Wednesday, July 18, 2007

காமராஜ் - 105


நான் கொஞ்சம் போசிவிடுகிறேன்.
--------------------------------------------
- தாஜ்


காமராஜின் இந்த 105 வது பிறந்த தின நாளில் அவரது நினைவாக கொஞ்ச நேரம் இப்படி நான் செலவழிப்பதில் மனது பூராவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது உள்ளமெல்லாம் நிறைந்த அந்த தலைவன் குறித்து என் பங்கிற்கு எழுத, உயிரோட்டமான செய்திகள் ஒருபாடு உண்டு.

என் வாழ்வின் ஒரு காலக்கட்டம் பூராவும் என் நினைவுகளும், செயல்பாடுக ளும் அவரைச் சுற்றியே இருந்தது. இன்றைக்கும் சட்டென்று அவரது ஞாபகம் எழுந்து அந்த நினைவுகளில் முழ்கிப் போவதும் உண்டு. அதனால்தானோ என்னவோ என்னுடைய கட்டுரைகள் பலவற்றில் அவரை குறிப்பிட்டப்படியே இருக்கிறேன். மேற்கோளாகவோ, உயர்ந்த மதிப்பீட்டிற்காகவோ, தன்னிகரற்ற தனித்துவத்திற்காகவோ அவரை மீண்டும் மீண்டும் என் கட்டுரைகளுக்குள் கொண்டு வந்தப் படியே இருக்கிறேன்.


ஆனால் எனக்குத் தெரியும், மேற்கோள்களுக்கு அவரை எடுத்தாளுவதால் என்னுடைய மதிப்பு அங்கே உயர்கிறதே அல்லாமல் அவருக்கு நான் கீர்த்தி சேர்த்துவிடவில்லையென்று . தனது தியாகத்தாலும், சமூகப் பணியாலும், அரசியல் நாகரீகத்தாலும் இமயத்தை ஒத்த அழியாதப் புகழை கொண்டவர் அவர்.


தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய இளம் பருவத்திலேயே பெரியாரின் நிழல் பார்க்க ஒதுங்கியவன் நான். பெரியார் சுட்டித்தான் காமராஜை பார்க்கத் துவங்கினேன். நான் காமராஜை பார்க்கத் தொடங்கிய காலக்கட்டம் என்பது அரசியலில் அவர் தோற்று, அதன் வீழ்ச்சியை அவர் கண்டுக் கொண்டிருந்த நேரம். உயர் நிலைப் பள்ளி மாணவ பருவம் எனக்கு. அவரை உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருந்தேனே தவிர, அரசியல் நிகழ்வுகளுக்கெல்லாம் விளக்கம் புரியாது. அந்தக் காலக்கட்டத்தில்தான் பெரியார் காமராஜை விட்டு திராவிட இயக்கத்தை ஆதரிக்கத் துவங்கினார். அந்தக் குழப்பமான அரசியல் நடவடிக்கையின் தெளிவு கிடைக்கக் கூட எனக்குப் பல ஆண்டுகள் பிடித்தது.

காமராஜ் மீண்டும் தனது அடுத்த தேர்தல் தோல்வியை தழுவினார். அரசிய லின் நகர்வுகள் எனக்கு பிடிப்பட்ட காலம் அது. அவரது
அந்தத் தோல்வியி லும் அவர் மீது மதிப்பே கூடியது. மேலும் அளவுக்கு அதிகமான பிரியமும் அன்பும்தான் கசிந்தது. அவரது தோல்வியை அவரது தோல்வியாகவோ /அவர் தலைமையேற்ற கட்சியின் தோல்வியாகவோ நான் பார்க்கவில்லை. சொந்த தாத்தாவுக்கு நேர்ந்த கைசேதமாகவும் இழப்பாகவும் பார்த்தேன். நல்லவர் களை இந்த சமூகம் இப்படித்தான் தண்டிக்கும் என்கிற முதல் அரசியல் பாடத்தை அப்பொழுதுதான் படித்தேன். நிஜமாகவே அதுதான் என் முதல் அரசியல் பாடம்.

காமராஜைப் பற்றிய ஆதர்சமான செய்திகள் கொண்ட கட்டுரை வடிவம் ஒன்று மனதில் உண்டு. அத்தனை பெரிய மனிதர் ஒரு சாதாரண கல்லூரி மாணவனான என்னோடு எளிமையாகப் பழகியது, நான் அவரோடு தர்க்கம் புரியும் அளவுக்கு எனக்கு அவர் சுதந்திரம் தந்தது, அவரது உடல் நலம் குன்றிய நாளிலும் என்னை நினைவு கொண்டு அழைத்துப் பேசியது.. என்று அத்தனை நினைவுக ளும் மெய்சிலிர்க்க வைப்பது. அத்தனையும் எழுதனும் என்கிற எண்ணமிருக்கிறது. எழுதுவேன்.

இங்கே, காமராஜை 'யதார்த்த வாதியான ஒரு கர்ம வீரர்' என்கிறத் தலைப்பில் மதிப்பிற்குறிய சுந்தர ராமசாமி அவர்கள் எழுதியகட்டுரையை இணைக்கி றேன். அவர் நினைவில் மீண்டும் மீண்டும் அண்டுவதில்தான் எத்தனை நிம்மதி!

*********


யதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்!
---------------------------------------------

- சுந்தர ராமசாமி


இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால் என் இளம் பருவத்தில் மற்ற பள்ளித்தோழர்களுடன் சேர்ந்து, ‘காமராஜ நாடாருக்கு ஜே!’ என்று நானும் கத்தியது நன்றாக நினைவிருக்கிறது. அந்தக் காலத்தில் அவர் அப்படித்தான் அழைக்கப்பட்டு வந்தார். அப்போது அவருடைய பெயரில் எந்த மாற்றமும் செய்ய வேண்டுமென்ற எண்ணம் எவருக்கும் இருக்கவில்லை. அவருடைய ஜாதி வால் அவரது ஜாதி புத்தியைக் காட்டுவதாக எவருமே எடுத்துக் கொண் டது இல்லை. அவரது புகழ் தன்னிறைவு பெற ஒரு பட்டத்தை அவருக்கு அளிக்க வேண்டுமென்ற எண்ணமும் எவர் மனத்திலும் தோன்றியது இல் லை. தமிழ்ச் சமூகத்தில் அன்று அவர் பெற்றிருந்த கெளரவமும் எல்லோ ருக்கும் நிறைவாகவே இருந்தது. இவற்றின் பொருள் சமூகச் சேவை புரிகிற வனின் நம்பிக்கையும், அந்த நம்பிக்கை சார்ந்த செயல்பாடும்தான் முக்கியம் என்று அன்றைய மக்கள் நம்பினார்கள் என்பதுதான். மெய்யான நம்பிக்கைகள் அல்ல, போட விரும்பும் வேஜங்கள் சார்ந்த அடையாளங்கள்தான் முக்கியம் என்று மக்களை நம்பவைக்கும் கீழ்நிலைப் பிரசாரம் அப்போது அரசியல் நாக ரிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. காமராஜரைப் போன்ற லட்சிய வாதிகளும் கர்மவீரர்களும் அரசியல் களத்தின் சூழலைத் தீர்மானித்து வந்த காலம் அது. சொல்லுக்கும் செயலுக்குமான உறவின் ஜீவப்பிணைப்பு முற்
றாக உலர்ந்துபோயிராத காலம்.

தேர்தல் களத்தில் மித மிஞ்சிய வாக்களிப்புகள், உண்மையைவிட அலங்காரப் பேச்சுக்கு அரசியல் களத்தில் முக்கியத்துவம், பண்டைத் தமிழ் வாழ்க்கையின் பெருமைகளை எவ்விதச் சரித்திர ஆதாரமும் இல்லாமல் மிகைப்படுத்தி மக்களின் உணர்ச்சியைக் கிளறிவிடுதல் போன்ற தந்திரங்கள்தாம் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பவை என்ற சூத்திரம் பெரியாரைவிட்டுப் பிரிந்து வந்த திராவிட அரசியல்வாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இந்தத் தந்திரங்களினால் பெற்ற பதவிகள், அதிகாரங்கள், ஊழல்கள் ஆகியவற்றின் பெரும் அறுவடைகள் காலப்போக்கில் தமிழ்ச் சமூகத்தில் எண்ணற்ற விஜவேர்களைப் பரப்பி வருகிறது.


காமராஜரின் வீழ்ச்சி நவீனத் தமிழ் அரசியலில் நிகழ்ந்த மிகக் கொடுமையான சம்பவம் ஆகும். லட்சியவாதத்தை நடைமுறைத் தந்திரம் முறியடித்த துன்பி யல் நாடகம் அது. அரசியலில் காமராஜர் ஒரு புனிதர் அல்லர். அரசியல் கள த்தில் புனிதர்கள் எவருமே நிலைக்கவும் முடியாது. ஒரு வெகுளியாக அவர் இருந்திருந்தால் இந்திய அரசியலில் அவரால் தலைமைப் பதவிக்கு ஒரு நாளும் வந்திருக்க முடியாது. உயர்குடிப் பெருமை கொண்டவர்கள், உயர் ஜாதியினர், மெத்தப் படித்தவர்கள், ஆங்கில விற்பன்னர்கள் போன்றவர்களே அரசியல் தலைமைக்கு வரச் சாத்தியமாக இருந்த காலம் அது. காமராஜர் ஒரு கீழ்நிலைத் தொண்டனாக அரசியலில் புகுந்த காலத்தில் கடைசி வரை யிலும் ஒரு தொண்டனாக இருந்து கழிவதே தன் விதி என எண்ணியிருந் தால் அதைச் சரியான யதார்த்தப் பார்வை என்றுதான் எவரும் எடை போட்டி ருக்க முடியும்.

காமராஜருக்கு முறையான கல்வி இல்லை. சென்னைக் காமராஜர் மன்றத் தில் கையெழுத்து மாதிரிக்காக வைத்திருக்கும் அவரது தமிழ்க் கடிதத்தில் மோசமான எழுத்துப் பிழைகள் உள்ளன. அவர், தாழ்ந்த ஜாதியாகக் கருதப்பட்ட மிகக் கேவலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். இளமையில் குறைந்த வருமானத்திற்குக் கடுமையான உடலுழைப்பில் ஈடுபடவேண்டிய கட்டாயத் திற்கு உட்பட்டவர். அவரது தோற்றம் காரணமாகவே பெரிதும் உயர் ஜாதி யினரின் தலைமைகொண்ட ஒரு கட்சியில் மிகுந்த புறக்கணிப்புக்கும் அவமா னத்திற்கும் அவர் ஆட்பட்டிருக்கக்கூடும். இந்திய விடுதலை எனும் சுடர் தளர் ச்சியின்றி எரிந்த இதயத்தால் மட்டுமே தாங்கிக்கொள்ளக்கூடிய புறக்கணிப் பை அவர் தொடர்ந்து எதிர்கொண்டிருக்கக்கூடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.


மக்கள் மீது அளவிற்கு அதிகமான நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர். யதார்த்தவாதியான அவருடைய இந்த நம்பிக்கை, அவரது பார்வையில் இருந்த ஒரு முரண்பாடு என்றுகூடச் சொல்லலாம். மக்களுக்கு நல்லது செய்தால் அவர்கள் அதைச் சரிவரப் புரிந்துகொள்வார்கள் என்றும் அதை நினைவில்கொண்டு அக்கட்சியை ஆதரிப்பார்கள் என்றும், செய்த நல்ல காரியங்களை வெளிச்சம் போட்டு விளம்பரப்படுத்த வேண்டியதில்லை என்றும் அவர் நம்பினார். மக்களின் பிரித்தறியும் திறனிலும் உள்வாங்கிக் கொள்ளும் சக்தியிலும் இன்றைய அரசியல் வாதியிடம் காணக்கிடைக்காத நம்பிக்கை அவரிடம் இருந்தது.


சகலகட்சிகளும் மக்களைப் பொது மேடைகளில் பொய்யாகத் தூக்கிப் பேசுவதை நீண்ட காலமாகவே கேட்டு வருகிறோம். மக்கள் மீது கொண்ட உள்ளார்ந்த நம்பிக்கையைத்தான் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்று இன்றைய அரசியலின் அரிச்சுவடியை அறிந்தவர்கள் கூட நம்பமாட்டார்கள். காமராஜர் உண்மையாகவே மக்கள் மீது நம்பிக்கை வைத்திருந்ததால் அவர்களைத் தூக்கிப் பேச வேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமல் போயிற்று. திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் அரசியல் சாமர்த்தியங் களோடு காமராஜரின் அரசியல் அணுகுமுறையில் இருந்த நேர்மையை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒப்பிட்டுப் பாக்கலாம்.

காமராஜரை ஒரு காங்கிரஸ்காரர் என்று மட்டும் சொல்லி முடித்துவிட முடியாது. காங்கிரஸ்காரர்களின் பொதுக்குணம் என்பது அவரது ஆதார சுருதி என்றாலும் அந்தப் பொதுக் குணத்தில் அழுத்தம் பெறாத பல கூறுகளும் அவரிடம் வலிமையாக இருந்தன. அந்தக் கூறுகளை ஓரளவு காந்தீய ஆளுமையுடன் இணைத்துப் பார்க்க முடியும். ஆனால் காந்தீயத் தத்துவங் களில் அழுந்தும் தன்மையில்லாத குணமொன்றும் அவரிடம் இருந்தது. உதாரணமாக மதச்சிந்தனைகளில் கவனம் கொள்ளாத, கடவுள் வழிபாட்டில் அக்கறை காட்டாத வேற்றுமை முக்கியமானது. சோஜலிசச் சிந்தனைதான் அவருடைய அடிப்படைப் பார்வையாக இருந்தது என்றும் கூறலாம். பிறப்பு வளர்ப்பில் பெற்ற, இயற்கை அறிவு வழியாகக் கற்றுக்கொண்ட அனுபவச் சாரத்தினால், பிரச்னைகளின் ஜீவத்துடிப்பைத் தத்துவத்தளத்திற்கு ஏற்றிச் சிக்கல்படுத்தாமல், ‘ஊனக்கண்’ கொண்டு பார்த்தே புரிந்துகொள்ளவும் தீர்வு காணவும் அவரால் முடிந்திருந்தது


அவர் ஆட்சியில் அமர நேர்ந்தபோது ஒரு சில பிரச்சினைகளில் அவரது கவனம் தொய்வு காட்டாமல் வலுவாக இருந்தது. மின்சாரத்தின் பயன்களைக் குக்கிராமங்களிலுள்ள மக்கள்வரைப் பெற வழிவகை செய்தல், கல்வியைச் சகல கிராம மக்களுக்கும் ஊட்டுதல், வயிற்றுக்கு உணவில்லை என்ற காரணத்தால் ஏழைக் குழந்தைகளின் கல்வி தடைபடும் அவலத்தை அவர்க ளுக்கு இலவச உணவளித்துத் தடுத்தல், பயிர்கள் செழுமைப்பட்டு விளைச்சல் அதிகரிக்க வழிவகை செய்தல் போன்றவையாகும் அவை. இந்த அடிப்படைப் பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வு கண்டிருந்தாலே கலாச்சாரப் பிரச்னைகள் உள்ளிட்ட பல பொருளாதாரத் தாழ்வுகளுக்கு விடைகாண மக்களின் வலு வான ஆதரவைப் பெற்றிருக்க முடியும். அவர்கள் ஆதரவுடன் பல நல்ல காரியங்களை நிறைவேற்றிருக்கவும் முடியும்.


ராஜாஜி கோஜ்டியினரின் குறுக்கீடினால் பதவியில் அமரவே காமராஜருக்கு வெகுகாலம் பிந்திவிட்டது. பெரியார் அவரது அரசியல் பார்வைக்கேற்பக் காமராஜரை ஆதரித்தது புரிந்துகொள்ளக்கூடியது. அதே நேரத்தில் ராஜாஜியின் ஆதரவைப் பெறுவதற்காகத் தி.மு.கழகம் அவருக்கு உயிரூட்டிக் காமராஜரின் கைகளைப் பலவீனப்படுத்திற்று. அரசியல் களத்தில் எந்தக் கட்சியினர் ராஜா ஜியை மிகக்கடுமையாக விமர்சித்தனரோ அவர்களே பிற்போக்குவாதியான அவரைத் தேர்தலில் பிராமணர்களின் வாக்கைப் பெறுவதற்காக ஆதரித்தனர். தன்னலமற்ற ஒரு சோஜலிஸச் சிந்தனையாளரான காமராஜை அரசியலில் இருந்தே ஒழித்துக்கட்ட திட்டங்கள் தீட்டினார்கள். ஒரு ஜாதித் தலைவராகத் தேய்ந்துபோயிருந்த ராஜாஜியை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் தூக் கிப்போட்டுக்கொள்ளலாம் என்பதையும், காமராஜரின் தோல்வியை நிகழ்த்தாத வரையிலும் தம் கட்சியின் ஆட்சியை உறுதிப்படுத்த முடியாது என்பதையும் தி.மு.கழகத்தினர் அறிந்திருந்தார்கள்.


தேர்தலில் காமராஜரை விழத்தட்டுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில் லை. அன்று தி.மு.கழகத்தினர் காமராஜருக்கு எதிராகத் தேர்தல் மேடைகளில் செய்த பொய்ப் பிரச்சாரங்கள் தமிழக அரசியலில் கேவலமான தந்திரங்களை வெற்றிக்கான வழிமுறை ஆக்கிற்று. காமராஜரின் தோல்வி தமிழ்ப் பண்பாட் டைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்த தி.மு.கவினருக்கு அவர்களை அம்ப லப்படுத்திய பெரும் தோல்வியாகும்.


தேர்தல் என்பது ஜாதிக் கணக்குகளை அடிப்படையாகக் கொள்ளவேண்டிய ஒரு சூதாட்டமாக இந்தியா சுதந்திரம் பெற்ற நாட்களிலிருந்து உருவாகி வருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாக அமைந் தது தங்கள் வெற்றியை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் கட்சியினர் ஜாதி வேறுபாட்டைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதன் மூலம் அதன் இருப் பை உறுதிப்படுத்தியதாகும். இந்த இழிவான சூத்திரத்தைக் காமராஜரும் ஏற் றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் நேர்ந்தது மிகப் பெரிய கொடுமையாகும்.


காமராஜரைப் போன்ற தலைவரொருவர் தேர்தல் களத்தில் தோல்வி கண் டால் மக்களை அணுகி மீண்டும் தன் கட்சியின் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் காரியத்தையே செய்திருக்க வேண்டும். அதற்கு மாறாகத் தன் ஜாதியினரின் வாக்கை நம்பி அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நின்று தேர்தலில் வெற்றி பெற்றதே உண்மையில் அவர் தன் அரசியல் தோல்வி
யை ஒப்புக் கொண்டதாகும்.

பட்டம் பெறாதவர்களும் ஆங்கிலம் அறியாதவர்களும் உயர் ஜாதியில் பிறக் காதவர்களும் ஆட்சிக்கு வந்தால் அரசு நிலை குலைந்துபோய்விடும் எனப் பழமைவாதிகள் வெளிப்படுத்தி வந்த அச்சத்தை இந்திய அளவிலும், குறிப்பா கத் தமிழகத்திலும் உடைத்தெறிந்தவர் காமராஜர். தங்கள் சாதாரணப் பின்ன ணியை எண்ணி, வெட்கி, கூசிக் குறுகி, தாழ்வு மனப்பான்மையால் பதவியில் ஏறத் தைரியம் இன்றித் தவித்துக்கொண்டிருந்த பலருக்கும் நம்பிக்கை அளித் தவர் அவர். இந்திய ஜனநாயகத்தில் சாதாரண மனிதனுக்குரிய பங்கை உறு திப்படுத்தியவர் அவர்.

****************

No comments: