Friday, November 24, 2006

தாஜ் கவிதைகள் - 7



வினையெச்சம்.
--------------------

நான் வளர்த்த செல்லம்
ஓர் மிருக ஜாதி
அறியவில்லை அன்று.

தவழத் துவங்கிய நாளில்
கையோடு அள்ளியணைத்து
மகிழ்ந்தப் போதெல்லாம்
எழுந்து நின்று
குதியாட்டம் போட
பெருத்த புதிரில் சிலிர்த்தேன்.

ஆமையாய் ஒடுங்கி
பாம்பெனத் தலையெடுத்து
பூனையாக இரவுகளில்
கண்விழிக்கவே
மிரண்டு
கட்டிப்போட நினைத்தும்
வென்று நின்றது அது.

இரைத்தேடி
மாமிச திரட்சிக்காக
ஆளாய் பறந்தலைய
விலை கொடுத்து வாங்கி
போட்டுப் பார்த்தேன்
அடங்குவதாய் இல்லை.

இம்சை தாளாது
இரைப் பிராணியோன்றை தேடி
வீட்டில் கட்டிப்போட்டேன்.
நாள் விடாது கொத்தியதை
ருசித்துப் பதம் பார்க்கவும்
கொழுத்தது இரைப் பிராணி.

விட்டு விட்டு நொண்டத்
தொடங்கியதோர்
கறுப்பு நாளில் தன்
உருவத்தை விட்டும்
காணாமல் போனது மிருகம்.
மினுக்கத் தொடங்கிய
இரைப் பிராணியின்
கண்களும் ஜொலிக்கவே
நித்திரைச் சலனங்களில்
மிருகம் விட்டுப்போன
தடயங்கள் தட்டுப்பட
முயன்று விரையத்
தேடியும் பயனில்லை.

*****

பெயர் சொல்லும் கவிதை.
---------------------------------

யாரும் எழுதாத
கவிதை யொன்றை
கண்டுதரும் எண்ணமுண்டு.
உன்னத தரிசனத்திற்கு
பக்திச் சிரத்தை அவசியம்.
எழுதிக் கொள்ளுங்கள்
யாரும் பேசாதப் பேச்சை
எழுதாத எழுத்தை
பார்க்காத பார்வையை.

உங்கள் உள் அறைகளில்
மண்டிக் கிடக்கும்
குப்பைகளின் மக்கிய வீச்சம்
மண்டையைப் பிராண்டும் முன்
கூட்டிப் பெருக்கி முதலில்
ஸ்தலம் பேணுங்கள்.

தட்டுப்படும் நேர்த்தியான
கலாச்சார வட்டங்களை
துடைத்தெடுத்து
உயரத்தில் மாட்டுங்கள்.
நீதி போதித்தப்
புத்தகங்களையெல்லாம்
துடைத்தெடுத்து
பத்திரப் படுத்திவிடுங்கள்.
பாசத்தையும் பிரியத்தையும்
விசேச காலங்களில் பேணுங்கள்.

பொக்கிஷ வார்த்தைகளின்
விரயம் தவிர்க்க
இருப்பை திறக்காதீர்கள்.
கொள்கை முழக்கங்களையும்
லட்சிய வேட்கைகளையும்
கண் இழந்து யாசிப்பவர்களிடம்
மனமுவந்து தந்துவிடுங்கள்.

எட்டி நடைபோடும் நாளில்
இடிபடும் வண்ணப் பூச்சு
மேவும் அழகே அழகு.
கதவுகள் திறந்தே இருக்கட்டும்
ஒளிக்கீற்று மினுக்கும்
சாளரங்களில் தட்டாது
பக்ஷிகள் படபடக்கும் நித்தம்.

*****

- தாஜ்..

No comments: