Saturday, November 22, 2008

உனக்கு... / யுகபாரதி


படைப்புலகின் கவிஞரில் ஒருவரும், தமிழ்ச் சினிமாவின் பாடலாசிரியருமான யுகபாரதி எனது நெடுநாளைய நண்பர். 'மன்மத ராசா' பாடலை மறக்காத உங்களில் பலரும்அவரை அறிந்திருக்கக் கூடும். எனக்கு கணையாழி வழியிலான அறிதல் உறவு! இங்கே இந்த தகவல்கள்.... அத்தனைக்கு தேவையில்லாதது என்று தெரிந்தும், நான் இப்படி வலிய எழுதுவதென்பது... தமிழ் உரைநடை பாங்கின் சம்பிரதாயச் சடங்கு!
*
நண்பருக்கு 23.11.2008/ ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு/ குருதயாள் சர்மா திருமண மகாலில்/ தோழர் நல்லகண்ணு, ரஞ்சிதம்மாள் தலைமையில் திரும ணம். மணமகள் அன்புச்செல்வி!அவர் எனக்கு அனுப்பி வைத்த அழைப்பிதழின் பின் பக்கத்தில் பழக்க தோஷம் மாறாமல்இருபத்தி எட்டு வரி கவிதை ஒன் றை எழுதி அச்சேற்றி இருக்கிறார். கவிதை.... கவனம் கொள்ளத் தக்கதாக... எளிமையின் வசீகரமாக!இனி நீங்களும் அதை கவனம் கொள்ளலாம்.
- தாஜ்
** ** **
உனக்கு
-----------
தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்
படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு
இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக் கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப்பெற்றேன்
காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கிற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு
சமயத்தில் நிலவு என்பேன்
சமையலில் உதவி செய்வேன்
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்
ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதை தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பிவந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.
*** *** ***
- யுகபாரதி

Tuesday, November 18, 2008

ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம் - தாஜ்



ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்!
-----------
- தாஜ்

முகலாய பேரரசர்களில் ஒருவரான 'அபு முசாபர் முகையுதீன் முகமது ஔவுரங்கசீப் ஆலம்கீர்' என்கிற ஔரங்கசீப் எழுதிய ஒரு கடிதம், உலக சரித்திரத்தில் பிசித்திப் பெற்ற கடிதமாக நிலைப் பெற்று இருக்கிறது. தனக்கு கல்வி போதித்த ஆசிரியர் ஒருவருக்கு அவர் எழுதிய கடிதமது. தீவிர சிந்தனைகளை கொண்டதாகவும் யதார்த்த இழையோடியதாகவும் அந்தக் கடிதம் நம் பார்வையை ஈர்க்கிறது. கடிதத்தில் தெறிக்கும் அவரது கோபம் யோசிக்கத் தகுந்தது. என்னளவில் அது அர்த்தம் கொண்ட தும் கூட! படித்ததில் பிடித்ததான அந்தப் பிரசித்திப் பெற்ற கடிதத்தை கீழே தந்திருக்கிறேன்.
*
உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹாலை கட்டியப் பேரரசர் ஷாஜகானுக்கும் அவரது காதல் மனைவியான மும்தாஜுக்கும் ஐந்தாவது வாரிசாக பிறந்தவர் ஔரங்கசீப்! தனது ஆட்சியை இன்றைய ஆப்கானிஸ் தான் - கந்தஹாரில் இருந்து தமிழ்நாட்டின் வட மாவட்டமான செஞ்சிவரை விஸ்தீரனப்படுத்தியவர். தந்தையின் மீதும், தமையன்கள் மீதும்கூட படையெடு த்தவர். அவர்களை வென்று அந்த ஆளுமைகளையும் தனது விஸ்தீரணத்திற்கு உட்படுத்தியவர்! இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 - 1707.
*
தனக்கு கல்வி போதித்த 'முல்லா சாஹேப்' என்கிற ஆசிரியரின் திறமையின் மைக் குறித்து, தனது மனதாங்களை ஔரங்கசீப் விமர்சனக் கோணத்தில் வெளிப்படுத்தி இருப்பது தேர்ந்ததோர் அழகு! கல்வி போதிப்பதில், போதாமை பெரும்பாலான ஆசி ரியர்களிடம் இருக்கிறது. அது காலம் காலமாக தொடர் வதாகவும் இருக்கிறது. தவிர, ஔரங்கசீப்பின் மனதாங்கள்களை ஒத்த உறுத் தல்கள் இன்றைக்கும் நம்மில் பலரிடம் இருக்கவே செய்கிறது. இதன்தொட்டே அவரது அந்தக் கடிதத்தை நாம் உணர்வு பூர்வமாக அனுகுகிறோம்.
*
தவிர, தனக்கு போதிக்கப்பட்ட அரேபிய மொழி / அதைக் கற்க ஆன அதிகப் படியான காலங்கள் / உபதேசிக்கப்பட்ட மதத் தத்துவங்கள் போன்றவற்றின் மீது ஔரங்கசீப் வைத்திருக்கும் விமர்சனங்கள் இன்றைக்கும் ஏற்புடையவை. சில பத்தாண்டுக ளுக்கு முன்னால், அரபு நாடுகளுக்கு வெளியே வாழும் இஸ் லாமியர்களில் பெரும்பாலானவர்கள், அரபு மொழியை இறைவ னின் மொழி என்றும்/ இதில் சொல்லப்படாதது எதுவுமில்லை என்றும் / இன்னும் ஏதேதோ மனம் சார்ந்த நிர்பந்தங்களினால் தங்களது பிள்ளைகளுக்கு உலக கல்வியை அறிமுகப்படுத்தாமல், பிரதேச மொழிவழி கல்வியைகூட காட்டாமல், தாய் மொழி கல்வியையும் தவிர்த்து, அரபி மொழியை மட்டும் கற்க வைக்க அவர் கள் காட்டிய ஆர்வம் அளப்பற்கறியது. இப்படியானவர்களின் கண்மூடித்தன ங்களை சுட்டுவதாக ஔரங்கசீப்பின் இந்தக் கடிதம் விளங்குவது ஏற்புடைய தாக இருக்கிறது. இந்தக் கடிதத்தை முன்வைத்து, சிந்திக்கப் பழகிய இஸ்லா மியர்கள் ஔரங்கசீப்பை வாஞ்சைக்கொண்டு 'தோழமைப் பாராட்டினால்' அதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை.
*
இந்தியாவில், ஆங்கில அரசின் ஸ்தாபிதத்தை எதிர்த்து முதல் சுகந்திர முழக் கமிட்டவர்கள் முஸ்லீம்களாகவே இருந்தார்கள். ஆங்கிலேயனிடம், அறநூறு வருடம் ஆண்ட தாங்களது ஆட்சியைப் பறிகொடுத்தவர்கள் அவர்களாக இரு ந்தப்படியால் அவர்களின் இந்த முதல் எழுச்சியை நாம் புரிந்துக் கொள்ள முடியும். ஆங்கிலேயனை அவர்கள் எதிர்த்ததினாலேயே அவர்களது மொழி யையும், அந்த மொழியூடான உலக கல்விகளையும் அவர்கள் புறகணித்தார் கள். அப்படி புறகணித்தவர்கள் எல் லோரும் தங்களின் இறை மொழியோடு தஞ்சம் ஆனார்கள். அதையொட்டியே, அதிகத்திற்கு அதிகமாக மதரஸாகள் எழுந் தது. கல்வியென்றப் பெயரில் அதனுள்ளேயே அவர்கள் வம்சாவளியாய் தொடர்ந்து மண்டை காய்ந்தார்கள். இவர்களுக்கு உலக கல்வியைப் பற்றிய விழிப்புணர்வெல்லாம் இந்திய சுகந்திரத்திற்குப் பிறகான சங்கதி!
*
என் பாட்டிக்கு, தாய் மொழியில் படிப்பறிவு கிடையாது. அவர்களுக்கு, அரபி மொழியின் அர்த்தம் புரியாது என்றாலும் அதை எழுத்துக் கூட்டி வாசிக்கவும், அப்படியே அதை மனனம் செய்யவும் தெரியும். ஆனால், இஸ்லாம் சார்ந்த நீதிக் கதை களும், நபிமார்களின் வரலாறுகளும் கொண்ட 'அரபி எழுத்துக் களில்' எழுதப்பட்ட புத்தகங்களை தமிழ் நடையில் வாசிப்பார் கள். அன்றைக்கு அப்படி ஒரு 'அரபி தமிழ்' தமிழக இஸ்லாமியர்களின் புழக்கத்தில் இருந்தது. அன்றைக்கு அரபி மொழி தவிர்த்து பிற மொழிகளைப் படிப்பதும், உலக கல்வி யை தேட முயல்வதும் இஸ்லாத்திற்கு விரோதமாக, ஹராமாக (ஒதுக்கப் பட்டதாக) பார்க்கப்பட்டது. மூர்க்கத்தனமான அன்றைய மதப் போதகர்களால் அந்த அளவிற்கு இஸ்லாத்தில் உலக கல்வி ஓரம் கட்டப்பட்பட்டது. அதனா ல்தான், தாய் மொழியை படிக்க - வாசிக்க ஆசை கொண்டவர்களும்கூட அரபி வழியாக அந்த மொழியை வாசிக்க வேண்டி இருந்தது. மேலே குறிப்பிட்டது போல் இந்திய சுதந்திரத்திற்கும் பிந்திய காலங்களில்தான் இஸ்லாத்திற்குள் வலம்வந்த முற்போக்கு வாதிகளால், பிற மொழிக் கல்வியும், உலக கல்வியும் இந்த சமுதாயத்திற்குள் ஊக்கு விக்கப்பட்டது. 'சீனா சென்றேனும் கல்வியை தேடு' என்கிற முகம்மது நபியின் ஹதீஸ் சார்ந்த ஸ்லோகத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி, இஸ்லாமியச் சமூகத்தை மரியாதைக்குறிய அந்த முற்போ க்குவாதிகள் தயார் படுத்தினார்கள்.
*
மதம் சார்ந்த மொழி குறித்து, முன்னூற்றி ஐம்பது வருடப் பழமைக் கொண்ட ஔரங்கசீப்பின் சிந்தனையை முன்வைத்துப் பார் கிறபோது வியப்பாக இருக் கிறது. அவரது சிந்தனையின் தொடர்ச்சி பிற்காலத்தில் இஸ்லாமியர்களிடம் எதிரொலிக்காமல் அறுபட்டும் போனதை எண்ணுகிறபோது வேதனையாக வும் இருக்கிறது. உலக மொழிகளினூடாக உலக கல்வியைத் தேடாத புறக ணிப்பால் இந்தியாவில் சிறுபான்மையான ஓர் சமூகம் சகலத்துறைகளிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு கிடப்பதை காண்கிற போது, வேதனை இன்னும் கூடுகிறது.
*
இன்றைக்கும் இங்கே, உலகபோக்கை கணிக்காத பிற்போக்குத்தனமான இனத் தலமைகளால் மதரஸாகள் செயல்பட்டுக் கொண் டுதான் இருக்கிறது. என்றா லும் அதற்குப் பழையபொழிவில்லை. இன்றைய இஸ்லாமிய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் மதரஸாக்களின் பிடியில் இருந்து தப்பித்தவர்களாகத் தான் இருக்கிறார்கள்! தனக்கு போதிக்காதுவிட்ட உலக கல்வி குறித்த அவ சியத்தை எண்ணி, ஔரங்கசீப் கொண்ட ஆதங்கத்தை ஒத்ததோர் ஆதங்கம் இன்றைய இஸ்லாமிய இளைஞர்களுக்கும் உறை த்திருக்கிறது. இன்றைக்கு இவர்கள் உலககல்வி அனைத்தையும் பிசிரில்லாமல் படிக்கின்றார்கள். அரபி மொழி ஒன்றே இஸ்லா மியர்களுக்குப் போதும், அதுவே இறைவனின் மொழி, அதுவே சாஸ்வதமான மொழி, அதில் எல்லாம் இருக்கிறது என்பதான ஒத் தைச் சிந்தனையை தாண்டியவர்களாக இருக்கிறார்கள். என்றாலும், ஔரங் கசீப் மாதிரி உண்மைகளை உலகுக்கு உரக்கச் சொல்லாதவர்கள். உண்மை யைகளை மறைத்துக் கொண்டு வாழும் இரட்டை வாழ்க்கை எல்லோருக்கும் இனிப்பது மாதிரி அவர்களுக்கும் இனிக்கிறது.
*
ஔரங்கசீப்பின் பிரசித்திப் பெற்ற இந்தக் கடிதத்தை, துக்ளக் வார இதழ் பல வருடங்களுக்கு முன், 01.11.1974 இதழில் பிரசுரித் திருந்தது. வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி அந்த கடிதத்தை, துக்ளக் இப்பொழுது மீண்டும், 30.04.2008 இதழில் மறுப் பிரசுரம் செய்திருக்கிறது. சுமார் முப்பத்தி நான்கு வருடம் கழித்து மறுபிரசுரமாகியிருப்பதில் இருந்து இந்தக் கடிதத்தின் முக்கி யத்துவத்தையும், அறிவார்ந்த வாசகர்கள் தேடும் இதன் அவசியத்தையும் யூகித்து உணரலாம். இனி அந்தக் கடிதம் உங்கள் பார்வைக்கு.
- தாஜ்
*******


(1658-ஆம் ஆண்டு ஔரங்கசீப் ஹிந்துஸ்தானத்தின் சக்ரவர்த்தியாக முடிசூட்டப் பெற்றார். அல்லது முடிசூட் டிக் கொண்டார். ஔரங்கசீபிற்கு இளம் வயதில் ஆசிரி யராக இருந்த முல்லா சாஹேப் என்பவருக்கு, ஔரங் கசீப் எழுதிய கடிதம் இது. ஔரங் கசீப் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்ட பிறகு முல்லா சாஹேப், 'தனக்கு ஔரங்கசீபின் அரச சபையில் கௌரவ பதவியும், சன் மானமும் தர வேண்டும்' - என்று கோரியிருந்தார். அதற்குப் பதில்தான் ஔரங்கசீபின் இந்தக் கடிதம்.) - துக்ளக் / 30.04.2008
*** *** *** ***
கற்றவரே!
*
நீர் என்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரசவையில் ஒரு முக்கிய பதவியில் அமர்த்தவேண் டுமென்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா? ஒன்று சொல்கிறேன், நீங்கள் எனக்கு எப்படிக் கல்வி போதித்திருக்க வேண்டுமோ, அப்படிச் செய்திருந்தால் உங்களுக்கு நான் பதவியைத் தருவது போன்ற நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது.
*
ஏனென்றால் நான் ஒரு விஷயத்தை நிச்சயமாக ஒப்புக்கொள்வேன். ஒரு குழந்தை தன்னுடைய தந்தைக்கு எவ்வளவு கடமைப் பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்குத் தனக்கு முறையான கல்வியைப் போதித்த ஆசிரியனுக்கும் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் எனக்குப் போதித்த முறையான கல்வி என்பது எங்கே இருக்கிறது?
*
ஐரோப்பாவை ஒன்றுமில்லாத ஒரு சூன்யப் பிரதேசம் என்று போதித்தீர்கள், போர்ச்சுகீஸிய நாட்டு மாபெரும் மன்னரைப் பற் றியோ, அவருக்கு அடுத்த ஹாலந்து மன்னரைப் பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ, நீர் எமக்கு ஒரு விபரமும் கூறவில்லை, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாட்டு மன்னர்களை எல்லாம் நமக்கு அடங்கிய, மிகச் சிறிய குறுநில மன்னர்கள்
என்று கூறினீர்கள். ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங்கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டும் என்பதற்காக, உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் நமக்கு அடங்கியவையே என்று கூறினீர்கள். ஆஹா...! வியந்து பாராட்டப்பட வேண்டிய சரித்திர அறிவு!

*
எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்? - உலக நாடுகளில் எல்லாம் என்ன நடக்கிறது? அந்த நாடுகளின் பலம் என்ன? அவர்களின் போர் முறைகள் என்ன? மதக்கோட்பாடுகள் என்ன? ராஜதந்திரங்கள் என்ன? - இவற் றை எல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா? உண்மை யான சரித்திரத்தை எனக்குக் கற்றுக் கொடுத்து, பல நாட்டு மன்னர்களின் வாழ்வையும் தாழ்வையும், அவர்களது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நான் உணரும்படி செய்திருக்க வேண்டாமா? எவ்விதமான தவறுகளால் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால், அங்கே புரட்சிகள் தோன்றின - அந்த சாம்ராஜி யங்கள் அழிந் தன - என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தி ருக்க வேண்டாமா?
*
உங்களிடமிருந்து என்னுடைய முப்பாட்டனார்களின் பெயர்களைக்கூட அறிந்து கொள்ளவில்லை. ஹிந்துஸ்தான் சாம்ராஜிய த்தை ஸ்தாபித்த புகழ்பெற்ற என்னுடைய முன்னோர்களைப் பற்றிக்கூட உங்களிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. இந்த மாபெரும் சாம்ராஜியத்தை ஸ்தாபித்த அவர்களுடைய சரித்திரத்திற்கும், நீங்கள் எனக்குக் கற்பித்ததற்கும் - அவ்வளவு பெரிய இடைவெளி இருந்திருக்கிறது.
*
எனக்கு அரேபிய மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுக்க முனைந்தீர் கள். பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக விழு ந்து விழுந்து படித்தாலும், முழுமையாக கற்றுக்கொள்ள முடியாத ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்ததன் விளை வாக, என் வாழ்நாளில் அவ்வளவு நேரத்தை வீண டித்ததற்காக உங்களுக்கு நான் ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். ஒரு வருங்கால அரசன் பன்மொழிப் புலவனாக இருந்துதான் தீர வேண்டுமா என்ன? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து, இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்குப் பெரு மையா? ராஜ பரிபா லனத்திற்கான, அவசியமான - முக்கியமான விஷயங்க ளைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான், அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன்!
*
ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டால், அந்த நினைவு வாழ்நாள் முழுவதும் நிலைத்து, அவனைப் பெரும் சாதனைகளைச் செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது போலும்! சட்டம், மத வழி பாட்டு முறைகள், விஞ்ஞானம் - இவற்றை எல்லாம் என் தாய் மொழியில் நான் கற்றிருக்க முடியாதா? அரேபிய மொழியை ஏன் என் தலையில் கட்டினீர்கள்?
*
என் தந்தை ஷாஜஹானிடம் எனக்கு மதத் தத்துவங்களை போதிக்கப் போவ தாக நீங்கள் சொன்னது, எனக்கு நன்றாக நினைவி ருக்கிறது. அர்த்தமே இல் லாத - இருந்தாலும் புரிந்து கொள்ள முடியாத - புரிந்து கொண்டாலும் மனத் திருப்தி அளிக்காத - மனத் திருப்தி அளித்தாலும் இன்றைய சமுதாயத்தில் எந்தவித பயனுமே இல்லாத, புதிர்களை எல்லாம் என்னிடம் போட்டுக் கொண் டிருந்தீர்கள். நீங்கள் கற்றுக் கொடுத்த தத்துவங்களைப் பற்றி இப்படித்தான் புகழ முடியும். - அவையெல்லாம் புரிந்து கொள்ள மிகக் கடினமானவை; மறப் பதற்கு மிக எளியவை.
*
நீங்கள் போதித்த மதத்தத்துவங்களைப் பற்றி என் நினைவில் மீதம் இருப்ப தெல்லாம் காட்டு மிராண்டித்தனமான, இருள் அடர்ந்த பெரிய பெரிய வார்த் தைகள்தான். மேதாவிகளையும் கூட குழப்பக் கூடிய பயங்கரமான வார்த்தை கள்! உங்களைப் போன் றவர்களின் அறியாமையையும், இறுமாப்பையும் மறை க்க, உங்களைப் போன்றவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள்.
*
'உங்களுகுத்தான் எல்லாம் தெரியும். உங்களைப் போன்ற மேதாவிகளுக்குத் தான் இந்த பயங்கர வார்த்தைகளில் அடங்கியிருக்கிற அரிய தத்துவ ரகசியங் கள் புரியும்' - என்று மற்றவர்கள் நினைத்து ஏமாந்து போவதற்காக, உங்களைப் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வெறும் வார்த்தைகள்.
*
காரண காரியங்களை மட்டுமே பார்க்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய மதத் தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித் திருந்தால் - மனதை ஒரு நிதானத்தில் அடக்கி வைக்கப் பயன்படும் அரிய தத்துவங்களை எனக்கு நீங்கள் போதித்திருந்தால் - அதிர்ஷ்டத்தினால் தாக்கப்பட்டு, செல்வத்தில் திளைத்தாலும் சரி - துரதிஷ்டத்தினால் தாக்கப்பட்டு தோல்வியைத் தழுவினா லும் சரி - இரண்டுக்குமே மயங்காத மனோதைரியத்தை அளிக்கக் கூடிய தத் துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால் - நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன? எப்படி இந்த பூமி இயங்குகிறது? - என்பதை எல்லாம் நான் உணர்ந்து கொள்ள உதவி செய்யும் வகையில் நீங்கள் எனக்குக் கல்வி போதி த்திருந்தால் - இப்பொழுதும் சொல்கிறேன் - இந்த மாதிரி விஷயங்களையும் தத்துவங்களையும் நீங்கள், எனக்கு கற்றுக் கொடுத்திருந்தால், நான் உங்களு க்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருந்திருப் பேன். அலக்ஸாண்டர், அவனு டைய குரு அ ரிஸ்டாடிலுக்கு எவ்வளவு கடமைப்பட்டிருந்தானோ, அதைவிட உங்களுக்கு நான் கடமைப்பட்டிருப்பேன். அலெக்ஸாண்டர், அரிஸ்டாடிலுக்குச் செய்ததற்கும் மேலாக உங்களுக்குச் செய்திருப்பேன், நன்றி காட்டிருப்பேன்.
*
சதா என்னை முகஸ்துதி செய்து கொண்டே இருந்ததற்குப் பதிலாக, ராஜபரி பாலனத்துக்குத் தேவையான விஷயங்களை எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத் திருக்க வேண்டாமா? குடிமக்களுக்கு அரசன் செய்யவேண்டிய கடமைகள் என்ன? அரசனுக்குக் குடிமக்கள் செய்யவேண்டிய கடமைகள் என்ன என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா? என் வாழ்க்கைப் பாதையில் ஒரு கட்டத்தில் என்னுடைய பதவிக்காகவும், உயிருக்காகவும் கூட, என்னு டைய உடன் பிறந்த சகோதரர்களுடனே யே நான் வாள் எடுத்துப் போரிட நேரிடும் என்பதையும் உணரும் அளவுக்கு, நீங்கள் போதித்த கல்வி அமைந் திருக்க வேண்டாமா?
*
ஒரு நகரத்தை எப்படிக் கைப்பற்றுவது? ஒரு போர்ப் படையை எப்படி நடத்திச் செல்வது - என்பதை எல்லாம் நான் அறிந்து கொள்வதில் நீங்கள் அக்கறை காட்டினீர்களா?
*
பயனுள்ள விஷயங்களை ஏதாவது நான் இப்போது அறிந்து வைத்திருந்தால், அதற்காக நான் மற்ற பலருக்குக் கடமைப்பட் டிருக்கிறேன் - நிச்சயமாக உம க்கல்ல!
*
போங்கள்! நீங்கள் எந்தக் கிராமத்திலிருந்து வந்தீர்களோ, அந்தக் கிராமத்திற்கே போய் சேருங்கள்! நீர் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்ன ஆனீர்கள்? என்பதை யெல்லாம் எவருமே தெரிந்து கொள்ளவேண்டாம்.

- ஔரங்கசீப்
*** *** ***
நன்றி: துக்ளக் / 30.04.2008
தட்டச்சு, வடிவம்: தாஜ்
satajdeen@gmail.com

Monday, November 17, 2008

தாஜ் கவிதைகள் - 34

காலத்தச்சனின் கைவண்ணம்.
--------------------------------------
-தாஜ்


ஆகிவிட்டது
மலையேறும் படலம்
நிசப்த வெளியில்
திட்டுத் திட்டாய்
தரையிறங்க மிரண்ட
புதர் மனிதர்கள்.
*
தோழமை பாவிக்க அவர்கள்
என் அருகாமை
விலாசங்களையே
எதிரொலிப்பாய்
சொன்னார்கள்.
*
புழுதிப் பாதைகளின் வழியே
கற்கப் போனது தொட்டு
கறுத்த தார் ரோட்டில்
நடந்து வளர்ந்து
மாற்றுப் பாதைகள் பிடித்து
வாகனங்களில் விரைந்து
நீலக்கடலையும் தாண்ட
நினைத்ததையும் கூட.
*
சுற்றுலா தலமெனப் போற்றும்
தற்கொலை முனை காண
எழுந்து நான் ஆயத்தமாக
காலடி மண்ணைத்தாண்டி
விசேஷமாய் அங்கே
எதுவுமில்லை என்றார்கள்
பார்வையில் குகையொன்று
வசீகரிக்கவே முண்டி
தலை நுழைத்தவனாக
நீண்டு ஒடுங்கிப்போனேன்.
***

satajdeen@gmail.com

Sunday, November 16, 2008

அஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு / தாஜ்

அஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு.
- தாஜ்



சு.ரா.வை தமிழ் இலக்கியம் இழந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றைக்கு மாதிரியே வானம் கொட்டிய ஓர் மழை நாளில்தான் அந்த நல்ல மனிதரை நாமும் இழந்தோம். தொடர்ந்து எதிர் கொள்ளும் அக்டோபர்-15ம் தினமெல்லாம் மனதின் சலனங்கள் கொஞ்சமல்ல! அவர் குறித்த என் நினைவுகள் அத்தனையும் அழியாமல் அப்படியே இருப்பது ஆச்சரியம். இந்த மூன்று ஆண்டுகளில் அவரது இறப்பின் இழப்பை முன் வைத்து வந்த நியாயமான அஞ்சலிகளுக்கு ஒப்ப நேர் எதிர் முரண் கொண்ட அர்ச்சனைகளுக்கும் நம் இலக்கியப் பரப்பில் குறைவே இல்லை.
*
சு.ரா.வின் நினைவை மனதில் தாங்கி தொடர்ந்து அன்பு செய்து கொண்டிரு க்கும் நெஞ்சங்கள் இந்த அர்ச்சனைகளில் கலக்கம் கொள்ள ஒன்றுமில்லை. காலங்காலமாக இந்த மண்ணில் தன் வெளிச்சத்தைக் காட்டிய எந்த கலை ஞர்களும் தங்களது சமகால சகாக்களால் இப்படியான கறையினைக் கொண் டவர்கள்தான்.
*
என்னுடைய தேடலில் அவரை இலக்கிய வாதியாகத்தான் கண்டைந்தேன். ஜே.ஜே.சில குறிப்புகள் வழியாகத்தான் அவர் கிடைத்தார். அன்றையக்குத் தொட்டு அவரது இலக்கிய பார்வைகளோடு, அவரின் சமூக அரசியல் சஞ்சாரங்களையும் கவனம் கொண் டவன் நான். என் கவனத்தில், அவரது நடைப்பிசகை பெரிதாய் கண்டது இல்லை. இப்படி ஒரு கவனயீர்ப்போடு இன்றைய முன்னணி நவீன இலக்கியவாதிகளில் எவர் ஒருவரையும் நான் பின் தொடரக்கூடுமானால்... அது பத்து மாதம்கூட தாங்காது, கிழித்துக் கொண் டு வெளியே வந்து தங்களது கோரத்தைக் காட்டி மிரளவைத்திருப்பார்கள்.
*
நவீன இலக்கியம்தான் சு.ரா.வின் மையம். சமூகமும் அரசியலும் அவருக்கு அடுத்தடுத்த புள்ளிகள்தான். என்றாலும் அவைகள் குறித்த அவரது பார்வை யை நம் முன்னணி படைப்பாளிகளைவிட தெளிவானது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனை தீர்க்கமாக பதிவும் செய்திருக்கிறார் ஒன்றைத்தவிர! பெரியாரைப் பற்றிய அவரது உயர்வான மதிப்பீடுகளை கசியவிட்டிருந்தார் யென்றாலும் அழுத்தமானப் பதிவென்று ஒன்றையும் செய்தார் இல்லை.
*
சென்ற நூற்றாண்டில் இந்த மண்ணின் புரட்சிக்காரராக பெரியார் இயங்கினார் என்கிற நிஜத்தையும் தாண்டி, நம் தமிழ் மண்ணில் எந்த நூற்றாண்டும் காணா தப் புரட்சிக்காரராகவே அவர் சரித்திரத்தின் பக்கங்களில் கணிக்கவும்படுகி றார். நெருக்கத்தில் அல்லது சககாலத்தில் வாழ்ந்த இத்தனைப்பெரிய ஆகிரு தியைக் குறித்து, சு.ரா. தீர பதிவு செய்யாதுவிட்ட காரணம் விளங்கவே இல்லை!
*
மடாதிபதிகள், சாமியார்கள், ஆன்மீகச் செம்மல்கள் குறித்தெல்லாம் அவருக்கு நல்ல அபிப்ராயங்கள் இருந்ததில்லை. அது போலவே ரோமத்தைப் பிளக்கும் அவர்களது தத்துவங்கள் மீதும் அவருக்கு ஈர்ப்பு இருந்ததில்லை. தவிர, காலத்திற்கு ஒவ்வாத பழமைகளின் நெறிபேசும் சூத்திரங்களின் மீதும் அவர் விழுந்துப் புரண்டதில்லை. அவைகளில் தனது ஒட்டாதத் தனத்தை பதிவு களில் அவர் கசியவிட்ட விதங்கள் நினைவுகூறத் தக்கதென்றாலும், இவைகள் குறித்தும் பதிவிலேற்றி நீட்டி முழங்கியதில்லை. இதையொட்டி யோசிக்கிற போது..... பெரியார் குறித்த அவரது பதிவின்னை நிச்சயம் இந்தவகைச் சேர்ந்த தல்ல என்பது மட்டும் நிஜம்.
*
1992 - 94ம் ஆண்டு வாக்கில் 'கேப்பியார்' என்ற இதழில் வாசர்களின் கேள்வி க்கு அவர் பதில் அளித்திருப்பதை 'விரிவும் ஆழ மும் தேடி' என்கிற அவரது கட்டுரைத் தொகுப்பின் வழியே காணமுடிகிறது. அவைகளில் சில கேள்வி களையும் அதற்கான அவ ரின் பதில்களையும் அவரது இந்த நான்காம் நினைவு நாளில் என் அஞ்சலியாக வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன். புதி தாக இலக்கியத்தை அறிமுகப்படுத்திக் கொண்ட இளம் வாசகர்களுக்கு இந்தக் கேள்வி பதில் பெரிய தெளிவைதரும் என்றும் நினைக்கிறேன்.
*******

ஒரு நாவல் எப்படி எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
*
சகல படைப்புகளும் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவை. படைப்பு என்பது அதற்கு முன் நிகழாத விதத்தில் அப்போது நிகழ் வது. படைப்பாளி சர்வ சுதந்திரம் கொண்டவன். வரையறைகள், இலக்கணங்கள் ஆகியவற்றின் பிரக்ஞை இல்லாதவன். நாவல் என்ற சொல்லுக்கே புதுமை என்று பொருள். ஒரு நாவலை நாம் படிக்கும்போது, உண்மையிலேயே அது புதுமையானது தானா என்ற கேள்விக்குச் சரிவர அது பதில் சொல்ல வேண்டும். நேற்று வரையிலும் வெளிவந்திருக்கும் நாவல்களின் சொச்சம், நிழல்கள், தோரணை கள், நேற்றையப் பழமையின் தூசி அதில் படிந்து கிடக்கும் என்றால் அது படைப்பு அல்ல. புதுமை அல்ல; பழமை. நாவல் பிறக்கும்போது புதுமையாகப் பிறக்கிறது. காலத்தில் வயதாக மறுத்து இளமையைத் தக்கவைத்துக் கொள்கி றது.
*
நாவல் கதை அல்ல. வாழ்க்கையைப் பற்றிய விமர்சனம். விமர்சகனின் விமர் சனம் அல்ல; கலைஞனின் விமர்சனம்.விமர்சகனின் விமர்சனம் வாழ்க்கை யின் ஒரு பகுதியை, ஒரு நாவலை, ஒரு ஓவியத்தை இசையின் ஒரு தொகு ப்பை, சிற்பங்களின் சில ஆக்க ங்களைப் பற்றிப் பேசுகிறது. கலைஞனின் விமர்சனம் வாழ்க்கையின் முழுமையை கணக்கிலெடுத்துக் கொள்கிறது. சொல்லப் பட் டுத் தேய்ந்து, பழமையாகிப் போன உண்மைகளை உதறிவிட்டு வாழ்க்கையின் புறக்கோலத்தில் தெருநாய் போல் புரள்வதை வெறுத்துச் சார ங்களைத் தேடிக்கொண்டு செல்கிறது. காட்சிகளும் கோலங்களும் நிறையவே இருக்கின்றன எல்லா நாவல்களி லும். ஆனால் அந்தக் காட்சிகளும் கோலங்க ளும் நாவலாசிரியருக்கே உரித்தான பார்வையைச் சார்ந்து தேர்வு செய்யப் படவில் லை என்றால் அந்த நாவலாசிரியன் பிரக்ஞையற்ற பிரதிபலிப்பா ளன். நம் மொழியில் நாம் நாவலாசிரியர் என்று கூறும் பலரும் பிரக்ஞையற்ற பிரதிபலிப்பாளர்கள்தான். அவர்கள் படைக்கவில்லை; பழக்கத்தால் மாதிரிகளை ஜோடனை செய்கிறார்கள். ஒன்று கனவுகள் சார்ந்து அந்தக் கோலங்கள் ஜோ டனை செய்யப்பட்டிருக்கும். அல்லது யதார்த்தங்கள் சார்ந்து அந்தக் காட்சிகள் பிரதி பலிக்கப்பட்டிருக்கும். கலைஞனோ யதார்த்தத்தை ஊடுருவிப் புதிய உண்மைகளைத் தொகுத்துக்கொண்டுபோகிறான். நாவலாசிரி யனின் புதிய உண்மைகளில் நம் மனம் விரிவுரைகளைத் தழுவுகிறது. அப்போது வாசகன், தன்னால் எளிதில் விவரித்துக் கூற முடியாத பேருவகை அடைகிறான்.
*
நாவலாசிரியன் தொகுக்கும் உண்மையின் துகள்களில் அநேகம் நாம் அறிந்த வையே. ஆனால் நாம் அவற்றை அறிந்திருக்கி றோம் என்பதை அறியாமல் இருக்கிறோம். நாம் அறிந்து அது பற்றிய பிரக்ஞையில்லாமல் இருப்பவற்றை நம் பிரக்ஞை நிலை க்குக் கொண்டுவருகிறான் கலைஞன். நம் மனதில் நம் மால் எடுக்கப்பட்டுக் கழுவப்படாமல் கிடக்கும் புகைப் படங்களின் இருள் தொகுப்பை கலைஞன் கழுவி வெளிச்சத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகி றான். இதன் மூலம் நம்மை அறிந்துகொள்ளவும் கலைஞன் துணை செய்கி றான்.
*
நாவலைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகன் பெரிய நாவல்களை அவசியம் படிக்க வேண்டும். நாவல்கள் பல கோடி. பெரிய நாவல்கள் ஒருசில. தமிழ் மட்டுமே அறிந்திருக்கும் வாசகன்கூட ஐந்தாறு பெரிய நாவல்களைத் தமிழ் மொழிபெயர்ப்புக ளில் இன்று படித்துவிட முடியும். இந்த நாவல்கள் அந்த வாசகனுக்கு உணர்த்தும் பேரனுபவத்தை எவ்வளவுதான் விரித்துச் சொன்னாலும் என்னால் உருவாக்க முடியாது. அனுபவங்களுக்கும் கருத்துக ளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது.
*** ***
ஒரு சிறுகதை எவ்வாறெல்லாம் அமைந்திருக்க வேண்டும்?
*
படைப்புருவங்கள் சார்ந்த இலக்கணங்கள் வளர்ச்சியை முடக்கக் கூடியவை. உருவங்கள் சார்ந்த உணர்வுகளே சிறந்த படைப் பின் கட்டுமானத்தை தீர்மானிக்கின்றன. இலக்கணம் காலத்தினால் இறுகக்கூடியது. உணர்வுகள் காலத்திற்கேற்ப மாறக்கூடியவை.
*
சிறுகதை என்பது வாழ்க்கையில் ஒரு கீற்று. வாழ்க்கை என்ற பெரும் நீர்த் தேக்கத்திலிருந்து பீறிட்டு வெளியே வரும் சிற்றோடை. அதில் வாழ்க்கை யைப் பிரதிப்பலிக்கும் பரப்பு குறைவு. அனுபவ சாரங்களின் ஆழம் மிக அதிகம்.
*
காலந்தோறும் சிறுகதைகள் இங்கும் பிற மொழிகளிலும் மாறிக் கொண்டிருக் கின்றன. ஆனால் இந்த மாற்றங்களிலும் மாறாமல் இருக்கும் அவற்றின் குணங்கள்தான் சிறுகதை வடிவத்தைத் தீர்மானிக்கின்றன. அவை...
*
1. ஒற்றை இழை முறுகி வரும் வீச்சு.
2. புதிய கோணத்தின் மூலம் ஒரு புதிய பரிமாணம் வெளிப்படுதல்.
3. நினைவில் தங்கி நிற்கும் அதன் ஆற்றல்.
4. கதை முடிந்த இடத்தில் அனுபவம் முடியாமல் விரிவு பெறும் குணம்.
*
சிறுகதை எழுத விரும்பும் ஆரம்ப எழுத்தாளர் சில ஒழுக்கங்களை மேற் கொள்ள வேண்டும். சிறுகதை எழுதுவது சுலபம் என்ற எண்ணத்தை முதலில் கிள்ளி எறிந்துவிட்டுக் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். தமிழ் மொழி தெரிவதால் சிறு கதை எழுதிவிடலாம் என்பது இல்லை. மொழி அறிவு வேறு, படைப்பு மொழி வேறு.
*
உலகத் தரத்திற்கு ஈடான கதைகள் தமிழில் உள்ளன. புதுமைப்பித்தன, மௌனி, பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், கு.அழகிரி சாமி, தி.ஜானகி ராமன் போன்றவர்கள் மிகச் சிறந்த சிறுகதைகளை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களுடைய சிறந்த சிறுகதை களை மீண்டும் படிப்பதைப் போன்ற பயிற்சி வேறு எதுவும் கிடையாது.
*
சிறந்த சிறுகதைகள் தரும் அனுபத்திற்குள் திளைக்கும்போது சிறுகதை சார்ந்த பிரக்ஞையை மனம் உணரும். இந்த உணர்வுதான் படைப்பிற்கு ஆதாரம்.
*** ***
இலக்கியத்தின் தரத்தை அளவிடும் அளவுகோல் எது?
*
இலக்கியத்தின் தரத்தை அளவிடும் அளவுகோலை மனமயக்கங்கள் இன்றி ஒரு வாசகன் உருவாக்கிக் கொள்வது சற்றுக் கடின மானது. அவன் பெரிய படைப்புகளை ஆழ்ந்து கற்பதின் மூலம் பேரனுபவங்களைப் பெற வேண்டும். இவ்வனுபவங்களின் சாராம்சம் மற்றொரு புதிய படைப்பின் தரத்தை மதிப்பிட உதவுகிறது.
*
சிறந்த படைப்புகளுக்கு ஒரு சில குணங்கள் உள்ளன. அவை தோன்றிய காலங்களிலும் படிக்கப்படுகின்றன. பின்வரும் காலங்களிலும் படிக்கப் படுகி ன்றன. கால மாற்றத்தினால் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. புறக்கோலங்கள் மாறுகின்றன. பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. இவ்வாறு மாறிவரும் கோலங்கள் ஒருபுறம் இருக்க, மனிதனின் அடிப்படைக் குணங்கள் பெரிய அளவில் மாற்றம் கொள்ளாமல் இருக்கின்றன. பெரிய படைப்புகள் அவை தோன்றிய காலங்களின் புறகோலங்களைத் தத்ரூபமாகச் சித்தரிக் கின்றன என்றாலும் அவற்றின் உயிர், மாறிவரும் கோலங்களில் சிக்கிக் கிடக்கவில்லை. மனித வாழ்க்கை யின் அடிப்படையையே அவை ஊடுருவுகி ன்றன. இந்த ஊடுருவல் தரும் உண்மை உணர்வையே ஆழம் என்கிறோம்.
*
ஒரு சிறந்த படைப்பை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை படிக்க முடியும். முதல் வாசிப்பில் பெறாத அர்த்தங்களை மறு வாசிப்பில் பெற முடியும். ஒரு சிறந்த படைப்பை ஒரு வாசகன் தன் இளமைப் பருவத்தில் படிக்கும் போது அது தரும் அனுபவம் ஒன்று. அவனே தன் முதுமைப் பருவத்தில் அதைப் படிக் கும்போது பெறும் அனுபவம் மற்றொன்று. ஒரு சிறந்த படைப்பு பல முகங் கள் கொண்டது.
*
எப்போதும் ஒரு புனைவு ஓர் ஊர் சார்ந்தோ, ஒரு மக்கள் கூட்டம் சார்ந்தோ, ஒரு வாழ்க்கை முறை சார்ந்தோதான் உருவாக முடியும். ஆனால் அது படை ப்பாக நிமிரும்போது ஊரைத் தாண்டியும் மொழியைத் தாண்டியும் குறிப்பிட்ட வாழ்க்கை முறை யைத் தாண்டியும் சுய வாழ்வு கொள்ள வேண்டும். படை ப்புத் தோன்றிய காலம், இடம், வாழ்க்கை முறை இவற்றுடன் நேர்த் தொடர்பு இல்லாத ஒரு வாசகனும் அப்படைப்பின் மூலம் அணுபவம் பெற வேண்டும். அப்போதுதான் படைப்பு பொதுமை பெறுகிறது. பொதுமை பெற்று மனித மன ங்களைப் பாதிக்கும் ஆற்றலையே கலைத்திறன் என்கிறோம்.
*
வாழ்க்கையின் போதாமை சார்ந்த துக்கம் ஒரு படைப்பில் வெளிப்படையா கவோ, மறைந்தோ ஊடுருவி இருக்கும். மனித வாழ் க்கையின் செம்மை சார் ந்த ஏக்கங்களை கொண்டவன் படைப்பாளி. மனிதனை முன்னிலைப்படுத்தி மனித வாழ்க்கையை மேன் மைப்படுத்துவது பற்றிய விசாரணைகள் கொண் டவன் அவன். இந்த விசாரணைக் குணம்தான் படைப்பின் மீது நம்மை ஈர்ப் புக்கொள்ள வைக்கிறது. படைப்பில் வெளிப்படும் மொழி முக்கியமானது. பொதுமொழியின் பழமையையும், பயன்பாட்டில் தேய் ந்துபோன அதன் சரிவை யும், தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் நிகழ்ந்த கூர் மழுங்கலையும் ஒரு படைப்பு நிமிர்த்தி மொழி யை மீண்டும் நுட்பத்தின் தளத்தில் புத்தாக்கம் செய்கிறது. படைப்பின் சகல கூறுகளும் புதுமையாக இருப்பதாலேயே அதை படைப்பு என்கிறோம்.
*
பெரிய படைப்புகளைப் படித்து அனுபவம் பெறாமலேயே விமர்சனப் புத்தகங் கள் மூலம் தரத்தை விளக்கும் சொற்களை மனப் பாடம் செய்து கொள்ள லாம். இந்த மனப்பாடம் புதிய படைப்பை மதிப்பிட உதவாது. வாசகன் தன் வாசிப்பின் மூலம் அனுப வம் பெற வேண்டும். அவனுடைய அனுபவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன இலக்கியத்தின் அரிய குணங்கள்.
*
ஒரு நல்ல விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்?
*
ஒரு நல்ல விமர்சனம் நடுநிலையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுதான் அடிப்படை. நடுநிலையில் நிற்க வேண்டும் என்று சொல்வது சுலபம். பின்பற் றுவது கடினம். ஆகவே ஒரு விமர்சனம் நடுநிலையில் நிற்பதற்கான ஆகக் கூடிய முயற்சியை மேற் கொண்டதாகவேனும் இருக்க வேண்டும் என்று என்னளவில் நான் அளவுகோல் கொண்டிருக்கிறேன். இந்த அளவுகோல்படி தேறுகின்றவைகூட மிகக் கொஞ்சம். அதிகமும் விருப்பு வெறுப்புகள், கோபதா பங்கள்.
*
கவிதை, சிறுகதை, நாவல், கதை, இலக்கிய விமர்சனம் என்று படைப்பில் பல வகைகள். இதற்கு மேல் ஆராய்ச்சி, அறிவியல் நூல்கள். விமர்சகனுக்குத் தான் மதிப்பிடும் நூலின் வகை பற்றி ஆழ்ந்த அறிவு இருக்க வேண்டும். படைப்பை மதிப்பிட அறிவு க்குமேல் அனுபவமும், கலைப் பார்வையும், உண்மை உணர்ச் சியும் இருக்க வேண்டும். ஒரு துறை சார்ந்த தேர்ச்சியை வைத் துக் கொண்டு பிறிதொரு துறை சார்ந்த நூலை மதிப்பிட முடியாது. பயிற்சியின்மை, பயிற்சி யற்றவர்களுக்குத் தெரியாது. பயிற்சி பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.
*
விமர்சகன் மனித வாழ்க்கையைப் பற்றி ஆழமான சிந்தனைகள் கொண்டவன். ஆகவே வேடிக்கைகளின் பல உருவங்களையும் ஒதுக்கி விட்டுத் தீவிரமான படைப்புகள் பற்றி மட்டுமே பேசுகிறான். படைப்பாளி, தன் வாழ்க்கைக் கண் ணோட்டத்தைத் தன் அனுபவ சாரங்களை முன் வைத்து உணர்த்துகின்றான் என்றால், விமர்சகன், படைப்பை முன் வைத்துத் தன் வாழ்க்கைக் கண்ணோ ட்டத்தை வெளிப்படுத்துகிறான். மனிதனை அடிப்படைச் சக்தியாக ஏற்றுத்தான் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த முடியும். அதனால் படைப்பாளியும் சரி, விமர்சகனும் சரி மனிதனின் செயல்பாடுகள் குறித்தும், அவனது அக புற உலகங்கள் குறித்தும் ஆழ்ந்த கவலை கொண்டவர்கள்.
*
இக்குணங்கள் கொண்ட விமர்சகன் தமிழில் இன்று வரையிலும் தோன்ற வில்லை, நாளையே அவன் தோன்றக்கூடாது என்பதும் இல்லை.
*** *** ***
satajdeen@gmail.com

Sunday, November 02, 2008

காற்றுக்காலம். / உமா மகேஸ்வரி

காற்றுக்காலம்.
-----------------------
- உமா மகேஸ்வரி


உமா மகேஸ்வரி! தமிழ் இலக்கியத்தில் கடந்த இருபத்தி ஐந்து காலமாக அறியப்படும் கீர்த்திக் கொண்ட பெயர். இவரது இலக்கிய சாதனைகளை விலாவாரியாக சொல்லனும் என்றால்... பெரிய ஆய்வு கட்டுரையே எழுதனும். சுருக்கமாகச் சொன்னால் நவீன தமிழ் இலக்கியத்தில் இன்னொரு அம்பை! என்றாலும் அம்பைக்கும் கைவராதா கவிதை வரிகள் இவருக்கு சாதாரணம்! இவர் கவிதையால் அறிமுகமானவர் என்பதும், இவரது கவிதைகள் புதுக் கவி தைப் பரப்பில் பிரசித்தியம் கொண்டவை என்ப தும் அறிந்த ஒன்று! இவரது சிறு கதைகளும், நாவலும் அப்படிதான்! உன்னதம் சார்ந்தது! சிறுகதைகளிலும், நாவலிலும் கவிதை நடையொத்த நடையிலான இவரது அளுமை தமிழுக்குப் புதிது! கவிதையாலேயே புள்ளி வைத்து கோலம் போடும் இவரது நேர்த்தி வாசிப்பவர்களை மலைக்க வைக்கக் கூடியது.
*
சமீபத்தில் அவரது 'காற்றுக்காலம்' என்கிற சிறு கதையை 'அம்ருதா' என்கிற இலக்கிய இதழில் வாசித்தேன். படித்ததில் பிடித்த தான இந்த சிறு கதையை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
- தாஜ்
***

ஊரைப் பற்றிய கவனங்கள் ஒரு புள்ளியில் தெறித்துச் சிதறிவிட தன் கனவு களோடு நடந்தாள் அவள். ஒரு திருவிழாவிற்கான வையாக இருந்தன அவளு டைய ஆடையலங்காரங்கள். ஊதா நிறப்புடவை, காதில் ஆடும் அதே நிறக்கல் பதித்த ஜிமிக்கிகள். கழுத்து வளைவின் மத்தியில் ஒரேயொரு ஊதாக் கல் ஜொலித்தது. ஏதோ ஒரு பண்டிகைக்குப் போவது போல் இல்லை. காதல னைச் சந்திக்கும் உவகையுடனா? காற்றில் குளிர் அடர்ந்திருந்தது. நேரக் கண க்குகளை எப்போதோ தப்பவிட்டிருந்தது மனம். வீட்டின் சுவர்களைத் தவிர வேறெதையும் அறியாதவளுக்கு வெளி, அச்சமும் உற்சாகமும் தருவதாயிரு ந்தது ஒரே சமயத்தில்.
*
அருகிலேயே இணைந்து இழைந்தபடி அசைந்து வந்தது காற்று, வீட்டில் எந்த ஜன்னல்களிலும் அதற்கான அனுமதி மறுக்கப் பட்டே இருந்தது. அதன் தீண் டலில் தன் எச்சரிக்கையுணர்வுகளை எளிதாக நழுவவிட்டாள். இப்போது அது மிக மிகச் சுலப மாக அவளை மோதித் தழுவியது. சுதந்திரமான கலைப்புக்க ளும், தீண்டல்களும், விளையாட்டுக்களும், கால்களைப் பின்ன வைத்தது. திடீ ரென்று தலை மேல் மலர் கொட்டியது. உடைகளை உப்பச் செய்து, அவளுள் ஆடியது. கூந்தல் இழைகள் கலைந்து சிதற, முந்தானை அவளுடைய தற்ற தாகிக் காற்றின் பாய்மரமாக, அவள் ஆர்வத்துடன் அதன் விரல்களைப் பற்றிக் கொண்டாள்.
*
"என் வழியும், பயணமும் தனியானது. மிகமிகத் தனி, பசிய நிசப்தத்தில் என் னைத் தொடந்து துணை தருவது யார்? மறுபக்கம் நகர்கிறேன் அவன் இருப் பைத் தவிர்க்க. சங்கடம் மிகுந்து, ஆனால் என்னால் அவனிடமிருந்து தப்பிக் கவோ, அவன் ஓயாத பேச்சை ரசிக்காமலிருக்கவோ முடியவில்லை. வாளால் நிலம் கீறி, புழுதி புழுதி கிளப்புகிறான். நான் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லி லும் அவனுடைய உரத்த குரல் எழுகிறது. என் சுயத்தின் மறுபாதியா அவனெ ன்று வியக்கிறேன்"
*
மனம் ஏதேதோ நினைக்க மதியம் கனியும் பொழுதில் ஒரு தோப்பின் ஊடே உலவியபடி, அவளோடு சலசலத்து உரையாடிக் கொண்டிருந்த காற்று பசும் கிளைகளை அதட்டியபடி, சட்டென்று திரும்பி அவளை உற்றுக் கவனித்து, சரளமாகப் பழகிய குழந்தை போல் அது இரு கைகளையும் விரித்தபடி அவ ளை நோக்கி ஓடி வந்தது. சிற்றிளம் தென்றல், இரவில் பெய்திருந்த மழையின் குளிர்மையை ஏந்திக் கொண்டு வருகிறது அது. நதியின் இளம் சிவப்பு நிற நீர் நுரைத்துப் பாய்ந்தோடியதும் கரை யோரப் புற்களில் பாதம் படும்போது குறு குறு வென்றிருந்தது. வரப்பில் கால் வழுக்கும் படியாகத் தள்ளின, காற்றின் வலுத்த கரங்கள். மரங்களில் வழக்கமாகப் பாடும் பறவைகள் இன்று காற் றையே தம் குரலாக வரித்துக் கொண்டன. தடுமாறி விழுந்த அவளைத் தாங் கிப் பிடித்ததும் சிறுகாற்றின் கைகள்தான்.
*
காற்று, இது அவளுடைய காற்று. காலங்காலமாய் தேடித் தவித்து, வெறுமை யுற்று புழுங்கி, ஏங்கிப் பின் கண்டடைந்த காற்று. அது இப்பொழுது அவளுட னேயே நடைபயில்கிறது. இமைகளை முத்தமிடுகிறது. நினைப்புகளில் இனி மையேற்றுகிறது. அரு மையான சுழல்நடனம் வானின் விரிவில் ஆரம்பிக் கிறது. மீட்டப்பட்ட அவளுடன் அதிர்கிறது. தந்திவாத்தியம் போல் இல்லை, துளைகள் நிறைந்து குழலாக. வானம் படாரென்று திறக்க வெறிச் சிரிப்போடு நிலம் கடக்கின்றது காற்றின் ஆகிருதி. நீந்தித் திளைக்கின்றன வண்ணத்துப் பூச்சிகள். முல்லைகளும், மல்லிகைகளும் அரும்பாக அசைகின்றன, இதழ்க ளின் உதிர்வில் வருந் தாமல். இலைகளிலும், தளிர்களிலும் சருகுகளிலும் அளவற்ற பேரானந்தம் பரவுகிறது.
*
நதியின் கரையோரமாகவே சென்று குன்றுகளின் தொடரை நோக்கி நடந்தாள். புல் படர்ந்து, தாழும் புதர்கள் அடர்ந்த சந்தன மணல் பரவிய கரை. நீண்ட கோரைகளில் அவள் புடவை நுனி சிக்கி இழுபடச் சலிப்போடு, அதைக் குனி ந்து விலக்கினாள். ஆற்றோரப் பாறைகளில் பச்சை வெல்வட் போல் படிந்தி ருந்த பாசி பின் மதியத்தில் மஞ்சளொளியில் மிணு மிணுத்தது.நெருக்க மாக மரங்கள் நிற்பதால், பச்சை இருள் கவிந்த பாதை. அவ்வப்போது தட்டுப்படும் பாறை முகடுகள். இடதுபக்கம் காணக் கூடிய இசை போன்று பொன்னாக நெளிந்தோடும் நதி. ஒரு கணம் நின்று அதையே கவனித்தாள். பாறைகளில் மோதி, காற் றோடு இசைந்து ஆற்றின் ஓசை பெருக, அதுவோ தான் அதிநிசப் தமாக இருப்பது போல் பாவனை செய்தது. சாயங்காலத்தின் மங்கலொளியில் குமிழிடும் நீர்ப்பரப்பு மிக வசிகரமாய் இருந்தது. கட்புலனாகாத தோழமை போல் காற்று நதியலைகள் மீதும், அவள் உடலின் சரிவுகளிலும் குழைந்தா டியது.
*
பாறை மேட்டைக் கண்டதும் நின்றாள். அதில் ஏற முடியும் என்று தோன்றவி ல்லை. ஆனால் பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்ற அதில் கல் மடிப்புக்கள், படிகளாக அவளை வரவேற்றன. தங்களின் தீங்கின்மையைச் சொல்லின. அவள் அவற்றில் ஏறினாள். சிறிய முகட்டைத் தொட்டு மறுபுறமாகச் சரிந்து இறங்கியதும் வியப்பில் அவள் விழிகள் விரிந்தன. பசுமை படர்ந்த பள்ளம் அங்கே பரவியிருந்தது. அபாயமற்ற ஆழமின்மையோடு. பசுமை, பசுமை. பசு மையே எங்கெங்கும். பல வர்ணப் பூக் கள் அங்கே மலர்ந்து கிடந்தன. அதைச் சூழவும் சிறு புதர்களும், குற்று மரங்களும் வரிசைகட்டி வளைந்து நின்றன. ஒரு அந்தரங்கமான அறைபோல அல்ல, மிருதுவான மடி போல. இல்லை, சுகம் கிளர்த்தும் மஞ்சம் போன்று. பனி துளிர்த்த புல் நுனிகளில், பாதம் கூட நடந்தபோது அவள் எதிர்பாராத கணமொன்றில் காற்று அவளை நிற்கவொ ட்டாமல் தள்ளியது. தவறி விழுந்திருந்தால் சிறு பாறைகளில் மோதித் தலை சிதறியிருக்கும். அல்லது, மரங்கள் சூழ சிறு தொட்டில் போலிருக்கும் அந்த வளை குழியின் பாதுகாப்பிலிருந்து ஆபத்தான ஆழ் பள்ளத்தாக்கின் மர்மம் அவளை இழுத்துக் கொண்டிருக்கும். தலை சுழல புல்தரையில் சரிந்தாள். அவள் அச்சங்களைக் கேலி செய்த காற்று, மறு நிமிடமே அவளைத் தேற்றித் திடப்படுத்தியது.
*
காட்டின் மென் பச்சைத் தளிர்கள் நீலவான் விளிம்பில் வரைந்த சித்திரம் மிக நேர்த்தியாக இருந்தது. அவளுடைய கரிய விழிகள் மேகத்தன்மை கொண்டன. பறவைகள் கூட்டமாகக் கூவின. மிருதுவான தென்றலின் வருடல் மலரிதழ் மேலேபடுவது போல. காற்றின் அலைகள் தன் உடலையும், மனதையும் சுழ ற்றி உறக்கமோ, மயக்கமோ போன்ற ஒன்றில் கிறங்க வைப்பதை உணர்ந் தாள். மலர்களின் அசைவு. தாழ்வாகப் பறந்தலையும் சிட்டுகள். சீராக ஓடும் தன் மூச்சு. "இத்தனையும் நிகழ்வது இந்த இனிய காற்று; உயிர் ஆதாரமான வாயு" என்றெண்ணினாள். எது உடல், உள்ளம், புலன், புத்தி, உணர்வுகள் இவற் றிக்கு அணுகூலமானதோ, அவற்றைப் பேணுகிறதோ, உதவுகிறதோ, அமைதிய ளிக்கிறதோ அது "ப்ரியமானது" என்று கூறப்படுகிறது. எது ப்ரதிகூலமோ அழி கிறதோ, எதிரானதோ அது "அப்ரிய"மானது - என்று முணுமுணுத்தது காற்று. அதைக் காண, தீண்ட, தழுவ விரும்பினாள். அதுவோ உலகம் முழுவதையுமே இயக்கிக்கொண்டிருந்தது, உருவமேயற்று. மாபெரும் சக்தியாக. அவள் மனம் தவிக்கையிலேயே.
*
"காற்று, நெருப்பு, நீர், நிலம் இவற்றில் எங்கும் ஆகாயம் சமமாக நிறைந்திருந் தாலும், அது அவற்றில் ஒட்டாதிருக்கிறது" என்று அது சொல்லி முடித்து அவள் கூந்தலைச் செல்லமாகக் கலைத்தது. இல்லை, அது வனம் முழுவதை யுமே ஊடுருவியது, மரக்கிளைகளை, புதர்களை, மலர்களை, புல்நுனிகளை, நதியை அனைத்தையும் தீண்டி விளையாடியது. அவளோ காற்று தனதேயாக வேண்டும் என்று விரும்பினாள்.
*
அது உணரத்தக்க ஒன்றாக நிறைத்திருந்தது. நுழையவியலாத இடமேயற்று அனைத்தையும் தனது ஆதிக்கத்துக்குள்ளாக்கி, ஆனால் பார்வைக்குள் வராமல்.
*
"எனக்கு உன்னைப் பார்க்க வேண்டுமே" அவள் மனம் ஏங்கிக் கேட்டது.
*
"பார்ப்பது, கேட்பது, முகர்வது, சுவைப்பது, எடுப்பது, விடுவது, பேசுவது, போவது, வருவது இவையும், சுவாசிப்பது, மூச்சிழ ப்பது என்ற உயிரின் சகல செயல்க ளும் நான்தான் நீ என்னை அவற்றில் காணலாம்" காற்றின் தத்துவம் அவ ளைப் பரிதவிக்க வைத்தது. அதன் நுண்ணிய அசைவுகள் மீது அவள் காதலு ற்றாள். அவள் ப்ரியத்தை வெளிப்படுத்து முன்னே அறிந்தாற்போல் "நானும் உன்னுடன்" என்றபடியே அவள் பாத மத்தியைத் தொட்டு, காது மடல்களை முத்தமிட்டு, இதழ்களைப் பருகியது காற்று. தன் உடல் மீது ஒரு இசை போல் அது நடனமிடுவதைக் கவனித்தாள்.
*
"புலன்கள், மனம், புத்தி இவையெல்லாம் காமத்தின் இருப்பிடம். இதே காமம் தான் ஞானத்தையும், நிம்மதியையும் பறித்து உயிரை, மோகத்துக்கு உட்படுகி றது." அவளுக்குள் எழுந்த எச்சரிக்கும் குரலைப் பற்றித் தொடர இயலாதவளா னாள். அவள் மனம் அதிர அந்தக் காற்று இப்போது புயலாக ஆவேசத்துடன் அவளைச் சுற்றிக் கொண்டது. அவளைச் சுழற்றிச் சிதறடிக்கையிலேயே.
*
"நீதான், நீ மட்டும்தான், நீயேதான். இப்போது இந்தக்கணம் உன்னில் மட்டும் தான் நான் நிரம்பியிருக்கிறேன்" என்று அவனை அணைத்து ஆக்ரமித்தது. "இனி எப்போதுமேதான்" என்று அவள் தேகத்தின் மீது அனலும், புயலும் மூட்டி வார்த்தது. அவள் உடல் தக்கையாக மிதக்க, நரம்புகள் முறுக்கிப் படீரென்று விடுபட்டன. ஒரு கணம். ஒரேயொரு கணம் தான். அவளுடல் தன் எடையை யும், பலத்தையும், நினைவுகளையும் இழந்துபின் மீண்டபோது, சூரியன் ஒரு அணைந்த தீ உருளை போல் மேற்கில் சரியக் கண்டாள். சட்டென்று ஒரு புழுக்கம் அவளை அழுத்தியது. ஒளியின் தயக்கம், உறைந்த நதி, அச்சுறுத்தும் மரங்களின் அசைவின்மை. புல் நுனிகள்கூட நீர்சலனமாய் இருந்தன. அவன் சுவாசக் குழலிலிருந்து அந்த மெல்லிழை அறுபட்டு விட்டது. ஒருவராலும் நகர்த்தமுடியாத பாறைகள் அவளைப்பாராமாக அழுத்தின. காடும் நதிக்கரை யும் மலையடிவாராமும், பிரபஞ்சமும், தன் உடலும் காற்றற்றதாகி விட்டதாக உணர்ந்தாள். அதே சமயம் தன் அடிவயிற்றில் மட்டும் ஒரு சிறிய வாயுப் புள்ளி சுழல்வதில் அஞ்சினாள். பசுமை மெல்ல மங்கிக் காடு கருமை கொள்ள த்துவங்கியது. ஒரு சாம்பல் படலத்தைப் போர்த்தியது போல. மரங்களின் மௌனம். பறவைகளின் நிசப்தம். " எப்படி வீடு சேரப் போகிறேன்" எனும் திகி லை ஏற்படுத்தின எல்லாவற்றின் மோனமும்.
*
"நான் போக வேண்டும், ஆனால் எப்படியென்று தெரியவில்லை" அவள் பரித வித்த போது, கருணை மிக்க காற்றின் பேரலை ஒன்று அவளை ஒரு நலிந்த தளிர் போல் தூக்கியெடுத்து, மிதக்க வைத்து வீட்டு மொட்டை மாடியின் செந் தளத்தில் விசிறி எறிந்து விட்டுப்போனது.
*
சிறு புழுக்கம் கூடிய இரவில் பால்கனி மூலையில் உட்கார்ந்திருந்தாள். கைக ளைக் கன்னத்தில் ஊன்றி, வெந்து புழுங்கும் காற் றின் செய்தியை அறிய முயன்றாள். அவளுள் நிலை கொண்ட சிறிய அணு வாயுப் புள்ளியாகி, திரவ த்தன்னையுற்று, திடமாகி உயிர் மூச்சுக்கான வழிகளை அடைத்தது.
*
எல்லாச் சன்னல்களும் திறந்த வீட்டில் வெம்மையன்றி வேறெதுவும் இல் லை, குமட்டலும், ஒவ்வாமையும் ஏற்பட்டது எதன் மீதும், "உன்னைக் கருக் கொண்டிருக்கிறேன்" என உறைந்த காற்றிடம் சொன்னாள். அதுவோ அவளு க்கு எட்டாத வெளியில் உலவிக் கொண்டிருந்தது. மரங்களின் ஊடே, மணல் பரப்புகளில், ஆற்றின் நெளிவில், மேகங்களுக்கு மத்தியில்... அவள் அழை ப்பு அதற்கு எட்டவே இல்லை. வியர்த்தமாக உடைந்தன அவளுடைய புலம்பல் கள். "கரு, கரு, காற்றே, உனது கரு" என்ற அவள் கதறல்களுக்கு அலட்சியச் சிரிப்புகளே பதிலாகக் கிடைத்தன, "இதென்ன மிரட்டலா? பேதை நீ. உன் உடல் அநித்ய மான உருவத்தோடிருக்கிறது. நான் நித்யமானவன். உருவோ, அழிவோ அற்றவன். என்னைக் கருவுறவோ, பெறவோ, இழுக்க வோ உன்னால் எப்படி முடியும்?" என்று அதன் குரல் தொலைதூர மலைகளில் எதிரொலித்தது. அவள் பதிலற்று நின்றாள். தன் கருப்பைக்குள், மார்பில், கையில் கனக்கும் கருவை அல்லது, சிசுவைத் தனித்துச் சுமந்து பீதியோடு மூச்சிளைத்தாள்.
*
"உலகெலாம் நிறைந்த நீ ஒரு இழை, ஒரேயோரு இழை எனக்குள் நுழைந்து, என் சுமைகள் இளைத்து என்னை உயிர்ப்பிக்க மாட்டாயா?" அவள் புலம்பல் கள் பித்தேறியவையாய் இருந்தன. திண்றும்சுவாசம் முகத்தில் விஷ நீலத் தைப் பாய்ச்சி இருந்தது.
*
"நீ எங்கிருக்கிறய்" மெலித்த குரலிலான அவள் கெஞ்சல் வெளியில் கரைந் தது. "எப்போது வருவாய்?"
*
"நான் எங்கும் இருக்கிறேன். உன்னுள்ளேயே உலவுகிறேன். உன்னுள், இதனுள், அதனுள், எதனுள்ளும், எல்லாவற்றிலும் தேடிப்பார்" வாயுபகவானின் மதம் விரையக் கண்டாள். அந்தப் பதில் தன் பிரமையோயெனக் கலங்கினாள்.
*
படுக்கையில் சரிந்தபோது, அறையின் உத்திரம் பெயர்ந்து, நொறுங்கி அவள் மீது விழுந்து, துளிக் காற்றாவது நுழையும் என்ற நம்பிக்கையைச் சிதைத்தது. அவள் உயிர் நசுங்கும் அபாயத்திற்கான அறிகுறிகள் பெருகின. கனத்த கற்கள் அவளை அடையா ளமற்று உடைத்தாலும் அவள் மூச்சுப் பாதையை மறித்த அந்தக் கருக்குமிழ் மட்டும் கவலைபடவேயில்லை. அறைவாயிலிலிருந்து புறப்பட்ட குருதித் தடயங்கள் வெளியெங்கும் பரவின, அவற்றை உலர்த்தி அழிக்கும் திறமும், அவளுக்கு உயிர் தரும் திடமும் கொண்ட காற்று எங்கிரு ந்தும் கசியவில்லை. கட்டிலிலிருந்து பல்லாயிரம் அடிகள் தொலை தூரத்திலி ருந்து ஜன்னலைத் திறக்க வேண்டுமானால் தன் மீது குவிந்த இடிப்பாடுகளை விலக்க வேண்டும். காற்றோ தன் உதடு குவித்து ஊதினாலே அவை பறந்து போகும். மிக உறுதியானவை என்று கற்பிதம் செய்யப்பட்ட ஜன்னல் கதவுகள் அதன் வலிமையான கரங்களில் ஒன்று மற்று நொறுங்கும். ஜன்னலின் மர விளிம்புகளை காற்று பெயர்க்கப் போகும் கணத்திற்காக, அறையில் நிறையப் போகும் தென் றலின் ஆசுவாசத்திற்காக காத்திருக்கிறாள் மூச்சிரைத்தபடி. எத்தனையோ நாட்கள், மாதங்கள், யுகங்கள், நரம்புகளில் ஊசலாடி உதிர விழை யும் உயிரின் துளியை நடுங்கும் பார்வையால் பற்றிக்கொண்டு... சுடர்ந்து, கொழுந்து விட்டு, ஆகுதியாய்ப் பெருகு கிறது அவள் காத்திருப்பு. ஜன்னல் மூடியிருக்கிறது இறுக்கமாய்! இழுக்க முடியாத கடினத் தன்மையோடு.
*********

நன்றி: அம்ருதா / மே 2008
தட்டச்சு: தாஜ்
satajdeen@gmail.com