Sunday, June 04, 2006

விமர்சனங்களும்-எதிர் வினைகளும்.

"உங்கள் படைப்புகளின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, நீங்கள் எந்தஒரு பதிலும் சொல்வதில்லையே?" என்று தி. ஜானகிராமனிடம் கேட்கப்பட்டப்போது"யானையை ஒருவர் தனது கண்ணோட்டத்தில் பார்த்து விவரிக்கும் அந்த பார்வைஅவர் அளவில் சரியானதே. அதற்க்கு பதில் சொல்வது தேவை அற்றது" என்றார்.

தி.ஜா. இயல்பாகவே மெளனப் பேர்வழி. எல்லோரிடமும் சகஜம் பாராட்டும்குணம் அவரது குணம். மனப் பாதிப்பின் அதிர்வுகளையும், கோபத்தாபங்களையும் படைப்புகளின் வழியே மட்டும் வெளிப்படுத்தியவர். அவரது சுபாவத்தை முன்வைத்து, அவர் நழுவியதை நாம் புரிந்து கொள்வதே சரியாக இருக்கும்.

க.நா.சு.வின் விமர்சனங்கள் படைப்புலகில் மிகவும் பிரபல்யமானது.அவர் விமர்சனங்கள் வைக்கத் தொடங்கிய காலம் என்பது, விமர்சனம்என்ற ஒன்றை நம் படைப்பாளிகள் எதிகொண்ட தொடக்க காலம்.அன்றைக்கு அவரது விமர்சனத்தால் நம் படைப்பாளிகள் அநியாயத்திற்குச் சங்கடப்பட்டுப்போனார்கள்.

க.நா.சு.வின் விமர்சன அனுபவம் என்பது, பெருவாரியான உலக இலக்கியங்களைஅவர் கற்று தேர்ததினாலானது. நம் இலக்கிய வட்டத்தில் யாரதுப் பிடிக்கும் அகப்படமட்டார்.அவ்வப்போது அவர் தேர்வு செய்யும் படைப்பாளிகளின் பட்டியல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏர்படுத்தக்கூடியது. அந்த பட்டியல், காலத்தால் அவராலேயே மற்றங்களுக்கும் உள்ளாகும். இந்த மாற்றத்தை இயற்கையான நிகழ்வென்பார். நம் படைப்பாளிகள் அதை ஒப்புக் கொள்வது கிடையாது.

வெங்கட் சாமிநாதன் விமர்சன வட்டத்தில் இன்னொரு சிகரம். இந்த நிலையைஅடைய, அவர் எழுதிக் குவித்தவைகளைத் தாண்டி கலைகளின் எல்லா கூறுகளிலும் அவர் தேடியத்தேடல்கள் அதிகம். பெரும்பாலும் அவரது விமர்சனங்கள் நுட்பம் சார்ந்தவைகளாக இருக்கும்.என்றாலும், சில நேரம் அவற்றில் அவரின் பார்வை தடுமாற்றம் பளிச் என்று தெரியும். கலை இலக்கியம் தாண்டிய அவரது அரசியல் நோக்கே அதற்கு பிரதான காரணமாகத் தெரிகிறது.

வெ.சா.வுக்கு 'ஈகோ' சார்ந்தப் பிரச்சினைகளும் அதிகம். எந்த ஒருமேலானப் படைப்பாளியானாலும், தன்னை மதிக்கவில்லை என்றாலும், தனது அரசியல் நோக்கிற்குமுரணானவர்யென அறிய வந்தாலும் தாட்சணையற்று புறம் தள்ளுவார். அவரது கணைகள் எதிர்பட்டவர்களை அவ்வப்போது குத்திக்கிழிக்கவும் கிழிக்கும்.இப்பொழுது அவரிடம்'தேவலாம்போல்ஒரு தோற்றம்' தென்படுவதாக கூறுகின்றார்கள். அது அவரது முதுமையை ஒட்டிய இயலாமை யென்றே இலக்கிய நோக்கர்கள் கணிக்கிறார்கள்.

விமர்சன உலகிற்குள் சுந்தர ராமசாமி பெரிய அளவில் பிரவேசித்ததில்லை.பிரவேசிக்கும் தருணங்களில் முழு ஈடுபாடுடன் செம்மையாகவே செய்வார். எதை ஒன்றை எழுதினாலும்அதனின் எல்லா கதவுகளையும் திறந்துப் பார்த்து எழுதுவதென்பது அவர் கைவரப்பெற்ற தீர்க்கம். அவரது விமர்சனக் கட்டுரைகளில் அதனை நாம் முழுமையாக தரிசிக்கலாம். ஆழமான சித்தரிப்புகளில் கூட நம்மை உள்ளார்ந்து சிரிக்க விடுவார், பல இடங்களில் நின்று நிதானித்து யோசிக்கவும் செய்வார். விமர்சனத்தின் சில காரணிகள் எதிர்வினை எழுப்பும் என்று அவர் கருதும் பட்சம், அதன் வார்த்தை அடுக்குகளை மெருகூட்டி அலையெழா கடல் பரப்பாக காமிக்கவும் காமிப்பார்.

தனது மூத்தப் படைப்பாளிகள் சிலரைப் பற்றி நினைவுக் குறிப்புகளுடனும், ஆய்வு நோக்கில் இவர் எழுதியவைகள் புத்தகங்களாக தனியே வந்திருக்கிறது. அவைகளுக்குஎதிர்வினைகள் பெரியதாக இல்லையென்றலும், அரசியல் ஆளுமைக்கொண்ட ஜீவாவைப் பற்றி சு.ரா. எழுதிய புத்தகதிற்கு பரவலாக எதிர்வினை எழுந்தது. சு.ரா. வின் பழைய காம்ரேட்டுகளும், மார்க்சிஸ்ட்அனுதாபிகளும் அந்த புத்தகத்தின் சிலப் பகுதிகளை முன்வைத்து எதிவினைப் புரிந்தனர்.

மார்க்சிஸ்ட் சிந்தனைக் கொண்ட இலக்கிய வாசகர்களுக்கு சு.ரா. விடம் எதிர் படுவதென்பது அவர்களின் தினச் செயல்பாடுகளில் ஒன்றாகவே இருந்தது. சு.ரா. வின் ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலை முன் வைத்து அவர்கள் இதழ்கள் வழியாகவும், இலக்கிய மேடைகள் வழியாகவும் ஆண்டு கணக்கில் எதிவினைப் புரிந்தார்கள் என்றால் பாருங்கள்.

விமர்சனங்களின் வழியே, எதிர்படும் சகப்படைப்பாளிகளை தங்களது தடித்த வார்த்தைகளால்ஒடுங்கச் செய்த சாமர்த்தியசாலிகளின் வித்தைகளெல்லாம்இன்றைக்கு பழங்கதையாகப் போய்விட்டது. மறைந்த பிரமிளும், இன்றைக்கு பெரிய மாற்றம் கண்டிருக்கும் சாரு நிவேதிதாவும் அன்றைக்கு அப்படி ஒரு முகம் பெற்றவர்கள்.

எதிப்பு ரீதியான விமர்சனத்திற்கு கட்டுரைகள் எழுதி சலிக்கிறபோது, தனது கவிதைகளை ஆயுதங்களாக்குவார் பிரமிள். தொண்ணூறுகளில், ஒரு சிற்றிதலில் இவர் எழுதிய நாற்பத்தி ஆறு கவிதைகள், வெளியாகி இருந்தது. 'அத்தனையும் எதிப்புக் கவிதைகள்' என்ற அறிவிப்புடன்.

பிரமிளின் விமர்சனங்களில், அவரது கோபமே பிரதான இடத்தை வகிக்கும்.அது விமர்சனங்களின் உள்ளார்ந்த் சாரத்தை நிறம் மாற்றவும் செய்யும். அதை அவர் உணர்ந்தாக அறிகுறியே இல்லை. சாருவிடம் இவர் முரண்பட்ட காலக்கட்டத்தில், அவரை கட்டுரை ஒன்றில் சாடியது போக சாருவையும், அவரது ஊரைச் சேர்ந்த இன்னொருப் படைப்பாளியான ஆபிதீனையும் இருவர் அல்ல ஒருவரே என்ற ரீதியில் தீர நிறுவியிருந்தார். அந்த கட்டுரை வாசித்தற்கு முந்தைய வாரம்தான் நாகூர் சென்றிருந்தேன். அங்கே, அவர்கள் இருவருடன் நண்பர் நாகூர் ரூமியையும் சேர்த்து வைத்து சந்தித்தது நினைவுக்கு வந்தது. கட்டுரையில், குறிப்பிட்ட அந்தப் பகுதியை மீண்டும் ஒருதரம் வாசித்து என்னை நான் கிள்ளிப் பர்த்தேன். வலித்தது.

அன்றைக்கு, சாரு நிவேதிதாவின் விமர்சனப் பாங்கு என்பது அவரது பிரத்தியோகதிட்டமிடலில் இருந்து துவங்கக் கூடியது. தனது இருப்பை இலக்கிய வட்ட பெரும்பான்மையினரின்பார்வைக்கு கொண்டு சேர்க்கும் முகமாக, அவர் கைக்கொண்ட மாறுப்பட்ட திட்டமிடல் அது. தனது சொந்த மண்ணில், காலத்தின் நாகரீகம் பொருட்டு வழக்கொழிந்துப்போன சொல்லடைகளும் வளமான வசவுகளும் சாருக்கு விரல் நுனிச்சங்கதி. விமர்சனங்களில் மேவும் அவரது வசவுகள் கிளர்ச்சியூட்டும்.அதன் ரசனைக்காகவே அவரது கட்டுரைகளைத் தேடிப் படித்ததுண்டு. அன்றைக்கு அவரது கட்டுரைகளைத் தேடிப் படித்ததற்கு வேறு வலுவான காரணங்களும் இருந்தது. சாருவின் இலக்கிய வாசிப்பு உலகளாவியது. கட்டுரைகளிலும் விமரசனங்களிலும் அதன் தாக்கம் பரவலாக இருக்கும். வாசிப்பில் அது தரும் போதை, அவரது வசவுகளைத் தாண்டும் கிளர்ச்சிக் கொண்டது.

சமீபத்திய தமிழ் வார இதழ் ஒன்றில், தனக்கு நேர்ந்ததாக குறிப்பிட்டிருக்கும் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சாரு ரொம்பவே மாறிவிட்டதாகத் தெரிகிறது. அருட்பெரும் ஜோதிதனிப்பெரும் கருணை என்கிறார். கேட்கும் நம் காதுகள் பாக்கியம் செய்தவை.

நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளில் நடமாடும் ஆண்களும் பெண்களும் இன்னும்உடைகள் அணிந்து, தங்களது தேகப் பசியை மறைக்க வேசம் கட்டுபவர்களாகவே இருப்பதில் அவருக்கு ரொம்ப வருத்தம். நம் படைப்பாளிகள் திருந்தினால்தானே அவர்களின் படைப்பு மாந்தர்களும் திருந்துவார்கள் என்ற ரீதியில் சமீப காலங்களாக ஆதங்கப்பட்ட சாருதான், இன்றைக்கு இன்னொருப் பக்கம் சத்திய சன்மார்க்கத்தை / உயிர்களிடம் நேயத்தையும் போதித்த வள்ளார் ராமலிங்க அடிகளிடம் பணிகிறாரென அறிய வந்தபோது எங்கோ இலேசான நெருடல். மெய்ஞானத்தையும் 'அதி அதி' நவீனத்தையும் ஒருசேரப் பார்த்து நான்தான் குழம்புகிறேனோ என்னவோ.

ஜெயமோகனின் விமர்சனங்கள் இலக்கிய வட்டத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தக்கூடியது அல்ல, என்றாலும் அவ்வப்போது பேசப்படும். தொட்டதற்கெல்லாம் கட்டுரை எழுதிக்கொண்டிருப்பார். அந்த கட்டுரைகள் விமர்சனக் கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கும். அவைகளில்அவரது இலக்கிய அரசியல் பிரதானமாகப் பின்னி நெளியும்.

மூத்தப் படைப்பாளிகள் பலர் இன்னும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நம் இலக்கிய வட்டத்தில், தன்னை முதல் ஸ்தானத்தில் நிலை நிறுத்திக்கொள்ள எழுத்தின் வழியே இவர் கொள்ளும் அவஸ்த்தைகள் நம்மைப் படுத்தும். சு.ரா.வோடு தன்னை ஒப்பிட்டு ஒப்பிட்டு தாந்தான் சரி, தாந்தான் கீர்த்திக் கொண்டவன் என்ற இவரது ஓங்காரமும் அப்படித்தான்.

நாவல் மரபுடன் எழுதிய நாவல்கள் எதுவும் தமிழில் இல்லை என்ற ஜெயமோகன்தான், உலகின் தலைச்சிறந்த நான்கு நாவல்களில் தனது 'விஷ்ணுபுறம்' ஒன்றென கூறி, நம் நாவல் உலகின் 'இல்லாமையைக்' கலைந்து அதற்க்குப் பெருமையும் சேர்த்தார். தமிழ் விமர்சனப் பரப்பில்இத்தகைய சுய தம்பட்டக் கூற்று இதற்க்கு முன் கேள்விப் படாத ஒன்று.

சு.ரா. வின் மறைவையொட்டி ஜெயமோகன் எழுதி காமித்திருக்கும் 'நினைவின் நதியில்'என்கின்ற நினைவு அஞ்சலி கவனிக்கத் தக்கது. சு.ரா.வைப் பற்றிய நெஞ்சை கிள்ளும்நினைவுகளை மிக நுட்பமாக அதில் கோர்த்திருக்கிறார். சு.ரா.வின் நேரடிப் பேச்சையும், அவரதுநகைச்சுவை மிளிரும் மேற்கோள்களையும் பல இடங்களில் பதிவும் செய்து இருப்பதினால்அந்த புத்தகம் முக்கியத்துவம் கொண்டு விடுகிறது. என்றாலும், புத்தக நெடுகிலும் ஆங்காங்கேசு.ரா.வைப் பற்றி ஜெயமோகன் குறைப்பட்டு சிணுங்கியிருப்பது கவனிக்கத் தக்கது.

சு.ரா. மேற்கத்திய நாகரீக மோகம் கொண்டவர் / அந்த சிந்தனைப் பாங்கைமெச்சித் திறிந்தவர் / மார்க்சிஸ்ட் அடிப்படையில் இருந்து மாற்றம் கொள்ளாதவர் / லெளகீகவாழ்வில் ஈடுபாடு உடையவர் /பொருள் ஈட்டுவதில் மிகுந்த நாட்டம் கொண்டவர் / அவரது கஞ்சத்தனம் அலாதியானது / மன உந்தலின் போக்கில் விரைவாக எழுத இயலாதவர் /ஆன்மீகத்தில் நாட்டம் காட்டாதவர் / தத்துவங்களைச் சீண்டமாட்டார் / நார்த்திகவாதி.

ஒருவர் பெது நியாய தர்மங்களை மீறும் பட்சம், அது குறித்து அவர் மீது விமர்சனங்களை வைக்கலாம் அல்லது அந்த குறைகளை வெளிச்சம் போட்டும் காமிக்கலாம்.அதை விட்டு தனிமனிதச் சுதந்திர செயல்பாடுகளையும், அனுபவத்தால் தேடிக் கொண்ட அவர்களின் அடிப்படை உறுதிப்பாடுகளையும் பிழையாக சுட்டிக்காட்டுவது எந்த வகையிலும் ஒப்புக் கொள்ள இயலாது.

சு.ரா. வுக்கு நான் பல நேரங்களில் வலியுறுத்தியும், இம்மண்ணுக்கேர்த்த இலக்கியக்கோட்பாடுகளை அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை என்ற பொருள் படும்படி ஜெயமோகன் இந் நூலில் விசும்புவதெல்லாம் அதிகம். அநியாயத்திற்கான அலம்பல். யார், யாருக்கு சொல்வது? இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசத்தை நான் பெரிது படுத்தவில்லை, ஆனால் அனுபவ வித்தியாசத்தை அத்தனை எளிதில் தள்ளிவிட முடியாது.

யதார்தத்தில் எந்த ஒரு நிலைப்பாடும் காலத்தால் மாற்றம் கொள்ளக் கூடியதுதான்.எல்லாமும் கூட கடைசியில் சூனியத்தைத்தான் மெய்ப்பிக்கும். ஜெயமோகனின் இன்றையஇலக்கியக் கோட்பாடும், அவர் கிளர்ச்சிக் கொள்ளும் மேற்கு கடற்கரையோற ஆன்மிகமும்நாளை அவரிடம் மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.

கட்டுரைகள், விமர்சனங்கள் என்று மட்டுமல்லாது இலக்கிய மேடைகளிலும் இவரது இலக்கிய அரசியல் பிரசித்தியம். மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜனவரியில், ஜெயமோகனின்ஏழுப் புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த மேடையில், கருணாநிதியின் எழுத்திற்கும் இலக்கியப் போக்கிற்கும் எதிப்பு தெரிவித்து ஓர் கொந்தளிப்பு நிலையில் ஜெயமோகன்சாடிப் பேசினார். அந்த விழாவுக்கு முந்தைய நாள் அதே சென்னையில் கருணாநிதியின் புத்தக வெளியீடு விழா நடந்தது. அதில் அவரது பேச்சும், அவரை புகழ்ந்தவர்களின் தாராளப் பாராட்டும் தன்னைபாதிக்கவே, இந்த எதிர்வினையும் கொந்தளிப்பும் என்றார்.

கருணாநிதியின் இலக்கியப் போக்குகள் குறித்தும், அதை மிகையாக பாராட்டித் திறியும் நம் 'பாவப்பட்ட' எழுத்தாளர்களைப் பற்றியும் ஜெயமோகனுக்கு அன்றக்குத்தான் தெரியுமா என்றால் இல்லை. நவீன இலக்கியத்திற்குள் அவர் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே அது அத்துப்படி.

1992-நவம்பர் சுபமங்களாவில் கருணாநிதியின் நேர்காணல் வந்திருந்தது. அதில் அவர் நவீன இலக்கியம் குறித்து, பிழையான மாறுபட்டக் கருத்தொன்றை சொல்லியிருந்தார். அடுத்த இதழில், அது குறித்த எதிர்வினையக நான் கருணநியை விமர்சித்திருந்தேன். அது பிரசுரமானதில் எனக்கு எதிப்பும், மிரட்டல்களும் தொடர்ந்தது. அன்றைக்கு என் கூற்றை ஆதரித்து, பாராட்டி, தைரியம் கூறியும் இலக்கிய நண்பர்கள் சிலர் கடிதம் எழுதியிருந்தார்கள். அதில் ஒன்று ஜெயமோகனுடையது.

பிறகு ஏன் கருணாநிதிப் பற்றி, அன்றைக்குப் பார்த்து அந்த கொந்தளிப்பு. அதுதான் அவரது இலக்கிய அரசியல். அந்த பேச்சைத் தொடர்ந்து மூன்று வாரக் காலத்திற்கு மீடியாக்களிலெல்லாம் கருணாநிதி - ஜெயமோகன் மயம்தான். அவரது புத்தகங்கள் அத்தனையும் அன்றைய 'ஜனவரி புத்தகக் கண்காட்சியில்' ஏகத்திற்கு விற்பனை.

நினைத்த உயரத்திற்கு துரிதகெதியில் வெற்றிக் கொள்ள நினைப்பதும் அதையொட்டி தந்திரமாக காய் நகர்த்துவதும், அடிப்படைகளை நம்பாதவர்களின் செயல்.

இணையத்தளங்களில் படைப்புகளின் மீதான விமர்சனங்களும், எதிர்வினைகளும் உடனுக்குடன் நடைப்பெற்ற வண்ணமிருக்கிறது. கணினியில் புழங்கும் உலகளாவிய தமிழ் அன்பர்கள், இதற்காகவே எந்நேரமும் ஆயத்ததுடன் இருப்பது மாதிரி ஓர் பிரமையே தட்டுகிறது. நமது சிற்றிதழ்களில் அறியப்படாத பல புது முகங்கள் இந்த பக்கம் பிரமாதப் படுத்துகின்றார்கள். அவர்களின் விமர்சனங்களும் அதில் தெறிக்கும் தர்க்கங்களும் நுட்பம் கூடியதாக இருக்கிறது.

இவர்கள் தமிழ் இலக்கிய உலகத்திற்கு புதிய சக்தி. விமர்சனங்களும், எதிவினைகளும் இவர்களின் வழியே பல எல்லைகளைத் தொடும். சந்தேகமில்லை.

***
குறிப்பு: தி.ஜானகி ராமன், க.நா.சு., வெ.சா., சு.ரா., பிரமிள், சாருவுடன் ஜெயமோகன் உட்பட நம் இலக்கிய வட்ட பெரும் தலைகளை முன்வைத்து, 'விமர்சனங்களும்... எதிர் வினைகளும்' குறித்தப் பார்வை.

***
- தாஜ்

Email:tamilpukkal@gmail.com

1 comment:

Anonymous said...

Your are Excellent. And so is your site! Keep up the good work. Bookmarked.
»