Monday, July 28, 2008

ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்! - தாஜ்



ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்!
- தாஜ்...
*
"இந்த உலகில் ஒரு இலக்கியவாதிக்கு மிஞ்சப்போவது என்ன தெரியுமா? ஒரு சின்ன உண்மையை எழுதிவிட்ட தாளும், அந்தப் பக்கத்தை உணர்ந்து படிக்கிற வாசகனும்தான்..... அந்த ஒரு பக்கத்தை எழுதுவதற்கு ஒவ்வொரு இலக்கியவாதியும் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருக்கிறது."
- ஆல்பெர் காம்யூ.(நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு இலக்கியவாதி)
*
தமிழின் நவீன இலக்கியப் பரப்பில் சிறுகதை/ நாவல்/ கட்டுரை முதலான ஆக்கங்களை ஆத்மசுத்தியோடு எழுதுபவர்களின் எண்ணிக்கை இன்றைக்கு அருகிக் கொண்டிருக்கிறது. இங்கே கொஞ்சத்திற்கு தலைத் தூக்கிய படைப் பாளிகளும், பெருகிவரும் நவீன புத்தகச் சந்தையை முன்வைத்து எழுதுபவர்களாக ஆகிவிட்டார்கள். எழுதும் வேகம் மட்டுமே இப்பொழுது படைப் பாளிக்குப் போதும் என்றாகிவிட்டது! சந்தையும் அதன் போட்டியும் இன்றைய இலக்கிய ஆக்கங்களின் மேல் ஆதிக்கம் செய்யும் நிலை!
*
நவீன சிறுகதைகள், நவீன நாவல்கள் எழுதுவதற்கான இலக்கண வரம்புகள்(?) குறித்து இந்த சந்தை வியாபாரத்தில் விழுந்த ஒரு சில படைப்பாளிகள் எழுதிக் குவிக்கும் சட்ட திட்டங்கள் கொஞ்சமல்ல. ஆனால், அதெல்லாம் மற்றவர்களுக்காக மட்டும்தான்! தாங்கள் எழுதுகிறபோது அதில் ஒன்றைக் கூட அவர்கள் பரிசீலிப்பதே இல்லை. அவர்கள் எழுதுவதெல்லாம் பாய்ந்தோ டும் தங்களது கற்பனைக் குதிரையின் காலடி சப்தத்தைதான்! மறக்காமல், அதை இலக்கிய ஆக்கம் என்று பின்னாட்களில் சாதிக்கவும் செய்கிறார்கள். இப்படியான 'குணசீலப்' பேர்வழிகளையும் சகித்துக் கொண்டும்தான் தனது முன்னோக்கிய அடிகளை இப்பவும் நம்முடைய நவீன இலக்கியம் அழுந்த/ சீராக வைத்துக் கொண்டிருக்கிறது. சில படைப்பாளிகளின் இத்தகைய அராஜ கத்திற்குப் பின்னாலும் ஆசுவாசம் கொள்ளத் தகுந்த சில நல்ல படைப்புகள் இன்றைக்கும் தமிழில் வரவே செய்கிறது. நமது நவீன இலக்கியத் தாயின் சுரப்பு அப்படி ஒன்றும் வற்றிவிடவில்லை. இப்பொழுது வெளிவந்திருக்கும் ஆபிதீனின் சிறுகதைத் தொகுதியான 'உயிர்த்தலம்' அதற்கு ஓர் சரியான சான்று!
*
இருபத்தி ஏழு வருடங்களுக்கு முன் வெங்கட் சாமிநாதனின் 'யாத்ரா'வில் அவரது 'குழந்தை' குறுநாவல் வந்திருந்ததை, பின்னர் பத்து வருடங்கள் கழித்து கோள்வியுற்ற நான், "யாத்ராவிலா...?" என்று கேட்ட வியப்பை விட, அது வாசிக்க கிடைத்து, வாசித்தபோதான வியப்பு இன்னும் அதிகம்! இன்றைக்கும் கூட அதன் பிசிர் என்னில் உண்டு. அந்தக் குறுநாவலில் பதிவு
செய்யப்பட்டிருந்த அவரது சொந்த வட்டார வழக்கு மொழி என்னை கிளர்ச்சி யூட்ட செய்தது. அதுவரை யாரும் அப்படி ஒரு அழகில், அந்த வட்டார வழக்கை, நம் இலக்கியத்தில் பதிவு செய்ததில்லை.
*
அரபி சொற்களில் சிலவற்றை சந்தனப் பூச்சாக பூசிகொண்டிருந்த அந்த மொழியின் மினு மினுப்பும், கிண்டல் கேலி ததும்பிய அதன் பரிபாஷையும் வாசிப்பவரின் புருவத்தை உயர்த்தவே செய்யும்! அன்றைக்கு நமது நவீன இலக்கியத்தில் 'இந்திரன், சந்திரன்' என்று புகழப்பட்ட எழுத்தாளர்களுக் கெல் லாம் அப்படியொரு வட்டார வழக்கு நம் தமிழ்ப்பரப்பில் இருப்பதை அறிந்திரு ப்பார்களா? என்பதே சந்தேகம்தான். இந்த வட்டார வழக்கு மொழியின் இன் னொரு கிளையாய் கருதத்தகுந்த 'ஓர் வட்டார வழக்கு மொழி'யை (கடைக் கோடி தென்மாவட்ட கடற்கரையோர இஸ்லாமியர்கள் பேசும் வட்டார மொழி) தோப்பில் முகம்மது மீரான், தனது முதல் நாவலான 'கடலோரக் கிராமத்தின் கதை'யில் எழுதியதெல்லாம், ஆபிதீனின் குழந்தைக்குப் பிற்பட்ட
காலக்கட்டத்தில்தான்.
*
உயிர்த்தலம் தொகுப்பில் காணும் பதிமூன்று சிறுகதைகளையும் ஒரு பொது நோக்கில் 'யதார்த்த' கட்டுக்குள் வைத்துப் பார்க்கலாம். என்றாலும், இதன் செய்நேர்த்தியில் அதை மீறும் கூறுகள் உண்டு. சிறுகதை என்கிற பெயரிலான கட்டுரையோ, தகவல் தரும் பத்தியோ, நண்பருக்கான கடிதமோயென ஒரு கணம் யோசிக்க வைக்கிற 'நவீன யதார்த்த'மாக இந்தக் கதைகளை கணிக்
கலாம்! அது பெரிய தவறாக ஆகிவிடாது."இலக்கணங்களை மீறிய ஓர் அமைப்பு அவருடைய கதைகளில் காணக் கிடைக்கின்றது. அதனாலேயே தமிழின் கதைசொல்லலில் ஒரு புது அழகியலை அவை உருவாக்குகின்றன" என்று இந்த தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கிற திரு.கோபால் ராஜாராம் சுட்டுகிறார். எத்தனை சரியானப் பார்வை!!
*
இந்த தொகுப்பில் உள்ள கதைகளில் ஆபிதீன் தன்னையே முன்னிலைப் படுத்தி, தானே கதைச் சொல்லியாகி, படைப்பினூடாக வாழ்வின் நிஜங்களை கூச்ச நாச்சமற்று பதிவாக்கியிருப்பதிலும் / தான் சார்ந்த மத, இன,மொழி, கலாச்சாரங்களின் மீது தயவு தாட்சண்யமற்று விமர்சனங்கள் வைத்திருப் பதிலும் / வாழ்வின் தேவை குறித்து பஞ்சம் பிழைக்கவென்று தஞ்சமான அரபு மண்ணில் அவர் எதிர்கொண்ட அல்லது அவரைப் பாதித்த அத்தனை நிகழ்வு களையும் நிறம் காட்டி, அந்தந்த மக்களை அவரவர்களின் மொழிபேசும் முகங்களோடான பதிவினூடாகவும் / மனதை ரணப்படுத்துகிற சம்பவங்களை அங்கதமாக மாற்றி நம்மை சிரிக்கவைத்தும், பிரச்சனைகளின் உள்ளார்ந்தக் கூற்றை நுட்பமாக உணர வைத்திருக்கிற அழகியல் வித்தை கண்டும் நாம்
யோசிக்கிறபோது, அவரின் ஆக்கங்கள் அவரிடம் எத்தனைப் பெரிய உழை ப்பை பெற்று எழுந்து நிற்கிறது என எண்ணத் தோன்றுகிறது. வாசித்து முடித்து, அவர் எழுப்பியிருக்கும் அந்த பிரமாண்டத்திலிருந்து வெளியேறுவ தென்பதும் மனதளவில் எளிதற்று போய்விடுகிறது!
*
இந்த மனச் சலனத்திற்கு அடிப்படைக் காரணம், அந்த பிரமாண்டம் உண்மை களின் அஸ்த்திவாரத்தில் என்பதில்தான்! இந்த தொகுப்பின் எல்லா கதைகளி லும் அவர் வலிந்து சொல்லியிருக்கிற உண்மை கொஞ்சமல்ல! தன்னைச் சார்ந்த உண்மைகளையும் கூட அப்படித்தான் சொல்லியிருக்கிறார். உண்மை தான் எல்லாவற்றையும்விட வலியது. வாசகனின் சுவைக்கேற்ப கற்பனையின் வித்தை கொண்டு மாய உலகத்தை விதவிதமாக படைத்துக்காட்டலாம். ஆனா ல் உண்மைச் சார்ந்து எழுதுவதென்பது அத்தனை எளிதல்ல. எழுத்திற்காக படைப்பாளி தன்னை கொடுக்கவும் முன்வருகிறபோதுதான் அந்த நிஜத்தின் வாசலே திறக்கும்! வாழ்வின் ஓட்டத்தில் தினம் தினம் நாம் எதிர்கொள்ளும் அசிங்கங்களையும், அபத்தங்களையும், தோல்விகளையும், எதிர்கொள்ளும்
சகமனிதர்களின் கோரங்களையும் பதிவில் ஏற்றுவதற்கு நிச்சயமாக அச்சம ற்ற / முதிர்ந்த மனம் வேண்டும். தவிர, 'எல்லாவற்றையும் ஒன்றெனப் பார்க்கும் மனநிலை' கிட்டினால் ஒழிய உண்மையை பதிவில் ஏற்றுவதென்பது இயலாது. வாசகனை ஒவ்வோர் திருப்பத்திலும் நிறுத்தி வைத்து நீதி சொல்லி, தத்துவார்த்தங்கள் பேசி, வெளிநாட்டு எழுத்தாளர்களின் பெயர்களை இஸ்
டத்திற்குப் புழங்கி, தன் கீர்த்தியை நிலைநாட்டலாம். அதுவும் அலுத்துப்போகும் நாளில், ஆதியில் எவரோ நெய்து வைத்திருக்கிற புராண இதிகாசங்களின் பக்கம்போய், பகுதி பகுதியாய் சூரையாடி புது மோஸ்தரிட்டு சுடச்சுட வாசக னுக்குப் படைத்து பணம் பார்க்கலாம். ஆனால் தான்சார்ந்த நிஜத்தை சொல்ல, எப்போதுமான அவர்களின் வித்தையோ / அவர்களின் அந்தக்
குதிரையோட்டமோ அவர்களுக்கு ஒருபோதும் பயன்படாது.
*
ஆபிதீன், தன்கதைகளில் தன்னையே முன்னிலைப்படுத்தி, கதைச் சொல்லிப் போகிறார் என்றாலும், சில கதைகள் விதிவிலக்காகவும் இருக்கிறது. 'உயித் தலம்' கதையில், முன்னிலைப் படுத்தப்படுபவரும், கதைச் சொல்லியும் அவர் அல்ல. தனது தம்பி என்பதாக ஒருவரை முன்னிலைப்படுத்தி கதையின் சம்பவங்களை நகர்த்துகிறார். இந்த செய் நேர்த்தியினூடே தன்னை அவர்
விமர்சனத்திற்கு உள்ளாக்கிக் கொள்ளும் யுக்தி, இந்தக் கதையில் கவனிக்கத் தக்க ஒன்றாக இருக்கிறது.
*
இந்த கதையின் நாயகன் மூளை வளர்ச்சியற்ற / இயக்கமற்ற / சுயத்தின் நிதா னத்தை முழுவதுமாய் இழந்தவன். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பாரமாக, வயதிற்கேற்ற பருமானத்தோடு வீட்டின் மையக் கூடத்தில் மாட்டப்பட்டு தொங்கும் தொட்டிலில் தன் வாழ்நாளை அறியாமலேயே கழிப்பவன். பெயர் வஹாப். அவனைக் கொண்டு எழும் பிரச்சனைகள்தான் கதை. கதையின்
முத்தாய்பில் 'லௌகீக' சாபு(ஹஜ்ரத்)ஒருவர், ஓர் சந்தர்ப்பத்தில் நாயகனின் வீட்டிற்கு வருகிறார். வஹாபை கண்டவுடன் அவருக்கு மனிதாபிமானமும், உயிர்களிடத்திலான நேயமும் ஒரு சேர பெருக்கெடுத்து விடுகிறது. வஹா பை எடுத்தணைத்து உச்சி முகரா குறையாக அன்பை வழியவிடுகிறார். வீட்டில் உள்ளவர்களிடத்தில் மேலும் வஹாப் குறித்த நம்பிக்கை வார்த்தை களைச் சொல்கிறார். அதோடு அவர் முடித்துக் கொண்டிருக்கலாம். அவனுக்கு இன்னும் சுன்னத் செய்யாததை சுட்டி, மதரீதியான வீம்பில் இறங்குகிறார். இது போதாதோ ஆபிதீனுக்கு! இஸ்லாத்தை முன்வைத்து அவர் செய்யும் கிண்ட லும், விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும் அல்லாஹ்வும் என்பதாக கதை பிரமாதப்படுகிறது! முடிவில், பிரமாதப்படுத்துவதில் ஆபிதீனையும் மிஞ்சுகி
றான் கதையினூடே வஹாப்! சாபு அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடிப்பதென் பது வஹாபின் அந்த முத்திரைத் தனத்தால்தான். எந்த முத்திரைத் தனம்? தொகுப்பை வாங்கிப் படிக்காமலா போய் விடுவீர்கள்?
*
இந்த தொகுப்பில் பதிமூன்று கதைகள் உள்ளன. 'விளக்கக் குறிப்புகள்' மிக அதி கமான, எட்டுப் பக்கங்கள் கொண்டதாக இருப்பதால் அதனை சிறுகதையென கணக்கில் கொண்டுவிட முடியாது! ஆக, பதிமூன்று என்றது சரியே. இந்த பதி மூன்றில் என் பார்வையினூடான முதல் தேர்வென்றால் அது 'ருக்உ' தான்! அந்தத் தொகுப்பில் அதிகப் பக்கங்களை கொண்ட கதை அது. அத்தனைக்கு ஒன்றும் அதிகமில்லை வெறும் ஐம்பத்தியோர் பக்கங்கள்தான்! என்றாலும், அவை அலுக்க வைக்காதப் பக்கங்கள்! 'ருக்உ' உரைநடையால் தீட்டப்பட்ட ஓர் மனிதனின் பல்வேறு கோணங்களிலான சித்திரம்!
*
'நகுதா' என்கின்ற 'நானா' அடிப்படையில் கவிஞர்! மேலும், அரசில்வாதி / நகைச் சுவைத் ததும்பப் பேசும் மேடைப் பேச்சாளர்/ எளிமையும் தன்மையும் கொண்டு ஏழையிலும் மலர்ச்சி கொண்டவர் / பிரச்சனைகளோடு அவரை அணுகும் எவருக்கும் அரிய மருந்தானவர் / இறைவனின் மீது அபார நம்பிக் கை கொண்டவர் /அவருக்கென்று ஓர் இஸ்லாத்தை வடிவமைத்துக் கொண்ட வர்/ அந்த இஸ்லாம் ரொம்ப எளிமையானது, கையடக்கமானது/ அதில் அவரது இறைவன், சதா நேரமும் அவர் கேட்பதை தருவதற்காகவே இருப்பவன் / நானே உனக்கு சகலமும் தருகிறேன் என்று சொல்லப்போய் அவரிடம் எக்குத்தப்பாய் சிக்கிக் கொண்டவன் / 'கேட்டால் தருகிற இறைவன் இருக்கி றபோது' ஏன் வேலைக்குப் போகனுமாம், எதற்கு தொழில் பண்ணனுமாம்
என்கிற ரீதியில் வாழ்வின் அத்தியாவசியமான நடப்புகளைத் தவிர்த்தவர். இப்படி, நானாவின் அத்தனை முகங்களையும் பல் வேறு முனைகளில் இரு ந்து பார்த்து, எழுத்தால் ஆபிதீன் வரைந்திருக்கும் சித்திரங்கள் சாதாரணமான தல்ல!
*
ஆபிதீனின் கதைகளில் பரிச்சியம் கொள்ள முனையும் வாசகர்கள், வாசிப்பி னூடே காணும் நெருடலையும் / திணறலையும் முயன்றுணர்ந்து தாண்டிப் போகவேண்டியே இருக்கும். அந்த நெருடல், கதைகளில் காணும் வழக்கு சொல்லினால் நிகழ்வது. அதன் நிவர்த்திக்கு போதும் போதும் என்ற அளவில் விளக்கக் குறிப்புகள் அந்தத் தொகுப்பில் உண்டு. சுட்டப்படும் அந்தத் திண றல், அவரது யுக்தி சார்ந்த வலைப் பின்னலான எழுத்தினால் ஏற்படுவது.
*
மனிதர்கள் எப்பவும் எங்கும் புரிந்து உணரமுடியாத சிக்கல் கொண்டவர்கள். அவர்களைப் பற்றி எழுதும் எழுத்தும் அப்படி சிக்கலாக அவரிடம் உருகொ ண்டு, நம்மை திணறவும் அடிக்கிறது. அவரின் பார்வையை உறுத்தும் மனிதர் கள், பெரும்பாலும் அவருக்கு மதத்தின் கூறாகவே தெரிகிறார்கள். அவர்களை படைப்புக்குள் இழுத்து முடக்கிக் திணித்து இருத்திக்காட்ட நினைக்கும் போதும், அவர்களிடமிருந்து ஆசுவாசம் தோடிக் கொள்ள முயலும்போதும், அவர் தன் எழுத்தை லாவகமான வலையாய் பின்னத்தான் வேண்டியிருக் கிறது.
*
அவரது இந்தக் கதைகளை சரியாக உள்வாங்கிக் கொள்ளும் ஒருவன் சற்று மூளியாக இருக்கும் பட்சத்தில், மதவாதிகளிடம் ஓடிப்போய், "இவைகள் ஃபத்வாவுக்கு உறிய கதைகள்!" என்று துடிதுடித்துப் போவான். அந்த சம்மந் தப்பட்டவர்கள் அந்தக் கதைகளை ஆற அமர படித்து முடித்தாலும் பெரிய பாதகமில்லை, "தம்பி இஸ்லாமியக் கதைகளைத்தானே எழுதியிருக்கிறது!"
என்கிற தீர்ந்த தீர்வுக்குதான் வருவார்கள். அவர்களை அப்படி, அந்த நிலையி லேயே, அங்கேயே பிடித்து நிறுத்தும் அந்தப் பின்னலான எழுத்து அவருக்கு இன்றைக்கு அவசியமும் கூட. வாசிப்பில், தட்டுப்படும் சிரம்மங்களை வாசகர்கள் ஊய்த்துணர்ந்து தாண்டிப் போவதே சரி.
*
படைப்பாளிகளில் சிலர் வலிய அங்கதத்தை எழுத வாசித்திருக்கிறேன். புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்ற சிலர் அப்படியில்லா மல் படைப்பினூடே அகத்தையும் மலர வைக்கும்படியான அங்கதங்களை, தங்களது கதைகளின் வளமான வரிகளில் அவ்வப்போது பொட்டு மாதிரி தொட்டு வைப்பார்கள். ரசிக்கும்படியே இருக்கும். சுஜாதாவின் எழுத்தில்
நகைச்சுவை நவீனகூறுகளுடன் ஆங்காங்கே சுழித்துக் கொண்டு நம்மை திக்குமுக்காட வைக்கும். ஆனால், தி.ஜானகிராமனின் எந்த ஒரு கதையினை யும் கையில் எடுக்கும்போதே நம்மையறியாமல் நகைச்சுவைக்கு தயாராகி, முகத்தில் சிரிப்பை மலரவிட்டவர்களாக வாசிக்க முனைவோம். படைப்பிலக் கியத்தில் விசேசமான நகைச்சுவைக்கு நம்பிக்கைதரும் படைப்பாளியாகவே கடைசிவரை ஈடுகொடுத்து நின்றவர் அவர்! தி.ஜாவுக்குப் பிறகு, படைப்பி னூடே அப்படியான அங்கதத்திற்கு நம்பிக்கைத் தருபவராக இன்றைக்கு ஆபிதீன் தெரிகிறார். இவரது எழுத்தின் வாசிப்பினூடே ஏதேனும் இரண்டு வரிகளை விட்டுவிட்டோம் என்றால், சிரிக்க வேண்டிய ஒரு தருணத்தை கைநழுவ விட்டுவிட்டோம் என்று கருதும்படி, தன் படைப்புகளில் அங்கத மணத்தை பல் வேறு விதமாய் பரப்பி பிரமாதப் படுத்துபவராக இருக்கிறார். இது குறித்து அவர் சொல்கிறபோது, 'என் படைப்புகளில் வாழ்வினூடேயான சகமனிதர்களது ரணங்களைத்தான் நான் பூடகமாகச் சொல்கிறேன், அதை நீங்கள் சிரிப்பு என்கிறீர்கள்' என்கிறார். பரவாயில்லை, சக மனிதர்களது வாழ்வின் ரணங்களை இனியும் அவர் பூடகமாகவே தொடர்ந்து சொல்லட் டும். சொல்லவும் வேண்டும்.
***********
உயிர்த்தலம் / ஆபிதீன்
எனி இந்தியன் பதிப்பகம்
102, எண் 57 / பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ்
தெற்கு உஸ்மான் சாலை / தி. நகர்.
சென்னை - 600017
*
மேலும் விபரங்களுக்கு:
************

Tuesday, July 01, 2008

'திருக்குர்ஆனும் நானும்....' - சுஜாதா : அஞ்சலி / தாஜ்


'திருக்குர்ஆனும் நானும்....' - சுஜாதா : அஞ்சலி
-----------------------------------------------------------------------------
- தாஜ்
*
*
சுஜாதாவின் மரணத்திற்கு என் சகாக்கள் எல்லாம் இரங்கல் செய்துவிட்டார்கள். நான்தான் பாக்கி. தாமதம் தாமதம் என்று மாத ங்கள் ஆகிவிட்டது. என்றாலும், அவருக்கு இரங்கல் செய்யாது என் மனம் ஆறாது! அவரிடம் நான் கற்றவைகளும் பெற்ற வைகளும் கொஞ்சமல்ல! சிறு புள்ளிகளால், கோடுக ளால், வார்த்தைகளுக்குள் வார்த்தைகளால் அவர் தொட்டுக்காண்பித்த அங்கதத்திற்காக/அதில் மனம் பறிகொடுத்ததற்காக/வாசித்த நிமிஷங்களில் சிரித்த சிரிப்புகளுக்காக நான் மரியாதை செய்தேயா கனும்!
*
'சுஜாதா....' எத்தனை இனிமையான பெயர்! இலக்கியத்தின் பக்கம், நடுத்தர வாசகர்களைச் சார்ந்ததோர் நிலை எடுத்து அவர் சாதித்தவைகள் ஏராளம்! எழுத்துலகில் எழுதத் துவங்கிய காலம் தொட்டு, மறைவின் காலம்வரை நின்று நிலைத்து சாதித்தவர் அவர். அவரால் இலக்கியத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டவர்கள் ஏராளம். எழுத்துலகில் முகம் காண்பித்தவர்களை எல்லாம், தன் பங்கிற்கு தட்டிக் கொடுத்து அவர்களைப் பற்றி அவ்வப்போது கோடிட்டுக்காட்டி, நல்ல வார்த்தைகளாய் நாலு எழுதி, அவர் களை இலக்கியத்தின் பக்கம் தலையெடுக்கவைத்து ரசித்தவர் அவர். அதை இன்னொரு இலக்கியப் பணியாகவே கடைசிவரைத் தொடரவும் தொடர்ந்தார்! எத்தனைப் பெரிய சிந்தனை! எத்தனைப் பெரிய மனம்! இன்றைக்கு, நவீன இலக்கியத்தில் சிம்மா சனம் தேடுபவர்களில் இருந்து, அங்கே வாசலில் திரிபவர்கள்வரை அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள் என்றால் அது சும்மா அல்ல!
*
கா.ந.சு./ ஜானகிராமன்/ கஸ்தூரி ரங்கன்/ இந்திர பார்த்தசாரதி/ வெங்கட் சாமிநாதன்/ ஆதவன் போன்ற இலக்கிய ஜாம்பவான் கள் டெல்லியில் தங்களது வாழ்வோடான காலத்தைக் கழித்தபோது, அந்த வட்டத்திற்குள் வலம் வந்தபடி இலக்கியத்திற்குள் காலடி எடுத்து வைத்தவர்தான் சுஜாதா! அவர்களை எல்லாம் கற்றுத் தேர்ந்தவராக சுஜாதா இருந்தும், அவர்களை ஒத்த இலக் கிய வடிவத்திற்குள் தன்னை ஒப்படைக்காமல், கிண்டலும் கேலியுமான, புதிய மோஸ்தர் கொண்டதோர் எழுத்து வடிவத்திடம் தன்னை வலியவே சேர்த்துக்கொண்டார்! அந்தக் காலக்கட்டத்தில் மேலைநாட்டு நவீனவாதிகளிடம் அப்படியொரு போக்கு தலை எடுத்திருந்ததைக் கண்டு விரும்பி, அதை அவர் சுவீகரித்துக் கொண்டார் என்றும் சொல்லலாம்.
*
கணையாழி கடைசிப்பக்கத்தில் சுஜாதா தனது எழுத்துலக கணக்கை துவங்கினார். அவரது புதிய மோஸ்தர் கொண்ட எழுத்தை கணையாழி நிறுவனரும், அதன் அன்றைய ஆசிரியருமான கஸ்தூரி ரங்கன் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், ஆர்வப்படுத்த வும் முனைய, அதன் தொடர்ச்சியாகத்தான் பிற்காலத்தில் நாம் எதிர்கொண்ட சுஜாதா நமக்கு கிடைத்தார்.
*
சுஜாதாவின் ஆரம்பகால வளர்ச்சியில் ஓவியர் ஜெயராஜின் பங்கு மிகப்பெரியது. சாவி, தினமணி கதி ருக்கு ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் சுஜாதாவின் தொடர்கதைகள் அதில் ஓர் முக்கிய அங்கம். ஜெயராஜ்தான் சுஜாதாவின் கதைகளுக்கு தொடர்ந்து ஓவியங்களை வரைவார். அதில் சுஜாதா வாரா வாரம் எழுதும் எழுத்தின் அளவு கையளவு என்றால், ஜெயராஜின் வரைப்படம் இரண்டுப் பக்கங்களை அடைத்துக் கொண்டு பிதுங்கும். அந்த ஓவியமும் சுஜாதாவின் கதைகளுடான காட்சிகளை மிக சரியாக 'விசுவல்' படுத்துவதாகவே இருக்கும். சுஜாதாவின் எழுத்துக்காக அவரது கதைகளைப் படிப்பவர்கள் பாதிப்பேர்கள் என்றால், ஜெயராஜின் ஓவியப் பெண்களுக்காக, அவர்கள் அணியும் 'டி சர்ட்' வாசகங்களுக் காக படித்தவர்கள் மீதிப் பேர்! நானெல்லாம் ஜெயராஜின் பெண்களுக்காக சுஜாதாவை பற்றிக் கொண்
டவன்.
*
சுஜாதாவின் நாவல்கள்/ சிறுகதைகள் என்று பார்த்தால் பாதிக்குப் பாதி நிச்சயம் தேறும். அவரது கட்டுரைகள் அப்படியல்ல.அது பெரும்பாலும் 'நூற்றுக்கு நூறு' சங்கதி. சமூகம்/ சரித்திரம்/ துப்பறிதல்/ விஞ்ஞானம்/ கம்யூட்டர்/ சார்ந்து அவரது கதைக ளும், நாவல்களும் அமர்க்களப்பட்டதை நாம் அறிவோம். ஆனால், அவர் எது ஒன்றிலும் தன்னை முழுமையாக ஈடுப்படுத் திக் கொண்டவர் அல்ல. எல்லாம் மேம்போக்கான தகவல்களையும், குறிப்புகளையும், சம்பவங்களையும் தந்து போகிறவை தான். ஆனால், அதைச் சொல்லிச் செல்லும் அவரது நடைதான் அவர்! தேன் கலந்த தித்திப்பு! ரசனையான சுவை! அவரதுசில சிறு கதைகள் கவிதையாகவே தொடங்கி வளர்ந்து முடியும். அனுபவித்து ரசிக்க வேண்டிய தமிழ்ச் சுவை அது!
*
சுஜாதா சம்பந்தப்பட்ட சினிமா குறித்து, மார்க் போட முடியாது. அது ஆளாளுக்கு வித்தியாசப்படக் கூடியது. என்னளவில், அதில் அவர் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை. மணிரத்தினம்/ சங்கர் படங்களுக்கு ஏற்ப அவர் கதைவசனம் எழுதிக் கொடு த்து உதவிகரமாக இருந்தார் என்பதைத் தவிர! அவரது சினிமா செயல்பாடுகள் குறித்து வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. விதி விலக்கு 'கன்னத்தில் முத்தமிட்டால்' / 'உயிரே' / 'திருடா திருடா'. கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் உயிரேயில் அந்தந்தப் பிர ச்சனைகளை ஓரளவு விஸ்தீரணமாக தொட்டுக் காண்பித்திருந்தார். திருடா திருடாவில், அவரது எழுத்தில் வெளிப்படும் நகைச் சுவை அப்படியே அச்சுஅசலாய் அதில் கண்டு திளைக்கமுடிந்தது. தவிர, சுஜாதா பங்கெடுத்து, ராஜஞானசேகரன் இயக்கத்தில் வெளி வந்த 'பாரதி' படத்தை முன்வைத்து அவரது சினிமா ஈடுபாட்டை புரிந்துணர்வோடு மெச்சலாம்!
*
தீவிரம் சார்ந்த எதை ஒன்றையும் அவர் அங்கிகரித்ததாக நான் அறிந்தவரை இல்லை. இலக்கியத்தில், பின் நவீனத்துவ/ மேஜி கல் ரியலிஸ வகை எழுத்துகளை அவர் பாராட்டியதாக நான் அறியவில்லை. புதுக் கவிதையிலும் அப்படிதான். இலக்கணங் களை/ சந்தங்களை/ ஓசைகளை மீறி உலகளாவிய ஸ்டைலோடு வலம் வரும் நமது தீவிரமான புதுக் கவிதைகள் அவருக்கு உகப்பானது அல்ல. எளிமை யான புதுக் கவிதைகளின் பக்கமே நிற்க கூடியவர். அதிலும், சந்தம்/ ஓசை கூடியதான புதுக் கவிதை களை ரொம்பவே விரும்பக்கூடியவர். அப்படியான கவிதைகளுக்காக அடிக்கடி ஞானக்கூத்தனை மேற் கோள் காட்டுவார். சினிமாவிலும் அப்படிதான். கலைப்படங்கள் மீது அவருக்கு நல்ல அபிப்ராயமே இருக்காது. சிலநேரம் ஏதேனும் நிர்பந்தம் பொருட்டு அப்படியான படங்களை அவர் பொருட்படுத்தவும் செய்திருக்கிறார் என்றாலும், பொதுவில் அவர் அப்படியல்ல. நவீன நாடகங்களைக்கூட அவர் பாராட்டி நான் வாசித்தது இல்லை. அவரது இந்தவகை மறுப்புகள், இன்றைக்கும் எனக்குப் புரியாத புதிர்! கலை சார்ந்த தீவிர நிலைகள் மீது அவர் மற்றுக் கருத்துகள் கொண்டிருந்தாலும், இன்னொரு புறம், தீவிரத் தை முன் வைத்து பேசப்படும் விடுதலைப் புலிகள் மீதும்/ பிரபாகன் மீதும் அவர் கசியவிட்ட ப்ரியம், தீவிரமான யோசிப்பிற் குரியது.
*
சுஜாதாவால் தட்டிக்கொடுக்கப்பட்ட எத்தனையோ இலக்கிய ஆர்வலர்களில் நானும் ஒருவன். சௌதியில் நான் பணியில் இரு ந்தபோது, 'தமிழ்ப் பூக்கள்' என்றொரு கையெழுத்து பத்திரிக்கையை நடத்தினேன். கையெழுத்தால் ஆன ஆக்கங்களை ஜெரா க்ஸில் நகலெடுத்து, குமுதம் அளவில் கொண்ட மாதாந்தரி அது. என் ஆர்வக் கோளாரினால், 1981-82ல் நடந்தேறியக் கூத்து அது என்றால்...மிகச் சரியாக இருக்கும்! அதன் ஒரு பிரதியை சுஜாதாவுக்கு அனுப்பி வைக்க, அடுத்த மாத கணையாழியின் கடைசிப் பக்கத்தில் அவருக்கே உறிய கிண்டலோடு, 'தமிழ்ப் பூக்கள்' இதழுக்கான அறிமுகத்தையும், என்னைப் பற்றிய செய்தி யையும் எழுதியிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னொரு முறையும் என்னைக் குறித்து கணையாழி கடைசிப் பக்கத் தில் எழுதினார். சந்தமும் / ஓசையும் கூடியப் புதுக்கவிதையே தனக்கு பிடித்திருப்பதாக அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்க, அதை மறுத்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்திற்கு பதிலாகவும், என் கோபத்திற்கு மருந்தாகவும் அதை எழுதினார்.
*
சுஜாதாவை ஒரே ஒருமுறை மட்டும் சந்தித்ததுண்டு! கணையாழி நடத்திய கவிதை வாசிப்பு கூட்டம் ஒவ்வொரு மாதமும், அதன் கடைசி வாரத்தில் சென்னையில் நடந்த சமயம், அங்கே வைத்து அவரைச் சந்தித்தேன். அங்கு வந்திருந்த சிலரின் கவித களைப் பெற்று அவர் வாசித்தபோது, அதில் ஒன்றாய் 'அரங்கேற்ற நேரம்' என்கிற என் கவிதையையும் வாசித்தார்.
*
'அரங்கேற்ற நேரம்.'
*
பார்வைக்குத் திறக்கப்பட்டது/ என் சித்திரக்கூடம்/ மூளையின் மூளி/ முதுகுத் தண்டின் வளைவு/ கண்களின் ருசி/ நாவின் ஜதி/ கைகளின் தாளம்/ கால்களின் சதிர்/ பாதங்களின் காய்ப்பு/ விரல்களின் முஷ்டி/ நகங்களின் ரத்தப்பூச்சி/ பற்களின் மழுங்கள்/ குறியின் மகர்ந்தம் இன்னும்/ இறக்கையற்றப் பறப்பென/ வண்ணங்களின் அரங்கேற்றம்/ தலைப்பு: நிர்வாணம்.
*
விரிந்தே கிடந்தது/ குறிப்பேடு/ கண்டுகொண்டவர்களின்/ காலடிச் சுவடுகளும் இல்லை.
*
காலம் தாழ்கிறது/ காற்றின் பெரு வெளிக்கே/ அள்ளி தரலாம்/ நிச்சயம்/ பேரண்டம் காணும்.
*
- கவிதை வாசித்துவிட்டு சம்பிரதாயமான வார்த்தைகளை மட்டும் கூட்டத்தில் பேசினார். சற்றுநேரம் கழித்து கிடைத்த ஓய்வில்,"என் கவிதை எப்படி இருந்தது ஸார்?" என்று வினவினேன். "புரியலை தாஜ்" என்றார். தொடர்ந்து பேசவும் நேரம் கிடைக்க வில்லை. என்றாலும், அவர் 'புரியவில்லை' என்று சொன்னதே எனக்கு போதுமானதாக இருந்தது. கவிதைப் புரியாமை ஓர் உலக நியதி! புரிந்ததுயென சொல்லி இருந்தால்தான் சங்கடம்! படித்த உடனே புரிந்துவிட்டல் அந்தக் கவிதைக்குத்தான் மதிப் பேது?
*
எப்படி பார்க்கப்போனாலும் சுஜாதா ஓர் வித்தியாசமான மனிதர். பிரச்சனைகள் அற்ற ஓர் உலகை நோக்கிய நடை அவருடை யது. பல நேரம் சாதாரணக் கூக்குரலுக்கும், சப்தத்திற்கும் கூட அவர் பின்வாங்குபவராக இருந்தார். வகித்தப் பணியினால் இந் திய அளவில் அவருக்கு கிடைத்த அங்கிகாரமாகட்டும், ஆத்மார்தமாக ஈடுப்பட்ட எழுத்துப்பணியில் அவர் கொண்ட புகழா கட்டும், அத்தனையும் மிகப் பெரியது. அவர் அடைந்தப் புகழில் காலுக்கும் குறைவானப் புகழை இங்கே இன்னொருவர் பெற்றிருப்பாரே ஆனால், அவரது தம்பட்டமும் சுய பிரதாபங்களும் விண்ணையும் கிழித்து, கிரக சஞ்சாரவெளியையும் கலக்கி இருக்கும்! சுஜாதா அப்படி ஒரு கஷ்டத்தை நமக்குத் தரவில்லை. கடைசி வரைக்கும்!
*
அவர் விஞ்ஞானம் சார்ந்த பொறியிலாளர்! தவிர, நவீன விஞ்ஞான வளர்ச்சிகள் குறித்து தொடர் வாசிப்பு கொண்டவர். அத னால்தான் என்னவோ வாசகர்களின் அன்றாட விஞ்ஞானம் குறித்த கேள்விகளுக்கு அவர் அசராது பதிலளித்துக் கொண்டிரு ந்ததார். இன்னொரு பக்கம் அவர் ஆன்மீகவாதியாகவும் இருக்க, 'இவ்வளவு தூரம் விஞ்ஞான வளர்ச்சிகளைப் பற்றி பேசு கிற சுஜாதாவால், எப்படி கடவுள் மீது கேள்விகள் எழுப்ப முடியாமல் ஏற்கமுடிகிறது?' என்பதாக பலரிடம் ஐயம் துளிர்த்தெழ, அவர்கள் சுஜாதாவிடம் அடிக்கடி கடவுள் குறித்த, மதங்கள் குறித்தக் கேள்வி எழுப்புவதை தொடர்ந்தார்கள். அதற்கெல் லாம் அவர் எந்தப் பெரிய தர்க்க நியாயங்களையும் கையில் எடுக்காமல், சட்டென கழண்டு கொள்ளும் சுலப பதில்களையே தந்து, நகர்ந்து விடுவார். இன்னொரு பக்கம், அவர் ஆன்மீக வாதியே என்றாலும், அதற்காக அவர் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வரிந்து கட்டிக்கொண்டு நின்றவரும் இல்லை. அவருக்கு எல்லா மதங்களின் நல்லவைகள் குறித்து நல்ல அபிப்ரா யமே இருந்தது. இன்றைய இந்தியாவில் நிலவும் மதம் சார்ந்த காலச் சூழ்நிலையை மனதில் கொள்கிறபோது, அவர் எவ்வளவு தூரம் தெளிவாக இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
*
மத நல்லிணக்கத்தைப் பேணும் பொருட்டு, தினமணி - 2003 ரம்ஜான் மலரில் அவர் எழுதிய, "திருக்குர்ஆனும் நானும்...." என்கிற கட்டுரை, சமரசம் 16-31/ மார்ச் - 2008 இதழில் வாசிக்க கிடைத்து, வாசித்ததில் பிடித்தமான கட்டுரையாகவும் ஆகிப் போனது. எல்லா மதங்களைப்பற்றியும், வேதங்களைப்பற்றியும் நன்கு அறிந்தவர் அவர்! என்றாலும் இங்கே 'திருக்குர்ஆனை' விமர்சன நோக்கில் பார்க்காமல், அதில் காணும் நல்லவைகளை நல்லவிதமாய் சொல்லி இருக்கிறார். நல்லன முளைக்க நல்ல தை விதைத்திருக்கும் அவரது நல்ல எண்ணத்தை இன்னும் பல வாசகர்களின் பார்வைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக, அர்த்த முடைய அஞ்சலியாக எட்டியவர்களின் பார்வைக்கெல்லாம் வைக்கிறேன்.
****************
"திருக்குர்ஆனும் நானும்...."
-----------------------------------------------
- சுஜாதா
*
திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங் களை பெங்களூரில் படித்துக் காட்டிக் கொண்டு இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம், அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார்.
*
நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கிவந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆன் முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துகள் நம்மாழ்வாரின் திருவாய் மொழி யில் இருப்பதைப்போல் உணர்ந்தோம். 'வாழ்வுக்கான நடை முறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக் கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.
*
அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'அண்ணல் நபிகளார் வாழ்வினிலே' போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப் பட்டுள்ளன.
*
மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மதின் சொற்பொழிவுகளின் தொகுப்பான 'இஸ்லாமியச் சிந்தனைகள்', நவீன உலக த்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிரு க்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டும்.
*
எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக் கும் மனிதர்களிடம்தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.
*
இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ் வுக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர் தான் அண்ணல் நபி.
*
காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவிபுனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளி வந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமை யும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.
*
'சிலைகள் உதவாதவை, அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தான். அவனே உணவளிப்பவன்.அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுத்து, அவனையே தொழுங்கள்!'
*
'திடவிசும்பு எரி வளி நீர் நிலம்
இவை மிசை
*
படர்பொருள் முழுதுமாய்
அவைதொறும்
*
உடல்மிசை உயிரெனக்
கரந்தெங்கும் பரந்தனன்'
*
- என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!
*
தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற் றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்கு வாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமானார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.
*
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசிவரை தேடிப் பார்த்தாலும், மற்றவர்பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்க ளைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.'
*
**********************
*
நன்றி: தினமணி, ரம்ஜான் மலர் - 2003/
சமரசம், மார்ச் 16-31 - 2008
தட்டச்சு & வடிவம்: தாஜ்...