* கருணாநிதி Vs ஜெயமோகன்.
இவர்கள் இருவரிடையே மூன்று வருடங்களுக்கு முன் மூண்ட இலக்கியச் சச்சரவை முன் வைத்து 27.11.2003 அன்றையத் திண்ணை இணையத் தளத்தில் நான் எழுதிய எதிர்வினை கட்டுரை.
- தாஜ்
------------------------------------------------------------------------
Thursday November 27, 2003
கருணாநிதியும் நவீன தமிழ் இலக்கியமும்
தாஜ்
பழுத்த அசல் அரசியல்வாதியான திரு. மு. கருணாநிதிக்கு பல முகங்கள். அதில் ஒன்றுதான் இலக்கியம்.மூத்த இலக்கியவாதி. மறுக்க முடியாது. அவர் ஈடுபாடு கொள்ளும் பண்டைய இலக்கியச் சங்கதிகளில் இந்த வயதிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் காட்டி வருகிறார் என்பது பெரிய விஷயம். பாராட்டலாம்.
பண்டைய இலக்கியத்தின் நேர் எதிர்முனையில் விருட்சமாய் நிற்பதுதான் நவீன இலக்கியம். பண்டைய இலக்கிய அபிமானிகள் யாரும் இதன் போக்கை, நுட்பத்தை, மிளிரும் அழகை இன்னும் அதன் சாதிப்புகளை ஒப்புக் கொண்டது கிடையாது.
பண்டைய இலக்கியங்களையும் அதன் மகோன்னத சாதிப்புகளையும் அதன் அபிமானிகளையும் அவர்களது எழுத்துப் பணிகளையும் நவீன இலக்கியவாதிகள் ஒப்புக்கொள்வது மாதிரி அந்தப் பக்கம் இவர்களை ஒப்புக்கொள்வது கிடையாது. இது ஒரு தொடரும் உண்மைதான் என்றாலும் இன்றைக்கு அந்த நிலைமையில் 'தேவலாம் ' தெரிகிறதுதான்.
இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த பார்வை , அதில் நிகழ்ந்து வரும் மறுமலர்ச்சி குறித்த சிந்தனை ஆகியவற்றை ஒதுக்கி அதன் படைப்பாளிகளை அவர்கள் முற்றிலும் தீண்டாத ஒரு காலகட்டம் இருந்தது. க.நா.சு அவர்கள் அப்போது தட்டாத கதவு கிடையாது. எல்லா கல்லூரி மற்றும் பல்கலைக் கழக தமிழ்த்துறைகளின் கதவையும் தட்டினார். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் சங்கதிதான் நடந்தது.
மூத்த இலக்கியவாதியான கருணாநிதியும் அதே நிலை கொண்டவர்தான். நவீன இலக்கியம் என்றைக்குமே அவருக்கு அந்நியம். தவிர நவீன இலக்கியம் குறித்து அவருக்கென்று வினோதமான ஒரு கருத்தும் இருந்தது. நவீன இலக்கியப்போக்கை ஒப்புக்கொள்ள மறுத்த பல மிழ்ப்பேராசியர்களுக்கு கூட அப்படி ஒரு கருத்து இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். அப்படி ஒரு கருத்தை கருணாநிதியைத் தாண்டி வேறு எவர் வாயிலாகவும் கேட்டதுமில்லை.
கருணாநிதியின் அந்தக் கருத்து வினோதமானது மட்டுமல்ல; வேடிக்கையானதும் கூட. அவரே ஒருதரம் தனது பேட்டி ஒன்றில் அதை வெளிப்படுத்தியும் இருக்கிறார்.
நவீன இலக்கியத்தை கருணாநிதி பொருட்படுத்தவில்லை என்றாலும் தனது இலக்கிய முயற்சிகளை சகல தரப்பினரும் பாராட்ட வேண்டுமென நினைப்பார். தாராள சிந்தனை. அரசியல்வாதியாயிற்றே! குறிப்பாக நவீன இலக்கியவாதிகள் பாராட்டது போனால் கூட பரவாயில்லை. பெருந்தன்மையாய் மன்னித்துவிடுவார். மாறாக விமர்சனம் என்று எதுவும் வைத்துவிடக் கூடாது. அவ்வளவுதான்...
கருணாநிதியின் முகரேகைகளைப் பார்த்து படபடத்துவிடும் அவரது துதிபாடிகள் திசைக்கொருவராய் கிளம்பிவிடுவார்கள். அரசியல் பாணி வசவுகளும் மிரட்டல்களும் தெறிக்கும். மொத்த இலக்கியவட்டமும் திக்பிரமை பிடித்தமாதிரி மெளனித்து விடும். கருணாநிதியும் கூட கடல் அளவு அமைதியோடுதான் இருப்பார். அவரது பெருந்தன்மையை நவீன இலக்கியவாதிகள் புரிந்துகொள்ளவில்லையென்றால் எப்படி ? அதான் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்.
இந்தப் பட்டியலின் இன்றைக்கு ஜெயமோகன். நேற்றைக்கு நான்! ஆமாம். ஜெயமோகனுக்காவது பரவாயில்லை. நவீன இலக்கிய உலகம் மெளனம் கலைத்து தனது எதிர்ப்புக் குரலையாவது காட்டியது. எனக்கோ...அதன் ஆழ்ந்த நித்திரையின் குறட்டைச் சத்தம்தான்.
கருணாநிதியின் இலக்கிய அபிமானியும் முன்னால் தமிழ்த்துறை பேராசிரியருமான 'கவிக்கோ ' ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் தன் தலைவரோடு மேடையேறிவிட்டால் தன்னையே மறந்து விடுவார் மனிதர். அது கவியரங்கமாக இருந்துவிட்டால் போச்சு. இரண்டு தரம் மறந்து விடுவார் இவரது கவியரங்கம் கேட்டு இருக்கிறீர்களா ?
கருணாநிதியின் இலக்கியம் சார்ந்த - தமிழ் சார்ந்த - தமிழ் மன்னர்கள் சார்ந்த உள்மன விருப்பங்களை மேடையில் அவரை வைத்துக்கொண்டே காது கிழிபடப் பேசி புளகாங்கிதம் அடைவதென்பது கவிக்கோவின் பழக்கம். இதை ஒரு தொண்டாகவே நெடுங்காலமாய் செய்தும் வருகிறார்.
ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்காக கருணாநிதியோடு மேடையேறிய கவிக்கோ தனது வழக்கமான புகழாரங்களுக்குப் பிறகு, தலைவரின் முகம்பார்த்து கொசுறாய் நவீன இலக்கியவாதிகளைப் பற்றி ஏக தாளத்தோடு நக்கல் அடித்திருக்கிறார்.
நவீன இலக்கியவாதிகளை மூன்று சதவிகிதத்தினர் என்று அப்துல் ரஹ்மான் துச்சமாய் கேலி செய்ய 'அவர்களை ஒன்றும் சொல்லாதீர்கள். நமது தயவு நாடி வந்திருக்கிறார்கள் ' என்றிருக்கிறார் கருணாநிதி அவர் பங்கிற்கு. இது அப்துல் ரஹ்மானைத் தாண்டிய நக்கல்.
அப்துல் ரஹ்மானுக்கு நவீன இலக்கியவாதிகளின் மீது தனிப்பட்ட வருத்தம் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் கவிதைக்காக சாகித்திய அகாடமி பரிசை அவர் வாங்கி வென்றபோது நவீன இலக்கியவாதிகள் எவர் ஒருவரும் இவரை பாராட்டவில்லை. அவர் மனம்தான் என்ன பாடுபட்டிருக்கும்! போதாதற்கு அரசியல் லாபி வழியாகத்தான் இவருக்கு இந்த பரிசு கிடைத்திருக்கிறது என்ற உண்மையைப் போட்டு உடைத்த கவிஞர் ஞானக்கூத்தன் வேறு அங்கே அந்த மேடையில் அமர்ந்திருக்கிறார். விடுவாரா மனிதர் ?
நேரில் கூட்டம் பார்த்து பேச்சை அவதானித்த ஜெயமோகன் மறுநாள் தனது புத்தகக் குவியலின் வெளியீட்டு விழாவில் கருணாநிதிக்கு எதிர்வினை புரிந்திருக்கிறார்.
'இந்த மேடையில் நின்று அந்த மூன்று சதவிகித முணுமுணுப்பின் பிரதிநிதியாகச் சொல்கிறேன். திரு. கருணாநிதி அவர்கள் எழுதும் எழுத்துக்கள் தீவிர இலக்கியத்தின் எப்பிரிவிலும் பொருட்படுத்தக் கூடியவை அல்ல '
இப்படி ஜெயமோகன் பேதமையாக பதில் சொல்லியிருப்பதை விட எதிர்வினை புரியாமலேயே இருந்திருக்கலாம். இலக்கிய உலகத்தின் அமைதி கெடாமலாவது இருந்திருக்கும்.
இலக்கியத்தைப் பொறுத்தவரை கருணாநிதி சுத்த சைவம். மறந்தும் தனது எழுத்தை தீவிர இலக்கியத்தின் பக்கம் வைத்துப் பார்க்கவும் பார்க்காதவர். சங்கத் தமிழில் செய்யப்பட்ட பழந்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தின் நீட்சியாகத்தான் தனது எழுத்தைப் பார்க்கிறவர் அவர். யோசிக்கிறபோது கருணாநிதியின் பார்வையின் ஜெயமோகன் சொல்லியிருப்பது வரவேற்புக்குரியது.
சீண்டியவர்களுக்கு துல்லியமாய் பதில் சொல்லும் கலை ஜெயமோகனுக்குத் தெரியும். எதை, எப்படி, எந்த தருணத்தில். எந்த ரூபத்தில் என்கிற எல்லா நுட்பமும் தெரியும். இங்கே அடக்கி வாசித்திருக்கிறார். ஆன்மீகத்தைப் போதிக்கும் அவருக்கு அடக்கம் இல்லாமலா போகும்! 'நாச்சியார் மட ' விவகாரத்தை தனது இதழில் வெளியிட்டு குளிர்காய்ந்தபோது காற்றாய் போய்விட்ட அவரது அடக்கம் இன்றைக்கு முழு உருக்கொண்டு வெளிப்பட்டிருக்கிறது.
கருணாநிதியை விமர்சிப்பது மாதிரியும் அது இல்லாத மாதிரியும் என்று ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருப்பதாகத்தான் அவரது மேடைப் பேச்சை முதல் வாசிப்பில் கவனித்தேன். அது தவறு என்று பிறகுதான் புரிந்தது. இரண்டல்ல; ஏகப்பட்ட மாங்காய்கள் அடித்திருக்கிறார். மூன்று சதவிகிதத்தினரின் பிரதிநிதியாக அவரே தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது அதிலொன்று.
கருணாநிதியின் எழுத்துக்களை காத்திருந்து வாங்கி புத்தகம் போடும் 'விபரம் ' கொண்ட பதிப்பக வியாபாரியான இளையபாரதி ஜெயமோகனை நோக்கி உருட்டலும் மிரட்டலும் சாடியிருக்கிறார். தனது மேடையில் நவீன இலக்கியவாதிகளை பிறாண்டப் போய்தான் எதிர்வினை கிளம்பி இருக்கிறது என்ற அடிப்படை ஞானம் கூட அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
கருணாநிதியைச் சுட்டி ஜெயமோகன் எப்படி பேசலாம் என்கிற பார்வையில்தான் இளையபாரதியின் கோபம் கிளைத்திருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஜனநாயகம் வளர்ந்த ஒரு நாட்டில் வலியவனை எளியவன் விமர்சிக்கலாகாது என்கிற சாபம் இன்னும் ஒழிவதாகத் தெரியவில்லை.
இளையபாரதி தனது வசவில் உபரியாக ஜெயமோகனை மலையாளி , மனநோயாளி என்றிருக்கிறார். மலையாளி என்ற இளக்காரம் மடமையும் அநாகரீகமும் கொண்டது. மனிதனை மனிதனாகப் பார்க்க மறுக்கிற வீம்பு இது. தவிர மனநோயாளி என்கிற அவரது வசவு குறித்து சட்டென்று மறுத்துச் சொல்லிவிட முடியாது. இளையபாரதி என்னைவிட நெருக்கமாக ஜெயமோகனிடம் பழக்கம் கொண்டவராக இருந்திருக்கலாம். மேலும் நான் ஜெயமோகனை சந்தித்து மூன்று வருடங்களுக்கு மேலும் ஆகிறது.
இளையபாரதியிடம் கேட்க ஒன்று இருக்கிறது. நமது தயவை நாடி வந்திருக்கிறார்கள் என்று கருணாநிதி பேசி இருக்கிறாரே..எப்படி அது ? புரிகிறதா ? சொல்வீர்களா ? ஒருசமயம் உங்களை மனதில் கொண்டுதான் அப்படி சொல்லியிருப்பாரோ ? இருக்காது. பின் எதற்காக அப்படி பேசினார் ?
நவீன இலக்கியவாதிகளுக்கு கருணாநிதியின் தயவு எதற்கு என்றுதான் புரியவில்லை. வாசிப்பு - அனுபவம் - முயற்சி என்பதான பின்னணியில் கனிமொழி கவிதைத் துறையில் சாதித்திருக்கும் சாதிப்பு மலைக்க வைக்கக் கூடியது. இதில் ஏதேனும் கருணாநிதியின் தயவு உண்டா ? அவரது மகளுக்கு தேவைப்படாத தயவு பிற நவீன இலக்கியவாதிகளுக்கு தேவைப்படுமா என்ன ?
வேண்டுமானால் இப்படி யோசித்துப் பார்க்கலாம். கருணாநிதி முன்வந்து - தயவு காட்டி - நவீன இலக்கியமும் இலக்கியம் சார்ந்ததுதான் என ஒப்புக் கொண்டவராய் தனது தொண்டர்களுக்கு சிபாரிசு செய்யலாம். படிக்கும்படியாக அன்புக் கட்டளை கூட பிறப்பிக்கலாம். நல்ல விசயம்.
இப்படி ஒரு அறிவிப்பு அவர் செய்வதாக இருந்தால் முதலில் நவீன இலக்கியங்களை அவர் தீர வாசித்திருக்க வேண்டும். இல்லையென்றாலும் இது சாத்தியமாகக் கூடிய ஒன்றுதான்.
இவரது தொண்டர்கள் குட்டி அரசியல் தலைவர்களாக பரிணமிக்க எத்தனையோ கலைகளை கற்றுத் தேற வேண்டியிருக்கிறது. இதில் நவீன இலக்கியம் படிப்பதென்றால் எப்படி ? கிடைக்கும் கொஞ்சத்து ஓய்வு நேரங்களில் கூட அவர்கள் சன் டி.வி தொடர்களைப் பார்த்து தங்களது விசுவாசத்தை பறைசார்த்த வேண்டியல்லவா இருக்கிறது ?
1992-ம் ஆண்டு சுபமங்களா தீபாவளி சிறப்பு இதழில் கருணாநிதியின் இலக்கியம் சார்ந்த பேட்டி வந்திருந்தது. மறைந்த திரு. கோமல் சுவாமிநாதன் அதன் ஆசிரியர். கோமல் அவர்களுக்கு தமிழகத்து அரசியல் கட்சி தலைவர்களோடு நட்பு இருந்தது. கருணாநிதியிடம் அது கொஞ்சம் அதிகம். அதனால்தானோ என்னவோ அவரது சுபமங்களாவுக்கு இலக்கிய ரீதியான பேட்டி தர கருணாநிதி சம்மதித்து இருக்க வேண்டும். பொதுவாக அவர் நவீன இலக்கிய இதழ்களுக்கு பேட்டி தருவதில்லை. மொத்ததில் ஐம்பத்தி மூணே முக்கால் பேர்கள் படிக்க வெளிவரும் சிற்றிதழ்களுக்கு அளிக்கும் பேட்டியால் எந்தப் பயனுமில்லை என்று அவர் கணித்திருக்க வேண்டும். சரியான கணிப்பு அது. எனக்குத் தெரிந்து இலக்கிய இதழில் அவர் பேட்டி என்பது சுபமங்களா பேட்டிதான் - முதலும் கடைசியும்.
அந்த பேட்டியில் குறிப்பிடத்தகுந்த கேள்விகளுள் ஒன்று: நவீன இலக்கியம் குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன ?
பதில் சொல்லியிருந்தார் கருணாநிதி. அந்த காலகட்டத்தில் அவர் முதலமைச்சர். IAS அதிகாரிகளை முடுக்கிவிட்டு அரசாங்கம் நடத்துபவர். இன்னொரு பக்கம் இலக்கிய முன்னோடிகளில் ஒருவர். மேற்கண்ட கேள்விக்கு அவரா அப்படி பதில் சொன்னார் என்பதான வியப்பு எழுந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அந்த வியப்பு அப்படியே இருக்கிறது.
'ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதப்படும் எழுத்துக்களை நான் வரவேற்பவன் அல்ல. அதைத்தானே நவீன இலக்கியம் என்று சொல்கின்றீர்கள் ? அதன் மீது மதிப்பில்லை ' என்றிருந்தார்.
என் நினைவுகளின் சுருதி சுத்தமாக இருக்கும் பட்சத்தில் இப்படித்தான் பதில் அளித்திருந்தார் கருணாநிதி. வாக்கிய அமைப்பு வேண்டுமானால் கொஞ்சம் மாறி இருக்கலாம். ஆனால் சாரம் இதுதான்.
நவீன இலக்கியம் குறித்த கருணாநிதியின் நிலைப்பாட்டை முன்வைத்து சுபமங்களாவுக்கு ஓர் நீண்ட கடிதம் எழுதினேன். அதில் அவர் இலக்கியம் குறித்து சின்ன அளவில் விமர்சனமும் வைத்திருந்தேன். அடுத்த இதழில் அது பிரசுரமாகி இருந்தது. சுபமங்களாவில் இரண்டு பக்க அளவில் வெளிவந்திருந்த பெரிய சைஸ் வாசகர் கடிதம் அது.
கருணாநிதி குறிப்பிட்டு இருப்பது மாதிரி ஆங்கிலம் கலந்த தமிழில் சில எழுத்தாளர்கள் எழுதிவருகின்றார்கள் என்பது வாஸ்தவம்தான். மறுக்க முடியாது. கண்டிக்கத்தக்கதும் கூட. ஆனால் ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதப்படும் எழுத்தை நவீன இலக்கியம் என்று யார் சொன்னது ? அவர் இந்த நிலைப்பாட்டை எங்கணம் பெற்றார் என்பதை அறிய விரும்புகிறேன் என்று எழுதி இருந்தேன்.
நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கம், வளர்ச்சி, சாதிப்புகள், நுட்பத்தின் அழகு, இன்னொரு பக்கம் கருணாநிதியின் எழுத்து, அவர் படைப்புகளில் உள்ளார்ந்து வெளிப்படும் பிரச்சார நெடி, அதனாலேயே அன்றைக்கு அவர் எழுதிவந்த திருக்குறள் காமத்துப்பாலின் அர்த்தப்பாங்கு மாசு கொண்டு விட்டதெனவும் எழுதியிருந்தேன்.
இன்றைக்கு யோசிக்கிறபோது சுபமங்களாவில் வெளிவந்திருந்த கடிதத்தில் இடம் பெற்ற எனது இரண்டு மதிப்பீடுகள் மீது நான் கொஞ்சம் மாறுபடுகிறேன்.
கருணாநிதியின் பண்டைய இலக்கிய ஈடுபாட்டையும் அதையொட்டிய அவரது முயற்சிகளையும் கேலி செய்திருக்கிறேன் . அப்படித்தான் இருந்தது அவரது கதைகளும் கவியரங்கத்து கவிதைகளும். ஆனால் பிற்காலத்தில் அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியப் பூங்கா என்று பலதைப் பற்றியும் காட்சி விரிவுரைகள் எழுதிய வண்ணம் இருக்கிறார். இன்றைக்கு யோசிக்கிறபோது எனது அந்த கேலி தவறு என்று படுகிறது. கற்று பெற்ற வழியில் அவர் முன்னேறுவது சரிதான். பாராட்டுதல்களுக்கும் உரியதே.
கருணாநிதி வசனம் எழுதிய பழைய படங்கள் மூலமாய் அன்றைக்கு அவர் தமிழின் புதிய எல்லைகளைத் தொட்டு சாதித்தவராக என் கடிதத்தில் புகழ்ந்து இருந்தது அத்தனைக்கு சரியான கணிப்பல்ல என்று இப்போது படுகிறது. அவரது திரைப்பட வசனங்கள் கணக்கு வழக்கில்லாமல் புகழப்பட்டதற்கும் இன்றைக்கும் அவரது பராசக்தி வசனங்களை ஒப்பித்துக் காட்டி சிலர் புளகாங்கிதம் அடைவதற்கும் பின்னால் மறைமுகமாய் முடுக்கி விடப்பட்ட அரசியல் விசையே பெரிய அளவிலான காரணம் என்று படுகிறது.
சுபமங்களாவில் என் விமர்சனக் கடிதம் வந்த ஆண்டில் கருணாநிதியின் மந்திரிசபையில் இடம் பெற்றவரும் தி.மு.கழகத்தின் இலக்கிய அணி செயலாளராகவும் இருந்த திரு. தமிழ்க் குடிமகன் தன் தலைவருக்காக பரிந்து எனக்கு பதில் எழுதியிருந்தார் அடுத்த இதழில். நான் எடுத்து வைத்த சங்கதிகளுக்கு பதில் இல்லை. மாறாய் அவர்களது அரசியல் எதிகளின் சூழ்ச்சி இது என்றிருந்தார். தலைவரின் இலக்கியப் புகழை மாசு படுத்துகிறேன் என்பதாக நினைத்து வடிவு செய்யப்பட்ட பதில் அது. என்றாலும் இளையபாரதி ஜெயமோகன் திசைபார்த்து செய்த உருட்டல் மிரட்டல் மாதிரி அது இல்லை. நரகல் தனமான வார்த்தைகளும் கிடையாது. ஒரு அரசியல் கட்சியில் ஈடுபாடு கொண்டு மந்திரியாகிற அளவுக்கு உயர்ந்தும் கூட மொழி உபயோகிப்பில் அரசியல் இலக்கணம் மீறினால் எப்படி ?
சுபமங்களாவில் என் வாசகர் கடிதம் பிரசுரமாகி இருந்த அதே இதழில் அடுத்த கடிதமாக பெரியவர் தி.க.சியின் கடிதம் சின்ன அளவில் பிரசுரமாகி இருந்தது. கருணாநிதி வசனமெழுதி பங்கெடுத்துக் கொள்ளும் இன்றைய சினிமாக்கள் நடப்பு கால கட்டத்தில் சரியாகப் போகவில்லை என்பதாகவும் அவரின் சினிமா மவுசு குறைந்து விட்டதென்றும் எழுதியிருந்தார். அவரது கடிதத்தை வாசித்தபோதே எனக்கு சிரிப்பு வந்தது.
பெரியவர் தி.க.சி கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்டவர். அதன் தலைவர்களில் ஒருவராகவும் கம்யூனிஸ்ட் இலக்கிய இதழ் ஒன்றில் ஆசிரியராகவும் இருந்தவர். கம்யூனிஸ்ட்கள் இலக்கியத்தை மதிக்கக் கூடியவர்கள்தான். மிகுந்த ஈடுபாடும் மக்களைப் படிக்க நிர்ப்பந்திக்க விடிய விடிய பிரச்சாரமும் செய்பவர்கள்தான். என்றாலும் வாசிப்பிலோ எழுதுவதிலோ ஒரு எல்லையைத் தாண்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்கள். மக்கள் இலக்கியம்தான் எழுதுவார்கள். படிப்பார்கள். இதனாலேயே சிந்துபாத் படக்கதை எழுதுபவரிலிருந்து கருணாநிதிவரை யாரையும் எழுத்து விஷயமாய் விமர்சித்து விடமுடியாது. மக்களுக்காக எழுதுகிறவர்களாயிற்றே! அதனால்தான் என்னவோ கருணாநிதியின் சினிமா மார்கெட் நிலவரம் பற்றி மட்டும் மதிப்பீடு செய்திருந்தார்.
தமிழ்க் குடிமகனுக்கு பெரியவர் தி.க.சியைத் தெரியும் என்று தெரிகிறது. அவர் எழுதிய பதிலில் பெரும்பாலும் தி.க.சிக்கே என்று இருந்தது. நாகரீகமாக அவரை விளித்துதான் பதில் சொல்லியிருந்தார். அதன் கசிவோ என்னவோ நானும் நாகரீகமாகவே விளிக்கப்பட்டேன். நான் இதற்காக தி.க.சிக்கு நன்றி சொல்ல வேண்டும்.
தமிழ்க் குடிமகன் ஓரிடத்தில் என்னை 'யார் எவர் என்று பெயர் தெரியாதவர் ' என்பதாய் குறிப்பிட்டு இருந்ததாக ஞாபகம். அன்றைக்கு நான் இலக்கிய வட்டத்தில் பெயர் போடாதவன்தான். இன்றைக்கும் கூட மாசு குறையாமல் அப்படியேதான் இருக்கிறேன். இப்பவும் கூட என்னை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இலக்கிய வட்டம் மட்டுமல்ல பொதுவாகவே காலம் முதலில் பழி தீர்ப்பது நவீன கவிதைகள் எழுதுபவனைத்தான்.
அடுத்த ஆண்டு குற்றாலத்தில் கலாப்ரியா ஏற்பாடு செய்திருந்த கவிதைப் பட்டறைக்கு சென்றிருந்தேன். கோமல் அவர்களும் அங்கு வந்திருந்தார். அவரைப் பார்த்து கைகளைப் பற்றி வணக்கம் சொன்னபோது 'என்னை வம்பில் மாட்டி விட்டாய். உனது கடித விமர்சனத்திற்காக கருணாநிதியின் குடும்பத்தார்கள் என்னிடம் கோபித்துக் கொண்டார்கள் - எப்படி அதை பிரசுரிக்கலாம் என்று. நீ பயப்படாதே. நான் சமாளித்துக் கொண்டேன் ' என்றார்.
இலக்கிய விமர்சனத் தகிப்பில் மறுப்பு எழுதப்போய் பழக்கமற்ற அந்த குடும்பத்தார்களின் மனநோவுக்கு ஆளாகி விட்டோமே என்று வருத்தமாக இருந்தது. நின்ற நிலையில் சென்னைப் பக்கம் திரும்பி கண்களை மூடினேன்.
இன்றைக்கு இலக்கிய உள்வட்டம், வெளிவட்டம் எல்லாம் கூடிப்பிரிந்து நின்று வாதப் பிரதிவாதத்தில் ஜமாய்க்கிறார்கள்.
1. கருணாநிதி இலக்கியவாதிதான் . ஆம் / இல்லை
2. கருணாநிதியின் தமிழ் நடை அரதப் பழசு. ஆம் / இல்லை
3. ஜெயமோகன் கருணாநிதியைச் சுட்டி விமர்சனம் வைத்தது வேண்டாத வேலை. ஆம் / இல்லை
4. ஜெயகாந்தன் ஜெயமோகனை புகழ்ந்தது ரொம்பவும் அதிகம். ஆம் / இல்லை
5. ஞானக்கூத்தன், கல்யாண்ஜி, கலாப்ரியா போன்ற நவீன இலக்கியவாதிகள்
கருணாநிதியின் இலக்கிய சங்கதிகளை புகழ்ந்தது சரி. ஆம் / இல்லை
இப்படி பல முகாந்திரங்கள். நடப்பு இலக்கியச் சங்கதிகளை அதன் அனுதாபிகள் ரொம்பவும்தான் அலசுகிறார்கள். பெரும்பாலான வாராந்திரிகள் அநியாய கரிசனத்தோடு அவைகளை பதியவும் செய்கின்றன. நடக்கும் விவாதங்களின் மேல் ஒருபக்கம் சங்கடம். இன்னொரு பக்கம் அவைகளின் போதாமை குறித்த யோசனை. நான் மதிக்கும் ஞாநி கூட இது குறித்த பதிவில் ஏனோ தானோ என்றுதான் எழுதியிருக்கிறார்.
இந்த இலக்கியச் சர்ச்சை நடிகைகளின் திருப்பதி கல்யாணச் செய்தி மாதிரி ஆகிவிட்டது.
ஆழமான - தீர்க்கமான - தீர்மானமான - எதிர்த்து நின்ற - எள்ளி நகையாடிய - நேற்றுவரை உனதம் என்று கருதிய இலக்கியம் சார்ந்த தனது நிலைப்பாடுகளை அவ்வப்போது ஒரு நொடிப்பொழுதில் நம்ம ஜெயமோகன் மாற்றிக் கொள்ளக் கூடியவர். மாற்றிக் கொண்டபடியும் இருப்பவர். அப்படி ஒரு அசுர பரிணாம வளர்ச்சி. மையம் கண்டு நில்லாத ஓட்டம்.
வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஓடுகிற ஓட்டமாக என் நண்பர்கள் சிலர் அவரது ஓட்டத்தை கணிக்கிறார்கள். யதார்த்த்தில் வெற்றியை நிர்ணயிக்கும் கம்பம் எதிலும் கிடையாது என்பதுதான் வாழ்வின் சோகம்.
இந்த ஓட்டத்திற்கிடையேயும் சிலநேரம் ஒரு சுற்றுக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி அதன் உன்னதம் குறித்து ஒருபாடு நமக்கு எடுத்துரைப்பார். அப்பொழுது நாம் அங்கேதானே நின்றுகொண்டு இருக்கிறோம் என்பதை பொருட்படுத்த மாட்டார். எழுத்தால் எதனையும் நிரூபித்துவிட முடியும் என்ற எண்ணம் கொண்டவர். அப்படி ஒரு எழுத்து தமக்கு சமைந்திருப்பதாக கருதக் கூடியவர். எழுதுகோளைத் திறந்தால் அப்படியே கொட்டும்படியான எழுத்து வரம் தனக்கு வாய்த்திருப்பதாக நம்பிக்கை அவருக்கு.
கிளைவிட்டு கிளையில் எத்தனை முறை மாறினாலும் அன்றைக்கு கையில் எடுக்கும் நிலைப்பாட்டை தூக்கிப் பிடிக்கும் விதமாகவும் நவீன இலக்கியவாதிகள் தனக்குப் பின்னால் அணிவகுக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாகவும் கட்டுரைகள் எழுதுவார். அது மாதிரியான கட்டுரைகள் ரொம்ப விசேஷமாக இருக்கும்.
நவீன இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, அணுகி, கிடைக்கும் எழுத்தை எல்லாம் வாரி விழுங்கும் நமது விடலைகள் அந்த கட்டுரையை கண் சிமிட்டாமல் படிக்க , இங்கத்திய பெரிசுகள் அவர்களை வேடிக்கைப் பார்ப்பவர்களாக இருப்பார்கள்.
பொதுவாகவே ஜெயமோகன் எதையும் தீர்க்கமாய் சொல்லியே பழக்கப் பட்டவர். சு.ராவை புகழ்ந்த போதும் சரி, அவரை உண்டு இல்லையென கிழித்துக் கடாசியபோதும் சரி அவரது தீர்க்கம் துல்லியம் கொண்டது. அதே தீர்க்கத்துடன் சில ஆண்டு கடந்த நூறு வருடங்களுக்கு முன்காலத்தில் தமிழில் வெளிவந்த நாவல் படைப்புகள் அத்தனையும் உதவாக்கரை என்றும் தமிழில் நாவலே இல்லையென்றும் இவர் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்.
இந்த தீர்க்கம் இன்னும் இன்னும் பெரிதாகி நம்மை வியப்பூட்டுவதாக பரிமாணம் கொண்டு காட்சி தருகிறது. உலக அளவில் போற்றப்படும் நான்கு நாவல்களில் தனது விஷ்ணுபுரமும் ஒன்று என்ற உண்மையை நமக்கு அவர் உணர்த்தியிருக்கிறார். அந்த பட்டியலில் உள்ள முதல் மூன்று நாவல்களைக் குறித்து அவர் எதுவும் சொல்லவில்லையெனினும் ஊகிப்பது எளிது. அநேகமாக கல்கி, சாண்டில்யன் எழுதிய சரித்திர நாவலாகவே இருக்கும். மூன்றாவது அவரது 'பின் தொடரும் நிழலா 'கத்தான் இருக்கும். வேறு சான்ஸே இல்லை.
தீர்க்கம் மாதிரியே இவரிடம் சில அமானுஷ்ய சக்திகளும் இருக்கிறது. அநேகமாய் இந்த சக்தி இவர் ஈடுபாடு கொண்டு பரப்பும் கேரளத்து ஆன்மீகத்ததால் விளைந்த அற்புதமாகவும் இருக்கலாம்.
ஜெயகாந்தனுடைய 'அக்னிபிரவேசம் ' என்ற முப்பது வருஷத்து பழைய சிறுகதையை இன்றைக்கு பார்த்து விமர்சனம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். ஜெயகாந்தனைப் பற்றிய இவரது மதிப்பீட்டுக் கட்டுரையில் இது வருகிறது. மேற்கண்ட கதையில் ஓர் இடத்தை ரசித்து சப்புக்கொட்டி விளக்குகிறார். அந்த விளக்கம் அந்த கதையை எழுதிய ஜெயகாந்தனுக்கே தெரிய நியாயமில்லை என்று உரக்கச் சொல்கிறார். அப்படியே நம் புலனெல்லாம் விழித்துக் கொள்கிறது. எத்தனை பெரிய அமானுஷ்ய சக்தி! ஜெயமோகன்தான் எத்தனை பெரிய மனிதர்!!
ஜெயமோகனின் மகாத்மியத்தைத் தொகுத்தால் அது விஷ்ணுபுரத்தைவிட அளவில் பெரிதாகவும் ரசனையிலும் கூடியதாகவும் இருக்கும்.
நவீன இலக்கியத்தின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதும் நிஜமான அக்கறை கொண்டவர்களின் பார்வைக்கு :
கருணாநிதியும் அவரது துதிபாடிகளும் நவீன இலக்கியத்தை துச்சமாக நினைப்பவர்கள். இன்றைக்கு கொஞ்சம் மேலே போய் நவீன இலக்கியம் சார்ந்த வாசகர்களை மேடையில் வைத்துக் கொண்டே கிண்டலும் கேலியும் செய்திருக்கிருக்கின்றார்கள். கண்டிக்கத்தக்க ஒன்று. ஜெயமோகன் இதற்கு அவர் பாணியில் பதில் சொல்லியிருக்கிறார். இப்படிச் சொல்லியதற்காகவே வசவையும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். இது குறித்த ஆதங்கத்தோடும் இது சார்ந்த பழைய செய்திகளை கூடுதலாக பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும்தான் இந்த கட்டுரையை வடிவமைத்தேன். கருணாநிதிக்கு நவீன இலக்கியத்தைச் சேர்ந்த இலக்கியவாதிகள் கண்டனத்தை பதிவு செய்து விட்ட நிலையில் நானும் என் பங்கை செய்திருக்கிறேன்.
இப்பொழுது மீண்டும் கருணாநிதியையும் ஜெயமோகனையும் பற்றி வேறு கோணத்தில் பார்க்கலாம்.
கருணாநிதியும் ஜெயமோகனும் ஒரே நிறம் கொண்டவர்கள். கருணாநிதி அரசியல் முகம் கொண்ட இலக்கியவாதி என்றால் ஜெயமோகன் இலக்கியத்தை அரசியலாக்கிக் கொண்டிருக்கும் லட்சணம் கொண்டவர்.
தன்னை விமர்சித்தவர் யாராக இருந்தாலும் சரி அவரால் ஆதாயம் உண்டென்று தோணும் பட்சத்தில் அவரை அழைத்து தோளில் கை போடக் கூசாதவர் கருணாநிதி. அப்படி ஒரு சமத்து நம்மவருக்கும் உண்டு. எனக்குத் தெரிந்து அவரை தீர எதிர்த்தவர்களை எந்த எதிர்வினையும் முன் வைக்காமல் ஜெயமோகன் கரம் கோர்த்துக் கொண்ட நிகழ்வுகள் அதிகம்.
தங்களது ஆதாயத்தை முன் நிறுத்தி எதையும் எப்படியும் என்றைக்கு வேண்டுமானாலும் பந்தாடக் கூடியவர்கள் இவர்கள்.
நில்லாது சுழலும் உலகில் கருணாநிதியும் ஜெயமோகனும் ஒரே மேடையில் ஏற வெகுகாலம் பிடிக்காது. கருணாநிதி ஜெயமோகனை பாராட்டுவார். ஜெயமோகனோ பாராட்டுதல் மட்டுமல்லாமல் ' கருணாநிதியின் படைப்பாக்கங்களை நவீன இலக்கியவாதிகள் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் ' என்ற வேண்டுகோளும் வைப்பார்.
கல்கியின் நூற்றாண்டு விழா மேடையில் மூப்பனாரோடு ஏறி மாலை மரியாதையை பெற்றுக் கொண்டு கல்கியின் எழுத்துக்களை நவீன இலக்கியவாதிகள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஜெயமோகன் சொல்லவில்லையா என்ன ? இந்த மறுஆய்வு வேண்டுகோள் பட்டியலில் சுஜாதா பிறகு வந்து சேர்ந்தார். இன்றைக்கு ஜெயகாந்தனும் இடம் பிடித்திருக்கிறார். தொடர்ந்து கருணாநிதியும் அந்தப் பட்டியலில் இடம் பெற எத்தனை காலம் ஆகும் ?
கருணாநிதிக்கு நவீன இலக்கியம் இரண்டாம் பட்சம். அவ்வப்போது அதை பிறாண்டி வைக்கத் தவற மாட்டார். மற்றபடி அவருண்டு அவருடைய பண்டைய இலக்கியம் உண்டு என்று போய்விடக் கூடியவர்தான். மேலாய் தமிழர்கள் எல்லோரையும் கட்டி அழைத்துப் போய் கரைசேர்த்து ரட்சிக்க வேண்டிய களப்பணி வேறு. யதார்த்தத்தில் இவரால் நவீன இலக்கியத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது.
இன்றைக்கு எல்லா பிர்ச்சனைகளிலும் ஜெயமோகனின் ஆளுமை ஓர் நட்சத்திர சங்கதி. இங்கு எழும் பாதிக்கு மேலான பிரச்சனையில் ஜெயமோகனது தடத்தின் பதிவு இருக்கக் காணலாம். 'ரப்பரு 'ம் 'மண் 'ணும் இன்னும் அவரது சில சிறுகதைகளும் படித்து உச்சி முகரப்போய் இன்றைக்கு விழிக்கிறோம். இலக்கிய வட்டத்தில் இவரது ஒவ்வொரு நடை மீது கவனம் கொள்வது நல்லது. முடிந்தால் மனதளவில் தள்ளிவைப்பு கூட செய்யலாம். பாவமில்லை.
இலக்கியம் தனிமனிதர்களின் ஆளுமையை விட பெரியது. அதன் நெடிய ஓட்டம் தடைபடக் கூடாதது. அந்த தீரா நதியில் தாகம் தணிப்பவர்கள் நாம். அதற்காக எந்த விலையும் கொடுக்கலாம்.
ஞானக்கூத்தன், வண்ணதாசன், கலாப்ரியா போன்றவர்கள் கருணாநிதியை பாராட்டியது குறித்து நான் விமர்சனம் வைப்பதை விட நான் மதிக்கும் படைப்பாளிகளில் ஒருவரான திரு. சா. கந்தசாமி அவர்களைப் பற்றி எப்போதோ கேட்டறிந்த ஒரு செய்தியை இங்கே சொல்வது சரியாக இருக்கும். சா.கந்தசாமி சில வருடங்களுக்கு முன் குங்குமத்தில் பணிபுரிந்தார். அந்த வகையில் கருணாநிதியுடன் தீர நட்பு இருந்தது. அந்த கால கட்டத்தில் ஒரு சமயம் கருணாநிதியின் எழுத்தை பாராட்டும்படியான ஒருவித நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டபோது தனது குங்குமம் பணியைத் துறந்து வந்து விட்டதாக சொல்வார்கள். - கருணாநிதியின் எழுத்துக்கு அங்கீகாரம் தருவதென்பது மடமையான செயலென்று அவர் கூறியதாக சொல்வார்கள்.
அந்த மூவரையும் முன்வைத்து நவீன இலக்கியவாதிகளை அப்துல் ரஹ்மான் நக்கல் அடித்ததையும் கருணாநிதி அதைக் கிளறி வேடிக்கைப் பார்த்ததையும் அவர்கள் வேண்டுமானால் அப்துல் ரஹ்மான் எங்களின் நண்பர்; கருணாநிதி வயதில் மூத்தவர் என்று அன்றைய சீண்டலை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கலாம். இங்கே எங்களுக்கல்லவா ஏதோ அறுக்கிறது.
திராவிட இயக்கத்தைச் சார்ந்த தலைவர்களின் எழுத்து குறித்து மறைந்த க.நா.சு அவர்கள் தனது அபிப்ராயத்தை இரண்டு கட்டுரைகளில் எழுத படித்திருக்கிறேன். இரண்டும் வெவ்வேறு சமயங்களில் எழுதியவை.
திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களுள் பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் எழுத்தை சிறப்பானது என்கிறார் . எது ஒன்றையும் மறைத்தோ திரித்தோ சொல்லவேண்டியதை சொல்ல அவருக்கு தடையோ இல்லாததால் அவரின் எழுத்து சிறப்பாகவும் தனித்தும் மிகைத்தும் தெரிகிறது என்றிருக்கிறார் அவர்.
இன்னொன்று தமிழ் இனக் காவலர் கருணாநிதி குறித்து.
கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்களை விட கருணாநிதி சிறப்பாக எழுதுகிறார் என்று ஒரு இடத்தில் சொல்லி இருக்கிறார்.
நவீன இலக்கிய கர்த்தாவும் பிரபல விமர்சகர் என்றும் போற்றப்படுபவருமான மறைந்த க.நா.சு அவர்களின் இந்த பாராட்டுதலுக்காக கருணாநிதி நிச்சயம் சந்தோஷப் படலாம். என்ன....கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்களையோ அவர்களின் தமிழ்ப் பணியையோ க.நா.சு ஒருபோதும் ஒப்புக் கொண்டது கிடையாது. மதித்ததும் கிடையாது.
Email:tamilpukkal@gmail.com
No comments:
Post a Comment