சிக்கிமுக்கிக் கல்
----------------------
நம் மூதாதையர்கள் சிக்கிமுக்கிக் கல்லை
கண்டு கொண்டபோது
தெறித்த கனலைப் பற்றவைத்து
பயன்படுத்தத் தொடங்கினர்
இருட்டிலிருந்த தங்கள் முகங்களை
ஒருவருக்கொருவர் காண
சிறைப்படுத்தியிருந்த காடுகளைக் கொளுத்தி
விஷமிகளை விரட்டி
இரத்தத்தை உறிஞ்சிய
அட்டைகளையும் பொசுக்கி
பாதைப் பார்த்து அடியெடுத்து
பொந்துகளை விட்டும்
சமதளத்திற்கு வந்தனர்
காலங்களில் தீயின் பாதுகாப்பு
வளையத்திற்குள்
செரிக்க உண்ணவும் உரக்க உறங்கவும்
நிம்மதி கொண்டனர்
கற்கால மனிதர்களின் நசிவையும் சிதைவையும்
ஆய்வு செய்யும் வெளுத்த தோழர் வீட்டில்
சிக்கிமுக்கிக்கல் பார்க்கக்கிடைத்தது
அடர்ந்த வெண்தாடியோடு பெரியார் ஒருவரின்
கனல் முழங்கும் சித்திரக் காலடியில்
நமது நாகரீகம் நெருப்பில் தொடங்கியது
என்ற குறிப்புடன்.
*****
உட்கடல்
------------
குதுகலமான பொழுதுகளில்
கடற்கரையோரம்
நண்டுகள் பிடித்து விளையாட நீ
வண்ணத்தில்
சிப்பிகளை சேகரித்தாய்
மலையேறிக்கொண்டிருந்த
ஒரு முன் பனிக்காலத்தில்
நடையின் லாவகத்தோடு
முன்னால் நீ போய்க் கொண்டிருந்தாய்
உச்சிப்பொழுது சுடுமணலில்
வேகம் சுழித்துத் தடுமாற நான்
பாத ரணங்களோடு
அழுந்த அடிகளைப் பதித்தபடி
நீ கடப்பதைப் பார்த்தேன்
தூரிகையால் உன்னை
தீட்டிப்பார்த்தபோது
உயிர்பெற்ற மார்பகங்கள்
தேம்பி விம்ம
பறந்து விட்டேன்
வடிவாய் வடித்து கரமெடுக்க
நிர்வாண நிலை வேண்டும்
தரித்த உடுப்புகளை கழட்ட
உன்னால் மட்டுமல்ல
என்னாலும் முடியாது.
*****
நேரம் கெட்ட நேரம்
--------------------------
என் பயணங்களை
இரவில் தான் தேர்வு செய்கிறேன்
நீண்டதூரம் இருளில் பயணிப்பது
தவிர்க்க முடியாத அனுபவம்
சின்னச் சின்ன நட்சத்திரங்கள்
வெள்ளையாய் கண்சிமிட்டுகின்றன
முந்தாநாள் பார்த்த முழுநிலவு
இன்றைக்கு தேய்ந்து கொண்டிருக்கிறது
கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம்
கவிழ்ந்து கிடக்கிறது மையிருட்டு
இருள் பெருக்கம் சுகமானது
யாருக்கும் யார் முகமும் பிடிபடாது
இருளில் எல்லோருக்குமே உண்டு
இன்னொரு முகம்
தடங்கள்களுக்கும் பதற வேண்டியிராது
நித்திரை மனிதர்கள் எதையும் அறியமாட்டார்கள்
வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி
என் வாகனம் விரைகிறது
எல்லோரும் தூங்கிச் சோர்ந்து
கனவுகளில் சஞ்சரிக்கும் நேரம்
மறுபடியும் பிறக்கலாம்
திரும்பத் திரும்ப இறக்கலாம்
வானுக்கும் பூமிக்குமான வெளியில்
அத்தனையையும் நீண்டு நிம்மதியாக
போகம் செய்யலாம்
கலவியில் கசியும் பூரணம் உணர்ந்து
பூரித்துப் போகலாம்
தூங்கியவர்களும்
கனவுகளின் பக்கம் திரிந்தவர்களும்
புதிய விடியலில் அவரவர் திக்கில்
எழுந்து முந்தி விரைய
உறங்கநான் அமைதியானதோர்
இடம் தேடி அலையக்கூடும்!
*****
satajdeen@gmail.com
No comments:
Post a Comment