மா, விபரம் சொன்னார்கள். ஆச்சிம்மா அறைக்குபோய், சுவரோரம் அடுக்கியிருந்த மூன்று டிரங்பெட்டிகளில் மேல்பெட்டியை திறந்து, போன நோம்பு பெருநாளைக்கு தைத்த புதுசட்டையையும், புதுகைலியையும் எடுத்துவந்து எனக்கு அணிவித்து, மீண்டும் தலைச்சீவி, ‘புட்டா’மாவை எடுத்துவந்து முகத்திற்கு பூசிவிட்டார்கள். எங்க அம்மா, அவரது பங்கிற்கு அறைக்குபோய், என் சுன்னத் வைபவத்தின்போது, என் தந்தை எனக்கு வாங்கிவந்து அணிவித்துமகிழ்ந்த, அந்தப்பச்சைக்கலர் பட்டு மேல்துண்டை எடுத்துவந்து பிரியமாக கழுத்தில் போட்டு, சிரிக்கவும் சிரித்து என்னை கண்ணாடி அருகில் அழைத்துபோய், என் உடையலங்காரத்தைக் காட்டினார். ஏன் இதை இன்றைக்கு அணிவிக்கிறார்கள் என்று குழம்பிய நிலையில், என் அலங்காரத்தை என்னால் கொஞ்சமும் ரசிக்க முடியவில்லை. பாட்டியிடம் போய், “சொல்லுமா, எதுக்கு இதெல்லாம்?” என்றேன். “சும்மா இருடா. எனக்கே இன்னும் சரியா வெளங்கனபாடில்ல! ரொகையா என்னென்னமோவோ சொல்றா, பார்ப்போமே. நீ செத்தநேரம் சும்மா இரீ! நாங்க கூப்பிடும் போதுவா... போதும்” என்றார்கள். நான் இன்னும் குழம்பி போனேன்.
“உனக்கு, என்னக்கா புரியலைங்கிற? வந்ததிலிருந்து திரும்பத்திரும்ப சொல்றேன், சின்னப்புள்ளையாட்டம் புரியலைங்கிறேயே! மழை வரலைன்னா தெருத்தெருவா கொடும்பாவி இழுத்துட்டு போவாங்கல, கடைசியா அதை அடியோயடின்னு அடிப்பாங்கல.. அப்படித்தான் இதுவும். அவுங்க வானத்த வெட்கப்படுத்தி மழைய வரவழைக்கிறதா சொல்றாங்க, நாம காய்ப்புக்காக இந்த மரத்துக்கு, திருமணம் செஞ்சிவச்சி வெட்கப்படுத்த போறோம். பொம்மக்கல்யாணம் மாதிரிதான்கா! இதெல்லாம் சும்மாவொரு ஹத்துக்குதான்கா. இப்பபுரியுதா? சில ஊர்களில, வீச்சருவாவோட மரத்துக்கிட்ட போய் நின்னு, ‘காய்காக்காத உன்னை வெட்டிச் சாய்க்கப் போறேன் பாருன்னு!’ ஒண்ணுக்கு பத்துவாட்டி சொல்வாங்களாம், அதுவும் பயந்துகிட்டு காய்க்குமுன்ணும் சொல்றாங்க! ஆனா, இப்ப மரமெல்லாம் பயப்படுறதில்லேன்னும் பேச்சு. நம்ம செய்யப் போறதுதான் சரி. கைமேல பலன் கிடைக்கும்!”
ஊரும்மா பேசி முடிக்க, பாட்டி தொடங்கினார்கள், “இது அல்லாவ மறந்தசெயலாச்சே! நமக்கு ஆகுமாடி இது? நாளைக்கு, ஆஹிரத்துல நம்மல அவன் கேள்வி மேல கேள்வில கேட்பான்!” “இது சும்மா ஒரு ஹத்துக்குதான்னு சொல்லல. நீ என்னெவேற பயம்காட்டுற. எங்க ஊர்ல ஒரு ஹஜ்ரத் சொல்படிக்குதான் ‘கூலாண்டி வீட்டு’ ஜொஹராக்கா இப்படி செஞ்சிச்சு. அவுங்க ஊட்டு கொல்லையில, வருஷக்கணக்கா காய்க்காமே கிடந்த மாமரம் ஒண்ணு, இன்னிக்கி கொத்துக்கொத்தா கொத்துக்கொத்தா காய்க்குது! அத கேள்விப்பட்ட நான் நம்பாமே, ஆத்தாங்கரை தெருவுலவுள்ள அந்த வீட்டுக்கே போனேன். போயிப்பார்த்தா நம்ம கண்ணே பட்டுடும் கணக்காக காய்ப்புன்னா காய்ப்பு அப்படியொரு காய்ப்பு! அவுங்கள்ட வழிமுறையா எல்லாற்றையும் கேட்டு தெரிஞ்சுகிட்டு வந்துதான் உங்கிட்டே சொன்னேன். நீ என்னென்னா இப்படி பயந்து சாவுற! உனக்கு தெரியுமா..? ‘கூலாண்டி வீட்டு’ அந்த ஜொஹராக்கா ரெண்டுதரம் ஹஜ்ஜுக்கு போயிட்டு வந்தவங்க!” ஊரம்மா அழுத்தம் திருத்தமா ஒவ்வொண்ணையும் பேசியதப் பார்த்து, என் பாட்டி அவுங்க பிடிப்புலேந்து கொஞ்சம் தளர்ந்தா மாதிரி தெரிஞ்சது. “இங்கப் பாருடி ரொகையா.., ஹஜ்ரத்து ஓதிகொடுத்த தண்ணிய போனவாரம்தான் மரத்துல தெளிச்சிருக்கேன். பாப்போமே இந்த வருஷம்? அது காய்க்குதா இல்லையான்னு?” “அதுலாம் சரிக்கா, அது ஒருபக்கமுன்னா இதுவொருபக்கம்! இதுக்காக இன்னொரு வருஷம் உட்காந்தா இருக்கிறது?” ஊரும்மா மீண்டும்தெளிவாக பேசினார்கள். எனக்கு, ஏன் புதுசட்டை புதுகைலி அணிவிஞ்சாங்கணு, லேசா பிடிப்பட்டமாதிரி இருந்தது.
“இதோ எனக்கென்னானு உட்கார்ந்திருக்கிற எம்பொண்ணு சின்னவ சம்சுநிசா, எத்தனைவருஷமா புள்ளயில்லாம சுணக்கமாயிருக்கா? மருமவன் வர நேரம்பார்த்து, நாலுபேர கேட்டு நீ, இப்படி ஏதாச்சும் சமத்தா செய்றத விட்டுட்டு, ‘அதுல... மாங்காகாய்க்கல, இதுல... மயிறுகாய்க்கலைன்னு’ நிக்கிறா பாரு!” சிரிச்சுகிட்டே என் பாட்டி சிடுசிடுக்கவும், “அக்கா, அதுக்கும் விசாரிச்சுதான் வச்சிருக்கேன். தஞ்சாவூர்ல அதுக்குன்னு லட்சுமியம்மான்னு ஒரு பொம்பள டாக்டர் இருக்காங்களாம். கைராசிகாரங்களாம்! வருஷக்கணக்கா புள்ளையே தரிக்காதவங்களுக்கு புள்ளதரிக்கவைக்கிறாங்களாம். மாசம்வந்து பதினைந்துதேதிக்குமேலே, புருஷனோடு வர சொல்லி, ரெண்டுபேரையும் ஒருவாரம் அங்கேயே அவுங்க கண்பார்வையிலேயே தங்கசொல்லி, மருந்துமாயம்செஞ்சி பிசகாம அச்சுஅசலா புள்ள தரிக்க வைக்கிறாங்களாம். விசாரிக்காம இருப்பேனாக்கா?”
“பரவாயில்லேயே, எங்கே ஹஜ்ரத்து, மந்திரவாதி அதுயிதுன்னு சொல்லுவேயோன்னுபாயந்தேன். மருமவன் வரதுக்குமுன்னாடி ஒருதரம் தஞ்சாவூருக்கு ரயிலிலே போயி அவுங்கள பார்த்துட்டு வருவோம்.” என்று பாட்டி சந்தோஷப்பட்டார். சிரிப்பும் மாளல! என் தம்பியை மடியில் வைத்துகொண்டு மெதுவா தொட்டிலை ஆடியபடிக்கு, ரெண்டு அம்மாவும் பேசுவதை உன்னிப்பா கேட்டு கொண்டிருந்த ஆச்சிம்மா, திடுமென மடியிலிருந்த தம்பியை அழுத்தமாகட்டிப்பிடிச்சு முத்தம் தந்து சிரித்தப்படிக்கு, “அக்காதான் பெக்கிறாள.., நான்வேற பெக்குல பெக்குலன்ணு ஏன் நிக்கிறீங்க! அக்கா அடுத்ததா பெத்தா நான் எடுத்துட்டு போறேன்!” ஆச்சியம்மா இப்படி சொல்லவும், அம்மா அடுப்பங்கரையில் இருந்து வெளியேவந்து “அடி நாயே... பிச்சுடுவேன்” என்றார்கள். “நீ என்ன சொல்றது, நான் எங்க மச்சான்கிட்டே ஏற்கனவேகேட்டுட்டேன். அதுவும் சரி சொல்லிடுச்சு!” என்று ஆச்சியம்மா தடலடியாக சொல்லவும், பாட்டியத் தவிர எல்லோரும் சிரித்தார்கள். “போடியிவளே, காய்கிறமரம் காய்க்கனும், பெத்துக்கிற மனுஷி பெத்துக்கனும்....டீ!”ன்னு பாட்டிசொல்லவும். “போமா” என்றது ஆச்சிம்மா.
திறந்திருந்த கொல்லைக்கதவின்மேல் சாய்ந்தப்படிக்கு அம்மாவும் ஆச்சிம்மாவும், மாமரத்தடியில் நடைப்பெற துவங்கிவிட்ட காரியங்களை கண்டுகொண்டிருந்தார்கள். நான் ஆச்சிம்மா அருகில் நின்றுபார்த்தேன். கழுவிவிட்டு வைக்கப்பட்டிருந்த அந்த மரத்தின் ஒரு பாகத்தில் ஊரும்மா சந்தனம் பூசிக்கொண்டிருந்தார்கள். என் பாட்டி, தங்கைக்கு உதவியாக நின்றார்கள். சந்தனப்பூச்சுக்கு மேலே மல்லிகை சரத்தை சுற்றினார்கள். மரத்தடியில் அகர்வத்தி கொளுத்திவைக்கப்பட்டு புகைந்து கொண்டிருந்தது. ஒரு சின்னத் தாம்பாளம் நிறைய ‘பாச்சோறு’ கேட்டு வாங்கி கொண்டுபோய் மரத்தடியில் வைத்தார்கள். வீட்டில் உள்ள மரஸ்டூல் ஒன்றை எடுத்துபோய், மரத்தடி அருகே வைத்தவர்களாக, ‘தாஜி... இங்கே வா’ன்னு குரல்கொடுத்து, எல்லோரையும் சைகையால் அழைத்தார்கள். நான் என் அம்மாவை கெட்டியாகப் பிடித்துகொண்டு, “வரமாட்டேன்” என்றேன். “நானும்தான் அங்கே போறேன் வாடான்னு” அம்மா சொல்லவும், கதவைப் பிடித்துகொண்டு வரமறுத்தேன். ஆச்சிம்மா என்னை செல்லமாக அழைத்து, “பயப்படாதேடா... நானிருகேன்ல” என்று தைரியம் சொல்லியபடி, மரத்தடிக்கு அழைத்துப் போனார். மரத்தடியில் போடப்பட்டிருந்த மரஸ்டூலில் என் பாட்டி, என்னை உட்கார சொன்னார்கள். மாடு கட்டவேண்டிய மரத்தில், இப்ப என்னைக்கட்ட போகிறாங்க! எனக்கோ, அந்த மரத்தை அண்ணாந்து பார்க்கவும் பயமாக இருந்தது. அழுகையழுகையா வர, ஸ்டூலில் அமர்ந்தேன்.
“புள்ள அழுவுறான் பாருடீ, அவன் கண்ணெதுடைச்சுவிடு” என்று ஊரும்மாசொல்ல, ஆச்சிம்மா என் அருகில் வந்து, “அழுவாதத்தா., ஒண்ணுமில்ல இது செத்த நேரத்து காரியம்” என்று தேற்றி, கர்சிப்பால் கண்களை துடைத்துவிட்டபடிக்கு மீண்டும் மீண்டும் தேற்றினார் ஆச்சிம்மா, “இந்தப் பாருடா தாஜி..., இது சும்மா வெளையாட்டுக் கல்யாணம்! நீ படிச்சி பெரிய கவுர்மெண்ட் உத்தியோகத்துக்குபோயி கைநிறைய சம்பாதி. எங்க புங்கனூருலயே அழகழகானப் பொண்ணா பார்த்து, அதுல ஒண்ணெ உனக்கு நான் கல்யாணம் பண்ணிவைக்கிறேனா இல்லையா பாரு!” என்றார்கள். “ஏண்டி எம் பையனுக்கு பொண்ணுப்பார்க்க உனக்கு புங்கனூருதான் கிடைச்சுச்சா?” என்றார் என் அம்மா. “ய்யே(ன்)க்கா... அந்த ஊருக்கு என்னகொறைச்சல். எத்தனை பணக்கார ஊட்ல ‘பவளம் பவளமா’ பொண்ணுங்க இருக்கு தெரியுமா?” என்றார் ஆச்சியம்மா. “ஹயாத்து கெட்டியா இருந்துச்சுன்னா.., எங்க அக்கா செல்வாக்குக்கு, எம் புள்ளைக்கி ஜில்லா பூராவிலும் இருந்து ஆயிரம் பொண்ணுக, ‘நான் நீன்னு’ பேசிவருதா இல்லையா பாரு! அக்கா பாத்தியா ஓத போறாங்க, முதல்ல வாயெ மூடிகிட்டு நில்லுங்க...டீ” ன்னு அம்மாவையும் ஆச்சிம்மாவையும் அடக்கினாங்க ஊரம்மா.
என் பாட்டி, பெரிய சூராகொண்ட குர்ஆன் ஆயத்தொன்ன ஓதிமுடிச்சு, துவாவெ ஓதினாங்க. அது முடிந்ததும், மஞ்சள்தடவிய, சற்று நீளமான மஞ்சநிறக் கயிற என்னிடம் தந்த பாட்டி, “எல்லாதுக்கும் அல்லா போதுமானவன். நீ இத, எட்டுன்ன தூரத்துக்கு அந்த மரத்துல கட்டுத்தா...” என்றார்கள். நான் மறுத்து தலைய இப்படியும் அப்படியும் ஆட்டியப்படிக்கு, மறுபடியும் அழுதேன். எனக்கு அந்த மரத்தைப் பார்க்கப்பார்க்க இன்னும் பயமாகத்தான் இருந்தது. நான் அழுததைப் பார்த்து என் தம்பியும் வீச்வீச்சுன்னு அழுதான். அக்கம்பக்க கொல்லைக் கதவுகள் திறக்கப்பட, எல்லா வாயில்களிலும் பொம்பளைங்க! “டேய், அழுவையெ நிறுத்திட்டு, கட்டுனோமா... முடிச்சோமான்னு... சீக்கிரம் வீட்டுக்குள்ளே போடா! இங்கபாரு, உன்னெ எவ்வளோ ஜனங்க வேடிக்கைப் பாக்குறாங்கன்னு!”அம்மா அதட்டவும், மஞ்ச கயிற்ற மரத்துல கட்டினேன். என் ஆச்சிம்மா குலவையிட்டு துவங்கிவைக்க, வேடிக்கைப்பார்த்த அக்கம் பக்கத்துவீட்டு ஜனங்களும் சேர்ந்து எல்லோரும் குலவையிட்டார்கள். சிரிப்பு தாளாமல் வீட்டினுள் ஓடினேன். ‘மாப்பிள்ள உள்ளே ஓடுறாருன்னு’ குரல்லொன்றும் கேட்டது.
அன்று பள்ளிக்கூடத்துக்கு போகவில்லை. ஆச்சிம்மாதான் அடுப்படி சமையல். அம்மாமாதிரி இழுயிழுன்னு இல்லாம, சட்டுப்புட்டுன்னு சமைச்சுடும்! ‘அஞ்சுகறி’ சாப்பாடு ஆச்சு! சாப்பிட்ட அந்தச் சாப்பாடு செறிக்கும்வரை, காலையில் நடந்த கூத்தைப்பற்றியே எல்லோரும் பேசித் தீர்த்தார்கள். ஊரம்மாவும் ஆச்சிம்மாவும் அஞ்சுமணி ரயிலுக்கு புறப்பட்டு போக, வீடு வெறிச்சோடியது.
*
இன்று வெள்ளிக்கிழமை! ‘பள்ளி’ கிடையாது. யாருடைய எழுப்பலும் இல்லாது நிம்மதியா தூங்கினேன். தம்பி விழித்தெழுந்து அழுதபோதுதான் தவிர்க்க இயலாமல் விழித்தேன். மணி ஏழரை. கண்விழித்தவுடன் தோன்றிய முதல் நினைவே சந்தோஷம் தந்தது. அந்தமரம் இப்போது எப்படி இருக்கும்....?
“கொல்லைக்குபோயி முகத்த கழுவிட்டுவந்து காப்பி தண்ணியிருக்கு குடிடா.” என்றார் அம்மா. என் பாட்டி, உதயத்திற்கான பிரத்தியோக தொழுகையை தொழுது கொண்டிருந்தார்கள்.
கொல்லைக்கதவு திறந்தேயிருந்தது. கோழிகளும் குஞ்சுகளும் கொல்லைத் தாழ்வாரத்தில், இடப்பட்டிருந்த தீனியை, சின்னச்சப்த மொழிக்கிடையே ஏதேதோ பேசியபடி, பொறுக்கி கொண்டிருந்தன. கொல்லை பூராவும் மழைத்தண்ணீர் வரிவரியாக ஓடிக்கிடந்தது. ராத்திரி நல்லமழை பெய்திருக்கவேண்டும்! காலையிலோ, வழக்கமான சூரியன், பளீச்சென்று பிரகாசித்து கொண்டிருந்தது. கொல்லைநடையைவிட்டு படியிறங்கியதும், என்பார்வை என் மாமரத்தின் மீது குத்திட்டுநின்றது. இப்ப பார்க்க பயம் எழவில்லையே ஏன்...!? ஈரம்கொண்ட அதன் இலைகள் சூரியபிரகாசத்தில் மின்னின. அந்த மினுமினுப்பு அதன் மேனியழகை கூட்டிக்காட்டியது. மழைகொண்ட தழைகளும் கிளைகளும் தலை தாழ்ந்திருந்தது. பாத்துமா மாதிரி! எத்தனை அடக்கம்! எத்தனை பதூசு!
***
satajdeen@gmail.com

No comments:
Post a Comment