Thursday, May 07, 2009

தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல் - 7


தேர்தல் - 2009: நண்பரோடு பகிர்தல் - 7
------------------- -------------- -- -------------
*
தேர்தல்-2009:
பி.ஜே.பி.யும்
பிரதான மூன்று குற்றச்சாட்டுகளும்!!
-----------------------------------------------
- தாஜ்
*
அன்புடன்
ஆபிதீன்....
*
இந்திய அரசியல்வாதிகள்
எல்லோருக்குமே
ஒரே முகம்தான்!
வெள்ளையில் அவர்கள்
பவனி வருவதில் மிரண்டு
ஆய்வின் வழியே...
நெருங்கினால்
எல்லோரும் வழித்துக் கொண்டு
திரிய தெரிகிறார்கள்.
*
இதை எழுதி முடித்து வாசித்தபோது
மன்மோகன் சிங்கிற்கும்
காங்கிரஸ் - சோனியாவுக்கும்
பக்கத்தில்
நெருக்கமாக என்னைக் கொண்டு
நிறுத்துவதாகத் தெரிகிறது.
எழுத்தில் நேரும் விபத்து!
தவிர்க்க முடியாத விபத்து!
விபத்தாகவே நீங்கள் பார்க்கலாம்!
பிளீஸ்...
மற்றப்படிக்கு
கட்டுரையில்
நான்....
உங்களோடு.
*
சென்ற பாராளுமன்ற தேர்தலில்
சிம்மாசனத்தை தவறவிட்ட
பாரதிய ஜனதா....
போட்டக் கூப்பாடு
ஐய்யோ....!
ஏழு லோகத்திற்கும் கேட்டிருக்கும்.
அந்த 'ராம் ராம்.....!'
கண் திறந்துப் பார்த்திருக்கலாம்.
இரக்கமில்லாமல் போய்விட்டார்!
*
ஜனநாயக அமைப்பில்....
'ஓட்டை' முன்வைத்து நடக்கும்
'மங்காத்தா' விளையாட்டில்
கெலித்தவர்களே
ஆட்சிக் கட்டில் ஏறுவார்கள்!
இந்தச் சின்ன யதார்த்தையும் மறந்து
தனது சொந்த சொத்தை
யாரோ....
தட்டிப் பறித்துவிட்ட மாதிரி
அதன் கூப்பாடும் ஆதங்கமும் புரிய
எனக்கு சில நாட்கள் பிடித்தது!
*
"சிம்மாசத்தையும்,
பரிபாலணம் நடத்திய
பாராளுமன்றத்தையும்
நாங்கள் ஐந்து வருடக் காலம்
ஆண்டு அனுபவித்தவர்கள்...
இன்றைக்கு மற்றவர்களால் அது
தீட்டாகிவிடக் கூடாது!"
நிஜத்தை கூறி
பி.ஜே.பி.வழக்குத் தொடுத்திருக்கலாம்!
பதவி சுகம் மையலாட
திரும்ப வேண்டி
அனுபவபாத்தியம் கேட்டிருக்கலாம்!
*
கோரிக்கைகளை
இப்படி முன் வைத்து
சுப்ரீம்கோர்ட் படிகளில் அது
ஏறாததுதான் பாக்கி.
அதன் கூப்பாடு
அன்றைக்கு அப்படியிருந்தது!
*
என்றாலும்....
கோணம் மாற்றி
சுப்ரீம் கோர்ட் படிகளில்
அது ஏறியது!
ஜனாதிபதியிடமும்
மனு கொடுத்தது.
*
"இத்தாலிய சோனியா....
இந்தியாவுக்கு பிரதமரா?"
கோபமான வழக்காக
ஆதங்கமான மனுவாக!
சீறி தீர்த்தது!
*
"நீங்க போங்கோ...
நான் பார்த்துக்க மாட்டேனா....
நீங்க பயப்படறது மாதிரி
ஒன்னும் ஆவாது...
நான் உங்க வீட்டு சமத்தேனோ"
ஜனாதிபதி கலாம்...
படு தைரியம் சொன்னார்!
*
"இத்தாலிய சோனியா
இங்கே பிரதமரா?
ஆகட்டும் முதலில்....
பிறகு பார்த்துக் கொள்ளலாம்!
நாங்கள் எதற்கு இருக்கிறோம்?"
இது சுப்ரீம்!
*
பி.ஜே.பி.
இந்த விதமாய்
வழக்குத் தொடர்ந்தற்குப் பதிலாக
மேலே நான் கூறிய மாதிரி'
அனுபவப் பாத்தியம்' கேட்டே
வழக்குத் தொடர்ந்திருக்கலாம்.
அடம் பிடித்திருக்கலாம்.
*
"இந்தியா ஒளிர்கிறது' யென
ஒரு 'ரைமுக்கு' சொன்னோம்.
அதற்காக.....
இந்த மக்கள்
இத்தனைக்கு ஆத்திரப்பட்டு
தள்ளி கதவைச் சாத்துவார்களென
கனவிலும் நினைக்கவில்லை!"
கூடுதலாக செண்டிமெண்டோடு
கசிந்துருவியிருக்கும் பட்சம்
சாதகம் நடந்திருக்கும்.
*
பி.ஜே.பி.யின் பக்கத்தில்....
நானில்லாமல் போய்விட்டேன்
ஜஸ்ட் மிஸ்ஸ்டு.
*
எல்லாம் ஆனது!
பதவியேற்கும் நாளில்
சோனியா காந்தி....
பிரதமர் நாற்காலியை
'வேண்டாம்' என்று விட்டார்!
போற்றுதலுக்குறிய
அந்த மனித மேன்மையை
எள்ளி நகையாடிய பி.ஜே.பி.
பாதாளம் பார்க்க...
இன்னும்கூட கீழே போய் சேர்ந்தது.
*
அடுத்து நடந்தேறிய நிகழ்ச்சி
இந்திய வரலாற்றின்
புதிய பக்கம்!
திராவிடக் கழக தலைவர்
கி.வீரமணி கூறியப்படி
அதை வாசிக்கலாம்.
"கிருஸ்துவப் பெண்ணான
சோனியா வழிமொழிய
இஸ்லாமியரான கலாம்
பதவி கையளிப்பு தர
பஞ்சாபியரான மன்மோகன் சிங்
பிரதமராகியிருக்கிறார்!
இந்தியா மத சார்பற்ற நாடு என்பதற்கு
இதுதான் சரியான சான்று!"
*
இந்த கணிப்பின்
தாத்பரியத்தை
பி.ஜே.பி. உணரவே செய்தது.
அதன் அகவுலக கூப்பாடு
இரட்டிப்பாகியது!
அவர்களின் பௌத்திரம் நசிந்துப் போக
சுயத்திலும் அது
இடியாக இறங்கியது!
*
இன்றைக்கு....
பி.ஜே.பி. காட்டும்
தேர்தல் முனைப்புக்கும்
திசைத் தெரியாத முழிப்புக்கும்
முதல் முதல் காரணம்...
வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட
புதிய பக்கச் சங்கதிதான்!
*
இனியொருதரமும்...
அப்படி அது நடந்துவிடக் கூடாது
அந்த பீடத்தை...
தங்களன்றி எவரும்
தொட்டும் கறைப்படுத்திவிடக் கூடாது!
*
இதன் பொருட்டான
கவனத்தால்தான்
இந்த தேர்தலில் அது
அநியாயத்திற்கு
அலையோ அலை...
கத்தோ கத்து!
எதிர் கட்சிகளின் மீது...
மத்திய அரசின் மீது...
தினம் ஒரு புதுசாய்
விதவிதமான குற்றச் சாட்டுகள்!
*
கிரிகெட்டில் துவங்கி
வருண் வழியாக
வட மாநிலங்கள் தேய்கிறது... பாடி
ராமர் கோவில் கட்டுமானம்
ராமர் பாலம் இடிப்பு
ஸ்விஸ் பேங்கில் இந்திய பணம்
பொய் மதசார்பின்மை
நாட்டைப் பாதுகாக்க சட்டமில்லை
என்பதாக தொடரும்
அதன் குற்றச்சாட்டுகளின் பட்டியல்
நீண்டுக் கொண்டே இருக்கிறது.
அந்த வரிசையில்
பிரதான இடம் வகிப்பது...
மூன்று!
*
1. மன்மோகன் சிங்:
சோனியாவின் சொல்லுக்கு
ஆட்சி செய்யும் பிரதமர்!
சுயமற்றவர்!
பலமற்றவர்!
பொம்மை!
*
2. தீவிரவாதத்திற்கு எதிராக
காங்கிரஸ் ஆட்சி
எந்தவொரு கடுமையான
நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை!
*
3. காங்கிரஸ் ஆட்சியில்
இந்திய பொருளாதாரம்
வீழ்ந்து விட்டது!
விலைவாசி உயர்ந்து விட்டது.
*
இவ் மூன்று குற்றச் சாட்டையும்
பி.ஜே.பி.
முன்பே பலதரம்
மேடைகளிலும், மீடியாகளிடத்திலும்
பிரஸ்தாபித்ததுதான்!
போதாதென்று...
இப்பொழுது மீண்டும்!
தூசுத்தட்டி துடைத்து
மக்கள் முன் வைத்திருக்கிறது!
*
இந்தியா தழுவி நடைபெறும்
இந்த பாராளுமன்ற தேர்தலில்....
ஆளும் கட்சிக்கு எதிராக
வலுவான குற்றச்சாட்டுகளை
வீசி கிடுகிடுக்க வைக்க
அதனிடம்...
இவைகளை தவிர
கனம் கொண்ட பண்டமென்று
ஒன்றுமில்லை! பாவம்!
*
ஒரு காலக்கட்டத்தில்
அதனுடைய வீரியமும்...
மஹாத்மியமும்
வாவ்......
ஒரு பாட்டில் வயகராவை
ஒரே நேரத்தில்
கொட்டி விழுங்கிய எழும்பலாய்
குதியாட்டம் போட்டது!
போதுமென
அவர்களே நினைத்தாலும்
அடங்க மாட்டாத ஆட்டம் அது!
*
பாரதமாத...
சகல சௌபாக்கியங்களோடு
ஜொலிப்பில் மின்னவும்
புஷ்டியாய்.... உய்க்கவும்
அன்றைக்கு பாரதிய ஜனதா
எந்தவொரு பொருளாதார
சித்தாந்தத்திற்குள்ளும் போகவில்லை
நேரத்தை செலவழித்து
மண்டையை உடைத்துக் கொள்ளவில்லை!
ஒற்றைய கேள்வி மட்டுமே
அதன் நேற்றைய மூலதனம்!
*
"பாபர் மசூதியை இடித்து
ராமருக்கு கோவில்.....!
வேண்டுமா? வேண்டாமா?"
எளிமையான
அந்த ஒற்றைக் கேள்வியோடு மட்டும்
நாடெங்கும்...
ஜன திரளுக்குள்
ரத யாத்திரை போய்
ரத்தக் காவெடுத்து
தீப கர்ப்பதையே
கிடுகிடுக்க வைத்தது!
*
இன்றைய
அதன் தேர்தல் பிரச்சாரமும்
எழுப்பும் குற்றச் சாட்டுகளும்
அதற்கு உறைப்போட கூடக் காணாது!
சுரத்தேயில்லை.
நமுத்துப் போன...
ஊசிவெடி!
*
பி.ஜே.பி.யின்
பிரதான குற்றச்சாட்டுகளை
ஆய்வு செய்யும் நேரமிது!
காலம் போய்கொண்டு இருக்கிறது.
தமிழகத்து மக்கள்
ஓட்டுப் போட
சில நாட்களே பாக்கி.
*
ஆய்வு செய்யவென்ன
காசா... பணமா?
அதுவொரு விளையாட்டு!
எஸ்....
பேப்பர் / பேனாவும்
பாக்கெட் சிகிரேட் போதும்!
விளையாடித் தீர்த்துவிடலாம்.
*
பி.ஜே.பி.யின் கூற்றுப்படி
பாராளுமன்றத்தின்
ஆளுங்கட்சியான
காங்கிரஸ் குறித்து
ஆய்வதற்கு முன்
அங்கே...
எதிர் கட்சியாய் இயங்கிய
பி.ஜே.பியின் செயல்பாடுகளை
இங்கே ஆய்வுக்கு
எடுத்துக் கொள்வதும் தகும்!
ஓரிரண்டு
சாம்பில் மட்டும் பார்க்கலாம்....
*
கடந்த ஐந்தாண்டு கால
பாரளுமன்றத் தொடரில்
பி.ஜே.பி. ஆற்றிய
பொறுப்பான எதிர்கட்சிப் பணிகளில்
சிலாகித்து....
ஒன்றைக்கூட சொல்ல இயலாது!
அது அங்கே போட்டக் கூச்சலும்
நிகழ்த்திய வெளிநடப்பும்தான் அதிகம்!
பாரளுமன்ற நிகழ்வின் போதெல்லாம்...
அமைதி அமைதியென
அமைதிபடுத்த முயன்றே....
சபாநாயகர் சேம்நாத் சட்டர்ஜி
தன்னமைதி இழந்தார்!
எதிர் கட்சிக்குறிய
கடமைகளும்...
அதன் இலக்கணமும்
அதற்கு தெரியுமா?
தெரியவில்லை!
*
இப்பொழுது...
பிரதமர் பதவி கொடுங்கள் என
மக்கள் மன்றத்தில் நிற்கிறது!
பிரதமர் பதவிக்கான
உரிமையைக் கேட்பதெல்லாம் சரி!
எதிர் கட்சிக்கான கடமைகளை
ஆற்றவேண்டிய நேரத்தில் ஆற்றாமல்
பிரதமர் பதவிக்கான
உரிமையினை கேட்பதென்பது
தார்மீகப்படிக்கு எப்படி சரி...?
*
கடந்த ஐந்தாண்டுகால
பாராளுமன்றத் தொடரில்
அமெரிக்காவுடனான
அனு ஆயுத ஒப்பந்தச்
சரத்தையொட்டி நடந்த நிகழ்வில்
பி.ஜே.பி. நிகழ்த்திய
கூச்சல் குழப்பத்தை உட்சப்பட்ச
கூச்சல் குழப்பமாகப் பார்க்கலாம்!
அந்த அளவுக்கு
அந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது.
அந்த ஒப்பந்தத்தால்
இந்தியாவுக்கே அவமானம் என்றது!
*
இன்றைய தேர்தல் பிரச்சார மேடைகளில்
அதே ஒப்பந்தத்தை
வரவேற்போமென
தானே முன்வந்து சொல்கிறது!
என்ன அரசியல் இது!?
பிறகு எதற்கு....
அன்றைக்கு அந்த அளவில்
அப்படியோர் ஆர்ப்பாட்டம்....?
கோடிகளை வீசியெறிந்து
ஏன் அந்த நாடகமெல்லாம்...?
இந்த அழகில்...
பிரதமர் பதவி கொடுங்கள் என
அந்தக் கட்சிமக்கள் மன்றத்தில் நிற்பது
வியப்பாக இருக்கிறது!
எனக்கு மட்டுமல்ல...
அரசியல் அவதானிப்பாளர்களுக்கும்
பொது நாகரீகம் பாராட்டுபவர்களுக்கும்
இந்த வியப்பு மேலோங்கத்தான் செய்யும்!
*
பிரதமர் மன்மோகன் சிங்கை
பி.ஜே.பி. யினர்
பொம்மை என்கிற போதெல்லாம்
சிரிப்பு வருகிறது!
பார்க்கவும் அப்படித்தான் இருக்கிறார்.
டர்பன் முண்டாசோடு
தாடி வளர்த்த பொம்மை!
பஞ்சாபி பொம்மை!
வெடுக் வெடுக்கென நடக்கும்
இத்தினூண்டு சைஸ்ஸிலான
பேசும் பொம்மை!
*
ஆனால்.....
நிஜத்தில்...?
மன்மோகன் சிங்
இந்தியாவின் உயர்ந்த மனிதர்!
அரசியலின் அரசியலில்
தேர்ந்த செஸ் பிளையர்!
நாட்டின் பொருளாதார கேமில்
உலகம் கவனிக்கும்
ஆல்ரவுண்ட் மாஸ்டர்!
*
அமெரிக்காவுடன்
இந்தியா செய்துக் கொண்ட
அனு சக்தி ஒப்பம் பொருட்டு
பாராளுமன்றத்தில் நடந்த
அரசியல் 'WWW'வில்
அந்த பொம்மை....
வாமன அவதாரம் எடுத்தது!
பாரதிய ஜனதாவும்
கம்யுனிஸ்டுகளும்
ஒரே நேரத்தில் அவுட்!
*
"மன்மோகன் சிங்
சோனியாவின்
கட்டளை படிக்கு நடக்கிறார்"
பாரதிய ஜனதாவின்
ஆதங்கமான குற்றச்சாட்டுகளில்
முதன்மையானது.
வெகுகாலமாக
சொல்லிக் கொண்டிருக்கிறது.
இப்பவும்...
இந்த தேர்தல் நேரத்திலும்
அதை மீண்டும்
வலுவான குற்றச் சாட்டாய்
வைத்திருக்கிறது.
*
ஆமாம்!
அப்படிதான் நடக்கிறார்.
அப்படிதான் நடக்கவும் வேண்டும்
அதுதான் சரி!
அதில் என்ன தப்பு?
*
"நானே பிரதமர்
நானே அரசாங்கம்
என் வார்த்தைகளே சட்டம்!" மென
மன்மோகன் சிங்
நடந்துக் கொள்ளும்
பட்சமே...
தவறு!
மன்னிக்க முடியாத
தவறாகவும் இருக்கும்.
டிக்டேட்டர் தனமது!
ஜனநாயக தத்துவத்தின்
நேர் எதிர்!!
*
ஜனநாயக அமைப்பில்
இண்டிகேட்/ சிண்டிகேட்
கட்டாயம்.
பிரதான அம்சம் / அங்கம்.
*
மன்மோகன் சிங்...
காங்கிரஸின் இண்டிகேட்!
சோனியா...
காங்கிரஸின் சிண்டிகேட்!
கட்சித் தலைவர் சொல்வதற்கு
பிரதமர் காது கொடுக்கனும்...
கேட்கவும் கேட்கனும்....
அதன்படி காரியமும் ஆற்றனும்.
அதாவது...
சிண்டிகேட் சொல்வதை
இண்டிகேட் கேட்டாகனும்
அதுதானே...
ஜனநாயகத்தின் கேட்பாடு!
அதுதானே....
ஜனநாயக நாடுகளில்
அமுலில் இருக்கும் முறை!
*
ஒருசமயம்....
காங்கிரஸ் பிரதமர்
சோனியாவின்
சொல்லுக்குப் பதிலாக
அத்வானியின் சொல்கேட்டு
நடந்தால்...
ஆட்சி புரிந்தால்...
அதுதான் தவறு!
தேசிய அவமானமும்!
*
அன்றைக்கு....
இந்திரா காந்தி
சர்வவல்லமையான
பிரதமராக உருகொள்ள
நாடே மிரளவில்லையா?
கூடுதலாக...
அவர் எமர்ஜென்சியையும்
அமுலாக்கி வலிமை கொள்ள...
நாடு அதிரவில்லையா?
ஜனநாயகம் பாராட்டும்
இந்திய கட்சிகள் அத்தனையும்
ஒன்றுக்கூடி
இந்திரா காந்தியை
எதிர்த்ததையும் மறக்க முடியுமா?
மாறாய்....
பிரதமர் வல்லமைக் கொள்கிறாரென
பாராட்டவா செய்தது?
*
இன்றைய பாரதிய ஜனதாவின்
நேற்றைய கோரமுகமான
ஜனசங்க கட்சியும்
(மஹாத்மாவை...
கொன்ன கட்சிங்கோ...)
இந்திரா எதிர்பில் பங்கெடுத்தது.
அந்தப் பங்கெடுப்பு நிஜமென்றால்....
இன்றைக்கு பாரதிய ஜனதா
மன்மோகன் சிங்கை ஏன்...
இந்திராவாக சொல்கிறது?
*
அர்த்தம் இருக்கிறது!
யோசித்தால்தான்
அது சொல்வதின்
அண்டர்கிரவுண்ட்
அர்த்தம் புரியும்!
அதன் வார்த்தைகளில்
அத்தனைக்கு சூட்சமம் உண்டு!!
*
"சோனியாவின் பேச்சைக் கேட்டு
மன்மோகன் நடக்கிறார்!"
பி.ஜே.பி.யின்
இந்தக் குற்றச் சாட்டு
சூட்சமமான கவிதைத்தனம் கொண்டது!!
நேரடியாக யோசிப்பவனுக்கு
மன்மோகன் சிங்,
பாவமாக நடத்தப்படுகிறார் என்றும்
சற்று கூடுதலாக
மண்டையை சொறிபவனுக்கு
ஒரு மண்ணும் விளங்காத
குழப்பமே பதிலாகவும் புரியும்.
*
பி.ஜே.பி.க்கு
கோஷம் வடித்துக் கொடுப்பவர்கள்
சாதாரண நபர்கள் அல்ல!
இதற்காகவே பி.ஹெ.டி செய்தவர்கள்!
அதனால்தான்....
காலத்தையும் மறந்தக் கோலமாக
கோஷத்தை வடிக்கிறார்கள்!
*
'சோனியாவின் பேச்சைக் கேட்டு
மன்மோகன் சிங் நடக்கிறார்!'
இந்த குற்றச்சாட்டை
சரியாக
புரிந்துக் கொள்ளும் முறை என்பது.....
'சோனியா' என்றால்
அவர் இத்தாலிகாரர்!
கிருஸ்துவர்!
'இந்திய'ரான மன்மோகன் சிங்கிற்கு
உத்தரவு போடுகிறார்!
மன்மோகன் சிங்கும்
வெட்கமற்று
இத்தாலிக்கு பணிகிறார்!
பாரதத்தின் தொன்மையும்
மான மரியாதைகளும்
என்னாவது?
*
இதுதான்...
அவர்கள் மொழியின் விளக்கம்!
தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.
புரிந்து கொண்டதின் அடையாளமாய்
இந்து மக்கள் எல்லோரும்
குறிப்பாய்....
காங்கிரஸில் உள்ள
இந்து மக்கள் எல்லோரும்
கோபம் கொள்ள வேண்டும்.
*
வெறுமனே
கோபப்பட்டால் மட்டும் போதாது
செயலில் காமிக்க வேண்டும்!
பி.ஜே.பி.க்கு
அதை வாக்காக மாற்றித்தர வேண்டும்.
உப காரியமாய்...
காங்கிரஸ் இந்துக்கள்
காங்கிரஸிற்குள்
குழப்பம் விளைவிக்க வேண்டும்!
'இத்தாலி' - 'கிருஸ்துவ' சோனியாவை
அவர்கள் ஓரம் கட்ட வேண்டும்!
குறைந்த பட்சம்
அவர்கள் காங்கிரஸ்யை
உடைத்தால் போதும்!
*
சரி...
சோனியாவின் பேச்சைக் கேட்பதாக
மன் மோகனை சிங்கை
பாரதிய ஜனதா
விமர்சிப்பதெல்லாம் மெத்த சரி.....
அங்கே என்ன கதை?
*
ஆர்.எஸ்.எஸ்.ஸின்
கக்கூஸ் கதவு கிறீச்சிட்டாலும்
பாரதிய ஜனதாவினர்
அரக்கப்பரக்க
எழுந்து நிற்கிறார்களே ஏன்?
அங்கே அவர்கள் தும்மினால்
இங்கே இவர்களுக்கு வேர்கிறதே ஏன்?
ஆர்.எஸ்.எஸ். உத்தரவு இல்லாமல்
பி.ஜே.பி.யினர் ஒன்றுக்குகூட
போக முடியாத
சூழ் நிலை நிழவுகிறதே
இது எந்த ரகம்?
*
மன்மோகன் சிங்காவது
தனது சொந்தக் கட்சியின்
தலைக்குத்தான் பணிகிறார்.
பி.ஜே.பி.யினர் ஏன்...
இன்னொரு அமைப்பின்
சொல்லுக்கு ஆடவேண்டும்?
*
இன்றைக்கு...
பி.ஜே.பி.யின்
பிரதமர் வேட்பாளராக அறியப்படும்
அத்வானி
சில ஆண்டுகளுக்கு முன்
பாகிஸ்தானுக்கு...
சுற்றுலா சென்றிருந்தார்!
அங்கே போனவர்
சிவனேயென(ராமனேயென!)
திரும்பாமல்
முகம்மதலி ஜின்னாவை குறித்து
இரண்டு நல்ல வார்த்தைகளை
பல்லிடுக்கால் கசியவிட்டுவிட்டார்.
அந்தக் கசிவிற்காக....
ஆர்.எஸ்.எஸ்.ஸின்
பெருசு - மத்திமம் - சின்னதுவரை
விமர்சன வார்த்தைகளால்
அவரை குதறி எடுத்ததை
மறக்க முடியுமா?
அந்த மானமரியாதையோடுதானே
இன்றைக்கு அவர்
பிரதமருக்கான வேட்பாளர்!
*
பி.ஜே.பி.யின்
முதல் குற்றச்சாட்டின்
அழகைப் பார்த்தோம்.
இப்பொழுது...
இரண்டாவது!
*
தீவிரவாதத்திற்கு எதிராக
காலம்தோறும்....
குரல்தந்தப்படியே இருக்கும் பி.ஜே.பி.
அதை தடுப்பதற்கு
மன்மோகன் அரசில்....
போதுமான சட்டமில்லை என்கிறது.
தீவிரவாதிகளுக்கு
காங்கிரஸ்
துணைப்போவதாகவும் சொல்கிறது.
*
தீவிரவாதத்தைப் பற்றி
பேசுவது யார்?
பி.ஜே.பி.யா?
இதை சபையில் எழுப்ப அதற்கு
தார்மீக உரிமை உண்டா என்ன?
*
இந்த நாடாளுமன்ற தேர்தலில்
'கிரிமினல்கள் பலர்
வேட்பாளராக நிற்கிறார்கள்!'என்கிறது
தேர்தல் கமிஷன்!
அந்த கிரிமினல்களில்
எழுபது சதவீதம் பேர்
பாரதிய ஜனதா என்கின்றன மீடியாக்கள்!
*
சமீபத்தில் கூட
பி.ஜே.பி. ஆளும்
மத்திய பிரதேச அரசு
ஒரே நாளில்
ஒரே கையொழுத்தில்
ஐயாயிரம் கிரிமினல் சம்மந்தப்பட்ட
அரசியல் கைதிகளை
விடுதலை செய்ததாமே!?
ஊடங்கள் அத்தனையும்
அதை வியப்பு கொஞ்ச
செய்தியாக தந்தனவே
இது என்ன...
தீவிரவாத எதிர்ப்பின்
இன்னொரு முனைப்பா?
*
உங்களுக்குத் தெரியுமா....
அந்தக் கட்சியின்
பிரதம வேட்பாளரே
பாபர் மசூதி இடித்த
'தீராத' தீவிரவாத வழக்கில்
இன்னும்...
சாட்சியம் அளிக்காத...
நெருங்கவும்
முடியாதவராகத்தானே இருக்கிறார்!
மன்மோகன் சிங் மாதிரி...
'மிஸ்டர் கிளீன்' இல்லையே!
*
மாலேகான்
குண்டு வெடிப்பில்
சம்பந்தப்பட்ட
பி.ஜே.பி. சாமியார்களையும்
அவர்களின் சினேகம் கொண்ட
ராணுவ அதிகாரியையும்
போலீஸ் கைது செய்த போது..
அதற்கு எதிராக
முழக்கங்கள் செய்த கட்சி பி.ஜே.பி.!
*
அப்பொழுது நடந்த
நான்கு மாநில தோர்தல்களிலும்
அந்தக் கைது எதிர்ப்பு முழக்கத்தை
மேடைகளில்...
எதிரொலிக்க விட்டு
பரப்பிய கட்சி பி.ஜே.பி.!
*
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில்
மேலாளர் சங்கரராமன்
கோவில் வளாகத்திலேயே
வெட்டிக் கொல்லப்பட்ட போது...
தமிழக அரசு
சங்கரமட சங்கராச்சாரி ஜெயந்திரரை
முதல் குற்றவாளியாக
கைது செய்து சிறையில் அடைத்தது.
அந்தக் கொலை குற்றவாளியின்
கைதுக்காக / சிறையடைப்புக்காக
இந்தியா முழுவதும்
பந்த் நடத்திய கட்சி பி.ஜே.பி.!
*
குஜராத்தில்
முஸ்லீம்கள் வீதி வீதியாய்
பற்றி எரிய காரணமான
நரேந்திர மோடிக்கு
இன்னமும் வெண்சாமரம்
வீசுகிற கட்சி பி.ஜே.பி.!
*
மாதம் தவறாமல்
ஒரிசாவில்
கிருஸ்துவர்களை கொளுத்தி
குளிர்காய்கிற கட்சியும்
இந்த பி.ஜே.பி.தான்!
*
நாள் தவறாமல்
மஹாராஷ்ட்ராவில்
சிவசேனா அரங்கேற்றும்
தீவிரவாத லொள்ளுகளுக்கு
துணைப் போகிற கட்சியும் கூட
சாட்சாத் இந்த பி.ஜே.பி.யேதான்.
*
மத்தியில்...
அது அரசாண்டபோது
நக்ஸலைட் மற்றும்
வடகிழக்கு தீவிரவாத...
இருபதுக்கு மேற்பட்ட குழுக்களின்
சுண்டுவிரல் நகத்தைக்கூட
அசைத்துப் பார்க்க
முயலாத கட்சி பி.ஜே.பி.
*
பி.ஜே.பி.யின்
வெளிப்படையான தீவிரவாதத்தால்
பாபரி மசூதி இடிக்கப்பட்ட போது
நாடு முழுவதும்
அதையொட்டி நிகழ்ந்த கலவரத்தில்
கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை
ஐய்யாயிரத்திற்கு மேல்லானது!
அத்தனை உயிர் சாவுக்கும்
இன்றுவரை...
பொறுப்பேற்காத கட்சியும்
இந்த பி.ஜே.பி. தான்!
*
பம்பாய் கலவரத்திற்குப் பிறகு
ராணுவ அமைச்சராக
பொறுப்பேற்ற பா.சிதம்பரம்
தனது முதல் செயல்பாடென்று
ரொம்பவும் பொறுப்பாக
லால் பிரசாத் அத்வானியை
அழைத்து பக்கத்தில்
அமரவைத்துக் கொண்டு
தீவிரவாதத்திற்கு எதிராக என்று....
ஆள்பிடி/ கேள்வியற்றுப் சிறைபிடி
சட்டங்கள் செய்ய...
அத்வானியும்
திருப்தியாக அதை
ஒப்புதல் செய்தாரே!
பி.ஜே.பி. அதை அறியாதா?
பின் ஏன்...
தீவிரவாதத்திற்கு எதிராக
வலுவான சட்டமில்லை என்கிற
பாசாங்குப் புலம்பல்........?
*
தீவிரவாதத்தைப் பற்றி பேசவோ
வலுவான சட்டமில்லையெனப் புலம்பவோ
நிஜமாலுமே பி.ஜே.பி.க்கு
தார்மீக உரிமை இருக்கிறதாயென்ன?
இல்லை!
*
அத்வானி உள்துறைக்கு
கேபினெட் மந்திரியாக
இருந்தபோதுதான்
தீவிரவாதிகள்
இந்திய விமானத்தைக் கடத்தி
கந்தஹாரில் வைத்துக் கொண்டு
இந்திய சிறையில் இருந்த
அவர்களின் சகாக்களை
பணயமாக....
விடுவிக்க கேட்டார்கள்.
தீவிரவாதிகளின்
அந்த சகாக்களை
கந்தஹாரில் கொண்டு விட்டுவிட்டு
'அப்படி ஒரு சம்பவம் நடந்தது
எனது நாலேஜுக்கு வரவில்லை!'என்றும்
சொன்னவர்தான் இந்த அத்வானி!
அதாவது...
அன்றைய உள்துறை அமைச்சர்
ஸ்ரீ லால் பிரசாத் அத்வானி!
*
இவர்கள்தான்
தீவிரவாத எதிர்ப்பு பற்றி
அக்கரைக் கொண்டு பேசுகிறார்கள்!
*
கந்தஹார் விமானக் கடத்தலை யொட்டிய
பிரச்சனையை
சமீபகாலமாக
காங்கிரஸ் பெரும் குரலில்
வெளிப்படுத்துவதுப் பற்றி
பி.ஜே.பி.யின் 'மஹா குரு'
துக்ளக் சோவிடம்
ஒரு வாசகர் கேள்வியாக
முன் வைக்கிறார்!
அதற்கு சோ...
விமானத்தில் உள்ளவர்களை மீட்க
அவர்கள் கேட்ட தீவிரவாதிகள் நால்வரை
கந்தஹார் போய் தந்ததில்
தப்பில்லை என்றிருக்கிறார்!
*
சரி....
தீவிரவாதிகளுடான
உராய்வில்
அல்லது....
'எக்குப்புக்கான' தருணத்தில்
காங்கிரஸ் தரப்பும்
இந்த அளவில் பரிவுகாட்டி
இப்படியான காரணங்களை சொன்னால்
இந்த 'சோ' ஒப்புக் கொள்வாரா?
அல்லது....
அவரைச் சீராட்டும்
பாரதிய ஜனதாதான்
ஒப்புக்கொள்ளுமா?
வானத்திற்கும்
பூமிக்குமல்லவா குதிக்கும்!
அந்தத் தீவிரவாதி...
இஸ்லாமியனாக
இருந்துவிட்டால்... போச்சு!
கண்டம்விட்டு கண்டம் தாவும்!
*
பி.ஜே.பி.
மத்திய அரசை ஆண்டபோதுதான்
கார்க்கில்வார் நடந்தது.
இந்திய ராணுவம் முன்னேறி
வெற்றிகளை...
குவித்துக் கொண்டிருக்கும் போது
அமெரிக்கா சொல்கிறது என்பதற்காக
அந்த போரை நிறுத்திக் கொண்டடோடு
நம்மிடம் சிக்கியிருந்த
பாக்கிஸ்தான் ராணுவத்தினர்களை
விரைந்து....
எல்லைக் கடந்து போக பணித்து...
பஸ்களைக் கொடுத்துதவி
போக்குவரத்தையும்
ஒழுங்குசெய்து தந்தவர்கள்...
இந்த இவர்கள்!!
*
இந்த இவர்கள்தான்...
இன்றைக்கு
நாட்டின் அக்கரைப் பற்றியும்
தீவிரவா எதிர்ப்பு பற்றியும்
பேசுகிறார்கள்!
விந்தை!!
*
நேற்று நடந்ததெல்லாம்....
இன்றைக்கு மறந்துப் போகும்
நாட்டில் மட்டுமேபி.
ஜே.பி.யின் வாதங்கள்
ஜெயிக்கும்!
(எல்லா கட்சிகளுமே
மக்களின் மறப்பை நம்பிதான்
அரசியல் செய்கிறது என்பது
இங்கே துணை செய்தி.)
*
பி.ஜே.பி.யின் மூன்றாவது
பிரதான குற்றச்சாட்டாய் வருவது...
இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சியும்
பொருட்களின் விலையேற்றமும்!
*
இது மிகச் சரியான குற்றச்சாட்டு
எந்த கொம்பனாலும்
மறைக்க முடியாது!
மறுக்கவும் முடியாது!
அந்த அளவுக்கு
இதையெட்டிய யதார்த்தம்
தினைக்கும் மார்கெட்டுகளின்
மையம் பார்த்து
தாண்டவமே ஆடும் போது
யார்தான் இல்லையென்றுவிட முடியும்!?
*
'இந்த வறுமையான காலக்கட்டத்திலும்
அட்சயத்திருதியையின் போது
சென்னை.. T.நகர் போன்ற
நகர ஏரியாக்களில்
தங்கம் வாங்க
கூடும் கூட்டத்தை காணுகையில்
நிஜமாலுமே நம் பொருளாதாரம்
வீழ்ந்துதான் கிடக்கிறதா....?'
சந்தேகமே எழுகிறது.
*
எனக்குத் தெரிந்து
மொராஜி தேசாய்
பிரதமராக ஆட்சி புரிந்தக்
காலகட்டத்தில்தான்
இந்திய பணத்தின் மதிப்பு
(அதுவும் இந்தியாவுக்குள்)
நிலையாக இருந்தது!
விலைகளின் ஏற்றத்தையும்
தடுத்து நிறுத்தி
கஷ்டப்பட்டு
கட்டுக்குள்ளும் வைத்திருந்தார்.
அது...
அவர் மட்டுமே அறிந்த
மொராஜிஜியின் 'மேஜிக்'!
*
உலக திறந்தவெளிச்
சந்தை ஸ்டைலை
இந்தியா இழுத்து கழுத்தில்
மாட்டிக் கொள்ளாத நேரமது!
இந்திய பொருளாதாரம்
சின்ன வட்டத்திற்குள்
மெதுநடை நடந்தபடி
இருந்த நேரம்!
மொராஜி அவர்களின்
கவனத்தாலும்...
தீரமான சட்ட வரைவுகளாலும்
அவரது மேஜிக் அன்றைக்கு
செல்லுபடியானது.
*
இன்றைக்கு...
அது நடக்காது என்பதும்
வாஸ்தவம்.
*
நாம் வானத்தைத் தொடுபவர்களாக
உயந்துவிட்டோம்!
உலகளாவிய கஷ்ட நஷ்டங்களில்
பங்கெடுப்பவர்களாக
உயர்ந்திருக்கிறோம்!
காங்கிரஸ் போட்டப் பாதையில்
பாரதிய ஜனதா காட்டிய திசையில்
உலகச் சந்தையில் பங்கெடுத்தவர்களாய்
பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
*
அமெரிக்காவில்
பனிபொழிவென்றால்
இங்கே...
ஜலதோஷம் காணும் காலம் இது!
*
அமெரிக்காவில்...
இன்றைக்கு
கஞ்சித்தொட்டிகள் திறப்பதாகச் செய்தி!
இன்னும் இங்கு...
அது இல்லை!
அதுவரை மன்மோகன் சிங்
சமத்தானவர்தான் படுகிறது!
*
என்னவோ....
பி.ஜே.பி. ஆண்டபோது
முக்கா ரூபாயுக்கு
ஒரு கலம் நெல்லும்....
எட்டு ரூபாயிக்கு
ஒரு பவுனும் விற்றக் கணக்கில்
அவர்கள் மன்மோகன் சிங்கை
குற்றம் காண்பது வேடிக்கை!
*
ஆட்சியைப் பிடிக்க பரபரக்கும்
பாரதிய ஜனதாவுக்கு
கைகொடுக்க...
இந்தக் குற்றச்சாட்டுகள் போதது.
எல்லாம் சக்கை!
நிஜத்தில்...
குஜராத்தை தாண்டவும்கூடப் போதாது.
*
மாறாய்....
இந்த குற்றச்சாட்டுகளை
அடுக்கிக் கொண்டிருப்பதற்குப் பதிலாய்
பழைய அஜண்டாவை
கையில் எடுத்திருக்க வேண்டும்.
பாரதிய ஜனதாவின்
பழைய அஜண்டாபடிக்கு...
நாட்டில் அத்தியாவசியமாக
இடிக்க வேண்டிய
மசூதிகளின் எண்ணிக்கை
மொத்தம் பதிமூன்று!
ஒன்று ஆகிவிட்டது.
மீதம் பன்னிரெண்டு இருக்கிறது!!
*
கண்டமே கிடுகிடுக்க
கரசேவகர்கள்/
சாதுகள்/
சன்னியாசிகள்/
புடைசூழ....
பி.ஜே.பி....
ரதயாத்திரைக்கு
கிளம்பியிருக்க வேண்டும்.
'அகண்ட பாரதமும்'
'ஆரியவர்த்தனமும்'
மெய்பட...
அரசியல் வெற்றிகளும்
பின் தொடர்ந்திருக்கும்!
**** *** ****

No comments: