Saturday, November 22, 2008

உனக்கு... / யுகபாரதி


படைப்புலகின் கவிஞரில் ஒருவரும், தமிழ்ச் சினிமாவின் பாடலாசிரியருமான யுகபாரதி எனது நெடுநாளைய நண்பர். 'மன்மத ராசா' பாடலை மறக்காத உங்களில் பலரும்அவரை அறிந்திருக்கக் கூடும். எனக்கு கணையாழி வழியிலான அறிதல் உறவு! இங்கே இந்த தகவல்கள்.... அத்தனைக்கு தேவையில்லாதது என்று தெரிந்தும், நான் இப்படி வலிய எழுதுவதென்பது... தமிழ் உரைநடை பாங்கின் சம்பிரதாயச் சடங்கு!
*
நண்பருக்கு 23.11.2008/ ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு/ குருதயாள் சர்மா திருமண மகாலில்/ தோழர் நல்லகண்ணு, ரஞ்சிதம்மாள் தலைமையில் திரும ணம். மணமகள் அன்புச்செல்வி!அவர் எனக்கு அனுப்பி வைத்த அழைப்பிதழின் பின் பக்கத்தில் பழக்க தோஷம் மாறாமல்இருபத்தி எட்டு வரி கவிதை ஒன் றை எழுதி அச்சேற்றி இருக்கிறார். கவிதை.... கவனம் கொள்ளத் தக்கதாக... எளிமையின் வசீகரமாக!இனி நீங்களும் அதை கவனம் கொள்ளலாம்.
- தாஜ்
** ** **
உனக்கு
-----------
தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்
படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு
இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக் கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப்பெற்றேன்
காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கிற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு
சமயத்தில் நிலவு என்பேன்
சமையலில் உதவி செய்வேன்
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்
ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதை தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பிவந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.
*** *** ***
- யுகபாரதி

No comments: