Friday, June 09, 2006

புலிநகக் கொன்றை நாவலை

* 'புலிநகக் கொன்றை நாவலை' முன்வைத்து, திரு. பி.ஏ.கிருஷ்ண் அவர்களுக்கு ஓர் திறந்த மடல்.

திரு.பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கு...

அன்புடன்....

இந்த் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போய் இருந்தபோது ,வாங்கனும் என்றுகுறித்தெடுத்துப் போன புத்தகங்களின் பெயரில் உங்களது 'புலிநகக் கொன்றை' முதல் எண்ணாக இருந்தது.

அநத புத்தகம் வெளி வந்தபோது நான் துபாயில் இருந்தேன். முயன்றிருந்தால், அப்பொழுதே வரவழைத்துப் படித்திருக்கலாம். பணியை ஒட்டிய சூழ்நிலை, சிறிதும் பேரிதுமானகுறுக்கீடுகள் என்று விட்டுப்போய்விட்டது.

இன்றைக்கு 'புலிநகக் கொன்றை' வாசித்தாகிவிட்டது. இந் நாவல் குறித்து என் கவனத்திற்கு வந்திருந்த மதிப்பீடுகளின் வழியே நான் வளர்த்து வைத்திருந்த எதிர்பார்ப்புகளையும்தாண்டி, அது என்னில் எழுந்து நின்ற உயரம் அதிகம். நிமிர்ந்து பார்க்கவைத்து விட்டது.

'புலிநகக் கொன்றையின்' முதல் ஐம்பது பக்கங்கள் வாசிக்கையில், இன்னொருதி.ஜானகிராமனின் எழுத்தை வேறொரு மாவட்டம் சார்ந்த மண்ணின் சூழ்நிலையில் வசிப்பதாகத்தான் பட்டது. மேலும் ஐம்பது பக்கங்கள் என்றானபோது தோன்றிய எண்ணங்கள் வேறு. இது தி.ஜா. இல்லை, வேறொரு மாதிரியான அழகு. வெகு காலத்திற்குப் பிறகு வாசிக்கக் கிடைத்திற்கும் அபூர்வம்!!

தொடர்ச்சியான வாசிப்பில் மனம் லயித்துப் போனது. அசைப்போட்டு உள்வாங்கியஅந்த மணித்துளிகளை மறக்க இயலாது. நாவலைப் பூர்த்திச் செய்து வாரம் சில கடந்தும்,நினைவின் திரையில் காட்சிகளாக விரிந்துக் கொண்டிருந்தது. இத்தனை மாதத்திற்குப் பிறகும்இப்பவும் அதன் தாக்கம் உண்டு.

இந்த நாவல் வழியே, உண்டியல் கடைக் குடும்பத்தின் அத்தனைப் பேர்களும் ஒருவகையில் எனக்கு மரியாதைக் குறியவர்களாகிப் போனார்கள். வளர்ந்த ஞானத்தோடு எல்லோருமேமுகம் செய்ததினால் என்னவோ அத்தகையதோர் ஈர்ப்பு. குறிப்பாக அந்த குடும்பதில் சிலரிடம்கூடுதல் பிரியமும், சகோதர வாஞ்சையும் கூட தகைத்தது. திருமலை என் பியத்திற்குறிய தந்தை என்றால்.......நம்பி நெஞ்சம் நிறைந்த சகோதரன்.

சமூகம் / மதம் / அரசியல் / சினிமா / என்பனப் பற்றியெல்லாம் இந்த நாவல் முன் வைக்கும் கருத்துப் பகிர்வுகள் எனக்கு உடன் பாடானவை. இவைகள், என் நேர்கோட்டுச் சிந்தனைகளோடு ஒட்டு உராய்வோ, கிரீச் சப்தமோயின்றி அத்தனை சுத்தமாய் ஒட்டிப் போவது கண்டு என்னில் இரட்டிப்பு ஈடுபாடு.

அரசியல் குறித்து நம்பியும் கண்ணனும் பகிர்ந்துக் கொள்ளும் சர்ச்சைகள்,தர்க்கங்கள் அதை ஒட்டி அங்கே தெறிக்கும் தீர்க்கங்கள் அனைத்தும் நுட்பம் சார்ந்தவை.

''மார்க்ஸ்களும் லெனின்களும் மாவோகளும் லெட்சுமி விலாசில் போய் முடிந்தார்கள்/பொட்டலங்களுக்கு ஏற்றவர்கள்/அட்டையை எடுத்துட்டா புஸ்தகமெல்லாம்காத்தால்ல இருக்கு/லெனின் இரண்டு பாகமும் அண்டக் கொடுக்க உபயோகமானது'' இடதுசாரிகளின் தத்துவார்தங்களை, தலைவர்களை இந் நாவல் தன் போக்கில் வைக்கும்விமர்சன வரிகள் மெத்தவும் துல்லியம்.

பெரியார், கண்ணன் வசிக்கும் வீதிக்கு அருகில் பேச வந்தபோது நீங்கள்முன் வைக்கும் அப்பட்டமான காட்சிகளும் வர்ணணைகளும் அனியாயத்திற்கு யதார்த்தம். இன்னும் சொல்லனும் என்றால்...அப்படி சொல்லவும் ஒரு மனம் வோண்டும். மிகை உணர்ச்சியோ, தாழ்வுணர்ச்சியோ இல்லாது யதார்த்தமாக இப்படி பெரியாரை நமது தமிழ் நவீனத்துவக்கார்கள்தங்களது நாவல்களில் கொண்டு வந்து நிறுத்தி, சர்ச்சித்து நான் வாசித்ததில்லை. அதற்கெல்லாம்ஒரு மனம் வேண்டும். பி.ஏ. கிருஷ்ணம் ஒருபடி மேலேதான்.

இந்த நாவல் குறித்து, குறிப்பிட வோண்டிய இன்னொன்று அதன் நடை. அதன்விசேசம் சொல்லி மாளாது.

மூன்று நான்கு தலைமுறை சங்கதிகளை சராசரி நாவல்களின் பக்கங்களையொத்தக் கனத்தில் சொல்லி முடித்திருக்கின்றீர்கள் என்றால் அது உங்கள் நடையிலான சாத்தியமே.

கண்ணன் தன் உமாவுக்கும், உமா தன் கண்ணனுக்கும் எழுதும் கடிதங்கள்மெனமையான வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட அழகு. திரும்பத் திரும்ப வசிக்கவும் வைப்பது.

நகைச்சுவையை அத்தனை செருக்காய் அந்த நடை தனது வரிகளின், வார்த்தைகளின் சிடுக்குகளுக்குள் வைத்துக் கொண்டு வந்து, நம்மை மெல்ல குழுங்க வைக்கும் நேர்த்திஅலாதியானது.

நம்பி இறந்து கிடக்கிறான்.தண்ணிரைக் காணாத ஓர் கழிப்பறையில் ஐந்து நாட்களாககிடக்கிறான். வாசிப்பில் மனமெல்லாம் வீங்கி வலிக்கிறது. அவன்தான் எத்தனைப் பெரிய ஆகிருதி ! ஆனால் பாருங்கள் அவன் இறப்பை சொல்ல வந்த உங்களது நடை, மிக சாதாரணமாகச் சொல்லிச் செல்கிறது. எல்லாவற்றையும் ஒன்றாகப் பாக்கும் ஞானிகளின் நடை. இன்னும் என் கவனத்தில் அந் நடை பிடிப்படாத சில கேள்விகளை எழுப்பியப் படியே இருக்கிறது.

யதார்த்த நாவல் என்று பின் நவீனத்துவப் பண்டிதர்கள் இந்த நாவலை புறம்தள்ளலாம். அவர்கள் அப்படித்தான். நிஜத்தின் மீது பயணப்படும் நாவலுக்கு யதார்த்த அமைப்பியல்தான் அச்சு.

இந்த நாவல் தொடர்ந்து, பல்வேறு விதமான வீச்சங்களை பல இடங்களில். அந்த முகச்சுழிப்பை எல்லாப் பாத்திரங்களும் செய்கிறது. இந்த வீச்சம் நாவலில்குறியீடாக பின்னப் பட்டிருக்கிறதா என்றால்...அப்படியும் தெரியவில்லை. இடதுசாரி அல்லதுஅதற்கும் மேலே உள்ள மனிதர்களைப் பற்றியும், அவர்களின் மனோ விஸ்தீர்ணத்தைப் பற்றியும் பேசும் இந்த நாவலில் இந்த வீச்ச சங்கதி, வீச்சம் தருவதாக இருக்கிறது.

படைப்பு சார்ந்த நிஜம் இந்த நாவலின் பிரதான அம்சம். அதை யொட்டிய கணிப்பில், கூடுதல் ஆண்டுகளாக நீங்கள் சுமந்த ஓர் தாக்கத்தை அதனோடான வலியைஇன்றைக்கு படைப்பில் இறக்கி வைத்திருக்கின்றீர்கள். அப்படியே யென நம்புகிறேன்.

அது நிஜம் என்கும் பட்சம்....இப்பொழுது இங்கே உங்கள் படைப்பு சார்ந்தவெற்றியைப் பாராட்டுவதா? அல்லது நீங்கள் எதிர் கொணட இன்னல்களுக்காக கனத்தமனத்தோடு இருக்கும் நான், கண்ணீர் கசீவதா?

தெரியவில்லை!

நீங்கள்தான் சொல்லனும்.

- தாஜ்

tamilpukkal@gmail.com

***

3 comments:

Anonymous said...

சார் இந்த பி.ஏ.கிருஷ்ணன் ஒரு பாப்பார கம்னாட்டி சார். இந்த புத்தகத்தை தயவு செய்து படிக்காதீங்க!

புல்லாங்குழல் said...

ஆழமான வாசிப்பின் அற்புதமான வெளிப்பாடு இந்த விமரிசனம்.

புதியவன் பக்கம் said...

நானும் கையில் எடுத்தவன் வைக்க இயலாமல் இரவு முழுக்க உட்கார்ந்து படித்து முடித்தேன். அதை நண்பர் கிருஷ்ணனிடமே கூறினேன். பதிவு எழுத வேண்டும் என்று எண்ணி தள்ளிப்போன எத்தனையோ நூல்களில் இதுவும் ஒன்று. நம் தலைமுறைக்கு இந்த நூல் பிடித்துப் போவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதில் வாழும் பாத்திரங்களுக்கு மிக அண்மைக்காலத்தில் நாமும் இளைஞர்களாக இருந்திருக்கிறோம். காவல்துறை படுகொலை எல்லாம் படித்திருக்கிறோம். ஆண்டுகள் ஆகிவிட்டதால் பாத்திரங்களின் பெயர்கள் நினைவில் இல்லை. கிராமத்தில் சேவை செய்யப்போகும் மருத்துவர் பாத்திரப்படைப்பு அபாரம்.