Sunday, September 24, 2006

பெரியார் - உலகை நோக்கிய பயணம்.




பெரியாரின் 128 வது பிறந்ததின விழா நடந்தேறும் காலம். அவரது, சென்றைய பிறந்ததின விழாவைவிட இந்த வருடம் கொஞ்சத்திற்கு கூடுதல் சிறப்பாக வே இருக்கிறது. மதிப்பிற்குறிய ஞானசேகரன் இயக்கத்தில் பெரியாரைப் பற் றிய திரைப்படம் வளர் ந்து வருவதும், அரசு அதற்கு நிதியுதவி அளித்திருப்ப தும் கூடுதல் சிறப்பு.

இன்றைய இளைஞர்களுக்கு, பெரியார் என்பவர் நகரங்களின் முச்சந்திகளில் நிற்கும் வெறும் சிலை மட்டும்தான். வேறெதுவும் தெரியாது. இல்லை, எங்க ளுக்குத்தெரியும் என்கிற இளைஞர்களை ஆர்வமாக அழைத்துப் பேசினால், "கடவுள் இல்லையென்று சொன்னவர்"என்பதோடு வேறுபேச்சுக்குத் தாண்டிப் போய்விடுவார்கள். மறப்பதென்பது மனிதர்களின் அடிப்படைக்குணம்.குறிப்பாய் தமிழ் சமூதாயத்திற்கு அது கொஞ்சம் அதிகம். சமூதாய முன்னேற்றத்திற்காக பாடுப்பட்ட நிஜமானத் தலைவர்களை மறப்பதினா லும் /அவர்களின் தகுதி களை திரும்பத் திரும்ப நம் சந்ததியினர்களுக்கு எடுத்துக் கூறாதிருப்பதினா லும்தான் இன்றைக்கு போலி சமூகத்தலைவர்களிடமும், போலி அரசியல்வா திகளிடமும் சிக்கித்தவிக்கிறோம்.


அரசியல் சித்து நிகழ்த்தும் நம்தலைவர்களால்/ மீடியாக்களின் திரிப்புகளால் மற்றும் அதன் லாபக்கணக்கு சிந்தனைகளால்/ பெரியாரின் கனமான சிந்த னைகளை பிரசுரிப்பதில் அவர்கள் கொள்ளும் அச்சத்தால் கூட/ இன்றைக்கு பெரியார் மறைக்கப்பட்டிருக் கலாம்! ஆனால், அவரை இல்லை என்று ஆக்கி விட முடியாது.

பெரியார், தான் சாகும் கடைசித் தருணம்வரை, சமுதாயப்பணி யென நிகழ்த் திய சமூகப் புரட்சியின் சரித்திர நிகழ்வுகளை யார் எப்படி நினை த்தாலும் அத்தனை எளிதில் மூடி மறைத்துவிட முடியாது. இன்றைக்கு மொத்த இந்தி யாவுமே கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கேட்கிறது என் றால் பின்னால் பெரியார்இருக்கிறார்! தென் மாநிலங்களைத் தாண்டி பீகாரி லும், உத்திரப் பிரதேசத்திலும் இன்றைக்கு பகுத்தறிவுப் பிரச்சாரம் தீவிரம் கா ட்டுகிறது என்றால் பின்னால் பெரியார் இருக்கிறார். தமிழகத்தில் இரண்டு அரசியல் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவதை யாரலும், பிற அரசியல் இயக்கங்களாலும்கூட தடுக்க முடியாமல் போவதற்குப் பின்னாலும் பெரியார் இருக்கிறார்.

தவிர, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அரசின் உயர்ப்பதவிகளில் அங்கம் வகித்திருப்பது/தாழ்த்தப்பட்டோர் கோவில்பிரவேசம்/ யார் வேண்டுமானாலும் அர்ச்சனை/ தமிழில் அர்ச்சனை/ தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்/பெண்க ளின் விடுதலை/ காதலுக்கு அங்கீகாரம்/ சீர்திருத்தத் திருமண அங்கீகாரம்/கைம்பெண்களின் மறுமணத்திற்கான அங்கீகாரம்/ மத மாற்ற அங்கீகாரம்/ தமிழ் மண்ணை விட்டு நயவஞ்சகமாக விரட்டப்பட்ட புத்த மதத்திற்கு மீண்டுமான அங்கீகாரம்/இஸ்லாத்திற்கு தமிழ்மண்ணில் பரவலான அங்கீகாரம்/ இங்கே மதவாத அரசியல் வேர்விட இயலாமல் போனது/ பெருந்தலைவர் காமராஜ் அவர்களுக்கு டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்ஸால் கொலை முயற்சி நடந்தபோது தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பொழுச்சி/ இந்தி எதிர்ப்பு/ குலக் கல்வி எதிப்பு/ டாக்டர்.அம்பேத்காரை தமிழகம் பெருமளவில் கண்டுக்கொள்ளவும், போற்றிப் புகழவுமான அங்கீகா ரம் என் பன எல்லாவற்றிற்குப் பின்னாலும் பெரியார் உண்டு! பெருந்தலைவர் காமராஜ் வழியாக நம்மக்கள் பெற்ற கல்விப் புரட்சிக்குப் பின்னாலும் கூட அந்த பெரியார்தான்!!

இலக்கிய நண்பர்கள் சிலர் பெரியாரை சின்னக் குடுவைக்குள் திணித்து வைத்துப் பார்த்த, அந்தப் பார்வையின் எழுத்தை நான்வாசித்திருக்கிறேன். அவர்களில் இன்னும் சிலர், வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் அவரைச் சீண்டி, ஒன்றுமில்லை என்பதில் மகா ஆனந்தம் கொள்பவர்கள். பெரியார் தனது இயக்கத்தை அறிவார்ந்த இயக்கமாக வளர்த்தெடுக்க வில்லை என்றும்/ மென்மையான அணுகுமுறை அவரிடம் இல்லை என்றும் அந்தநண்பர்கள் கருதுகின்றார்கள். பெரியார் எதிர்கொண்ட அந்த காலக்கட்டத்திற்கு அவர்கள் பின்னோக்கிப்போய், அன்றைக்கு வீழ்ந்துக்கிடந்த நம் சமுதாயத்தை/ தீண்டா மையின்பெயரால் விலக்கி, ஒதுக்கி வைக் கப்பட்டிருந்த அந்த கோடானகோடி மக்களின் அவலமான வாழ்க்கைத் தரத்தை/ உரிமை கோரத் தெரியாத அவர் களின் அறியா மையை/தங்களது தாழ்வுக்கு என்ன காரணம்? என்று கூட விளங்கிடவும் முடியாத அப்பாவிகளாக இருந்த அவர்களின் நிலையை ஒரு கணம் நண்பர்கள் யூகிப்பார்களேயானால், பெரியார் நிகழ்த்திய அந்த தீவிர நடவடிக்கைகளை ஒப்புக்கொள்வார்கள். சித்த வைத்தியமும், மூலிகை கஷா யமும் நல்ல மருத்துவம்தான். கோளாறு எல்லாவற்றிற்குமே அதுவே சரி என்பது சரியாகிவிடாது.

பெரியாருக்கு முந்தியகாலக்கட்டங்களில் சமூகச்சிந்தனையோடு பாடுப்பட்ட வைஷ்ணவச் சித்தாந்திகளும், சைவ சீர்திருத்தவாதி களும், வள்ளலாரும், பாரதியும், அயோத்திதாசரும், நீதிக்கட்சித்தலைவர்களையும் சேர்த்து எல்லோ ருமே மென்மையான அணுகு முறைக் கொண்டுதான் இயங்கினார்கள். என்றா லும், எதிர்பார்த்த மறுமலர்ச்சியை இந்தமண்ணில் அவர்கள் கண்டார்களா என் பதை நண்பர்கள் அறியனும். தவிர, பெரியார் தீவிரவாத இயக்கமோ! மறைமுக இயக்கமோ! நடத்தவில்லை. ஜனநாயக இயக்கம் தான் நடத்தினார். தன் கருத் துக்கள் எல்லாவற்றையுமே பொது மேடையிலேயே பேசினார். தம் மக்கள் நலன் பொருட்டு, தான் எண்ணும் எண்ணமும் பேசும் பேச்சும் தேச சட்டத் திட்டங்களுக்கு விரோதமானது என்றாலும், அதை அவர் விளக்கிப் பேசுமிடம் மக்கள்மேடையாகத்தான் இருந்தது.அவர் எதிர்கொண்ட பேராட்டங்கள், கோ ர்ட், தண்டணை, சிறைவாசம் என்றுபலவும், அவரை நமக்கு ஜனநாயகத்திற்கு உட்பட்ட ஒருவராகவேதான் காட்டுகிறது.

ஒரு சமூகம் உயிர் மூச்சை மட்டும் தங்கவைத்துக் கொண்ட நிலையில் நாலாயிரம் வருசமாக வீழ்ந்துக் கிடக்கிறது. அதை எழுப்பி நடமாடவைக்க ஒருதலைவன் யோசிக்கிறான். எத்தனையோ நீதிநூல் வல்லுனர்கள், சமூகக் காவலர்கள்,சித்தாந்திகள், இனம் காக்கும் மடாதிபதிகள், எண்ணூரு வருடங் கள் ஆண்ட முகலாயர்கள், அறநூறு வருடங்கள் ஆண்ட வெள்ளையர்கள் என்று எவ ராலும், அந்த மக்களை ஏன் நிமிர்த்த முடியவில்லை? என்று யோசித்ததின் விடையாக, அவற்றிற்கான மூலத்தை யூகித்து கண்டடைகி றார். பிறகு அவர் தன் 'ஸ்டைலில்' சிகிச்சையை ஆரம்பிக்கிறார்! அதில் பெரு மளவில் வெற்றியும் காண்கிறார். இந்த சமூ கம் தனது மீது படிந்திருக்கும் மதவழியான அவலத்தை இன்னும் பூரணமாக துடைத்தெரியவில்லை என்று பெரியார் கடைவரை கவலைக் கொண்டாலும், அது வீறுகொண்டு எழுந்ததை கண்ணால் கண்டப்பிறகேதான் கண்ணை மூடினார்.

பெரியாரின் காலக்கட்டத்தில், சமூகச்சிந்தனை கொண்டவர்கள் தங்களை அர சியலில் அடையாளப்படுத்திக் கொண்டு, பெருமள வில் இந்தியச் சுதந்திரத் திற்குத்தான் குரல் கொடுப்பவர்களாக இருந்தார்கள். பெரியாரும் கிட்டத்தட்ட அப்படிதான் தனது பொ து வாழ்வைத் தொடங்கினார். ஆனால் அவரது மன தில், ஒடுக்குமுறையால் வீழ்ந்து கிடக்கும் தம் மக்களின் உரிமைகளை மீட் டெடுக்கும் திட்டங்களில் முதன்மையானதான வகுப்புரிமையும், தீண்டாமை ஒழிப்பும், தேசியத்தைவிட தீவிரமாக இருந்தது. தமிழ்நாடு கங்கிரஸ் செயலா ளர் பதவியில் அவர் பணியாற்றியபோதும், ஒடுக்கப்பட்ட மக்கள் நலக் கொள் கைகளை அந்த பதவியின் வழியே நிறைவேற்ற முடியாமல் போனபோது, அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சமுதாயத் தலைவராக களம் இறங்கினார். அந்த களத்தில் அவர் நிகழ்த்திய புரட்சிகரமான செயல்பாடுகள், இந்திய அரசியல் களம் அதற்கு முன் காணாதவொன்று.

பெரியாரின் பிரமாண்டமான மக்கள் நல செயல்பாடுகளை முன்வைத்து, அன் றைக்கு பல இந்தியத் தலைவர்கள் அவரை அணுகி னார்கள். பெரியாரை அம் பேத்கார் கண்டதும், அம்பேத்காரை பெரியார் கண்டதும், இருவருக்குள் பரஸ் பர நட்பும், மக்கள் நல செய்திப் பரிமாற்றச் சூழ்நிலை வாய்த்ததும் அதன் பொ ருட்டுதான். காந்தி பெரியாரோடு தர்க்கம்புரிய நேர்ந்ததும்கூட அந்த வகைப் பட்டதுதான். ராஜாஜி இரண்டு முறை பெரியாரைத்தேடிவந்து அன்றையத் தமி ழகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியதும், பெரியாரின் திரா விட நாடு பிரிவினைக்கு அதே ராஜாஜி ஆதரவுதர முன்வந்ததும் அப்படியா னதுதான்.

கட்டாய இந்தியை ஒழித்த பெரியாரை ஜின்னா பாராட்டியதும், ஜின்னாவை
அவரது வீட்டில்வைத்து சந்தித்ததும்/ லெனினுடன் இருந்து பணியாற்றிய திரு.எம்.என்.ராய், தனது மனைவியுடன் சென்னைவந்து பெரியாரின் விருந்தி னராகத் தங்கி, காங்கிரஸ் எதிப்புமுனை உருவாக்கவும், கங்கிரஸ் அல்லாத மந்திரிசபையை முதன்முதலில் சென்னையில் அமைத்து வழிகாட்டவும் வே ண்டு கோள் வைத்ததும் / அகிலஇந்தியச் சட்ட மறுப்புகமிட்டி உறுப்பினர்க ளான மோதிலால் நேரு, டாக்டர் அன்ஸாரி, டக்டர் அஜ்மல்கான், சி.ராஜ கோ பாலாச்சாரியார், வித்தல்பாய் பட்டேல், கஸ்தூரிரெங்க அய்யங்கார் ஆகியோர் ஈரோட்டில் பெரியார் இல் லத்தில் கூடி விவாதித்ததும்/ வைக்கம் வீரர் என்று திரு.வி.க. புகழ்ந்ததும்/ கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி. பெரியார் கூட்டிய உயர் வகுப்பினரில்லாத முதல்மாநாட்டில் கலந்துக் கொண்டதும்/ சிருங்கேரி சங்கராச்சாரியார், பெரியாரின் தொண்டினைப் புகழ்ந்து கடிதம் எழுதி, தமது இடத்திற்கு வரும்படி அழைத்ததும்/ கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ.டாங்கே திருச்சியில் வைத்து சந்தித்து உரையாடியதும் / மேற்குவங்க சமூகத் தொண் டரான ஹரேந்திநாத் கோலே, பெரியாரை சென்னையில் வந்து சந்தித்ததும் / வினோபாஜி பெரியாரை சந்தித்ததும்/ஜே.கிருஷ்ண மூர்த்தி பெரியாரை சந்தித் ததுமான இந்த நிகழ்வுகலெல்லாம் ஏதோ தற்செயலான சம்பவங்கள் அல்ல! பெரியாரின் சமூதாயத் தொண்டிர்க்கு கிடைத்த அங்கீகாரங்கள்.

"Periar, the prophet of the New Age;
the Socrates of South East Asia;
Father of the social reform movement;
and arch enemy of ignorance;
Superstitions, meaningless customs
and baseless manners"

- 27.6.70ல் உலக நாடுகள் அவையைச் சேர்ந்த கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகத்தால்(UNESCO) வழங்கப்பட்ட விருதாகட்டும், 3.7.72ல் மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்ட தாமிரப் பத்திர விருதாகட்டும் எல்லாமே பெரியாரின் சரியான நோக்கி லான மக்கள் பணிக்குறிய அங்கீகாரமாகவே பார்க்கிறேன். ஏ/சி ரூமிற்குள், கம்யூட்டர் எதிரில் அமர்ந்தப்படி இன்றைக்கு பெரியாரைப் பற்றி ஏனோ தானோவென்று கணிக்கும் என் இலக்கிய நண்பர்கள் இதன் உள்ளார்ந்த நிஜத்தை கண்டைவார்களா?

***

இன்றைக்கு நம்முடைய தமிழ் மண்ணில், அரசியல் கட்சிகளுக்கும், ஜாதிகட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை! இன்னும்கூட அவற்றின் பெருக்கம் தங்குதடையில்லாமல் நடக்கவே செய்கிறது. அது மாதிரியே அதன் தலைவர்களும். பொதுத் தேர்தல் காலங்களில் கட்சிகளும், தலைவர்களும் புதிது புதிதாக முளைப்பார்கள். அவர்களுடைய முன்அனுபவம் என்பது பெரும்பாலும் ஏதோஒரு கட்சியில் சில காலம் சில பதவிகளில் அங்கம் வகித்திருப்பார்கள் அவ்வளவுதான். இந்தவகை முனனுபவம்கூட இல்லாமல், தன்னிடம் இருக்கும் பணத்தை நம்பியும், செல்வாக்கான தனது ரௌடீசத்தை நம்பியும்கூட தலைவராக முயல்பவர்களும் இருக்கிறார்கள். தொடர்ந்து இரண்டு மூன்று வெற்றிப் படங்களை தந்துவிடும் தமிழ் திரைப்பட கதாநாய கர்கள், அடுத்து அவர்கள் துரிதமாக முனையும் சங்கதியே கட்சிக் கொடி தயா ரிப்பதும்! கட்சித் தொடங்க முனைவதும்! அதற்குத் தலைவராவதும்தான்!! இவர்கள், நம் மக்களின் யதார்த்தத்தை நாடிப்பிடித்துப் பார்ப்பதென்பதோ, நம்மை யொட்டிய மாநிலங்களிலும்/ அண்டை நாடுக ளிலும் இன்றைய அரசியல் போக்கும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எப்படி இருக்கிறதென்றோ, அதில் நாம் கற்றுக்கொள்ள வே ண்டியன என்னவென்றோ கண்டறிய முயல்வதே கிடையாது. தலைவராவதென்பதும், 'வருங்கால முதல்வரே' என்கின்ற கோஷத்தை கோட்பதென்பது மட்டும்தான் இவர்களுக்கு குறியாக இருக்கிறது.

பெரியார் தனது இருபத்திஐந்தாம் வயதில் தந்தையிடம் கோபித்துக் கொண்டு, துறவிக்கோலம்பூண்டு பெஜவாடா, காசி, கல்கத்தா, அஸ்ஸன்சூல், பூரி, எல்லூர் என்று அழைந்ததிலிருந்து மக்களை நோக்கிய அவரதுப் பார்வை தொடங்கு கிறது. பிறகானக்காலங்களில் இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த மாநிலங்களில் அவரது விஜயம் தொடர்கிறது. அதைத்தொடர்ந்து அவர் பர்மா, மலேசியா, சிங் கப்பூர் என்று இரண்டுமுறை விஜயம்செய்து பல்வேறு மக்களைச் சந்திக்கி றார், உரையாற்றுகிறார். மலேசியாவில் அவர் கால்படாத தமிழ் கிராமங்களே இல்லையென சொல்லும் அளவில் சென்று மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து தனது உலகப் பயணமென்ற அளவில் பல வெளி நாடுகளுக்குப்போய் பல் வேறு மக்களையும், உலகத் தலைவர்களையும் சந்திக்கிறார். பல்வேறு இடங் களில் மக்கள் முன் உரையாற்றுகிறார். இத்தனை பின் புலத்தோடுதான், தமி ழகத்தின் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்து சுமார் ஐம்பதி ஐந்து ஆண்டு கால தனது அரசியல் பணியினை திறம்பட செய்தார். அவரது உலகப் பயணம் குறித்த செய்திகள்கீழே உங்களின் பார்வைக்கு.

***

மேல் நாடுகளில் அரசியல், பொருளாதார, சமூக நிலையை நேரில் கண்டறி யவும், சமதர்மக் கொள்கைகள் ரஷ்யாவில் ஆட்சி மூலம் செயல்படுத்தப் படு வதைக் காணவும், வாய்ப்பு நேரிடின், ரஷ்யாவிலேயே தங்கிவிடவும் எண்ணங் கொண்டு, உடல் நலிவுற்ற நிலையில், மருத்துவர் அறிவுரையைப் புறக்கணி த்து, தனது அய்ரோப்பிய சுற்றுப்பயண த்தைத் துவக்கினார். உடன் சென்றோர் எஸ்.ராமனாதன், ஈரோடு ராமு ஆகியோர்.

13.12.1931ல் 'அம்போசா'(Amboise) என்ற பிரஞ்சுக் கப்பலில் சென்னைத் துறைமு கத்திலிருந்து, தன்பயணத்தை மேற்கொண் டார். 13.12.31 இரவு கப்பல் புதுவைத் துறைமுகம் வந்து சேர்ந்தது. புதுவையில் நூற்றுக்கணக்கானவர்கள் 14.12.31 அன்று, படகு மூலம் கப்பலுக்கு வந்து பெரியாருக்கு மலர் மாலைகள் சூடி, வரவேற்புப் பத்திரம் வாசித்து, அளவளாவினர். கப்பலில் நடைப்பெற்ற கூட்டத் திற்கு பிரெஞ்சு சட்டமன்ற உறுப்பினர் திரு. பெருமாள் தலைமை வகித்து, கப்பல் உயர் அதிகாரிகளு க்கு பெரியார், ராமனாதன் ஆகியோரை அறிமுகப் படுத்தினர். பிறகு பிரான்சு தேசத்தில் உள்ள பல தலைவர்கள் , சங்கங்களுக்கு பெரியார் அவர்களை அறிமுகப்படுத்தும், அறிமுக பரிந்துரைக் கடிதங்களை ஒரு தங்கச்சிமிழில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டது.

16.12.1931 மாலை 4மணி அளவில் கொழும்பு சென்றடைந்தார். கொழும்புவில் இறங்கி புத்தர் கோவில் முதலிய இடங்களைச் சுற்றிப் பார்த்தும், பல சுயமரி யாதைத் தலைவர்கள், சுய மரியாதைச் சங்கங்களின் வரவேற்பினைப் பெற் றும், திரு.ஷாகுல் அமீது அவர்களின் 'மீரான்மேன்ஷன்' பங்களாவில் நடைபெ ற்ற வழியனுப்பு உபசாரத்தில் ஒருமணி நேரமும், பல்வேறு சுயமரியாதைச் சங்கங்கள், ஆதி திராவிட சங்கங்கள் சார்பாக கிரின் பார்க்கில் உள்ள 'லேசி ஸ்டர்சர்ச்சில்' நடைப் பெற்ற பாராட்டுக் கூட்டத் தில் 2 மணி நேரமும் சொற் பொழிவு ஆற்றிவிட்டு, நள்ளிரவு 12 மணிக்குக் கப்பலை திரும்ப அடைந்தார்.

17.12.1931 ல் கொழும்பிலிருந்து புறப்பட்டு 24.12.1931 காலையில், ஏடனுக்குப் பக்கத்திலுள்ள 'ஜீபுட்டி'என்ற பிரஞ்சுத் துறை முகம் வந்தடைந்தார். அங்கு இறங்கி ஊர், நாடு சுற்றிப் பார்த்து அன்று மலையே புறப்பட்டு செங்கடல் வழியாக 29.12.1931 ல் சூயஸ் வந்தடைந்தார். சூயஸ் துறைமுகத்தில் 42,500 டன் எடையுள்ள 'எம்ப்ரஸ் ஆப்பிரிட்டன்'(Empress of Britain) என்ற மிகப் பெரிய கப்பலைக் கண்டுகளித்தார். பின்னர், அன்றேபுறப்பட்டு சூயஸ் கால்வாய் வழி யாக'போர்ட்சைட்' துறைமுகம் அடைந்தார். 'போர்ட்சைட்' பட்டணத்தில் இறங்கி 'அக்ராப்போல்' என்ற ஓட்டலில் தங்கினார்.

'போர்ட்சைட்'டில் ஒரு வாரம் தங்கிவிட்டு 5.1.1932 காலை ரயிலில் புறப்பட்டு மதியம் கொய்ரோவந்தடைந்தார். கொய்ரோவில் 11நாட்கள்தங்கி நகரின் முக் கிய இடங்களையும், நாட்டுவளங்களையும் பார்த்துக்கொண்டு16.1.32ல் அலக்சா ண்டிரியா துறைமுக த்திலிருந்து கப்பலில் கிரீசுக்குப் புறப்பட்டார். 19.1.32 அன் று கிரீஸ் தலைநகரான ஏதன்சைஅடைந்தார். கிரீஸ் நாட்டு இயற்கை வளங் கள், சாக்ரடீஸ், பிளாட்டோ சிலைகள் உட்படபல புகழ்பெற்ற சின்னங்கள், பல் கலைக் கழகங்கள், பூங்காக்கள் முதலியவற் றைக் கண்டார். ரஷ்யாசெல்ல பாஸ்போர்ட்டுக்காக இரண்டுவாரம் காத்திக்க நேர்ந்தது.அங்குள்ள கம்யூனிஸ் டுகளுடன் தொடர்பு கொண்டார். அவர்கள் உதவியினால் 7.2.32அன்று பாஸ் போர்ட் கிடைக்கப்பெற்றது. ஏதன்சிலிருந்து Chitcherine என்ற கப்பலில் ரஷ்யாக் கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் வழியனுப்ப, புறப்பட்டு 8.2.32ல் 'ஸ்மர்ண' என்ற இடம் அடைந்தார்.

அன்றே புறப்பட்டு 9.2.32ல் டார்டினஸ் ஜலசந்தியைக் கடந்து 10.2.32ல் துருக் கியின் தலைநகர் துறைமுகமான கான்ஸ்டாண்டி நோபிலை அடைந்தார். கான்ஸ்டாண்டி நோபிலில் மக்கள் வாழ்க்கை முறையைக் கண்டறிந்தார். கடைவீதி ரிவல்யூஷன் சதுக்கம், கமால்பாட்ஷாவின் உருவச்சிலை ஆகியவை கண்டார். 11.2.32ல் கான்ஸ்டாண்டிநோபிலை விட்டு கப்பலில் புறப்பட்டு கருங்கடல் வழியாக 12.2.32 ல் 'ஓடெசா'(Odessa) துறைமுகம் வந்தடைந்தார். கடல் உறைந்து விட்டதால் கரைசேர முடியவில்லை. பனிக்க ட்டிகளை உடைத்தபின்னே, 4 மணி நேரம் கழித்து கரைசேர முடிந்தது. 'ஓடெசா'வைச் சுற்றிப் பார்த்துவிட்டு, மாஸ்கோவுக்கு ரயிலில் புறப்பட்டார். 'கீவ்' ஸ்டேஷனுக்கு 13.2.32ல் வந்தடைந்தார். வரும் வழியில் எல்லா நதிக ளும் உறைந்து கிடந்ததையும் அவற்றின்மீது மனிதர்கள், வண்டிகள், விலங்கு கள் சென்றதையும் பார்த்தார்.

14.2.32ல் ரஷ்ய துறைமுகம் வந்தடைந்தார். வந்திறங்கியதும்,சோவியத் அரசா ங்கம் தனது விருந்தினராகப் பெரியாரைக் கருதுகி ன்றது என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது. 'நவாமாஸ்கோ' (New Moscow) என்ற ஓட்டலில் தங்கினார். 'ஜீனா பிலிகினா'(Zina Pilikina) என்ற ஒரு பெண் மொழி பெயர்ப்பாளரை பெரி யார் குழுவினருக்கு அளித்து, பல்வேறு இடங்களைப்பார்க்க உதவினர். அவர் கள் உதவியுடன் 'மத எதிர்ப்பு மியூசியம்'(Anti- Religious Museum) கண்டார். பார் வையாளர் புத்தகத்தில் தனது கருத்துரை யை எழுதினார். பின்னர், மத எதிர்ப் புப் பிரச்சார அலுவலகம்(Anti-Religious Propaganda Office) சென்று தம்மை ஓர் உறுப்பின ராகப் பதிவு செய்துகொண்டார். அங்கிருந்த பார்வையாளர் புத்தகத் திலும் தனதுகருத்தை எழுதினார்.18.2.32ஓய்வு நாளாக இரு ந்தபோதிலும், அதிகாரிகள் பெரியார் அவர்களை' லெனின்' மியூசியத்தைக் காண அழைத்துச் சென்றனர்.பின்னர், விவசாய இலா கா மியூசியம் (Home of Peasants) கண்டு களி த்ததுடன் பார்வையாளர் புத்தகத்தில் மறவாமல் குறிப்பெழுதிவிட்டு புகைப் படமும் எடுத்துக் கொண்டார்.

சில நாட்களில்,சோவியத் யூனியனின் ஜனாதிபதி 'காலினின்'(Mikhail Ivanovich Kalinin)அவர்களால் வரவேற்கப்பட்டு, அவருடன் பலமணி நேரம் உரையாடி னர். காலினின் அவர்கள் காட்டிய பரிவு,எளிமை, தான் கூறியதை தனிக் கவ னத்துடன் கேட்ட தன்மை ஆகியவவை பெரியாரை மிகவும் கவர்ந்தன. சோவி யத் யூனியனின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் ஜனாதிபதி காலினின் ஒரு சாதாரண விவசாயினுடையமகன் என்று அறிந்து வியந்தார். சோவியத் யூனி யனை நன்குசுற்றிக் காணவிரும்பிய அவருக்கு, தகுந்த ஏற்பாடுகள் செய்து தரப்பட்டன. அவர் மாஸ்கோ,லெனின் கிராட், Baku, Tblici, sochi, Dnieprostroy, Zaporozhye, Rostov,The Trans-cau casian Republics,Abkhazhia மற்றும் பலமுக்கிய இட ங்களைச் சுற்றிப் பார்த்தார்.தொழிற்சாலைகள், கூட்டுப்பண்ணைகள், பள்ளிக் கூடங்கள்,மருத்துவ மனைகள், அறிவியல் வல்லுனர்கள், தத்துவவாதிகள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், என்று பலதரப்பட்டவர்களையும் கண்டு உரையாடினார்.

1.5.32 மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் நடந்தேறிய மேதின விழாவில் ஆயிரக் கணக்கானவர்கள் கொடிபிடித்து அணிவகுத்துச் செல் லும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டுகளித்தார். பின்னர் மே தின பொதுக் கூட்டத்தில் பேசுமாறு அழைக்கப்பட்டார். அக் கூட்டத்தி அவர், இந்தியாவின் கீழ்நிலையையும், வறு மையுடனும், உரிமையற்றும் வாழும் இந்தியமக்களின் நிலையையும் எடுத்து விளம்பினார். பல ஆயிரக்கணக்கான மக்கள் அவர் சொற்பொழிவைக் கூர்ந்து கேட்டனர்.ரஷ்யாவில் 14 வயதுச் சிறுவன் ஒருவன் பெரியாரைப் பார்த்து "உங்கள் நாட்டில் 'மகராஜ் (பார்ப்பனர்) பறையர்(சூத்திரர்)இருக்கிறார்களாமே! அவர்கள் எப்படி இருக்க முடியும்?" என்று கேட்டுத் திகைக்க வைத்தான். பெரி யார் அவனுக்கு விளக்கினார்.

ஸ்டாலின் முன்னிலையில் நடந்த மே தின விழாவிலும் கலந்து கொண்டர். "இந்தியாவிலிருந்து வந்த நாத்திகத் தலைவர்" என அவையோருக்கு அறிமுக ப் படுத்தப்பட்டார். ஸ்டாலின் அளித்த மரியாதையை ஏற்றார். 29.5.32ல் ஸ்டா லினைக்காண பெரியார் ஒப்புதல் பெற்றிருந்தார். மூன்றுமாதங்கள் சோவியத் யூனியனில் தங்கியது,ஒரு'முழு வாழ் வாகவே' அவருக்குத் தோன்றியது. அங் கிருந்து பிரிந்துவர மனத்தில்லை;சோவியத் யூனியன் குடிமகனாக வேண்டி அரசாங்கத்திடம் விண்ணப்பித்துக் கொண்டார். அதில் அவர் வெற்றி பெறவில் லை. இதற்கிடையில், திரு. ராமனாதனின் நடவடிக்கை சோவியத் அரசின் கண் காணிப்புக்கு உட்பட நேர்ந்ததால் 19.5.32ல்சோவியத் யூனியனைவிட்டு வெளி யேறினார்.

பின்னர்,1932அக்டோபர் முதல் வாரம்வரை இங்கிலாந்து, வேல்ஸ்,ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, பிரான்ஸ்,ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார். இங்கிலாந்தில், பலதொழிலாளர் தலைவர்களைச் சந்தித்தார். கம்யூ னிஸ்ட் தலைவர் தோழர் சக்லத்வாலாவைக் கண்டு உரையாடினார். அவரிடம் பெற்ற சோவியத் யூனியனின் ஐந்தாண்டுத் திட்டத்தை தமிழில் மொழி பெய ர்த்து வெளியிட்டார். பிரிட்டிஷ் தொழிற்கட்சித்தலைவர் லான்ஸ்பரியைச் சந்தி த்தார்.20.6.32 அன்று இங்கிலாந்து மேக்ஸ்பரோ லேக்பார்க்கில், வேலையில்லா தொழிலாளர் ஊர்வலக் கொண்டாட்ட தினத்தில் 50,000 தொழிலாளர் இடையே லான்பரி முன்னி லையில் சொற்பொழிவு ஆற்றினார். பிரிட்டிஷ் தொழிற்கட்சி அரசாங்கம், இந்தியாவில் கடைப்பிடிக்கும் தொழிலாளர் விரோதப் போக்கை யும், முதலாளித்துவத்துவத்துக்கு ஆதரவு நல்கும் நிலையையும் அக்கூட்டத் தில் கண்டித்தார்.

ஜெர்மனியில், பெரியார் பலநாள் தங்கியிருந்து,பல சமதர்ம சங்கங்களுக்குச் சென்றார். அரசாங்கத்துடன் கலந்து பழகினார். அப்போது ஹிட்லர் ஆட்சிக்கு வராதநேரம். பல நிர்வாண சங்கங்களுக்கும் சென்று அவர்களுடன் கலந்து பழகினார். ஸ்பெயினின் தலைநகரம் 'மார்ட்டில்' பல தினங்கள் தங்கி, பல சம தர்மத் தலைவர்களுடன் உரையாடியதுடன், அந்நாட்டின் பொதுஇயக்கங்களை அறிந்துகொண்டார். பாரசிலோனாவில்உள்ள கொலம்பஸ் உருவச் சிலையைக் கண்டுகளித்தார். சுற்றுப்பயணத்தில் உடன் சென்ற தோழர் எஸ்.ராமநாதன் மே லும் பல நாடுகளைச் சுற்றிப்பார்க்க விரும்பாததால், 'மார்சேல்ஸ்' பட்டணத்தி ல் தங்கிவிட்டார்.

17.10.32ல், 'ஹரூனாமாரு' என்ற ஜப்பானியக் கப்பலில் பெரியார் கொழும்பு துறைமுகம் வந்தடைந்தார். கொழும்பு வியாபாரி ஹமீது மற்றும் பல சங்க ங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த நாக மையார், மாயவரம் சி.நட ராஜன், அ.ராகவன் ஆகியோருடன் ஸ்டீம்போட்டில் கப்பலுக்குச்சென்று வரவேற்று அழைத்து வந்தனர். இலங்கை சட்டசபை நட வடிக்கைகளை 18.10.32ல் கண்டார். 19.10.32ல் சட்டசபை மண்டபத்தில் நடை பெற்ற விருந்தில் கலந்து கொண்டு நண் பர்களுடன் புத்தமத விஷயம், சிங்கள சமூக விஷயம் ஆகியவற்றைப் பற்றி உரையாடினார். 20.10.32ல், பர்ஷியன் ஓட்டலில் நட ந்த வரவேற்பு விருந்தில், இலங்கை தொழில் இலா கா மந்திரி திரு. பெரி. சுந்தரம், பெரியாரைப் பாராட்டி உரையாற்றினார். 21.10.32ல் சிங்கள வாலிபர்களுடன் அளவளாவி, அவர்கள் இல்லம் சென்று, உரையாடி சந்தேகம் தெளிவித்தார். அன்று மாலை ஒரு சினிமா காட்சி கண் டார். காட்சி முடிவில், வரவேற்புப் பத்திரம் வாசித்தளிக்கப்பட்டது. அதற்கு பதி லளித்துப் பெரியார் பே சினார். 22.10.32 முற்பகல், முகமதிய பேராசிரியர்களு டன், சுயமரியாதை இயக்கம் பற்றி கலந்துரையாடினார். அன்று இரவு திருநெ ல்வேலி ஜில்லா ஆதி திராவிடச் சங்கம் திரு.எஸ். முத்தையா தலைமையில் அளித்த வரவேற்பை எற்று உரை நிகழ்த்தினார். 23.10.32ல், திரு. சி.கே. குஞ்சிரா மன் தலைமையில் எல்பின்ஸ்டன் பிக்சர்பேலசில் நடைபெற்ற வரவேற்பில் பெரியாருக்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வர வேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்குப் பதில் அளித்து, 2000பேர் கொண்ட கூட்டத்தில் நீண்ட நேரம் பெரியார் சொற்பொழிவு நிகழ்த்தினார். அன்று மா லையே, கொழும்பு கடற்கரைக்குப் பக்கமுள்ள கால் போஸ் மைதானத்தில், டாக்டர் முத்தையா தலைமையில் 10,000பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் 2மணி நேரத்துக்கும் மேலாக கருத்துரை ஆற்றினார்.

24.10.32ல் கொழும்பில் தங்கியிருந்தார். 25.10.32 முதல் 27.10.32வரை கண்டியில் தங்கி, மாத்தளை, உக்களை முதலிய இடங்களுக்குச்சென்று தொழிலாளர், கூலிகள்நிலையை விசாரித்து, அறிந்து கொண்டார்.28.10.32ல் கண்டியில், அட்வகேட் என்.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற வரவேற்பில் கலந்துகொண்டார். 29.10.32ல் ஹட்டன், இலங்கை தோட்டத் தொழிலாளர் சங் கத் தலைவர் திரு.நடேச அய்யர் அழைப்புக்கு இணங்கிச்சென்று, வரவேற்பில் கலந்துகொண்டு, 3000பேர்கள் கலந்து கொண்டகூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றினார். 30.10.32ல் கொடிகாமம், 31.10.32ல் பருத்தித்துரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தங்கியிருந்து, 3.11.32ல் கொழும்பு சேர்ந்து, 'மீரான் மேன்ஷ னில்' 6.11.32வரை இருந்து விட்டு, கொழும்புவை விட்டுப் புறப்பட்டு 8.11.32ல் தூத்துக்குடி வந்து சேர்ந்தார்.

அன்று மாலை தூத்துக்குடியில் நடைபெற்ற மாபெரும் வரவேற்புப் பொதுக் கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றினார். 9.11.32ல்தூத்துக்குடியிலிருந்து ரயிலில் புறப்பட்டு, அன்று மாலை, மதுரை அடைந்து, அங்கு நடைபெற்ற பெரும் வர வேற்புக் கூட்டத்தில் முழக்கமிட்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் முடிந்தவுடன், பெரியார் தனது முதல் அறிக்கையில் தன்னைத் 'தோழர்' யென விளியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

***

பெரியார் தனது ஒவ்வொரு மேடைப் பேச்சின் இறுதியில், பெரும்பாலும் தவறாமல் ஒன்றைச் சொல்வார் " நான் சொல்கிறேன்என்பதற்காக எதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள். பிறகு, மதவாதிகள் புராணத்தை முன்வைத்து பேசுவதை நீங்கள் ஒப்புக் கொள்வதற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நான் பேசியதை வைத்து உங்களுக்குள் நிறைய கேள்விகளை எழுப்புங்கள், அதன் பின்னர் நான் சொன்னது சரியென்கும் பட்சம் ஒப்புக் கொள்ளுங்கள்" என்பார். எனக்கும்கூட பெரியாரின் கருத்தாக்கங்கள் மீது பலமாதிரி கேள்விகள் இருந்தது. மனதளவில் பல வருடங்கள் அதனோடு தர்க்கம் நிகழ்த்தியிருக்கிறேன். பின்னர், தெளிவுகளை எட்டிப் பிடித்தாலும், இன்றைக்கும் பெரியாரின் சில கருத்தாக்கங்கள் மீது சின்னச் சின்ன விமர் சனங்கள் உண்டு. பிடிப்படாதா பதில்களும் உண்டு.

இங்கே நான் படம்பிடித்திருக்கிற பெரியார், என் விமர்சனங்களில் இருந்து மீண்டெழுந்து எனக்கு மலைப்பைத் தருகிற பெரி யார்!! இதை வாசிக்கும் உங்களில் சிலருக்கும் என்னையொத்த மலைப்பு தகிக்கலாம்! என்றாலும் பெரியாரை உடனே ஒப்புக் கொள்ளாதீர்கள்!! அது பெரியாருக்கே பிடிக்காது!!

- தாஜ் / 17.09.06

***

கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

பெரியார் வரலாற்றுக் கையேடு / தஞ்சை மருதவாணன்
பெரியார் - தலித்துகள், முஸ்லிம்கள் / அ.மார்க்ஸ்
பெரியார் களஞ்சியம் -4 / தொகுப்பு:கி.வீரமணி
குடியரசு தொகுப்பு-3 / தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

***
satajdeen@gmail.com
http://www.tamilpukkal.blogspot.com/

Thursday, September 21, 2006

தாஜ் கவிதைகள் - 5

சிக்கிமுக்கிக் கல்
----------------------
நம் மூதாதையர்கள் சிக்கிமுக்கிக் கல்லை
கண்டு கொண்டபோது
தெறித்த கனலைப் பற்றவைத்து
பயன்படுத்தத் தொடங்கினர்
இருட்டிலிருந்த தங்கள் முகங்களை
ஒருவருக்கொருவர் காண
சிறைப்படுத்தியிருந்த காடுகளைக் கொளுத்தி
விஷமிகளை விரட்டி
இரத்தத்தை உறிஞ்சிய
அட்டைகளையும் பொசுக்கி
பாதைப் பார்த்து அடியெடுத்து
பொந்துகளை விட்டும்
சமதளத்திற்கு வந்தனர்
காலங்களில் தீயின் பாதுகாப்பு
வளையத்திற்குள்
செரிக்க உண்ணவும் உரக்க உறங்கவும்
நிம்மதி கொண்டனர்
கற்கால மனிதர்களின் நசிவையும் சிதைவையும்
ஆய்வு செய்யும் வெளுத்த தோழர் வீட்டில்
சிக்கிமுக்கிக்கல் பார்க்கக்கிடைத்தது
அடர்ந்த வெண்தாடியோடு பெரியார் ஒருவரின்
கனல் முழங்கும் சித்திரக் காலடியில்
நமது நாகரீகம் நெருப்பில் தொடங்கியது
என்ற குறிப்புடன்.

*****

உட்கடல்
------------

குதுகலமான பொழுதுகளில்
கடற்கரையோரம்
நண்டுகள் பிடித்து விளையாட நீ
வண்ணத்தில்
சிப்பிகளை சேகரித்தாய்
மலையேறிக்கொண்டிருந்த
ஒரு முன் பனிக்காலத்தில்
நடையின் லாவகத்தோடு
முன்னால் நீ போய்க் கொண்டிருந்தாய்
உச்சிப்பொழுது சுடுமணலில்
வேகம் சுழித்துத் தடுமாற நான்
பாத ரணங்களோடு
அழுந்த அடிகளைப் பதித்தபடி
நீ கடப்பதைப் பார்த்தேன்
தூரிகையால் உன்னை
தீட்டிப்பார்த்தபோது
உயிர்பெற்ற மார்பகங்கள்
தேம்பி விம்ம
பறந்து விட்டேன்
வடிவாய் வடித்து கரமெடுக்க
நிர்வாண நிலை வேண்டும்
தரித்த உடுப்புகளை கழட்ட
உன்னால் மட்டுமல்ல
என்னாலும் முடியாது.

*****

நேரம் கெட்ட நேரம்
--------------------------
என் பயணங்களை
இரவில் தான் தேர்வு செய்கிறேன்
நீண்டதூரம் இருளில் பயணிப்பது
தவிர்க்க முடியாத அனுபவம்
சின்னச் சின்ன நட்சத்திரங்கள்
வெள்ளையாய் கண்சிமிட்டுகின்றன
முந்தாநாள் பார்த்த முழுநிலவு
இன்றைக்கு தேய்ந்து கொண்டிருக்கிறது
கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம்
கவிழ்ந்து கிடக்கிறது மையிருட்டு
இருள் பெருக்கம் சுகமானது
யாருக்கும் யார் முகமும் பிடிபடாது
இருளில் எல்லோருக்குமே உண்டு
இன்னொரு முகம்
தடங்கள்களுக்கும் பதற வேண்டியிராது
நித்திரை மனிதர்கள் எதையும் அறியமாட்டார்கள்
வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி
என் வாகனம் விரைகிறது
எல்லோரும் தூங்கிச் சோர்ந்து
கனவுகளில் சஞ்சரிக்கும் நேரம்
மறுபடியும் பிறக்கலாம்
திரும்பத் திரும்ப இறக்கலாம்
வானுக்கும் பூமிக்குமான வெளியில்
அத்தனையையும் நீண்டு நிம்மதியாக
போகம் செய்யலாம்
கலவியில் கசியும் பூரணம் உணர்ந்து
பூரித்துப் போகலாம்
தூங்கியவர்களும்
கனவுகளின் பக்கம் திரிந்தவர்களும்
புதிய விடியலில் அவரவர் திக்கில்
எழுந்து முந்தி விரைய
உறங்கநான் அமைதியானதோர்
இடம் தேடி அலையக்கூடும்!

*****
satajdeen@gmail.com

Friday, September 15, 2006

ஜெயமோகன் Vs தாஜ்

- தாஜ்...


ஜெயமோகன், நவீன தமிழ் இலக்கிய வட்டத்தில் தவிர்க்க முடியாத பெயர். இலக்கியம் சார்ந்த அக / புற வித்தைகள் பல நிகழ்த்துபவர். ஒப்புக்கொள்ள வேண்டிய இன்னொரு படைப்பாளி. மலையாளப் படைப்புலகிலும், இப்படியான கீர்த்திகளுக்கு அவர் சொந்தக்காரர். இலக்கியம் சார்ந்த அவரது தீவிரம் வியக்கவைக்கக் கூடியது. ஒரே நேரத்தில், தனது அதிகப்படியானப் படைப்பு
களை வெளியீடுச்செய்த தமிழ்ப்படைப்பாளி இவர் ஒருவராகத்தான் இருக்கும். தொடர்ந்தும் தன் படைப்புகளின் வெளியீடுகளை அநாயாசமாக வெளியீடும் சொய்பவர். இவரது படைப்புகள் பல, தீவிர வாசிப்புக்கும்/தீர பாராட்டுதலுக்கும் உரியது.

ஜெயமோகனின் இலக்கியம்சார்ந்த புறவித்தைகள் எனக்கு ஏற்புடையது அல்ல. இது குறித்து அவரை நான், ஒன்றுக்கும் மேற்பட்டத் தடவைகள் விமர்சனத்திற்கு உட்படுத்தியிருக்கிறேன். என்றாலும், யோசிக்கிறபோது இப்படியான வித்தைகள் சார்ந்தஇலக்கிய அரசியலை நம் படைப்பாளிகளில் இன்னும் சிலரும் செய்யத்தான் செய்கின்றார்கள். இவர்களின் போக்கை சுட்டிக்காட்டி, சிலதடவைகள் ஜெயமோகன்கூட விமர்சனம் வைத்திருக்கிறார்.

ஜெயமோகனின் இலக்கிய முரண்பாடுகளாக நான் கண்டு தெளிந்தவைகள் பல உண்டு.அவைகள் எனக்கு ஏற்புடையதல்ல. அது மாதிரியே அவரது ஆன்மீகமும். ஜெயமோகன் முன் வைக்கும் ஆன்மீகம் பொருட்டு, பெரியாரை அவர் பார்க்கும் பர்வையும், முன்முடிவுக் கொண்ட விமர்சனமும், அவரை புறம் தள்ளும் விதமும் எனக்கு உடன்பாடானதல்ல.

Thursday July 27, 2006 / திண்ணை இதழிழ், ஜெயமோகன் எழுதிய 'இரு கலைஞர்கள்' என்றொரு சிறுகதை பிரசுரமாக,அதை நான் என் பார்வையில் விமர்சித்திருந்தேன். சில வரிகளைக் கொண்ட அந்த விமர்சனம் அடுத்த திண்ணை இதழில் பிரசுரமாகியிருந்தது. பிரசுரமான தினத்திலேயே அதை பார்வை செய்த ஜெயமோகன், உடனே திண்ணைக்கு கடிதமும் செய்திருந்தார். அதையொட்டி நான் எழுதிய பதிலை, திண்ணையில் பிரசுரித்திருந்தார்கள். ஆனால், அந்த பிரசுரம் சுமார் பன்னிரெண்டுமணி நேரம் மட்டுமே பார்வைக்கு இருந்தது. பின்னர் அதை எடுத்துவிட்டார்கள். திண்ணையில் எந்தவொரு கட்டுரைக்கும் இப்படியொரு பாதிப்பு நடந்து நான் பார்த்ததில்லை.

பிரச்சனைக்குறிய 'இரு கலைஞர்கள்' என்ற சிறுகதையினை நீங்கள் திண்ணையின் பக்கங்களில் வாசிக்கலாம். மற்றப்படி, அந்த கதைக்குறித்து நான் எழுதிய விமர்சன வரிகள்/அதையொட்டி ஜெயமோகன் திண்ணைக்கு எழுதிய கடிதம்/ தொடர்ந்த யென், 'ஜெயமோகனுக்கு நன்றி' என்ற கட்டுரை (திண்ணையில் பன்னிரெண்டு மணி நேரம் மட்டுமே பிரசுரிக்கப்பட்ட கட்டுரை) யென எல்லாவற்றையும் கீழே உங்கள் பார்வைக்கு வைத்திருக் கிறேன்.

***

Thursday August 10, 2006

ஜெயமோகன் பார்வைகளுக்கு

- தாஜ்

ஜெயமோகனின் மொளனம் கலைந்திருப்பது வரவேற்கத்தக்கது. திண்ணை யில் வாசிக்க நேர்ந்த அவரது 'இருகலைஞர்கள்' மிகவும் தட்டையாக இருந் தது. குமுதம் ஒரு பக்கக் கதைக்கு போட்டியோ என்றுகூட நினைக்கத் தோன் றிற்று. சுமார் இருபது வருட காலமாக நான் வாசித்த அவரது சிறுகதைகளில், இப்படியொரு சாதாரண கதை மையத்தை நான் கண் டதில்லை. 'கைபோகும் போக்கிற்கு தடையற எழுத வரும்' எழுத்து என்பது இதுதானோ என்னமோ!

ஒரு புகைப் படத்தை பார்த்து அழுவதற்குகாக வேண்டி, யுவராஜா சற்றும் யோசிக்காமல் ஜெ.கே.யும் அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை போனதே அதிகம்! அதையும் தாண்டி ஜெ.கே.யைப் பார்த்து "உங்களால் ஏன் அழமுடியவில் லை?" என்று கேட்பது நிச்சயம் அத்துமீறும் விசயம்தான். சரியாகத்தான் ஜெ.கே. சாடியிருக்கிறார். 'கள்ளமோ கரைந்தழும்' என்று.
ஜெயமோகன் கூட தாளாமையால் கரைந்தழுகிறவர்தான். பார்த்துமிருக்கிறேன்/கேட்டுமிருக்கிறேன்.

***

Thursday August 10, 2006

கடிதம்

- ஜெயமோகன்

ஆசிரியருக்கு,
சென்ற இதழில் தாஜ் என்பவர் எழுதிய கடிதம் கண்டேன். இவர் என்னை தனிப்பட்ட முறையில் அறிந்தவர் போல் எழுதியிருந்ததை ஒட்டி இக்கடிதம். இவர் எனக்கு பத்து வருடங்கள் முன் சில வாசகர் கடிதங்கள் அனுப்பியுள்ளார். நல்ல வாசகர் என்ற எண்ணம் எனக்கு ஏற்படாவிட்டாலும் என் வழக்கப்படி நான் பதில்களும் அனுப்பியுள்ளேன். ஒரே ஒருமுறை ஒரு
கூட்டத்தில் கண்டு ஒருநிமிடம் கைகுலுக்கிக் கொண்டோம். அதன் பின் திடீரென்று வசைக்கடிதங்கள் அனுப்பத் தொடங்கினார்.விஷ்ணுபுரம் வந்த பின். அவற்றில் இருந்த மதக்காழ்ப்பை கண்டபின் அவருக்கு நான் எதிர்வினயாற்றுவதில்லை. மற்றபடி அவர் என்னை தெரிந்தவர் போல் எழுதுவது பிழை.

ஜெயமோகன்

***

ஜெயமோகனுக்கு நன்றி.
-------------------------------
- தாஜ்..

ஜெயமோகன் என்னைக் குறித்து திண்ணையில் கடிதம் எழுதியிருக்கிறார். பதில் எழுதுவதென்பது தவிர்க்க இயலாது. நாகரீகம் சம்பந்தப்பட்டது. நம் பெரியவர்கள் ரொம்பத்தான் நாகரீகத்தை போதித்து தொலைத்திருக்கிறார்கள்.

என்னளவில் இலக்கியம் என்பது ஆத்மார்த்தமான / அமைதிக் கொள்கிற இடம். இலக்கியப் பங்களிப்பென்பது பெரும்பாலும் நல்ல புத்தகங்கள் வாங்கிப் படிப்பது மட்டும்தான். கவிதை, கட்டுரை, விமர்சனம் எழுதுவதென்பதெல்லாம் அந்த பங்களிப்பினூடே கைமீறுபவைகள். குறிப்பாய் விமர்சனம் எழுதுவது என்னளவில் விபத்துமாதிரி சம்பவித்தஒன்று. 1986ம் ஆண்டு வாக்கில் திரு.கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்தபோது, நவீன இலக்கியம் குறித்த அவரது கூற்று சுபமங்களாவில் வெளிவந்தது. அதன் முரணை அடுத்த இதழில் மறுக்கப்போய், அவரது எழுத்துக்களையும் விமர்சனத்திற்கு இழுத்து விட்டேன். பயமறியாதுபோன இளமையை எண்ணியபடியே இருந்த நேரத்தில், அந்த விமர்சனத்தைக்கண்டு கைகுலுக்கிய முதல்கடிதம் ஜெயமோகனுடையதுதான்.

பொதுவாக என் விமர்சனங்களில் நான் மிகுந்த கவனம் கொள்கிறவன். அரசியல் / இலக்கியஅரசியல் / குழுமனப்பான்மை / ஆன்மீகம் / மதம் / இனம் / மொழி / என்பதான எந்த இழவோடும் என்னை நான் இணைத்துக் கொள்ளாதவன். பெரியார் மட்டும் உண்டு. அதுவும் சுயவிமர்சனத்திற்கு உட்பட்ட பெரியார் மட்டும்.

சமீப மாதங்களாக நான் ஜெயமோகனையும், அவரது எழுத்துகளையும் விமர்சனத்திற்கு உட்படுத்துவது நிஜம்தான். இலக்கியப் போக்குகளின் வழியேயான உணர்தல் பொருட்டு, இத்தகைய விமர்சனம் தேவை என்று கருதி பதிவு செய்துவருகிறேன்.

ஜெயமோகனின் எனக்கான திண்ணை கடிதத்தை காண்டபோது, நான் எழுதியிருந்த அந்த சின்ன அளவிலான விமர்சனவரிகள் அவரைப் பாதித்திருப்பதை உணர்ந்தேன். 'இருகலைஞர்கள்' என்ற அவரது அந்த சிறு கதையையும், என் விமர்சன வரிகளையும் திரும்ப வாசித்துப் பார்த்தேன். சரியாகத்தான் இருந்தது. மாடன் மோட்சம் / படுகை / போதி/ஆயிரம் கால் மண்டபம்/ கிளிக் காலம் / பார்த்தீனியன் / போன்ற அவரது சிறுகதைகளை சரியான கோணத்தில் வாசித்து உள்வாங்கிய எந்தவொரு வாசகனும்,
எனது விமர்சன வரிகளை மறுக்க மாட்டான்.

***

'சரியாகத்தான் ஜெ.கே. சாடியிருக்கிறார். கள்ளமோ கரைந்தழும் என்று. ஜெயமோகன்கூட தாளாமையால் கரைந்தழுகிறவர்தான். பார்த்துமிருக்கிறேன் / கேட்டுமிருக்கிறேன்.' - எனது இந்த கடைசி இரண்டு வரிகளே அவரை கடிதம் எழுதவும், தன்னிலை விளக்கம் தரவும் அதிகமாக நிர்பந்தித்திருக்கக் கூடும்.

1986 ம் ஆண்டு ஆகஸ்ட்டு வாக்கில் குற்றாலத்தில் கவிதைப்பட்டறை நடந்தது. சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமிநாதன்தான் தலைவர். முதல்நாளின் முதல்அமர்விலேயே சர்ச்சை கலைக்கட்டியது. ஜெயமோகன்தான் மையம். பதினெட்டாம் நூற்றாண்டின் ஐரோப்பிய படைப்பாளியான 'போர்ஹே' குறித்து ஜெயமோகன் ஏதோ தவறுதலாக குறைத்து மதிப்பீடு செய்து எழுதி விட்டதாகவும் நாகர்ஜூனன், பிரம்மராஜன், சாருநிவேதிதா, ரமேஷ் பிரேம், இன்னும் சில எழுத்தாளர்களும் ஒரேமுகமாய் ஜெயமோகனுக்கு எதிராக எழுப்பியகூச்சலும் சப்தமும் காதை அடைக்கச்செய்தது. ஜெயமோகன் எவ்வளவோ விளக்கங்கள் தந்தும்
பிரயோஜனப்படவில்லை. அவருக்கு எதிரான அதிர்வு, சபை நடந்தேறிய அந்த பழைய திவான் பங்களாவையே உலுக்கியது.

மனுஷப்புத்திரன் சற்றுத்தள்ளி மௌனமாக அமர்ந்திருந்தார். இன்னொருப்பக்கம் விக்ரமாதித்தியன் படுத்துப் புரண்டு தனி ராஜியம்
நடத்திக் கொண்டிருந்தார்.கோமல், தலைவறென்ற கோதாவில் எல்லோரையும் சமாதானப்படுத்த யாரும் கேட்பதாகவேயில்லை.
ஜெயமோகனின்மனைவி, வெளிவராண்டாவில் நின்று ஜன்னலின்வழியே விவாதத்தின் போக்கைப்பார்த்தப்படி விக்கித்துப்போனார்.
கையில் குழந்தை! கண்களில் கண்ணீர்! எனக்கு அந்த கவிதைப்பட்டறை முகம்சுழிக்க வைத்தது. நான் பெரிதாகநினைத்த இலக்கியவாதிகளின் அடாவடிகளினால் இன்னும் சுண்டிப்போனேன்.

ஜெயமோகன் சபையைவிட்டு வெளிவந்து மனைவியைச் சமாதானப்படுத்
தினார். அந்த தங்கை மேலும் அழுதப்படியே இருந்தார். ஜெயமோகனுக்கும் அழுகை கசிந்தது. நான் அவரது தோலைப்பற்றி ஆறுதல் சொன்னேன். இவர்களுக்கு இலக்கியமும் தெரியாது உடைவுடுத்தவும் தெரியாது என்றார். அதிகத்திற்கு அதிகமாக சப்தமிட்ட சாரு, பிரேம், ரமேஷ் போன்றோர் அன்றைக்கு 'பெர்மூடா' அணிந்திருந்தார்கள். அப்போதிருந்த மனநிலையில் ஜெயமோகன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி, அவரை சமாதானப் படுதுவதிலேயே குறியாக இருந்தேன்.

1998 ம் ஆண்டு டிசம்பரில் சு.ரா.வின் 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' வெளியீட்டு விழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள 'புக்லாண்ட்' கட்டிடத்தின், பின்புறக் கட்டிட முதல் தளத்தில் நடந்தது. அந்த வெளியீட்டு விழாவில் முக்கியப் பேச்சாளர் ஜெயகாந்தன். 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' நாவலை குந்தகமின்றிப் பேசினார். தொடர்ந்து ஜெயமோகனின் 'விஷ்ணு புரம்' பற்றியும் குறிப்பிட்டார். அதன் உள்ளே புகமுடியாத அளவில், நாவல் இடைமறிப்பு செய்கிறதென்றார். விழா அழைப்பிதழில்
ஜெயமோகனின் பெயர் இருந்தது. மண்டபத்தில் அவரைக் காணோம்.

சு.ரா.பேசிமுடித்ததும் நான் ஊர்திரும்ப ஆயத்தமாகி, அண்ணாசாலைக்கு வந்தேன். எதிரே ஜெயமோகனும் கோவை விஜயா பதிப்பக உரிமையாளரும் வந்தார்கள். கூட்டத்திற்கு தாமதமாகி விட்டதாக குறிப்பிட்டார்கள். விழாவில் பேசப்பட்ட பேச்சுகளைப் பற்றி கேட்டார்கள். சொன்னேன். தொடர்ந்த பேச்சு, இலக்கியச் சச்சரவின் பக்கம் போனது. அந்த டிசம்பரில் வெளிவந்த கவி
தாசரண் சிற்றிதழில், ஜெயமோகனை சாருநிவேதிதா தரக்குறைவாக எழுதியிருந்ததைப் பற்றியப் பேச்சு அது. பேசிக்கொண்டிருக்கிறபோதே ஜெயமோகனின் முகம் சிவக்க, கண்களில் சரம் சரமாக கண்ணீர். நானும், விஜயா பதிப்பக உரிமையாளரும் ஆறுதல் கூறி ஜெயமோகனை சமநிலைக்கு கொண்டு வரவேண்டியிருந்தது.

தவிர, தாளாமையால் அவர் கண்கலங்கியதை அவரதுகட்டுரைகள் சிலவற்றில் படித்ததாகவும் ஞாபகம். என் இலக்கிய நண்பர்கள்
நேர் பேச்சில் குறிப்பிட்டும் இருக்கிறார்கள். தாளாமையால் மனிதர்கள் கண்கலங்குவதென்பது சாதாரணம். இயற்கையானதும்கூட. அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.

***

எனது வாசகத்தன்மையின் போதாமைக் குறித்து பதிவு செய்திருக்கிறார்! வேடிக்கையாக இருக்கிறது! அதில் நான், எத்தனைக்கு கெட்டி அல்லது இல்லை என்பது எனக்குத் தெரியும். வாசிப்பின் உச்சத்திற்குப்போய், வாசித்து, தீர கணித்து, தமிழில் நாவலே இல்லை என்று சொன்னவர், என் வாசகத்திறனை மதிப்பிட்டிருப்பதென்பது பெரிய விசயமல்ல.

அவரது மண் நாவல் புத்தகத்தை எனக்கு அனுப்பிவைத்து விமர்சனங்கள் செய்யுங்கள் எனறபோதும் / சொல் புதிது இதழுக்கு ஆன்மீகம் சம்மந்தமாக, எதிர்வினையாற்றி எழுதிய என் கட்டுரையை குறிப்பிட்டு, அதை யொட்டிய வாசகர்கள் விவாதம் ஒன்றை சொல் புதிதில் செய்ய நினைக்கிறேன் சம்மதம்தாருங்கள் என்றபோதும் / திரு. நாஞ்சில் நாடான் அவர்களின் நாவல் ஒன்றைக் குறிப்பிட்டு, வாசகர் கலந்துரையாடல் ஒன்றை ஊட்டியில் ஏற்பாடு செய்திருக்கிறேன், அது குறித்து கட்டுரை வாசிக்கனும் என்று
எனக்கு கடிதம் எழுதியபோதும், என் வாசகத் தன்மை ஜெயமோகனுக்கு பிடிப்படாமல் போனது, அவரது கீர்த்திக்குத்தான் சேதம்.

என் வாசிப்புத்தன்மைக்கு ஜெயமோகன் இப்பொழுது அபவாதம் செய்திருப்பது மாதிரி ஒருதரம் எஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கியப் படைப்பொன்றை சேதப்படுத்தி ஒரு சிற்றிதழில் எழுதினார். எஸ்.ராமகிருஷ்ணன் ஆவேசம் பூண்டு காலச் சுவட்டில் எதிர் வினையாற்றியிருந்தார். அந்த வினை ஜெயமோகனை மேற்கு திசைப்பார்க்க வீசியெறிந்தது.

எஸ்.ராமகிருஷ்ணனைப் பற்றி ஜெயமோகன் எழுதியபோது, ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறார் என்று நினைத்த நான், எஸ்.ராம
கிருஷ்ணனின் எதிர் வினையால் ஜெயமோகன் குறித்து சஞ்சலம் கொண்டேன். அடுத்த சிலநாட்களில் ஜெயமோகனுக்கு நான்
கடிதம் எழுதியபோது, 'எஸ்.ராமகிருஷ்னனின் கூற்றை சரியென்று நினக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தேன். இதுதான் அவர் குறி
ப்பிடும் வசைக்கடிதம். அதன்பின் அவர் எனக்கு கடிதம் எழுதுவதில்லை. நானும் அப்படியே.

தனிப்பட்ட முறையில் அறிந்தவர் இல்லையெனவும், என்னோடான நட்பின்மையையும் சுட்டியிருக்கிறார். அது நிஜம்தான். தனிப்
பட்ட முறையில் நான் அவரை அறிந்தவனில்லை. அறிய முற்பட்டவனுமில்லை. அது எனக்கு வேலையுமில்லை. தவிர, அவர் சுந்தர
ராமசாமியுமில்லை! நான் ஜெயமோகனுமில்லை!!

***

"விஷ்ணுபுரம் வந்த பின். அவற்றில் இருந்த மதக்காழ்ப்பை கண்டபின் அவருக்கு நான் எதிர்வினயாற்று வதில்லை."
- மேலே இருப்பது ஜெயமோகனின் வார்த்தைகள். வெட்டியொட்டியிருக்கிறேன். அவரது இந்த வரி சரிவர விளங்காவிட்டாலும்,
என்ன சொல்லவருகிறார் என்பதை யூகிக்க முடிகிறது. விஷ்ணுபுரம் வெளிவந்த பிறகு அதை வாசித்த நான், அது குறித்து அவரு
க்கு அபிப்ராயம் தெரிவிக்கையில் 'மதக்காழ்ப்பை' வெளிப்படுத்தியதாக சொல்கிறார்.

விஷ்ணுபுரத்தை மதம் சார்ந்த நாவலாகவே கருதமுடியாது. நான் கருதவுமில்லை. வேண்டுமானால், இந்து மதத்தின் சனாதன பீடங்க
ளை சாய்த்து உருட்டிவிட்டு, அது பௌத்ததின் கீர்த்திகளை உயர்த்திப்பிடிப்பதாகச் சொல்லலாம்.விஷ்ணுபுரம் ஒரு 'உடோபியன்'
சங்கதியாக இருந்தாலும், அதன் காலத்து யதார்த்தத்துடன் மலர்ந்திருப்பதாகவே கணித்தேன். இன்றைக்கும் அப்படித்தான் கரு
துகிறேன். ஆனால், ஜெயமோகன் இன்றைக்கு இப்படி குறிப்பிட்டிருப்பதைக் காணும்போது அது மதம் சார்ந்த நாவலோ என்ற புதிய சந்தேகம் துளிர்க்கிறது.

விஷ்ணுபுரத்தைப் படித்த நாழிக்கு அவருக்கு அதுகுறித்து ஒருகடிதம் எழுதினேன். அது நிறையப் பாராட்டுதல்களைக் கொண்ட கடிதம். தவிர, சில நியாயமான சில கேள்விகளையும் அதில் எழுப்பியிருந்தேன்.

1. விஷ்ணுபுரம் ஓர் கற்பனை நகரம் என்கின்றீர்கள் சரி! மேற்குத் தொடர்ச்சி மலையில் அதை ஸ்தாபிதம் செய்திருக்கின்றீர்கள்
சரி! தமிழ்சார்ந்த மனிதர்கள் அதில் பேசப்படுகிறார்கள் மெத்தசரி! அந்த மலையையொட்டிய மேற்கு சரிவிலும், அதன் சமவெளிகளிலும் வாழ்ந்த மக்கள் எங்கே? அந்த 'மலையாள மொழிப் பேசும் மக்கள்' இதில் ஏன் வெளிப்படவில்லை?

2. விஷ்ணுபுரத்தில் காண்பிக்கப்படும் பாண்டிய மன்னர்களை, கறுப்பாகவும்/ கூனர்களாகவும்/ மேகநோய் கொண்டவர்களாகவும் காமித்திருக்கின்றீர்களே, உங்களிடம் அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? விஷ்னுபுரம் கற்பனைப் படைப்பு என்கிறபோது, அவர்களை சராசரியாகவே காமித்திருக்கலாமே! அவர்கள் தமிழர்களின் ஆதர்சப் புருஷர்கள் அல்லவா! யோசித்திருக்க வேண்டாமா?

3. விஷ்ணுபுரத்தை 'காவியம்' என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள்! வாசர்களையும் அப்படிச் சொல்ல வைக்க தொடர் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக் கின்றீர்கள்! அதற்காகவே அந்த நாவலில் நிறைய கவிதைகளையும் சேர்த்திருக்கின்றீர்கள்! நாவலின் வாசிப்பிற்கு அவைகள் பெரிய இடையூறாக இருப்பதை நீங்கள் அறிவீர்களா? (அந்த நாவலைக்குறித்த இன்றுவரையிலான கவனிப்பில், அதில்காணும் கவிதைகளைக் குறித்து எந்தவொரு வாசகனோ/ விமர்சகனோ குறிப்பிட்டதேயில்லை!!)

4. கல்கி, சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் மர்மமான ஒரு கிழவன் வந்து வாசிப்பவனுக்கு
திகிலூட்டி, 'சஷ்பென்ஸ்' அதிர்வுகளை எழுப்பி, அடுத்தடுத்த அத்தியாயங்களைப் படிக்க வைப்பவனாக இருப்பான். உங்களது
இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும்கூட அப்படி ஒரு பாத்திரமாக, ஒர் கருப்பு நாய் வந்து திகிலூட்டியப்படியே
இருக்கிறது. இரண்டும் ஒரே யுக்திதானா?

5. கல்கியின் கற்பனை வளமான கதையாக்கங்களை மறுத்துதான் அன்றைக்கு மணிக்கொடி இயக்கம் தோன்றி, நவீன இலக்கிய முயற்சிகளை ஆரம்பித்து வைத்தனர் நமது இலக்கிய முன்னோடிகள். இன்றைக்கு மீண்டும் அதே கல்கியை புதிய மோஸ்தரில் உருவாக்கிப் பார்ப்பதென்பது முரண்பாடாகத் தெரியவில்லையா?

- இப்படியான ஒரு சில கேள்விகளும், அபிப்ராயங்களும் மட்டும்தான் என்னுடைய அந்த கடிதத்தில் கண்டிருந்தேன். மற்றப்படி பாராட்டுக்களால் ஆனதுதான் அந்த கடிதம். புத்தத்தை நாவலில் இவர் தூக்கிப் பிடித்ததில் எனக்கு இரட்டை மகிழ்ச்சியல்லவா! இதில் எங்கே மதக்காழ்ப்பு இருக்கிறது?

ஜெயமோகனை நேராகவே கேட்கிறேன், மதக்காழ்ப்புக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? கருத்து தட்டுப்பட்டப் பருவத்திலேயே தாஜுதீன் என்கிற நான் தாஜ் ஆனவன். அப்படியொரு கழிவை என்மீது வீசி, வாயடைக்க முயலும் உங்களுக்கு என்னைத் தெரியத்தான் நியாயமேது?

விஸ்ணுபுரத்தைப் பற்றிக் கூற இன்னொறுக் கூற்றும் உண்டு. அது, கல்கியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாயிலாடுதுரையில் திரு.மூப்பனாருடன் ஜெயமோகன் மேடையேறிய நிகழ்வையொட்டிய நிகழ்ச்சி. நிகழ்ச்சி ரசமானவை!! விழாவின் இடைப்பட்ட நேரத்தில் ஜெயமோகனிடம் விஸ்ணுபுரத்தைப் பற்றி நேரிடையாக நிறையப் பேசினேன். அப்படி அவருடன் நிகழ்த்திய நேரடி உரையாடல்களையும்/ அந்த விழாவின் ரசனைகளையும் பதிவு செய்திருக்கிறேன். அது அச்சைக் காணக்காத்திருக் கிறது. அந்த மயிலாடுதுரை நிகழ்ச்சிக்குக்கூட நண்பர்கள் மூலம் ஜெயமோகன் அழைத்துத்தான் போயிருந்தேன்.

***

எத்தனையோ விழுமியங்களை புறங்கையால் தள்ளி விட்டு விமர்சனம் செய்கிற ஜெயமோகன்! 'அவர் இல்லாமல் நவீன தமிழகத்தின் வரலாற்றையே எழுத முடியாது' என சொல்லப்படுகிற பெரியாரை போகிறப் போக்கில் தலையில் கொட்டிவிட்டுப் போகிற ஜெயமோகன்!! இன்றைக்கு என் நான்கு வரி அபிப்ராயத்தைப் பார்த்து துவள்வது அதிகம்.

ஜெயமோகன் திண்ணை மெயில் வழியே, 'நான் யாரோ' வெனச் செய்திருக்கும் தகவல், இலக்கியப் பரப்பில் எனக்கு தேவை யான பதிவாகவே கருதுகிறேன். இது குறித்து, ஜெயமோகனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்! நன்றி!!

***
satajdeen@gmail.com
http://www.tamilpukkal.blogspot.com/

Sunday, September 03, 2006

அரவாணிகளின் வாழ்க்கை

(அரவாணிகளின் வாழ்க்கை நிகழ்வுகளை அப்பட்டமாகப்
பேசும் 'உணர்வும் உருவமும்' தொகுப்பிற்கான விமர்சனம்.)
- தாஜ்

'சீனி. விசுவநாதன்' அவர்களால் ஆறு தொகுப்பாக தொகுக்கப்பட்டிருக்கும் 'கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' என்கிற பெரும் முயற்சியின் வடிவங்களை சென்னை சென்றபோது வாங்கிவந்தேன். இதற்காகவே இந்த முறை சென்னை சென்றுவந்தேன் என்றாலும் மிகையல்ல. பாண்டவபுரம்/ உணர்வும் உருவமும்/ நினைவின் குட்டையில்/ நீலி/ ஜெயமோகன் சிறுகதைகள் - முழுத்தொகுப்பு/ குத்தூசி குருசாமியின் சிந்தனைக் களஞ்சியம்/ பெரியார்: தலித்துகள் - முஸ் லீம்கள் யென தேடுதலில் தென்பட்ட மேலும் சில புத்தகங்களையும் தெட்டுத்தடவி முகர்ந்து, தவிர்க்க இயலாமல் அந்த சுகமான சுமைகளையும் வரித்துக்கொண்டேன்.

எழுத்தில் உண்மையின் தரிசனம் கிடைப்பது இப்பொழுதெல்லாம் அரிதாகிவிட்டது. கவிதைகள் கொஞ்சம் விதிவிலக்கு. இன்னும் அதில் மங்கவில்லை. பெண் படைப்பாளிகளின் கவிதைகளில் இன்னும் பளீச்சென்று தெரிகிறது. தமிழில் எழுதப்படும் பெரும்பாலான கதை, குறு நாவல், நாவல், கட்டுரை என்பதெல்லாம் எழுத்துக்களின் கூட்டுக் குவியலாகவே இருக்கிறது. நிஜத்தைத் தொடுவது மாதிரி புள்ளிகளை வைத்துவிட்டு, அது பறந்து விரிகிற கோலநேர்த்தி 'என்னைப்பார்' என்பதில்தான் போய்முடிகிறது.

மிகை புனைவு, வாசகனை எத்தனை உயரத்தில் தூக்கிப் பறந்து வட்டமடித்துக் காட்டினாலும், நிஜமாகவே அவன் அதில் திளைத்தாலும் ஒரு நிலைக்கு மேல் தரைக்குத்தான் வரவேண்டும். இங்கே அவன் எதிர் கொள்ள வேண்டிய யதார்த்த வாழ்க்கையும் அவனை விட்டுவிடாது. இந்த மிகை புனைவினூடே சந்தோஷப் படுத்துதலைத்தான், நாமெல்லாம் முகம் சுழிக்கும் தமிழ்ச் சினிமாவும் செய்கிறது. தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு நீதி, இலக்கியத்திற்கு ஒரு நீதியா?

'உணர்வும் உருவமும்' அரவாணியரின் வாழ்க்கைப் பக்கங்களை நிதர்சணமாக பேசுகிறது. பத்துக்கும் மேற்பட்டஅரவாணியரைப் பேட்டிக்கண்டுத் தொகுத்து தந்திருக்கிறார் ரேவதி. பாலினச் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பொருட்டு பெங்களூரில் இயங்கும் 'சங்கமா' என்கிற அமைப்பில் பணிப்புரியும் இவரும் அரவாணியரில் ஒருவர்தான். இந்த நூல், அர வாணியர் மீதான இரக்கத்தைக் கோரவில்லை; பரிதாபத்தை வெளிப்படுத்தச் சொல்லவில்லை. இரக்கமும் பரிதாபமும் பெற் றுப் புலம்பல்களாகத் தேய்ந்து போவதைத் தவிர வேறென்ன விதத்தில் பயன்படக் கூடும்? அரவாணியரைப் புரிந்துகொள்ள இந்நூல் கோருகிறது என்கிறார் இந்நூலுக்குப் பின்னுரை எழுதியிறுக்கும் பெருமாள் முருகன்.

"ஆண் உடலைக் கொடுத்து, அதற்குள் பெண் உணர்வை வைத்து திருவிளையாடல் புரிகிறார்களே அவர்கள்கடவுள்களா? பெற்றவர்களா? நான் என்ன கொழுப்பெடுத்துப்போயா வேஷம் கட்டிக் கொண்டு அலைகிறேன்? நான் யார்? எந்தப் பாலினத்தைச் சார்ந்தவள்? நான் இப்படி இருப்பது சரியா? தவறா? என் கேள்விகளுக்கு எங்கு விடை கிடைக்கும்?"- என்று முன்னுரையில் நம்மை கேட்கும் ரேவதி, இன்னோரிடத்தில் நம்மையும், சமுதாயத்தை குற்றவாளிக் கூண்டிலும் ஏற்றுகிறார்.

"ஒரு ஆணும் ஒரு பெண்ணும் காதலிக்கின்றனர். கல்யாணம் செய்துகொள்கின்றனர். அதேபோல, நான் ஒரு ஆணைக் கல்யாணம் செய்துகொள்ளச் சட்டமும் சமுதாயமும் மறுப்பது ஏன்? ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கான காரணம்என்ன? நாங்கள் உங்களைப் பார்க்கும் விதம் சரியாக உள்ளது. அதாவது அண்ணனாக, அக்காவாக, அம்மாவாக, அப்பாவாக,நண்பர்களாக, ஆசிரியராக, இப்படி உறவுகளையும் உங்கள் உணர்ச்சிகளையும் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள்பார்க்கின்ற விதம்? எங்களை மனிதர்களாகக்கூட நினைப்பது இல்லை. இது எங்களுடைய தவறு இல்லை. உங்களுடைய,இந்த சமுதாயத்துடைய தவறு" என்கிறார்.

இந்த புத்தகத்தை முன் வைத்து, அவர்களின் உலகத்தைப் பற்றி இத்தனை காலத்திற்கும் நான் அறிந்ததுதான்என்ன என்கிற கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொள்கிறபோது, பதில் வெட்கம் கொள்ளத் தக்கதாகவே இருக்கிறது. எல்லோரையும் மாதிரியே, ஒரு சராசரிப் பார்வையைத்தான் கொண்டிருந்திருந்திருக்கிறேன். அவர்களின் பாலியல் சங்கதிக ளைத் தாண்டி யோசிக்காத என் போதாமைக் குறித்து நான் அந்த சமூகத்தின் முன் தலைக் குனிந்தாலும் தவறில்லை.

அரவாணியர்கள் காதலுக்காகவும், கல்யாணத்திற்காகவும் ஏங்கும் ஏக்கத்தை இந்த புத்தகத்தின் வழியே அறிய வந்தபோது 'சுரீர்' என்றது. கிடைத்த கணவனோடு வாழ்வில் கொள்ளும் அவர்களின் ஈடுப்பாடும், வாழ்வை தங்கவைத்துக் கொள்ள அவர்களின் தவிப்பும் கூட எனக்கு புதிய செய்திதான். இதையெல்லாம் விட, பெண் உருவெடுக்க அவர்கள் கொள்ளும் ஆவலும், ஒரு கட்டத்தில் அதற்காக அவர்கள் தங்களது உடலை ரணமாக்கிக் கொள்ள வலிய நிற்பதுவும் அறிய கஷ்டமாக இருந்தது.

நமது சமுதாயத் தலைவர்களுக்கும், பெண்மொழியில் பெண்விடுதலைப் பேசும் சகோதரிகளுக்கும், மீடியாக்களில் வலம்வரும் அறிவு ஜீவிகளுக்கும் அரவாணியர்களின் வாழ்வியல் சுகந்திரம் குறித்து பிடிப்படாமல் போனதுதான் எப்படி? இவர்களை குறித்து மதங்கள் ஏன் பேசவில்லை? வாழ்வியல் வழிகாட்டுதலாவது சொல்லியிருக்கிறதா என்ன? இந்தி யச் சட்டங்களில் இவர்களின் மனவலிக்கு மருந்துண்டா? இல்லையெனில் ஏன் இல்லை? உயிரற்ற, உடலற்றப் பிரஜைகளா அவர்கள்? மனித உரிமைக் கமிஷன் இந்த பாவப்பட்ட மனித உயிர்களுக்கு எந்தெந்த வகையில் பரிகாரம் தேடிக் கொடுத் திருக்கிறது? அரவாணியர்களின் நேரடிப் பதிவை வாசித்தப் பிறகு இப்படி அடுக்கடுக்காய் சிக்கலான கேள்விகள் மேலெழுந்த வண்ணமே இருக்கிறது.

***

'உணர்வும் உருவமும்' புத்தகத்திலிருந்து அரவாணியர்களின் வலிகொண்ட ஒரு பகுதியை கீழே அப்படியே வாச கர்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். ராதா என்கின்ற அரவாணி 'தாயம்மா நிர்வாணம்' செய்துக் கொண்டதை தன் மொ ழியில் விவரிக்க, தொகுப்பாசிரியர் ரேவதி என்கின்ற இன்னொரு அரவாணி அதைப் பதிவு செய்திருக்கிறார். அரவாணியின் யதார்த்த மொழியும் அதில் தெறிக்கும் நிஜமும் நம்மை பிடித்தாட்டுகிறது. கட்டுரை எழுதுவதற்கென்றே நம் சக எழுத்தாளர் கள் குறிப்பிட்ட முப்பது, நாற்பது வழவழப்பான வார்த்தைகளை எப்போதும் பாக்கெட்டில் வைத்திருப்பார்கள். அவற்றை கட்டுரைக்குள் திணித்து நமக்கு 'கிழுகிழுப்பை' காட்டுவார்கள். தொடர்ந்து அதையே படித்த நமக்கு, இந்த கட்டுரையின் மொழி வித்தியாசமான அனுபவமாக இருக்கும். கட்டுரையில் புழங்கப்பட்டிருக்கும் நிறைய கலைச் சொற்களுக்கான அர்த்தம் புத்தகத்தின் பக்கங்களில் இருக்கிறது. இங்கே தெரிந்தே அதனை பதியவில்லை.

***

எனக்கு சொந்த ஊரு நாமக்கல். நான் பம்பாயில் காந்தாராவுல 15 வருஷம் இருந்தேன். காமாட்டிபுரம் பயளகள்ளியில்தான் ரெட்லைட் ஏரியா. அங்கே என்னோட குரு வீட்ல பொண்ணுங்களுக்குத் தண்ணி எடுத்துக் குடுக்கிறது, கடைக்குப்போய் வர்றது மாதிரியான வேலைகளப் பார்த்துக்கிட்டு இருந்தேன். நான் பம்பாயிக்கு வந்து எட்டு மாசத்துக்குஅப்புறம் என்னை நிர்வாணத்துக்கு அனுப்பலாம்ன்னு பேசிக்கிட்டாங்க. ஒரு நாள் எங்க நானி என்னைக் கூப்பிட்டு, "பேட்டா! நீ தாயம்மா கைக்குப் போறயா? இல்ல டாக்டர் கைக்குப் போறயா?" ன்னு கேட்டாங்க. நான், தாயம்மா கைக்கே போறேன்னு"சொன்னேன். (ஏன்னா தாயம்மா கை போட்டுகிட்டா பொம்பள மாதிரியே ஆயிடலாம். கை கால் முடி எல்லாம் கொட்டிப் போயிடுமுன்னு பொட்டைங்க சொல்வாங்க) அதுக்கு எங்க நானி "பேட்டா! தாயம்மா கைக்குப் போகணும்ன்னாதைரியம் வேணும்"ன்னு சொன்னாங்க. "நான் தைரியமா இருக்கிறே"ன்னு சொன்னேன். அன்னைக்குத் தாயம்மாவும் இருந்தாங்க. அவங்களும் என்னை மாதிரி பொட்டைத்தான். அவுங்க தனக்குத்தானே கைப்போட்டு அறுத்துக் கிட்டவங்கன்னுசொல்லுவாங்க. என்னை ஒதுக்குப் புறமா கூட்டிக்கிட்டுப் போய் என்னோட ஆண் குறியப் புடிச்சிப் பார்த்துட்டு 'சீசாம்ம'ன்னு சொன்னாங்க. எங்க நானி என்னையும் என்னோட குருபாயி ஒருத்தியையும் தாயம்மா கூட அனுப்பி வச்சாங்க. நாங்கநிர்வாணத்துக்குப் போறதுக்கு முன்னாடி வீட்ல மாதா பூஜை யெல்லாம் போட்டு சாமிக் கும்பிட்டுட்டுப் பெரியவங்க கால்லவிழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம். அவங்களும் "நல்லவிதமா போயிட்டு வாங்க"ன்னு வாழ்த்தி எங்கள அனுப்பி வச்சாங்க.

தாயம்மா எங்களப் பம்பாயில இருந்து தமிழ் நாட்டுல இருக்கிற உளுந்தூர்பேட்டைக்குப் பக்கத்தில இருக்கிறஒரு கிராமத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அங்கே போய் ஒரு மாசம் ஆன பிறகும் கூட எங்களுக்கு நிர்வாணம் பண்ணல. ஒரு மாசம் கழிச்சி நான் தாயம்மாகிட்ட, "எங்கள ஏன் இப்படி கூட்டியாந்து சும்மாவே வச்சிருக்கிறீங்க? ஒன்னு நிர்வாணம் பண்ணி விடுங்க, இல்ல எங்களப் பம்பாயிக்கே அனுப்பி வச்சிடுங்க"ன்னு சண்டைப் போட்டேன். அதுக்கப்புறம்எங்கள ஆத்தூருக்குக் கூட்டிக்கிட்டு போனாங்க. அங்க ஒரு அம்மா, அதுவும் பொட்டைதான், அந்த அம்மா வீட்லயும் அஞ்சு நாள் இருந்தோம். அப்புறம் ஒரு வியாழக்கிழமை அன்னிக்கிக் 'கைபோடறோம்'ன்னு சொன்னாங்க. மொதநாள் எங்களுக்குநாங்க ஆசப்பட்ட பொருள் எல்லாம் வாங்கிக் குடுத்துச் சாப்பிட சொன்னாங்க. ராத்திரி சினிமாவுக்கு அனுப்பி வச்சாங்க.சினிமா பார்த்துட்டு வந்ததும், எங்கள உள் ரூமுக்குள்ள கூட்டிக்கிட்டுப் போனாங்க. அப்போ மணி இராத்திரி ரெண்டர மணிஇருக்கும். எங்களோட 'லிங்கத்த' (ஆண்குறி) பிடிச்சி சணல்கயிரால சுருக்குப் போட்டுவிட்டாங்க. எங்களுக்குத் தூக்கமேவரல. என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு நெஞ்சு படக்படக்குன்னு அடிச்சிக்கிது. ஒரே பயமா இருக்குது. "அம்மா மாதா நீதான்எங்களுக்கு தைரியம் குடுக்கணும்"ன்னு சாமிய வேண்டிக்கிட்டோம். தூங்காமப் படுத்துக்கிட்டிருந்த எங்கள, விடியற்காலம்நாலு மணி இருக்கும் தாயம்மா வந்து எழுப்புனாங்க. என்னோட குருபாயிக்குதான் முதல்ல கைபோட முடிவு பண்ணுனதா லே பக்கத்து அறைக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. பூஜையெல்லாம் போட்டிருந்தாங்க. சாம்ராணி, ஊதுபத்தி வாசனை எனக்கு வந்துச்சி. அவள் போயி கொஞ்ச நேரத்துக்குள்ள "அம்மா"ன்னு அலர்ற சத்தம் கேட்டுச்சி. ஒரே பயம் எனக்கு. 'இப்படியே ஓடிப்போயிடலாமா'ன்னு நெனச்சேன். 'நமக்கு என்ன ஆகுமோ? மாதா நீ விட்ட வழி'ன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்.ரெண்டாவது என்னைக் கூப்பிட்டாங்க. நானும் அந்த ரூமுக்குள்ள போனேன். என்னோட குருபாயியே ஓரமா உட்கார வச்சிருந்தாங்க. அவள் என்னைப் பார்த்துச் சிரிச்சாள். அங்கே தாயம்மாவும் பின்தாயம்மாவும் இருந்தாங்க. (பின்தாயம்மாவும் பொட்டைதான். கோயில் பூசாரியாக இருந்தாங்க) அந்த ரூமுக்குள்ள போனதும் எனக்குப் பயம் அதிகமாயிடுச்சி. என்னோடமூக்குத்தி, கம்மல்,வளையல், நகை, புடவ, ஜாக்கெட் எல்லாத்தையும் அவுத்துட்டாங்க. என்னை அம்மணமா நிக்கவச்சாங்க.என்னோட பயம் இன்னும் அதிகமாயிடிச்சி. கைகால் எல்லாம் வெடவெடன்னு நடுங்குது. அப்படியே அம்மணமா மாதா போட்டோ முன்னாடி நின்னேன். அப்புறம் என் தலைமுடிய வாயில வச்சி கடிச்சிக்க சொன்னாங்க. 'மாதா! மாதா'ன்னுசொல்லச் சொன்னாங்க.வாயிலே முடி இருந்ததால வாயிக்குள்ளேயே 'மாதா! மாதா' ன்னு சொல்லிக்கிட்டேன். அப்புறம்என்னோட ரெண்டு கையையும் தூக்கி பின்தாயம்மா சேர்த்துப் புடிச்சிக்கிட்டாங்க.என்னால கத்தவும் முடியல, பேசவும் முடியல. 'மாதா மாதா'ன்னு வாயிக்குள்ளேயே மொனகிக்கிட்டு இருக்கிறப்போ, தாயம்மா என்னோட ஆணுறுப்ப இழுத்துப் புடிச்சி வச்சி ஒரே அறுப்புப் போட்டாங்க. ஆணுறுப்பு முழுசா அவுங்க கையோட வந்துடுச்சு. அறுக்கும்போது வலிக்கவே இல்ல. அறுத்துட்டு உட்கார வச்சாங்க, எரிச்சல்ன்னா எரிச்சல். அப்படியே நெருப்பிலே உட்கார வச்சமாதிரி ஒரு எரிச்சல். என்னால ஒண்ணுமே பண்ண முடியல. மயக்கம் வந்துடுச்சி. ரத்தத்தப் புடிச்சி என்னோட முகம், கை, கால், உடம்பு எல்லாம் தேச்சிவிட்டாங்க. "அப்படி தேய்ச்சாதான் முடி எல்லாம் கொட்டிப்போயிடும்"ன்னு சொன்னாங்க. நான் கீழப் பாக்கவே இல்ல. என்னை அப்படியே கால அகட்டி நீட்டக்கச் சொல்லி சுவத்தில சாய்ச்சி உக்கார வச்சாங்க. எனக்குக் கண்ணுங்க சொருகிக்கிட்டு போச்சி. தாயம்மா என்னோட கன்னத்துல படார் படார்ன்னு அடிச்சாங்க. தூங்கக் கூடாதாம். அதனாலதான் அடிச்சாங்களாம். அடிச்சதும் நான் "அம்மா"ன்னு சொன்னேன் "அம்மா"ன்னு சொல்லக்கூடாது, மாதான்னு சொல்லு" ன்னு சொல்லச் சொன்னாங்க. என்னால எரிச்சல் தாங்க முடியாம, "எரியுது"ன்னு சொன்னேன். கொஞ்ச நேரம் கழிச்சி,நல்லெண்ணய ஆவி பறக்கக் காச்சி எடுத்துக்கிட்டு வந்து அறுத்த எடத்தில ஊத்தினாங்க. அந்த எரிச்சலுக்கு அந்த எண்ணை ஊத்தினதும் ந்ல்லா இருந்திச்சி. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி கருகருன்னு வலி திரும்புச்சி. 'அம்மா!'ன்னுகத்திட்டேன். அப்படி கத்தவும் மறுபடியும், "அம்மான்னு சொல்லக்கூடாது, மாதான்னு சொல்லு"ன்னு சொன்னாங்க. காலையில 7மணி வரைக்கும் தூங்காமே பார்த்துக்கிட்டாங்க. தூங்காமே இருக்கிறதுக்கு அப்பப்போ கன்னத்தில அடிச்சுக்கிட்டேஇருந்தாங்க. "தண்ணி தாகமா இருக்குது"ன்னு கேட்டேன். தண்ணி குடிக்கக் கூடாதுன்னு சுக்குக் குடுத்தாங்க. அத என்னாலமெல்ல கூட முடியல. காரமா இருந்துச்சி. "தண்ணி தண்ணி"ன்னு கேட்டேன். அப்புறம் காலாசாயா போட்டு ஆத்திக் குடுத்தாங்க. அதக் குடிச்சிட்டு அப்படியே மயங்கி தூங்கிட்டேன்.

காலையிலே ஒரு 10 மணிக்குத் தாயம்மா வந்து எங்கள எழுப்பினாங்க. "பேட்டா பொம்பளையா ஆயிட்டீங்க"ன்னு சொன்னாங்க. எந்திரிக்கச் சொன்னாங்க. எங்களால எழுந்திரிக்க முடியல. அப்படியே கை தாங்கலா புடிச்சி எழுப்பி சுவத்தில சாச்சி உட்கார வச்சாங்க. "ஒண்ணுக்கு வந்துச்சா"ன்னு கேட்டாங்க. "இல்லே"ன்னு சொன்னேன். ஒரு இட்லியும் காலாசாயாவும் கெண்டு வந்து குடுத்தாங்க. நான் தாயம்மாவக் கூப்பிட்டு, ஒண்ணுக்கு வருதுமா"ன்னு சொன்னேன்.அப்போ கால் பக்கத்தில மணலக் கொட்டி "ஒண்ணுக்குப் போ"ன்னு சொன்னாங்க. நானும் போனேன். ஒண்ணுக்கு நெயில் பாலீஸ் மாதிரி அந்த மணல்ல வந்து விழுந்துச்சி. அஞ்சி நாள் வரைக்கும் எங்களக் குளிக்க வைக்காம அப்படியே வச்சிக்கிட்டிருந்தாங்க. அஞ்சாவது நாள் சுடுதண்ணி வச்சி உடம்பு எல்லாம் கழுவி விட்டாங்க. அன்னைக்கு ராத்திரி "பம்பாயிக்குப் போகலாம்"ன்னு தாயம்மா சொன்னாங்க. எங்களுக்கு ரத்தம் கசிஞ்சிகிட்டே இருந்துச்சி. என்னால எழுந்து நடக்க முடிஞ்சது. என்னோட குருபாயிதான் கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டாங்க. வெத்தலையில எண்ணைத்தடவி, அதப் புண்ணுக்குமேலவச்சி துணியால கோவணம் கட்டிவிட்டு, மூணு பாவாட கட்டி அதுக்கு மேல பொடவ கட்டிக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. ஆத்தூரிலிருந்து மெட்ராசுக்கு இரயில் இல்லாம பஸ்சுலயே கூட்டிக்கிடுப் போனாங்க. பஸ் தூக்கித் தூக்கிப் போட்டதிலமெட்ராசுக்கு வர்றதுக்குள்ள ரத்தம் கசிஞ்சி என்னோட உள்பாவாட ஒண்ணு நனஞ்சே போச்சி. சென்ரல் ரயில் நிலையத்துக்கு போனதும் எனக்கு ஒண்ணுக்கு வந்துச்சி. அங்க, நின்னுகிட்டிருக்கிற இரயில்ல ஏறி ஒண்ணுக்கு போயிட்டு, ரத்தம்பட்ட உள்பாவாடய கழட்டி வீசிட்டுத் திரும்பி வந்து பிளாட்பாரத்தில உக்கந்துட்டேன். பிளாட்பாரத்தில போறவங்க வறவங்க எங்களப் பார்த்துக் கிண்டல் பண்ணாங்க. "டேய் கட்ட வண்டி பாருட"ன்னு சொன்னாங்க. பம்பாய் ரயில் வந்ததும்நாங்க ஏறிக்கிட்டோம். ஜெனங்க அதிகமா இருந்ததால நாங்க பாத்ரூம் பக்கமாவே படுத்துக்கிட்டோம். ரேணிகுண்டாபக்கத்தில, "நாங்க போற வர்ற வழியிலப் படுத்துக்கிட்டிருக்கிறோம்"ன்னு ஆம்பளைங்க அடிக்க வந்தாங்க. வேற வழியில்லாம, அவங்க கிட்ட சண்டபோட்டு எங்க தாயம்மா துணியத்தூக்கிக் காட்டி பீலி பண்ணினாங்க. எல்லா ஆம்பளங்களும் மிலிட்டெரி காரனுங்க. அதுக்கப்புறம் "கொச்சவாடு கொச்சவாடு"ன்னு பேசிக்கிட்டானுங்க. எங்கள ஏத்தி விட்டுட்டு தாயம்மா வேற பொட்டியில போயி பொம்பளங்களோட உக்காந்துக்கிட்டாங்க. எங்கள சரியா கவனிக்கக் கூட இல்ல.கொண்டு போனப் புளி சோத்த எங்களால சாப்பிட முடியல. எப்படியோ கஷ்டப்பட்டுப் பம்பாய் போய் தாதர்ல எறங்கி னோம். என்னால நடக்கவே முடியல. மெல்ல மெல்ல நடந்துபோய் டாக்சி புடிச்சி எங்க குரு இருக்கிற எடத்துக்குப் போய்சேர்ந்தோம். எல்லாரும் வந்து எங்களப் பார்த்தாங்க. பார்த்த கையோட நானி வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. அங்கிருந்து காட்குப்பர் போனோம். வீட்டுக்கு முன்னாடி எங்கள நிக்க வச்சி, சூடம் கொளித்தி, தேங்காய் சுத்தி, ஒடச்சி அதுக்குப் பிறகு எங்கள் உள்ளக் கூப்பிட்டாங்க.

நாங்க இங்க வந்து ஏழாவது நாளன்னிக்கி தண்ணி காய வச்சிக்கிட்டு இருந்தாங்க. தண்ணி கொதிக்குது. எங்களத் துணி எல்லாத்தையும் அவுக்க சொன்னாங்க. பிறகு மோரியில கால அகட்டி உக்காரச் சொன்னாங்க. ஆவி பறக்கஇருந்த சுடு தண்ணிய எடுத்து அப்படியே புண்ணுமேல அடிச்சாங்க. தண்ணி அடிக்கும்போது வலிக்கும். அப்புறம் மறுபடியும் அடிப்பாங்களான்னு இருக்கும். அந்த நமச்சலுக்கும் எரிச்சலுக்கும் சுடுதண்ணிய அடிக்கும்போது சுகமா இருந்துச்சி. அப்புறம் எங்க உடம்பக் கழுவி, கத்தரிக்காய், கருவாடு போட்டுக் கொழம்பு வச்சி சாப்பாடுப் போட்டாங்க. மறுநாள் புண்ணுஇருக்கிற எடத்தில நமச்சல் ஜாஸ்தியா ஆயிடுச்சி. அன்னைக்கும் அதே மாதிரி சுடுதண்ணி அடிச்சாங்க. லைபாய் சோப்புப்போட்டுப் புண்ணுமேல தேச்சி விட்டாங்க. அப்புறம் தண்ணி வச்சி சலார் சலார்ன்னு புண்ணு மேலே அடிச்சதும், புண்ணுசுத்தி இருந்த அழுக்கு, கெட்ட ரத்தம், எல்லாம் போயிடுச்சி. வெள்ள காட்டன் துணிய வச்சிப் புண்ணுமேல ஒத்தி ஒத்திஎடுத்தாங்க. அப்புறம், ஒரு தட்டுல நெருப்பப் போட்டு அதுல ஓமமும் பூண்டுத் தோலையும் போட்டாங்க. அந்தப் பொகையபுண்ணுக்குக் காட்டினாங்க. அப்படி காட்டினா கெட்ட நீர் எல்லாம் வந்துடுமாம். அந்தப் பொகைய காட்டுன பிற்பாடு மறுபடியும் துணி வச்சி ஒத்தி எடுத்தாங்க. நல்லெண்ணய வெதுவெதுன்னு காயவச்சி புண்ண சுத்தி ஊத்தினாங்க. அந்த எண் ணைய் ஊத்தறப்போ சுகமா இருக்கும். ஆனா, ஒண்ணுக்குப் போற ஓட்டையில படும்போது சுரீர்ன்னு வலிக்கும். இந்த மாதிரி முப்பது நாளைக்கு செஞ்சாங்க.

எங்களுக்கு சப்பாத்தி, பாவக்காய், காலாசாயா, நெய் இந்த மாதிரியானத சாப்பிடக் குடுப்பாங்க. சப்பாத்தியசுத்தி எடுக்கிற மாதிரி புண்ணு காவும் சுத்திலும் ஆறிகிட்டே வருமாம். அப்படித்தான் ஆறிகிட்டே வந்துச்சி. பால் குடம்எடுக்கற் நாற்பது நாள் வரைக்கும் பால் குடிக்கக் கூடாம். 11 வது நாள் தலைக்குத் தண்ணி ஊத்தினாங்க. 20 வது நாள்,30 வது நாள் தலைக்கு தண்ணி ஊத்தினாங்க. தலைக்கு தண்ணி ஊத்தற அன்னிக்கெல்லாம் ஆட்டுத் தலைக்கறி கொழம்பு வச்சி சாப்பாடு குடுத்தாங்க. எங்களப் பார்க்க வர்ற பெரிய, சின்ன பொட்டைங்கொல்லாம் எங்களுக்கு காசு சுத்தி குடுத்துட்டுப் போனங்க. கோதுமை மாவு, வெல்லம், டீதூள், நெய் இந்த மாதிரியான பொருள்கள வாங்கியாந்து எங்களப் பாத் துட்டுக் கொடுத்துட்டுப் போவாங்க. நாற்பது நாள் வரைக்கும் ஆம்பிளைங்க முகத்தையே பார்க்கக் கூடாது, கண்ணாடி பார்க்கக் கூடாது, முகத்தில இருக்கிற முடியக் கூட எடுக்கக் கூடாது. ஏன்னா, ஆம்பளைங்க முகத்தப் பார்த்தா ஆசை வரும். இந்த நேரத்தில ஆசை வரக்கூடாதாம். மாதாவுக்கு பூஜை எல்லாம் போட்டு, பால் குடம் சுமந்து ஆத்துலயோ கொளத்திலயோ கொட்டிட்டு மாதா போட்டோவ முதன் முதல்ல பார்த்துட்டுதா நம்ம முகத்த பார்க்கணுமாம். அப்பதான் அந்த மாதாமாதிரி நாமளும் இருப்போம்ன்னு சொல்றாங்க.

இப்படியே 39 நாள் போச்சி, 40 வது நாள் எனக்கு கப்பு போட்டு விட்டாங்க. கப்புன்னா என்னோட முகத்திலவளந்து இருக்கிற முடிய வேரோடப் புடுங்கி எடுக்கறது. அதையெல்லாம் எடுத்த பிறகு அன்னைக்கு ராத்திரி 2 மணிக்குஒரு பலகைப் போட்டுப் பாவாட மட்டும் கட்டி, எங்கள அதுமேல உக்கார வச்சாங்க. அன்னைக்கு அல்திமேந்தி வைச்சாங்க. மஞ்சள், மருதாணி, சக்கரயக் கொண்டு வந்து வச்சாங்க. பெரியவங்கள்ல இருந்து சின்னவங்க வரைக்கும் எல்லாரும்வந்து மஞ்சளப் பூசிவிட்டு மருதாணி தடவி, சக்கரய வாயிலப் போட்டு ஆராத்தி எடுத்தாங்க. அதுக்குப் பிறகு தண்ணிய ஊத்திவிட்டாங்க.

காலையில 4 மணிக்கு நல்ல நேரம் பார்த்து என்னோட குரு எனக்குப் பச்ச புடவ, ஜாக்கெட், பாவாட, பச்சவளையல், மூக்குத்தி, லஜ்ஜா, கொலுசு, மெட்டி எல்லாத்தையும் குடுத்துப் போட்டுக்கச் சொன்னாங்க. எல்லாத்தையும் போட்டுக்கிட்டு யாரையும் பார்க்கக்கூடாது. ஜோக் ஏத்தினபிறகு முக்காடு போட்டு முகத்த மறச்சிக்கிட்டு மாதாவுக்கு பூஜைப்போட்டு பாட்டுப்பாடி, ஆராத்தி எடுத்துப் பால் குடத்தத் தலையிலத் தூக்கி வச்சாங்க. "மாதா மாதா"ன்னு சொல்லச் சொன் னாங்க. அந்த பால் குடத்தத் தூக்கிக்கிட்டு ஊர்வலமா போய் கடல்ல ஊத்திட்டு, அந்த குடம் நெறய கடல் தண்ணிய எடுத் துக்கிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தோம். அதுக்குப் பிறகு எங்க முக்காட்ட எடுத்துட்டு மாதா போட்டோவப் பார்க்கச் சொன்னாங்க. எது பிடிக்குதோ அத எடுத்து சாப்பிடச் சொன்னாங்க. நான் முக்காட்ட எடுத்துட்டு மாதா போட்டோவப் பாத்தேன்.அந்தம்மா அழகா ஜொலிச்சாள். வெளக்கு ஏத்தி வச்சிட்டு அதுக்குப் பக்கத்தில தேங்கா, பழங்க, பலகாரங்க, கேசரி, எல்லாம் வச்சிருந்தாங்க. கேசரி மேல அந்த அம்மாவோட சின்னமான 'ஓம்' எழுதி இருந்திச்சி. 'எத முதல்ல எடுத்து சாப்பிடறது'ன்னு யோசனப் பண்ணிட்டு முதல்ல அந்த கேசரிய எடுத்துச் சாப்பிட்டேன். எல்லோரும், "நல்லது பேட்டா. இனிப்பு தான் எடுத்து இருக்கிறே. இனிமே உன் வாழ்கை நல்லா இருக்கும்"ன்னு சொன்னாங்க. அப்புறமாதான் கண்ணாடியக் காட்டிஎன்னோட முகத்தப் பாக்கச் சொன்னாங்க. அதுக்கப்புறம் பெரியவங்களுக்குப் பாம்படுத்தி சொல்லச் சொன்னாங்க. இன்னைக்கும் அந்த மாதா புண்ணியத்தில எந்தக் கொறையும் இல்லாம நான் நல்லா இருக்கிறேன்.

இப்போ எல்லாம் எங்கியாவது கொஞ்சம் ரத்தத்தப் பார்த்தாலும் தலை சுத்திக்கிட்டு வருது, பயமா இருக்குது.ஆனா அன்னைக்கு நான் பொம்பளையா ஆவணும்ன்ற ஆவேசமும், அந்த மாதா என்னோட உடப்புக்குக் குடுத்த தெம்பும்தான் பயமில்லாம வச்சிருந்துச்சி. மேல தண்ணி அடிக்கும்போது சில நேரத்தில வலிக்கும். சில நேரத்தில சுகமா இருக்கும். வலிக்கறப்போ நான் காலுங்கள குறுக்குனாலோ, கத்தினாலோ பெரியவங்க அடிப்பாங்க. 'பொம்பளயா ஆகணும்ன்னாசும்மாவா'ன்னு சொல்லுவாங்க. அவுங்க அடிச்சதும் திட்டினதும் 40 நாளுக்கப்புறம்தான் தெரிஞ்சிச்சி. தண்ணி, பொசு, எண்ணைய் எல்லாம் வாங்குனதாலதான் புண்ணும் சரியா ஆச்சி. ஒண்ணுக்கும் தாராளமா வந்துச்சி. இதெல்லாம் ஒரு தெய்வசொயல்ன்னுதான் சொல்லுவேன். தாயம்மா நிர்வாணத்த இப்ப நெனச்சாலும் பயமாதான் இருக்குது.

***

satajdeen@gmail.com / www.tamilpukkal.blogspot.com