Sunday, October 15, 2006

சு.ரா.வுக்கு இறப்பே இல்லை........ - தாஜ்

( சுந்தர ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவுடன்....)

காலச் சுவட்டில் சுந்தர ராமசாமி மறைவையொட்டி 'சு.ரா: நினைவின் தடங் கள்' என்கிற தலைப்பின் கீழ், பல படைப்பாளிகள் அவரைப் பற்றிய நினைவு களை பதிவு செய்தார்கள். அந்த வரிசையில் திரு.அ.கா.பெருமாள், தனது டைரி யில் குறிப்பிடத் தகுந்த சு.ரா.பற்றியத் தகவல்களை வருடம், தேதி கிரமமாகத் தொகுத்து பதிவு செய்திருந்தார். திரு.அ.கா.பெருமாள் சு.ரா.வின் இல்லத்திற்கு அருகான்மைக் காரர் என்பது இங்கே குறிப்பிடத் தகுந்தது. காலச்சுவட்டில் அவர் பதிவு செய்திருக்கிற 7.1.1984 டைரி குறிப்பு சு.ரா.வையும் என்னை யும் பற்றியது.

7.1.1984 - சனி

மாலையில் சு.ரா. வீட்டிற்குப் போனேன். அங்கே தாஜ் என்னும் இளைஞர் இருந்தார். ஜே.ஜே.சில குறிப்புகள் படித்துவிட்டு சு.ரா.வைப் பார்ப்பதற்கென்றே நாகர்கோவில் வந்திருந்தார். இவர் சிதம்பரம் அருகே சீர்காழியைச் சேர்ந்தவர். சவுதி அரேபியாவில் மோட்டார் மெகா னிக் வேலை. சு.ரா.விடம் நாவலைப் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டார். சு.ரா., "என் நாவலில் வரும் கதாபாத் திரங்களுடன் வேறு யாரையாவது தொடர்புபடுத்திப் பேசினால் நான் என்ன செய்யமுடியும். அதற்கு நான் பொறுப்பல்ல. சிட்டுக் குருவியுடன் இந்துமதி யோ சிவசங்கரியையோ ஒப்பிடுவதும் முல்லைக்கல்லுடன் ஜெயகாந்தனை இணைப் பதும் வாசகர்கள் செய்த வேலை. இப்படியே ஒப்பிடுவதாக இருந் தால் இந்தியாவில் பல எழுத்தாளர்களை ஜே.ஜே. நாவலின் பாத்திரங்களுடன் ஒப்பிட முடியும். இதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என்றார்.

அந்த இளைஞர் இரவு 11 மணிவரை சு.ரா.வுடன் பேசிக்கொண்டிருந்தார். பின் னர் நானும் சு.ரா.வும் அவர் தங்கியிருந்த பாஸ்கர் லாட் ஜில் கொண்டு விட் டுவிட்டுத் திரும்பி வர மணி 12 ஆகிவிட்டது.

- திரு.அ.கா.பெருமாள் அவர்கள் பதிவு செய்திருக்கிற தகவலின் சம்பவங்கள் அத்தனையும் சரியே. தேதிதான் மாற்றமாக இருக்கிறது. சு.ரா.வை நான் சந்தி த்தது 7.1.1984 அல்ல1.1.1984. திரு.அ.கா.பெருமாள் அவர்கள் குறிப்பிட்டிருக்கிற தேதி, அச்சுப்பிழையாகக் கூட இருக்கலாம்! 'ஜனவரி ஒன்று வாருங்கள், உங் களை நினைவில் வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும்' யென சு.ரா. எழுதி அழைக்க, நான் சென்று அவரை சந்தித்த தேதியது.

*****

கடிதம் எழுதினால் உடனுக்குடன் பதில்எழுதும் படைப்பாளிகளில் சுந்தர ராம சாமியும் ஒருவர். நாம்எழுதியதை ஒட்டியச் செய்திக்கு,நிச் சயம் அதில் பதிலி ருக்கும். அவரதுகருத்துக்கள் என்னளவில் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளக் கூடி யதே. மேம்போக்காக எழுதுவதென்பது அவரிடம் எப்பொழுதும் கிடையாது. எனக்கு அவர் உடனுக்குடன் பதில் எழுதியதாகச்சொல்வது சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்! ஜே.ஜே.சில குறிப்புகள் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்ட நேரம்!

சு.ரா.வின் ஜே.ஜே.சில குறிப்புகளை முதன்முதலில் படித்தபோது, வியந்து பிர மித்துப் போனேன்! அந்தவயதில். அதன் தாக்கம் எனக்கு அப்படிதான் இருந்தது. காணாததைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில், அவருக்கு சௌதியிலிருந்து கடிதம் எழுதினேன். என்கடிதத்திற்கு பதில் எழுதிய சு.ரா. என்னை யொத்த வியப்பில்' அந்த புத்தகம் அங்கே எப்படி கிடைத்தது?' எனவும், நாவலை வாசித்து உணர் ச்சி வசப்பட்ட நிலையில் கடிதம் எழுதியிருப்பதாகவும் எழுதியிருந்தார். நான் உணர்ச்சிவயப்பட்டது அவருக்கு தெரிந்து போனதில் வெட்கமாகம் மேவியது. தவிர அந்த கடிதத்தில், என்ரசனைக் குறித்தறிய எனக்கு இஸ்டமான இசை/ நாடகம் / சினிமா / சித்திரம் போன்றவற்றை கேட்டு எழுதியிருந்தார். பொறுப் பாக பதில் எழுதினேன். கடிதத் தொடர்பு துளிர்த்தது.


ஜே.ஜே.சிலகுறிப்புகள் வெளிவந்த சில மாதங்களுக்குப் பிறகுகே, அப்படி ஒரு புத்தகம் வந்திருப்பதை அறிந்தேன். சூழ்நிலை அப்படி!அந்த புத்தகம் வெளி வந்த நாளில் நான் சௌதியில் இருந்தேன். அடுத்த ஆறுமாதம் கழித்து ஊர் வந்திருந்தபோது, சென்னை தி.நகரில் எனக்குத் தெரிந்த புத்தகக் கடைகளில் அந்த புத்தகத்தை தேடிப் போனபோது, அது கிடைப்பதாகவே இல்லை. பாண்டி பஜார் கலைஞன் பதிப்பகத் திற்கு சென்றபோது, அதன் உரிமையாளர் தனக்கு கிடைத்த 'complimentary copy' ஒன்றுதான் தன்னிடம் இருக்கிறது என்றும், இத்த னை ஆர்வமாய் சௌதியிலிருந்து அதை தேடி வந்திருப்பதினால் உங்களுக் குத் தருகிறேன்யெனத் தந்தார்.தொடர்ந்து, தான் இன்னும் அதை படிக்கவில் லை என்றுகூறியவர், என்னை நேர்நோக்கி வியந்தப்படி'அந்த புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறதென்றார்?'

ஒருமாத விடுமுறையில் ஊர்வந்த எனக்கு, பகலில் பெரும்பாலும் ஓய்வின் றிப் பணிகள்! இரவிலோ மனைவியோடு ஆற்ற வேண்டிய கடமைகளின் தவிர்க்க முடியாமை வேறு! இதையெல்லாம்விட மேலாக அந்த புத்தகத்தை படிக்க வேண்டிய மனநிர்பந்தம் இன்னொரு புறம்! வேறுவழியின்றி அந்நாவ லை வாசிப்பதற்கென நான் வகுத்துக்கொண்ட நேரம், நள்ளிரவு ஒருமணிக்கு மேல். எங்கள் ஊரில் அந்த காலக்கட்டத்தில் மின்சாரம்தடையும், குறையழுத்த மின்சாரத் தொல்லையும் சகஜம். தொடர்ச்சியான இந்த குறைப்பாடுகள் எங் களுக்கு பழகிகூட இருந்தது. செல்லப் போனால் இரவு பத்து மணிக்குப் பிறகு நள்ளிரவு ஒரு மணிவரை அது தேவையும் இருக்காது. விளக்கை வலிய அணைத்துவிடும் நேரம் அது! தமிழனின் கலாச்சாரப்படி தாம்பத்தியம் இருளில் தான் ஜொலிக்கிறது! நள்ளிரவில் படிக்கவென்று கிளம்பும்போது வெளிச்சமில் லாது என்ன செய்வது? இருளில் வாசிக்கும் மந்திரமும் தெரியாதவன் நான்! வித்தைக்காரர்கள் யாரிடமா வது அதை கற்றிருக்கலாம்!

அப்படியான வித்தைக்காரர்கள் இல்லாமலில்லை! சமீபத்தில், நவீன இலக்கிய எழுத்தாளர் ஒருவர் சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களுக்கு ஒரே நேர த்தில் விமர்சனக் குறிப்புகள் எழுதியிருந்ததை ஒருதரம் வலைப்பதிவில் கண்டேன். இத்தனைக்கு அதீத காரி யம் செய்ய ஒருவருக்கு சராசரி வாசிப்பு நேரங்கள் போதாது. தூக்கத்தில்கூட வாசிக்க முடிகிறவரால்தான் அது நடக் கும்! இந்தகையத் திறன் பெற்ற எழுத்தாளர் இன்றைக்குத்தான் என்றில்லை, அன்றைக்கும் இருந்தார்கள். வம்சத்தெடச்சி அற்றவர் இங்கு ஏது? இவருக்கு அண்ணன், பெரியண்ணனெல்லாம் இருக்கவே செய்தார்கள்!

தினைக்கும் விதியேயென சிம்னி வெளிச்சத்தில்தான் ஜே.ஜே. யோடு அடுத்த சல்லாபம்! கணவன் இப்படி தள்ளிப்போய் திளைப்பதென்பது மனைவி மார்க ளுக்கு பிடிக்காது. இன்னொன்றோடு என்பதே அவர்களுக்கு ஆகாது! அதுவும் இரவில் என்றால் சொல்லவே வேண் டாம்! தமிழ்ப் பெண்களுக்கு இந்த உண ர்வு கூடுதல் சங்கதி! ஜெ.ஜெ.யோடு அன்னோனியம் கொண்ட அடுத்த நிமிட மே அவன் என்னை விஸ்தீரணவெளிக்கு இட்டுச் சென்றுவிடுவான்! அங்கே மனிதர்களின் வேஷங்களும், நடிப்பும், அவலங்களாக காட்சித்தரும் அலங்கோ லக் கூத்தும், உண்மைகளின் வீழ்ச்சியும், நடப்பு உணர்த்தும் அற்பங்களின்
ஜொலிப்பும் நம்மை நிலைகுலைய வைக்கும்!

நல்ல புத்தகங்களைப் படிக்கிறபோது, அது மனதை வருடாமல் விடாது. அதன் கவிநயம்கொண்ட வரிகள் மூளையின் மடிப்புகளில் சிக் கியும் கொள்ளும். கருத்தாழம் கொண்ட பாராக்கள் நம்மை திக்கு முக்காடவேறு வைத்துவிடும். வாசிக்கிறபோது இப்படியான வைகளை அடிக்கோடிடுவது என்னளவில் தவிக் கமுடியாது! பழக்கம் அப்படி! ஜே.ஜே.சிலகுறிப்புகளை வாசித்தபோதும் அப்படி த்தான் நடந்தது.ஒவ் வொருநாளும் மண்ணெண்ணை வாசனையோடு கொஞ் சம்கொஞ்சமாக ஒருவார காலத்தில் அந்த நாவலை வாசித்து முடித்தேன். வா சித்து முடித்தபோது, அந்த புத்தகம் இன்னொருப் பங்கிற்கு பெருத்து விட்டது! இப்படி அடிகோடிடுவதால் அறிவின் தானங்கள் பரிணமி க்கிறதோ என்ன வோ, வாசித்தப் புத்தகம் பரிணமித்துவிட்டது!

விடுமுறைமுடிந்து திரும்பவும் சௌதிபோனபோது அந்தப்புத்தகத்தை கை யோடு கொண்டுபோனேன். விமானம் பறக்கிறப்போது அதில் சில அத்தியா யங்களைப் படித்தேன். குறிப்பாய் ஜே.ஜே.எழுதிய குறிப்புகள் அடங்கியப்பகுதி. ரொம்பவும் இஸ்டமானப் பக்கங்கள் அவை! ஜே.கிருஷ்னமூர்த்தியின் தத்துவக் குறிப்புகளை படித்தபோது ஏற்பட்ட மனதாக்கத்தையொத்த, நெகிழ்ச்சித் தந்த பக்கங்கள் அவை! பூமி யின்மட்டத்திலிருந்து மிகஉயரத்தில் விமானம் பறந் தபோது, அதனை நான்படித்தேன் என்பது, அந்த படைப்பாளியின் தீவிர உழைப்புக்கு செய்கிற மரியாதையாகவே நினைத்தேன். அதிலோர் திருப்தி!

சௌதியில் எனது இலக்கிய நண்பர்கள் சிலர் அந்த நாவலை என்னையொத்த ஆர்வத்துடனேயே படித்தார்கள். ஒரு விடுமுறை தினத் தில் நண்பர்கள் ஒன்றுகூடி அதை சர்ச்சிக்கவும் செய்தார்கள். பொதுவில் அந்த நாவல் எல்லோருக்கும் பிடித்துதிருந்தது. சிலர் அதை உன்னதம் என்றார்கள். ஹாஜா அலி என்கிற நண்பர் தனது கருத்தாக ஒன்றைச் சொன்னார். அது எனக்குப் பிடித்திருந்தது. 'உன்னதம் நோக்கியப் பயணத்தில் நம்பிக்கைத் தரும் நாவலிது' என்றார்.

அன்றைக்கு சௌதியில் நான் நடத்திய சிற்றிதழான 'தமிழ்ப் பூக்களில்' அந் நாவலுக்கு ஒருபக்கம் விளம்பரம் வெளியிட்டு, திரு.சுஜாதா அவர்கள் கணையாழியில் அந்நாவலுக்கு எழுதியிருந்த விமர்சனத்தையும் மறுபிரசுரம் செய்திருந்தேன். அது வழக்கமாதிரியான சுஜாதா தனமான விமர்சனம்தான். இத்தனைக்கும் அன்றைக்கு கணையாழியின் ஆசிரியர் பொறுப்பை வகித்த ஜானகி ராமன் அவர்கள் சுஜாதா வைக் கூப்பிட்டு தமிழிழ் ஒரு நல்ல நாவல் வந்திருக்கிறதென்று சு.ரா.வின் ஜே.ஜே.சில குறிப்புகள்பற்றி குறிப்பிட்டு, "கணையாழியில் பிரசுரிக்கவேண்டி, டேமேஜ் இல்லாமல் அதற்கோர் விமர்சனம்எழுதித்தாருங்கள்" யென கேட்டும், திரு.சுஜாதா அவர்கள் தனது பாணியிலான சுவாரசியத்தோடே அந்த விமர்சனத்தை எழுதியிருந்தார்.

சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சில குறிப்புகள்' தமிழில் புதிய வடிவங்களைக் கொண்ட நாவல். "ஒருகுட்டியை ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டன்கள் காதலிக்கும் தொடர் கதைகளை" "மாய காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு அவ்வுறுப்புகளை ஓயாமல் நம்மேல் உரசிக் கொண்டிருக்கும் அற்பங்கள்" எழுதும் "தமிழ் சீதபேதி" சூழ் நிலையில் ஆழ்ந்திருக்கும் நம் வாசகர்களுக்கு இதன் வடிவம் லேசில் அகப்படாது. திரு. சுஜாதா அவர்கள் இப்படி அந்த விமர்சனத்தை தொடங்கியிருந்தாலும், ரொம்பவும் பெருமைப் படத்தான் கடைசியில் முடித்திருந்தார்.

ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலைமெச்சி வெளிவந்த 'தமிழ்ப்பூக்களை'யொட்டி, அறிமுகமே இல்லாத ஒருவர் திண்டுக்கல்லிலிருந்து என் சௌதி முகவரிக்கு கடிதம் எழுதியிருந்தார். 'தமிழக முற்போக்கு இலக்கியச் சிற்றிதழ்' அமைப்பின் காரியதரிசியாம் அவர்! "பிற்போக்கு த்தனமான ஒரு நாவலுக்கு நீங்கள் இத்தனை முக்கியத்துவம் தந்திருக்கக் கூடாது" என்று கோபத்தைக் காட்டியிருந்தார். அந்த கடிதத் தை வாசித்ததுடன் தோன்றிய முதல்கேள்வி அந்நாவலில் எதை பிற்போக்குத்தனம் என்கிறார்? என்பதுதான். திரும்பத் திரும்ப யோசி த்தும் அன்றைக்கது விளங்கவில்லை. அதன்பின் தொடர்ச்சியாக மூன்றுகேள்விகள் எழுந்தது. 1.தமிழ்ப் பூக்கள் அவருக்கு எப்படி கிட்டி இருக்கும் 2. இடதுசாரிகள் ஏன் இந்த நாவலை எதிர்க்கிறார்கள் 3. சௌதியில் வெளிவரும் ஒரு சா தாரண சிற்றிதழைக் கூட விடாது விரட்டிப்பிடித்து மறுப்பு செய்யும் அளவுக்கு ஜே.ஜே.சில குறிப்புகள் நாவல் மீது அவர்களுக்கு அப்படி என்ன காழ்ப்பு?

முதல் கேள்விக்கு பதில் கிட்டவில்லை. அடுத்த இரண்டுக்கும் ஓரளவு பதில் கிடைத்தது. சு.ரா.இடதுசாரி இயக்கத்தில் இருந்தவர் என் றும், ஸ்டாலினின் சிந்தனை / செயல்பாடுகளை ஒட்டி இடதுசாரிஇயக்கம் இரண்டாகப் பிரிந்தபோது, அவர் இடதுசாரி இயக்கத்தை விட் டே வெளியேறிவிட்டவர் என்றும், ஜே.ஜே.சிலகுறிப்புகளில் பிரதானப் பாத்திரமான 'முல்லைக்கல்' வழியாக இடது சாரிகளை விமர்சன த்திற்கு உள்ளாக்கியிருக்கிறார் என்பதால் அவர்கள் சீற்றம்கொள்கிறார்கள் என்றும் அறிந்தேன். அரசியல், எல்லாத்துறைகளையும் படுத் தும்பாட்டிற்கு குறையாமல் இலக்கியத்தையும் சீண்டுகிறதென்பது புரிய வந்தபோது, இந்திய அரசியல் களம் இன்னும் எனக்கு தெளிவானது.

ஒருவருடம் கழித்து மீண்டும் ஊர் வந்திருந்தேன். அன்றைக்கு, நவீன தமிழ் இலக்கியத்திற்கு பெயர்சொல்லும்படி விலங்கிய ஒரே பதிப் பகமான க்ரியாவுக்கு சென்று, அங்கே தேங்கிக் கிடந்த சிற்றிதழ்கள் அனைத்துப் பிரதிகளையும் பொறுக்கியெடுத்து, தூசித் தட்டி வாங்கி னேன். அவற்றை வாசித்த வகையில், அனைத்து சிற்றிதழ்களிலும் ஜே.ஜே.சில குறிப்புகள் குறித்து, ஒன்றுக்கு மேற்பட்ட விமர்சனங்க ளும், கலந்துரையாடல்களும் வெளிவந்திருப்பது தெரிந்தது! இடதுசாரி சிந்தனைக்கொண்ட 'இனி' என்கிற மாத இதழில், அந் நாவலுக்கு தொடர்விமர்சனம் வெளிவந்தப்படி இருப்பது கண்டும் வியந்தேன். இடதுசாரி மனோபாவம் கொண்ட பிரபல எழுத்தாளரான சாரு நிவே திதா, ஜே.ஜே. சில குறிப்புகளுக்கு தனியே ஒரு விமர்சனப் புத்தகம் வெளியிட்டிருந்தார்! ( அவரது அந்த விமர்சனத்தையொட்டி பாண் டிச்சேரிபோய் அவரைப் பிடித்து வலிய தர்க்கம் புரிந்ததை இன்றைக்கு நினைக்கிறபோது சிரிப்பு வருகிறது. இன்னொன்றையும் இங்கேசொல்ல வேண்டும், பிந்திய காலக்கட்டத்தில் சாருவின் விமர்சனத்தை மறு வாசிப்பு செய்தபோது அதன் பெரும்பகுதி ஒப்புக்கொள்ளும் படியாகவே இருந்தது.) புத்தக விமர்சனப் பக்கமே தலைவைக்காத, சிறுகதைகளையும் நாவல்களையும் மட்டுமே எழுதி வந்த எழுத்தா ளர்களில் பலர் இந்த புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிந்ததையும், கருத்துக்கள் சொல்லியிருந்ததையும் கண்டு வாசித்து கணித்தவகை யில் 'ஒரு நாவலுக்கு இத்தனை சக்தியா? யெனத் தோணியது.

ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலுக்கு விமர்சனங்கள் ஒருபாடு வந்து முடிந்தும், வந்திருந்த பல்வேறு விமர்சனங்களில் தங்களது விமர்சனமே துல்லியமென சிலஎழுத்தாளர்கள் அடுத்த ரவுண்டில் அந்நாவலைப் பற்றி மீண்டும் பேசத் துவங்கிய வேடிக்கை நடந்தேறிய நாளிலும் கூட, விமர்சனமே தங்களது ஆத்மார்த்தப் பணியென இயங்கி வந்த திரு.க.நா.சு.வும், திரு.வெங்கட்சாமி நாதனும் அந் நாவலுக்கு விமர்சனம் என்கிற அளவில் விரிவாக எதையும் எழுதாதுப் போனதை இங்கே குறிப்பிடவேண்டும். க.நா.சு.மட்டும் ஏதோ சில கருத்துகள் (ஜே.ஜே.சில குறிப்புகள், 'வித்தைத்தனம்' கொண்டதென க.நா.சு. கூறியதாக அப்பொழுது ஒரு பேச்சு உண்டு) கூறியதாகவும், அது குறித்த தெளிவை அறிய சு.ரா. முயன்றதாகவும் அறிந்தேன். என்னைக் கேட்டால், அந்த இரண்டு ஜாம்பவான்களும் அந்நாவல் குறித்த விரிவான விமர்சனத்தை வைத்திருக்கவேண்டும். அவர்களின் ஆத்மார்த்தப் பணியின் பங்கமற்ற உயர் வை அது இன்னும் கூட்டியதாகவும் அமைந்திருக்கும்.

க.நா.சு. / வெங்கட் சாமிநாதன் தவிர்த்து, ஜே.ஜே.சில குறிப்புகளுக்கு பலரின் விமர்சனங்கள் பலகோணங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருந்த போதும், சு.ரா. எந்தவொரு விளக்கமோ, எதிர்வினையோ செய்தாரில்லை! தனது நாவ லை வெளியிட்டு விட்டு இலக்கியப் பரப்பின் பரப்பரப்பை அவர் மிக நிதான மாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதாகப் பட்டது. இந்த மனோநிலை சராசரிக்கு மீறியவே தோன்றியது. இரண்டு வருடங்களுக்கு மேலாக அந் நாவலுக்கு வந்து கொண்டிருக்கும் விமர்சனங்களுக்கு அவரது அபிப்ராயம் எனக்கு முக்கியமெனப் பட்டது. அது குறித்து நேரிடையாக கேட்டரிந்தால் என்ன? என்பதாக தோன்றியயுடன் பரபரப்புக்கு ஆளானேன்.

1993 - டிசம்பர் மாத இரண்டாம் வாரத்தில் அவரைச் சந்திக்க அனுமதி மற்றும் தேதி, நேரம் கேட்டு சு.ரா. வுக்கு கடிதம் எழுத பதில் வந்தது. அடுத்த வாரத்தில் ஓர் தேதியைக் குறிப்பிட்டு, வாருங்கள் என எழுதியிருந்தார். சீர்காழியில் இருந்து சென்னையைவிட, நாகர் கோவில் இன்னும் தூரம்அதிகம். அந்த பயணத்திற்கு ஆயத்த ஏற்பாடுகளோடு இருந்தபோது, சு.ரா.விடமிருந்து தந்தி வந்தது. தவிர்க்க முடியாத பணியின் காரணமாக வெளியூர் செல்வதாகவும், வரவேண்டியத் தேதியினைக் குறிப்பிட்டு அடுத்து கடிதம் எழுதுவதாகவும்
அதில் தகவல் செய்திருந்தார். ஒரு சில நாளில் அந்த கடிதமும் வந்தது. 'ஜன வரி முதல் தேதி வாருங்கள், உங்களை நினைவில் வைத்துக் கொள்ள வசதி யாக இருக்கும்' என்று எழுதியிருந்தார்.

புத்தாண்டு பிறக்கும் இரவில், எங்கள் ஊர் பஸ்ஸ்டாண்டில் பயணம் புறப்பட நின்றேன். தூரத்தில் கத்தோலிக்க தேவாலயத்தின் பிராத்தனை ஒலி மிதந்து வந்தது. பஸ்ஸ்டாண்டின் மையத்தில் மாணவர்கள்குழு ஒன்று, எதிர்பாராத தருணத்தில் வந்து ஆக்கிரமித்தப்படி, இரவு பண்ணிரெண்டு முடிந்த நொடியில் வெடிகளை வெடிக்கச் செய்து 'சில்க் ஸ்சுமீதா வாழ்க' கோஷமிட்டனர்.

மறு நாள் பகல் நாகர்கோவில் போய் இறங்கியபோது ஊரே புத்தாண்டு குதூ கலத்தில் இருந்தது. எனக்கு 'பெத்தலெகம்' வந்து சேர்ந்துவிட்ட மகிழ்ச்சி! வா டகைஅறையில் என்னை சரி செய்துக்கொண்டு, சு.ரா.தரிசனத்திற்காக புறப்பட் டேன். சு.ரா.வீட்டில் இருந்தார். வரவேற்றார். காலில் போட்டிருந்த 'ஸ்ஸூ'வு டன் வீட்டின் உள்ஹாலுக்கு அனுமதித்தார். ஸ்வீட், காரம், பில்டர் காஃப்பியெ ல்லாம் ஆனது. வீட்டின் மாடியில் உட்கார்ந்து பேசலாமென அழைத்தார். ஒரு சிறுரூம் தடுப்பும், மெட்டைத்தளமுமான அந்த இடம், அதன் சுற்று புறத்தோடு எனக்குபிடித்திருந்த்து. 'காகங்கள்' என்கின்ற இலக்கியஅமைப்பின் மாதாந்திரக் கூட்டம் இங்குதான் நடக்கும் என்றார் சு.ரா.! நான் வேறுயோசிப்பில் கொஞ்சம் படபடப்பாக இருந்தேன். அதை சு.ரா.புரிந்துக் கொண்டவராக, 'நீங்கள் புகைப் பிடிக்கனுமென்றால், புகைக்கலாம் என்றார். ' அவரிடம் நான் சிகிரெட்பாக்கெட் டை திறந்து நீட்டியபோது, சமீபத்தில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டதாகச் சொன்னார்.

அந்த வீடு அழகான சூழலில் அமையப்பெற்றிருந்தது. நாலாபுறமும் பசுமை யான மரங்கள். மெயின் ரேட்டையொட்டி அது இருந்தாலும், வெளிச்சப்தம் எட்டாத உட்புறத்தில் இருந்தது. இடைப்பட்ட தூரத்தை மூடி மறைப்பது மாதிரி வயது கூடிய சப்போட்டா மரம் ஒன்று ஏகத்திற்கும் கிளைவிட்டு தழைத்து, பூத்து, காய்த்து, அடித் தரையெல்லாம் போர்வையாக காய்ந்த உதிரிப் பூக்கள். மரத்தின் ஒரு பகுதி கிளைகள் மொட்டை மாடியை எட்டித் தொட்டுக்கொண்டி ருந்தது. மாடியின் முகப்பில் பசுஉருவின் பின்புலத்தோடு புல்லாங்குழல் வாசி த்தப்படி ஸ்டைலான கண்ணன். அந்த'சுந்தர விலாஸ்' இன்னும் மனதில் அதே பசுமையோடுதான். அதன் வசீகரம், அங்கே இன்றைக்கும் அப்படியே இருக்கி றதா? தெரியவில்லை!

சு.ரா.விடம், ஜே.ஜே.சில குறிப்புகள் எழுதிய அனுபவத்தைக் கேட்டேன். நீண்ட கால அவகாசம் எடுத்துக்கொண்டு அந்த நாவலை எழுதியதாகச் சொன்னவர், 'புளிய மரத்தின் கதை' எழுதி முடித்தப்பின் தொடங்கிய நாவலிது என்றும், 'புளிய மரத்தின் கதை' எழுதி முடித்து இருபது வருஷமாவதாகவும் கூறினார். படைப்பின் மீது அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை மற்றும் கால அவகாசத் தை யூகித்த எனக்கு, ஜே.ஜே.சில குறிப்புகள் வாசித்த நாழியில் நான் சொக் கிய தருணங்கள் நினைவுக்கு வந்தது. இத்தனை சிரத்தையும், இத்தனை கால
அவகாசமும்தான் அந்த நாவலை அத்தனை உயரத்திற்கு உயர்த்தியிருப்பதாக தோன்றியது.

சு.ரா.வுக்கு முன்பாகவும், அவர் வாழ்ந்தகாலத்திலும் தனிமனிதன் தூக்கமுடி யாத அளவுக்கு புத்தகங்கள் எழுதுகிறவர்களையும், அதற்கு அவர்கள் வைத்த சொத்தை வாதங்களையும் நாம் கவனித்தப் படித்தான் இருக்கிறோம். வியபார நோக்கும், புகழ்ச்சி வேண்டி தனக்கு இல்லாத கீர்த்திகளை வெளிச்சம் போட் டுக் காட்டுவதையும் தாண்டி அந்த புத்தகச் சுமையைப் படைத்ததில் வேறு என்ன இலக்கியக் காரணம் இருக்க முடியும்?

ஜே.ஜே.சிலகுறிப்புகள் எழுதும் போதே, தனது இலக்கிய நண்பர்கள் அதன் சில பகுதிகளைப் படித்து, சிலாகித்து அபிப்ராயம் சொன்னப் பிறகே தெடர்ந்தெழுத ஆவல் கொண்டதாகச்சொன்னார். அந்த நாவலின் இரண்டாம்பகுதியான ஜே. ஜே.யின் டைரி குறி ப்புகளை எழுதி முடித்தபோது, தலை தெறிக்கும் படியான தோர் வலியினை தான் கொண்டதாகச் சொன்னார். நிச்சயம் அப்படியோர் வலியின் அவஸ்த்தையை அவர் கொண்டிருக்கக் கூடும். நம்பவும் நம்பினேன். அந்த டைரி குறிப்பின் உள்ளார்ந்த வெளிப்பாடு கனமான சங்கதிதான்.

ஜே.ஜே.யின் டைரி, ஜே.கே.கிருஷ்ண மூர்த்தியை நினைவூட்டுகிறதே என்றத ற்கு, அதை ஒப்புக்கொண்டவர் கொஞ்சகாலம் அவரைப்பின் தொடர்ந்ததையும் சொல்லி விட்டு, உங்களால் ஜே.கே. வை பின்பற்ற முடிகிறதா? யென என்னை க் கேட்டார். பின்பற்ற நிறையஆசையிருந்தும் முடியவில்லை என்றேன். அப்ப டித்தான் அதுயென ஒப்புக்கொண்டார்.

என்னோடு அண்ணாமலையில் படித்த செலவராஜ் என்ற நண்பர்தான் எனக்கு ஜே.கே.வின் எழுத்துகளை அறிமுகம்செய்தான். அன்று ஜே.கே. யை படித்து முடித்ததும் அவனோடு அது பற்றிப் பேசியபோது, ஜே.கே.யுடைய தத்துவங் கள் அனைத்தும் யோசிக்கும் படியும்,யோசித்தவைகளை ஒப்புக்கொள்ளும் படியும் இருக்கிறது. ஆனால், ந்ம்முடைய இந்தவயதில் அதைப்பற்றிக் கொள்ள முடியும் என்றுதோனவில்லை என்றேன். அதற்கு அந்த நண்பன் சொன்னான்," இன்றைய நம் உணர்வுகள் சதையோடும், இரத்தத்தோடும் கலந்து விட்டவை ள். திடுமென இன்றைக்குப்போய் அந்த தத்துவங்களை வாழ்வில் பிணைத்துக் கொள்ள முடியாது என்றவன், இன்றைக்கு நாம்பரம்பரைப் பணக்காரனாக இருந்தோமெனில் எதுகுறித்தும் கவலைப்படாமல் அவரோடு தாராளமாகப் போகலாம் என்றான். அவன் கூறியதை திரும்பத்திரும்ப யோசித்ததில் சரியென்றுதான் பட்டது . அதனால்தான் சு.ரா. அது குறித்து கேட்டபோது உடனே அப்படிச் சொன்னேன்.

கணையாழி இதழ், அன்றைக்கு இலக்கிய வாசகர்களின் பெரியவரவேற்பைப் பெற்ற இலக்கியஇதழ். பல படைப்பாளிகள் அதில் எழுதியபோதும் சு.ரா. அதில் எழுதுவதில்லை. அது குறித்தும் கேட்டேன். கணையாழியின் போதாமையைச் சொல்லியவர், இந்த இதழ் கணையாழியை வாசித்தீர்களா? என்று கேட்டார். வாசித்தேன் என்றேன். நடந்துக் கொண்டிருக்கும் தமிழீழப் பிரச்சனை எத்தனை கனமானது? அதை அவர்கள் அணுகும் விதத்தைப் பார்த்தீர்களா? என்றார். அவர் குறிப்பிட்டசெய்தி, கணையாழில் நான்கு விசயதானங்களுக்கு எழு
தப்பட்ட ஒரே தலையங்கத்தில், தமிழீழம் குறித்த ஏதோ ஓர் பிரச்சனையின் அலசல் நான்கு வரியில் இடம் பெற்றிருந்தது.

தொடர்ந்த சம்பாசனையில், நான் எதுகுறித்து அவரைச் சந்திக்க நினைத்தே னோ அந்தமுனைக்கு வந்தேன். ஜே.ஜே.சில குறிப்புகளுக்கு கடந்த இரண்டு வருடங்களாக எல்லாதரப்பிலிருந்தும் ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துவிட்டது, உங்கள் நாவலில் முல்லைக்கல் நாயரை இடதுசாரி சிந்தனை கொண்ட எழு த்தாளராகக் காட்டி, அவரை விமர்சனத்திற்கு உள்ளாக்கியதின் பொருட்டே, இடதுசாரி சிந்தனையாளர்கள் அநியாயத்திற்கு உங்களையும், உங்களது நாவ லையும் விமர்சிக்கிறார்கள். நீங்களோ எந்தவொரு விமர்சனத்திற்கும் இன்று வரை பதில் செய்யவில்லை! உங்களது விளக்கத்தையோ, எதிவினையையோ பதிவு செய்வதுதான் சரியாக இருக்கும் என்றேன்.

அந் நாவலுக்கு இன்னும் விமர்சனங்கள் வந்தபடி உள்ளது என்றும், கொஞ்சம் காலம் கழித்து நிச்சயம் பதில் செய்வேன் என்றும் கூறினார். சிலஆண்டுகள் கழித்து அப்படியொரு எதிர்வினையையும், தன்னிலை விளக்கத்தையும் பதிவு செயயவே செய்தார். ஆனால், விமர்சனம் செய்தபலரின் குறைகளுக்கு அதில் பதில் இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு வகையில் எல்லோரின் விமர்சங் களுக்கும் பதில் சொல்வதென்பது ஆகிற காரியமுமில்லை.

அந்த நாவலின் ஓரிடத்தில், 'இந்த பறவைகளின் இறப்பை நாம் காண முடிவ தில்லை! அவைகள் எங்கே போய் இறக்கின்றன?'என்பதாக சு.ரா. வியந்திருப் பார். அது ஒரு கவிதை நயம் கொண்ட வரி! சு.ரா.வுக்கு இதுகூட தெரியாதுப் போனதே யென நாம் நினைத்துவிடமுடியாது. ஏனெனில் அது அவருக்குத் தெரியும்! நாவலில் ஏதோ அர்த்தத்தில் அப்படி அந்தவரியினை கவிதையாக்கி யிருக்கிறார் என்றுதான் நினைக்கத்தேன்றும். அதுதான் சரியான வாசிப்பின் அடையாளமாகவும் இருக்கும். ஆனால், அந் நாவலுக்கு விமர்சனம் எழுதிய தருமு. சிவராம் அந்த வரியினைச் சுட்டி, இதுகூட சு.ரா.வுக்கு தெரியாதாயென எள்ளி நகையாடி, பறவைகள் எங்கே எப்படி இறக்கிறதெனறும், இறந்தப் பற வைகள் எந்தந்த மிருகங்களுக்கும் ஜந்துக் களுக்கும் இரையாகிறதென்றும் பெரியதோர் வியாக்கியானமே செய்திருந்தார். இப்படிப்பட்ட விமர்சனங்களுக் கெல்லாம் யாரால்தான் பதில் தந்து மாளும்!

ஜே.ஜே பற்றியும் முல்லைக்கல் பற்றியும் கேட்ட ஒரு கேள்விக்கு, ஜே.ஜே. யும் முல்லைக்கல்லும் எல்லா மொழி எழுத்தாளர்களிலும் இருக்கிறார்கள் என்றும், அவர்களை நாம் வாசர்களின் பார்வைக்கு கொண்டுவந்து சர்ச்சிக்க வேண்டியது அவசியம் என்றார்.

ஜே.ஜே.யின் சில கோபங்களை யதார்த்தகோணத்தில் பார்க்கிறபோது, அதில் பெரிய அர்த்தமிருப்பதாக தெரியவில்லையே என்ற நான், ஒரு மாட்டின்மீது யாரோ ஒருவன் வெற்றிலையைக் குதப்பிய எச்சியலைத்துப்பினான் என்பத ற்காக அவன்கொள்ளும் பெரும்கோபமும், அதுகுறித்த அவனது அநியாயத்தி ற்கு மன உலைச்சலையும் முன் வைத்தேன்.

ஜே.ஜே. ஒரு 'perfectionist' என்றும், அவனால் இந்தரீதியிலான மனிதசெயல் களை ஜீரனிக்க முடியவில்லை என்பதாகவும் கூறினார். அப்படி அவர் கூறி னாலும், அந்த பதில் ஏற்கத்தகுந்ததாக இல்லை. மனித கோமாளித்தனங்களும், சேட்டைகளும் நிரவிக்கிடப்பதுதான் சமூகம். அது ஓர் ஓர் யுனிவர்சல் சாபம்! எந்த ஒரு தேசத்தின் எந்த ஒருசமூகமும் இதற்குவிதிவிலக்கல்ல. இங்கே நூறு சதவீதம் யாரும் சரியானகோணத்தில் உருகொள்வதும் சாத்தியமில் லை. இப்படியேதொடர்ந்து, தான் ஒரு 'perfectionist' என்கிறவிரைப்பில் அவன்
கோபப்படுவானேயானால், அவனுக்கு நாளின் இருபத்திநாலு மணி நேரமும் அதற்கே போதாது. யோசிக்கிறபோது பச்சை இந்தியனான ஜே.ஜே. கூட சிறு நீர் கழிக்க வெளியில், பாதையோரத் திருப்பங்களைப் பயன்படுத்தவும் தவறியிருக்க மாட்டான். சு.ரா.விடம் இப்படி யெல்லாம் அதுகுறித்து அடுத் தடுத்து பேசுவது சரியாகப்படவில்லை. அவர் வீட்டில் பருகிய பில்டர் காஃப்பி யின் மணமும், அதன் சுவையும் இன்னும் நாவில் மீதம் இருந்தது. சிகிரெட் பாக்கெட்டைத் திறந்தேன்.

இந்த நாவல் தமிழுக்குப் புதுமையான ஒன்று என்கிறரீதியில் கேட்கிறேன், வாசகர்கள் இந்த நாவலை எப்படி அணுகுகிறார்கள்? உங்களுக்கு அது திருப்தி தருகிறதா? வாசகர்கள் இந்த நாவலை வித்தியாசமாகப் பார்கின்றார்கள் என்றும், பிற தீவிரப் படைப்புகளை வாசிக்க சிரமப்படுவது மாதிரி இந்த நாவல் வாசிப்பும் அவர்களுக்கிருப்பதாகத் தெரிவதை, அவர்களின் கடிதம் வழியே அறிய முடிகிறதென்றார். நாவலில் கடைசியாக இணைக்கப்பட்டுள்ள அனுபந்தத்தில் காணும் ஜே.ஜே.யின் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்பதாககூட கடிதத்தில் கேட்டு எழுதுகிறார்கள் என்று அவர் சொன்னபோது, முகத்தில் கீற்றாய் அர்த்தப் புன்னகை.

ஜே.ஜே.சிலகுறிப்புகளில் அவர் வகுத்த அப்படியான அமைப்பியலின் நேர்த்தி யினால், வாசகர்கள் சிலர் அந்த அனுபந்தத்தை நாவலோடான கடைசிப் பக் கங்கள்யென உள்வாங்கிக்கொள்ள முடியாமல், தனியாக பிரித்துப்பார்த்து விட்டார்கள்! ஜே.ஜே.யை நிஜத்தில் வாழ்ந்த எழுத்தாளனாக கூட அவர்கள் நம்பியிருக்கக் கூடும்!

நான் அந்த நாவலை முதல்வாசிப்பு செய்தபோது, என் இலக்கிய நண்பரான ஹாஜா அலியிடம் டெலிபோனில் பேசினேன். அவர் அந் நாவலை எனக்கு முன் வாசித்திருந்ததினால், அதைப்பற்றிபேச சௌகரியமாகவும் இருந்தது. ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலைவிட,பின்னால் இருக்கிற ஜே.ஜே.யின் டைரி குறிப்பு நன்றாக இருந்தது என்றேன். அவர் சிரிப்பது கேட்டது. என்ன விசயம் என்றேன். "அது அப்படி இல்லிங்க 'It's totaly a novel' என்றார். எனக்கு குழப்பமாக இருந்தது. Fast page - திருப்பிப் பாருங்க, அதிலே நாவலுன்னுப் போட்டிருக்கும், டைரின்னுயெல்லாம் தனியா ஒன்னும் கிடையாது" என்றார். கொஞ்ச நேரம் கழித்துதான் அந் நாவலின் அமைப்பியலிலான மயக்கம் புரிந்தது. அவரும் இந்த அமைப்பியல் வெற்றியை உணர்ந்தவராகத்தான் இருந்தார். அதனால்தான் அந்த புன்னகைக்கீற்று! இந்த அமைப்பியலை யூகித்துதான் அந்நாவலை க.நா.சு. வித்தை என்றாரோ?

சு.ரா. வைச் சந்தித்தபின்னர் சில ஆண்டுகள் கழித்து க.நா.சு.வை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் டெல்லியிலிருந்து சென்னைக்கு தனது ஜாகையை மாற்றிக்கொண்டு வந்திருந்த நேரமது. 'ஏன் ஜாகையை மாற்றிக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டீர்கள்?' என்ற பத்திரிகைப் பேட்டி ஒன்றின் கேள்வி க்கு 'சாவதற்காக சென்னைக்கு வந்துள்ளேன் என்றிருந்தார். அவரது பதில் யோசிக்கும்படி இருந்தது. தவிர, அவரைப் பார்க்கவும் தூண்டியது. சாவதற்காக சென்னை வந்திருந்த அவரை, மகிழ்ச்சியுடன் சந்தித்தேன். மதிப்பிற்குறிய 'க்ரி யா' திலிப்குமார்தான் வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தார். போனஇடத்தில் அவரிடம் ஏகப்பட்டகேள்விகள். 'நீங்கள் ஏன் ஜே.ஜே.சில குறிப்புகளை ஒப்புக்கொள்ள வில்லை?' என்ற கேள்விக்கு, கொஞ்சமும் நேரம் எடுத்துக்கொள்ளாமல், "அவரது புளிய மரத்தின் கதையை நான் நாவலாக ஒப்புக்கொள்வேன்" என்றார். தொடர்ந்து அந்நாவல் குறித்து பேசுவதை அவர் தவிர்ப்பது மாதிரி தெரிந்தது. ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலை நாம், நாவலின் புதிய வடிவம் என்று சிலாகித்த அதே வேளை அதை அவர் நாவல் வடிவமாகவே ஒப்புக் கொள்ளவில்லை என்பதாக உணர்ந்தேன்.

ஓர் ஆறு ஆண்டுகளுக்கு முன், கணையாழி அலுவலக வாசலில் வைத்து பெரியவர்.வெ.சா. சந்தித்தேன். அவருக்கு வணக்கமெல்லாம் செய்தப் பிறகு கூடுதல்நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அவரிடம் மறக்காமல் கேட்டது, 'நீங்கள் ஏன் ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலுக்கு விமர்சனம் எழுதவி ல்லை?' என்பதுதான். இல்லை, நான் எழுதியிருக்கிறேன் என்றும், கர்நாடகாவி லிருந்து வரும் ஆங்கில நாளிதழில் அது வந்தது என்றும் சொன்னார். தொடர்ந்து அது குறித்து பேச முற்படும் முன் அவர் பக்கத்திலிருந்தவரிடம் வேறுபேச்சுக்குப் போய் விட்டார். பிறகும்கூட நிறைய நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், டீயெல்லாம்கூட குடித்தோம் ஆனால் அவர் நான்
எதிர்பார்திருந்த முனைக்குவரவில்லை. அந்த ஆங்கிலநாளிதழில் அவர் என்ன எழுதியிருந்தார்? என்பது இன்றுவரை எனக்கு தெரியாது. அதை யாரேனும் தமி ழில் பதிந்திருக்கிறார்களா? என்பதும் தெரியாது.

நீண்ட நேரத்திற்குப் பிறகு, சு.ரா.வுடன் அவர் வீட்டு மாடியைவிட்டு இறங்கி முன்புறம்உள்ள பிரதானசாலையில் வலது புறமாக நடந்தப்படி பேசிக்கொண் டே போனோம். அந்த சாலையின் முடிவில், இரண்டு மூன்று சாலைகள் சந்தி க்கும் மிகப்பெரிய வட்ட வடிவிலான இடம் தென்பட்டது. அதன் மையத்தில் சிதைந்த, வயதுகூடிய ஓர் புளிய மரம்! பார்க்க பரிதாபகரமாகத் தெரிந்தது. எங் கள் ஊர் பக்க சாலையோரங்களில் மையில்கணக்கில் ஏகத்திற்கும் பெருத்த வளமான புளிய மரங்களை பார்த்திருக்கிற எனக்கது அப்படித் தெரிந்ததில் ஆச்சரியமில்லை! அந்த புளியமரத்தைச் சுட்டிக்காட்டிய சு.ரா., புளியமரத்தின் கதையில் பேசப்பட்ட புளியமரம் இதுதான் என்றார். அவர் சொன்னார் என்ப தற்காக அதை விசேசமாகப்பார்த்தும் அதுஎனக்கு அதே பரிதாபத்தோடுதான் தெரிந்தது. தவிர, புளியமரத்தின் கதையை அன்றைக்கு நான் படிக்கவுமில்லை. படித்திருந்தேன் என்றாலும், நாவலின் கட்டியக்காரன் மாதிரி கதைகூறிய அந்த வித்தகக்காரக் கிழவனைத்தான் தேடியிருப்பேன்!

இன்னொரு திருப்பத்தில் நடந்துக் கொண்டிருந்த போது, அந்த சாலையில் இருந்து இன்னொருசாலைக்கு குறுக்கு வழியாக ஓர் உயர் நிலைப் பள்ளிக் கட்டிடத்தைக் கடந்தபோது, தான்படித்த பள்ளிக்கூடம் என்றார். அவரது சிறுக தைகள் சிலவற்றில் அந்த பள்ளிக் கூடம் இடையோட்டமாக காட்டப்பட்டிரு ப்பதை வாசித்திருக்கிறேன்.அந்த பள்ளிக்கூடத்தையும் அதையொட்டிய பெரிய விளையாட்டு மைதானத்தையும், அந்த மாலை வேளையில் மாணவர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருந்ததையும் ஓர் ஓரத்தில் அமர்ந்து வேடிக் கைப் பார்த்தோம். சிறிது நேரத்திற்குப்பிறகு நான்மட்டும் எழுந்துநின்று, அந்த உயர்நிலைப் பள்ளியின் நான்குபுற காம்பௌண்ட் சுவரையும், நடைப் பாதை யின் ஓரமாக ஓங்கி வளர்ந்து நின்ற 'நெட்லிங்'கையும் பார்த்தேன். நான் ஆர் வமாக பார்த்துக் கொண்டிருப்பதாக சு.ரா. நினைத்திருக்கக் கூடும்! அப்படி அவர் நினைத்திருந்தால் அது தவறாகப் போயிருக்கும். சீர்காழியில் நான் படித்த 'சபாநாயக முதலியார் இந்து உயர் நிலைப்பள்ளி'யின் கட்டிடமும் அந்த நடைப்பாதை நெட்லிங்கும் அப்படியே இங்கே பேர்த்து வைத்த மாதிரி தெரிந்ததினாலோ என்னவேதான் அப்படி கண்கொட்டாமல் பார்த்தேன்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலையில் வெகுதூரம் நடந்தோம். ஒரு திருப் பத்திலிருந்த டீ கடையில் டீ சாப்பிட்டு விட்டு மீண்டும்வீடுநோக்கி திரும்பி னோம். அவரது வீட்டின் அருகான்மையில் ஒரு புத்தகக்கடை! ஏதோ பல சரக் குகடை மாதிரி அல்லது அதை விட மோசமான நிலைக்கொண்டதாக இருந் தது. புத்தகங்களை கீரைக்கட்டு மாதிரி திட்டுத்திட்டாக குவித்து வைத்திருந் தார்கள். என்றாலும், அந்த கடையில் புத்தகம்வாங்கவே நினைத்தேன். அந்த காலக்கட்டத்தில் புத்தகக்கடையைப் பார்த்துவிட்டால் எனக்கு ஏற்படும்ம் பரபரப்பு சொல்லிமாளாது. அறிவே புத்தகத்திலிருந்துதான் என்பதாக ஓர் மா யை. சு.ரா. அவர்களை அவரது டேஸ்டிற்கு ஒருபுத்தகத்தை தேர்ந்தெடுத்து தரு ம்படிச்சொன்னேன். முதலில் தயங்கியவர், 'வா.ரா. வாசகம்' என்கிற புத்தகத்தை பின் தேர்வு செய்து தந்தார். இன்றைக்கும் என் புத்தக அடுக்கில் அது தலைக் காட்டுகிறது.

இரவென்றும் பாராது நான் தங்கிருந்தலாட்ஜ்வரை உடன்வந்திருந்து சு.ரா என்னை வழியனுப்பி வைத்தார். சு.ரா.வுடன் இன்னொரு எழுத்தாளரும் உடன் வந்தார். அவர்தான் திரு.அ.கா.பெருமாள் அவர்கள். சு.ரா.வுடன் நான் சம்பாச னைகள் தொடங்கிய போதே அவர் வந்தார். சு.ரா.எனக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு முன்னால் நான் அவரது எழுத்தைப் படித்தது இல்லை. சரியாகச் சொன்னால், இலக்கிய வட்டத்திற்குள் அவரை அறிய நேர்ந்துஅப்பொழுதுதான். அன்றைக்கு இலக்கியத்தில் அத்தனைக்கு பொடுசு. திரு.அ. கா.பெருமாள் அவர்கள் ஆரம்பம் தொட்டு கடைசிவரை அன்பு கொண்ட பார்வையல்லாமல் வேறொன்றும் என்னோடு பேசினாரில்லை!
ஜே.ஜே.சிலகுறிப்புகள் படித்துவிட்டு எல்லைகள் பலதாண்டி வந்துவிட்ட பொடியன் என்றறவர் நினைத்திருக்கலாம். நிஜமும் அதுதான்.

***

சு.ரா.வேடு எனக்கு அதன்பிறகும் சிலகாலம் கடிததொடர்பு இருந்தது. எனது தந்தை இறந்ததையொட்டி என்ஆற்றாமையை சு.ரா.வுக்கு எழுதியிருந்தேன். சு.ரா.விடமிருந்து பதில் வந்தது. ஒரு கவரில் இரண்டு கடிதங்கள். ஒன்று, அதற்கு முன் நான் எழுதிய இலக்கியம் சார்ந்த சங்கதிகளுக்கானது. இன்னொ ன்று, என்துயரத்தை துல்லியமாக அவர் புரிந்துக் கொண்டதிற்கான பதில். அவரது ஆருதல் வரிகள் எனக்கன்றைக்கு சரியான மனவைத்தியம்.

இன்றைக்குகூட எனக்கு, ஒருவரின் இறப்பு குறித்து அவரின் சம்பந்தப் பட்ட வர்களுக்கு ஆருதல் சொல்லி எழுத வராது. இயற்கையின் தத்துவத்தையும், நடைமுறை வாழ்வின் போதாமையுமாக பெருவெளித் தத்துவங்களை அதில் மொழுவி, சம்பந்தப்பட்டவர் மதவாதியாகஇருந்தால், ஆண்டவனையும் ஆன்மா வையும் துணைக்கழைத்து, பெரிய கஷ்டம்! வாசிக்கும் சம்பந்தப் பட்டவனுக் கோ, இருக்கிற சோகம் போதாதென்று அந்த கடிதத்தமும் கூடிக்கொள்ளும். சு.ரா. மறைவையொட்டி அவரது மகன் கண்ணனுக்கு ஆறுதல்கூற நினைத் தபோது, நல்லப்பிள்ளையாக சு.ரா. எனக்கு எழுதிய அந்த ஆருதல் கடிதத்த வரிகளையே காப்பிசெய்து அவருக்கு அனுப்பிவைத்தேன்.

சு.ரா.வை நாகர்கோவிலில் வைத்து சந்தித்தப்பிறகு, அடுத்து அவரை சந்தித் தது பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு! 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' புத்தக வெளியீட்டின் விழாவின் போதுதான் அவரை பார்த்தேன். அந்த நாவலை அர ங்கத்தில் வாங்கிய நான், விழா முடிந்த நேரத்தில் அதில் அவரிடம் கையெழு த்து வாங்கப்போனேன். கையெழுத்து இட்டுத்தந்தார். 'என்னை நினைவிருக்கி றதா ஸார்?' என்றேன். ஏறிட்டுப்பார்த்து யேசித்துவிட்டு 'தெரியவில்லையென' உதட்டை பிதுக்கி தலையை ஆட்டினார். 'ஜனவரி ஒன்னில் வாருங்கள் உங்க ளை நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும்' என்ற அவரது கடித வரி ஞாபகத்திற்கு வந்தது. நிஜமாகவே அப்பொழுது ரெம்பவும் அவர் தளர்ந்தி ருந்தார். முதுமை மனிதர்கள்மீது ரொம்பவும்தான் ஆளுமைச் செய்கிறது. மனி தர்களை அது மறதியின்பால் தள்ளுவது ஆகப் பெரிய கொடுமை. யார்தான் தப்பிக்க முடியும்?

'தமிழ் இனி 2000' விழாவின் முதல்நாளன்று சென்னை மியூசியம்அரங்கில் கவிஞர்.சல்மாவின் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது. அந்த வெளியீட்டு விழாவில் மீண்டும் சு.ரா.வை காணும் வாய்ப்பு கிடைத்து. இந்த முறை தூரத்தில் மேடையில் வைத்துக் கண்டேன். அவரதுமுகம் சரிவரப் பார் க்க கிடைக்காதுபோனதில் சங்கடமில்லை. அவரது உருவம்தான் மனதில் தெளிவாக இருக்கிறதே!

இன்றைக்கு சு.ரா. இல்லை. ஜே.ஜே.சிலகுறிப்புகளில், ஜே.ஜே.மாதிரி ஆகனு மென பாலு என்கிற இளைஞன் ஆசை கொள்வான். அதை எழுதிய சு.ரா. மாதிரி ஆகனும் என்பதாகக்கூட அந்நாவலைப் படித்த பல இளைஞர்கள் ஆசைக் கொண்டார்கள். அவர்களதுஆசை வீண் போகவில்லை. சிலர் தங்களின் படைப்பின் வழியே அப்படி முயன்று சாதித்தும் இருக்கிறார்கள்! அந்த தொடர்ச்சியான முயற்ச்சிகள் இன்னமும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு சு.ரா.வுக்குப் பதிலாக பல சு.ரா.க்களை காலத்தில் நாம் பார்க்கலாம். பின், சு. ரா.வுக்கு இறப்பேது!

***
satajdeen@gmail.com

Tuesday, October 03, 2006

பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு / வ.ந.கிரிதரன்


நான் கொஞ்சம் பேசிவிடுகிறேன்.
-----------------------------------------

பாரதியார் நினைவு குறித்து நண்பர் வ.ந.கிரிதரன் எழுதியிருக்கும் 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' & 'பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?' என்கின்ற ஆய்வுக் கட்டுரையினை சமீபத்தில்தான் வாசித்தேன். ஆய்வில் அவர் எடுத் தாழும் பாரதியின் வரிகளும், வைக்கும் வாதமும் மறுக்க முடியாதா நிஜங் கள். கருத்தாக்கங்களின் மீது பாரதியின் பார்வை பல நேரம் இரட்டை நேக்கு கொண்டதாக இருப்பதை நாம் காணவே செய்கிறோம். சமூக சிந்தனைக் கொண்ட ஒருவன், தன் வாழ்நாட்களில் தான் எதிர் கொள்ளும் பல விதாமான கருத்தாக்கங்களையும்கணக்கில் எடுத்துக் கொள்ளவே செய்வான். இன்றைக்கு சரியெனப்பட்ட ஒன்று, நாளை அவனுக்கு உறுத்துமானால் அதனைத் தவிர்க்கவும் செய்வான். நாம் அஃறிணையாக பார்க்கும் மரங்களுக்குகூட நித்தம் ஒரு வளர்ச்சியும், எளிய மாற்றங்களும் சாத்தியமாக இருக்கிறது. பாரதி ஆறறிவுக் கொண்ட மனிதன். சிந்தனைப் போக்கில் சின்னச் சின்ன மாறுபாடுகள் அவனிடம் எழுவதை நாம்தான் சரியான கண்கொண்டு பார்க்க வேண்டும்.
இன்னொரு மூத்த மதத்தில் பிறந்து வாழ்ந்து வளர்ந்த பாரதி, இஸ்லாத்தையும், அதன் கடவுளையும், தூதரையும் போற்றிப் புகழ்
வதும் / வரிக்கு ரெண்டு சமஸ்கிருத வார்த்தைகளைப் புழங்கியப் பாரதி தமிழ் மாதிரி உலகில் வேறுமொழி இல்லையென்றதும் /பெருமாளை மூலப் புருஷராக கொண்டாடிய வம்சத்தில் வந்த அவன் மாகாளியைப் பூஜித்துப் போற்றியதும் / வால்மீகியையும்,வியாசரையும் தொய்வ ஸ்தானத்தில் வைத்துக் கொண்டாடிய குலத்தில் தோன்றி வளர்ந்தவன் வள்ளுவனையும், அவனது திருக்குறளையும் வான்வுயரத் தூக்கிப் பிடித்ததையும் / கணவன் இறப்பிற்குப் பின் சதியேற்றியும், மொட்டையடித்தும், மூலையில் அமர்த்தியும் பெண்களை சிதைத்த அடிப்படைவாதிகள் நிறைந்த இனவழி வந்த அவன் பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்ததும் /பரத நாட்டியத்தை தெய்வீக கலையாக கொண்டாடிய இனப்பிரிவில் வந்த அவன், பரத நாட்டியத்தை சதிர்யென சிறுமைப் படுத்தியும், அதைப் பயிலும் பெண்களை கண்டித்து குரல் கொடுத்தும் / வியாசரின் மஹாபாரதத்தை வேதத்திற்கு சமமாகப் போற்றிய குல வழி வந்த அவன், புதிய பாஞ்சாலி சபதம் எழுதி, மனைவியை சூதாட பணயம் வைத்த தருமனின் கையை வெட்டுக என்றதும் / லோககுருவாகப் போற்றப்பட்ட மதக் குருவை விமர்சனத்திற்கு உட்படுத்தியதையும் வைத்தே இன்றைக்கு நாம் பாரதியை வியப்புடன் திரும்பிப் பார்க்கிறோம். இரட்டை நோக்கு வளரும் காலங்களில் சகஜம். வேண்டுமானால் இப்படி சொல்லலாம், 'பாரதி புரட்சியின் படிகட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தவன். அதன் கடைசிப் படி வேண்டுமானால் 'பொருள் முதல்வாதமாக' இருக்கலாம்! ஆனால், அவன்தான் அவனது உச்சத்தை எட்டுவதற்கு முன்னாலேயே இறப்பைக் கொண்டுவிட்டானே!' இந்த படியேற்றத்திற்கே அவன் தந்த விலை அதிகம். வறுமை / ஏழ்மை / பைத்தியக்காரன் பட்டம் /அவன் ஈமக்கிரியைக்கு எண்ணி பதிமூன்று பேர்கள்.
இங்கே கிரிதரன் எடுத்து வைக்கும் வாதத்தின்படி, பாரதியை முன் நிறுத்தி 'கருத்து முதல்வாத' 'பொருள் முதல்வாத' அளவுகோல்களை உரசிப் பார்ப்பவர்கள் மார்க்சிஸ்ட்டாகதான் இருக்க வேண்டும். பாரதியை இவர்கள் ஆய்வுக்கு உட்படுத்த நினைத்திருக்கும் பட்சம் 'மனித அளவுகோலை' கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இங்கே இவர்கள் தங்களது கோட்பாட்டிற்கு உள்ளடங்கிய அளவுகோலை கையில் எடுத்துக் கொண்டு,பாரதியை அளப்பதென்பது முரண்பாடு.
சோவியத் யூனியனை முன்வைத்து கம்யூனிச சித்தாந்தத்தைப் போற்றியதுப்போக, அதில் எதை எதை பாரதி ஆகாத்து என்றானோ அதே காரணங்களால்தான் பின்னால் அது சிதையுண்டது. பாரதியின் தீர்க்கத்தை மார்க்சிஸ்ட்டுகள் உணர்ந்திருக்கவும்கூடும். அடக்கு முறைகளையும்/ மனித உரிமை இழப்பையும் நவீன சமூகம் ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது. உலகம் தழுவியநிலையில் மக்கள் ஒப்புக்கொண்ட நிலைப்பாடாக ஜனநாயகத்தைப்போற்றி, சென்றநூற்றாண்டின் சிறப்புகளில் ஒன்றாக அதைப்
பார்க்கிறார்கள். பாரதியும் அந்தகாலக் கட்டத் துவக்கத்தில் வாழ்ந்தவன்
தானே!
கிரிதரன் பாரதியை சரியான கோணத்தில் நம்மைப் பார்க்கச்செய்ய போதுமான அளவில் அவனது கவிதை வரிகளை நமக்கு உதாரணம் ஆக்கியிருக்கிறார். பாரதியின் கவிதைகளைத் தாண்டி, அவனது கட்டுரைகளில் தேடிப்புகுந்தால் இன்னும்கூட நிறையச் சான்றுகள் அவருக்கு கிட்டியிருக்கும்.
பாரதியை எந்த ரீதியில் ஆய்வு செய்தாலும், குறைந்த வாழ்நாள் கொண்ட அவனது வயதையும், இருக்கமானப் பின்னணிக் கொண்ட அவனது சமூகத்தையும், பிறப்பால் அவன் மீது ஏறப்பட்ட மதத் தாக்கங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அதோடு அவனது வறுமையினையும் சேர்த்துக் கொள்வது சரியாக இருக்கும். இதை ஆய்வாளர்கள் மனதில் இருத்திக் கொண்டு ஆய்வைத் தெடங்குவார்களேயானால் பாரதியின் மையமும், அதில் அவன் ஆற்றிய அளப்பற்கறிய செயல்பாடுகளும் /அதன் உண்மையும் /முகம் காட்டும் அவனது புரட்சிகளும் நம்மை மலைக்க வைக்கும். என்றாலும், அவன் ஆன்மீக வாதிதான். கருத்து முதல்வாதத்தில் தத்தளித்து அவ்வவ்போது பொருள் முதல்வாத கரையில் அசுவாசம் கொண்டவன்!
- தாஜ். 01.10.06
***
'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
- வ.ந.கிரிதரன்.
தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சரியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள்,இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை' என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் 'கருத்து முதல்வாதிகள்'. இவர்கள் 'சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது' என்றும், 'இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு' என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல 'இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே' என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் 'பொருள் முதல்வாதம்' எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் 'பொருள்முதல்வாதிகள்' எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி 'ஆன்மா நிலையானது, அழிவற்றது' என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே'. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் 'அப்படி எதுவுமில்லை' என்கின்றார்கள். 'இவ்வியற்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே உயிரினங்கள் உருவாகக் காரணம்' என்கின்றார்கள். நவீன
இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியை ஆராய்வோமாகில் அவனும் இந்தப் பிரச்சினையை அசட்டை செய்து விடவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம். பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் அவனை ஒரு கருத்து முதல்வாதியாகக் காட்டுகின்றன. 'அல்லா' என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகின் றான்:
"..பல்லாயிரம் பல்லாயிரம் கோடியண்டங்கள் எல்லாத்திசையிலுமோரெல்லையில்லா
வெளிவானிலே நில்லாது சுழன்றோட
நியமஞ் செய்தருள் நாயகன்.."
'மகாசக்தி வாழ்த்து' என்னும்
கவிதையில் அவன் கூறுவதோ?
"..விண்டுரைக்க அரிய அரியதாய்
விரிந்த வானவெளியென நின்றனை.
அண்ட கோடிகள் வானிலமைத்தனை
அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை.
மண்டலத்தை அணு அணுவாக்கினால்
வருவதெத்தனை யோசனை கொண்ட
தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே!
நினைக் காளியென்றேத்துவேன்.."
மேலுள்ள பாடல் வரிகள், மற்றும் பாரதியின் அனேக தெய்வப் பாடல்கள் கூறுவதென்ன? இந்த உலகம், இந்தப் பிரபஞ்சம் யாவற்றையும் ஆக்கியது ஒரு சக்தி , அதுவே கடவுள் என்பதையல்லவா? ஆனால் இவ்விதம் இயற்கைக்கு வேறாக ஒரு கடவுளைப் படைக்கும் கருத்து முதல்வாதியாக விளங்கும் பாரதியால் , கண்ணெதிரே தெரியும் காட்சிகளை, அவற்றின் உண்மையினைக் கருத்து முதல்வாதிகளைப் போல் மாயை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை. பொருள் உண்மையென்ற பொருள்முதல்வாதத்தினையும் மறுத்து விட முடியவில்லை. பாரதியின் 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்ற கவிதையினைப் பார்த்தால்....
"..நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ?
பலதோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே! இளவெயிலே! மரச்செறிவே!
நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதினால்
நானுமோர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்ற ஒரு நினைவும்
காட்சியென்ற பல நினைவும்
கோலமும் பொய்களோ?
அங்கு குணங்களும் பொய்களோ?.."
இவ்விதமாகக் 'காண்பவை , கருதுபவை ' யாவுமே பொய்யோ எனக் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவும் பாரதியார் மேழுள்ள கவிதையின் இறுதியில் பின்வருமாறு முடிக்கின்றார்.
"..சோலையிலே மரங்களெல்லாம்
தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?
இதைச் சொல்லொடு சேர்ப்பீரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம்
விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதி கண்டோம்.
காண்பதல்லால் உறுதியில்லை.
காண்பது சக்தியாம்.
இந்தக் காட்சி நித்தியமாம்..."
ஆரம்பத்தில் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவிய பாரதி , இறுதியில் பொருள் முதல்வாதியாக முடிக்கின்றான்.அதனால் தான் கருத்து முதல்வாதிகளைப் போல் 'காண்பதெல்லாம் மாயை'யென்று முடிக்காமல் 'காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்தியமாம்' என்று முடிக்கின்றான். இவ்விதமாக பாரதி தனிக் கருத்து முதல்வாதியாகவும் இல்லாமல், தனிப்
பொருள்முதல்வாதியாகவுமில்லாமல் , கருத்து முதல்வாதத்திற்கும் பொருள் முதல்வாதத்திற்குமிடையில் ஒருவித இணக்கமான போக்கினை, சமரசப் போக்கினைக் கைக்கொள்பவனாகக் காணப்படுகின்றான்.
உண்மையில் பாரதி 'அல்லா', 'மகாசக்தி வாழ்த்து' மற்றும் பல பக்திப் பாடல்களின் அடிப்ப்டையில் கருத்துமுதல்வாதியாகத் தென்பட்டாலும், 'உலகத்தை வினவுதல்' என்ற கவிதையினூடாக நோக்கும் போது மேலே கூறப்பட்டதைப் போல் இருவிதமான தத்துவவியற் போக்குகளுக்குமிடையில் ஒரு சமரசம் செய்பவனாகவே தென்படுகின்றான். உண்மையில் பாரதியிடம் காணப்படும் இத்தகைய முரண்பாடுகளெல்லாம் அவனது ஆர்வமிக்க, உலகை அறியும் நோக்கு மிக்க மனப் போக்குகளின் வளர்ச்சியின் வெளிப்பாடுகளே. இத்தகைய போக்கினையே அவனது 'சுயசரிதை' என்ற கவிதையின் பின்வரும் வரிகளும் புலப்படுத்துகின்றன.
"..மாயை பொய்யென
முற்றிலும் கண்டனன்.
மற்றுமிந்த பிரமத்தினியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்.
தன்னுடை அறிவினுக்கு
புலப்படலின்றியே தேய மீதெவரோ
சொலுஞ் சொல்லினைச்
செம்மையென்று மனத்திடை கொள்வதாம்
தீய பக்தியியற்கை வாய்ந்திலேன்.
சிறுது காலம் பொறுத்தினுங் காண்பமே.."
மாயை பொய்யெனக் கூறும் பாரதி, 'பிரமத்தின் இயல்பினை அறிய இன்னும் அருள் பெறவில்லை' என்று கூறும் பாரதி,அறிவிற்கு புலப்படாத எவற்றையும் நம்பும் தன்மையில்லாத பாரதி, அத்தகைய அறிவு நிலையினை அடையும் வரை பொறுப்பேன்' என்கின்றான். இவ்விதமாக பாரதியின் அறிவுத் தாகமெடுத்து அலையும் மனதில் ஏற்பட்ட தர்க்கப் போராட்டத்தின் விளைவுகளே அவனது மேற்கூறப்பட்ட முரண்பாடுகளே தவிர வேறல்ல. இத்தகைய முரண்பாடுகள் அவனது மாபெரும் மேதைமையின் வளர்ச்சிப் படிக்கட்டுக்களே.
நன்றி: பதிவுகள்காம், திண்னை.காம்
*****
'பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?'
- வ.ந.கிரிதரன் -
பாரதியார் ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டி வரவேற்று 'புதிய ருஷ்யா' என்னும் கவிதையில் பின்வருமாறு பாடுகின்றார். "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு/ மேன்மையுறக் குடிமை நீதி/கடியொன்றெழுந்தது பார் குடியரசென்று/உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது/அடிமையில்லை அறிக என்றார்/இடிபட்ட சுவர் போலே கலி
விழுந்தான்/ கிருதயுகம் எழுக மாதோ". இதன் மூலம் ருஷ்யப் புரட்சியினை இனங்கண்டுகொண்டு முதன்முதலாகப் பாடிய இந்தியக் கவிஞனென்ற பெருமையினையும் பாரதியாரே தட்டிக் கொள்கின்றார். பாரதியின் 'மாதர் விடுதலை' பற்றிய கவிதைகள், கட்டுரைகள், 'கியூசின்' என்னும் வீரமாதினைப் பற்றிய கட்டுரைகள், அம்மாதின் கவிதை மொழிபெயர்ப்புகள், புதிய ருஷ்யாவைப் பற்றிய கவிதை, 'செல்வம்', 'தொழிலாளர்' என்னும் தலைப்பிலான கட்டுரைகள், மற்றுமவர் தத்துவப் பாடல்கள் இவையாவுமே
நமக்குக் கூறி நிற்பவை தானென்ன? பாரதி ஒவ்வொரு விடயத்தினைப் பற்றியும் பல்வேறுவகைப்பட்ட கருத்துகளையும் வெகு நுணுக்கமாகப் பரிசீலித்துள்ளாரென்பது மட்டுமல்ல, சமகாலத்து நடப்புகளையும் அறிந்துள்ளா ரென்பதையும்தான்.
இன்றைய உலகில், முரணான பல்போக்குச் சிந்தனையாளர்கள் ஒவ்வொரு வரும் தத்தமது பார்வைகளில் பாரதியினைக் கண்டு புளகாங்கிதமடைந்து கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியின் உண்மையான நிலைப்பாட்டினை அறிந்து கொள்ள முயல்வது மிகவும் அவசியம். இது பற்றிய அவனது முரண்பட்ட போக்குகளை, தேடலை அவனது எழுத்துகளினூடே அறிந்து கொள்ள முயலவதே சாலச் சிறந்தது.
'பாரத சமுதாயம்' என்னும் கவிதையில் அவன் பின்வருமாறு பாடுகின்றான்: "முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை./ ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை/ மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?/மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?/பலனில் வாழ்க்கை இனியுண்டோ?" இவ்விதம் பாரதியின் கவிதைகள் 'பொதுவுடமை'யினையும்' சமத்துவத்தையும்'வரவேற்றுப் பாடுகின் றன. இவ்விதம் பொதுவுடமைக் கருத்தினை வரவேற்றும், ஆயுதம் தாங்கி நிகழ்த்தப்பட்ட ருஷ்யப் புரட்சியினையும் வரவேற்றுப் பாடிய பாரதியை
மார்க்ஸியவாதிகள் புரட்சியினை , ஆயுதப் புரட்சியினை வரவேற்றிடும் ஒரு கவிஞனாக எண்ணி விடுகின்றார்கள். ஆனால் உண்மை இதுவா? பாரதியாரின் ஆவேசத்தினையூட்டிடும் சுதந்திரப்பாடல்களையும், பாப்பாப் பாட்டில் "பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம்/பயங்கொள்ளலாகாது பாப்பா!/மோதி மிதித்து விடு பாப்பா! /அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!" என்று பாடுவதையும் பார்த்துவிட்டு அவர் வன்முறையின் மூலம் தீர்வு காண்பதனையே விரும்புவதாக ஒரு சாரார் கருதிவிடுகின்றார்கள். ஆனால் இவை எல்லாவற்றையுமே தவிடு பொடியாக்கி விடுகின்றது பாரதியின் 'செல்வம்' என்ற கட்டுரை. அதில் அவர் பின்வருமாறு கூறுகின்றார்:
"ஏற்கனவே ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின் ஸ்ரீமான் மிந்த்ரோஸ்கி முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொதுவுடமையாகி விட்டது. இக்கொள்கை ஜெர்மனியிலும் ஆஸ்த்திரேலியாவிலும்துருக்கியிலும் அளவற்ற வன்மை கொண்டு வருகின்றது. ருஷ்யாவிலிருந்து இது ஆசியாவிலும் தாண்டிவிட்டது. வட ஆசியாவில் பிரமாண்டமான பகுதியாக நிற்கும் சைபீரியா தேசம் ருஷ்யாவின் ஆதிக்கத்தைச் சேர்ந்ததால் அங்கும் இந்த முறைமை அனுஷ்டானத்திற்கு வந்து விட்டது. அங்கிருந்து இந்தக் கொள்கை மத்திய ஆசியாவிலும் பரவி வருகின்றது. ஐரோப்பாவிலுள்ள பிராண்ஸ் இங்கிலாந்து முதலிய வல்லரசுகள் இந்த முறைமை தம் நாடுகளுக்குள்ளும் பிரவேசித்து வரக்கூடும் என்று பயந்து அதன் பரவுதலைத் தடுக்குமாறு பலவிதங்களில் பிரயத்தனங்கள் புரிந்து வருகின்றார்கள். ஆனால் இந்த முறைமை போர் கொலை பலாத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவிவருவது எனக்குச்
சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக் கூடாதென்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க ஸமத்வம், ஸகோதரத்துவம் என்ற தெய்வீக தர்மங்களைக் கொண்டோர் அவற்றைக் குத்துவெட்டு பீரங்கி துப்பாக்கிகளினால் பரவச் செய்யும்படி முயற்சி செய்தல் மிகவும் பொருந்தாத செய்கையென்று நான்
நினைக்கின்றேன்.."
இதே கட்டுரையில் இன்னுமோரிடத்தில் பாரதியார் பின்வருமாறு கூறுகின்றார்:
"..'கொலையாளிகளை அழிக்க கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேருகின்றது. நியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேருகிறது' என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை கொலையை வளர்க்குமே ஒழிய அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமேயொழிய
குறைக்காது. பாபத்தை புண்ணியத்தாலே தான் வெல்ல வேண்டும். பாபத்தை பாபத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை..." இவ்விதமாகக் கூறுமவர் இன்னுமோரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:"மேலும் ருஷ்யாவிலுங்கூட இப்போது ஏற்பட்டிருக்கும் 'ஸோஷலிஸ்ட்' ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருத வழியில்லை. சமீபத்தில் நடந்த மஹாயுத்தத்தால் ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் பணபலமும் ஆயுதபலமும் ஒரேயடியாகக் குறைந்து போய் மஹாபலஹீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் 'கூட்டு வாழ்க்கை' குடியரசை அழிக்க மனமிருந்தும் வலிமையற்றோராகி நிற்கின்றனர். நாளை இந்த வல்லரசுகள் கொஞ்சம் சக்தியேறிய மாத்திரத்தில் ருஷ்யாவின் மீது பாய்வார்கள். அங்கு உடமை இழந்த முதலாளிகளும் நிலஸ்வான்களும் இந்த வல்லரசுகளுக்குத் துணையாக நிற்பர். இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் கொலைகளும் கொள்ளைகளும் ரத்தப் பிரவாகங்களும் ஏற்பட இடமுண்டு...".
இவை எவற்றை எமக்கு உணர்த்தி நிற்கின்றன. ஒன்றினை மட்டும் அவை எமக்கு வெகுதெளிவாகவே உணர்த்தி நிற்கின்றன. அதாவது பாரதியார் பொதுவுடமைச் சமுதாயத்தினை ருஷ்ய அமைப்பு முறையினை வரவேற்றிடுகின்றார். ஆனால் ருஷ்யப் புரட்சி நிகழ்ந்த முறையினைத் தான் வரவேற்றிடவில்லை. அதே சமயம் ருஷ்ய நாட்டினைக் கொடுங்கோலன் ஜார் வருத்தி வந்திட்ட முறையினைக் கண்டு மனம் வெதிர்த்திட்ட பாரதியார் அக்கொடுங்கோலனின்றும் ருஷ்ய மக்களை விடுவித்த புரட்சி என்பதற்காக
ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டிய போதும் வன்முறைப் புரட்சியினை அவர் மனம் ஒப்பவில்லை.
அதே சமயம் 'ருஷ்யாவின் விவாக விதிகள்' என்னும் கட்டுரையில் அவர் பின்வருமாறு எழுதுகின்றார்:
"..போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே அதற்குப் பலவகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் கடமையாகக் கருதியவ்ர்களிலே சிலர் அதன் மீது ராஹரீக நெறிகளிலே குற்றங்கள் சுமத்தியது போதாதென்று, போல்ஷிவிஸ்ட் கட்சியார் ஸ்திரீகளையும் பொதுவாகக் கொண்டு ஒருத்தியைப் பலர் அனுபவிக்கிறார்களென்ற அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. ஆனால் 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு'. ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டுவிடும். ஒரு பெரிய ராஜ்ஜியத்தைக் குறித்து எத்தனை காலம் பொய் பரப்பிக் கொண்டிருக்க முடியும்? சில தினங்களின் முன்பு இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரஞ் செய்யப்படும் 'மாஞ்செஸ்டர் கார்டியன்' என்ற பத்திரிகை நவீன ருஷ்யாவின்
விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விபரங்களைப் பிரசுரஞ் செய்துள்ளது. அவற்றைப் பார்க்கும்போது நவீன ஐரோப்பிய நாகரிகம் என்று புகழப்படும் வஸ்த்துவின் நியாயமான, உயர்ந்த பக்குவநிலைமை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கின்றதென்று தெளிவாக விளங்குகின்றது. ஆன்பெண் இருபாலாரும் பரிபூர்ண ஸமானம் என்ற கொள்கைக்கு பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டை சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரிகத்தின் உண்மையான நோக்கம். ..அந்த வகையில் பார்த்தால் ஐரோப்பாவின் இதரபகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷ்யா உயர்ந்த நாகரிகம் பெற்றுள்ளதென்பது ப்ரத்யஷமாகத் தெரிகிறது..."
இவையெல்லாம் நமக்குக் காட்டி நிற்பவைதான் யாதோ? பாரதியார் புதிய ருஷ்ய சமுதாய அமைப்பினை வரவேற்றிடுகின்றார் என்பதையல்லவா?.. சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை ஆவேசத்துடன் கண்டித்த பாரதியை நவீன ருஷ்ய அமைப்பு முறை கவர்ந்திட்ட போதிலும் அது ஏற்பட்ட வழியினை அவனால் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிட முடியவில்லை. அதனால்தான் இவ்விடயம் பற்றிய அவனது கேள்விகள் தேடல் ஆகியன அவனது பல்வேறு கட்டுரைகளில் வெளிப்பட்டு நிற்கின்றன. அதே சமயம் மேற்படி கட்டுரைகள் அவன் தன் மனதுக்கேற்ற வழியில் இவற்றிற்கான தீர்வுகள் பற்றிச் சிந்தித்திருப்பதையும் புலப்படுத்தி நிற்கின் றன. உதாரணமாக அவனது 'செல்வம்; என்ற கட்டுரையில் பின்வருமாறு அவன் கூறுவான்:
"..முதலாவது இந்தியாவிலுள்ள நிலச்சுவான்களும் முதலாளிகளும் ஐரோப்பிய முதலாளிகள் நிலச்சுவான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகம் விரும்பவும் மாட்டார்கள். எனவே கொள்ளை களும், கொலைகளும், சண்டைகளும் பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத்தான் நாம் தேடிக் கண்டு பிடித்து அனுஷ்டிக்க முயல வேண்டும். செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்கார மாகப் பறித்துக் கொள்ள முயலுதல் இந்நாட்டிலே நான் மேற்கூறியபடி பொருந்தவும் செய்யாது. ஸாத்தியமும் இல்லை.."
மேலுள்ள பாரதியாரின் கூற்றினை வாசிப்பவர் பாரதியாரின் முரண்பட்ட போக்கினை வெகு இயல்பாகவே விளங்கிக் கொண்டிட முடியும். பொதுவுட மையினைப் போற்றிப் பாடிடும் பாரதியார், நவீன் ருஷ்யாவினை, அதன் அமைப்பு முறையினை, அங்குள்ள பெண்களின் நிலையினை வரவேற்ற பாரதியார் "இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. .." என்று கூறுவது 'தனியுடமை'யை ஆதரிப்பதாகுமன்றோ எனக் கேட்கலாம். ஆனால் இன்னுமோரிடத்தில் "செல்வர்களுடைய உடமை களைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் இந்நாட்டிலே நான் மேற்கூறியபடி பொருந்தவும் பொருந்தாது.." என்று கூறுவது மறைமுகமாகக் கூறி நிற்பது தானெது? செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் கூடாது. ஆனால் அமைதியானதொரு வழியில் இதற்கான தீர்வு காணப்படலாம் என்பதைத்தானே. ருஷ்யப் புரட்சியினை வர வேற்கும் பாரதி, அங்குள்ள பெண்கள் நிலையினை வரவேற்கும் பாரதி ஆயுதப் புரட்சி விடயத்தில் மிகவும் தடுமாற்றத்துடன் காணப்படுவதை மேற்படி கூற்றுகளால் அவதானிக்க முடிகிறது. இத்தகையதொரு தடுமாற் றத்தின் விளைவினை அவனது 'தொழிலாளர்' என்னும் கட்டுரையிலும் காணக் கூடியதாகவிருக்கிறது. அதிலோரிடத்தில் அவன் பின்வருமாறு கூறுவான்:
"..எனவே இந்தியாவில் முதன் முதலாக தொழிலாளர் கிளர்ச்சி தோன்றி யிருக்கும் இந்தச் சமயத்தில் நம்முடைய ஜனத் தலைவர்கள் முதலாளிகள் தொழிலாளிகள் என்று இருதிறத்தாரையும் ஆதரவுடன் கலந்து புத்தி சொல்லி மனஸ்தாபங்களை ஏறவொட்டாதபடி முளையிலே கிள்ளிவிட முயற்சி செய்யவேண்டும். தொழிலாளரை முதலாளிகள் இகழ்ச்சியுடன் கருதி நடத்து வதை உடனே நிறுத்துவதற்குரிய உபாயங்கள் செய்ய வேண்டும்... ஆரம்பத்திலேயே நாம் இதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்யாவிடின் நாள டைவில் ருஷ்யாவிலுள்ள குழப்பங்களெல்லாம் இங்கு வந்து சேர ஹேது உண்டாய்விடும்... ருஷ்யாவில் சமீபத்திலே அடுக்கடுக்காக நிகழ்ந்து வரும் புரட்சிகளின் காரணத்தால் அவ்விடத்து சைனியங்களில் பெரும்பகுதியார்
தொழிற்கட்சியையும் அபேதக் கொள்கைகளையும் சார்ந்தோராய் விட்டனர். இதனின்றும் அங்கு ராஜ்யாதிகாரம் தொழிற்கட்சிக்குக் கிடைத்து விட்டது. தேசத்து நிதியனைத்தையும் சகல ஜனங்களுக்கும் பொதுவாகச் செய்து எல் லோரும் தொழில் செய்து ஜீவிக்கும்படி விதித்திருக்கின்றார்கள். தேசத்துப் பிறந்த ஸர்வஜனங்களுக்கும் தேசத்து செல்வம் பொது என்பது உண்மையாய் விடில், ஏழைகள் செல்வர் என்ற வேற்றுமையினால் உண்டாகும் தீமைகள் இல்லாமல் போகும்படி ஸகலரும் தொழில் செய்துதான் ஜீவிக்க வேண்டும் என்ற விதி வழங்குமானால் தேசத்துத் தொழில் மிகவும் அபிவிருத்தியடைந்து
ஜனங்களின் சேஷமமும் சுகங்களும் மேன்மேலும் மிகுதியுறும். எனவே ருஷ்யாவிலுள்ள அபேவாதிகளுடைய கொள்கைகள் அவ்வளவு தீங்குடை யனவல்ல. ஆனால் அவற்றை வழக்கப்படுத்தும் பொருட்டு அவர்கள் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தீராச்சண்டையும் அல்லலுமே தீங்கு தருவனவாம். ருச்க் யக் கொள்கைகள் இப்பொழுது அனுஷ்டிக்கப்படும் ருஷ்யமுறைகளின்படி உலகத்தில் ஸ்தாபனம் பெற்று வெற்றி பெற வேண்டுமானால் அதற்குள்ளே முக்காற்பங்கு ஜனம் கொலையுண்டு மடிந்து போவார்கள். வெளிநாட்டுப் போர் அத்தனை பெரிய விபத்தன்று. நாட்டுக்குள்ளேயே செல்வர்களும், ஏழைகளும், ஒருவரையொருவர் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும், பீரங்கிகளாலும், தூக்குமரங்களாலும் கொல்லத் தொடங்குவார்களாயின் அது தீராத தொல்லையாய் விடுமன்றோ?"
இவையெல்லாம் வெளிப்படுத்தி நிற்பவைதான் யாதோ? இவற்றில் காணப் படும் பாரதியின் தடுமாற்றம் நமக்கு உணர்த்துவதுதானெதுவோ? சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ருஷ்யாவின் கோட்பாடுகளை ஓரளவுக்கு பாரதியார் ஏற்றுக் கொள்கின்றார். ஆனால் அதனை அடைவதற்கு ருஷ்யா கைக்கொள்ளும் ஆயுதப் புரட்சியினையும், பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத் தினையும் தான் அவரால் ஏற்றுக் கொண்டிட முடியவில்லை. இந்த எதிர்ப்பின் விளைவே அவரது கற்பனாவாத சோஸலிசமான 'ஏழை', 'பணக்காரன்', 'தொழிலாளி', 'முதலாளி' ஆகியோருக்கிடையிலான இணக்கம் பற்றிய கோட்பாடுகள். இதன் காரணமாகவே செ.கணேசலிங்கன் 'பாரதி கண்ட கனவுப் பெண்' என்னும் கட்டுரையில் கூறுவதைப் போல் ('மேகம்', நவம்பர்-டிஸம்பர் 1982) பாரதியின் போக்கு இந்திய தேசிய முதலாளிகளின் புரட்சியோடு ஒன்றி நிற்பது போல் படுகிறது. ஆனால் உண்மையில் பாரதி முதாளித்துவப் புரட்சி யொன்றினை எதிர்பார்த்திடவில்லை என்பதைத் தான் அவரது 'சுதந்தி ரப்பள்ளு' 'விடுதலை', 'பாரத சமுதாயம்' போன்ற கவிதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. [ அதே சமயம் மானுடத்தின் முழுவிடுதலை பற்றியும் பாரதி பெரிதும் சிந்தித்திருக்கின்றானென்பதையும் அவனது படைப்புகள் நமக்குப் புலப்படுத்தி நிற்கின்றன. மானுடத்தின் முழுவிடுதலை அகவிடுதலயினைப் பெறுவதன் மூலம், மனிதர் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதன் மூலம் மட்டுமே பெற முடியும் என்று அவன் கருதுவதையே அவனது 'சர்வமத ஸ்மரஸம்' , 'தாய்மாண்பு', 'அன்பு செய்தல்' முதலான கவிதைகள் உணர்த்தி நிற்கின்றன. ஆனால் பாரதியின் இந்த நிலைப்பாடு விரிவாக ஆராயப்பட வேண்டியதொன்று]. அதே சமயம் மேற்படி கட்டுரையில் செ.கணேசலிங்கன் பாரதியின் இந்தப் போக்குக்குக் காரணம் பற்றிக் குறிப்பிடும் பொழுது "..விஞ்ஞான பூர்வமான சோஸலிசத்தைப் பாரதி அறிந்திருக்கவில்லை. சோஸலிச அமைப்பில் சாதி, சமய, பெண்ணடிமைத்தனப் பேதங்கள் எப்படி
முழுமையாக நீக்கப்படும் என்பதை அவன் தெரிந்திருக்கவில்லை.." என்றும் கூறுவார். இவ்விதமாக 'மார்க்ஸியக்' கோட்பாடுகளைப் பற்றிய பூரண அறிவினை பாரதியார் அடையமுடியாமலிருந்ததற்கு அன்றைய சூழ்நிலை
காரணமாகவிருக்கலாம். மார்க்ஸியக் கோட்பாடுகள் சம்பந்தமான போதிய நூல்கள் அவரது கைகளுக்குக் கிடைக்காமல் போயிருந்திருக்கலாம். கிடைத் திருந்தால் அவர் மான்செஸ்டர் கார்டியன் போன்ற பத்திரிகைகளில் வெளி வந்த கட்டுரைகளை விரிவாக ஆராய்ந்ததைப் போல் நிச்சயம் அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்திட முயன்றிருப்பார். 'வரலாற்றுப் பொருள்முதல் வாதம்' பற்றியெல்லாம் விரிவாக ஆராய முயன்றிருப்பார். அவ்விதமெல்லாம் அவர் செய்யாததற்கு செ.க. கூறுவது போல் பாரதியாருக்கு அவ்விடயங்களில் பூரண விளக்கமில்லாமல் இருந்திருப்பதே காரணமாக இருந்திருக்கக் கூடும்.
இந்நிலையில் அவர் தன் அறிவுக்கெட்டிய வகையில் முதலாளி தொழிலாளிகளுக்கிடையிலான இணக்கத்தைத் தீர்வாகக் கொண்ட கற்ப னாவாத சோசலிச அமைப்பென்ற தீர்வுக்கு வந்திருக்கலாம். அதற்கு மாறாக அவர் மார்க்ஸியத் தத்துவஙக்ளையெல்லாம் விரிவாக அறிந்துள்ள நிலை யில் மேற்படி முடிவுக்கு வந்திருந்தால் செ.க.கூறுவதைப் போல் அவரை இந் திய முதலாளிகளின் புரட்சியுடன் ஒன்றியிருந்த ஒருவராகக் கருத முடியும். மாறாக மார்க்ஸியத் தத்துவம் பற்றிய பூரணமான விளக்கமற்ற நிலையில், அவர் வாழ்ந்த இந்தியச் சூழ்நிலைகளின் விளைவாக அவர் வந்தடைந்த தீர்வே அவரது ஏழை/பணக்காரன், முதலாளி/தொழிலாளி ஆகியோருக் கிடை யிலான இணக்கம் பற்றிய கற்பனாவாத சோஸலிசத் தீர்வு [ ஏனென்றால் பொதுவுடமையினை, ருஷ்ய அமைப்பு முறையினை அவர் வரவேற்கின்றார்]. இந்நிலையில் பாரதி ஒரு மார்க்ஸியவாதியா என்னும் கேள்வியே அர்த்தமற்றதொரு கேள்வி. ஆனால் பாரதியின் மேதமை அவரது காலகட்டச் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்தான் எத்தனை மகத்தானதென்று புலப்படும். அதனை விட்டுவிட்டு இன்றைய சூழலிலிருந்து கொண்டு, தான் வாழ்ந்த சூழலை மீறிச் சிந்தித்த, வாழ்ந்த பாரதியை செ.க. முதலியோர் அலசுவது போல் அலசுவது பயனற்றது. உண்மையில் பாரதியார் அன்றையச் சூழலில் 'ருஷ்யா'வை பற்றித் தனது நோக்கினத் திருப்பியதும், பெண்களின் நிலை பற்றிய பிரச்சினையில் ரஷ்ய, ஐரோப்பிய முறைகள் பற்றிய ஆய்வினை நடத்தியதும், இந்திய தத்துவ நூல்களை விரிவாக ஆராய்ந்ததும்,
'நிற்பதுவே நடப்பதுவே' என்னுங் கவிதையில் பொருள்முதல்வாத/கருத்து முதல்வாதத் தத்துவங்களையிட்டு ஆராய விளைந்ததும், தீண்டாமை/பெண் விடுதலை பற்றிச் சூழலை மீறிச் சிந்தித்ததும்..இவை யாவுமே மகத்தான விடயங்களாகும். அவர் வாழ்ந்த சூழலில் அந்த அளவுக்குச் சூழலை மீறிச் சிந்தித்ததே மாபெரும் அற்புதமெனலாம். இதுவே சரியான நிலைப்பாடாகப் படுகிறது.
[பாரதியார் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகின்றது. முதன் முதலில் இக்கட்டுரை 4/2/1983 இல் எழுதப்பட்டது. இதனைத் தழுவிய இன்னுமொரு கட்டுரை 'தேடல்' இதழில் பிரசுரமானது.]
நன்றி: பதிவுகள்.காம், திண்ணை.காம்
*****