Sunday, September 24, 2006
பெரியார் - உலகை நோக்கிய பயணம்.
பெரியாரின் 128 வது பிறந்ததின விழா நடந்தேறும் காலம். அவரது, சென்றைய பிறந்ததின விழாவைவிட இந்த வருடம் கொஞ்சத்திற்கு கூடுதல் சிறப்பாக வே இருக்கிறது. மதிப்பிற்குறிய ஞானசேகரன் இயக்கத்தில் பெரியாரைப் பற் றிய திரைப்படம் வளர் ந்து வருவதும், அரசு அதற்கு நிதியுதவி அளித்திருப்ப தும் கூடுதல் சிறப்பு.
இன்றைய இளைஞர்களுக்கு, பெரியார் என்பவர் நகரங்களின் முச்சந்திகளில் நிற்கும் வெறும் சிலை மட்டும்தான். வேறெதுவும் தெரியாது. இல்லை, எங்க ளுக்குத்தெரியும் என்கிற இளைஞர்களை ஆர்வமாக அழைத்துப் பேசினால், "கடவுள் இல்லையென்று சொன்னவர்"என்பதோடு வேறுபேச்சுக்குத் தாண்டிப் போய்விடுவார்கள். மறப்பதென்பது மனிதர்களின் அடிப்படைக்குணம்.குறிப்பாய் தமிழ் சமூதாயத்திற்கு அது கொஞ்சம் அதிகம். சமூதாய முன்னேற்றத்திற்காக பாடுப்பட்ட நிஜமானத் தலைவர்களை மறப்பதினா லும் /அவர்களின் தகுதி களை திரும்பத் திரும்ப நம் சந்ததியினர்களுக்கு எடுத்துக் கூறாதிருப்பதினா லும்தான் இன்றைக்கு போலி சமூகத்தலைவர்களிடமும், போலி அரசியல்வா திகளிடமும் சிக்கித்தவிக்கிறோம்.
அரசியல் சித்து நிகழ்த்தும் நம்தலைவர்களால்/ மீடியாக்களின் திரிப்புகளால் மற்றும் அதன் லாபக்கணக்கு சிந்தனைகளால்/ பெரியாரின் கனமான சிந்த னைகளை பிரசுரிப்பதில் அவர்கள் கொள்ளும் அச்சத்தால் கூட/ இன்றைக்கு பெரியார் மறைக்கப்பட்டிருக் கலாம்! ஆனால், அவரை இல்லை என்று ஆக்கி விட முடியாது.
பெரியார், தான் சாகும் கடைசித் தருணம்வரை, சமுதாயப்பணி யென நிகழ்த் திய சமூகப் புரட்சியின் சரித்திர நிகழ்வுகளை யார் எப்படி நினை த்தாலும் அத்தனை எளிதில் மூடி மறைத்துவிட முடியாது. இன்றைக்கு மொத்த இந்தி யாவுமே கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கேட்கிறது என் றால் பின்னால் பெரியார்இருக்கிறார்! தென் மாநிலங்களைத் தாண்டி பீகாரி லும், உத்திரப் பிரதேசத்திலும் இன்றைக்கு பகுத்தறிவுப் பிரச்சாரம் தீவிரம் கா ட்டுகிறது என்றால் பின்னால் பெரியார் இருக்கிறார். தமிழகத்தில் இரண்டு அரசியல் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவதை யாரலும், பிற அரசியல் இயக்கங்களாலும்கூட தடுக்க முடியாமல் போவதற்குப் பின்னாலும் பெரியார் இருக்கிறார்.
தவிர, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அரசின் உயர்ப்பதவிகளில் அங்கம் வகித்திருப்பது/தாழ்த்தப்பட்டோர் கோவில்பிரவேசம்/ யார் வேண்டுமானாலும் அர்ச்சனை/ தமிழில் அர்ச்சனை/ தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்/பெண்க ளின் விடுதலை/ காதலுக்கு அங்கீகாரம்/ சீர்திருத்தத் திருமண அங்கீகாரம்/கைம்பெண்களின் மறுமணத்திற்கான அங்கீகாரம்/ மத மாற்ற அங்கீகாரம்/ தமிழ் மண்ணை விட்டு நயவஞ்சகமாக விரட்டப்பட்ட புத்த மதத்திற்கு மீண்டுமான அங்கீகாரம்/இஸ்லாத்திற்கு தமிழ்மண்ணில் பரவலான அங்கீகாரம்/ இங்கே மதவாத அரசியல் வேர்விட இயலாமல் போனது/ பெருந்தலைவர் காமராஜ் அவர்களுக்கு டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்ஸால் கொலை முயற்சி நடந்தபோது தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பொழுச்சி/ இந்தி எதிர்ப்பு/ குலக் கல்வி எதிப்பு/ டாக்டர்.அம்பேத்காரை தமிழகம் பெருமளவில் கண்டுக்கொள்ளவும், போற்றிப் புகழவுமான அங்கீகா ரம் என் பன எல்லாவற்றிற்குப் பின்னாலும் பெரியார் உண்டு! பெருந்தலைவர் காமராஜ் வழியாக நம்மக்கள் பெற்ற கல்விப் புரட்சிக்குப் பின்னாலும் கூட அந்த பெரியார்தான்!!
இலக்கிய நண்பர்கள் சிலர் பெரியாரை சின்னக் குடுவைக்குள் திணித்து வைத்துப் பார்த்த, அந்தப் பார்வையின் எழுத்தை நான்வாசித்திருக்கிறேன். அவர்களில் இன்னும் சிலர், வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் அவரைச் சீண்டி, ஒன்றுமில்லை என்பதில் மகா ஆனந்தம் கொள்பவர்கள். பெரியார் தனது இயக்கத்தை அறிவார்ந்த இயக்கமாக வளர்த்தெடுக்க வில்லை என்றும்/ மென்மையான அணுகுமுறை அவரிடம் இல்லை என்றும் அந்தநண்பர்கள் கருதுகின்றார்கள். பெரியார் எதிர்கொண்ட அந்த காலக்கட்டத்திற்கு அவர்கள் பின்னோக்கிப்போய், அன்றைக்கு வீழ்ந்துக்கிடந்த நம் சமுதாயத்தை/ தீண்டா மையின்பெயரால் விலக்கி, ஒதுக்கி வைக் கப்பட்டிருந்த அந்த கோடானகோடி மக்களின் அவலமான வாழ்க்கைத் தரத்தை/ உரிமை கோரத் தெரியாத அவர் களின் அறியா மையை/தங்களது தாழ்வுக்கு என்ன காரணம்? என்று கூட விளங்கிடவும் முடியாத அப்பாவிகளாக இருந்த அவர்களின் நிலையை ஒரு கணம் நண்பர்கள் யூகிப்பார்களேயானால், பெரியார் நிகழ்த்திய அந்த தீவிர நடவடிக்கைகளை ஒப்புக்கொள்வார்கள். சித்த வைத்தியமும், மூலிகை கஷா யமும் நல்ல மருத்துவம்தான். கோளாறு எல்லாவற்றிற்குமே அதுவே சரி என்பது சரியாகிவிடாது.
பெரியாருக்கு முந்தியகாலக்கட்டங்களில் சமூகச்சிந்தனையோடு பாடுப்பட்ட வைஷ்ணவச் சித்தாந்திகளும், சைவ சீர்திருத்தவாதி களும், வள்ளலாரும், பாரதியும், அயோத்திதாசரும், நீதிக்கட்சித்தலைவர்களையும் சேர்த்து எல்லோ ருமே மென்மையான அணுகு முறைக் கொண்டுதான் இயங்கினார்கள். என்றா லும், எதிர்பார்த்த மறுமலர்ச்சியை இந்தமண்ணில் அவர்கள் கண்டார்களா என் பதை நண்பர்கள் அறியனும். தவிர, பெரியார் தீவிரவாத இயக்கமோ! மறைமுக இயக்கமோ! நடத்தவில்லை. ஜனநாயக இயக்கம் தான் நடத்தினார். தன் கருத் துக்கள் எல்லாவற்றையுமே பொது மேடையிலேயே பேசினார். தம் மக்கள் நலன் பொருட்டு, தான் எண்ணும் எண்ணமும் பேசும் பேச்சும் தேச சட்டத் திட்டங்களுக்கு விரோதமானது என்றாலும், அதை அவர் விளக்கிப் பேசுமிடம் மக்கள்மேடையாகத்தான் இருந்தது.அவர் எதிர்கொண்ட பேராட்டங்கள், கோ ர்ட், தண்டணை, சிறைவாசம் என்றுபலவும், அவரை நமக்கு ஜனநாயகத்திற்கு உட்பட்ட ஒருவராகவேதான் காட்டுகிறது.
ஒரு சமூகம் உயிர் மூச்சை மட்டும் தங்கவைத்துக் கொண்ட நிலையில் நாலாயிரம் வருசமாக வீழ்ந்துக் கிடக்கிறது. அதை எழுப்பி நடமாடவைக்க ஒருதலைவன் யோசிக்கிறான். எத்தனையோ நீதிநூல் வல்லுனர்கள், சமூகக் காவலர்கள்,சித்தாந்திகள், இனம் காக்கும் மடாதிபதிகள், எண்ணூரு வருடங் கள் ஆண்ட முகலாயர்கள், அறநூறு வருடங்கள் ஆண்ட வெள்ளையர்கள் என்று எவ ராலும், அந்த மக்களை ஏன் நிமிர்த்த முடியவில்லை? என்று யோசித்ததின் விடையாக, அவற்றிற்கான மூலத்தை யூகித்து கண்டடைகி றார். பிறகு அவர் தன் 'ஸ்டைலில்' சிகிச்சையை ஆரம்பிக்கிறார்! அதில் பெரு மளவில் வெற்றியும் காண்கிறார். இந்த சமூ கம் தனது மீது படிந்திருக்கும் மதவழியான அவலத்தை இன்னும் பூரணமாக துடைத்தெரியவில்லை என்று பெரியார் கடைவரை கவலைக் கொண்டாலும், அது வீறுகொண்டு எழுந்ததை கண்ணால் கண்டப்பிறகேதான் கண்ணை மூடினார்.
பெரியாரின் காலக்கட்டத்தில், சமூகச்சிந்தனை கொண்டவர்கள் தங்களை அர சியலில் அடையாளப்படுத்திக் கொண்டு, பெருமள வில் இந்தியச் சுதந்திரத் திற்குத்தான் குரல் கொடுப்பவர்களாக இருந்தார்கள். பெரியாரும் கிட்டத்தட்ட அப்படிதான் தனது பொ து வாழ்வைத் தொடங்கினார். ஆனால் அவரது மன தில், ஒடுக்குமுறையால் வீழ்ந்து கிடக்கும் தம் மக்களின் உரிமைகளை மீட் டெடுக்கும் திட்டங்களில் முதன்மையானதான வகுப்புரிமையும், தீண்டாமை ஒழிப்பும், தேசியத்தைவிட தீவிரமாக இருந்தது. தமிழ்நாடு கங்கிரஸ் செயலா ளர் பதவியில் அவர் பணியாற்றியபோதும், ஒடுக்கப்பட்ட மக்கள் நலக் கொள் கைகளை அந்த பதவியின் வழியே நிறைவேற்ற முடியாமல் போனபோது, அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சமுதாயத் தலைவராக களம் இறங்கினார். அந்த களத்தில் அவர் நிகழ்த்திய புரட்சிகரமான செயல்பாடுகள், இந்திய அரசியல் களம் அதற்கு முன் காணாதவொன்று.
பெரியாரின் பிரமாண்டமான மக்கள் நல செயல்பாடுகளை முன்வைத்து, அன் றைக்கு பல இந்தியத் தலைவர்கள் அவரை அணுகி னார்கள். பெரியாரை அம் பேத்கார் கண்டதும், அம்பேத்காரை பெரியார் கண்டதும், இருவருக்குள் பரஸ் பர நட்பும், மக்கள் நல செய்திப் பரிமாற்றச் சூழ்நிலை வாய்த்ததும் அதன் பொ ருட்டுதான். காந்தி பெரியாரோடு தர்க்கம்புரிய நேர்ந்ததும்கூட அந்த வகைப் பட்டதுதான். ராஜாஜி இரண்டு முறை பெரியாரைத்தேடிவந்து அன்றையத் தமி ழகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியதும், பெரியாரின் திரா விட நாடு பிரிவினைக்கு அதே ராஜாஜி ஆதரவுதர முன்வந்ததும் அப்படியா னதுதான்.
கட்டாய இந்தியை ஒழித்த பெரியாரை ஜின்னா பாராட்டியதும், ஜின்னாவை
அவரது வீட்டில்வைத்து சந்தித்ததும்/ லெனினுடன் இருந்து பணியாற்றிய திரு.எம்.என்.ராய், தனது மனைவியுடன் சென்னைவந்து பெரியாரின் விருந்தி னராகத் தங்கி, காங்கிரஸ் எதிப்புமுனை உருவாக்கவும், கங்கிரஸ் அல்லாத மந்திரிசபையை முதன்முதலில் சென்னையில் அமைத்து வழிகாட்டவும் வே ண்டு கோள் வைத்ததும் / அகிலஇந்தியச் சட்ட மறுப்புகமிட்டி உறுப்பினர்க ளான மோதிலால் நேரு, டாக்டர் அன்ஸாரி, டக்டர் அஜ்மல்கான், சி.ராஜ கோ பாலாச்சாரியார், வித்தல்பாய் பட்டேல், கஸ்தூரிரெங்க அய்யங்கார் ஆகியோர் ஈரோட்டில் பெரியார் இல் லத்தில் கூடி விவாதித்ததும்/ வைக்கம் வீரர் என்று திரு.வி.க. புகழ்ந்ததும்/ கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி. பெரியார் கூட்டிய உயர் வகுப்பினரில்லாத முதல்மாநாட்டில் கலந்துக் கொண்டதும்/ சிருங்கேரி சங்கராச்சாரியார், பெரியாரின் தொண்டினைப் புகழ்ந்து கடிதம் எழுதி, தமது இடத்திற்கு வரும்படி அழைத்ததும்/ கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ.டாங்கே திருச்சியில் வைத்து சந்தித்து உரையாடியதும் / மேற்குவங்க சமூகத் தொண் டரான ஹரேந்திநாத் கோலே, பெரியாரை சென்னையில் வந்து சந்தித்ததும் / வினோபாஜி பெரியாரை சந்தித்ததும்/ஜே.கிருஷ்ண மூர்த்தி பெரியாரை சந்தித் ததுமான இந்த நிகழ்வுகலெல்லாம் ஏதோ தற்செயலான சம்பவங்கள் அல்ல! பெரியாரின் சமூதாயத் தொண்டிர்க்கு கிடைத்த அங்கீகாரங்கள்.
"Periar, the prophet of the New Age;
the Socrates of South East Asia;
Father of the social reform movement;
and arch enemy of ignorance;
Superstitions, meaningless customs
and baseless manners"
- 27.6.70ல் உலக நாடுகள் அவையைச் சேர்ந்த கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகத்தால்(UNESCO) வழங்கப்பட்ட விருதாகட்டும், 3.7.72ல் மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்ட தாமிரப் பத்திர விருதாகட்டும் எல்லாமே பெரியாரின் சரியான நோக்கி லான மக்கள் பணிக்குறிய அங்கீகாரமாகவே பார்க்கிறேன். ஏ/சி ரூமிற்குள், கம்யூட்டர் எதிரில் அமர்ந்தப்படி இன்றைக்கு பெரியாரைப் பற்றி ஏனோ தானோவென்று கணிக்கும் என் இலக்கிய நண்பர்கள் இதன் உள்ளார்ந்த நிஜத்தை கண்டைவார்களா?
***
இன்றைக்கு நம்முடைய தமிழ் மண்ணில், அரசியல் கட்சிகளுக்கும், ஜாதிகட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை! இன்னும்கூட அவற்றின் பெருக்கம் தங்குதடையில்லாமல் நடக்கவே செய்கிறது. அது மாதிரியே அதன் தலைவர்களும். பொதுத் தேர்தல் காலங்களில் கட்சிகளும், தலைவர்களும் புதிது புதிதாக முளைப்பார்கள். அவர்களுடைய முன்அனுபவம் என்பது பெரும்பாலும் ஏதோஒரு கட்சியில் சில காலம் சில பதவிகளில் அங்கம் வகித்திருப்பார்கள் அவ்வளவுதான். இந்தவகை முனனுபவம்கூட இல்லாமல், தன்னிடம் இருக்கும் பணத்தை நம்பியும், செல்வாக்கான தனது ரௌடீசத்தை நம்பியும்கூட தலைவராக முயல்பவர்களும் இருக்கிறார்கள். தொடர்ந்து இரண்டு மூன்று வெற்றிப் படங்களை தந்துவிடும் தமிழ் திரைப்பட கதாநாய கர்கள், அடுத்து அவர்கள் துரிதமாக முனையும் சங்கதியே கட்சிக் கொடி தயா ரிப்பதும்! கட்சித் தொடங்க முனைவதும்! அதற்குத் தலைவராவதும்தான்!! இவர்கள், நம் மக்களின் யதார்த்தத்தை நாடிப்பிடித்துப் பார்ப்பதென்பதோ, நம்மை யொட்டிய மாநிலங்களிலும்/ அண்டை நாடுக ளிலும் இன்றைய அரசியல் போக்கும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எப்படி இருக்கிறதென்றோ, அதில் நாம் கற்றுக்கொள்ள வே ண்டியன என்னவென்றோ கண்டறிய முயல்வதே கிடையாது. தலைவராவதென்பதும், 'வருங்கால முதல்வரே' என்கின்ற கோஷத்தை கோட்பதென்பது மட்டும்தான் இவர்களுக்கு குறியாக இருக்கிறது.
பெரியார் தனது இருபத்திஐந்தாம் வயதில் தந்தையிடம் கோபித்துக் கொண்டு, துறவிக்கோலம்பூண்டு பெஜவாடா, காசி, கல்கத்தா, அஸ்ஸன்சூல், பூரி, எல்லூர் என்று அழைந்ததிலிருந்து மக்களை நோக்கிய அவரதுப் பார்வை தொடங்கு கிறது. பிறகானக்காலங்களில் இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த மாநிலங்களில் அவரது விஜயம் தொடர்கிறது. அதைத்தொடர்ந்து அவர் பர்மா, மலேசியா, சிங் கப்பூர் என்று இரண்டுமுறை விஜயம்செய்து பல்வேறு மக்களைச் சந்திக்கி றார், உரையாற்றுகிறார். மலேசியாவில் அவர் கால்படாத தமிழ் கிராமங்களே இல்லையென சொல்லும் அளவில் சென்று மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து தனது உலகப் பயணமென்ற அளவில் பல வெளி நாடுகளுக்குப்போய் பல் வேறு மக்களையும், உலகத் தலைவர்களையும் சந்திக்கிறார். பல்வேறு இடங் களில் மக்கள் முன் உரையாற்றுகிறார். இத்தனை பின் புலத்தோடுதான், தமி ழகத்தின் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்து சுமார் ஐம்பதி ஐந்து ஆண்டு கால தனது அரசியல் பணியினை திறம்பட செய்தார். அவரது உலகப் பயணம் குறித்த செய்திகள்கீழே உங்களின் பார்வைக்கு.
***
மேல் நாடுகளில் அரசியல், பொருளாதார, சமூக நிலையை நேரில் கண்டறி யவும், சமதர்மக் கொள்கைகள் ரஷ்யாவில் ஆட்சி மூலம் செயல்படுத்தப் படு வதைக் காணவும், வாய்ப்பு நேரிடின், ரஷ்யாவிலேயே தங்கிவிடவும் எண்ணங் கொண்டு, உடல் நலிவுற்ற நிலையில், மருத்துவர் அறிவுரையைப் புறக்கணி த்து, தனது அய்ரோப்பிய சுற்றுப்பயண த்தைத் துவக்கினார். உடன் சென்றோர் எஸ்.ராமனாதன், ஈரோடு ராமு ஆகியோர்.
13.12.1931ல் 'அம்போசா'(Amboise) என்ற பிரஞ்சுக் கப்பலில் சென்னைத் துறைமு கத்திலிருந்து, தன்பயணத்தை மேற்கொண் டார். 13.12.31 இரவு கப்பல் புதுவைத் துறைமுகம் வந்து சேர்ந்தது. புதுவையில் நூற்றுக்கணக்கானவர்கள் 14.12.31 அன்று, படகு மூலம் கப்பலுக்கு வந்து பெரியாருக்கு மலர் மாலைகள் சூடி, வரவேற்புப் பத்திரம் வாசித்து, அளவளாவினர். கப்பலில் நடைப்பெற்ற கூட்டத் திற்கு பிரெஞ்சு சட்டமன்ற உறுப்பினர் திரு. பெருமாள் தலைமை வகித்து, கப்பல் உயர் அதிகாரிகளு க்கு பெரியார், ராமனாதன் ஆகியோரை அறிமுகப் படுத்தினர். பிறகு பிரான்சு தேசத்தில் உள்ள பல தலைவர்கள் , சங்கங்களுக்கு பெரியார் அவர்களை அறிமுகப்படுத்தும், அறிமுக பரிந்துரைக் கடிதங்களை ஒரு தங்கச்சிமிழில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டது.
16.12.1931 மாலை 4மணி அளவில் கொழும்பு சென்றடைந்தார். கொழும்புவில் இறங்கி புத்தர் கோவில் முதலிய இடங்களைச் சுற்றிப் பார்த்தும், பல சுயமரி யாதைத் தலைவர்கள், சுய மரியாதைச் சங்கங்களின் வரவேற்பினைப் பெற் றும், திரு.ஷாகுல் அமீது அவர்களின் 'மீரான்மேன்ஷன்' பங்களாவில் நடைபெ ற்ற வழியனுப்பு உபசாரத்தில் ஒருமணி நேரமும், பல்வேறு சுயமரியாதைச் சங்கங்கள், ஆதி திராவிட சங்கங்கள் சார்பாக கிரின் பார்க்கில் உள்ள 'லேசி ஸ்டர்சர்ச்சில்' நடைப் பெற்ற பாராட்டுக் கூட்டத் தில் 2 மணி நேரமும் சொற் பொழிவு ஆற்றிவிட்டு, நள்ளிரவு 12 மணிக்குக் கப்பலை திரும்ப அடைந்தார்.
17.12.1931 ல் கொழும்பிலிருந்து புறப்பட்டு 24.12.1931 காலையில், ஏடனுக்குப் பக்கத்திலுள்ள 'ஜீபுட்டி'என்ற பிரஞ்சுத் துறை முகம் வந்தடைந்தார். அங்கு இறங்கி ஊர், நாடு சுற்றிப் பார்த்து அன்று மலையே புறப்பட்டு செங்கடல் வழியாக 29.12.1931 ல் சூயஸ் வந்தடைந்தார். சூயஸ் துறைமுகத்தில் 42,500 டன் எடையுள்ள 'எம்ப்ரஸ் ஆப்பிரிட்டன்'(Empress of Britain) என்ற மிகப் பெரிய கப்பலைக் கண்டுகளித்தார். பின்னர், அன்றேபுறப்பட்டு சூயஸ் கால்வாய் வழி யாக'போர்ட்சைட்' துறைமுகம் அடைந்தார். 'போர்ட்சைட்' பட்டணத்தில் இறங்கி 'அக்ராப்போல்' என்ற ஓட்டலில் தங்கினார்.
'போர்ட்சைட்'டில் ஒரு வாரம் தங்கிவிட்டு 5.1.1932 காலை ரயிலில் புறப்பட்டு மதியம் கொய்ரோவந்தடைந்தார். கொய்ரோவில் 11நாட்கள்தங்கி நகரின் முக் கிய இடங்களையும், நாட்டுவளங்களையும் பார்த்துக்கொண்டு16.1.32ல் அலக்சா ண்டிரியா துறைமுக த்திலிருந்து கப்பலில் கிரீசுக்குப் புறப்பட்டார். 19.1.32 அன் று கிரீஸ் தலைநகரான ஏதன்சைஅடைந்தார். கிரீஸ் நாட்டு இயற்கை வளங் கள், சாக்ரடீஸ், பிளாட்டோ சிலைகள் உட்படபல புகழ்பெற்ற சின்னங்கள், பல் கலைக் கழகங்கள், பூங்காக்கள் முதலியவற் றைக் கண்டார். ரஷ்யாசெல்ல பாஸ்போர்ட்டுக்காக இரண்டுவாரம் காத்திக்க நேர்ந்தது.அங்குள்ள கம்யூனிஸ் டுகளுடன் தொடர்பு கொண்டார். அவர்கள் உதவியினால் 7.2.32அன்று பாஸ் போர்ட் கிடைக்கப்பெற்றது. ஏதன்சிலிருந்து Chitcherine என்ற கப்பலில் ரஷ்யாக் கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் வழியனுப்ப, புறப்பட்டு 8.2.32ல் 'ஸ்மர்ண' என்ற இடம் அடைந்தார்.
அன்றே புறப்பட்டு 9.2.32ல் டார்டினஸ் ஜலசந்தியைக் கடந்து 10.2.32ல் துருக் கியின் தலைநகர் துறைமுகமான கான்ஸ்டாண்டி நோபிலை அடைந்தார். கான்ஸ்டாண்டி நோபிலில் மக்கள் வாழ்க்கை முறையைக் கண்டறிந்தார். கடைவீதி ரிவல்யூஷன் சதுக்கம், கமால்பாட்ஷாவின் உருவச்சிலை ஆகியவை கண்டார். 11.2.32ல் கான்ஸ்டாண்டிநோபிலை விட்டு கப்பலில் புறப்பட்டு கருங்கடல் வழியாக 12.2.32 ல் 'ஓடெசா'(Odessa) துறைமுகம் வந்தடைந்தார். கடல் உறைந்து விட்டதால் கரைசேர முடியவில்லை. பனிக்க ட்டிகளை உடைத்தபின்னே, 4 மணி நேரம் கழித்து கரைசேர முடிந்தது. 'ஓடெசா'வைச் சுற்றிப் பார்த்துவிட்டு, மாஸ்கோவுக்கு ரயிலில் புறப்பட்டார். 'கீவ்' ஸ்டேஷனுக்கு 13.2.32ல் வந்தடைந்தார். வரும் வழியில் எல்லா நதிக ளும் உறைந்து கிடந்ததையும் அவற்றின்மீது மனிதர்கள், வண்டிகள், விலங்கு கள் சென்றதையும் பார்த்தார்.
14.2.32ல் ரஷ்ய துறைமுகம் வந்தடைந்தார். வந்திறங்கியதும்,சோவியத் அரசா ங்கம் தனது விருந்தினராகப் பெரியாரைக் கருதுகி ன்றது என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது. 'நவாமாஸ்கோ' (New Moscow) என்ற ஓட்டலில் தங்கினார். 'ஜீனா பிலிகினா'(Zina Pilikina) என்ற ஒரு பெண் மொழி பெயர்ப்பாளரை பெரி யார் குழுவினருக்கு அளித்து, பல்வேறு இடங்களைப்பார்க்க உதவினர். அவர் கள் உதவியுடன் 'மத எதிர்ப்பு மியூசியம்'(Anti- Religious Museum) கண்டார். பார் வையாளர் புத்தகத்தில் தனது கருத்துரை யை எழுதினார். பின்னர், மத எதிர்ப் புப் பிரச்சார அலுவலகம்(Anti-Religious Propaganda Office) சென்று தம்மை ஓர் உறுப்பின ராகப் பதிவு செய்துகொண்டார். அங்கிருந்த பார்வையாளர் புத்தகத் திலும் தனதுகருத்தை எழுதினார்.18.2.32ஓய்வு நாளாக இரு ந்தபோதிலும், அதிகாரிகள் பெரியார் அவர்களை' லெனின்' மியூசியத்தைக் காண அழைத்துச் சென்றனர்.பின்னர், விவசாய இலா கா மியூசியம் (Home of Peasants) கண்டு களி த்ததுடன் பார்வையாளர் புத்தகத்தில் மறவாமல் குறிப்பெழுதிவிட்டு புகைப் படமும் எடுத்துக் கொண்டார்.
சில நாட்களில்,சோவியத் யூனியனின் ஜனாதிபதி 'காலினின்'(Mikhail Ivanovich Kalinin)அவர்களால் வரவேற்கப்பட்டு, அவருடன் பலமணி நேரம் உரையாடி னர். காலினின் அவர்கள் காட்டிய பரிவு,எளிமை, தான் கூறியதை தனிக் கவ னத்துடன் கேட்ட தன்மை ஆகியவவை பெரியாரை மிகவும் கவர்ந்தன. சோவி யத் யூனியனின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் ஜனாதிபதி காலினின் ஒரு சாதாரண விவசாயினுடையமகன் என்று அறிந்து வியந்தார். சோவியத் யூனி யனை நன்குசுற்றிக் காணவிரும்பிய அவருக்கு, தகுந்த ஏற்பாடுகள் செய்து தரப்பட்டன. அவர் மாஸ்கோ,லெனின் கிராட், Baku, Tblici, sochi, Dnieprostroy, Zaporozhye, Rostov,The Trans-cau casian Republics,Abkhazhia மற்றும் பலமுக்கிய இட ங்களைச் சுற்றிப் பார்த்தார்.தொழிற்சாலைகள், கூட்டுப்பண்ணைகள், பள்ளிக் கூடங்கள்,மருத்துவ மனைகள், அறிவியல் வல்லுனர்கள், தத்துவவாதிகள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், என்று பலதரப்பட்டவர்களையும் கண்டு உரையாடினார்.
1.5.32 மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் நடந்தேறிய மேதின விழாவில் ஆயிரக் கணக்கானவர்கள் கொடிபிடித்து அணிவகுத்துச் செல் லும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டுகளித்தார். பின்னர் மே தின பொதுக் கூட்டத்தில் பேசுமாறு அழைக்கப்பட்டார். அக் கூட்டத்தி அவர், இந்தியாவின் கீழ்நிலையையும், வறு மையுடனும், உரிமையற்றும் வாழும் இந்தியமக்களின் நிலையையும் எடுத்து விளம்பினார். பல ஆயிரக்கணக்கான மக்கள் அவர் சொற்பொழிவைக் கூர்ந்து கேட்டனர்.ரஷ்யாவில் 14 வயதுச் சிறுவன் ஒருவன் பெரியாரைப் பார்த்து "உங்கள் நாட்டில் 'மகராஜ் (பார்ப்பனர்) பறையர்(சூத்திரர்)இருக்கிறார்களாமே! அவர்கள் எப்படி இருக்க முடியும்?" என்று கேட்டுத் திகைக்க வைத்தான். பெரி யார் அவனுக்கு விளக்கினார்.
ஸ்டாலின் முன்னிலையில் நடந்த மே தின விழாவிலும் கலந்து கொண்டர். "இந்தியாவிலிருந்து வந்த நாத்திகத் தலைவர்" என அவையோருக்கு அறிமுக ப் படுத்தப்பட்டார். ஸ்டாலின் அளித்த மரியாதையை ஏற்றார். 29.5.32ல் ஸ்டா லினைக்காண பெரியார் ஒப்புதல் பெற்றிருந்தார். மூன்றுமாதங்கள் சோவியத் யூனியனில் தங்கியது,ஒரு'முழு வாழ் வாகவே' அவருக்குத் தோன்றியது. அங் கிருந்து பிரிந்துவர மனத்தில்லை;சோவியத் யூனியன் குடிமகனாக வேண்டி அரசாங்கத்திடம் விண்ணப்பித்துக் கொண்டார். அதில் அவர் வெற்றி பெறவில் லை. இதற்கிடையில், திரு. ராமனாதனின் நடவடிக்கை சோவியத் அரசின் கண் காணிப்புக்கு உட்பட நேர்ந்ததால் 19.5.32ல்சோவியத் யூனியனைவிட்டு வெளி யேறினார்.
பின்னர்,1932அக்டோபர் முதல் வாரம்வரை இங்கிலாந்து, வேல்ஸ்,ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, பிரான்ஸ்,ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார். இங்கிலாந்தில், பலதொழிலாளர் தலைவர்களைச் சந்தித்தார். கம்யூ னிஸ்ட் தலைவர் தோழர் சக்லத்வாலாவைக் கண்டு உரையாடினார். அவரிடம் பெற்ற சோவியத் யூனியனின் ஐந்தாண்டுத் திட்டத்தை தமிழில் மொழி பெய ர்த்து வெளியிட்டார். பிரிட்டிஷ் தொழிற்கட்சித்தலைவர் லான்ஸ்பரியைச் சந்தி த்தார்.20.6.32 அன்று இங்கிலாந்து மேக்ஸ்பரோ லேக்பார்க்கில், வேலையில்லா தொழிலாளர் ஊர்வலக் கொண்டாட்ட தினத்தில் 50,000 தொழிலாளர் இடையே லான்பரி முன்னி லையில் சொற்பொழிவு ஆற்றினார். பிரிட்டிஷ் தொழிற்கட்சி அரசாங்கம், இந்தியாவில் கடைப்பிடிக்கும் தொழிலாளர் விரோதப் போக்கை யும், முதலாளித்துவத்துவத்துக்கு ஆதரவு நல்கும் நிலையையும் அக்கூட்டத் தில் கண்டித்தார்.
ஜெர்மனியில், பெரியார் பலநாள் தங்கியிருந்து,பல சமதர்ம சங்கங்களுக்குச் சென்றார். அரசாங்கத்துடன் கலந்து பழகினார். அப்போது ஹிட்லர் ஆட்சிக்கு வராதநேரம். பல நிர்வாண சங்கங்களுக்கும் சென்று அவர்களுடன் கலந்து பழகினார். ஸ்பெயினின் தலைநகரம் 'மார்ட்டில்' பல தினங்கள் தங்கி, பல சம தர்மத் தலைவர்களுடன் உரையாடியதுடன், அந்நாட்டின் பொதுஇயக்கங்களை அறிந்துகொண்டார். பாரசிலோனாவில்உள்ள கொலம்பஸ் உருவச் சிலையைக் கண்டுகளித்தார். சுற்றுப்பயணத்தில் உடன் சென்ற தோழர் எஸ்.ராமநாதன் மே லும் பல நாடுகளைச் சுற்றிப்பார்க்க விரும்பாததால், 'மார்சேல்ஸ்' பட்டணத்தி ல் தங்கிவிட்டார்.
17.10.32ல், 'ஹரூனாமாரு' என்ற ஜப்பானியக் கப்பலில் பெரியார் கொழும்பு துறைமுகம் வந்தடைந்தார். கொழும்பு வியாபாரி ஹமீது மற்றும் பல சங்க ங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த நாக மையார், மாயவரம் சி.நட ராஜன், அ.ராகவன் ஆகியோருடன் ஸ்டீம்போட்டில் கப்பலுக்குச்சென்று வரவேற்று அழைத்து வந்தனர். இலங்கை சட்டசபை நட வடிக்கைகளை 18.10.32ல் கண்டார். 19.10.32ல் சட்டசபை மண்டபத்தில் நடை பெற்ற விருந்தில் கலந்து கொண்டு நண் பர்களுடன் புத்தமத விஷயம், சிங்கள சமூக விஷயம் ஆகியவற்றைப் பற்றி உரையாடினார். 20.10.32ல், பர்ஷியன் ஓட்டலில் நட ந்த வரவேற்பு விருந்தில், இலங்கை தொழில் இலா கா மந்திரி திரு. பெரி. சுந்தரம், பெரியாரைப் பாராட்டி உரையாற்றினார். 21.10.32ல் சிங்கள வாலிபர்களுடன் அளவளாவி, அவர்கள் இல்லம் சென்று, உரையாடி சந்தேகம் தெளிவித்தார். அன்று மாலை ஒரு சினிமா காட்சி கண் டார். காட்சி முடிவில், வரவேற்புப் பத்திரம் வாசித்தளிக்கப்பட்டது. அதற்கு பதி லளித்துப் பெரியார் பே சினார். 22.10.32 முற்பகல், முகமதிய பேராசிரியர்களு டன், சுயமரியாதை இயக்கம் பற்றி கலந்துரையாடினார். அன்று இரவு திருநெ ல்வேலி ஜில்லா ஆதி திராவிடச் சங்கம் திரு.எஸ். முத்தையா தலைமையில் அளித்த வரவேற்பை எற்று உரை நிகழ்த்தினார். 23.10.32ல், திரு. சி.கே. குஞ்சிரா மன் தலைமையில் எல்பின்ஸ்டன் பிக்சர்பேலசில் நடைபெற்ற வரவேற்பில் பெரியாருக்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வர வேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்குப் பதில் அளித்து, 2000பேர் கொண்ட கூட்டத்தில் நீண்ட நேரம் பெரியார் சொற்பொழிவு நிகழ்த்தினார். அன்று மா லையே, கொழும்பு கடற்கரைக்குப் பக்கமுள்ள கால் போஸ் மைதானத்தில், டாக்டர் முத்தையா தலைமையில் 10,000பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் 2மணி நேரத்துக்கும் மேலாக கருத்துரை ஆற்றினார்.
24.10.32ல் கொழும்பில் தங்கியிருந்தார். 25.10.32 முதல் 27.10.32வரை கண்டியில் தங்கி, மாத்தளை, உக்களை முதலிய இடங்களுக்குச்சென்று தொழிலாளர், கூலிகள்நிலையை விசாரித்து, அறிந்து கொண்டார்.28.10.32ல் கண்டியில், அட்வகேட் என்.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற வரவேற்பில் கலந்துகொண்டார். 29.10.32ல் ஹட்டன், இலங்கை தோட்டத் தொழிலாளர் சங் கத் தலைவர் திரு.நடேச அய்யர் அழைப்புக்கு இணங்கிச்சென்று, வரவேற்பில் கலந்துகொண்டு, 3000பேர்கள் கலந்து கொண்டகூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றினார். 30.10.32ல் கொடிகாமம், 31.10.32ல் பருத்தித்துரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தங்கியிருந்து, 3.11.32ல் கொழும்பு சேர்ந்து, 'மீரான் மேன்ஷ னில்' 6.11.32வரை இருந்து விட்டு, கொழும்புவை விட்டுப் புறப்பட்டு 8.11.32ல் தூத்துக்குடி வந்து சேர்ந்தார்.
அன்று மாலை தூத்துக்குடியில் நடைபெற்ற மாபெரும் வரவேற்புப் பொதுக் கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றினார். 9.11.32ல்தூத்துக்குடியிலிருந்து ரயிலில் புறப்பட்டு, அன்று மாலை, மதுரை அடைந்து, அங்கு நடைபெற்ற பெரும் வர வேற்புக் கூட்டத்தில் முழக்கமிட்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் முடிந்தவுடன், பெரியார் தனது முதல் அறிக்கையில் தன்னைத் 'தோழர்' யென விளியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
***
பெரியார் தனது ஒவ்வொரு மேடைப் பேச்சின் இறுதியில், பெரும்பாலும் தவறாமல் ஒன்றைச் சொல்வார் " நான் சொல்கிறேன்என்பதற்காக எதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள். பிறகு, மதவாதிகள் புராணத்தை முன்வைத்து பேசுவதை நீங்கள் ஒப்புக் கொள்வதற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நான் பேசியதை வைத்து உங்களுக்குள் நிறைய கேள்விகளை எழுப்புங்கள், அதன் பின்னர் நான் சொன்னது சரியென்கும் பட்சம் ஒப்புக் கொள்ளுங்கள்" என்பார். எனக்கும்கூட பெரியாரின் கருத்தாக்கங்கள் மீது பலமாதிரி கேள்விகள் இருந்தது. மனதளவில் பல வருடங்கள் அதனோடு தர்க்கம் நிகழ்த்தியிருக்கிறேன். பின்னர், தெளிவுகளை எட்டிப் பிடித்தாலும், இன்றைக்கும் பெரியாரின் சில கருத்தாக்கங்கள் மீது சின்னச் சின்ன விமர் சனங்கள் உண்டு. பிடிப்படாதா பதில்களும் உண்டு.
இங்கே நான் படம்பிடித்திருக்கிற பெரியார், என் விமர்சனங்களில் இருந்து மீண்டெழுந்து எனக்கு மலைப்பைத் தருகிற பெரி யார்!! இதை வாசிக்கும் உங்களில் சிலருக்கும் என்னையொத்த மலைப்பு தகிக்கலாம்! என்றாலும் பெரியாரை உடனே ஒப்புக் கொள்ளாதீர்கள்!! அது பெரியாருக்கே பிடிக்காது!!
- தாஜ் / 17.09.06
***
கட்டுரைக்கு உதவிய நூல்கள்:
பெரியார் வரலாற்றுக் கையேடு / தஞ்சை மருதவாணன்
பெரியார் - தலித்துகள், முஸ்லிம்கள் / அ.மார்க்ஸ்
பெரியார் களஞ்சியம் -4 / தொகுப்பு:கி.வீரமணி
குடியரசு தொகுப்பு-3 / தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
***
satajdeen@gmail.com
http://www.tamilpukkal.blogspot.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment