Tuesday, May 05, 2009

ஜெயலலிதாவின் ஈழத்து இடி முழக்கம்!!



ஜெயலலிதாவின் ஈழத்து இடி முழக்கம்!!
--------------------- -------------- --------------
- செல்லமுத்து குப்புசாமி
*

சூரியன் மேற்கில் உதிக்காது என்றுதான் இத்தனைநாளும் நினைத்துக் கொண் டிருந்தேன். ஏப்ரல் 25, 2009 அன்று அது பொய்யாகிவிட்டது.
*
போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சந்திரிகாவின் சகோ தரி மாதிரியெல்லாம் பேசிய ஜெயலலிதா, "தனி ஈழம் மட்டுமே தீர்வு. நான் அதைப் பெற்றுத் தருவேன்" என்று அழுத்தம் திருத்தமாக ஈரோட்டிலே பேசி சூரியனை மேற்கில் உதிக்கச் செய்திருக்கிறார்.
*
இலங்கை இனப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக கலைஞர் பேசியது கிடையாது. போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம், வேலை நிறுத் தம், ஊர்வலம் என எதை நடத்தினாலும் அதில் தங்கபாலுவை (அது என் னமோ தெரியலீங்க எங்க பக்கத்து வீட்டு 4 வயசுப் பாப்பா டிவியில வடிவே லுவையும், தங்கபாலுவையும் தவிர யாரைப் பாத்தாலும் சிரிக்க மாட்டேங் குது) துணைக்குச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறார் அவர்.
*
இத்தனை நாள் ஈழப் பிரச்சினையில் ஆளுக்கு ஒரு கொள்கை இருந்தது. மதிமுகவுக்கு தமிழீழ ஆதரவு, ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு – ஆனால் கருணா நிதிக்கு என்ன கொள்கை என்பதே விளங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. மத்திய அரசின் கொள்கையே எனது கொள்கை என்று பேசி வந்திருக்கிறார். மத்திய அரசின் கொள்கையானது, மத்திய அரசின் கொள் கைகளுக்கு கருணாநிதி (நியாயப்படுத்தும் காரியத்தை ஆற்றும்) கொள்கை விளக்கச் செயலாளராகச் செயல்பட வேண்டும் என்பதாகவே இருக்கிறது.
*
போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருப்போரைக் கைது செய்துவிட்டு அவர் மட்டும் பொது வேலை நிறுத்தம் நடத்துகிறார் தமிழக முதல்வர். அன்றைய தினம் தமிழ்த் திருநாட்டு மக்களுக்கு அலுப்புத் தட்டக் கூடாது என்பதற்காக ‘பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு’ கலைஞர் தொலைக் காட்சியில் சிறப்புப் படங்கள் போடுகிறார்.
*
தெளிவான நிலைப்பாடு அல்லது முடிவு ஒன்றை எடுப்பது முக்கியமில்லை. ஒத்திப்போட்டால் எல்லாப் பிரச்சினைகளும் காலப் போக்கில் மறந்து போகும் என்ற அரசியல் சாணக்கியத்தனம் கலைஞரைப் போல வேறு யாருக்கும் கை வராது.
*
சரியா தவறா என்பது முக்கியமில்லை. தனது conviction -இல் உறுதியாக இருப் பது ஒரு சிறந்த பண்பு. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு சாவு மணி அடித் தாலும் பரவாயில்லை என்று இந்தியைக் கட்டாயமாக்குவதில் உறுதியாக நின்ற பக்தவச்சலத்துக்கு அது இருந்தது. தமிழினத்தின் எதிரி என்ற முத்திரை தன் மீது விழுவதையும் பொருட்படுத்தாமல் ஈழ எதிர் நிலை எடுத்த ஜெயல லிதாவுக்கும் அது இருந்தது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் போராட்டத்தில் நடந்து கொண்ட விதம், மழை நீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய திறம், எல் லாமே அதற்குச் சான்று.
*
இன்னொரு பக்கம் மருத்துவர் ஐயா. என்னமோ இப்போதுதான் ‘இலங்கையில் போரை நடத்துவதே இந்தியாதான்’ என்பதைக் கண்டு பிடித்த மாதிரிப் பேசுகி றார். ஓரினச் சேர்க்கை பற்றி, புகை மற்றும் மதுப் பழக்கம் பற்றியெல்லாம் பேசி இந்தியாவையே அதிர வைத்த அவரது மகன் மத்திய அமைச்சரவையில் இருக்கும் வரை அது தெரியவில்லை போலும். மறுபடியும் ஜெயலலிதாவுக்கே வருவோம். பெரியார் பிறந்த ஈரோட்டு நகரிலே, பெரியாருக்கும் தனக்கும் கொள்கை அளவில் என்ன தொடர்பு என்பதை அறியாத அவரது பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்து நிற்கும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்துப் பேசும்போது இனித் தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு என்று சொல்லியிருக்கிறார்.
*
"வீடியோ காட்சிகளைப் பார்த்த பிறகு தான், இலங்கைத் தமிழர்கள் அங்கே கைதிகளைப் போல், அடிமைகளைப்போல் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிகிறது. இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது.’
*
தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேற்றி விட்டு அங்கே சிங்களர்களைக் குடியமர்த்தும் (இது இலங்கையின் ‘தேசத்தந்தை’ சேனநாயகா காலம் தொட்டே நடந்து வரும் செய்கை) வேலையைச் சுட்டிக் காட்டிய ஜெயலலிதா, ‘நிவாரண முகாம்’ என்ற பெயரில் இலங்கை அரசு நடத்தும் சித்திரவதை முகாம்களை ஹிட்லரின் concentration camps உடன் ஒப்பிடுகிறார்.
*
‘இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால், தீட்டப்பட்டு இருக்கும், மிகக் கொடுமையான திட்டம் இது’.
"முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்கள்,
பிச்சைக்காரர்களைப்போல், நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே, அனுப்பி வையுங்கள்,'' என்று இலங்கை அதிபரிடம், (வாழும் கலை ரவிசங்கர்) குருஜி அவர்கள் கேட்டதற்கு,
"இப்போதைக்கு அது முடியாது'' என்று அவர் தெரிவித்து இருக்கிறார். "இரண்டு மாதங்கள் கழித்தாவது, அனுப்பி வையுங்கள்'' என்று கேட்டதற்கு,
"அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கன்னி வெடிகள், வைக்கப்பட்டிருக்கின்றன’ என்றும், "அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்'' என்றும், "எனவே, அதற்குப் பிறகுதான், அங்கு அவர்களை அனுப்ப முடி யும்'' என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார்.
*
ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாகக் குடி அமர்த்தப்பட்ட சிங்களர் கள், வசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல், கன்னி வெடிகள் அங்கே இருந்தால், சிங்களர்கள் பாதிக்கப்பட மாட் டார்களா? அந்தக் கன்னி வெடிகள், இலங்கைத் தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால்தான் வெடிக்குமா? சிங்களர்கள் நடந்தால் வெடிக்காதா?
*
மேலும் தொடர்கிறார் அவர்...
‘இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட் டும் போதாது. இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமை களையும் அவர்கள் பெற வேண்டும்.
இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பதுதான். அனைத்திந்திய அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந் தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமை க்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடி க்கை எடுப்பேன். இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
*
ஒரு வழியாக ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை அறிவித்துவிட்டார். நான் 74 இலேயே தமிழீழம் கேட்டேன், 83 இலே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் (ஏன்னா அது முதலமைச்சர் பதவியை விட சிறுசு பாருங்க) என்று பதில் அறிக்கை விட்டு தனது தமிழினத் தலைவர் பிம்பத்தைத் தக்க வைப்பார் கருணாநிதி.
*
ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை தேர்தலை முன்னிட்டு மாற்றினாரா அல்லது உண்மையிலேயே மாறிவிட்டாரா என்பது தெரியாத கேள்வி. ஆனால் இத்தனை நாளும் இலங்கையில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார் கள் என்றோ அல்லது அவர்களுக்கு சம உரிமை என்றுமே கிடைக்காது என்றோ அவருக்குத் தெரியாமல் போனது எப்படி? சமூக அக்கறையும், அரசியல் பொறுப்புணர்வும் அற்றவராக அவர் இருந்தாரா?
*
எனினும் ஜெயலலிதாவின் இந்த பகிரங்க ஆதரவு வரவேற்க வேண்டிய ஒன்று. தன் மீதான ‘தமிழினத் துரோகி’ என்ற பட்டத்தை, ஜெயலலிதா மீதான ‘தமிழின எதிரி’ என்ற பட்டத்தை நினைத்து மகிழ்ந்து சகித்து சமாளித்த கலை ஞர் இனித் தனது உத்திகளை மாற்றியமைக்க வேண்டும்.
*
கலைஞர் இலங்கை விவகாரத்தின் தனது கொள்கையைத் தெளிவாக வெளிப் படுத்தாமல் இருந்ததற்கு முக்கியமான காரணம் அதை ஜெயலலிதா தனக்கு எதிராகப் பயன்படுத்தி விடுவாரோ என்ற பயம்தான். தமிழீழம் அமைய வேண் டும் என்று சொன்னால் தன்னை இந்தியாவின் எதிரி என்றும், பயங்கரவாதத் தின் பங்காளி என்று ஜெயலலிதா சொல்லி விடுவார் என்ற அச்சம் காரண மாக கலைஞர் இத்தனை நாளும் அரசியல் நாகரிகம் காத்திருக்க வேண்டும்.
*
இப்போதைக்கு கலைஞரின் உத்தி என்பது ஜெயலலிதாவின் உத்தியை முறிய டிக்கும் உத்தியாக இருக்கும். அது எப்படியென்றால்....
*
1986 இல் ஆபரேஷன் டைகர் என்ற ஒரு நாடகம் நடந்தது. பெங்களூர் சார்க் மாநாட்டுக்கு அதிபர் ஜெயவர்த்தனா வரும் போது அவர் சொல்லும் முறை யற்ற அரசியல் தீர்வை ஏற்க வேண்டும் என்ற இந்தியாவின் மிரட்டலை ஏற்காமல் போன பிரபாகரனை மிரட்டுவதற்காக நடத்திய ஆபரேஷன் அது. புலிகளின் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ஆயுதங்களை இந்தியா பறிமுதல் செய்தது. அதைத் திரும்பத் தர வேண்டுமென்று அவர் சென்னை யில் உண்ணாவிரதம் இருந்தார். சாதனங்கள் திரும்ப வழங்கப்பட்டன.
*
உங்கள் ஊரில் ஆயுதப் போராட்டம் மேற்கொள்ளும் நீங்கள் இங்கே அகிம் சைப் போராட்ட முறையைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற செய்தியாளர் கேள்விக்கு, ‘நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்பதை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்‘ என்று பதில் சொன்னார் பிரபாகரன்.
*
அப்படித்தான். கருணாநிதி என்ன உத்தியை மேற்கொள்ளப் போகிறார் என் பதை ‘எதிரி’ ஜெயலலிதாதான் தீர்மானிக்கிறார். இப்போதைக்கு எதிரி கருணா நிதிக்கு மட்டுந்தான் – தமிழினத்திற்கு அல்ல - தமிழீழம் என்பது நடைமுறை யில் சாத்தியமில்லை என்பதை புலிகளும், ஈழத் தமிழர்களுமே நம்பாத இன் றைய சூழலில் தமிழீழம் அமைத்துத் தருவேன் என்று சொல்லி உணர்வுகளை உசுப்பி விட்டிருப்பதால்.
*** **** ***** ****
நன்றி: உயிரோசை

No comments: