எல்லோரும் சேர்ந்து என்மீது ஒரு குற்றம் கண்டுபிடியுங்கள்
எல்லோரும் சேர்ந்து சுமத்தக்கூடிய ஒரு குற்றம்
அல்லவெனில் உங்கள் மீது பழி வந்துவிடும்
என்னை ஏன் நாடுவிட்டுத் துரத்தினீர்கள் என
எல்லோருமாகச் சேர்ந்து மொத்தமாகச் சொல்லுங்கள்
சொல்லுங்கள்:
தஸ்லீமா, குழந்தைகளின் சாவுக்குக் காரணமான கொள்ளை
நோய்க்கான மூலவேர் நீதான் என
அல்லது பாலியல் பலாத்காரம்
அல்லது இனக்கொலை போன்ற கொடுமையான
குற்றங்களைச் செய்தவள் நீதான் என
இதைப் போல ஏதேனும் சொல்லுங்கள்
எனது குற்றத்தை நிறுவுவதற்காக இப்படியாவது இரண்டு
அல்லது மூன்று கறைகளை என்மீது சுமத்துங்கள்
பொருத்தமான ஒரு குற்றத்தைத்
தேடிக் கண்டுபிடிக்கும் வரையிலும்
கூண்டில் என்னை நிறுத்தும் நாள் வரையிலும்
உங்களது கறுப்பு ஆட்டினை நோக்கி
வஞ்சகத்துடன்
உங்களது விரல்களை நீட்டும் நாள் வரையிலும்
எப்படி உங்களை நீங்கள்
பாவநீக்கம் செய்துகொள்ளப் போகின்றீர்கள்?
நான் எங்கே தவறு செய்தேன் என
என்றாவது உங்களால் சொல்ல முடியுமா?
குற்றம் என்பது குறித்த வேதனையையாவது என்னை விழுங்கி
அழிக்காது போகட்டும்
எனது குற்றத்தை நீங்கள் சீக்கிரமாகவே கண்டுபிடிப்பதைக் காண
நான் ஆவலாக இருக்கிறேன்
ஏனெனில் நான் உங்களை எனது நலன் விரும்பிகளாக
ஆரத் தழுவிக் கொள்ள விரும்புகிறேன்
என்னைத் தள்ளி வைக்க நீங்கள்
என்னிடம் கண்ட தவறு என்ன என்பதைச் சொல்லுங்கள்
எனது ஆளுமையில்
ஒரு விரிசல் இருந்தாலும் சொல்லுங்கள்
என் மீது பழிபாவத்தைப் பகுத்துச் சுமத்துவதன் வழி
உங்களை நீங்கள்
பழிபாவத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறீர்கள்
வரலாறு உங்களை நோக்கி
ஏன் புருவஞ்சுழிக்க வைக்கிறீர்கள்?
நாகரிகத்தின் ஒளியின் மீது
மத்திய காலத்தின் இருளை
ஏன் கருத்திரையாய்ப் பரப்புகிறீர்கள்?
உங்களது நடவடிக்கைக்கு ஒரு காரணத்தை ஸ்தாபியுங்கள்
உங்களால் முடியவில்லையானால்
என்னை விடுதலை செய்யுங்கள்
என்னைக் காத்துக்கொள்வதற்காக நான் கேட்கவில்லை
உங்களது சொந்த இருத்தலுக்காகத்தான்
இதனை நான் சொல்கிறேன்.
***
பின் குறிப்பு:
இக் கவிதை
தஸ்லீமா நஸ்-ரீனுடைய
'இது எனது நகரம் இல்லை' என்கிற
புதிய கவிதைத் தொகுப்பொன்றில் இருந்து
தோர்வு செய்யப்பட்டது.
இத்தொகுப்பை
மொழி மாற்றம் செய்து தந்திருப்பவர்
நான் மதிக்கும் கலை இலக்கிய நுட்பக்காரரான
யமுனா ராஜேந்திரன் அவர்கள்.
அவருக்கும்-
இத் தொகுப்பை பிரசுரித்த 'காலச்சுவடு'க்கும்
பெரிய நன்றியை இங்கே வைக்கிறேன்.
தஸ்லீமா நஸ்-ரீனின்
இக்கவிதையை
நான் கவிதையாக ஒப்புக் கொள்வதென்பது கஷ்டம்.
அவரது மனக் கிடைக்கையின்
அக்னி அனலை
வார்த்தைகளால்
மிகுந்த வேதனையோடு நெய்த தாக்கீடாகவே காண்கிறேன்.
ஆனாலும், மொழி.... கவிதை மொழிதான்.
இதனை வாசிக்கும் வாசகர்கள்
அந்த சகோதரிக்காக
ஒரு சொட்டு கண்ணீர் சிந்துவீர்களேயானால்
அதுதான்
இந்தக் கவிதைக்கு நீங்கள் எழுதும்
பாராட்டுக் கடிதம்.
-தாஜ்
*
தட்டச்சு & வடிவம்: Taj
satajdeen@gmail.com
4:08 PM 11/28/2011
No comments:
Post a Comment