Sunday, November 19, 2006

பிரம்மராஜன் - வேறொரு புதுக்கவிதை - தாஜ்..

( B R A M M A R A J A N ' A U N I Q U E P O E T ' )


புதுக் கவிதையின் மீது எனக்கு ஈடுபாடும், பிடிப்பும் வந்தபோது அப்படி சில கவிதைகளை எழுதிப்பார்த்தேன். படியவில்லை. தவிர சிரிப்பும்வந்தது. இப்பொ ழுதும் என்கவிதைகள் மீது எனக்கு சிரிப்பு உண்டு. இது வேறு காரணங்களுக் கானச் சிரிப்பு.தமிழில் புதுக்கவிதைகள் எழுத, உயர் நிலைப் பள்ளித் தொட்டு கல்லூரிவரை கற்று, மனப்பாடம் செய்த கவிதைகளுக்கு சொந்தக்காரர்களான கவிச்சக்கரவர்த்தி / உலக மாகாகவி / பாவாணர்கள் / பாவலர்கள் / சித்தர்கள் என்று எந்த ஒரு கவியாலும் எனக்கு அடியெடுத்துக் கொடுக்க முடியவில் லை. அவர்கள்தான் அப்படியென்றால் கல்லூரியில் நான் விரும்பிப் படித்த சேக்ஸ்பியரால்கூட ஆகவில்லை! கவிதையோடான ஈர்ப்பை மட்டுமே அவர் கள் தந்ததேடு சரி. இப்படி கற்ற முன் அனுபவங்கள் போதாது என்கிறவகை யில், புதுக்கவிதையை அணுகுவதும், எழுதுவதென்பதும் திருகலான சங்கதியா கவே பட்டது. கவிதைக்குள் நுழையும் திறப்பை அறியவே பெரும்பாடு வேண் டியதாக இருந்தது.


இவர்களில் பாரதிமட்டும் கொஞ்சம் நெருக்கமாக வந்து நானிருக்கிறேன் எழு து என்றான். ஆனால் அவனோ திடுதிப்பென்று அந்தப் பக்கம் சக்தியிடமும், காளியிடமும், அடுத்த நொடியில் இன்னொருப் பக்கம் பாரதமாதாவிடமும் ஓடிவிடுகிற பேர்வழி. அப்படி அவன் ஓடுவதற்கு நேர் எதிர் திசையில்தான் புதுக் கவிதையின் இருப்பே இருக்கிறதென்று அறிய, ரொம்பத்தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது.


தொடர்ந்து, நிறைய கவிதைத் தொகுப்புகள், கவிதைகள் குறித்த கட்டுரைகள் மற்றும் விமர்சனத்தொகுப்புகள் என்று ஒன்று விடா மல் வாங்கிவாசித்தேன். தூரத்தூரத்தில் நவீனக்கவிதையின் அடர்ந்த கருமையிலா நீர்கோர்த்தவானம் இருளாகத் தென்பட்டு விட் டது. இந்த புரிதலுக்கும் நான் வாசித்த அந்த புத்த கங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவைகளை வாசித்து தூரப் போட்டப் பிறகுதான் அது சாத்தியமானது. ஆனால் அந்த புத்தகங்களின் வழியே நான் அனுபவித்த ரசனை, கவிதைப்புரிதலைவிட மேலா னது. சுவாரசியம் கூடியது. விமர்சனங்கள் என்கிற பெயரில் ஒருபடைப்பாளி இன்னொரு படைப்பாளி யின் மீது சகதிகளையும், சில நேரம் அதைவிட அருவருப்பு சங்கதிகளையும் வார்த்தைகளின் வீச்சில் பரிவர்த்தனை செய்வதை கண்டு,அது சுவாரசியமே என் றாலும் கூசித்தான்போனேன். அபூர்வமாய் சிலநேரம் அந்த தருணங்களில் கவிதைகள் குறித்த ஓரிரு கட்டுரைகளையும் வாசிக்க வும் வாசித்தேன்.


கவிதையைப் புரிந்து கொள்ளும் விடப்பிடியான என்பயணத்தின் அடுத்தக் கட் டம் தொடங்கியது.தேர்ந்த புதுக்கவிதைகளை வெளியிடும் சிற்றிதழ்களின்மீது அலாதியான மோகம் கிளைத்தது. ஊட்டியிலிருந்து மீட்சியென்ற சிற்றிதழ் வருவதாகவும், அது கவிதை க்கான இதழ்யென்றும் ஊட்டி நண்பர் கார்த்திகா ராஜ்குமார் மூலம் கேள்விப்பட்டு அதன் முகவரியை விசாரிக்கத் துவங்கி னேன். கிடைத்தது. அப்பொழுது சௌதியில் இருந்த நான், அங்கிருந்து அந்த இதழுக்கு சந்தாவும், அதன் ஆசிரியருக்கு ஒரு கடிதமும் எழுதினேன். ஒரு மாதத்திற்குட்பட்ட கால அவகாசத்திற்குள்ளாகவே மீட்சியும், அதன் ஆசிரியர் பிரம்மராஜனிடமிருந்து பதிலும் வந்தது. 'பிரமராஜன்' என்ன பெயரிது? அப்பொ ழுது அந்த பெயர் கேலியாகவும், இன்னொருபுறம் கொஞ்சம் பிரமிப்பு தருவ தாகவும் இருந்தது. பொதுவாகவே தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களின் பெயர் களும், படைப்பாளிகள் சிலரது பெயர்களும் எனக்கு நகைப்பூட்டுபவையே. புனைப்பெயரை வைத்துக்கொள்வதே அதீதம், அதிலும் பல நுட்பங்கள் கூடிய பற்பல அர்த்தபாவங்கள் தெறிக்கக்கூடிய ஒரு புனைப்பெயரை வலிந்து வைத் துக் கொள்வதை சரியானக் கோணத்தில் யோசிக்கத் தெரிகிற யாருக்கும் சிரி க்கவே தோணும். மாறாக அவர்கள் வைத்துக்கொள்ளும் புனைப் பெயருக்கேர் ப்ப அவர்களது திறமைகளின் வெளிப்பாடும் இருந் துவிடும் பட்சம் அந்த புனைப் பெயரின் மீது ஒருவித மரியாதைக்கூட நம்மில் எழவும் எழும். 'பிரம ராஜன்' மாதிரி!!


மீட்சி இதழை வாசித்து முடித்தபோது, அதற்குமுன் வாசித்த பற்பலச் சிற்றிதழ்களில் பார்க்கக் கிட்டாத கவிதை வெளி அதில் காணவும் மலைக்க வைத்தது. அந்த கவிதை வெளியின் விசாலம் சர்வதேச எல்லைகளைத் தொட்டு நிற்க கிளர்ச்சிக்கும் ஆளா னேன். அடுத்தடுத்த இதழைப் படித்த போதும் அதே நடந்தது. அதே காலக்கட்டத்தில் தமிழின் பிற சிற்றிதழ்களைத் திறந்தால் கவிதை விமர்சனம் அல்லது ஆய்வு என்கிறப் பெயரில் மிக மலிவான இலக்கியச் சங்கதிகளே முன் வைக்கப்படுவதாக இருக் கும். 'தமிழில் எவருக்கும் புதுக் கவிதையே குறித்த ஞானமே இல்லையென்று விட்டு, அந்த தகுதியுள்ள ஒரே அசாமி தாந்தான் என்பதில் முடியும்' அந்த முன் வைப்புகள். இப்படியானவர்களின் இரைச்சலுக்கு எந்த காலத்திலும் மீட்சி மேடைப்போட்டுத் தந் தது இல்லை. மாறாய் தமிழின் நவ இலக்கியப் பார்வைக்கு, உலகம் தழுவிய இலக்கிய மேன்மைகளை மீட்சியில் பிரம்மராஜன் பல ரூபங்களில் தொடர்ந்து பதிவு கொண்டிருப்பதை கண்டேன். 'எட்டுத்திக்கிலுமான கலைகள் அனைத்தும் தமிழில் வரவேண் டும்' மெனக்கூறிய பாரதியின் சொல்தான் அன்றைக்கு ஞாபகத்தில் எழும். அன்றையத் தேதியில் தமிழின் மிகச்சிறந்த இலக்கியச் சிற்றிதழ் இரண்டை குறிப்பிடத் தோன்றினால் அதில் ஒன்றாய் நிச்சயம் மீட்சி இருக்கும்.


பிரம்மராஜனின் கவிதைகளை அவரது மீட்சியில்தான் முதன்முதலில் படித்தேன். அப்பொழுது அது எனக்குப் புரியவில்லை. பிற கும் சிரத்தையாக அவரது கவிதைகளை தொடர்ந்து படிக்கவும் படித்தேன் அப்பவும் புரிவதாகவோ,பிடிப்படுவதாகவோ இல்லை. ஆனால் உள்ளார்ந்த தூரத்தில் ஏதோ புரிவது மாதிரியும், பிடிப்படுவது மாதிரியும் நிழலாட்டமாக உணர்வில் தென்படும். அதுவே எனக்கு பெரிய கவர்ச்சியாக இருந்தது.இன்னொரு விசேசம் என்னவென்றால், மீட்சியில் உதாரணக் கவிதைகளாக அவ்வப்போது மொழிமாற்றத்துடன் வெளியிடப்படும் ஐரோப்பிய கவிதைகளை இரண்டாவது வாசிப்பிலேயே நெருக்கமாக அணுகிவிட முடியும். ஆனால், பிரம்மராஜனின் கவிதைகளை இரண்டாம் வாசிப்பு, மூன்றாம் வாசிப்பு மட்டுமல்ல முப்பதாவது வாசிப்பிலும் திமிரும்.


வாசிக்கிற கவிதைக்கு ஏதோ ஓர் அர்த்தத்தை இட்டு நிரப்பிக் கொள்வதை ஒருவகையான கவிதைப் புரிதலாக சிலர் ஏற்கி றார்கள். சில கவிதைப் படைப்பாளிகள்கூட தாங்கள் கவிதை எழுதியக் கையோடோயே, அந்த கவிதைக்கும் தங்களுக்குமானஉறவு முடிந்துப் போனதாகவும், வாசகனின் பார்வையில் நிகழும் எந்தவொருப் புரிதலையும் ஏற்பது மாதிரியும் பேசுகின்றார்கள்.அப்படி வேண்டுமானால் பிரம்மராஜன் கவிதைகளை வாசித்த நாழிக்கு புரிந்துக்கொண்டேன் என்றுவிடலாம். அது சரியா? எனக்கென்னவோ இந்த சலுகையின் அடிப்படையே புரியாத ஒன்றாக இருக்கிறது. ஒரு கவிஞனின் தன் கவிதையில் மாங்காவைப் பற்றி பேசுகிறான் என்றால், நானும் அதைத்தான் அந்த கவிதையில் தேடி அடையனும். அதைவிட்டு தேங்காய் என்று கற்பிதம் கொண்டுத் திளைப்பதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?பிறகு அந்த கவிதைத்தான் என்னாவது? இப்படியே பழக்கப்பட்டுப் போனால் பின் என் புரிதல்தான் என்னாவது? எல்லாம் கோணிக்கொண்டல்லவா போகும்.


பிரம்மராஜனின் கவிதை வழியிலான கஷ்டத்தை முதலில் எனக்கு மட்டும்தான்யென நினைத்தேன்.பிறகுதான் தெரிந்தது,அது அவ ரது கவிதை வாசிக்கும் ஏனையோருக்குமான கஷ்டமென்று. பொதுவாக கவிதை வாசிப்பு என்பது கஷ்டப்படுத்தக் கூடியதுதான். கவிதைகள் பிடிப்படாது நழுவும் கஷ்டத்தை நான் பெரிதுப் படுத்துவது கிடையாது. என் போதாமையைத்தான் முதலில் அங்கே வைத்துப் பார்ப்பேன். பிடிப்படாத தூரத்தில் அல்லது உள் நோக்கிப் பார்க்க முடியாத சாளரத்தின்வூடே அந்த கவிதையின் அர் த்தப்பாவம் இருப்பதாகவோ, கவிதையின் கவிதையான திரைச்சீலைகளை நம்மால்தான் அசராது விழக்க முடியவில்லை என்பதா கவும்தான் நினைப்பேன். பிரம்மராஜன் கவிதைகளை வாசிக்கிறப்போதெல்லாம் பெரும்பாலும் இப்படிதான் என் நிலைப்பாடு இரு க்கும். ஆனால், என் நண்பர்கள் அப்படியல்ல. அவர் புரியும்படிதான் எழுதினால் என்ன என்பார்கள். புரிதலின் எல்லைக்கோடு தான் எது?யார்தான் அதை வகுக்க முடியும்? வாதம் செய்யும் இந்த நண்பர்களின் கவிதைகளைக்கூட புரியவில்லை என்று சொன் னவர்களை எனக்குத் தெரியும். வைரமுத்துவின் கவிதைகளை புரியவில்லை என்பவர்களையாவது சேர்த்துக்கொள்ளலாம், ராணி வார இதழில் வரும் கவிதைகளையும்கூட புரியவில்லை என்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். கவிதைப் புரியும்படி எளிமைப் படுத்துதல் என்று வந்துவிட்டால் பின் அதற்கொரு அளவே இல்லாமல் போய்விடும். பின் எதற்கு கவிதை. உரைநடையேமொழியை ஆண்டுவிட்டுப் போகலாமே.


எனது ஆரம்ப கவிதைகள் மீட்சியில்தான் வெளிவந்தது.அது வெளிவந்த நேரங்களில் பிரம்மராஜனிடம் கடிததொடர்பு இருந்தது. அவரது கவிதைகளைப் புரிந்து கொள்ளும் பிரிதொரு முயற்சியாக, சில கவிதைகள் குறித்து அவரிடமே விளக்கம் கேட்டேன். பொருப்பாக பதில் தந்திருந்தார். அப்பொழுது அவர் எழுதிக் கொண்டிருந்த 'கழுகுகளின் காதற்காலம்' என்கின்ற கவிதையை ஒரு பக்கத்திற்கு எழுதி,அதை புரிந்துக்கொள்ளும் சாத்தியப்பாடுகளை இரண்டரைப் பக்கத்திற்கு எழுதியிருந்தார்.அதில் அந்த கவிதையை ஐயமறப் புரிந்துக்கொள்ள வரைப்படமும், கவிதையின் எந்த வரிகளோடு அதன் கீழ்/மேல் வரிகளைச்சேர்த்து வாசி த்தால் புரியும் என்பதற்கான ஈக்குவேஷனகளும், குறியீடுகளும் இட்டு தெளிவுப் படுத்தியிருந்தார். அமைதியான ஓர் இரவு சூழ் நிலையில் அவரது விளக்கத்தை வைத்து அந்த கவிதையைப் புரிந்துக்கொள்ள முயற்சித்தேன். அன்றைய இரவின் தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.


ஒருவன் புதையலைக் கண்டடைய எடுத்துக் கொள்ளும் முயற்சிகளோடு, கவிதையின் மையத்தை தேடிக் கண்டடையும் சிரத்தை களை ஒப்புமைப் படுத்துவார் பிரம்மராஜன். இது எனக்கு விந்தையான ஒப்புமையாகவே வெகுநாள் மனதில் கிடந்தது. அது குறி த்து திரும்பத் திரும்ப யோசிக்கிற போதெல்லாம், சிரத்தைக்கூடிய முயற்சிகளோடு ஒருவன் புதையலை வேண்டுமானால் தேடிகண்டடையலாம் என்று மட்டும் தோன்றும்.


கடைசியாக வெளிவந்த பிரம்மராஜனின் கவிதத் தொகுப்பான 'மஹா வாக்கியம்' கொஞ்சத்திற்கு இலகுவானது. அந்த கவிதைப் புத்தகத்தின் அட்டைப்படமாக நீண்ட கடற்கரையும் அதன் அடியில் 'மஹா வாக்கியம்' என்று தொகுப்பின் பெயரும் கண்ட நாழிக்கு எளிதில் புரிந்து கிளர்ச்சித் தருவதாக இருந்தது. அந்தத் தொகுப்பின் கவிதைகளோடு தொட்டுத் தடவி உறவாடவும் முடிந்தது. "மஹா வாக்கியம் இந்த தேக்க நிலையை உடைச்சிருக்குன்னுதான் தோணுது. 'புராதன இதயம்' தொகுப்பை நிறைய பேர் படிக்க முடியலைன்னு சொன்னாங்க. இப்படியாகிறது கவிஞனுக்கேகூட வருத்தமளிக்கக்கூடிய விஷயம்தான். அதனால கவி தை சொல்லலை இன்னும் சரளமாக்கக்கூடிய மனநிலைக்காக காத்திருந்தேன். 'கடல்பற்றிய கவிதைகள்' அதுதான். இது எளிமைப் படுத்தல் அல்ல. இலகுவாக்கல், வரிகள் தளர்வா இருக்கே தவிர கவிதை தளர்வா எழுதப்படல." பிரம்மராஜன் தனது சமீபப் பேட்டி யொன்றில் இப்படி கூறியிருப்பதை நோக்கும்போது, தனது கவிதை நிலைப்பாட்டை அவர் பரிசீலிக்கத் தொடங்கியது மாதிரி தெரிகிறது. யோசிக்கிறபோது கவிதைப் படைப்பில், அவரது விடாபிடியான முரண்டு அல்லது அவரது அதீத நம்பிக்கைநமக்கெல்லாம் புதிராகவே வாழ்ந்தாலும், ஏதோ இன்றைக்கு இந்த அளவில் அவர் இறங்கி வந்திருப்பது வரவேற்கத் தகுந்ததாகவே தோன்றுகிறது.

*****

பிரமராஜனின் கவிதையொட்டிய உழைப்பின்மீது அதிக மதிப்புக் கொண்டவன் நான். கவிதையைத் தாண்டி அவரது கலை ஈடுப்பாடுகள் பன்முகத்தன்மை கொண்டது. இங்கே அவரது ஒரு பக்கத்தின் விஸ்தரிப்பை மட்டுமே என் கட்டுரை வெளிச்சம் காட்டியிருக்கிறது. அவரது பன்முகத்தன்மை தமிழ் கவிதையுலகம் அறியவேண்டிய ஒன்று.'வனம்' (மார்ச்&ஏப்ரல்-06) என்கிற சிற்றிதழில் ஜீ.முருகன், ராணிதிலக், பழனிவேள் ஆகியோருடன் அவர் சமீபத்தில் நிகழ்த்திய நீண்ட உரையாடல், உரையாடல் வடிவிலேயே பதிவாகியிருக்கிறது. அதன் சுருக்கிய வடிவத்தை இங்கே பதிவு செய்திருக்கிறேன். முழுவதுமான உரையாடலுக்கு வாசகர்கள் குறிப்பிட்ட வனம் இதழை பெற்று வாசிக்கலாம்.அந்த இதழை உபயோகித்துக் கொண்ட அளவில் எனது நன்றியும் ஆகுக. கீழே, அவரைப் பற்றிய குறிப்புகளுடன், தொடர்கிறது அந்த உரையாடல்.

1953ஆம் ஆண்டு சேலத்தில் பிறந்த பிரம்மராஜனின் இயற்பெயர் ஆ.ராஜாராமன்.ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று, அரசு கல்லூரி ஒன்றில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.

இதுவரை,அறிந்த நிரந்தரம்/ வலி உணரும் மனிதர்கள்/ ஞாபகச்சிற்பம்/ புராதான இதயம்/ மஹாவாக்கியம் என்ற ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. தவிர, இவைகளில் தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பொன்றும் தனியே வந்திருக்கி றது. எஸ்ரா பவுண்ட் பற்றிய அறிமுக நூலினை வெளியிட்டிருக்கிறார். இவருடைய மொழிப்பெயர்ப்பில் வெளிவந்த 'ப்ரகட் கவி தைகள்' அன்றைய தமிழ் புதுக்கவிதை உலகின் சந்தோசங்களில் ஒன்று. புதுக்கவிதையில் புகழ்ப்பெற்ற உலககவிஞர்களின் தேர் ந்தெடுத்தக் கவிதைகளை, இவர் முன் நின்று பல்வேறு தமிழ் கவிஞர்களால் தமிழில் மொழிமாற்றம் செய்து, இவரால் கொண்டு வரப்பட்ட 'உலகக் கவிதைத் தொகுப்பு' மிகுந்த வரவேற்று பெற்ற ஒன்று. 1981 - 1992 வருடங்களில் மீட்சியென்ற சிற்றிதழை நடத்தினார். சுமார் 35 இதழ்கள் வந்து பின் அது நின்றது. சித்தர் பாடல்களில் சுமார் 64 பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெ யர்த்து இந்தியன் லிடடரேச் சரில் வெளிக்கொண்ணார்ந்திருக்கிறார். 'போர்ஹ கதைகள்', 'கல்வினோ கதைகள்' இவரது புனைக் கதை மொழிப்பெயர்ப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவை.அவர் மொழிப்பெயர்திருக்கும் மார்க்வெஸ்ஸின் தலைசிறந்த நாவலான 'ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை' விரைவில் வெளிவர உள்ளது.

*****

கேள்வி: நீங்கள் எழுதத் தொடங்கிய காலத்தில் உங்களுக்கு பின்புலமாக இருந்த எழுத்துகள் பற்றி........

பதில்: கவிஞர்கள் என்றால் தருமுசிவராமு, சுந்தரராமசாமி, நாரணோஜெயராம், தி.க. வேணுகோபால் இவர்களைச் சொல்லலாம். குறுந் தொகையை முழுசாகப் படிச்சிருந்தேன், நற்றிணை பாதி படிச்சிருக்கேன். ஆரம்பத்தில் படிமம் சார்ந்த கவிதைகள்தான் எழுதினேன். அப்படி எழுதும்போது மொழி தளர்வா இருந்துவிடக் கூடாது, சொல் தேர்வு கச்சிதமாக இருக்கவேண்டும் என்ற சிக்கனத்துடன் எழுதுவேன். யாருடைய கவிதை போலவும் என்னுடைய கவிதை இருந்துவிடக்கூடாது என்ற பிரஞைதான் மொழி இப்படி அமைவதற்குக் காரணம்.


கேள்வி: பிரமிளோட மொழிக்கும் உங்களுடைய மொழிக்கும் என்ன வித்தியாசம்?

பதில்: பிரமிளோடமொழிக்கும் எனக்கும் எந்தசம்பந்தமுமில்லை. ஏன்னா அவர்மொழியில் எந்தப் பரிசோதனையும் செய்த மாதிரி தெரியல. பல அர்த்ததளங்ககள்ல இரண்டுவார்த்தைகளோட அருகாமையில் ஏற்படக்கூடியஉருகல் என்னுடைய கவிதையில் பார் க்கலாம்.83-வரைக்கும் என்னோட கவிதை எளிமையாத்தான் இருந்தது. ஞாபகச்சிற்பத்திலதான் மொழிரீதியான சோதனைகளைச் செய்ய ஆரம்பிச்சேன். இதுவலிந்து செய்யப்பட்டது கிடையாது.நெருக்கடின்னு சொல்லலாம். ஒரு வார்த்தைக் கொடுக்க வேண்டிய அர்த்தத்தை கொடுக்காத பட்சத்துல வேறொரு வார்த்தைய பக்கத்துல வச்சி இரண்டையும் உருக்கி அதனால் உருவாகக்கூடிய புதிய அர்த்தத் தளத்தை ஏற்படுத்துகிறது. இதுமாதிரியான கவிதைகள் ஞாபகச்சிற்பத்தில இருக்கு. அதனோட உச்சம் புராதான இதயம். இவ்வளவு சோதனைகளை ஒருத்தர் தொடர்ந்து எழுதிக்கிட்டிருக்க முடியாது. கொஞ்சம் தளர்வா எழுத வேண்டியிருந் தது. பிறகு கலந்துதான் எழுதியிருக்கேன். முழுசாபரிசோதனைகளை விட்டுவிட்டேன்னும் சொல்ல முடியாது.'மஹாவாக்கியத்தில்' மொழி பற்றிய கூடுதல் பிரக்ஞையோடுதான் எழுதியிருக்கேன். 85க்கு பிறகு நான் வாசித்த சித்தர் பாடல்கள் பின்கட்ட கவிதை களுக்கு உதவியா இருந்திருக்கு.


கேள்வி: ஆரம்ப காலக்கவிதைகளில உண்ர்ச்சி பிரதானமா இருக்கு, பிற்காலக் கவிதைகள்ல அறிவோட ஆதிக்கம் அதிகமா இருக்கு,இந்த மாற்றத்திற்கும் உங்களுடைய மொழி இறுக்கம் அடைஞ்சதுக்கும் தொடர்பிருக்கா?

பதில்: மனசு/அறிவுன்னு பிரிக்க முடியும்ன்னுதோணல. நான் சிந்திக்கறப்ப உணர்வும் அறிவும் ஒரே நேரத்தில்தான் செயல்படுது. ஒரு விஸயத்தைப் பற்றி உணர்வுரீதியா அணுகும்போதோ என்னோட காரணஅறிவும் சேர்ந்துதான் இயங்குது. இசையைக் கேட் கும் போதும் இதுதான் நிகழுது.


கேள்வி: நம்மோட அனுபத்திற்கு மொழிகிடையாது. ஏன்னா இது கண்வழியா நடக்குது. ஆனா எழுதும்போதுதான் மொழியோட தேவைஇருக்கு. அப்ப அனுபவத்தோட உணர்வை எந்த அளவுக்கு மொழியில் மாற்றம் செய்ய முடியுது?

பதில்: காட்சி வழியா சிந்திக்கிறது ஒருமுறை. பெரும்பாலும் இதை மொழிப்படுத்துவதில்லை. ஒரு கனவை சரியா சொல்ல முடிய லேன்னு சொல்றோம். வெறும் காட்சிய அடுக்கிகிட்டுப் போக முடியாது. அதற்கு இணைப்பு கண்ணி தேவை. இந்த கண்ணிகள் மொழியில் தான் இருக்கு. இங்கேதான் அறிவு தேவைப்படுது. அரூபமா சிந்திக்கிற ஒரு முறை இருக்கு. இது மொழியிலே நிகழ் கிற ஒன்னு. அப்படி உருவாகிற கவிதைகள் சிந்தனையோட அடிப்படையே இல்லாமல் இருக்கும். சில வார்த்தைகள் சேர்ந்து வாக்கியமா ஒலிச்சிட்டே இருக்கும். இதற்கு காட்சி ரூபமே கிடையாது.


கேள்வி: ஒரு கவிதைய எழுதத் தொடங்கும்போதே அந்தக் கவிதையைப் பற்றிய ஒட்டு மொத்தமான வரைவும் உங்களிடம் இருக்கா?

பதில்: முன்பு சொன்னதுபோல ஒரு வரி மட்டுமே உருவாகியிருக்கும். அந்த ஒருவரி முழு கவிதையா ஆகக்கூடிய வாய்ப்பும் இருக்கு. முழு கவிதையா இருந்தும் எழுத முடியாம போற வாய்ப்பும் இருக்கு. அந்த முழு கவிதையும் நம்ம மனசுக்குள்ளே ஒருவிதமா இருந்து காகிதத்தில் முடியும்போது வேறு விதமாவும் இருக்கும். காரணம் காகிதத்தில் எழுதும்போதே ஒருவார்த்தை திசை திருப்பி கூட்டிக்கிட்டு போயிடும். அந்த அனுபவத்தையேகூட மாற்றி அமைச்சிடும். பொதுவா கவிதை திட்டமிட்ட மாதிரி முடியறதில்லை. அதை எழுதும் போதே மனசுல நடக்கிற ரசவாதத்தாலக்கூட அது மாறிடக்கூடும்.


கேள்வி: நீங்கள் பாமர வாசகனுக்கா எழுதறீங்க?

பதில்: கண்டிப்பா நான் பாமர வாசகனுக்கு எழுதல, தரமான வாசகர்களுக்கும், கவிஞர்களுக்கும்தான் எழுதறேன்.


கேள்வி: 'புராதான இதயம்'தொகுப்புல வெளிஉலகத்தின் மீதான கோபம் அதிகமா புலப்படுது. இந்த தன்மை முந்தைய தொகுப் புள்ல இல்லை. அந்த காலக்கட்டத்தில் உங்களுக்கிருந்த மனநிலையா இது?

பதில்: ஆமாம். எனக்கு நிறைய விமர்சனங்கள் இருந்தது. சமூகத்தின்மேல், நண்பர்களின் மேல், சக கவிஞர்கள், விமர்சகர்களின் கோட்பாடுகள்மேல எல்லாம். அதற்கான எதிர்வினையாத்தான் அந்த கவிதைகளைக் கொண்டு வரவேண்டியிருந்தது. அடிப்படை யிலேயே நான் ஒரு எதிர்வினை செய்யக் கூடிய ஆள் என்கிறதாலதான் அதை செய்திருக்கேன்.


கேள்வி: உங்க கவிதையில் ஒரு மேட்டுக்குடிக்கே உரிய பிரபுத்தன்மையும் தெரியுதே?

பதில்: நேர்மையான ஒருபதிவுதான் என்கவிதையில இருக்கு. பிரபுத்துவ மனப்பான்மை இருக்குன்னா அதுமாதிரியான ஒரு வாழ் க்கைய நான் வாழ்ந்திருக்கேன். நிலம சார்ந்த ஒரு கிராம வாழ்கை எனக்கிருந்தது. நான் எழுதற சின்னச்சின்ன விஷயங்கள், கா ட்சிப் படிமங்கள் எல்லாம் ஒரு விவசாயியோடப் பார்வையில இருந்துதான் கிடைக்குது. அப்படி எளிய வாழ்க்கை வாழ்ந்த ஒரு ஆள் பலதளங்களில் இய ங்குகிறான். இந்த சிக்கலான தன்மை மேட்டுக்குடி மனப்பான்மையாவர்ற வாய்ப்புகள் இருக்கு. அத ஒதுக்கிட்டு எழுதறது நேர்மையான விஷயமா இருக்காது. நான்கேட்கிற இசை, படிக்கிற இலக்கியம் எல்லாம் என்னை வேற ஒன் னா மாத்திருக்கு. முந்தைய எளிமையான ஒரு வாழ்க்கைக்கு என்னால போக முடியாது. ஏன்னா அப்படி ஒரு சிக்கலான வாழ்க் கைய நான் தேர்ந்தெடுத்துட்டேன்.


கேள்வி: சாஸ்திரிய சங்கீதங்கள், நவீன ஓவியங்கள் மாதிரி வெகுஜனம் எளிதில் தொடமுடியாத ஒரு இடத்தில் உங்கக் கவிதைகளையும் முன்வைக்கறீங்கன்னு தோனுது.

பதில: நான் முன்னமே சொன்னமாதிரி என்னோடது ஒரு கலவையான வாழ்க் கை. இதை ஒப்புக்கொள்ளும்போதே அதை சாதகமா ஆக்கிக்கொள்ள வேண்டி யிருக்கு. எனக்குத் தெரிந்த உலகத்தைதான் பேசவேண்டியிருக்கு. இதுதான் நேர்மையாகவும் இயல்பாக வும் இருக்கும். எனக்கு அறிமுகமான ஒரு ஓவிய த்தைப் பற்றியோ இசையைப்பற்றியோ அதனால எனக்கு ஏற்பட்ட அனுபவங் களைப் பற்றித்தான் நான் எழுதமுடியும். இது எல்லோருக்கும் புரியும்ன்னு நான் நினைக்கிறதில்லை.ரெனேமேக்ரத் பற்றி, என்னு டைய கடல்பற்றிய கவிதைகள்ல வருது. கடல்பற்றிய கவிதைகளைப் புரிஞ்சதுன்னு சொல்றவங் களுக்கு ரெனேமேக்ரத்தைப் புரிஞ் சிதான்னு தெரியல. ஏன்னா அவரோட ஒரு ஓவியத்தில கடற்கரை, கடல்அலைகள், அந்தரத்தில் ஒருபாறை கடலை நோக் கி விழுந் திகிட்டிருக்கு. அந்த உருண்டை பாறை மேல ஒரு கோட்டை இரு க்கு. ஓவியம்தான் கவிதையில வருது. இந்த ஓவியத்தை பார்க் காதவங்க கவிதையை எப்படி புரிஞ்சிக்கிறாங்கன்னு தெரியல.கவிதை உருவாக்கிறது க்கு அந்த ஓவியம்தான் காரணம்.வெகுஜனத் தை மறுத்தலிக்கிறபோக்கு என் கிட்ட கிடையாது. அதற்கான அவசியமும் இல்லை. இரண்டாவது, கவிதை என்பது மென்னுலகம் சார்ந்த ஒரு கலை. இந்த கலையை நோக்கி வர்றவ ங்க அவசியமான சில முன்தயாரிப்புகளை சொய்தாகணும். என் கவிதைக்கு ள்ள வரமுடியாம செய்யணும்ங்கிற நோக்கம் எனக்குக்கிடையாது. என் கவி தைய இப்படித்தான் சொல்லணும் என்கிற ஒரு திட்டம் வச்சிருக்கேன். அங்க தான் நான் இயல்பா இருக்க முடியுது.


கேள்வி: ஒரு கவிதையை வாசிக்கிறதுக்கு பயிற்சி அவசியம் தேவையா?

பதில்: ஒரு சாப்பாட்டை ரசித்து சாப்பிட்றதுக்குக்கூட பயிற்சி தேவை என்பது என் அபிப்ராயம்.Thamos Pynchonஎன்கிற அமெ ரிக்கநாவலாசிரியர் என்ன சொல்றார்ன்னா நல்ல உணவை கண்டுபிடிக்கத் தெரியணும், ஒரு நல்ல மதுவை, வெகுமக்களுக்கான இசையை இனம் காணத் தெரியணும். இது கூட இல்லாதவன் நல்ல மனுஷனா இருக்க முடியாதுன்னு சொல்றார். இங்க சாஸ்திரிய சங்கீதமோ, ஜாஸ் இசையோ வர்ல. ரொம்ப எளிமையான விஷயங்கள்.


கேள்வி: பெரிய மாஸ்டரான எஸ்ரா பவுண்ட், யேட்ஸ்கிட்ட கவிதைய கத்துக்கணும்னு போறார். அப்படி ஒரு பயிற்சிக்கு இங்க இடமிரு க்கா?பதில்: யேட்ஸ் பெரிய ஆளுமை. உலகத்திலேயே கவிதையைப் பற்றி யாருக்கும் தெரியாது, அந்த கிழவனுக்குத்தான் தெரியும், அதனாலதான் அவருகிட்டே போறேன்னு சொன்னாரு பவுண்ட். பவுண்ட் பலதளத்தில இயங்கக்கூடியவரு. ஐரீஸ் நாட்டார் கலை கள், புராணங் கள், நவீன இலக்கியம் என்று இயங்கக்கூடியவர். உலக இலக்கியத்திலும் அவருக்கு பரிச்சியம் உண்டு. அவருக்கு கபீரையும் தெரியும், தாகூரையும் தெரியும். இப்படி காஸ்மோபா லிட்டன் தன்மையுள்ள எஸ்ராபவுண்ட்ட திருப்திபண்ணக்கூடியவர் யேட்ஸ். அப்படிப்பட்ட ஒரு த்தர் கவிதைய கத்துத்தரலன்னாக் கூட இந்த வாழ்க்கை யை ரசிக்க கத்துத்தரக்கூடியவர். அதனால தான் அவர் தினசரி போயி அவரை சந்திச்சிருக்கார். பவுண்ட் அப்படி சாதாரணமா ஒருத்தரை சொல்லமாட்டார்.


கேள்வி: கவிதையோட ஆன்மீகம் என்ன?

பதில்: கடவுள் இல்லாத ஒரு ஆன்மீகமாத்தான் பார்க்கிறேன். கவிதை எல்லாமே ஒரு உன்னத மனநிலையை நோக்கி செலுத்தக் கூடி யதா இருக்கு. கவிதை படிக்கிற மனநிலை சாதாரண மனநிலை இல்லை. உரைநடைய எப்ப வேணா படிக்கலாம். கவிதை யை அப்படி படிக்க முடியாது.


கேள்வி: ஒரு இசையை கேட்கிற நிகழ்வோட ஒப்பிடலாமா?

பதில்: ஆமாம் ஒரு இசையை கேட்பது மாதிரிதான் இதுவும். ஆனா ஒரு இசை அளவுக்கு கவிதை செயல்பட முடியுமாங்கிற சந்தேகமும் இருக்கு.


கேள்வி: உங்களோட பாரம்பரியம்னு எதைச்சொல்வீங்க? அதாவது உலக அளவுல இருக்கிற கவிதை இயக்கத்தில எதனோட தொடர்ச்சியா உங்களை பார்க்கறீக?

பதில்: தமிழ் கவிதை மரபோட தொடச்சியாத்தான் என்னைப் பார்க்கிறேன். உலக அளவுல வைக்கிற அளவுக்கு சாதிச்சதா நான் நினைக்கல. அப்படின்னா என் கவிதை வேற மாதிரி இருந்திருக்கும்.


கேள்வி: வடிவம், கவிதை சொல்லல் என்பதில் உங்களுக்கு யாரை நெருக்கமா சொல்வீங்க?

பதில்: போலந்து நட்டுக் கவிதைகள் நெருக்கமா இருக்கு. காரணம் அந்த உரையாடல் தன்மை, வார்த்தைகளோட வரிகளோட இறுக்கம் ஒரே மாதிரியா இருக்கு.


கேள்வி: ஆத்மாநாமும் நீங்களும் ஒரே காலகட்டத்தில கவிதைஎழுத வந்திருக்கீங்க. நண்பர்களா இருந்திருக்கீங்க.எப்படி வேறு மாதிரியான கட்டமைப்பைத் தேர்ந்தெடுத்தீங்க?

பதில்: இது பர்ஸனாலிட்டி சம்பந்தபட்ட விஷயம். அவருடைய ஆளுமை எளிமையானது. என்னோடது சிக்கலானது. அவர் எழு தின அரசியல் மனிதநேயக் கவிதைகளை என்னோடமொழியில் எழுதியிருந்தா இந்த அளவுக்கு வெற்றியடைஞ்சியிருக்காது. அத னால பிரக்ஞையோட ஊடுறுவக்கூடிய ஒரு மொழியில அவர் எழுதினார்.


கேள்வி: பர்ஸனலிட்டிதான் கவிதையோட கட்டமைப்புக்கு ஆதாரமா இருக்கா?

பதில்: நிச்சயமா, கலைஞனோட மனம் எந்த அளவுக்குப் பண்பட்டிருக்கோ அந்த அளவுக்கு படைப்பும் நேர்த்தியாகவும் உன்ன தமாகவும் இருக்கும். ஆளுமை ஒருதளத்தில இருந்தா படைப்பும் ஒரு தளத்தில இயங்கும். அந்த ஆளுமை பலதளத்தில இருந் தா படைப்பும் பல தளங்களைக் கொண்டதா இருக்கும்.


கேள்வி: உங்கள் கவிதை எதிர்ப்பார்த்த மாதிரி கவனிக்கப்படலைங்கறதுக்காக எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா?

பதில்: இல்லை. காரணம், பின்னால அது சரியா வாசிக்கப்படும்ன்னு நான் நம்பறேன். என்கவிதையில கையாண்டிருக்கிற விஷயங் கள் எல்லாம் பரிச்சயமான ஒரு வாசகச் சூழல் அதைவாசிக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. ஏன்னா இந்த தேக்க நிலை, இங்கே எல்லோரும் கவிதையை எளிமைப் படுத் துவதால்தான். இந்த எளிமைபடுத்துதல் ரொம்ப நாளைக்கு நீடிக்காது. இது மாதிரி ஒரு நிலை எல்லா நாட்டு கலாச்சாரத்திலேயும் நடந்திருக்கு. ஒரு சுழற்சி நிலையில இது மாறும்.


கேள்வி: இடையில பத்து வருஷம் இலக்கிய செயல்பாடுகளுக்குள்ள வராம ஒதுங்கி இருந்ததற்கு என்ன காரணம்?

பதில்: இந்த மௌனம் விரக்தியால ஏற்பட்டதில்லை. அதுஒரு மனநிலை. அதில எதையும் படிக்காம இருக்கலாம்,எழுதாம இரு க்கலாம். இரண்டும் வேறுவேறு மனநிலைகள்.


கேள்வி: நனவிலி மனதிலிருந்து கவிதை எப்படித் துவங்குது?

பதில்: எனக்குள்ள ஒருநீண்ட உரையாடல் நடந்துகிட்ருக்கு. பெரும் அதிர்வு களைக்கொண்ட உரையாடல் அது. அங்கிருந்துதான் ஒரு தீர்மானத்தோட என் கவிதையை தொடங்குறேன். நனவிலியை பின்பற்றிப் போறவங்களுக்கு இது எளிதா இருக்கும். அவங் களாலதான் அதை எளிதாகவும் புரிந்துகொள்ள முடி யும். மேலோட்டமான வாசகர்களுக்கு சிரமமாக இருக்கும்.


கேள்வி: பாரதி இந்த தீவிரத்தை அடையறத்துக்குத்தான் கஞ்சா மாதிரியான விஷயத்தைப் பயன்படுத்தினாரா?

பதில்: இதை எக்ஸ்ட்ரனல் எய்ட்ஸ்ன்னு சொல்லுவாங்க. பாரதி கஞ்சா பயன்படுத்தினார்.S.T.Coleridge அபின் பயன்படுத்தினார். வயிற்று வலிக்காக ஆரம்பிச்சி பிறகு அதில ஒருகவர்ச்சி ஏற்பட்டதால தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பிச்சார். அந்தப் பிரக்ஞை நிலையிலேயே கவிதை எழுதியிருக்கிறார். அற்புதமான கவிதைஅது. முன்னூறுவரிகள் திட்டமிட்டிருக்கிறார். ஆனா யாரோ வந்து கதவைத் தட்ற சத்தத்தைக் கேட்டு பிரக்ஞை திரும்பிடுது. நூறுவரிகள்தான் எழுத முடிஞ்சது.இதற்காக கடைசிவரைக்கும் வருத்தப் பட்டுக்கிட்டிருந்தார். இது மாதிரியான புறத்தூண்டுதல் இல்லாமலேயே இந்த போதைநிலையை அடையமுடியும்.நான் கவிதை எழுதும்போது இதைத்தான் பின்பற்றிப்போகிறேன்.


கேள்வி: தமிழ் மரபுக்கவிதையில இருக்கிற பண் என்ற விஷயத்துக்கும் இந்துஸ்தானி கர்நாடக சாகித்தியங்களுக்கும் உறவு உண் டா?உங்களோட இசை ஈடுபாடு கவிதைக்கு எப்படி உபயோகமா இருக்கு?

பதில்: இந்துஸ்தானிக்கு வரலாறு மிகக்குறைவு.கர்நாடகசங்கீதத்துக்கு முந்தி யே தமிழிசை இருந்திருக்கு. கர்நாடகஇசையோட முற்பட்ட வடிவம்தான் தமிழிசை. பண் எல்லாமே ராகங்கள்தான். இந்த ராகங்களுக்கு வேற பேர் இருந்திருக்கு. அதை கட்டமைப்பு ரீதியா வகைப்படுத்தினதுதான் கர்நாடக சங்கீதம். மேற்கத்திய நாடுகளோட இசையை ஒப்பிட்டாக்கூட தமிழிசைதான் முன்னாடி போயிருக்கு. தமிழிசையோட ஒப்பிடணும்ன்னா கிரேகம், லத்தீன் மாதிரியான நாடுகளின் இசையை எடுத்துச் சொல்ல முடியுமே தவிர ஐரோப்பிய நாடுகள்லகூட சொல்ல முடியாது.


கேள்வி: இதற்கான ஆதாரங்கள் இருக்கா?

பதில்: இருக்கு. டாக்டர் ராமநாதன் ஒருபுத்தகம் எழுதியிருக்கிறார். இன்னைக்கி இருக்கிற கர்நாடகஇசைக்கு அடிப்படையே தமிழிசைதான்னு நிறுவியிருக்கி றார். இசையோட தியரிகளை நான்படிக்கிறதுக்குக் காரணம் எனக்குள்ள இருக் கிற சிலகுழப்பங்களைத் தெளிவுப்படுத்திக்கிறதுக்குதான். நான் இசை கேட்கிற அனுபவத்தைத்தான் கவிதைக்குள்ள கொண்டுவரறேன். இசையைக்கேட்பத ற்கு தியரி அவசியமில்லை. இந்த உலகத்தைக் காட்சி ரூபமா அறியறதைவிட ஒலி ரூபமாகத்தான் அதிகம் பரிச்சயம் பண்ணிக்கி றேன். அதனாலத்தான் படிமங்களைப் பயன்படுத்தறதெல்லாம் முதல்தொகுப்பிலேயே நின்னுபோச்சி. காரணம் நாதரூபமாகத்தான் இந்த உலகத்தைப் பார்க்கிறேன். நாதரூமா வழி பட்ற ஒரு முறை இருக்கு. நாத உபாசம்ன்னு சொல்றாங்க. அந்த மாதிரியாத் தான் நான் எடுத்துக்கிறேன்.


கேள்வி: இன்னைக்கி எழுதறவங்க எது மாதிரியான கச்சாப்பொருளைப் பயன்படுத்தறாங்க?

பதில்: கச்சாப்பொருள் குறைவாத்தான் இருக்கு. அவங்களோட அனுபவ அடுக் குகளைப் பொருத்துதான் இது அமையும். குரைச் சலான அனுபவங்களைச் சொல்றதுக்கு குறைந்த வார்த்தைகளே போதுமானதாக இருக்கு. அதனால தான் உரைநடைத் தன்மைக்கு மாறுது. அனுபவங்கள் சிக்கல் படும்போது அது சிக்கலான வார்த்தை அமைப்பை நோக்கிப் போகுது. அடர்த்தி அதிகமாகுது.


கேள்வி: மனிதன், இயற்கைன்னு பிரிச்சிகிட்டா கவிஞன் யாரோட குரலா நின்னு பேசறான்?

பதில்: பிளவுபட்ட ஆளுமைன்னு சொல்வாங்க. ஒன்றுக்கு மேற்பட்ட சுயமா உடைஞ்சிபோறது. இதில் எந்த ஒன்றின் குரலாகவும் இருக்கலாம்.ரொம்ப தெளிவா இருந்தோன்னா கவிதையோட பரிமாணமே குறைஞ்சி போயிடும். முதலில் குரலை பதிவு செய்துட்ட பிறகு அதை அடையளாம் காணலாம். ஒரு வெட்டுக்கிளியோட குரலாக்கூட பேசலாம். ஆனா இன்னதுதான் பதிவு செய்றோம் என்ற பிரக்ஞை இல்லாமலே செய்யணும்.


கேள்வி: உங்கள் பெரும்பாலான கவிதை முடியுற இடத்தில திறந்ததா இருக்கு. இதை பிரக்ஞையோடுதான் செய்றீங்களா?

பதில்: பிரக்ஞையோட செய்றதில்லை. ஆரம்பத்தில் நிறுத்தல் குறிபோட்டு கிட்டிருந்தேன். இப்ப அதைக்கூட போடுறதில்லை.வாழ் க்கையைப் போல கவிதையும் எங்கும் முடியாமதான் இருக்கு. இப்படி முடிக்கப்படாத சிம்பனி கள்கூட இருக்கு. ஒரு ஓவியம் எங்கே முடிவடையுது? ஒரு இடத்தில் ஓவி யம் வரையறதை நிறுத்தற மாதிரிதான் இதுவும். எங்கே தொடங்கப் பட்டது ன்னும் தெரியாது.


கேள்வி: இந்தியக் கவிதைன்னு ஒன்னு இருக்கா?

பதில்: இல்லை. ஒவ்வொரு மொழிக்கும் அதற்கான நிலவெளின்னு ஒன்னு தனியா இருக்கு. நம்மால பிராந்திய ரீதியான கவிஞனாகத்தான் இருக்க முடி யுமே தவிர எல்லாத்தையும் அரவணைச்சிக்கிற ஒரு இந்தியக் கவிதையை எழுதறது கஷ்டம்.


கேள்வி: படைப்பாளி அறவியலாளனா இருக்கனுமா?

பதில்: ரொம்ப அடிப்படையான கேள்வி. பிளாட்டோ காலத்திலேயே கேட்கப் பட்டிருக்கு. 'அழகுன்னு சொன்னாலே அது தார்மீக மா இருந்தாத்தான் அழகு ன்னு' ஒருகொள்கையை முன்வச்சாரு.ஒவ்வொரு படைப்பாளியும் தார்மீக பண்புகள் கொண்டவனாகத் தான் இருக்க முடியும். அவனுக்குத் தெரியாம லேயே அறவியலாளனா கட்டமைக்கப்படறான். ஒரு சமூக அம்சம் அவனுக் குள்ல இயங்குது. அதைத் தவிர்த்துவிட்டு அவனாலே போயிட முடியாது. இடதுசாரி எல்லையை தொடாமலேயே அறவியலாளனா இருக்கலாம்.


கேள்வி: இன்னைக்கி உலக அளவுல பிரச்சனையா இருக்கிற மதவாதம், அமொரிக்காவோட கட்டுக்கடங்காத தன்மை பற்றிய உங்களுடைய பார்வை என்ன?

பதில்: பொறுப்புள்ள ஒரு குடிமகனா இதையெல்லாம் அக்கறையா நான் கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன். ஆனால் என் படைப் புப் பிரதேசத்தைப் பாதுகாப்பா வச்சிக்கிறேன். இந்த மாதிரியான பாதிப்பில் சிலநேரத்துக்கு நல்ல கவிதையும்கூட வரலாம். பெரும்பாலும் மோசமான கவிதைதான் வரும். தாராலமயமாதலால் இன்றைக்கு விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கிற நெருக் கடிகள் எனக் குத் தெரியும். ஜி.எம் கிராப் ( ஜெனிட்டிகலி மாடிபைட் கிராப் ) பற்றியெல்லாம் பத்து வருஷமா படிச்சிகிட்டு வர்றேன். இஸ்ரேல் நாட்ல, பருத்தி... செடியில இருந்து வரும்போதோ கலரா வர்ற மாதிரி கண்டுபிடிச்சி ருக்காங்க. சாயம் ஏற்ற வேண்டிய அவசியமி ல்லை. அதனாலே ஏற்பட்ற விபரீத மாற்றங்களைப் பற்றியும் படிக்கிறேன். இதுமாதிரி பயிர்களால மற்ற பயிர்களுக்கு ஏற்படக்கூ டிய பாதிப்புகளை படிக்கிறேன். மதவாதம் மாதிரி யான விஷயங்கள்தான் நம்பிக்கையிழக்கச் செய்யுது. கஷ்டமா இருக்கு. மனி தன் மேலேயே நம்பிக்கை இல்லாமப்போகுது.


*****

satajdeen@gmail.com

1 comment:

புதியவன் பக்கம் said...

ஆக, கவிதைக்கான விளக்கத்தை படிக்க நினைக்காதீங்க. படிங்க. முடிஞ்சா எழுதுங்க. கவிஞர்கள்னு சொல்றவங்க சொல்றதையெல்லாம் கேட்டா குழம்பிப்போயிடுவீங்க. இதுதான் விஷயம்.