Saturday, September 20, 2008

தாஜ் கவிதைகள் - 33

பேருந்துக்கு காத்திருந்தவர் மீது.
--------------------------------------------
- தாஜ்

தெளிவுற வழிகாட்டி நின்ற
கை காட்டிகள் எல்லாம்
திசைகளற்று கவிழ்ந்து கிடக்க
பாதசாரிகளுக்கு
பாதைகள் என்றும்
விடிவதே இல்லை.
*
ஓரப் பாதைகள்
தடைகளாகிப் போக
புகுந்து புறப்படும்
அவசரத்தில்
குண்டும் குழியும்
மனிதக் கழிவுகளும்
அடியெடுக்கும்
முயற்சியையும்
கூச வைக்கும்.
*
மறித்து கண் சிமிட்டும்
மின்னொளிகள்
முன்னேற விடும் நாழியும்
எதிர்பட முட்டிக் கொண்டே நிற்பர்
எம் மக்கள்.
*
பொது சாலையில்
இறங்கி நடக்க முனைந்தால்
சகல ஓட்டங்களும்
புகை கக்கி அலற
கலகலக்க வைக்கும் விதியை.
*
உந்தலின் நினைவுடன்
தூரத்தைக் கடக்க
பேருந்திற்காக
காத்திருக்கும் காலகெடுவில்
பேருந்துகளாலும்
முற்றுப் பெறலாம்
கவிதையான நம்
ஜீவ வாக்கியம்.
-----------------------
satajdeen@gmail.com

1 comment:

ஜுனைத் ஹஸனி said...

mikka arumai sagodhare.